முன் ஜென்ம காதல் நீ - 14

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புது வாழ்வு
அடர்ந்த இரவு. ஊர் எல்லை. சுற்றிலும் வீடுகள் எதுவும் தென்படவில்லை. அவ்வப்பொழுது குளிர்ந்த காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. அந்த இரவின் இருளையோ அந்த குளிரையோ இலட்சியம் செய்யாமல் ஒரு வெள்ளை நிற புரவி சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் முன்னே அமர்ந்திருக்க ஆண் அவள் பின்னே அமர்ந்திருந்தான். அவர்கள் எளிய ஆடையை அணிந்திருந்தனர். சாதாரண மக்கள் அணியும் வேஷ்டி சட்டையும் ஒரு கந்தல் சேலையையும் அணிந்திருந்தனர். ஆனால் அந்த குதிரை மட்டும் உயர்ந்த சாதி புரவியாகவும் கம்பீரமாகவும் தெரிந்தது.
அந்த இருவரின் எடையையும் அலட்சியமாக சுமந்து கொணடு சென்று கொண்டிருந்தது. அதனை பிடித்திருந்த பெண் அதன் கடிவாள கயிறுகளை இறுக்கி பிடிக்கவில்லை சாதாரணமாகவே பிடித்திருந்தாள். அவள் பிடிந்திருந்தாள் என கூறுவது கூட அதிகம் தான். ஏனென்றால் புரவி பாதை தெரிந்தது போல் சென்றது. அவள் அந்த கடிவாள கயிறுகளை விட்டு விட்டு பின்னால் வந்த ஆடவன் மேல் சாய்ந்திருந்தாள். அவனும் அவளை தாங்கி கொண்டு அவள் கழுத்தருகே குனிந்த வண்ணம் அமர்ந்திருந்தான். அந்த குதிரையின் குதிப்பது போன்ற நகர்வும், குளிர்ந்த காற்றும் அவளுக்கு தூக்கத்தை வர செய்ய அவள் அவன் மேல் சாய்ந்த வண்ணம் உறங்க தொடங்கினாள். அவள் உறங்குவதை கண்ட அந்த வாலிபன் " அதிக களைப்பு போல " என புன்முறுவலுடன் கூறிக் கொண்டு அவள் உறங்க வசதியாக நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். அவளும் அவனின் மார்பில் சாய்ந்த வண்ணம் உறங்க தொடங்கினாள்.
எவ்வளவு நேரம் அவள் அப்படி கண் அயர்ந்தாலோ தெரியவில்லை. திடீரென விழித்தாள். சில நொடிகளில் சுயவுணர்வு வரப் பெற்று. " அதிக நேரம் உறங்கி விட்டேனோ? " என்றால் அசட்டையாக. " இல்லை தேவி இன்னும் சிறிது தூரம் சென்றால் நீங்கள் நிம்மதியாக உறங்கலாம் " என்றான். அவளும் " ஏன் இவ்வளவு தூரம் வருகிறோம்? " என்றாள். அவன் உடனே " தேவி நாம் இப்பொழுது முத்தூரின் எல்லையை நெருங்கி கொண்டு இருக்கிறோம். இங்கே இருப்பது தான் நல்லது ஏனென்றால் நாட்டுக்குள் நம்மை எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள் " என்றான். அவளும் " உண்மை தான் " என கூறிக் கொண்டே வந்தாள்.
அவர்கள் இருவரும் அருள்மர்மன் மற்றும் இந்திர ராணி.திருமணம் விமரிசையாக முடிந்த பின் ஏறத்தாழ ஆறு மாதங்கள் காதலும் இன்பமும்மாக வாழ்க்கையை அரண்மனையில் வாழ்ந்தார்கள். அன்பும் மகிழ்சியும் ஊடலும் காதலும் பொங்கி ஓடியது. அப்பொழுது அரசர் இந்திரவர்மன் ஒரு முடிவை வெளியிட்டார். அருள்வர்மனை அரசனாகவும் இந்திர ராணியை அரசியாகவும் முடிசூட்டும் பட்டாபிஷேகம் நடத்தலாம் என்று. அனைத்து மந்திரிகளும் மக்களும் மனமார ஏற்றுக் கொண்டனர். அருள்வர்மனும் முடிசூடிக் கொண்ட பின் தன் எண்ணத்தை அனைவரிடமும் சொல்லி இந்திர ராணி பொறுப்பில் நாட்டை கொடுத்து விட்டு போர்க்களம் செல்ல திட்டம் செய்திருந்தான்.
பட்டாபிஷேக திருவிழாவிற்கு முன்பு முடிசூட்டி கொள்ள போகிறவர்கள் ஒரு விரதம் ஒன்று இருக்க வேண்டி இருந்தது. அதன் படி தொண்ணூறு நாட்கள் அதாவது மூன்று மாதங்கள் அரண்மனை வாழ்வை துறந்து மக்களுடன் மக்களாக கலந்து சொந்தமாக உழைத்து வாழ வேண்டும் என்பது தான் அது. அருள்வர்மன் இந்திர ராணி தம்பதிகளும் அந்த விரதத்தை ஏற்று அரண்மனையை விட்டு இன்று மாலையில் தான் கிளம்பினார்கள். அந்த விரதத்தின் தொடங்கமே முதல் பகுதி.
சிறிது நேர பயணத்திற்கு பிறகு அந்த குதிரை ஒரு சத்திரத்தின் முன்னே நின்றது. அதிலிருந்து அலட்சியமாக குதித்த அருள்வர்மன் இந்திர ராணியின் கையை பிடித்து இறக்கி விட்டான். முதலில் அவன் உள்ளே சென்றான். அங்கே ஐம்பது வயதில் ஒருவர் நின்றார். இவன் அருகே சென்று " ஐயா என் பெயர் சீலன் என் மனைவி மதியழகியுடன் பிழைப்பு தேடி செல்லுகிறேன் இன்று இரவு மட்டும் இங்கே தங்க அனுமதி தாருங்கள் " என்றான். அவனை ஒரு கணம் பார்த்த அவர் " தாராளமாக தங்கி கொள்ளுங்கள் ஆனால் இங்கே பழைய உணவு தான் இனாமாக உள்ளது " என்றார். இவனும் " சரி ஐயா " என கூறிக் கொண்டான்.
பின் அவளையும் அழைத்து வந்து இருவரும் ஒரு சிறிய அறையில் தங்கினர். அந்த பழைய உணவினை வாங்கி வந்து உண்ணும் போது அவன் அவளை பார்த்து " தேவி மன்னித்து விடுங்கள் உங்களை இந்த உணவினை உண்ண வைத்தமைக்கு " என்றான். அவளும் " உணவின் இனிமை உணவில் மட்டுமா? உடனிருப்போர் அன்பிலும் அல்லவா? " என்றாள். இவ்வாறு பேசிக் கொண்டே அந்த உணவினை உண்டு முடித்தனர். பின்னர் அவளை உறங்க சொல்லி விட்டு அவன் வெளியே சென்றான்.
அந்த சத்திரம் ஏறத்தாழ காட்டின் அருகே காட்டின் உள்ளே இருந்தது என்று கூட சொல்லலாம். அவன் காட்டிற்கு உள்ளே சென்றான். இரண்டு நாழிகைகளுக்குள் திரும்பி வந்தான். கை நிறைய தழைகளுடனும் சில கனிகளுடன். சத்திரத்தின் பின்னே அவனது புரவி கட்டப்பட்டிருந்தது. அதற்கு தண்ணீர் காட்டி விட்டு அந்த இலை தழைகளை உண்ண கொடுத்தான். பின் உள்ளே சென்று இந்திர ராணிக்கு அந்த கனிகளை உண்ண கொடுத்தான். அவளும் அவற்றை உண்டு விட்டு அமைதியாக உறங்கினாள். அப்பொழுது அந்த சத்திர உரிமையாளர் வெளியே யாருடனோ சத்தமாக தர்க்கம் செய்வது போல் சத்தம் கேட்டது. இவன் வெளியே சென்ற போது அவர் மட்டுமே இருந்தார். என்ன நடந்தது என கேட்ட பொழுது.
அவர் " நாளை ஒரு பெரிய திருமண பரிவாரம் இங்கே வர உள்ளது. அவர்களுக்கு உணவு தயாரிக்க விறகு வேண்டும் " என்றார். இவன் " விறகு கட்டுகள் இல்லையா? " என கேட்க அவர் " இந்த சத்திரத்திற்கு பின்னே உள்ள நான்கு பட்ட மரங்களை வெட்டி பயன்படுத்த திட்டம் போட்டிருந்தோம். ஆனால் அவற்றை வெட்ட இதுவரை ஆள் வரவில்லை " என்றார். அவன் " அவற்றை வெட்டுவதற்கு எவ்வளவு ஊதியம் கொடுப்பீர்கள்? " என கேட்க அவர் " மரத்தை வெட்டி துண்டுகளாக எரிக்க தகுந்தார் போல் கொடுத்தால் நான்கு பொற்காசுகள் கொடுப்பேன் " என்றார். அவனும் " சரி ஐயா நான் வெட்டி தருகிறேன் " என அவன் சொன்னவுடன் அவர் சிரித்தே விட்டார். " சீலா நான்கு மரங்களை துண்டுகளாக வெட்ட ஆறு பேர் இரண்டு நாட்கள் வேலை செய்தாலும் கடினம் " என்றார். அவன் உடனே " சரி ஐயா காலையில் பார்ப்போம் " என கூறிக் கொண்டு சென்றான்.
அவரும் நாளை திருமண பரிவாரத்திற்கு உபசரிப்பு நடைபெற முடியாது என்ற கவலையுடன் சென்றார். இவன் அருவாளையும் கோடாரியையும் எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று மரங்களை வெட்ட தொடங்கினான். நிலவு வெளிச்சத்தில் அலுப்பு தெரியாமல் வேலை செய்தான்.
மறுநாள் பின்புறம் வந்து பார்த்த அந்த உரிமையாளர் அசந்து போனார். நான்கு மரங்களும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கட்டுகளாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. சீலனை அழைத்து பாராட்டினார். நான்கு பொற்காசுகளுடன் சேர்த்து ஐந்து பொற்காசுகளை கொடுத்தார். அதனை கொண்டு புது வாழ்வை தொடங்க நினைத்தனர். சீலனும் மதியழகியும்.


இறுதி போர்
அடுத்த நாள் எழும்பி இருவரும் கிளம்பினர். காலை உணவினை உண்டு முடித்து விட்டு கிளம்பி சென்றனர். அந்த ஐந்து பொற்காசுகளை வைத்து சில பொருட்களை வாங்கி கொண்டு கிளம்பினர். காட்டுக்கு மிக அருகே அதாவது காடு தொடங்கும் இடத்தில் ஒரு சிறிய கூடாரம் அமைத்துக் கொண்டனர். ஓலை மேய்ந்த குடிசை வீட்டை அமைத்துக் கொண்டனர். மிகச் சிறிய கூடாரம் சாணம் மெழுகிய தரை என அமைத்துக் கொண்டனர். அருள்வர்மன் பெருங்காலங்கள் காட்டில் வாழ்ந்தவன். வேட்டையாட செல்கிறேன் என பல காலம் சுற்றியுள்ளான். ஆகவே அவனுக்கு பெரியதாக கஷ்டம் தெரியவில்லை.
ஆனால் இந்திர ராணி அரண்மனையில் வாழ்ந்தவள். அந்த காட்டு வாழ்க்கையில் சிறிது கஷ்டப்பட்டு தான் போனாள். வீட்டு வேலைகளை கவனிப்பதில் பெரும் கஷ்டம் இருந்தது அவளுக்கு. அந்த வேலைகளில் அருள்வர்மனும் உதவி செய்வான்.தினமும் காலையில் எழுந்து கிளம்பி அவன் காட்டிற்கு செல்வான். பட்ட மரங்களை தேடி திரிவான் அவன் குதிரையில். அப்படி கண்ணில் படும் மரங்களை வெட்டி விறகுகளாக கட்டுவான். பின்னர் சந்தைக்கு சென்று அனைத்தையும் விற்பான். சில செப்பு காசுகளும் சில சமயங்களில் பொற்காசுகளும் கிடைக்கும். அவற்றை எடுத்து கொண்டு செல்வான்.
தன் குதிரை வீராவிற்கு கொள்ளும் வாங்கி கொள்வான். அந்த குதிரையும் இவனின் நிலையை புரிந்து கொள்ளும். அப்படி விறகு வெட்ட செல்லும் போது சில காட்டு மிருகங்கள் கண்ணில் பட்டால் விட மாட்டான் விரட்டிக் கொண்டு செல்வான். அவற்றை தேடி பிடித்து வேட்டையாடுவான். சிங்கம், புலி, காட்டுபன்றி போன்ற கொடிய மிருகங்களை தான் வேட்டையாடுவான். சாதுவான மிருகங்களை விட்டு விடுவான். அந்த மிருகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சந்தைக்கு சென்று விற்பான். அவற்றின் உடலை பதப்படுத்தி விற்பனை செய்யும் வேடவர்கள் அவற்றை பெரும் பணம் கொடுத்து வாங்கி செல்வர்.
இவனும் அவற்றை எடுத்துக் கொண்டு தன் இல்லத்திற்கு செல்வான். அவற்றை கொண்டு உணவு பொருட்களை வாங்கி கொண்டு செல்வான். அதனை கொண்டு இந்திர ராணி உணவு தயார் செய்வாள். அவற்றை இருவரும் உண்டு விட்டு அன்றைய பொழுதை கழிப்பர். மிருகங்களை வேட்டையாடினால் அவனுக்கு பெரும் தொகை கிடைக்கும். அன்றைய பொழுதில் விரைவாக திரும்பி விடுவான். விறகு வெட்டினால் மாலை நேரம் வரை காட்டில் தான் இருப்பான். சொற்ப வருமானம் தான் கிடைக்கும். " தினமும் வேட்டையாடலாமே? " என இந்திர ராணி கேட்ட பொழுது. அவன் " மொத்தமாக வேட்டையாடி காட்டினையும் விலங்குகளையும் அழிக்க கூடாது " என்பான். சில நாட்களில் இருவருக்கும் அந்த வாழ்க்கை பழகி விட்டது. அவன் வேலைக்கு செல்வான். இவள் வீட்டில் உணவை தயார் செய்து விட்டு இருப்பாள். அவன் வந்த உடன் இருவரும் உண்டு மகிழ்வர். மீதமுள்ள பொழுதை மகிழ்வாக கழிப்பர். சில சமயம் இருவரும் ஒன்றாக காட்டுக்கு கூட செல்வர். சுற்றி பார்க்க செல்வர். மகிழ்ச்சியாக காலம் செல்ல தொடங்கியது. ஒரு மாதம் அமைதியாக கழிந்தது.
அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள் ஒரே நாளில் ஏழையாக மாறி போனது போல தான். அவர்கள் வாழ்க்கை ஓட தொடங்கியது. தினமும் எளிய உணவுகள். எளிய வாழ்க்கை முறைகள் என வாழ்க்கை ஓட தொடங்கியது. வாழ்வின் மகிழ்ச்சி என்பது அறுசுவை உணவிலோ அல்லது பணம் பட்டாடைகளிலோ மட்டுமே இல்லை. உடனிருப்போர் அன்பிலும் அரவணைப்பிலும் தானே உள்ளது. ஆகவே அவர்களுக்கு கஷ்டம் அதிகம் தெரியவில்லை. அன்பும் மகிழ்ச்சியும் காதலும் கலந்தோடியது. அந்த குடிசை வீட்டில்.
ஒரு நாள் வழக்கம் போல அவன் காலையில் எழும்பி கிளம்பினான். தன் உணவுகளை உண்டு விட்டு கிளம்பினான். " தேவி இங்கே காத்திருங்கள் நான் சென்று இன்றைய வேலையை செய்து வருகிறேன் " என சொல்லி கிளம்பினான். அப்பொழுது அவள் மனதில் எதோ இடறியது. அவனின் மனமும் குழம்ப தான் செய்தது. இருப்பினும் தன் புரவியில் ஏறி கிளம்பினான். அங்கே காட்டின் தொடக்கத்திலேயே ஒரு ஒரு பெரிய மரம் பட்டு போய் இருந்தது. அவன் உடனே தன் கோடாரியை எடுத்து வெட்ட தொடங்கினான். சில நாழிகைகளில் பாதி மரத்தினை வெட்டி இருந்தான். அப்பொழுது ஒரு இருபது குதிரைகள் விரைந்து வருவது போல் சத்தம் கேட்டது. யாரென இவன் கவனித்தான். அந்த வீரர்கள் கொண்டு வந்த கொடியில் இருந்து அந்த வீரர்கள் கபாட புரத்தை சேர்ந்தவர்கள் போல் காணப்பட்டனர். அவனுக்கு புரிந்தது.
அந்த காட்டு பகுதி முத்தூரின் எல்லை ஆனதால் கபாடபுரம் தொடங்கும் பகுதி. ஆகவே அந்த அரச குடும்பத்தினர் வேட்டையாட வந்துள்ளனர் என அறிந்தான். அவர்களை சந்திப்பது தன் விரதத்திற்கு பங்கம் ஆகும் என புரிந்து. அந்த மரத்தின் பின்புறம் கோடாரியுடன் ஒளிந்து கொண்டான். அந்த வீரர் கூட்டம் இவனிருந்த இடத்தை விட்டு சற்று தூரம் தள்ளி நின்றது. அதிலிருந்து ஒரு குரல் " வீரர் கோழையை போல் ஒளிவது சரியா? " என கேட்டான். அந்த குரல் கஜவர்மன் குரல் தான். மேலும் அவன் " நண்பனை காண ஆசை இல்லையா? " என கேட்டவுடன். வெளியே வந்தான் அருள்வர்மன். " நண்பா " என அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். இருவரும் கட்டி தழுவி கொண்டனர்.
அப்பொழுது அவன் நடந்ததை சொன்னான். பின் கஜவர்மன் " வா நண்பா இருவரும் ஒன்றாக வேட்டையாடி நாளாகி விட்டது " என அழைத்தான். பின் இருவரும் வேட்டையாட தொடங்கினர். போட்டி போட்டு கொண்டு உச்சி வேளை வரை வேட்டையாடினர். மான், சிங்கம் என பல மிருகங்களை வேட்டையாடினர். கஜவர்மன் உடன் வந்தவர்கள் அந்த விலங்குகளை சமைத்து முடித்தனர். கஜவர்மன் அவனை உணவு உண்ண அழைத்தான். ஆனால் அவன் " என் விரதத்திற்கு பங்கம் ஆகும் " என சொல்லி மறுத்தான். ஆனால் அவன் " நண்பா நீ பல மிருகங்களை இன்று எனக்கு வேட்டையாடி கொடுத்தாய். அதற்கு சம்பளமாக இந்த அறுசுவை உணவை தருகிறேன். நீ உண்டு விட்டு இந்திர ராணிக்கும் எடுத்து செல் " என்றான்.
அவனுக்கும் அது தான் சரி என பட்டது. தன் மனைவி இந்திர ராணிக்கு ஒரு முறை அரச அறுசுவை உணவை அளிக்க வேண்டும் என நினைத்தான். அதற்கு வாய்பாக இதனை எடுத்துக் கொண்டான். " சரி நண்பா இருவருக்கும் உணவை கொடு நான் சென்று அவளுடன் சேர்ந்து உண்டு கொள்ளுகிறோம் " என்றான். அவன் விடாமல் " என்னுடன் உணவு உண்ண மாட்டாய்யா? " என கேட்க அவன் ஒத்துக் கொண்டான். அருள்வர்மன் சிறிதளவே உண்டான். இருவரும் உண்டு முடித்தனர். பின்னர் அவன் " அனைவருக்கும் உணவு உண்டு விட்டு உறங்குவார்கள். ஆனால் நாம் என்ன செய்வோம்? " என கேட்டான். அதற்கு அருள்வர்மன் " வா நண்பா வாட்பயிற்சி செய்வோம் " என கூறினான். இருவரும் வாளை உருவிக் கொண்டு போரிட தொடங்கினர். அப்பொழுது அவர்களுக்கு தெரியவில்லை இது தான் இறுதி போர் என்று.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN