காதல் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விருதுநகரில் அந்த பெரிய மிராசுதாரர் வீட்டில் இன்று திருமணம்... தெருவையே அடைத்துப் பந்தல் போட்டிருக்க... ஊருக்கே ஒரு பக்கம் தடபுடலாய் விருந்து நடை பெற்று கொண்டிருக்க... ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அந்த வீடே சிரிப்பு சத்தமும் பேச்சுமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

“பொண்ணு, மாப்பிப்ளை வர நேரமாச்சு... ஆலம் தயாரா?” ஒரு பெரியவர் உள்ளே குரல் கொடுக்க

“எல்லாம் தயாரா இருக்கு” யாரோ ஒருவர் பதில் கொடுக்க

சற்று நேரத்திற்கு எல்லாம் ஒரு உயர் ரக கார் வழியை அடைத்துக் கொண்டு வந்து அந்த வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து மணமகனும், மணமகளும் இறங்கவும்... ஒரு வயதான பெண்மணி முன் வந்து அவர்களுக்கு ஆலம் சுற்ற தயாராகவும்,

“அண்ணா... நானும் உன் பக்கத்திலே நிற்கவா?” பட்டுப் பாவாடை சட்டையில் இருந்த பதினைந்து வயது கவிதா, தன் அண்ணன் ஜெயந்தனிடம் கேட்க

“கேட்கணுமா தாயி... வா வா... வந்து அண்ணன் பக்கத்தில் நில்லு” கண்ணில் கனிவோடு வாயெல்லாம் பல்லாக ஜெயந்தன் தங்கையை அழைக்க, குதூகலமாய் ஓடி வந்து கவிதா அவன் பக்கத்தில் நிற்கவும்... தன் இடது கையைத் தங்கையின் தோளைச் சுற்றிப் படரவிட்டவன்

“இப்போ ஆலம் எடுங்க ஆத்தா...” என்று அந்த முதிர்ந்த பெண்மணிக்கு மணமகன் கட்டளை இட...

அவனின் வலது பக்கம் நின்ற மனமகளான பிரமிளாவோ... யாருக்கும் தெரியாமல் பல்லைக் கடித்தவள்... கூடவே அவள் கண்ணில் இப்பவோ அப்பவோ என்று கண்ணீர் வரப் பார்க்க… அதில் அவள் அண்ணிகளின் ஏளனப் பார்வையைச் சந்தித்தவள், மறுகணமே தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள் அவள்.

இன்று காலையில் தான்… முப்பது வயது ஜெயந்தனுக்கும், இருபத்தைந்து வயது பிரமிளாவுக்கும் பெரியவர்களால் ஊர் கூடி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மூவரும் உள்ளே வந்ததும்... மாப்பிளை பெண்ணுக்கான மற்ற சடங்குகள் முடிய... இருவரும் வேறு உடைக்கு மாறி வரவும்... முதல் நாளே மனைவியை வீட்டு உரிமையாளராய், சமையலில் மேற்பார்வை பார்த்து வந்தவர்களை நன்கு கவனித்து அனுப்ப சொன்ன ஜெயந்தன்... திருமண சாப்பாட்டிலிருந்து... மணமேடை அலங்காரம் வரை... என்று கணக்கில் பாக்கி வைத்த பண விஷயங்களை இவன் பட்டுவாடா செய்ய... ஆரம்பிக்க அதில் புதுமனைவியை மறந்தவன்...

எதற்கும் எல்லாவற்றுக்கும் இவன், “தாயி.. இதைக் கொண்டு வா... தாயி இது என்ன ஆச்சு பாரு.... கொஞ்சம் தண்ணீ கொடு தாயி... இந்த பணம் சரியா இருக்கா கொஞ்சம் எண்ணி வை” என்று இவன் தங்கையை ஒவ்வொன்றிற்கும் தேட, அதில் இன்னும் நாத்தனாரின் மேல் வன்மத்தை வளர்த்தாள் பிரமிளா.

அவளுக்கு எங்கு தெரியப் போகிறது... தன் கணவனின் உலகம் தங்கையைச் சுற்றி தான் என்றும்... அதேபோல் நாத்தனாரின் உலகம் அண்ணன் தான் என்றும்!, அண்ணன் தங்கை இருவருக்கும் பதினைந்து வயது வித்தியாசம்... பத்து வருடத்திற்கு முன்பு... ஒரு கார் விபத்தில் தாய் தந்தையரை... ஒரு சேர இருவரும் இழந்து விட... அதன் பின் இவர்கள் உலகம் குறுகிப் போனது.

பெற்றோர் இறக்கும் போது... ஜெயந்தனுக்கு இருபது வயது. உலக அனுபவமும், கொஞ்சம் விபரமும் தெரியும் வயது அவனுக்கு. ஆனால் கவிதா... ஐந்து வயது குழந்தை. அப்படியான அந்த குழந்தைக்கு விரும்பித் தாயாகவும் தந்தையாகவும் மாறியவன் ஜெயந்தன்.

“அப்புறம் என்ன ஜெயந்தா... கல்யாணத்தை நல்ல படியா முடிச்சிட்டோம்... இதோ பொண்ணையும் கூட்டி வந்து உன் வீட்டில் விட்டுட்டோம்... அப்போ நாங்க கிளம்பறோம். எங்களுக்கும் குடும்பம்... சோலின்னு இருக்கு இல்ல?...”

வந்த சொந்தங்கள் அனைவரும் இப்படியான வார்த்தைகளில்... அன்றே தங்கள் கூட்டை நோக்கிப் பறந்தார்கள்.

ஏதோ இத்தனை நாள் தாய், தந்தை இல்லாத பிள்ளைகளைப் பார்த்துக் கொண்ட மாதிரியும்... இந்த திருமணத்தை முன் நின்று நடத்தின மாதிரியும்... அவர்கள் பேசிச் சென்றது ஜெயந்தனுக்கு மனதிற்குள் இன்னும் சொந்தங்கள் மேல் வெறுப்பு மண்டியது.

இப்போதாவது கவிதா வளர்ந்து விட்டாள்... ஆனால் அவள் குழந்தையாக இருந்ததில் வளர்க்க இன்னும் சிரமப்பட்டான் அவன். அதிலும் அவள் பெரிய மனுஷியாய் ஆன போது... வீட்டு வேலையாட்களின் உதவியோடு சிலதை அவன் செய்த போது... கண்ணில் கண்ணீரே வந்து விட்டது அவனுக்கு. அன்றிருந்த ஜெயந்தன் இன்று இல்லையே... அதனால் சொந்தங்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு சென்றபோது... ஒரு விளங்காத பார்வையுடன் அவர்களை வழி அனுப்பி வந்தான் அவன்.

காலையில் இருந்த ஆரவாரம், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அந்த வீடே அமைதியாக இருந்தது. தேவைக்கு என்று இரண்டு மூன்று வேலையாள் இருக்க... அண்ணன், தங்கை, பிரமிளாவுடன் அவளின் தாயும் அவளின் இரண்டு அண்ணிகளும் அங்கு இருந்தனர். வேறு யாரும் அங்கு இல்லை. வாசலில் வாழைமரமும்... வண்ண விளக்குகளும் இல்லை என்றால்... அந்த வீடு இன்று திருமணம் நடந்த வீடு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

மாலை கவிழ்ந்து இரவு உணவுக்குத் தான் ஜெயந்தனால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. அவ்வளவு வேலை அவனுக்கு. சாப்பிட அமர்ந்தவன் மனைவியிடம் பேசிய முதல் வார்த்தை, “தாயி... சாப்பிட்டு.. தூங்கப் போயாச்சா...” என்பது தான்

‘நீ சாப்டியா... இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா... ஏதாவது மாற்றம் வேணுன்னா சொல்லு... இனி நான் தான் உன் உலகம்... நீ தான் என் உலகம்...’ இப்படி எந்த காதல் வார்த்தையையும் மனைவியிடம் பேசாமல் இவன் தங்கையைப் பற்றி கேட்டதும் இல்லாமல், “என் தங்கையை இனி நீ ஒரு தாயா இருந்து பார்த்துக்க...” என்று இவன் கட்டளை இட, திருமணம் நடந்த முதல் நாளே தன் வாழ்வே சூனியம் ஆனதைப் போல் உணர்ந்தாள் பிரமிளா.

பெண் பார்க்கும் போது... இவள் தான் தனக்கு மனைவியாக வரப் போகிறவள் என்று எண்ணி இவளின் முகம் பார்த்தவன் தான். பின் தாலி கட்டும் போதும் சரி… அதன் பிறகும் இப்போது வரையும் மனைவியின் முகத்தைப் காணவில்லை ஜெயந்தன். பார்த்து இருந்தாலும் அவளின் முகமாற்றத்தை உணர்ந்து... அவளின் விருப்பப்படி ஏதாவது கேட்டோ செய்தோ இருப்பானா என்றால்… அது தான் இல்லை.

ஏற்கனவே கணவனின் பாரா முகத்தைக் கண்டு வெறுப்பில் இருந்தவளை இன்னும் வெறுப்பில் தள்ளுகிற மாதிரி... அவளுக்கு எல்லா அலங்காரமும் முடித்து, பிரமிளாவை அறைக்குள் அனுப்ப இருந்த நேரம்… அவள் சின்ன அண்ணி, “பார்த்து டி... இப்பவே உனக்கும் உன் புருசனுக்கும் இடையில்... பதினஞ்சு வயசு குழந்தை வந்து படுத்திடப் போகுது...” என்று கவிதாவை வைத்து நக்கல் அடிக்க... அதற்கு அவள் பெரிய அண்ணி சிரிக்க... பிரமிளாவுக்கு அவமானமாகிப் போனது.

மனைவியின் மனநிலையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் ஜெயந்தன் கணவன் என்ற கடமையுடன் இரவு அவளை நெருங்க... கணவனுக்கு இசைந்து கொடுத்த பிரமிளாவோ சுத்தமாக வாழ்க்கையை வெறுத்தாள்… ஆனால் கணவனை வெறுக்கவில்லை அவள்.

இப்படி தன் திருமண வாழ்விற்கும், கணவனுக்கும் இடையில் ஊசலாடியவள்... இதற்க்கு எல்லாம் கவிதா தான் காரணம் என்று நினைத்துக் கொண்டவள்... நாத்தனாரின் மேல் வஞ்சத்தையும் முதல் நாளே வளர்த்துக் கொண்டாள் அவள்.

பிரமிளாவின் தந்தையும் ஜெயந்தனின் தந்தையும் பால்ய நண்பர்கள். பிரமிளாவின் தாத்தா தன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக கும்பகோணம் சென்று விட... அதில் பிரிந்தார்கள் நண்பர்கள் இருவரும். மூன்று மாதத்திற்கு முன்பு ஜெயந்தனை ஒரு விவசாய கூட்டத்தில் சந்தித்த பிரமிளாவின் அப்பா... தன் நண்பனின் மகன் தான் ஜெயந்தன் என்பதை அறிந்து... தாய் தந்தையர் யாரும் இல்லாமல் தங்கையை வைத்துக் கொண்டு அவன் படும் கஷ்டத்தை அறிந்தவர்... முழுமனதாக தன் ஒரே மகளை அவனுக்கே கட்டிக் கொடுக்க முன் வந்தார்.

ஜெயந்தனின் குடும்பம் பெரிய பண்ணையார் குடும்பம்... ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருப்பதுடன்... தேங்காய் மண்டி, அரிசி ஆலை, ஜவ்வரிசி தொழிற்சாலை என்று இருக்க... விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்து, பார்க்க கம்பீரமாய் இருக்கும் ஜெயந்தனை வேண்டாம் என்று மறுக்க பிரமிளா வீட்டில் யாருக்கும் மனம் இல்லை... பிரமிளாவைத் தவிர. அவளுக்கும் ஜெயந்தனைப் பிடித்து தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் அழகான கிளியாய் சுற்றி வரும் கவிதாவை மட்டும் பிடிக்கவில்லை அவளுக்கு.

பிரமிளாவுக்கு கூடப் பிறந்தவர்கள் மூன்று அண்ணன்கள்... இவள் தான் கடைக்குட்டி. அதற்காக செல்ல மகளா என்று கேட்டால் அது தான் இல்லை. அவள் குடும்பம் மிகவும் கட்டுப் கோப்பான குடும்பம். பெண் என்றால்… அதிகம் பேசக் கூடாது, அதிகம் சிரிக்கக் கூடாது, ஆடக் கூடாது, பாடக் கூடாது... இப்படி எத்தனையோ கூடாதுகள். அதனால் அவள் ஜெயந்தனை மறுக்கும் வாய்ப்பை அவள் தந்தை அவளுக்கு கொடுக்கவில்லை. அண்ணிகளின் ஏளனப் பேச்சு, சீண்டல்களுக்கு இடையில் இதோ... இருவரின் திருமணமும் முடிந்தது.

விடியற்காலையே பிரமிளாவுக்கு விழிப்பு வந்து விட்டது. கட்டிலில் தள்ளி ஓரமாய் தூங்கும் கணவனைப் பார்க்கும் போது எல்லாம் இவளின் உள்ளக் கொதிப்பு அதிகம் ஆகியது. ஏதோ இப்போது தான் அவன் தள்ளி படுத்து இருக்கிறான் என்று நினைத்தால் அது தான் இல்லை... எப்போது கூடல் முடிந்ததோ... அப்போதே அவன் தள்ளிப் போய் விட்டான்... அதுவும் குறட்டை சத்தத்துடன்.

ஜெயந்தனின் தந்தை காலத்தில் இருந்து அந்த வீட்டில் வேலை செய்யும் தாயம்மா இவள் வந்த உடனே, காலையில் எழுந்து கோலம் போடுவதில் இருந்து வீட்டு நிர்வாகம் வரை இவள் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி விட... இதோ இப்போது அவள் எழுந்து கொள்ள வேண்டும்.

அதற்கு முன் கணவனின் இறுகிய அணைப்பு அவளுக்குத் தேவையாய் இருக்க... இவள் கணவனின் தூக்கத்தைக் கலைக்க சீண்ட… அவனோ பகல் முழுக்க உழைத்த உழைப்பில் மாடு மாதிரி தூங்க... இவளோ முதலில் கோபம் கொண்டவள் பின்... மனைவிக்கே உள்ள செல்லச் சீண்டலுடன் கணவனை இவள் சீண்ட... அதற்கு அசைந்தவன்... மறுபடியும் தூக்கத்தை தொடர...

அதேநேரம்… “ஐயோ! அண்ணா...” என்ற கவிதாவின் அலறல் சத்தம் விடிந்தும் விடியாத வேளையில் ஏகாந்த நேரத்தில் அந்த வீடு முழுக்க எதிரொலிக்க... மறுகணமே ஜெயந்தன், “தாயி...” என்ற அழைப்புடன்... வேகமாய் எழுந்து ஓட... இம்முறை விழியில் கண்ணீருடன் அமர்ந்து விட்டாள் பிரமிளா.

“என்ன தாயி... என்ன ஆச்சு...” படியில் உருண்டு விழுந்த படி இருந்த தங்கையை நெருங்கி இவன் கேட்க

“அண்ணா... விழுந்துட்டேன்... ணா...” அவள் உதட்டைப் பிதுக்க

“என்ன தாயி... பார்த்து வரக் கூடாதா...” இவன் அன்பாய் கேட்ட படி... தங்கையைத் தூக்கிச் சென்று மருத்துவச்சியிடம் காண்பிக்க, கால் உடைந்து விட்டது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

துடித்துப் போனவன்... தானே பக்கத்தில் இருந்து தங்கையை பார்த்தும் கொண்டான். தனக்கு வேலை இருக்கும் நேரத்தில்... மனைவிடம் தங்கையை விட்டுச் செல்ல... பிரமிளாவோ வேண்டா வெறுப்பாய் கவிதாவுக்கு கடமைக்கு என்று சிலதை செய்ய…

அண்ணி முழுமையாக பாசத்தில் செய்வதாக நினைத்த கவிதா, “அம்மா... எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு... என் பக்கத்திலயே இருக்கீங்களா?...” பிரமிளாவின் கையைப் பிடித்துக்கொண்டு இவள் கேட்க

அம்மா என்ற வார்த்தையில் இன்னும் வெகுண்டவள், “ச்சீ... உனக்கு நான் அம்மாவா? என் வயசு என்ன… உன் வயசு என்ன... பிறந்த உடனே உன் அப்பா அம்மாவை முழுங்குன... இப்போ எங்க வாழ்க்கையை!

விழுந்தது தான் விழுந்தியே... நாங்க மறு வீடு… ஹனிமூன்னு போயிட்டு வந்த பிறகு நீ விழுந்து காலை உடைச்சிருக்கக் கூடாது... ச்சே... எல்லாம் நான் வாங்கி வந்த வரம்...” பிரமிளா நெருப்பாய் காய...

திருமணத்தின் மறுநாளே தன் அண்ணியின் உண்மை முகம் தெரிய வர... தனக்கு தாயாய் இருப்பார்கள் என்று அண்ணன் சொன்ன வார்த்தைகளில் கவிதா கட்டி வைத்த கனவுக் கோட்டையோ தூள் தூள் என்று ஆனது.

பி. கு : தற்சமயம் வந்து கொண்டு இருக்கும் தொடர் முடிந்ததும்... இக்கதை தொடர்ந்து பதியப்படும் தோழமைகளே....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN