தன் வினை தன்னைச் சுடும்

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சித்திரை வெயில் அந்த திரையிட்ட சன்னலைத் தாண்டி அவன் மேனியைத் தழுவ அதில் உறக்கம் கலைந்தவனின் கைகள் தேடியதோ அவனின் ஆருயிர் நண்பன் கைபேசியைத் தான்.



அவன் அர்ஜூன்...
படிப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்க சொந்த ஊரை விட்டு வந்து சென்னையில் வசிக்கும் வேலையில்லா பட்டதாரி.
தினமும் ஒவ்வொரு அலுவலகமாய் ஏறி இறங்கினாலும் இன்னும் வேலை கிடைக்காமல் மாதம் அம்மா தரும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறான்.
அவன் வாய் தான் அவனுக்கு சனி.
இவனுக்குப் பிடித்தால் அவர்களுக்குப் பிடிக்காது.
அவர்களுக்குப் பிடித்தால் இவனுக்கு அந்த கம்பெனியைப் பிடிக்காது.
திறமை இல்லாத தற்குறி அல்ல அவன்.
பிடிக்காத வேலையை செய்து இரத்த அழுத்தம்,மன அழுத்தம் என்பதை மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் வாழ்க்கையையே வெறுத்து கடமைக்கு வேலை செய்பவர்கள் மத்தியில் தனக்கு பிடித்த வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் பட்டதாரி எனக் கூறலாம்.



நேர்முகத் தேர்வு இல்லாத நாட்களில் அவனின் உற்ற துணை கைபேசி தான்.
காலையில் அவன் விழித்தெழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அந்த கைபேசி அவன் கையை விட்டு இறங்காது.



கைபேசியைத் தேடி எடுத்ததும்
நமக்குலாம் யாரு காலை வணக்கம் சொல்லப்போறா டேய் அர்ஜூ உனக்கு நீயே தான் டா சொல்லிக்கணும் என்றவன் அதில் வால்பேப்ராக இருக்கும் தன் படத்திற்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு புலனம் (வாட்சப்) பக்கம் சென்றான்.



அங்கும் அவனை மதித்து ஒருத்தர் கூட குறுஞ்செய்திகள் அனுப்பாமல் இருக்க ஒருசில அரக்கிறுக்கர்கள் மட்டும் ஸ்டிக்கர் என்ற பெயரில் அவனின் உயிரை வாங்கவே அதை அனுப்பியிருந்தனர்.
இந்த ஸ்டிக்கர்ஸ் கண்டுபிடிச்ச தடிமாடு மட்டும் என் கையில கிடைச்சான் அவன் செத்தான் என்றவன் புலனத்தில் வெட்டியாக உருவாக்கப்பட்டிருக்கும் குழுப் பக்கம் செல்ல அங்கும் இதே தான்.
ச்ச்ச என்று நொந்து கொண்டவன் அதை முழுவதும் படிக்கக் கூட பொறுமையில்லாமல் அனைத்தையும் அழித்துவிட்டு படவரி எனும் கிராமத்துப் பக்கம் சென்றான்.
அதாங்க இன்ட்ஸ்டாகிராம்.



ச்ச் ஆவுனா டேர் இருந்தா அதைப் போடு இதைப் போடுனு ஆரம்பிச்சுருவாங்க என்று நொந்துக் கொண்டவன் கீச்சகம்(டிவிட்டர்) பக்கம் செல்ல அங்கும் பலர் வேண்டாத கருத்துகளையேப் போட்டிருக்க தன்னிலையை நொந்துக் கொண்டவன் தன் கைப்பேசியை கீழே வைத்து விட்டு என்ன பண்ணலாம் என்று ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை மறுபடியும் அந்த கைபேசி அவன் கைகளுக்குள் வந்து விட்டது.



மறுபடியும் புலனம்,படவரி,கீச்சகம், முகப்புத்தகம் என மாறி மாறி சென்றுக் கொண்டிருக்க அதுமட்டுமில்லாது பாடல் வேறு ஓடிக் கொண்டிருந்தது.



இரவு மின்னேற்றம் செய்ய மறந்திருந்தால் அது தன் இருப்பு குறைந்து விட்டது எனக் காட்ட அப்பொழுதும் இரக்கம் காட்டாமல் தன் வேலையை அவன் செய்ய அதுவோ ஒன்று எனக் காட்ட உடனே அதற்கு உயிர் கொடுக்க நினைத்தவன் சார்ஜரை எடுத்து சொருகியும் அதற்கு ஓய்வு கொடுக்காமல் மறுபடியும் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருக்க அவனுக்கு கண்கள் சொருக ஆரம்பிக்க பாடலை ஒலிக்க விட்டவன் அப்படியே கண் உறங்க அதீத ஒளி ஏற்பட்டு கண்கள் கூச விழிகளை திறக்க முடியாமல் கடினப்பட்டவனோ சிறிது நேரம் கழித்து கண்களைத் திறக்க தன்னிலையைக் கண்டு மயங்கி விழுந்தான்.



கண்களை திறந்தவன் பாவமாக எதிரில் உள்ளவரைப் பார்க்க அவரோ இவனை நோக்கி கோபக்கனல்களை தொடுத்துக் கொண்டிருந்தார்.



" எவ்வளவு நாள் தான் டா நானும் பொறுப்பேன் அவசரத்திற்கு மட்டும் தான் நான் இருபத்தி நான்கு மணி நேரமும் எனக்கு ஓய்வு தராமல் பயன்படுத்த இல்லை.." என்று பொரியத் தொடங்க அவனோ பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.



இப்போது மறுபடியும் அந்த ஒளி தோன்ற அவன்முன் கடவுள் நின்று கொண்டிருந்தார்.



" இங்கே பாருங்க கடவுளே எனக்கு இதுக்கு ஒரு நியாயம் கிடைத்தே ஆக வேண்டும் " என முறையிட



" சரி..நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன் நீ ஒருநாள் மனிதராகவும் இதோ இவன் ஒரு நாள் உன்னைப்போலவும் மாறிவிடுவான்.
அவனை எந்தளவு உன்னால் தொல்லை செய்ய முடியுமோ செய்து விடு "என்று அவர் மறைய அதுவோ அவனைப் பார்த்து நக்கலித்து சிரித்துக் கொண்டிருந்தது.



அவரின் ஆணைப்படியே அவன் கைப்பேசியாகவும் கைப்பேசி மனிதனாகவும் மாறிவிட
இப்போது மனிதனாக இருந்த கைபேசியோ அவனைப் பார்த்து கேவலமாக ஒரு பார்வைப் பார்த்தது.



"இப்போ புலனம் பக்கம் போவோமா " என்ற கைபேசி உள்ளே போக
"என்னடா உன்னை மதித்து ஒருத்தனும் குறுஞ்செய்தி அனுப்பல இதுக்குதான் ஒருநாளைக்கு ஆயிரம் முறை உள்ளே சென்று சென்று வந்தியா" என்றவனை முறைத்துக் கொண்டே படவரிக்கு செல்ல அதிலும் எந்த செய்தியும் வராமல் இருக்க முகப்புத்தகம் செல்ல அங்கும் ஒரு செய்தியும் இல்லை.



கடுப்பாகி கீழே போட்டு அர்ஜூவை முறைத்த கைபேசி என்னடா உனக்கு ஒருத்தரும் செய்தி அனுப்பல அப்புறமும் ஏன் டா இப்படி என்னை போட்டு வாதிச்ச என்று கைபேசியாக மாறியிருந்த அர்ஜூவை அடிக்க அவனோ அய்யோ வலிக்குது எனக் கத்த எத்தனை முறை நீ டென்சன்ல இருக்கப்போ என்னைத் தூக்கி வீசியிருக்க



"நான் என்ன பந்தா என்னை தூக்கி வீசி விளையாட " என்று தன் பழைய பாக்கியை அர்ஜூ தூக்கிப் போட்டு பிடித்து விளையாடி அதைத் தீர்த்துக் கொண்டிருந்தது.



அய்யோ பசிக்குதே என்று கூறி பழங்களை அறுக்கும் பொழுதும் வலையொளியில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க " ப்ளீஸ் எனக்கு ஓய்வு தாயேன் " என்று கத்தியவனைக் கண்டுக் கொள்ளாமல் அது தொடர தன் விதியை நொந்தவன் அமைதியாக இருந்தான்.



இப்போது கழிவறைக்குள் செல்லும் பொழுதும் உள்ளே எடுத்து செல்ல "அய்யோ என்னை ஏன் இங்கே கொண்டு போற "என்று அலறியவனைப் பார்த்து முறைத்த கைபேசியோ என்னை மட்டும் நீ கொண்டு போன என்று பதிலடி கொடுக்க மறுபடியும் எதுவும் பேசாமல் அமைதியானான்.



அவனைப் போலவே அதுவும் ஒரு நொடி கூட கீழே வைக்காமல் எதையாவது உபயோகப்படுத்திக் கொண்டிருக்க ச்ச் என்று அதற்கே அலுப்பு தட்டிவிட்டது.



"அப்பாடா " என்றவனின் சத்தம் கேட்டதும்
" அதெப்படி உன்னை நிம்மதியா விடுவேன் " என்ற கைபேசி மறுபடியும் ஆன் ஆப் செய்து விளையாடிக் கொண்டிருக்க அவனோ கோபத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.



"சார்ஜ் சுத்தமா இல்லை சார்ஜ் போடேன் " என்றவனிடம் " நீ மட்டும் போட்டியா ?" என்ற எதிர் கேள்வி வர
அமைதியானவன் " பாட்டு கேட்டுட்டா இருக்க அதையாச்சும் நிறுத்தலாம்ல " என்று கேட்க " நீ நிறுத்தினியா டா அதுவும் அதிக சத்தத்துல வெச்சுட்டு சப்பா கொஞ்ச நஞ்ச தொல்லையாடா பண்ண என்னை கண்டுபிடிச்சவன் மட்டும் இப்போ இந்த நிலையை பார்த்தான் ஏன் டா கண்டுபிடிச்சோம்னு சொல்லி அவனே தூக்கு போட்டு செத்துருப்பான்.
தூரத்தில் இருக்கவங்க கிட்ட செய்திகளை பரிமாற மட்டும்தான் என்னைப் பயன்படுத்தினாங்க
இப்போ எதற்கெல்லாம் பயன்படுத்துறீங்க முடியல டா" என்ற கைபேசியின் பேச்சை வேறுவழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.



"உங்களை மாதிரி நாங்களும் ஒரு உயிர் தான் நீங்க வாழ உணவு தேவை படுது நான் வாழ மின்சாரம் தேவைப்படுது.அதைக் கூட ஒழுங்கா தரமாட்டுறீங்களே நீங்க சாப்பிடும் போது உங்களை தொல்லை பண்ணா சும்மா இருப்பீங்களா? அப்புறம் ஏன் டா எங்களை மட்டும் தொல்லை பண்ணுறீங்க.



அதுவும் கொலைப்பசில இருக்கப்போ
உன்னை இருபது மணி நேரம் வேலை செய்ய சொன்னா செய்வியா? கொஞ்சம் கூட ஓய்வு தராமல் என்னை வேலை வாங்குறது நியாயமா?
பாட்டு கேட்கிறது, படிக்கிறது, படம் பார்க்கிறது, விளையாடுறது என எல்லாத்தையும் என்னை வைத்தே பண்ணிட்டா உங்களுக்கு எதுக்கு டா புத்தகம் , நூலகம் , விளையாட்டு மைதானம் எல்லாம்...கைபேசி இல்லாம இருந்த காலத்தில் எல்லாரும் நல்லா இருந்தாங்க இப்போதான் அது இல்லை.



உன்னை அதிக மன அழுத்ததிற்கு ஆளாக்குனா நீ ஒரு நாள் கத்துவ
அதைத் தான் நானும் பண்ணுறேன்.
வெடிச்சு சிதறுனாலும் அதையே பண்ணா எப்படி??
எங்களையும் மதிங்க முடியல டா சாமி குழந்தைங்க தூக்கி வீசி விளையாடுற பொருளா நாங்க.
வேற விளையாட்டு சொல்லித் தாங்க அது என்ன எங்களையே அவங்க கிட்ட கோர்த்து விடுறது அவங்க தட்டுற தட்டுல என் உயிர் போய் திரும்பி வருது " என்று கூறிக் கொண்டிருக்க



அவனுக்கும் சிறிது வருத்தம் எழத்தான் செய்தது.



ஆனால் என்ன செய்ய முடியும் நாம் அதற்கு அடிமையாகி விட்டோமே...



அமைதியான கைபேசி " நானே சொல்லுறேன் கேளு என்னை அதிகமா பயன்படுத்தினா எவ்வளவு தீமை ஏற்படும்னு.



உங்க லவ்வர் கிட்ட மணிக்கணக்கா பேசுறீங்களே உறுப்படியா பேசுறீங்களாடா? ஆன் அப்புறம் சாப்பிட்டாச்சா இதுவே நூறு முறை வந்துடும் அந்த இரண்டு மணி நேர அழைப்பில்.



இப்படி அதிக நேரம் பேசுனா கதிர்வீச்சு அதிகமாகி புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கு.



அந்த கண்ணு பாவம் டா
அதுவும் எத்தனை நேரம் தான் பாத்துட்டே இருக்கும்.
கைபேசியில் இருந்து வர வெளிச்சத்தினால் கண்களில் இருக்கும் தசைகளில் வலி எடுக்க ஆரம்பிச்சிடும்.
நீயே தான் தலைவலி சொல்லி புலம்புவ மாத்திரை போட்டுட்டு தூங்க வேண்டியது தானே மறுபடியும் ஏன் டா என்னையே தொல்லை பண்ணுற என்று கோபத்தில் அவனை தூக்கி வீசி விளையாட ஆரம்பித்திருந்தது.



கையை அங்கே இங்கேனு வெச்சுட்டு என் மேலையும் வைக்கிற நீ சுத்தமா இருந்தா போதுமா நான் இருக்க வேணாமா? இதுனால தொற்று நோய் தோல் பிரச்சினைகள் கூட வரும் என ஒருவழியாய் அது கூறி முடிக்க அவனோ தூங்கிக் கொண்டிருந்தான்.



" அட எரும " என்று அவனைத் திட்டிய கைபேசியோ கடவுளை அழைக்க
மறுபடிறும் அவர்கள் முன் தோன்றினார் கடவுள்.



" நான் எவ்வளவு கூறியும் பயன் இல்லை போல கடவுளே என்னால் முடியவில்லை அடுத்த ஜென்மத்திலாவது மனிதர்களை கைபேசியாக படையுங்கள் " என்று கூறிய கைபேசியை மறுபடியும் கைபேசியாகவும் அர்ஜூவை மனிதனாகவும் மாற்றிய கடவுள்
நீ வேண்டிய வரத்தை கண்டிப்பாக உனக்கு அளிப்பேன் என்று கூறி தன் கைபேசியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு மறுபடியும் அர்ஜூனின் கைபேசியைப் பார்த்து சார்ஜ் போட மறந்துவிட்டேன் போல நாளை என் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்கிறேன் என்று கூறி புன்னகைக்க



" கடவுளே நீங்களும் இப்படி செய்யலாமா " என்று கேட்ட கைபேசியைப் பார்த்து ஹாஹா என்று சத்தமாக சிரித்த கடவுளோ உங்களை நம்பிதான் வாழ்க்கை என்றாகிவிட்டது.



"பந்திக்கு முந்து " என்றது மறைந்து



" சோறு இல்லைனா கூட இருந்துடுவோம் கைபேசி இல்லைனா செத்துடுவோம் "என்ற புதுவித பழமொழி வந்துவிட்டது என்ற கடவுளின் வார்த்தைக்கு தலையாட்டி தன் விதியை நொந்த படியே மறுபடியும் அவன் கைகளில் சிக்கி சின்னாபின்னமாக காத்துக் கொண்டிருந்தது.



தலைப்பு " செய்வதென் வல்லை அரசாட் கொளின் " குடிமக்களை பேணாமல் துன்புறுத்தும் அரசன் எமனைப் போன்றவன்....நம் உடலைப் பேணாமல் கைபேசிக்கு அடிமையாகும் நாமும் அப்படியே.



உங்கள்
தனு❤
 

Attachments

  • images (81).jpeg
    images (81).jpeg
    32 KB · Views: 146
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN