காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி. முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம் ஓங்கி வளர்ந்த மரங்களும், பசுமையான காடுகளையும் சலசலவென ஓடும் ஓடைகளையும், பலவகையான வன விலங்குகளையும் , தன்னகத்தே கொண்ட இதில் சில தனியார் சுற்றுலாதளங்களும் இயங்கிக்கொண்டிருந்தது. இதன் வனப்பு எந்த அளவிற்கு மனதிற்கு மகிழ்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் கொடுக்கின்றதோ அதே அளவிற்க்கு அதிக ஆபத்துக்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும். என்னிலடங்காத ஊசிமுனை வளைவுகளும், மலைபாதை சரிவுகளும், ஆளை விழுங்கும் ஆபாயங்களும் கொண்ட இந்த இடத்திற்க்கு காற்றையும் கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்த வேகத்துடன் கீரீச்சிட்டு நின்றது கேஷவ்வின் வாகனம். ஊட்டியில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்திருந்த இந்த மசினங்குடியைத்தான் கேஷவ் புகைபடம் எடுப்பதற்க்காக தேர்ந்தெடுத்திருந்தான்.


அவனுக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய பேகை எடுத்தவன் தன் வண்டியை நிறுத்திவிட்டு காட்டிற்க்குள் செல்ல ஆரம்பித்தான். நெடுநாளைய கனவினை நினைவாக்கிவிட வேண்டும் என்று மனதில் உற்ச்சாகத்துடனும், கண்களில் கனவுடனும், இயற்க்கையின் லயிப்பிலும் நடையை தொடர்ந்தான். அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சிறிது தூரத்திலேயே அவனுக்கு தேவையான வன விலங்குகளின் காட்சிகளை கண்டுகொண்டுவிட்டான்.


கூட்டமான காட்டு யானைகள் அவனைவிட்டு சிறிது தூரத்தில் கடப்பதை கண்டான் ஆனால் அவனுக்கு அதை விட இன்னும் வித்தியாசமான புகைபடத்தை எடுப்பதிற்க்காக மனதில் குறித்திருந்தவன் இன்னும் உள்ளே செல்லலானான். காடுகளை சுற்றியே வந்தவனுக்கு இந்த வனபகுதி சிறிது சவாலாகத்தான் இருந்தது.


புதிய கோணம்கொண்டு மனதில் நினைப்பதை புகைபடமாக்க தேடி தேடி அலுத்தவனின் கண்ணில் நீர் ஓடை ஒன்று அகப்பட அதை தொடர்ந்தான் மதியம் நேரம் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் போனால் இருள் சூழுந்துவிடும் அப்படி நேருகையில் காடுகளில் சூரிய வெளிச்சம் கொண்ட மட்டில்தான் புகைப்படம் எடுக்க முடியும் அப்படி எடுக்க முடியாவிட்டால் பிறகு அவன் பட்ட அத்தனை கஷ்டமும் வீண்


மனதில் சிறு படபடப்பு வர கொஞ்சம் பதட்டமாகவே பயணத்தை மேற்க்கொண்டான் கேஷவ்.


மிக அமைதியாக இருந்த இடம் கொஞ்சம் சலசலக்க தொடங்க இரண்டு பக்க செடிகளையும் விலக்கிக்கொண்டு கம்பிர உருவமாய் ஒரு புலி வர அப்படியே உறைந்து நின்றான் கேஷவ். அவன் நினைத்த கோணம் இதை தவறவிட்டால் இனி கிடைப்பது அறிது தண்ணீரில் தாவியும் ஓடியும் எத்தனை எத்தனையோ புகைபடங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் இது போன்ற ஒரு அரிய புகைபடத்தை எடுக்கும் ஆவலில் சத்தமில்லாமல் அப்படியே பேகை இறக்கிவைத்தவன் அதில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை ஒன்றாக்கினான்.


தனது டெலிபோட்டோ மற்றும் மைக்ரோ இரண்டும் ஒன்றாய் அடங்கிய லென்ஸ் கேமிராவைப் பயன்படுத்தி தூரத்தில் உள்ள புலியின் தோற்றத்தை பக்கத்தில் உள்ளது போல் லென்ஸின் திருகியைக் கொண்டு காட்சியை பெரிதாக்கியவன் அதை வீயூ ஃபைன்டரில் நிலைநிறுத்தி வைத்தான். இயற்கையான சூரிய வெளிச்சத்தில் புலியின் மஞ்சள் நிறம் தகதக தங்கநிறமாய் மின்ன அதனுடைய முகம் கம்பீரமாய் புகைபடத்தில் பதியவைத்தவனின் மனதிற்க்கு அந்த புகைபடம் திருப்தியாய் வந்திருந்தது என்ன ஒரு ராஜ கம்பீரமான அமைப்பு என்று சொல்லும் அளவிற்க்கு அதன் தோற்றம் அமைந்திருந்தது.


​



தன் பணிகளை முடித்து அந்த இடத்திலிருந்து மாலைவேளை நேரமாகவே கிளம்பியவன் வழியில் ஆபத்தான பல பாதைகளையும், ஊசிமுனை வளைவுகளையும், கடந்து பிரதான சாலையை வந்தடைந்தான். காட்டை சுற்றியவனின் உடல் சோர்ந்திருந்தாலும் அவன் தேடலுக்கான பொக்கிஷமாய் கிடைத்த புகைபடத்தை எடுத்ததில் உற்ச்சாகம் புது அருவியாய் பொங்கி மனதில் இருந்த மலர்ச்சி முகத்தை நிறைத்திருந்தது.


இருளில் வண்டியின் வெளிச்சம் மட்டுமே இருக்கையில் அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் இருளை அப்படியே பூசியிருந்தது. அவனுடைய பைக் மேட்டுபாளையம் வரும்போது தூரத்தில் கார் ஒன்று மரத்தருகே நிற்பது போல இருக்கவும் கண்டுகொள்ளாமல் போக இருந்தவன் என்ன நினைத்தானோ அருகில் பைக்குடன் சென்று பார்க்க மரத்தில் மோதிய நிலையில் நின்றிருந்தது. வண்டியில் இருந்து இறங்கியவன் யோசனையாய் சுற்றும் முற்றம் பார்க்க ஒருவரும் இல்லை கார் கதவினை திறக்க முயற்ச்சி செய்ய அது மரத்தில் மோதிய வேகத்தில் கதவு லாக் ஆகி திறக்கமுடியாமல் இருக்கவே கட்டை இல்லை கல்லை போன்ற உறுதியான பெருட்களை சுற்றும் முற்றும் தேடி பார்க்க கல்லே கிடைத்தது அதைக்கொண்டு கண்ணாடியை உடைத்தான்.


உடைத்த கண்ணாடியின் வழியாய் கைகளைக்கொண்டு கதவை திறந்தவன் சீட் பெல்ட் போட்ட நிலையில் ஒரு பெரியவர் மூர்ச்சையாகி இருக்க கண்டு சற்று பதறியவன் "சார் ,சார்.... என்னாச்சி சார்" என்று அவர் தாடையில் கை வைத்து தட்டி எழுப்ப எதற்க்கும் அசைந்து கொடுக்காமல் மயக்க நிலையிலையே இருந்தார் அவர்.


ஓடிச்சென்று தனது பேகிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அதிலிருந்த தண்ணீரைக் கொண்டு அவர் முகத்தில் தெளித்தவன் முகத்தை துடைத்து விட்டான் அவன் தெளித்த நீரின் உபயத்தால் கண் திறக்க முயன்றவரை பார்த்து "சார் சார்" என்ன செய்யுது என்று அவரை கேட்டுக்கொண்டே சீட் பெல்ட்டுகளை தளர்த்தி விட்டு அவருக்கு எழுந்துக்கொள்ள கை கொடுத்து உதவினான். வண்டி மோதியதில் ஏற்பட்ட உடல் உபாதையுடன் 'ஸ்... ஆ... " என்ற முனங்களுடன் வண்டியில் இருந்து இறங்கியவர் அவன் குடிக்க கொடுத்த தண்ணீரை வாங்கி குடித்தார்.


"ரொம்ப நன்றி பா" என்று அசதியுடனும் உடல்சோர்வோடும் நன்றி கூறினார் அந்த பெரியவர்.


"என்ன சார் இது!!.. எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சி உங்களுக்கு ஏதும் இல்லையே?". என்று பதற்றத்துடன் கேஷவ் அவரை
கேட்க


ஒன்னும் இல்லைதான் நினைக்கிறேன் தம்பி தலைதான் லேசா சுத்தராப்போல இருக்கு அதுவும் கொஞ்சம் ஒய்வு எடுத்தா சரியா போய்விடும் னு நினைக்கிறேன் என்றவர் உங்க உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி என்றார்....


"நீங்க என்னங்கைய்யா அடிக்கொரு தரம் நன்றி சொல்லிக்கிட்டு, நான் இல்லைனாலும் வேற யாரவது இந்த பக்கம் போய் இருந்தா நிச்சயம் அவங்களும் என்னைபோல வந்து உங்களை காப்பாற்றி இருப்பாங்க" என்றான் சிறு புன்னகையுடன்


"நாட்டுல எது நடந்தாலும் தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லன்னு போறவங்களும் இருக்காங்க... அப்படியும் கொண்டு போய் சேர்த்தா யாரு போலீஸ் கேஸ்ன்னு போறதுன்னு சொல்லி ஒதுங்கி போறவங்களும் இருக்காங்க... நீங்க அப்படி போகாம என்னை காப்பாத்தி இருக்கிங்க இன்னும் கொஞ்ச நேரம் காருக்குள்ளேயே இருந்திருந்தா மூச்சடைத்து செத்து கூட போயிருப்பேன்.. இந்த இடத்துல அதுவும் இராத்திரிவேலையில வந்து காப்பாத்தியதிற்கு ரொம்ப நன்றி தம்பி" என்றார் தழுதழுத்த குரளில்


அவர் தன்னை பாரட்டியதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் "பரவயில்லை சார்.. உங்களுக்கு வேறு எங்காவது அடி பட்டிருக்கா?". என்று அதையே மறுபடி கேட்க


" இல்லை தம்பி ஒன்னும் ஆகலை .. லேசா ஒரு மாதிரி இருக்கு. ஆக்ஸிடன்ட் ஆனா அதிர்ச்சியால இருக்கும்" என்று தன் உடல் நிலையை பற்றி கூறியவர் எப்படி இந்த சம்பவம் என்றும் கூற தொடங்கினார்.


"என்னன்னு தெரியல போகும்போது வண்டி நல்ல கண்டிஷன்லதான் இருந்துச்சி!!.. இப்போதான் ஒர்க் ஷாப்ல இருந்தும் வந்தது!.. ஆனா ரிட்டன் வரும்போது பிரேக் பிடிக்கல... ரொம்ப கண்ட்ரோல் பண்ணவும் முடியல.. அதான் நேரா போகம பதட்டத்துல வண்டிய பக்கத்துல திருப்பிட்டேன். என்றார் அந்த நபர்.


"ரொம்ப நல்ல வேலை செஞ்சிங்க சார்.. பரவயில்லை இதோட போச்சேன்னு சந்தோஷபடுங்க"... என்றவன் வண்டியின் மீது பார்வையை பதித்து "இப்போதைக்கு வண்டியை எடுக்க முடியாது" என்றான் சற்று யோசனையாய்


"பரவாயில்லை தம்பி.... வண்டி இங்கயே இருக்கட்டும் முக்கியமானத மட்டும் எடுத்துங்குறேன். நீங்க கொஞ்சம் சிரமம் பாக்கமா என்னை எங்க வீட்ல டிராப் பண்ண முடியுமா??". என்றார் அவர்.


"வீட்டுக்கு போகலாம் சார்...அதுக்கு முன்னால எதுக்கும்.ஆஸ்பிட்டல்ல போய் ஒரு செக்கப் பண்றது நல்லதுன்னு தோனுது" என்று கேஷவ் கூறவும்.


சிநேகமாய் சிரித்தவர் "ஆஸ்பிட்டல் போவேன் தம்பி... முதல்ல வீட்டுக்கு போகனும். இப்போதைக்கு எதுவும்
கேட்காதிங்க பீளிஸ்". எனவும் அவர் கூறியதற்கு "ம்" என்று மௌனமாய் தலை அசைத்தவன் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பின் பைக்கில் ஏறி அந்த இடத்தை விட்டு சென்றனர். போகும் வழியில் இருவரை பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.


________________________________________


"மஞ்சு... மஞ்சு..."


"இதோ வறேங்க "


"சரி கோவிந்தசாமி நாளைக்கே வரச்சொல்லிடுங்க நீங்கதான் இவ்வளவு சொல்றிங்களே.... வேற என்ன பண்ண முடியும்?" என்றவர் தொலைபேசியை அணைத்தார்.


கைகளை துடைத்தபடி தங்களின் அறைக்கு வந்த மஞ்சுளா 'என்னங்க கூப்பிட்டிங்களா?".


"ஆமா மஞ்சு நம்ம கோவிந்தசாமி ஒரு வரன் வந்திருக்கரதா சொன்னாரு.. நம்ம பொண்ணு ஜாதகத்தோட ஒத்து போகுதாம். நல்ல இடமாம்,பையன் சென்னைல வேலையாம், மாப்பிள்ளை சொந்த ஊர் நம்ம கோயம்பத்தூர் தானாம். என்றார் மகிழ்ச்சியுடன்.


"அப்பாடா... ரொம்ப நாள் ஆகுமோன்னு பயந்துட்டிருந்தேன். சீக்கிமே சம்மந்தம் தேடி வருது.. சரிங்க என்னைக்கு வராங்கலாம்?? என்று கேட்க


"அது..." என்று இழுத்தவர் "நாளைக்கே வர்ராங்களாம். பையன் இன்னொரு நாள் வர்ராத இருக்கானாம். நீ என்ன சொல்ற மஞ்சு..."என்று மனைவியின் யோசனை கேட்க


"அதுக்கென்னங்க தாரளமாய் வரச்சொல்லுங்க... பையனோட போட்டோவ கொண்டு வந்தா நல்லா இருக்கும். என்று தன் அபிப்ரயத்தை கூற


"சரி மஞ்சு நான் கோவிந்தசாமிக்கிட்ட சொல்லி போட்டோ வ இவினிங் கொண்டு வரச் சொல்றேன்". என்று கூறிவிட்டு அவருக்கு போன் செய்து புகைபடத்தை கொண்டு வரச்சொன்னார்.


"மஞ்சு கவிகிட்ட இவினிங்கே இந்த விஷயத்தை சொல்லிடு... நாளைக்கு காலேஜ் போறாதா இல்லை வேண்டாமான்னு முடிபண்ணிக்குங்க..." என்றபடி படுக்கையில் இருந்து எழுந்தவர் கொஞ்சம் "டையார்டா இருக்கு ".என்ற மறுபடி அமர்ந்து விட்டார்.


"என்னங்க என்ன செய்து" என்று அருகில் அமர


"ஒன்னும் இல்ல மஞ்சு நேத்து நடந்துல அதிர்ச்சியா கூட இருக்கலாம்" என்றார் படுக்கையில் சாய்ந்தபடி


"ஏங்க இன்னொரு முறை டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திடலாமா?". என்று மனைவி கவலையுடன் கேட்க


"நேத்து நைட் ராஜராமோட பையன் வந்து விட்டுட்டு போன பிறகு ஆஸ்பிட்டல் போய்ட்டு தானே வந்தோம். மஞ்சு இது ஒன்னும்மில்லமா திடிர்ன்னு நடந்த விபத்தோட அதிர்ச்சியா இருக்கலாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும் மா பயப்படத..." என்று மனைவிக்கு தைரியம் கூற


"ஏதோ அந்த தம்பி தெய்வம் போல அந்த நேரத்துல வந்து உங்களுக்கு உதவி செய்து நம்ம வீட்டுக்கும் கொண்டு வந்து விட்டு போனார்" என்று கேஷவ்வை பற்றி பெருமையாய் பேச


"அது ராஜராமோடா வளர்ப்பு மிலிட்டிரி மேன் பிரமாதமாதான் பையனை வளர்த்திருக்கான். என்று நண்பனை பற்றியும் பேசி மனைவியை பார்த்தார்.


இதே கோயம்பத்தூர்ல தான் இருக்கோம் அவங்கள எப்போயோ பார்த்தது ஒரு முறை பார்த்து நன்றி சொல்லனும்ங்க" என்று கூறிக்கொண்டிருக்க


"அம்மா" என்று அழைத்து படி வாயிலில் நின்றாள் கவி


"உள்ள வா கவி" என்று மஞ்சு அழைக்க


"அப்பா என்னப்பா??... அம்மா என்னோவோ சொல்லிட்டு இருந்தாங்க??". என்ன ஆச்சி பா என்று கேட்க


சற்று நேரம் அமைதியாக இருந்த பெற்றவர்கள் "அது கவி.... அப்பாக்கு ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சி மா". என்றார் மஞ்சுளா


"ஆக்ஸிண்ட்டா!!! எப்படிமா??" என்று அதிர்ந்தவள் "எப்போ நடந்துச்சி ஏன் மா எங்கக்கிட்ட சொல்லல? என்று கண்களில் நீர் திரள கேட்டாள் கவி


"நான் என்னன்னு சொல்வேன் கவி... நேத்து நைட் மேட்டுபாளையம் வரும் போது ஆக்ஸிடன்ட் நடந்திருக்கு. வழியில ஒரு தம்பி பாத்துட்டு அப்பாவ வீடுவரையும் கொண்டு வந்து விட்டுட்டு போனாரு" என்று கூற


"அப்பா" என்று மாணிக்கத்தின் அருகில் அமர்ந்த கவி அவரை நடுங்கும் கரங்களால் தொட்டு "அப்பா பார்த்து கவனமா வந்திருக்கலாம் இல்லபா??" உங்களுக்கு ஒன்னுன்னா எங்களால தாங்க முடியாதுப்பா...". என்று கூறி கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் துளிகள் இமைதாண்டி இறங்க


மகளின் நீர்மணிகளை துடைத்தவர் "இதுக்குதான் நீங்க பயப்படுவிங்கன்னு நேத்து உங்க அம்மாவ உங்கள எழுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன்" அப்பாவுக்கு ஒன்னும் இல்லடா பாரு நல்லா இருக்கேன். என்ன கொஞ்சம் வயசாகிடுச்சி அவ்வளவுதான் மத்தபடி அயம் பர்பெக்ட் மை டியர்." என்று மகளை ஆதுரமாக அனைத்துக்கொண்டார்.


தந்தையும் மகளும் பாசப்பினைப்பில் இருக்க கண்களை துடைத்துக்கொண்ட மஞ்சுளா "இனியாவது கொஞ்சம் நிதானமா வண்டி ஓட்டுங்க". என்று கூறி அறையிலிருந்து எழுந்து செல்ல மகளின் சந்தேக பார்வை அவரை துளைத்தது


"என்ன மா"


"இல்ல... எங்க அப்பா டிரைவ் பண்ணும்போது எப்பவும் ரொம்ப கவனமா இருப்பார். ஆனா இது எப்படி?? என்று சந்தேகத்துடன் கேட்க


சற்று வெளியில் பார்வையை செலுத்தியவர் மகளை பார்த்து "ம் பரவயில்லையே பேமஸ் லாயரோட பொண்ணுன்னு நிறுபிக்கர...". என்று பெண்ணை மெச்சிக்கொண்டவர் "நானும் யோசிக்கிறேன் மா... போகும்போது வண்டி நல்ல கண்டிஷன்ல தான் இருந்துச்சி ,எப்படி திடிர் பிரேக் பிடிக்கலன்னு தெரியல கொஞ்சம் டவுட்டாதான் இருக்கு ".என்று பெருமூச்சுடன் கூறியவர்


"அப்பா அப்படினா இது?". என்று கேள்வியுடன் நிறுத்த


"ம் ஆமா தற்செயலா நடந்த ஆக்ஸிடன்ட் இல்லமா திட்டம் போட்டு நடந்தது". என்று கூற


"அப்போ இது யார் செஞ்சாங்கன்னு தெரியுமா பா!?!. இல்ல யார்மேலயாவது சந்தேகம் இருக்கா??". என்று கேட்க


"டவுட் இருக்குமா... இன்னும் அது ஊர்ஜிதம் ஆகல பார்ப்போம்". என்று கூற


"அப்பா நீங்க இனிமே ரொம்ப கேர்புல்லா இனுக்கனும் பா". என்று தந்தையிடம் எச்சரிக்கையாய் கூற


ஆம் என்பது போல் தலையை அசைத்தவர் "அம்மாக்கு இது தெரிய வேண்டாம் டா... அவ பயந்திடுவா". என்று கூறினார் மகளிடம்


'சரி பா நீங்க ரெஸ்ட் எடுங்க ஏதாவது வேனும்னா கூப்பிடுங்க".. என்றவள் அறைலயிலிருந்து வெளியேறினாள்.


________________________________________


"டேய் கொஞ்சம் இந்த கோட் போட்டுக்கோயேன் டா ...


"பச் ஜெய் சொன்னா கேளுடா... எனக்கு இதெல்லாம் செட் ஆகாது வேண்டாம் டா... இந்த டிரெஸ் போதும் டா இதுவே ரொம்ப பார்மலா இருக்கு... இந்த கோட்டு அது இதுன்னு ஏன்டா உயிர வாங்குர??". என்று ஜெய்யை கடிந்து கொண்டிருந்தான் கேஷவ்


"ஒரு மீட்டிங்னா சும்மான்னு நெனச்சியா?? அது அதுக்கு தேவையான மாதிரி நம்மல நாமே தயார் படுத்திக்கனும் டா... இந்தா இத போடு". என்றவன் அழகிய சந்தனநிற முழக்கை சட்டையும் கருநீல பேண்டையும் அணிந்திருந்த கேஷவிற்க்கு கருநீல நிற கோட்டை விடாபிடியாக அணிவித்தான் ஜெய்.


"ஏண்டா இப்படி அடம்பிடிக்கிர??... இத போட்டாதான் உங்க ஆபிஸ்குள்ள விடுவியா??". என்ன என்று அவனை முறைத்தவாறு கேட்க


"ஆமா அப்படித்தான் வச்சிக்கோ.... கிளம்பு ".என்று அவனை துரிதபடுத்தியவன் தாயிடமும் தந்தையிடமும் கூறிக்கொண்டு புறப்பட


பூஜை அறைக்கு அழைத்து சென்ற நாரயணி எல்லாம் நல்லபடிய நடக்கனும் என்றபடி அவனுக்கு திருநீரு வைத்துவிட தலையை சற்று வேகமாய் பின்னுக்கு வாங்கியவன் தந்தையின் பார்வையின் வட்டத்தில் இருப்பதை உணர்ந்து "அம்மா பீளிஸ் சின்னாதா வெச்சிவிடுங்க" என று கூறி முன் உச்சி முடையை சற்று பின்னுக்கு தள்ளி தாயிடம் காட்ட சின்ன நகைப்புடனே அவனுக்கு திருநீறு பூசினார் நாரயணி.


ராஜாராம் அருகில் வந்தவன் "போயிட்டு வரேன் பா" என்று கூறவும் "சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும் உன்னை நம்பிதான் இவ்வளவு பெரிய பொருப்பை ஒப்படைச்சி இருக்கான். பொருப்பா நடந்துக்க". என்று கூறினார்.


"சரிங்கப்பா" என்று கூறியவன் எல்லாம் உன்னாலதான் இதெல்லாம் என்பது போல் ஜெய்யை பார்த்தவன் "போலாமா ஜெய்" என்று பற்களை கடித்து அழைக்க


சிரித்தபடியே தோல்களில் கையை போட்டு அவனை அழைத்துச் சென்றான் ஜெய்.


________________________________________


"கவி ஹோ பாத்து வாடி "


"பாத்துதான் வர்றேன் நீ போ "என்று கோவமாய் சாலையில் நடந்துக்கொண்டிருந்தாள் கவி


"ஏன் கவி அம்மா சொன்னதையே நினைச்சிட்டு மூடவுட்ல இருக்க !!".


"நீயே பாத்தல தியா நான் எவ்வளவு சொல்லியும் அம்மா இன்னைக்கு பொண்ணு பாக்க வர்ராங்கன்னு சொல்றாங்க..."


"இப்போ பாக்கதானே வர்ராங்க கவி ஃப்ரியா இரு பாத்துக்கலாம்". என்று தையரியம் கூற


"எப்படி ப்ரியா இருக்கரது?? இந்த சம்மந்தம் இல்லன்னா அடுத்ததுன்னு பாக்க ஆரம்பிக்க மாட்டங்கலா?? சொல்லு?? இன்னும் என் படிப்புக்கூட முடியல... அதுவும் இல்லாம குறைஞ்சது ரெண்டு வருசமாவது நான் வேலை பாக்கனும்னு ஆசை படுறேன்.. ஏன் இதை புரிஞ்சிக்க மாட்டறாங்கன்னு தெரியல..."


"இப்போ என்ன செய்யலாங்கர கவி?? இந்த மாப்பிள்ளைய விரட்ட ஏதாவது ஐடியா பண்ணுவோமா!!".


"என்ன செய்யறதுன்னு புரியல... இவினிங் அவங்க வரங்க கோவிலுக்கு போயிட்டு வாங்கன்னு அம்மா வற்புறுத்தி அனுப்பி வைச்சாங்க... எனக்கு அவங்க வர்ரத நினைச்சாலே எரிச்சலா இருக்கு தியா"


"அப்போ நீயே மாப்பிளைகிட்டயே தனியா பேசிடு கவி... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லன்னு".


எங்கோ வெறித்தபடி நடந்தவள் "அதுக்கும் வழி இல்ல மாப்பிள்ளை வரலியாம்..." என்றபடி இருந்த கவியை பாவமாக பார்த்தால் தியா இன்று காலை அன்னை வந்து கூறும்போதே தாம் தூம் என்று குதித்து ஆர்பாட்டம் செய்தவள் தந்தை கூறியதால் சற்று தணிந்து வந்தவளுக்கு கோவிலுக்கு வந்தும் குறை தீரவில்லை என்பது போல் இங்கேயும் தன் புலம்பலை ஆரம்பித்து இருந்தாள் கவி.


"ஹே..... கவி பாத்து பாத்து" என்று கை பிடித்து இழுத்து சாலையின் விளிம்பில்


கொண்டு நிறுத்தினாள் தியா


அவள் எதிர்புறத்தில் வேகமாக வந்த வண்டி ஒன்று சடன் பிரேட் இட்டு நிற்க காரில் உள்ளே இருந்து வெளியே எட்டி பார்த்தவன் 'நீங்க விழறத்துக்கு எங்க வண்டிதான் கிடைச்சதா??? காலைலயே இரிட்டேட் பண்ணிக்கிட்டு சே...." என்று அவளை பார்த்து கத்த


அவனை பார்த்தும் தன் கருத்தில் நிறுத்தியிரதவள் தன் எண்ண வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி நின்றிருக்க


தியா தான் "சாரி... சாரி சார்... ஏதோ நியாபகத்துல தெரியாம வந்துட்டோம்". என்று மன்னிப்பு கேட்க இது என்னடா இந்த அதிரடி ஆட்டோ பாம் சவுண்டு விடமா ரொம்ப அமைதியா இருக்கு ஆச்சர்யமா இருக்கு இன்னைக்கு மழை ஏதாவது வருமோ என்று எண்ணம் கொண்டவன் அவளின் முகத்தினை பார்க்க குழப்ப ரேகைகளின் சுடுகள் இருக்க கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தது ஜெய்யின் அழைப்பில் நடப்பிற்க்கு வந்தவன் "என்ன ஜெய்" என்க


"வண்டிய எடு கேஷவ் நேரமாச்சி அங்க எல்லாரும் நமக்காக வைட் பண்ணிட்டு இருப்பாங்க" என கூற அவர்களிடமிருந்து பார்வையை திருப்பியவன் "ம்" என்றபடி வண்டியை கிளப்பளானான். என்றும் போல் இன்றும் அவன் அதட்டலுக்கு அவள் பதிலுக்கு பதில் பேசியிருந்தால் சாதரணமாக எடுத்து கொண்டிருப்பானோ என்னவோ இந்த அமைதி அவன் எதிர்பார்க்கதது அதையே சிந்தித்திருந்தவனின் நினைவை தன்னை நோக்கி திசைதிருப்பியது ஜெய்யின் அலுவலக பேச்சு.... அதோடு அவளின் சிந்தனையை புறந்தள்ளியவன் அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN