அத்தியாயம் 13

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 13
"ரஞ்சு…" என்று அடிமனதில் இருந்து வந்த குரலுடன் சிவரஞ்சனியின் தோலில் கைவைத்த பிறகே அர்ஜூன் வந்ததை கவனித்தவளின் கண்கள் மீண்டும் கண்ணீரை கொட்ட தொடங்கியது. அவளின் உடையை பார்த்த அர்ஜூனுக்கு பக்கென்றது. அவள் கட்டி இருந்த சிவப்பு நிற பார்டர் வைத்த வெள்ளை நிற சில்க் காட்டன் புடவை முழுவதும் இரத்தத்தால் குளிப்பாட்டப் பட்டு இருந்தது.
"ரஞ்சு… என்ன ஆச்சு…" அவளின் இரு தோள்களையும் அழுத்தமாக பற்றி கேட்டவனுக்கு பதிலாக கண்ணீரை சிந்தியவள் "அஜூ… அர்ச்சனா அர்ச்சனா…" என்று அவள் திக்கி தினறிக்கொண்டு இருக்க, அர்ஜூன் அப்போதுதான் கைக்கடிகாரத்தை பார்த்தான். அது மணி ஒன்றரை என்று கூற விபத்துக்குள்ளானது தனது தங்கை என்று அறிந்தவன் அவள் கூறி முடிப்பதற்குள் அவளின் கண்ணத்தில் அறைந்து இருந்தான்.
அந்த நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே வந்த சக்தி, அர்ஜூன் சிவரஞ்சனியை அறைவதை கவனித்தாலும் ஒன்றும் கூற இயலாமல் அங்கேயே நின்றிருந்தான்.
"இதுதான் நீ டிரைவ் பன்னர லட்சனமா..." கோபமாக கத்தியவன் அதற்கு மேல் பேச இயலாமல் தலையில் கைவைத்தபடி கண்கலங்கி நின்றான். சிவரஞ்சனி யின் நெற்றியிலும் அடிப்பட்டு இருந்ததால் சிவரஞ்சனி தான் விபத்தை ஏற்படுத்தி விட்டாள் என நினைத்து கொண்டான்.
அவன் கண் கலங்குவதை பார்த்த சிவரஞ்சனியின் அழுகை மேலும் அதிகரித்தது. சிவரஞ்சனி அழுவதை பார்த்தவன் அவளை தேற்றும் விதமாக அணைத்துக்கொள்ள அவளின் அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. அவளின் கண்முன் அர்ச்சனா பட்ட பாடே படமாக விரிந்து இம்சித்தது.
"மாமா... பயப்பட ஒன்னும் இல்ல. கால்ல அடி பட்டு இருக்கு... நிறைய ப்ளட் லாஸ் ஆகி இருக்கு... மத்தபடி ப்ராக்சர் கூட இல்ல‌. பயப்பட வேண்டாம்... பெயின் கிள்ளர் கொடுத்து இருக்கோம்... இப்போ அர்ச்சனா நிம்மதியா தூங்கிட்டு இருக்கா..." என்று அர்ஜூனிடம் நிலைமையை கூறிய சக்தி, சிவரஞ்சனியிடம் "சிவா... அர்ச்சனாக்கு ஒன்னும் இல்ல... அழாதடி...." என்றவன் அர்ஜூன் ஒரு பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய பிறகு சிவரஞ்சனியை அர்ஜூனிடம் இருந்து பிரித்து "அர்ச்சனாக்கு ஒரு யூனிட் தான் ப்ளட் பேக்ல இருந்து கிடைச்சது மாமா... அது பத்தல... சிவாக்கும் ஓ பாசிடிவ் தான்... இவ கொடுக்கட்டும்.... "என்று கேட்டவன் அவன் சம்மதித்த பிறகு செவிலியர் ஒருவர் வந்து சிவரஞ்சனியை அழைத்து சென்றார்‌.
மந்திரித்து விட்ட கோழி போல் சிவரஞ்சனி செல்வதை சக்தி பாவமாக பார்த்து கொண்டு இருந்தான்.
"சக்தி... நீயும் கூட போ... சிவாக்கு தைரியமா இருக்கும் இல்ல..." அர்ஜூனின் கேள்வியால் திரும்பிய சக்தி அர்ஜூனிடம் உள்ள வாங்க... என்று ஐசியூவின் கதவை திறந்து விட்டவன் "சிவாக்கு ஊசின்னா சுத்தமா பிடிக்காது மாமா... நான் அவகூட இருந்தா அவ கஷ்ட படரத பார்த்துவிட்டு கண்டிப்பா வேண்டாம்னு சொல்லிடுவேன்... அதான் மாமா நான் போகல... ம்ச் எனக்கும் உங்கள போல பி பாசிடிவ் மாமா... இல்லன்னா நான் கொடுத்து இருப்பேன்...."
"எஸ் ஐ நோ... நீங்க டைஸிஜோடிக் டிவின்ஸ்... நான் வேணும்னா அப்பாவ வரவழைக்கவா... அவரு கொடுக்கட்டும்..."
"இல்ல மாமா... அவருக்கே உடம்பு சரியில்லை... நான் என்னுடைய ப்ரன்ஸ்க்கு கால் பன்னி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. ஆக்சுவலா இன்னைக்கு இ.சி.ஆர்ல ஒரு பெரிய ஆக்சிடன்ட். அதனாலதான் பிளட் கிடைக்கல...." இருவரும் பேசியபடியே அர்ச்சனாவிடம் வந்து இருந்தனர்.
காலில் பெரிய கட்டுடனும் ஆங்காங்கே ஒரு சில பிளாஸ்திரிகளுடனும் உதிர்ந்த மலர் போல் படுத்துகிடந்த அர்ச்சனாவை பார்த்ததும் அர்ஜூனுக்கு கண்கள் கலங்கி அவளின் பிம்பத்தை மறைக்க, கண்களை அழுந்த துடைத்து அதை சரிசெய்தவன் அவளின் அருகிலேயே மண்டியிட்டு ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்த கையை மெதுவாக வருடிவிட்டான்.
"டாக்டர்... போலிஸ் வந்து இருக்காங்க..." என்றபடி ஒரு செவிலிப்பெண் சக்திக்கு தகவல் தெரிவிக்க, சக்தி கட்டாயப்படுத்தி அர்ஜூனை வெளியே அழைத்து சென்றான். மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் சொல்லி அனுப்பியதால், அங்கு விசாரணைக்காக வந்து இருந்த கான்ஸ்டாபுள் நடந்ததை பற்றி அர்ச்சனாவின் அண்ணன் என்ற முறையில் அர்ஜூனை விசாரிக்க அர்ஜூனால் ஒன்றும் பேச இயலவில்லை.
அவனை பொருத்தவரையில் சிவரஞ்சனி தான் விபத்தை ஏற்படுத்தி இருக்கிறாள் என நினைத்துக்கொண்டான். எப்படி ஏற்பட்டது, யாரை மோதினாள் அல்லது யாரால் மோதப்பட்டாள் என்ற எந்த தகவலும் தெரியாது என்பதால் அமைதிகாத்தான்‌.
சிவா மூலமாக விஷயம் தெரிந்து இருக்கும் என நினைத்து சக்தியும் அமைதியாக இருக்க, சோர்வாக அங்கு வந்த சிவரஞ்சனி "TN 13 AU **** பிளாக் கலர் கார் சார்... என்ன மாடல்னு எனக்கு தெரியல... அர்ச்சனாவ கடத்திடுவாங்களோன்னு நான் நோட் பன்னேன்..." என்றவள் சக்தியை பிடித்துக்கொண்டு நிற்க, அவளை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தவன் "ஆமாம் சார்... நான் கூட பார்த்தேன்... அது கியா கார்னிவல் மாடல்னு நினைக்கிறேன்...." என்று நடந்ததை விளக்கினான்.
நடந்ததை கேட்ட அர்ஜூனின் சப்த நாடியும் அதிர்ந்தது... வந்த கான்ஸ்டபிள் இது முக்கியமான விவகாரம் என்பதால் காவல்நிலையத்திற்கு வந்து கேஸ் கொடுக்கும் படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அர்ஜூனுக்கு வந்த கோபத்தில் *********** என்று ஒரு கெட்ட வார்த்தையை முனங்கியபடி சிவரஞ்சனி அமர்ந்து இருந்த வரிசையாக அமைக்கப்பட்ட இரும்பு நாற்காலிகளை வேகமாக காலால் உதைத்தான். தன் பாக்கெட்டில் கைவிட்டு கைப்பேசியை எடுத்தபடி வெளியே சென்றான்.
"முகி... எங்க இருக்க..." தனது நண்பனுக்கு அழைப்பு விடுத்து இருந்தான்.
......
"நீ என்ன பன்னுவியோ தெரியாது... இன்னும் டென் மினிட்ஸ்ல @@@@@ ஹாஸ்பிடல் வர..." என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு உள்ளே வந்து சிவரஞ்சனியின் அருகில் அமர்ந்து கொண்டான்.
மருத்துவமனை என்றதும் முகில்வதனனும் எல்லா வேலைகளையும் ஓரம்கட்டிவிட்டு ஐந்து நிமிடத்தில் அங்கு வந்து சேர அர்ச்சனாவிற்கு நடந்தது எல்லாம் அவனுக்கும் சக்தியால் விளக்கப்பட்டது. முகில்வதனனுக்கும் அர்ச்சனா தங்கை போன்றவள் என்பதால் அவனுக்கும் இது வருத்தத்தை அளித்தது.
"முகி நீ என்ன பன்னுவியோ எனக்கு தெரியாது... உடனே அவன் யாருன்னு கண்டுபிடிக்கற... அவன என் கையாலயே கொள்ளனும்... அப்பதான் எனக்கு ஆத்திரம் அடங்கும்..." மருத்துவமனை என்றும் பாராமல் முகிலிடம் கத்திக்கொண்டு இருந்த அர்ஜூனை திசைத்திருப்பியது மயங்கி கீழே விழுந்த சிவரஞ்சனி தான்.
இரத்தம் கொடுத்து விட்டு வந்தவள் பழச்சாறு கூட பருகாமல் இருந்ததால் அவளுக்கு சுழற்சி கொண்டு வர மயங்கி சரிந்தாள். அவளை கவனிக்கும் மனநிலையில் எல்லாம் அர்ஜூன் இல்லாததால் சக்தியே அவளை கவனித்து கொண்டான். அவளுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையிலேயே உறங்க வைத்தான் சக்தி. அதற்குள் முகில்வதனனும் அர்ஜூனை தேற்றி இருந்தான்.
‌‌
‌ அர்ச்சனாவை சிவரஞ்சனி படுத்து இருந்த தனி அறைக்கு மாற்றப்பட அர்ஜூன் அவர்களுடனேயே இருந்தான். அதற்குள் அவனுக்கு வீட்டில் இருந்து பல அழைப்புகள் வந்து இருந்தன. அவர்களிடம் எப்படி விஷயத்தை கூறுவது என்று நினைத்தவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க, திரும்பவும் அந்த முகம் தெரியா நபர் மீது கோபம் வந்தது. முகில்வதனனை அழைத்து பேச அந்த கார் ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கார் என்றும் சிசிடிவி மூலம் பார்த்து கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட அமைதியாக அமர்ந்தான்.
சிறிது நேரத்திற்கு எல்லாம் சிவரஞ்சனி விழித்துவிட அவளை உடை மாற்ற வைத்து உணவகத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி உணவருந்த வைத்தான் சக்தி. அவர்கள் இருவரும் உள்ளே வரும் போது ஒரு செவிலிப்பெண் அர்ச்சனாவின் கையில் இருக்கு ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டு இருக்க, மருந்து ஏற்றுவதை உணர்ந்தாலோ என்னவோ பதறியடித்து கொண்டு எழுந்தவள் அம்மா.... என்று கத்த ஆரம்பிக்க, குளுக்கோஸ் சென்று கொண்டிருந்த ஊசி ஆடி அது செல்லும் நரம்பின் பாதை மாறி திராட்சை பழம் போல் சட்டென்று புடைத்து விட இதை எதிர்பார்க்காத செவிலியர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார்.
அவரை சென்று வேறு ஊசி எடுத்து வரும்படி கட்டளையிட்ட சக்தி, அர்ச்சனாவின் கையில் இருப்பதை மெதுவாக கழற்ற ஆரம்பித்தான். இதை எதையும் உணராத அர்ச்சனா அவள் பாட்டிற்கு அர்ஜூனை கட்டிக்கொண்டு அழுதபடியும் புலம்பிக் கொண்டும் இருந்தாள். அர்ச்சனாவின் கண்ணீரை கண்ட சிவரஞ்சனிக்கு திரும்பவும் கண்ணீர் வர திரும்பவும் அங்கே ஒரு ஆர்ப்பாட்டமான சூழ்நிலை உருவானது.
சக்திக்கு தான் ஆயாசமாக இருந்தது. அர்ச்சனாவிற்கு ஒன்றும் ஆகவில்லை... எதற்கு இவர்கள் அழுதுவடிகிறார்கள் என்று நினைத்தவனுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது அவன் ஒரேயொரு முறை கண்கலங்கினானே தவிர மற்றபடி ஒன்றும் அழவேயில்லை. கோபம் வந்தது தான்... ஆனாலும் அர்ஜூன் அளவிற்கு கோபம் வந்ததா என்றால் இல்லை என்று தான் யோசிக்காமல் கூறுவான்... 'அழவும் இல்லை கோபப்படவும் இல்லை.... ஆனால் நீ அவளை காதலிக்கிறாயா...' என்று அவனின் மனசாட்சி அவனை காறி உமிழ அதையெல்லாம் துடைத்தெரிந்தவன் 'நான் ஒரு டாக்டரா நடந்துகொண்டு இருக்கிறேன்...' என்று சமாதானம் கூறி வைத்தான். இருந்தாலும் 'நான் உண்மையில் அர்ச்சனாவை காதலிக்கிறேனா... அல்லது அவளே காதலை கூறியதால் வந்த சலனமா...' என்று சுய ஆராய்சியில் ஈடுபட்டவன் அமைதியாக வெளியே சென்றான்.
அதற்குள் அர்ச்சனாவின் விபத்து செய்தி உறவினர்கள் மத்தியில் நீரில் கலந்த மை போல் மெல்ல படர ஆரம்பித்தது. பள்ளியில் படிக்கும் ஒருசிலர், இரத்த வெள்ளத்தில் இருந்த அர்ச்சனாவை சேர்மேன் பையன் காரில் ஏற்றுவதை பார்த்து இருந்தனர். பள்ளியின் முன்பே இச்சம்பவம் நடந்திருந்தால் சிவரஞ்சனியின் தந்தை லிங்கத்திற்கு முதலில் இவ்விஷயம் தெரியவர அவர் மூலமாகவே ராஜரத்தினம் மற்றும் லட்சுமிக்கு விவரம் தெரியவந்து அவர்களும் மருத்துவமனையில் கூடி இருந்தனர்.
மதுரையில் இருந்து அபியும் அவளின் கணவன் அகிலனும் விமானத்தில் வந்தனர். விஷயம் கேள்விப்பட்டு சிவா மற்றும் சக்தியின் அண்ணன் ஸ்ரீதரும் அங்கு வந்திருந்தான். ராஜரத்தினத்தின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் யாருக்கும் கூறாமல் அர்ஜூன் விட்டிருந்தான். ஏனெனில் ராஜரத்தினத்திற்கு மற்றவர்களின் அனுதாப பார்வை பிடிக்காது என்பதால். ஆனால் தற்போது அவன் யாருக்கும் தெரிவிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் அனைவருக்கும் தெரிந்து இருந்தது.
அந்த கார் எங்கே சென்றது என்பதை சிசிடிவி மூலமா தேடிக்கொண்டே சென்ற முகல்வதனனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இ.சி.ஆரில் உள்ள ஒவ்வொரு உணவகங்கள், கடைகள், வில்லாக்கள் என அனைத்து சிசிடிவி பதிவுகளையும் பார்த்து அதன்படி வந்தவனுக்கு அந்த கறுப்பு நிற காரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. அதன்பிறகு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அர்ச்சனாவிற்கு எதாவது தெரியுமா என விசாரிக்க மருத்துவமனை வந்த முகிலனை செய்தியாளர்கள் பலர் சூழ்ந்துகொண்டனர். கைப்பேசி மூலமாக அவர்கள் கேட்ட கேள்வியையும் அதற்கு தந்த பதில்களையும் பார்த்த அர்ஜூன், சற்று நேரத்திலேயே சைக்கோ அண்ணனாக மாறியிருந்தான்.

நீ கடந்து போன திசையோ...
நான் கேட்க மறந்த இசையோ...
நீ தெய்வம் தேடும் சிலையோ...
உன்னை மீட்க என்ன விலையோ...
நீங்க முடியுமா...
நினைவு தூங்குமா...
காலம் மாறுமா...
காயம் மாறுமா...
- தொடரும்... 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN