அத்தியாயம் 21

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தாமதத்திற்கு மன்னிக்கவும் மக்களே... நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி இந்த கதையை முடித்துவிட்டேன். எடிட்டிங் வேலை மட்டும் தான் பாக்கி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவிடுகிறேன்... இன்னும் ஏழு அத்தியாயத்தில் கதை நிறைவுபெறும்...



​



ASU 21
பறவைகளின் கீச்சிடும் சத்தத்தில் அழகாக விடிந்தது அந்த காலை வேளை. வீடே பரபரப்பாக இருக்க, மொட்டைமாடியில் அந்த மும்மூர்த்திகளும் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தனர்.
வீடு முழுக்க அர்ஜூனை தேடிய சிவரஞ்சனி, அப்போதுதான் சக்தியும் வீட்டில் இல்லாததை கவனித்தாள். வேகமாக படியேறி சென்றவள் மொட்டைமாடியை பார்க்க, அவளின் கணிப்பை பொய்யாக்காமல் சக்தி அர்ஜூனுடன் தான் இருந்தான். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே... என்று நினைத்தவள், அருகே செல்ல அவளுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டு இருந்தது.
ஸ்ரீதரும் அவர்களுடன் தூங்கிக்கொண்டு இருந்தது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு கொண்டு செய்யும் ஸ்ரீதர், தற்போது இவர்களுடன் இழுத்து போர்த்தி கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பது அவளுக்கு ஆச்சரியத்தையே அளித்தது.
அர்ஜூனை எழுப்ப போக அர்ஜூனின் மேல் ஒரு காலை போட்டுக்கொண்டு 'ஹாயாக'தூக்கிக்கொண்டு இருந்த சக்தியை பார்த்து தலையில் அடித்து கொண்டவள், அர்ஜூன் முழித்து கொண்டால் சக்தியை திட்டிவிட போகிறான் என்று நினைத்தவளாக, முதலில் சக்தியின் காலை அகற்றிவிட்டு பிறகு மூவரையும் எழுப்ப ஆரம்பித்தாள். அர்ஜூனும் ஸ்ரீதரும் எழுந்திருக்க, சக்தி மட்டும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
சக்தி அயர்ந்து தூங்குவதை கண்ட ஸ்ரீதர், "சிவா... விடு அவன் தூங்கட்டும். அவனுக்கு கீழ ஒரு வேளையும் இல்லை. அர்ஜூன் நீ கூட ரூம்ல போய் படு. பத்துமணிக்கு தான் பூஜை... ஒரு ஒன்பதறைக்கு வந்தால் போதும்..." என்றான்.
"அண்ணா அர்ஜூனும் நானும் கோவிலுக்கு கிளம்பரோம்... பாட்டி எங்க கல்யாணம் நல்லபடியா முடியனும்னு அம்மனுக்கு தாலியும் புடவையும் செலுத்தறேன்னு வேண்டிகிட்டாங்களாம். அதான், பூஜைக்குள்ள அவங்களோட வேண்டுதலை நிறைவேற்றனும்... கோயிலுக்கு போயிட்டு வாங்க...ன்னு அம்மா சொன்னாங்க. இல்லன்னா பாட்டியோட ஆத்மா சாந்தி அடையாதாம்..." சிவரஞ்சனிக்கு கடைசி வரி கூறும்போது முகம் இருகி போவதை அர்ஜூன் நன்றாக உணர்ந்தான்.
"சரி... நீங்க போயிட்டு வாங்க... நான் இவன அந்த ரூம்ல படுக்க வச்சுட்டு வேலைய கவனிக்கிறேன். நீ கோவிலுக்கு போயிட்டு வந்து இவன எழுப்பி விடு..." என்ற ஸ்ரீதர், சக்தியை கைத்தாங்கலாக அருகில் இருந்த அறையில் படுக்க வைக்க, அர்ஜூனும் சிவாவும் அறைக்கு வந்து கோவிலுக்கு கிளம்ப தயாராகினர்.
சிவரஞ்சனி சிறிய கறை வைத்த, அரக்கு நிற சில்க் கார்ட்டன் புடவையை கட்டிக்கொண்டு வெளியே வர, அதை பார்த்த அர்ஜூன் அவனும் அரக்கு நிற முழுக்கை சட்டையும் கருப்பு நிற கால்சராயும் அணிந்து கொண்டு கிளம்பினான்.
அவனை மேலும் கீழும் பார்த்த சிவரஞ்சனியின் முகம் ஒரு திருப்தியின்மையை காட்டியது.
"என்ன முகம் அஷ்ட கோணலா போகுது... நல்லா இல்லையா..." அர்ஜூன்.
"நல்லா இருக்கு... ஆனா ஏதோ கிளையண்ட் மீட்டிங்கு போறமாதிரி இருக்கு..." என்றவள் அருகில் இருந்த கப்போர்டை திறக்க, அதில் ஆண்கள் அணியும் ஆடைகள் ஏகப்பட்டது இருந்தது.
"இந்தாங்க... இந்த வேஷ்டி சட்டை போட்டுக்கோங்க..‌." அதில் இருந்து சிவரஞ்சனி அவனுக்கு எடுத்து கொடுத்த சட்டையும் அரக்கு நிறத்தில் தான் இருந்தது. வேஷ்டி அரக்கு நிற பார்டர் வைத்து இருந்தது. பட்டு வேஷ்டி போல் அல்லாமல் காட்டனில் அழகாக இருந்தது.
"இது உன் அண்ணனோடதா..." அரக்கு நிற சட்டையை பிரித்து பார்த்தபடி கேட்ட அர்ஜூனை முறைத்தவள் "உங்களோடது தான்..." என்றாள்.
"நீ எடுத்து வச்சிருந்தியா... எப்போ..."
"நமக்கு நிச்சயம் முடிஞ்சதுக்கு பின்ன... நீங்க ஒருமுறை கால் பன்னி என்னமோ ஒளருனீங்களே... அதுக்கு முன்தின நாள்..." என்றவள் தலைவார கண்ணாடியின் அருகில் சென்றுவிட, அந்த கப்போர்டை பார்த்த அர்ஜூனின் மனம் முழுவதிலும் குற்றவுணர்வே நிறம்பி வழிந்தது.
'எவனோ ஒரு மூன்றாம் மனிதனின் பேச்சை கேட்டுக்கொண்டு சிவாவையும் வதைத்து தன்னையும் வதைத்துக்கொண்டு முட்டாள்தனம் செய்துவிட்டாய் அர்ஜூன்...' என்று அவன் அவனையே கண்டித்துக் கொண்டான்.
'எவ்வளவு ஆசையோட இருந்து இருக்கா... என் வாழ்க்கையோட நல்ல நாட்களை மிஸ் பன்னிட்டனே... நாளைக்கேவா நான் சாகபோறேன்... இன்னும் நாட்கள் இருக்கு... இனியாவது ஒழுங்கா இருப்போம்....' என மனதில் குறித்துக்கொண்டான்.
இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கோவில் அருகில் தான் இருந்ததால் நடந்தே செல்லலாம் என்று நடக்க ஆரம்பித்தனர். வழியில் வந்தவர்கள் எல்லாரும் சிவரஞ்சனியிடம் பேச்சு கொடுத்துவிட்டே செல்ல, பெண் ஒருவள் மட்டும் சிவரஞ்சனியை பார்த்து விட்டு, பார்க்காதது போல் அலட்சியமாக முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் வந்ததையோ, அவர்களை பார்த்து விட்டு முகத்தைத் திருப்பி கொண்டு சென்றதையோ சிவரஞ்சனி கவனிக்கவில்லை எனினும் அர்ஜூன் நன்றாகவே கவனித்திருந்தான். அவள் பார்க்க சிவரஞ்சனியின் வயதை ஒத்தவள் போல்தான் இருந்தாள். ஒருவேளை பள்ளிக்கல்லூரியில் இருவருக்கும் இடையே தகறாரு எதாவது நடந்து இருக்கும். அதை மனதில் வைத்துகொண்டு அப்பெண் முகத்தை திருப்பி கொண்டு செல்கிறாள் என அர்ஜூன் நினைத்து அவளை பற்றி சிவரஞ்சனியிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். அவளை அழைத்துப் பேசியிருந்தால் பல பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டு இருக்கமுடியும் என்பது அர்ஜூனுக்கு தெரியாமல் போனது.
சிறிய மலையின் மேல் அமைந்து இருந்த அந்த அம்மன் கோயிலுக்கு வந்த அர்ஜூனும் சிவரஞ்சனியும், லிங்கம் கூறியதை போல் தாலியையும் புடவையையும் அம்மனுக்கு காணிக்கை அளித்துவிட்டு, பூஜைக்கு அந்த கோயிலில் இருந்த பூசாரியையும் வரச்சொல்லி அழைப்பு விடுத்து விட்டு, பிரகாரத்தை மௌனமாக சுற்ற ஆரம்பித்தனர்.
அவர்கள் பிரகாரத்தை சுற்றிக்கொண்டு இருக்கும் போது அவர்களுக்கு முன்னே சென்றுகொண்டு இருந்த ஒருவர் எதிலோ தடுக்கி விழபார்க்க, பின்னால் வந்து கொண்டு இருந்த அர்ஜூன் அவரை விழாதவாறு தாங்கி பிடித்து கொண்டான்.
"பார்த்துங்க... ஏங்க பார்த்து வரக்கூடாதா..." என்று அர்ஜூன் கேட்டுக்கொண்டு இருக்க, கீழே அவர் தடுக்க காரணமாக இருந்த கல்லை எடுத்து ஓரம் போட்ட சிவரஞ்சனி, விழப்போனவரை அப்போதுதான் பார்த்தாள்.
"அத்தை...." என்று பாசமாக அழைத்தவளை பார்த்த அந்த புதிய பெண், அர்ஜூனிடம் "உங்க உதவி எதுவும் எங்களுக்கு தேவை இல்லை..." என்று முகத்தில் அடித்தார் போன்று கூறிவிட்டு வேகமாக நடந்து சென்றார்.
"அத்தையா...?"
"ம்... நிரஞ்சன் அத்தானோட அம்மா... அப்பாக்கு கூட பிறந்த தங்கச்சி..." என்றவள் அமைதியாகிட, அவரின் உதாசீனத்திற்கான காரணத்தை அர்ஜூன் அறிந்து கொள்ள அவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. நிரஞ்சனுக்கு சிவரஞ்சனியை மணம்முடிக்காததால் கோபம் என புரிந்து கொண்டவன், அவளை திசைத்திருப்பும் பொருட்டு அவளின் தோல் மீது கைப்போட்டு "ரஞ்சி... இங்க பொங்கல் புளியோதரைலாம் இங்க கொடுக்க மாட்டாங்களா... ரொம்ப பசி எடுக்குது..." என்று அர்ஜூன் வயிற்றை தடவினான்.
"அச்சச்சோ... வாங்க நாம வீட்டுக்கே போயிடலாம்..." என்று வேகமாக நடந்தவளின் நடையை தடுத்தது அந்த குரல்.
"சித்தப்பா... சித்தப்பா... தூக்குங்க... தூக்குங்க..." நிரஞ்சனின் குரல் பரபரப்பாக கேட்டது சிவரஞ்சனிக்கு. குரல் வந்த திசையில் கூட்டம் கூடி இருந்ததால் ஏதோ நல்லதாக படவில்லை என்று உணர்ந்த சிவரஞ்சனி, அர்ஜூனை பார்க்க அர்ஜூனும் அந்த கூட்டத்தை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
"ரஞ்சி... வா என்ன ஆச்சுன்னு பாக்கலாம்... உதவி தேவைப்படும்னு நினைக்கிறேன்..." என்றவன் அவளின் கைப்பிடித்து கூட்டத்தை நோக்கி அழைத்துச் சென்று, கூட்டத்தின் மத்தியில் எட்டி பார்க்க, அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் மயக்க நிலையில் இருந்தார். அருகில் நிரஞ்சனும் இன்னும் இருவரும் அவரை தூக்கிக்கொண்டு இருந்தனர். அவர் முகத்தில் நிறைய வேர்வை துளிகள் அரும்பி இருப்பதையும், அவரின் இடது கை இடது நெஞ்சை பிடித்து இருப்பதையும் பார்த்தவன், ஆர்ட் அட்டாக் என்பதை புரிந்து கொண்டு வேகமாக கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
"நிரஞ்சன்... இவருக்கு ஆர்ட் அட்டாக்..." என்று வேகமாக நிரஞ்சனிடம் கூறி, அவரை மீண்டும் படுக்கவைக்க, "எனக்கு தெரியும்... நீ நகரு... டேய் தூக்குடா... வண்டி ரெடியா..." என்று அர்ஜூனுக்கு, பதிலளித்து விட்டு அருகில் இருப்பவனிடம் கத்தினான் நிரஞ்சன்.
"நிரஞ்சன்... இவரு ஹாஸ்பிடல் கொண்டு போற வரை தாங்கமாட்டாரு... உடனே இவருக்கு சி.பி.ஆர் கொடுக்கனும்..."
"ஏய் நீ வாய மூடிக்கிட்டு போ... என் சித்தப்பாவை எனக்கு பார்த்துக்க தெரியும்... வழிவிடு..."
"உனக்கு சித்தப்பானா... எனக்கும் சித்தப்பா தான்..." என்று நிரஞ்சனிடம் கத்தியவன், அவரை தூக்கும் மற்றொருவனிடம் "தம்பி ப்ளீஸ்... என்ன நம்புங்க... இவருக்கு பஸ்ட் எய்ட் பன்னனும்..." என்று கூற, அவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்.
"தம்பிங்களா... மாப்பிள்ளை என்னமோ சொல்லராரு... கேட்டுதான் பார்ப்போமே..." கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கூற, அவரை தொடர்ந்து இன்னும் சிலரும் அர்ஜூனுக்கு சப்போர்ட் செய்தனர். எனவே நிரஞ்சன் தான் அமைதியாக போகும்படி ஆகியது.
அவரை கீழே படுக்க வைத்த பிறகு, தன் மேல் பாக்கெட்டில் இருந்த கைப்பேசியை சிவரஞ்சனியிடம் நீட்டிய அர்ஜூன், சக்தியை அழைக்கும் படி கூற, அவளும் பலமுறை முயற்சி செய்து அவனை எழுப்பி விட்டு, தகவலை தெரிவித்து அங்கே வரக்கூறினாள்.
அதற்குள் அர்ஜூன் நிரஞ்சனின் உதவியுடன் காற்றோட்டம் இருக்கும் படி கூட்டத்தை விலக்கியவன், அவரின் மூக்கு பகுதியின் அருகில் கண்ணத்தை வைத்து, அவரின் சுவாசம் எப்படி இருக்கிறது என்று சோதித்து, பின் அவருடைய மார்பு பகுதியில் உள்ளங்கையின் அடிப்பகுதியை வைத்து சீராக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தான்.
முப்பது அழுத்தத்திற்கு பின் மீண்டும் சுவாசத்தை பரிசோதனை செய்தவன், அவருடைய கீழ் தாடையில் விரலை வைத்து, மேல்புறமாக சற்று தலையை உயர்த்தி, சுவாச பாதையை திறந்து, அவருடைய மூக்கை பிடித்து கொண்டு அவரின் வாய்வழியாக காற்றை ஊத ஆரம்பித்தான். ஒவ்வொரு முறை சுவாசம் அளிக்கும் போதும் அவரின் மார்பு கூடு மேலெழுவதை ஊர்ஜிதம் செய்து கொண்டு, இருமுறை சுவாசம் அளித்தவன் பின்பு மீண்டும் மார்பில் அழுத்தம் அளித்து, பின்பு மீண்டும் சுவாசம் அளித்தான். இதையே தொடர்ந்து செய்து கொண்டு இருக்க, அந்த பெரியவர் தானாக இரும்பி, மெல்ல கண்திறந்தவாறு உயிர் மீண்டு வரவும் சக்தி அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.
வந்தவன் அவரின் நாடித்துடிப்பை பரிசோதனை செய்துவிட்டு அவர் எளிதாக சுவாசிக்க ஏதுவாக அவரை ஒருபக்கமாக‌ படுக்க வைத்து, என்ன ஆயிற்று... என்ன முதலுதவி செய்தீர்கள்... என்று அர்ஜூனிடம் விசாரித்து வைத்துக்கொண்டான். சிவரஞ்சனியின் அழைப்பிற்கினங்க, அவசர ஊர்தி வந்து அவரையும் சக்தியையும் அவரின் குடும்பத்தாரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது.
அந்த கோவிலை விட்டு வெளியே வந்ததும் அர்ஜூன் முதலில் சென்ற இடம் அங்கு இருந்த பொட்டிக்கடைக்குத்தான். அங்கு தண்ணீர் பாட்டிலை வாங்கியவன், அந்த கடைக்கு பின்னால் சென்று முகத்தை கழுவிவிட்டு, வாய் கொப்பளித்து விட்டு, பிறகு நெஞ்சை பிடித்தபடி வாந்தி வருவதை போன்று குமட்டல் செய்யவும், அவனின் கூடவே சுற்றிக்கொண்டு இருந்த சிவரஞ்சனி பயந்தேவிட்டாள்.
"அஜூ... என்ன ஆச்சு..." பதரியபடி அவனின் முதுகை தடவிகொடுத்துக் கொண்டே கேட்ட மனைவியிடம், ஒன்றுமில்லை என்று தலையாட்டியவனின் முகத்தில் இருந்த களைப்பு கூறியது அவன் கூறுவது பொய் என்று.
"இருங்க நான் சோடா வாங்கிட்டு வரேன்..." என்று அவள் நகர, அவர்களையே கழுகு போல் பின்தொடர்ந்தது கொண்டு இருந்த நிரஞ்சன், அவள் நகர்ந்த சமயம் பார்த்து அவனிடம் வந்து "கோவில்ல ஏதோ நல்லவன் மாதிரி அந்த சீன் போட்ட... இப்போ என்ன அருவருப்பா இருக்கா..." என்றான் கிண்டலான குரலில்.
"ம்ச்... யோவ்... அவரு பிடிக்கிற பீடி என்னுடைய லங்சையே அழுக வச்சிடும் போல இருக்குய்யா... எவ்வளவு நேரம் தான் நானும் கண்ட்ரோல் பன்னரது. அருவருப்புன்னு நினச்சு இருந்தா அவருடைய சுவாசத்தை கெக் பன்னப்பவே புகையிலை நாத்தம் அடிக்கிறதால‌ அவரை விட்டு இருப்பனே..." என்றவன் மீண்டும் குமட்டல் செய்யவும் சிவரஞ்சனி சோடாவுடன் வந்தாள்.
சோடாவின் மூலம் வாய் கொப்பளித்து, பின் அதை சற்று குடித்த பிறகு கொஞ்சம் பரவாயில்லை என்று இருக்க, அந்த பெட்டிக் கடைக்கு சென்று பாட்டிலை திரும்ப கொடுத்தவன், ஒரு சிகரெட்டை வாங்கிக்கொண்டு பின்பகுதிக்கே வந்தான்.
"இது மட்டும் என்ன நுரையீரலை நீண்ட ஆண்டுகள் வாழ வைக்குமா..." என்று நக்கல் பார்வை பார்த்த நிரஞ்சனின் பார்வையை புரிந்து கொண்டவன், அதை சட்டை செய்யாமல் தன் வேலையை தொடர்ந்தான்.
அவன் அரிதாக புகைப்பதுண்டு. அவனின் மூச்சுக்காற்றோடு கலந்த புகையிலையின் துர்நாற்றத்திற்கு சிகரெட் துர்நாற்றம் பரவாயில்லை என்று நினைத்தவன் புகைக்க ஆரம்பித்து இருந்தான்.
"அஜூ என்ன ஆச்சு... இவ்வளவு நேரம் ஒழுங்காதான இருந்தீங்க..." கவலையுடன் கேட்ட சிவரஞ்சனிக்கு புன்னகையுடன் பதிலலித்தான்.
"ரஞ்சு... உன் மாமா புகையிலை நிறையா யூஸ் பன்னுவாறுன்னு நினைக்கிறேன். அந்த நாற்றம் குடலை பிரட்டிடுச்சு... இவ்வளவு நேரம் ஒன்னும் பாதியுமா மூச்சுவிட்டு கண்ரோல் பன்னிட்டேன். இப்போ இங்க நல்லா காற்று வீசவும் நல்லா மூச்சு விட்டேனா குமட்டிடுச்சு..." என்று அவன் பாவமாக கூற சிவரஞ்சனி வெடித்து சிரிக்க ஆரம்பித்தாள்.
சிறுவயதில் பலமுறை அவருக்கு இவளே புகையிலை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து இருக்கிறாளே... அவரின் புகையிலை பழக்கம் அவளுக்கு நன்றாக தெரியும் என்பதால், அதனால் அர்ஜூன் படும் படு ஏனோ சிரிப்பையே தந்தது.
"எல்லாருடைய லிப்ஸ்லையும் உன் லிப்ஸ் போல ஸ்ட்ராபெரி ஸ்மெல் வருமா என்ன‌..." திடீரென அவன் கூறிய ஒருவரியால், சிவரஞ்சனி சுவிட்சை ஆஃப் பன்னது போல் தன் சிரிப்பை அடக்கினாள். வெட்கத்தில் அவளின் கண்ணங்கள் சிவந்தாலும், நேற்று எல்லாம் ஒன்றும் கூறாமல் இருந்து விட்டு, தற்போது நிரஞ்சனின் முன் இப்படி பதிலளிக்க வேண்டுமா என்று அவனை முறைத்தபடி அவனின் முதுகில் ஒரு அடி வைத்தாள். அதை சிரித்தபடி வாங்கிகொண்ட அர்ஜூனை பார்த்த நிரஞ்சனின் மனதில் என்ன இருந்தது என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை.
"அத்தான்.... வாங்க நாம கிளம்பளாம்... பூஜைக்கு டைம் ஆச்சு... அத்தை வருவாங்கயில்ல..." சிவரஞ்சனி அவர்ஜூனின் கையில் தன் கையை கோர்த்து கொண்டே, அவள் நிரஞ்சனிடம் கேட்டாள். அத்தான் என்று அழைக்கக்கூடாது என்று மனதில் குறித்துவைத்ததை மறந்து... நல்ல மனநிலையில் இருந்த அர்ஜூனும் அதை கவனிக்கவில்லை.
"பாப்பா... நீங்க போங்க... நான் அம்மாவ கூட்டிகிட்டு வரேன்..." என்று நிரஞ்சன் கூற, வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அத்தான் என்று சிவரஞ்சனி அழைத்ததை கவனிக்காதவன், தற்போது நிரஞ்சன் பாப்பா என்று அழைத்ததை நன்றாக கவனித்துவிட்டான். சிவரஞ்சனி பலமுறை அத்தான் அத்தான் என்று அர்ஜூனிடம் நிரஞ்சனை பற்றி கூறியிருந்ததால் அது அவனால் கண்டுகொள்ள முடியவில்லை போல. ஆனால் தற்போது நிரஞ்சன் அவளை பாப்பா என்று அழைத்ததை அர்ஜூன் முதல்முறை கேட்டதால் சட்டென்று கண்டுபிடித்துவிட்டான்.
சரி என்று தலையாட்டியவள் அர்ஜூனின் கையை விடாமல் பிடித்து கொண்டே நடந்தாள்... 'பாப்பாவாம் பாப்பா... எனக்குன்னு வந்து சேரரான் பாரு... நான் அவன்ட்ட பேச கூடாதுன்னு சொன்னா கேட்க மாட்டாளா....' என்று கடைசியில் சிவரஞ்சனி யின் மீது கோபத்தை திருப்பிய அர்ஜூன் கவனிக்கவில்லை, நிரஞ்சனிடம் சிவரஞ்சனி கண்களாலேயே பணத்தை கடைக்காரரிடம் கொடுத்து விடும்படி ஆணை பிறப்பித்ததை.... அர்ஜூன் அவளிடம், நிரஞ்சனிடம் பேசக்கூடாது என்று கூறியிருந்தாலும், சிவா அர்ஜூன் இல்லாத சமயங்களில் அவனிடம் பேசிக்கொண்டு தான் இருந்தாள்.
-தொடரும்




​
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN