முன் ஜென்ம காதல் நீ - 13

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சூழ்ந்தது ஆபத்து
அருள்வர்மனை பற்றி நினைத்து கொண்டிருந்த இந்திர ராணியின் தலையில் இருந்த நண்டுகள் பிரித்து ஏறியப்பட்டன. அவளது தலை வலுகட்டாயமாக தூக்கி ஒரு மடியில் கிடத்தப்பட்டது. சத்தம் இட முயன்ற வாயும் மூடப்பட்டது ஒரு கையால். அவள் கண் முன்னே ஒரு வாலிப வீரன் இருந்தான். தலையில் அரண்மனை காவலர்கள் அணியும் தலைபாகையும் அவர்கள் அணியும் உடையையும் அணிந்திருந்தான். முகத்தில் பெரிய முறுக்கு மீசையும். சில வடுக்கள் என அலங்கோலமாகவும் அசிங்கமாகவும் இருந்தான். இந்த ஆராய்ச்சியை அரை நொடியில் முடித்த அவள் யார் இந்த காவலன்? இவனிற்கு எப்படி இவ்வளவு தைரியம்.? என எண்ணினாள். அப்பொழுது அவளின் வாயை பிடித்திருந்த கரத்தினை நகர்த்தாமல் மற்றொரு கையால் தன் முகத்தில் இருந்த மீசையை பிரித்து எடுத்தான். அவ்வாறே தழும்புகளையும் பிய்த்து போட்டான். இறுதியாக அவன் தலைபாகையையும் அவிழ்க்க அங்கே அருள்வர்மன் இருந்தான். அவனை ஆச்சரியத்துடன் பார்க்க அவளை விடுவித்து விட்டு அவன் பேச தொடங்கினான். " மன்னிக்க வேண்டும் தேவி நான் தான் " என்றான். அவளும் எழுந்து அமர்ந்து விட்டு ஆச்சரியத்துடன் " நீங்களா? இது எப்படி சாத்தியம்? " என கேட்டாள்.
அவன் புன்முறுவலுடன் " தேவி இப்படி யாரும் அறியாமல் வெளியே வருவது சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியம் " என்றான். அவள் " நான் இப்படி வருவது வழக்கம் தான் ஆனால் தாங்கள் புதியவர் அல்லவா? " என்றாள். அவள் உடனே இகழ்ச்சி புன்னகையுடன் பேச தொடங்கினான் " அரண்மனையில் என் வாயிலை காவல் காத்த வீரனுக்கு ஓய்வு அளித்தேன் " என்றான். அவளோ " புரியவில்லை " என கூற அவன் தொடர்ந்து " அவன் ஒரு ஜாம காலம் காவல் காத்து உள்ளான். ஆகவே என் அறையில் என் உடைகளை அணிய செய்து உறங்க சொன்னேன் அவன் ஒத்துக் கொள்ளவில்லை. பின் பல விஷயங்களை கூறி வெகுமதி அளிப்பதாகவும் கூறி ஒத்துக் கொள்ள செய்தேன். இறுதியாக அவன் சம்மதிக்க என் உடைகளை அவனுக்கு அணிவித்து அங்கே இருக்க சொல்லி விட்டு. அவன் உடைகளை நான் அணிந்து கொண்டு கோட்டை வாயிலில் என் முத்திரை மோதிரத்தை காட்டி விட்டு வெளியே வந்தேன். இரவின் காரணமாக யாரும் என் முகத்தினை கவனிக்கவில்லை. " என சொல்லி கொண்டே சென்றவனை மறித்து " என்னை காணவா வந்தீர்கள் " என கேட்டாள் ஆவலுடன்.
அவன் புன்முறுவலுடன் " தேவி நீங்கள் இங்கே இருப்பீர்கள் என எனக்கு எப்படி தெரியும் நான் வந்தது வேறு ஒரு காரணத்திற்காக " என்றான். அவள் " என்ன காரணம்? " என கேட்டுக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் " அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லை தேவி. அந்த பன்னீர் தெளித்த பஞ்சணையில் தூக்கம் வரவில்லை. ஆகவே தான் இங்கே வந்தேன். சிறிது நேரம் உறங்கி விட்டு செல்லலாம் என்று. இங்கு உறக்கம் இன்றியே புத்துணர்ச்சியை தரும் உங்களை கண்டு கொண்டேன் " என்றான். அவனது கைகளும் தோளில் சாய்த்திருந்த அவளது தலை முடியை கோதி விட்டன. அவளோ சற்று வியப்புடன் " வருங்கால அரசர் அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லை என கூறலாமா? " என கேட்க அவன் " அரச பதவி எனக்கு சரிப்பட்டு வராது தேவி " என்றான். அவள் " ஏன்? " என்றாள் சற்று அதிர்ச்சியுடன்.
அவன் " தேவி எனக்கு போர்க்களம் தான் வீடு அங்கே வீசும் இரத்த வாடை தான் எனக்கு சந்தனமும் பன்னீரும் கலந்து வீசும் நறுமணம் மரண ஓலங்கள் தான் தாலாட்டு அந்த களத்தில் தான் அறிவு சிறப்பாக வேலை செய்யும் அந்த சூழல் இல்லையென்றால் நான் மூளை மழுங்கி விடும். இரண்டு மாதத்திற்கு ஒரு போராவது எனக்கு நிச்சயம் வேண்டும். அறிவற்ற உடல் உயிரற்ற உடலுக்கு சமம்." என்றான் உணர்ச்சி பெறுக. அப்பொழுது அவன் கண்களில் தெரிந்த ஒளி அவனின் மனது அப்பொழுதோ போர்களத்திற்கு சென்று விட்டதை காட்டியது. அங்கே அவன் உலா வர தொடங்கியதையும் உணர்ந்தாள். அதனை கண்ட அவள் "அப்படி என்றால் இந்த முத்தூரை ஆள போவது யார்? " என கேட்க அவன் " தாங்கள் தான் தேவி நான் அரசனாக இருந்தாலும் ஒரு படை தளபதியாக தான் இருப்பேன். தாங்கள் விரும்பும் தேசம் அனைத்தையும் வென்று தருவேன் அதனை ஆட்சி செய்ய வேண்டியது தங்கள் பொறுப்பு " என்றான்.
அவள் அவனை பெருமை பொங்க பார்த்தாள். மேலும் சொன்னாள் " நாட்டை அரசாள நான் தயார் ஆனால் அது சில காலம் வரை தான் தொடரும் " என்றாள் விஷமத்துடன். " ஏன் தேவி அந்த சில காலம் வரையறை " என்றான். அவள் " ஹீம் ஹீஹீம் நான் சொல்ல மாட்டேன் " என்றாள். அவன் மீண்டும் கேட்க அவள் முகம் எல்லாம் சிவக்க வெட்கத்துடன் " உங்கள் மகன் பிறக்கும் வரை மட்டுமே அவன் பிறந்தால் அவனே இந் நாட்டின் அரசன் " என்றாள் பெரும் வெட்கத்துடன். அவன் உடனே புன்னகையுடன் " அதுவும் சரி தான் அவன் அரசன் ஆனால் இந்த குமரி கண்டம் முழுவதையும் அவனிற்கு வென்று கொடுப்பேன் " என்றான் உறுதியுடன். அவளும் " அவன் தந்தை மட்டும் பெரும் வீரனாக இருக்க வேண்டும். அவன் மட்டும் தன் தந்தை வெற்றியில் வாழ வேண்டுமா? " என்றாள் பெரும் விஷமத்துடன். அவன் " அவனும் பெரும் வீரனாக வரட்டும் நான் கீழ்திசையில் உள்ள குமரி கண்டத்தை வென்றால் அவன் மேல்திசையில் உள்ள பரத கண்டத்தை வெல்லட்டும் " என்றான் சிரிப்புடன். அவளும் சிரித்தாள்.
நாட்கள் செல்ல செல்ல அந்த காவலன் இவனிற்கு நண்பனாகி விட்டான். அவனுக்கு அவ்வப்பொழுது சில பொற்காசுகளை வெகுமதியாக வழங்குவான். அவன் அந்த அறையில் இவனை போல் நடித்து படுத்துக் கொள்ள இவன் அவனின் ஆடைகளை அணிந்து மாறுவேடம் தரித்து கிளம்பி விடுவான் அவளை தேடி. அவளும் வருவாள். இதே போல் நாட்கள் தொடர்ந்தன. இருவரும் இப்படியாக வேடிக்கை பேச்சுகளும், வரம்பு மீறாத அணைப்புகளும். ஊடலும் காதலுமாக பொழுதை கழிப்பர். அரண்மனையில் ஒருவரை ஒருவர் சந்திகாதது போல் காட்டி கொண்டாலும் தனிமையில் இணைந்திருந்தனர்.
ஒரு நாள் இப்படி பேசிக் கொண்டிருக்க அவள் மரத்தில் சாய்ந்து இருந்தான். அவள் இவனின் இடது பக்க தோளில் சாய்ந்திருந்தாள். அப்பொழுது குளிர் காற்று மெல்ல வீச மரத்தில் உள்ள இலைகளும் கிளைகளும் மெல்ல அசைந்தன. அவை எதோ சொர்ப்பன உலகிற்கு அவர்களை அழைத்து சென்றன. இவர்களை போலவே எதோ காதல் பறவை ஜோடிகள் சத்தம் இட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்தான் அவன். திடீரென சத்தம் மாறியது. ஒரு பறவை மட்டும் மெல்லிய சத்தம் எழுப்பியது.
அதனை கேட்ட அருள்வர்மனுக்கு எதோ ஆபத்து சூழ்கிறது என அவன் உள்ளுணர்வு சொல்லியது. இவன் சுதாரிப்பதற்குள் தீடிரென ஒரு அம்பு காற்றில் வெகு வேகமாக பாய்ந்து வந்து இவனின் வலது மார்பில் தைய்த்து நின்றது. அதிலிருந்து சில இரத்த துளிகள் மெதுவாக வர தொடங்கின.


இன்ப வெள்ளம்
அருள்வர்மன் முகத்தில் இருந்த புன்னகை அதிகமாகியது. எப்பொழுது ஆபத்து காலத்தில் ஏற்படும் உற்சாகம் அப்பொழுதும் ஏற்பட்டிருந்தது. ஒரு துள்ளளுடன் எழுந்து நின்றான். காவலன் வேடத்திற்காக கொண்டு வந்த வேலை எடுத்து கையில் வைத்துக் கொண்டான். தன் மார்பில் பதிந்திருந்த அம்பை பிடுங்கினான். பின் அதனை முகர்ந்து பார்த்தான் " நல்ல வேளை விஷம் இல்லை " என கூறிக் கொண்டான். பின் " தேவி எழுந்திருங்கள் " என கூறிக் கொண்டே அவள் கையை பிடித்து தூக்கி பின்னாலே இருந்த மரத்தின் பின் தள்ளினான். அதே புன்னகையுடன் " தாக்க விரும்புபவர்கள் முன்னால் வரட்டும் இல்லையென்றால்..." என கூறிக் கொண்டே அந்த வேலை இருட்டில் ஒரு இடத்தில் ஏறிந்தான். " ஐயோ அம்மா " என்றவாறு ஒரு சத்தம் கேட்டது.
அவன் கையில் ஆயுதம் இல்லாததை கண்டவுடன் தைரியம் கொண்ட ஒரு முப்பது வீரர்கள் கைகளில் வாள்களுடன் அவனை நெருங்கினர். அதனை கண்டு அவன் கலங்கவில்லை. அப்பொழுது எதோ மாயத்தில் வந்தது போல் கையில் ஒரு வாள் வந்தது. " என்னை அழிக்க விரும்புவோர் என்னிடம் வரட்டும் இந்த மரத்தின் பின்னாலே செல்ல நினைப்போர் உயிர் அரை காசு பெறாது " என்றான் கடுமையாக. அந்த ஆபத்திலும் அவன் புத்தி தெளிவாகவவும் அலட்சியமாகவும் இருந்தது. அது அவன் பேச்சிலும் தெரிந்தது.
எதோ மாணவர்களுக்கு வாள் பயிற்சி அளிக்கும் குருவை போல் அவன் அந்த யுத்தத்தை தொடங்கினான். முதலில் வந்த நால்வர் அவனை சூழ்ந்து கொண்டனர். அந்த நான்கு வாள்களையும் ஒரு சமயத்தில் தடுத்த அவன் ஒரு சுழற்று சுழற்ற நால்வர் வாள்களும் காற்றில் பறந்தன. அவர்கள் நால்வர் மேலும் வாள் கீறல் பட்டு இரத்தம் கொட்ட கீழே விழுந்தனர். பின்னாலே வந்தவர்கள் நெருங்கி வந்து போரிட. கீழே விழுந்த ஒரு வீரனின் வாளை எடுத்து கொண்டு இரண்டு கைகளிலும் வாள்களை சுழற்றி போரிட்டான்.
மிகவும் வேகமாக எதோ மாய வித்தையில் சுழலும் இயந்திரம் போல் அவன் கைகள் சுழன்று அவர்களை தேக்கி வெட்டி போட்டது. அவன் இருந்த இடத்தை விட்டு நான்கடிகள் கூட நகரவில்லை எதிரிகள் நெருங்கி வர ஒவ்வொருவரையும் வெட்ட தொடங்கினான். அப்பொழுது ஒருவன் அந்த மரத்தின் பின்னாலே செல்ல முயன்றான். அவன் கையில் இருந்த ஒரு வாளை வீச அது அந்த வீரனின் தலையை துண்டாக்கியது அதனை கண்டு அனைவரும் திகைத்தனர். மற்றொருவன் அந்த மரத்தினை அடைய முயல அவன் இதயத்தில் ஒரு குறுவாளை விட்டெறிந்தான். அந்த வாள் இததயத்தில் சரியாக குத்தி நின்றது. இரத்தம் வழிய அவன் தனியாக கீழே விழுந்தான்.
இவ்வாறு அவன் கைகள் தொடர்ந்து மாயங்கள் நிகழ்த்த வந்த எதிரிகள் அனைவரும் தோல்வியடைந்து ஓட தொடங்கினர். இறுதியாக வந்த முப்பது வீரர்களில் எஞ்சியோர் ஓட தொடங்கினர். பன்னிரண்டு பேர் இறந்து கிடந்தனர்.
பின் அவளை மரத்தின் பின் இருந்து அழைத்தான். " தேவி பயந்துட்டிங்களா? " எனவும் கேட்டான். அவளும் தன் முன்னே நடந்த வீர ஜாலத்தை கண்டு மலைத்து போய் நின்றாள். ஒரு வீரன் தனியாக முப்பது வீரர்களுடன் போராடி வெல்ல முடியும் என்பதை அது வரை நம்பாமல் இருந்தாள். அதே பிரம்மிப்புடன் அவனை பார்த்தாள். அப்பொழுதும் அவன் மார்பிலிருந்த காயத்தில் இருந்து இரத்தம் வந்தது. " என்ன இது காயம்? " என கவலையுடன் கேட்டுக் கொண்டே அருகே வந்தாள். தன் ஆடையின் ஓரத்தை கிழித்து அந்த காயத்தில் வைத்து அடைத்தாள். அவள் செய்கையை ஆச்சரியத்துடன் பார்த்தான் அவன் அத்துடன் " தேவி இது ஒன்றும் பெரியதல்ல " என்றான். மேலும் " நான் விரும்பிய போர் இப்பொழுதே கிடைத்து விட்டது அவ்வளவு தான் "என்றான்.
அவள் " ஏதேனும் தவறாக நடந்திருந்தால் " என்றாள் கவலையுடன். " என் உடலில் காயம்பட்டால் எனக்கு பாதிப்பு வராது தேவி " என்றான் புன்னகையுடன். அவள் " புரியவில்லை " என்றாள். " தேவி அந்த அம்பு என் வலது பக்க மார்பில் பட்டதும் எனக்கு கோபமும் வீரமும் தான் வந்தது மாறாக இடது பக்க மார்பில் சாய்ந்திருந்த தங்கள் மேல் பட்டிருந்தால் மயங்கி சாய்ந்திருப்பேன் " என்றான். பின் அங்கே இறந்து கிடந்தவர்களின் உடலை சிறிது நேரம் பார்த்தான். பின் " தேவி அனைவரும் உங்கள் நாட்டு வீரர்கள் தான் ஏன் வந்தார்கள் என தெரியவில்லை நான் இங்கே வந்தது அந்த வாயில் காக்கும் வீரனுக்கு மட்டுமே தெரியும் அவனை நான் விசாரிக்கிறேன் நீங்கள் யாரிடமும் கூறாதீர்கள். இனிமேல் தனிமையில் இங்கே வராதீர்கள். " என கூறிக் கொண்டே சென்றான். அவள் " தனியே வந்தால் காக்க நீங்கள் தான் உள்ளீர்களே " என்றள் விஷமத்துடன் ".அப்படி என்றால் என்னிடம் சொல்லிவிட்டு வாருங்கள் " என கூறி விட்டு அரண்மனையின் உள்ளே சென்றான்.
அங்கே அவனிருந்த அறையில் இருந்த வீரனை காணவில்லை. எங்கே என கேட்டவனுக்கு அவன் சிறிது நேரத்தில் இங்கிருந்து சென்று விட்டதாக கூறினார்கள். அவனை பகிரங்கமாக தேடவும் இயலவில்லை. ஏனென்றால் நடந்த சண்டையை பற்றி கூறினால் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி அவன் இந்திர ராணியை காண சென்ற விஷயத்தையும் வெளியே சொல்ல நேரிடும் என நினைத்தான். பின் இதுக்கு காரணம் யார்? என எண்ணி குழம்பினான். அங்கே யுத்தம் நடந்த காட்சியை மனக் கண் முன்னே பல முறை நினைத்து பார்த்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தான். மறுநாள் யாரும் அறியாமல் காவலர் உடையில் அங்கே சென்று பார்த்தான். அங்கே இறந்தவர்கள் ஒருவரின் உடலையும் காணவில்லை. " நான் எதிர்பார்த்தது தானே " என எண்ணிக் கொண்டே திரும்பினான்.
பின் யுத்த காலத்தில் தன்னுடன் இருந்து பணியாற்றிய சேனாதிபதி சுந்தர பாண்டியனை சென்று சந்தித்தான். எதிர்பாராமல் அவன் வந்தது அவனுக்கு ஆச்சரியம் அளித்தது. அவன் பின் இயல்பாக வரவேற்றான். பின் அவனிடம் தனிமையில் " ஏன் என்னை கொலை செய்ய வந்தீங்க? " என கேட்டான். அவன் அதிர்ச்சியடைந்து" நான் இல்லை " என சமாளித்தான். பின் அருள்வர்மன் " உங்கள் மூக்கிற்கு வலது புறம் இருந்த வெட்டு காயம் உங்களை நேற்று அடையாளம் காட்டி விட்டது. நீங்கள் இந்திர ராணிக்கு உறவினர். அவளிற்கு மாமா முறை வரும். அவளை தாங்கள் அடைய நினைத்தால் போட்டியில் பங்கேற்று வென்றிருக்கலாம். இல்லை எனில் மன்னரிடம் உறவு முறையை காட்டி பேசி பார்த்து இருக்கலாம். ஆனால் அனைத்தையும் விட்டு விட்டு இப்படி செய்வது முறையா? போர்களத்தில் நீர் எனக்கு நெருங்கிய நண்பர் இந்த யுத்தத்தில் வெல்ல எனக்கு அடுத்த காரணம் நீங்கள். உங்களை நெருங்கிய நண்பராக நினைத்து கேட்கிறேன் ஆகவே சொல்லுங்கள் உண்மையை " என்றான் இகழ்ச்சியுடன்.
அவன் பலவாறு கேட்ட பிறகு அவர் பேச தொடங்கினார். சிறிது நேர அமைதிக்கு பின் அவர் " நான் இந்திர ராணியை விரும்பவில்லை நான் விரும்புவது அவளை அல்ல . தாங்கள் என்ன இருந்தாலும் பகை நாட்டை சார்ந்தவர். உங்களை அரசர் நம்பினாலும் இங்கே பல மந்திரிகள் ஏற்கவில்லை நம்பவும் இல்லை. அவர்கள் அனைவரும் சேர்ந்து உங்களை அழிக்க பார்கிறார்கள். அவர்கள் திட்டப்படி தான் இந்த முயற்சி அவர்கள் கட்டளைப்படி நானும் அங்கே வர வேண்டியது ஆயிற்று" என்றான். அந்த இறுதி வரிகளை வருத்தத்துடன் கூறினான்.
அருள்வர்மன் இகழ்ச்சியாக சிரித்தான். " என் சொந்த தேசத்தையே முத்தூருக்கா வென்ற பின்னும் நம்பிக்கை இல்லையா? அந்த மத்திரிகளுக்கும் உங்கள் மக்களுக்கும். ஆயினும் இந்த சந்தேகமும் நியாயமானது தான். இதனை தீர்க்க நான் எடுத்த முடிவினை சொல்கிறேன் உங்களை அரசாள போவது நானில்லை உங்கள் இந்திர ராணி தான். இது நான் செய்யும் சத்தியம். இதனை விரைவாக மக்களிடம் அறிவிப்பேன். இனியும் முயற்சிகள் வந்தால் விளைவுகள் விபரீதம் ஆகும் " என கூறி விட்டு திரும்பினான்.
அதன் பின் நாட்கள் விரைவாக ஓட இருபத்தொரு நாட்கள் கழிந்து. இந்திர ராணிக்கும் அருள்வர்மனுக்கும் திருமணம் வெகு ஆடம்பரமாக நடந்தது.அழைப்பினை கஜவர்மனுக்கும் அனுப்பி இருந்தான். நாட்டின் ஒவ்வொரு மக்களும் அதனை தங்கள் வீட்டு விசேஷமாக எண்ணி கொண்டாடினர். முதலில் இந்திர ராணி யானையிலும் அருள்வர்மன் தன் செல்ல புரவியிலும் தனித்தனியாக ஊர்வலம் வந்தனர். பின் திருமணம் முடிந்த பின் இருவரும் ஒன்றாக புரவிகள் பூட்டிய ரதத்தில் ஊர்வலம் வந்தனர். தனியாக அவனுடன் ஓட்டி உறவாடும் இந்திர ராணி இப்பொழுது அவன் பக்கம் திரும்ப கூட இல்லை.
முகம் எல்லாம் சிவப்பாக மாறியிருந்தது. மனது முழுவதும் மகிழ்ச்சி பரவியிருந்தது. அருள்வர்மன் நிலையும் ஏறத்தாழ இதே நிலையில் தான் இருந்தான். சங்கடமாக அசைந்து கொண்டு வந்தான். இந்த கூட்டம் ஆடம்பரம் எதுவும் பிடிக்காது அவனுக்கு. ஆகவே வெகு சங்கடத்துடன் வந்தான். பின் திருமண தம்பதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அருள்வர்மனின் நண்பர்கள் பலர் பல பரிசுகள் கொடுத்தனர். சந்திரவர்மன் நான்கு அரபு புரவிகள் பூட்டிய முப்பது ரதங்களை கொடுத்தான். மற்றொருவன் முழுவதும் தந்தத்தினால் இழைத்து செய்யப்பட்ட மூன்று ரதங்களை கொடுத்தான். கஜவர்மனும் திருமணத்திற்கு வந்திருந்தான் அவன் மொத்தமாக ஐம்பது யானைகளை கொண்டு வந்து கொடுத்தான் பரிசாக. தன் பகையை மறந்து நட்பினை புதுப்பித்து கொள்வதாக எண்ணினான். இரு நண்பர்களும் இணைந்து மகிழ்ந்தனர். எங்கும் இன்ப வெள்ளம் பரவியது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN