காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 47

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஊட்டி

"அய்யா... அய்யா...." என்று வாசலில் குரல் கேட்டு வெளியே எழுந்து வந்தார் நவனிதன் . கட்டையான உடல்வாகுடன் நடுத்தர வயதில் இருக்கும் நபரை வாசலில் கண்டவர் நீங்கயாரு ... யாரு வேணும் பா" என்றார் நவநீதன்.

"அய்யா நான் சிவசாமி அய்யாகிட்ட வேலை செய்றேங்க... அய்யாக்கு முடியலைங்க சென்னை ஆஸ்பத்திரியில் சேத்து இருக்காங்க உங்கள பாக்கணுமுன்னு சொன்னாருங்களாம்... பெரிய அய்யா உங்கிட்ட சொல்ல சொன்னாருங்க" என்றவன் அத்துடன் அவன் வேலை முடிந்து விட்டது என்று சென்று விட்டான். நாவனீதனுக்குதான் முகம் எல்லாம் வியர்த்து விட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் தந்தையின் கம்பீரமான உருவம் கண் முன்னே நிழலாடியது.

வாசலிலுக்கு சென்றவர் திரும்பி வராமல் இருக்க "யாருகிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க" என்றபடி ராதா வரவும் கணவர் இருந்த நிலையை கண்டு பதறி பக்கத்தில் சென்று "என்னங்க? என்ன செய்யுது? ஏன் முகமெல்லாம் இப்படி இருக்கு?" என்று நாற்காலியில் அமரவைத்து மின்விசிறியை சுழலவிட்டவர் குடிப்பதற்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுத்து ஆஸ்வாசபடுத்திக் கொள்ள வைத்தார்.

ராதாவின் செயலில் தன்னிலை மீட்டவர் மனைவியை பார்த்ததும் "ராதா ராதா" என்று நா தடுமாற்றத்துடன் பேசியவரை வியப்போடு பார்த்த ராதா "என்னங்க ஏன் இந்த தடுமாற்றம் ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க? உடம்பு என்னபண்ணுது அதையாவது சொல்லுங்க?" என்று உரைத்தவரின் கண்களில் இருந்து நீர்மணி உருண்டு விழுந்தது.

"அப்பாவுக்கு முடியலையாம்... சென்னையில சேர்த்து இருக்காங்களாம்... இத்தனை வருஷம் கழித்து பாக்கனும்னு ஆசைபடுறாரம். ஒரே ஊர்லதான் இருக்கோம் ஆனா அவருக்கும் முடியலைன்னு இன்னைக்குதான் தெரியுது. நாம இவ்வளவு பெரிய தப்பையா செய்து இருக்கோம் ராதா" என்றார் கொஞ்சம் வருத்தமாக.

கணவரின் மனது வருத்தம் கொண்டதை உணர்ந்தவர் "இது நாம எதிர்பார்த்தது தானேங்க... இப்போ ஆகவேண்டிய வேலையை பாருங்க" என்றவர் மாமானாரின் உடல் நிலையை நினைத்து கவலைக்கொண்டாலும் காலம் போன காலத்தில் நம்மை ஏற்றுக்கொள்ளமால் விட்டாலும் இப்போதாவது நாங்கள் இருக்கின்றோம் என்று நினைவு வந்ததே என்று பெருமூச்சை வெளியேற்றி கணவர் அறியாவண்ணம் தன் கண்களை துடைத்து தன்னை சமாளித்தவர் "கிளம்புங்க மாமாவ போய் பார்த்துட்டு வாங்க" என்று அவரை கிளம்புவதில் குறியானர்.

"நான் மட்டுமா!! நீயும் வா ராதா" என்றார்.

"இல்லங்க அது சரிவராது மாமாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை நான் வந்து ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்கொள்ள முடியாது" என்று கூறிவிட

"நீ வந்தாதான் நான் போவேன்" என்று முடிவாக மறுத்து விட்டார் நவனீதன். கணவரின் கட்டாயத்தின் பேரில் கிளம்பியவரை அந்த வீட்டு மனிதர்கள் அனைவரும் வரவேற்றனர். தந்தையின் அறைக்கு சென்ற நவனீதனும் ராதாவும் முதலில் தங்களின் மன்னிப்பை வேண்ட பேசமுடியாமல் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்தவர் அருகில் அழைத்து மகனின் கைகளை பற்றிக்கொள்ள தானாய் கண்ணீர் கண்களில் இருந்து வெளியேறியது அந்த பெரியவருக்கு

மருமகளையும் பக்கத்தில் அழைத்தவர் அவரை ஆசிர்வதிப்பதுபோல கையை மேலே தூக்கி வாழ்த்தினார். அவரால் சரியாக பேசமுடியாமல் நா குழற சைகையில் பேரனை பற்றி கேட்க "இதோ பா இப்பவே வரசொல்கிறேன்" என்றவர் வெளியே வந்து சித்தார்த்திற்கு அழைத்தார் நவநீதன்.

~

காலை உணவினை மாணிக்கம் இல்லத்தில் பேசியபடி உண்டனர் அனைவரும். சிறிது நேரம் சித்துவுடனும் கோபியுடனும் அளவளாவியன் மாணிக்கம் கோர்ட்டிற்கு கிளம்ப அவருடனே அனைவரிடமும் விடைபெற்று மனைவியிடமும் கூறிக்கொண்டு கேஷவ்வும் கிளம்பினான். கதிர் பற்றிய விஷயத்தை மாணிக்கத்திடம் தனிமையில் பேச வேண்டி இருப்பதால் அவனும் உடனே கிளம்பிவிட்டான்.

ஹாலில் அமர்ந்து இருந்த கவி சித்து கோபி மூவரும் சாருகேஷினை பற்றி பேசி கொண்டிருக்க அருகே வந்தமர்ந்த மஞ்சு "எப்போ கோயம்பத்தூர் வந்த சித்து அம்மா அப்பா எல்லாம் சௌக்கியமா?" என்று நலம் விசாரித்தார்.

"நேத்து வந்தேன் ஆண்டி... அவங்களுக்கு என்ன செமையா இருக்காங்க சண்டை போட ஒரு மருமக வேணும்னு அடம்பிடிக்கிறாங்க... நான் தான் ஒருவருஷம் போகட்டும்னு தள்ளிப்போட்டு இருக்கேன்." என்று அறையில் வெளியே வந்த தியாவை பார்த்ததும் கூறினான்.

அவனின் கூற்றில் விலுக்கென்று சித்துவை நிமிர்ந்து பார்ததவள் 'ரொம்பத்தான் பண்ற டா நானும் விலகி போனா திரும்ப திரும்ப வந்து ஒட்டிக்குற.... இந்த கதையே வேண்டாம் உன்னை பார்த்தா தானே இவன் இருக்க வரைக்கும் நம்மால இருக்க முடியாது உடனே காலேஜ்க்கு கிளம்ப வேண்டியது தான்' என்று நினைத்தபடியே கல்லூரிக்கு தயாராகி வர "உனக்கும் வயசாகிட்டே போகுதுல எப்போ கல்யாணம் செஞ்சிக்கிறதா உத்தேசம் சித்து" என்றார் மகளின் எண்ணம் புரியாமல்

"அதுக்கென்ன ஆண்டி செஞ்சிட்டா போகுது... நான் ரெடி தான் பொண்ணு சம்மதிச்சா உடனே பண்ணிக்கலாம் தான்" என்று பூடகமாக கூற

"ஹேய் பாத்து வைச்சிட்டு பேசறா மாதிரி இருக்கு... என்ன சித்து லவ்ல விழுந்துட்டியா??" என்று ஒரே குதுகலமாக கவி சொல்லியபடி சந்தோஷப்பட அவனை வறுத்துக்கொண்டே அன்னையின் அருகில் வந்த தியா "அம்மா நான் கிளம்புறேன் எனக்கு இன்னைக்கு பிரக்டிக்கல் இருக்கு" என்று கூற

சித்துவின் அருகில் அமர்ந்திருந்த கோபியோ அவனை அருகில் இழுத்து "டேய் பாத்து கவனமா பேசு முறைக்குற முறைப்புல உன் பக்கத்துல இருக்க நான் சாம்பலாகிட போறேன். சே இந்த காதலிக்கிற பசங்க சிநேகிதம் மட்டும் வைச்சிக்கவே கூடாது இவன் கூட இருக்கறதால என்னையும் இல்ல சேர்தது முறைக்கிறா" என்று புலம்பினான்.

அவன் புலம்பலையும் ஏதோ பாரட்டுதலை பெற்றது போலவே இளித்தபடி அமர்ந்திருந்தவனை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட கோபி. "டேய் போதும் டா அவ போய்ட்டா நீ இளிக்கிறத நிறுத்து" என்றான்.

மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு சித்துவும் கோபியும் வெளியேற சித்துவின் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. "ஹலோ அப்பா சொல்லுங்க நீங்க எப்படி இருக்கிங்க அம்மா எப்படி இருக்காங்க" என்றான் உற்சாகம் நிறைந்த குரலில்.

"ஹலோ சித்து நான் நல்லா இருக்கேன் பா.. தாத்தாக்கு உடம்பு தான் சரியில்ல சென்னை ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க உன்னை பார்க்க ஆசைபடுறார் உடனே வா பா" என்றார் கொஞ்சம் வருத்தக் குரலில்.

"தாத்தா வா?..... எந்த தாத்தா?... நீங்க எப்ப போனிங்க..?" என்றான் காரம் நிறைந்த குரலில்.

"சித்து ப்ளீஸ்... ஏதோ பெரியவங்க வீராப்புல இருந்துட்டாங்க நாமும் அப்படியே இருக்கலாமா" என்றார் இறங்கிய குரலில்

"நீங்கதான் அங்க இருக்கிங்களே.... இனி நான் வேறயா??? நான் வரல எப்பயும் கண்ணுக்கு தெரியாத நான் தெரியாதவனாவே இருந்துட்டு போறேன். எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் போனை வைக்கிறேன்." என்று வைத்து விட்டான் மனசு முழுவதும் வருத்தம் இருந்தாலும் உடனே அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் அவனுக்கு வரவில்லை கொஞ்சம் கோபமும் இருந்தது. இத்தனை வருடங்கள் தனியாய் இருந்து சொந்த பந்தம் இல்லாமல் வாழ்ந்தது தான் அவன் நினைவிற்கு வந்தது.

உடனே கோபியை அழைத்த சித்துவின் தந்தை விவரத்தை கூறி அவனை அனுப்பி வைக்குமாறு கூற அதை ஏற்று வைத்தவன். சித்துவிடம் பேச சித்து முடியவே முடியாது என்று தீர்மனமாக மறுத்து விட்டான். "அவருக்கு மட்டும் தான் ரோஷம் இருக்குமா? நானும் அவர் ரத்தம் தான் எனக்கு அவரை விட அதிகமா இருக்கும்." என்று கூறி அத்துடன் அந்த பேச்சை முடித்து விட்டான். கோபிக்கு ஒரே ஒரு யோசனை தான் தோன்றியது தியாவிடம் கூறி அவளை பேச வைக்கலாம் என்று அவளுக்கு குருந்தகவலை அனுப்பியவன் விவரத்தை மட்டும் பகிர்ந்து அவனை ஊருக்கு செல்லுமாறு கூறச் சொன்னான்.

அவளுக்கு வருத்தம் ஒரு பக்கம் என்றால் அவனுடைய குடும்பத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது . இருவரும் அந்த அப்பார்ட்மெண்டை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்க தியா அழைத்து இருந்தாள்.

"டேய் ஒரு நிமிஷம்" என்று வண்டியை நிறுத்தியவன் அவள் எண்ணை கண்டதும் சந்தோஷமாக அதை சுவைப் செய்து காதில் பொறுத்தினான்.

"ஹலோ வது மா" என்றான் அன்பான குரலில் ஆனால் ஏதோ பிசிறு அடித்ததோ என்று அவளுக்கு தோன்றியது.

சிறிது நேர அமைதிக்கு பின் ஹலோ என்றாள் தடுமாற்றமில்லாத உறுதியான குரலில் அவள் குரலில் அன்போ நட்போ பாசமோ எதுவும் இல்லை வெறுமை மட்டுமே சூழ்ந்து இருந்தது.

"அதுக்குள்ள மாமா மேல லவ்ஸ் வந்துடுச்சா" என்றான் வம்புக்கு என்று அவளை இயல்பாக பேச வைக்க

"மூஞ்சி.... கொஞ்சம் வாய மூடுங்க.. நான் சொல்ல வர்றத முழுசா கேளுங்க.. தயவு செய்து" என்று கோரிக்கையை கட்டளையாய் பிறப்பித்து இருந்தாள். அவளின் திட்டில் இதழில் குறுநகை பூத்தது சித்துவிற்கு ஆனால் கோபிக்கு மட்டும் உள்ளுக்குள் சிறு உதறல் இருந்தது இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வனோ என்று அதே நேரத்தில் சித்து தியாவிடம் பேச ஆரம்பித்தான்.

"தங்கள் உத்தரவு என் சித்தம்" என்று வசனம் பேச இந்த பக்கம் இவளுக்கு கடுகடுவென இருந்தது. முயன்று சாதரணகுரலில் பேச ஆரம்பித்தாள். "அத்தை மாமா போன் பணணாங்களா ?" என்றாள் எடுத்த எடுப்பில்

"வது நீ" என்று ஆரம்பித்தவன் அவள் கூற்று நினைவுக்கு வர "ம். பண்ணாங்க" என்றான் அமைதியாக

"கிளம்பி போகலாம் இல்லையா... உனக்கு சொந்தத்தை விட அப்படி என்ன முக்கியமான வேலை... இல்லாதவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும். அத்தை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருந்தாங்கன்னு எனக்கு தான் தெரியும். முதல்ல ஊருக்கு போற வேலைய பாரு.... அவரை உன் சொந்தமா நினைக்க வேண்டாம் ஒரு ஏதோ உயிருக்கு போறாடுற சக மனுஷனா பாரு" என்று நீண்ட தன் சொற்பொழிவை நிறுத்தினாள்.

"எனக்கும் தெரியும் தியா ஒரு உயிரை நோககடிச்சா எவ்வளவு வலிக்கும்னு.... நானும் அனுபவிச்சிட்டு தான் இருக்கேன்... என்று சிறு இடைவெளியை விட்டான் அவள் உணர வேண்டும் என்று அங்கே பெருத்த அமைதி மீண்டும் அவனே தொடர்ந்தான். என்னால இதை உடனே ஏத்துக்க முடியலடா அம்மா ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேதனை பட்டு இருப்பாங்க தலை சாய்ந்து படுக்க ஒரு சொந்தம் இல்லையேன்னு அதை என்னால மன்னிக்க முடியலடா" என்றான் தாழ்ந்த குரலில்.

"ப்ளீஸ் சித்து எனக்காக அத்தைக்காக மாமாமவுக்காக அவரை போய் பாருங்க" என்று கூறியவளின் வார்த்தையில் என்ன உணர்ந்தானோ "சரி நான் கிளம்புறேன் வருத்தப்படாதே" என்று போனை அணைத்துவிட்டான்.

"மச்சி நான் சென்னை கிளம்புறேன்.. நீ அப்பார்ட்மெண்ட் போய் பாரு... உனக்கு அங்க தங்கி இருந்தவங்க தகவல் கிடைக்குதான்னு... எப்படியும் அவன் பசங்களோடதான் இருந்து இருப்பான் பேச்சிலர் யாராவது தங்கி இருக்காங்கலான்னு விசாரி இந்த 4 வருஷத்துல... சொல்ல முடியாது அவன் இப்போ கூட அங்க இருக்காலாம் சோ கவனமா பாரு... சிசிடிவி கேமரா இருக்கான்னு செக் பண்ணு... அதுல ஹார்டு டிஸ்க் எவ்வளவு கேபாசிட்டின்னு கேளு பேக்கப் எடுக்க முடியுமான்னு பாரு..." என்று அவனுக்கு அடுத்தடுத்து செய்யவேண்டிய பணிகளை கூறியவன் சென்னைக்கு புறப்பட்டான்.

~

கேஷவுடன் பயணம் மேற்கொண்ட மாணிக்கம் நீதிமன்றத்தை நோக்கி வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தார். "சொல்லுங்க மாமா ஸ்டெல்லா கொடுத்த சிப்பை பார்த்திங்களா என்ன இருந்தது நம்ம அடுத்த மூவ் என்ன" என்றான்.

"பார்த்தேன் கேஷவ்... கதிரோட வாக்குமூலம் அவன் இறப்பிற்கு முன்னாடி பேசினது இருக்கு... கிட்டதட்ட இது மரண வாக்குமூலத்துக்கு சமம் கேஷவ்... நீ கேக்குறியா "என்றவர் அதனை தனது லேப்டாப்பில் போட்டு காண்பித்தார்.

வியர்த்து வழிந்து மூச்சி இறைக்க ஒடிக்கொண்டே இருக்கும் கதிரின் முகத்தில் அங்காங்கே ரத்தத்தின் திட்டுக்கள் ஏதோ தெருவிளக்கின் ஒளியில் நிற்பது போன்று தெரிந்தது. "என்னை மந்திரி ஆளவந்தானோட ஆட்கள் துரத்திட்டு வர்ராங்க இன்னும் நான் எவ்வளவு நேரம் உயிரோட இருப்பேனோன்னு தெரியல... ஆனா நான் கடைசி மூச்சி இருக்க வரைக்கும் உயிருக்கும் எங்களோட வாழ்க்கைக்கும் கேடான இந்த ஃபேக்ட்ரிய இந்த மண்ணுல வர விடமாட்டேன. என் மக்களோட வாழ்க்கைக்கு கடைசியா உயிரை விட்டவன் நானாக இருந்துட்டு போறேன்... ஒரு உயிரை பறிக்கிற உரிமை யாருக்கும் இல்லை ஆனா தான் நினைச்சதை அடையனும்னு சுயநலம் பிடிச்ச பண பேய் தான் இந்த ஆளவந்தான். தயவு செய்து எங்க மண்ல எங்களை வாழ விடுங்க" என்று கண்ணீர் மல்க பேசியவனை சில ஆட்கள் தேடிவருவது போல் தூரத்தில் தெரிய போன் கட்டானது.

இதை பார்த்துக்கொண்டு இருந்த கேஷவ் மனது அத்தனை கோவம் கொண்டது "மாமா இது போதுமே அந்த நாயை உள்ளே தள்ள" என்று ரவுத்திர்த்துடன் கூறினான்.

"இதை மூனு காபி அனுப்பி இருக்கேன் கேஷவ் ஒன்னு டிஸ்ரிக் மேஜிஸ்ரேட்க்கு இன்னொன்னு சிஎம் க்கு அப்புறம் ஒன்னு டிஐஜிக்கு இதை வைச்சிதான் அவனை அரஸ்ட் பண்ணி சட்டபடி கதிரோட இறப்புக்கு நியாயம் சொல்ல வைக்கனும் என்று கூறியவர் அவனோட வீட்டையும் சர்ச் பண்ண நாம கம்ளைன்ட் பண்ணனும் இன்னும் நமக்கு தெரியாம பல தப்புக்கள் கூட செய்து இருக்கலாம் என்கிட்ட இருக்க அந்த பேக்டீரிய பத்திய பேப்பர்ஸ் இதோட அட்டாச் பண்ணியிருக்கேன் மனித உரிமை ஆணையத்துக்கும் ஓரு காபி அனுப்பிட்டேன். இப்போ நாம டிஐஜி ஆபிசுக்கு போகலாம் சக்தியை வர சொல்லு என்று பேசி முடிக்க அவனின் காரில் பின் பக்கம் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி தங்கள் மேல் மோத வருவதை ரீயர் வியூ கண்ணாடி வழியாக பார்த்த கேஷவ் மாமா பின்னாடி பாருங்க வண்டி நம்மை மோதறாப்போல வருது ரைட்சைட் கட் அடிங்க என்று கூற அதற்குள் சுதாரித்த மாணிக்கம் வண்டியை வேறுபக்கம் திருப்பி ஒரு விபத்தை தவிர்பதற்குள் இரண்டு மூன்று குட்டிகர்ணங்களை போட்டு இருந்தது அந்த வண்டி. கேஷவ் முட்டி மோதிய நிலையில் ஒரு பக்க காரின் கதவை கால்களால் எட்டி உதைத்தவன் அடுத்த பக்கம் இருக்கும் மாமனாரின் உயிரை காப்பற்ற கார் கதவை திறக்க முற்பட்டான் கார் விழுந்த அதிர்ச்சியில் கதவை திறக்க முடியாமல் அடைத்து கொள்ள மூச்சி விடுவதற்கு சிரமப்பட்டவரின் கால் உள்ளே மாட்டிக்கொண்டது. அதற்குள் அவனை துரத்தி வந்த லாரியில் இருந்து இறங்கிய முரட்டுதனமான நான்கு பேர் அவனை தாக்க முற்பட

சுதாரித்து அவர்களிடம் இருந்து விலகினான். "ஏய் மரியாதையா உன்கிட்ட இருக்க அத்தனை ஆதரத்தையும் கொடு" என்று மிரட்டல் விடுத்து கையில் கத்தியுடன் முன்னேற தன்னை நோக்கி ஓடிவந்தவனின் கத்தி பிடித்த கையை இறுக பற்றி தன் பலம் முழுவதையும் தேக்கி ஓங்கி வயிற்றில் குத்தி இருந்தான். அடி வாங்கியவன் அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட

"டேய் வாங்கடா இவனை உயிரோட விடக்கூடாது... அண்ணங்கிட்ட போனா அந்த ஆதரத்தோடதான் போகனும் அதுக்கு அந்த கிழவனை போட்டு தள்ளினாலும் பரவாயில்லை அது கைக்கு வந்தாகனும்" என்று கூட்டத்தில் ஒருத்தன் சீற....

"நீ என்ன பெரிய பேட்டை ரவுடியா எங்களுக்கு எல்லாம் இல்லாத பலம் உனக்கு வந்துட்டுதா.... ஒரு சொங்கி போன பையனை அடிச்சா நீ என்ன பெரிய ஆளா??? இங்க வைடா கையை" என்று வந்தவர்களில் உருண்டு திரண்டு இருந்த ஒருவன் முன்னே வர எந்த எதிர்வினையும் செய்யாது கோபத்தை மட்டுமே கண்களில் வைத்திருந்தவனின் கை இரும்பைப்போல் இறுகியது

அவனை சுற்றி வளைக்க அவர்களிடம் இருந்து லாவகமாக வெளியே வந்தவன் அவனிடம் இருந்த ஆயுதத்தை பறித்து அவர்களையே அடித்து துவைத்து எடுத்துவிட்டான். அடியினை தாங்காமல் வந்தவர்கள் கீழே சுருண்டு விழுந்து விட மேலும் சக்தியை அழைத்து இங்கு நடந்தவற்றை விவிரித்து ஆம்புலன்ஸ்க்கு ஏற்பாடு செய்தவன் அவரை மருத்தவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் சேர்த்து இருந்தான்.

~

6 மணி நேர பயண கலைப்பில் உடல் சோர்ந்து இருந்தது இருந்தும் தாய் தந்தையரை காக்க வைக்க விரும்பம் இல்லாதவன் அவருக்கு தான் வரும் தகவளை தெரியபடுத்தி அவர் இருக்கும் மருத்துவமனையின் பெயரையையும் தெரிந்து கொண்டு ஒரு ஏழு மணியைப்போல் வந்து இறங்கினான் சித்தார்த்.

வாசலிலேயே அவனுக்காக காத்திருந்த தந்தையை கண்டவன் "இங்க ஏன் நிக்கிறிங்க வந்தா உள்ள தானே வர போறேன்... இவ்வளவு தூரம் வந்துட்டேன்.. உள்ள வராமலா போய்ட போறேன்... என்று கேட்க

"சாரி சித்து... உன் கஷ்டம் புரியுது அவர் வயசுக்காவது மரியாதை தரனும்... கடைசி காலத்திலாவது எங்களை ஏத்துக்கிட்டாரே அதுவே எங்களுக்கு போதும்யா... வன்மம் வேனாம்யா.... இனி யாரும் மீண்டும் இதே இடத்துல பிறக்க போறது இல்லை இதுல ஏன் இவ்வளவு பகைய வளத்துக்கனும் விடுப்பா அவர் புத்தி கெட்டு போய் நடந்துகிட்டா நாமும் அதுமாதிரி நடக்கலாமா?" என்று மகனுக்கு அறிவுரை கூறியவர் தந்தையின் அறை வாயில் வரை அழைத்து வந்தார்.

இதுவரை கண்டாலும் முகம் கொடுத்து பேசாத சொந்தங்கள் நின்று கொண்டிருந்தனர். அவனிடம் எப்படி பேசுவது என திருதிருத்தபடி இருக்க வாடிய முகமாகமாக சுவற்றோரம் தாயை கண்டவன் "அம்மா" என்று அழைத்து அருகில் சென்றான். "வந்துட்டியா சித்து வா வா உன்னை தான் தாத்தா பாக்கனும்னு காத்துக்கொண்டு இருக்காருபா" என்று மகிழ்வோடு அவனை அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றார் ராதா....

அறைக்குள் நுழைந்ததும் மாமா... மாமா... என்று அவருக்கு கேக்கும் படி சத்தமாக அழைத்தவர் முகமெல்லாம் புன்னகையாக "இது இது சித்து சித்தார்த்.... உங்க பேரன் சொந்தமா ஹோட்டல் வைச்சிருக்கான்" என்று அவனை அறிமுகபடுத்தி அவருடைய கால்களை தொட்டு வணங்குமாறு மகனிடம் கூறினார். பேரன் கால்களை தொட்டு வணங்க அவனை கை நீட்டி ஆசிர்வதித்தவர் சித்துவை அருகில் அழைத்து அமரவைத்து கொண்டு அவரின் கைகளை இறுக பற்றி சி.. சி.. என்று திக்கி திணறி அவன் பெயரை உறைக்க சித்துவுக்குமே கண்கள் கலங்கியது தொடர்ந்து அவர் பேச விழைய நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதிங்க உடம்பு குணமாகட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்று அவரை அமைதி படுத்த தாத்தா அவன் முகததையே பார்த்து இருந்தார். தான் வேண்டாம் என்று கூறி ஒதுக்கி இருந்தாலும் தன்முக சாயலில் பிறந்து கம்பீர ஆண்மகனாய் இருந்த பேரனின் கைகளை தொட்டு தன் மார்புக்கு அருகே வைத்து மன்னிச்சிடு என்று சத்தம் வரமால் வாயசைக்க

சற்றே மலை இறங்கி வந்தான் சித்தார்த். அவரின் கைகளை விடுத்து தட்டிகொடுத்தபடியே "தாத்தா மன்னிப்பு எல்லாம் எதுக்கு எங்க அம்மா அப்பாவ ஏத்துகிட்டிங்க இதுவே எங்களுக்கு போதும்... மேலும் மேலும் அதையே நினைச்சிட்டு வருத்தபடாதிங்க முதல்ல உடம்பு குணமாகி வாங்க சந்தோஷமா பேசலாம்... உங்க உடம்புக்கு நீங்க இவ்வளவு மனசு வருத்தப்பட்டு பேசுறது சரி இல்லை உங்களுக்கும் நல்லது இல்லை" என்று அவருக்கு சமாதனத்தை கூறி அமைதி படுத்தியவன் "நீங்க ஒய்வெடுங்க தாத்தா நான் வெளியே இருக்கேன்". என்று எழுந்து தாயுடன் வெளியே வந்தான்.

"தாயிடம் ஹோட்டலில் அறை எடுத்து ஒய்வெடுத்து வருவதாக கூறிக்கொண்டவன் தாய் தந்தை எங்கே தங்கி உள்ளனர் என்று விசாரிக்க சென்னையில் தங்கையின் வீட்டில் இருப்பதாக நாவநீதன் கூற "எனக்கு அங்க எல்லாம் செட் ஆகாது நான் ஹோட்டலுக்கே போறேன். நான் ஒரு 2 ஹவர்ஸ்ல வரேன்.. அம்மா உங்களுக்கு ஏதாவது வேனுமா வரும்போது வாங்கிவறேன்" என்று கேட்க "ஒன்றும் வேண்டாம் சித்து ஏனோ எனக்கு இரெண்டு மூனு நாளா மனசே சரியில்லை" என்று தாய் கவலையாக கூற "மா நீங்களுமா பீளிஸ் ஒன்னும் ஆகாது நல்லபடியா உன் மாமனாரு திரும்பி வருவாரு மறுபடியும் உன்கிட்ட முகத்தை திருப்பாம இருக்கனும்னு மட்டும் வேண்டிக்கோ" என்றவன் வெளியே வர கிளம்ப

"வந்தது வந்துட்ட இரேன் மத்தவங்களை அறிமுகபடுத்துறேன்" என்று ஆவலாக கூற

"மா.... எனக்கும் கோவம் வரும்... நீங்க கூப்பிட்டதும் வந்துட்டேன்னு எல்லாத்துக்கும் சரி சொல்லுவேன்னு நினைக்காதிங்க நேருக்கு நேரா பாக்கும்போதே எதிரியை பார்த்தது போல முகத்தை திருப்பி போனவங்க தானே எல்லாம்... எனக்கு நீட் சம் டைம். ஒரே நால்ல எல்லாம் மாறது என்னாலும் சகஜமா பேச முடியாது..." என்று திட்டவட்டமாக கூறியவன் அந்த தளத்தை விட்டு இறங்கி வரும்போது அவனை தாண்டி சென்ற நபரை கண்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 47
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN