ஆண்டிப்பட்டி தான் கார்மேகத்தின் பூர்வீகம். சொந்த அக்கா மகள் சிந்தாமணியை மணந்து கொண்டவர். அவர் தூக்கி வளர்த்த பெண் சிந்தாமணி... இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். முதலில் மூன்று குழந்தைகள் பிறக்கும் வரை திடகாத்திரமாய் இருந்த சிந்தாமணியின் உடல்.. குமரன் தங்கியதிலிருந்து பல உடல் உபாதைகளை அவளுக்குக் கொடுக்க ஆரம்பிக்க... அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏதேதோ புது விதமான நோய்களாக சொன்னார்களே தவிர... குணப்படுத்துவதற்கான வழியைத் தான் சொல்லவில்லை.
அந்நிகழ்வின் போது மீனாட்சிக்கு வயது பதினேழு. தாயின் உடல்நிலை கருதி.. தம்பிகளையும், குடும்பத்தையும் இவள் கையில் எடுத்துக் கொள்ள. ஏதோ மெல்ல எழுந்து நடமாடிக் கொண்டிருந்த அவளின் தாய், குமரன் பிறந்ததும் சுத்தமாய் படுத்து விட... தாயிடம் பசியாறும் நேரம் தவிர.. மற்ற நேரங்களில் குமரனை மீனாட்சி தான் வளர்த்தாள். சிந்தாமணி தொப்புள் கொடி உறவில் தாய் என்றால்... குமரனுக்கு மீனாட்சி தான் அவனைப் பெற்றெடுக்காத தாய்.
பின் மூன்று வருடம் சிந்தாமணி, நோயால் அவதிப்பட்டு படுக்கையிலிருந்தபடியே போய் சேர்ந்து விட... அடுத்த ஒரு வருடத்திற்கு எல்லாம் தனக்கென்று ஒரு மனைவியைத் தேடிச் கொண்டார் கார்மேகம். அவரே பெண் பார்த்து.. தனக்கென்று ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய அவர் முடிவாய் இருக்க.
ஆனால் உறவுகள், இருபது வயதில் இருக்கும் மகளான மீனாட்சியைக் காட்டி.. வயது வந்த பெண்ணை வைத்துக் கொண்டு.. இதென்ன செயல் என்று காறித் துப்பவும் தான் அதைக் கை விட்டார் அவர். அன்றிலிருந்து... தன் தம்பிகளுக்கு மட்டுமின்றி கார்மேகத்துக்கும் தாய் என்று மாறிப் போனாள் மீனாட்சி.
குமரன்… இவனை அழகன் என்று சொல்லாவிடிலும்... ஆண்மகனுக்கே உரிய கம்பீரத்துடன் விளங்குபவன். கோதுமை நிறத்தில் இருந்தாலும் வடித்த சிலையை ஒத்திருப்பவன். அதுவும் கிரேக்க சிலையை ஒத்திருப்பவன் இவன்.
சிறு வயதிலிருந்து இப்போது வரை எல்லோரிடமும் நன்றாகப் பேசி பழகினாலும் ஏனோ ஒரு அடி தள்ளி தான் எப்போதும் நிற்பான். அதிலும் பெண்கள் என்றால் அவசியம் என்னும் பட்சத்தில் தான் பேசுவான். அவன் அதிகம் பேசுவது... தமக்கையிடம் மட்டும் தான். அது கூட கல்பனாவின் வரவிற்குப் பிறகு குறைந்து போனது.
பத்தாவது வரை சொந்த மண்ணில் படிப்பை முடித்தவன்... பின் பன்னிரெண்டாவதிலிருந்து M.Sc Agri வரை சென்னையில் ஹாஸ்டலில் தங்கி தான் படித்தான். இரு தமையன்கள் போல் வயல் வரப்பைப் பார்த்தாலே உடலில் சேறு சகதி ஒட்டி கொள்ளும் என்று நினைத்து ஒதுங்காமல்... விவசாயத்தின் மேல் பற்றோடு அதைக் கற்றவன் இவன்.
இன்று தங்கள் நிலத்தை உழுது பொன்னாக்கியது மட்டும் இல்லாமல்... பெரிய அளவில் சொந்தமாக நாட்டு மாட்டுப் பண்ணையும், கோழிப் பண்ணையும் வைத்திருக்கிறான். இது இல்லாமல்... இங்கு தேனியில் சுற்று வட்டாரத்தில் மலைகள் அதிகம் என்பதால் அங்கிருக்கும் தேனீக்களைக் கொண்டு சுத்தமான தேனைத் தயாரித்து... வெளிநாடு வரை விற்பனை செய்கிறான்.
இன்று வரை அவனுடைய மேல் படிப்பைத் தொலை தூர கல்வியில் பயின்றும் வருகிறான். அவன் வாழ்வில் அவன் நினைத்தது... பிடித்தது எல்லாம் நடந்தது. இதோ... இன்று மகாலஷ்மியுடன் அவன் வாழ்வு இணைவது வரை.
இப்படியான அவன் திருமண வாழ்வில் இணைவதற்கு முன்பே அவனுக்கு ஏன் இந்த சலிப்பு? சலிப்பு இல்லை கவலை... வெறுப்பு... இயலாமை... இதெல்லாம் அக்காளின் வாழ்க்கையை நினைத்து. வீட்டில் தங்கி குமரன் படித்த வரை அவனுக்கு மீனாட்சியைப் பற்றி கவலை இல்லை.
‘இது நம் குடும்பம்... அம்மா இல்லாததால் அக்கா அந்த இடத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறாள்... இதில் தவறு என்ன?’ இப்படி தான் அவனுக்குள் இருந்தது. ஆனால் வெளியூரில் படிக்கச் சென்ற போது ஒரு நாள் அவன் தந்தை இவனைப் போனில் அழைத்து பெரிய அண்ணன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடக்க இருப்பதால்... ஒரு வாரம் முன்பே லீவில் ஊருக்கு வர வேண்டும் என்று சொல்ல... அப்போது தான் இவனுக்குள் உறைத்தது.. அண்ணனை விட பெரியவள் அக்கா.. அவளுக்கு திருமணம் செய்யாமல்... எப்படி அண்ணனுக்கு செய்யலாம் என்று.
சிறுவயதே என்றாலும் இதையே இவனும் தந்தையிடம் கேட்டு விட... “மீனாவுக்கு கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்குப் போய்ட்டா... வீட்டை யாரு பொறுப்பா பார்த்துப்பா? மருமக வந்ததும்... அந்தப் பொண்ணுகிட்ட வீட்டுப் பொறுப்பை கொடுத்த பெறகு அக்காவுக்கு செய்யலாம்...” அன்றைய தினம் மகனின் கேள்விக்குப் பதிலாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் கார்மேகம் அப்படி சொன்னது.
சின்னவனும் அதை நம்பி... ‘இப்பவே அக்காவுக்கு முப்பது தாண்டிடுச்சு... இதுக்கு பெறகு எப்போ செய்வார்?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவனோ “ஆமாம்.. இப்போ எல்லாம் முப்பது வயசுக்கு மேல தானே நெறைய பொண்ணுங்களுக்கு கல்யாணம் நடக்குது... அதனாலே அப்பவே நடத்திடலாம்..” என்று வாய்விட்டே தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் இளங்குருத்தான குமரன்.
ஆனால் அதன் பிறகு கார்மேகம் மகளின் திருமணத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. இதில் உமா வேறு வேலைக்குப் போகவும்... தம்பி குடும்பத்திற்கும் சேர்த்து இவள் தான் உழைக்க வேண்டியதாகிப் போனது. குமரன் ஊருக்கு வரும் போது எல்லாம் அக்கா திருமணத்தை வைத்து தந்தையிடம் முரண்டு பிடிப்பவன்... கல்பனா இந்த வீட்டிற்கு வந்த பிறகு அக்காவிடம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். ஆனால் எதற்கும் அவன் தந்தையும் அசரவில்லை... அக்காளும் கேட்கவில்லை.
திருமணத்தன்று காலையில்... மணமகனின் அறையில் மீனாட்சி கையைப் பிசைந்து கொண்டு நிற்க
“அக்கா.. இந்த கல்யாணம் நடக்காது... நிறுத்திடு...” குமரன் பற்களைக் கடித்தபடி அறிவிக்க
“என்ன டா இது... இப்டி அச்சானியா பேசுற.... இன்னும் செத்த நேரத்துல நீ மணவரையிலே ஒக்காரணும்...”
“இப்போ நீ போய் சொல்லப் போறியா... இல்ல நான் போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லவா?” தமக்கையின் வார்த்தையில் இவன் இடை புகுந்து கேட்க
பதறியவள், “நீ செத்த நேரம் பேசாம இரு டா...” இவள் தணிவாய் கெஞ்ச
“அந்த பொம்பள இங்க இருந்தா... நான் தாலி கட்டமாட்டேன் க்கா...” இவன் உறுதி பட கோபத்துடன் அறிவிக்கவும்
“பட்டு.. என்ன இது பொம்பளைன்ற வார்த்த... அவங்கள நமக்கும் புடிக்கலனாலும் அவங்க வயசுக்கு மரியாதை தரணும் டா.. அப்பாரு தான் அவங்கள வரச் சொல்லி இருக்காரு.. நாம என்ன செய்ய முடியும் சொல்லு.. ஒருவேள.. பாத பூஜைக்கு அவங்கள நிக்க வெப்பாரோ என்னவோ?..” தம்பியைக் கண்டித்தவள் மேற்கொண்டு யூகித்துச் சொல்ல
“என்னது.. அப்போ முத்தரசி நம்ம அம்மா எடத்துலயா? முத்தரசி என்னைக்கும் நம்ம அப்பாவுக்கு பொண்டாட்டியா தான க்கா இருந்திருக்கு!? அம்மா எடத்துக்கு என்னைக்கும் வேற யாரும் வர முடியாது. எங்க எல்லோருக்கும் அம்மான்னா அது நீ மட்டும் தான்...” தமக்கை கண்டிக்கவும் பொம்பளை என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் தற்போது அவள் பெயரை உச்சரித்தான் இவன்.
“என்ன இருந்தாலும் அவங்க வயசுக்கும் அப்பாருக்காகவும் செத்த மருவாதையா பேசு டா ...”
“கார்மேகம்... முத்தரசிக்கு தாலி கட்டி இருக்காரா சொல்லு... நீ சொன்ன மாதிரி அமைதியா எதுவும் பேசாம அம்மாவோட எடத்துல நிக்க வெக்கிறேன்.. மரியாதை குடுக்கறேன்..” இவன் காட்டமாய் கேட்க... ‘கப்..’ என்று வாயை மூடிக் கொண்டாள் தமக்கை.
அந்நேரம் அங்கே வந்த இவர்களின் தந்தை, “என்ன, அக்காவும் தம்பியும்.. உக்காந்து கதை பேசிட்டு இருக்கீங்க... என்ன டா இன்னும் வேட்டி சட்டை கூட மாத்தாம இருக்க... வெரசா போய் மாத்திட்டு வா... முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுதுல்ல...” வந்தவர் அதட்ட
“இந்த கல்யாணம் நடக்காது ப்பா...’’ இவன் பட்டென்று சொல்லி விட
“என்ன டா..” அவர் அதிர்ந்து கேட்க
“அப்பா, நீங்க போங்க.. நான் இவனை கூப்டுகிட்டு வரேன்...” மீனாட்சி சமாதானத்தில் இறங்க
“என்ன க்கா... நான் இங்க என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன சொல்லிட்டு இருக்க...” என்று தமக்கையை ஒரு அதட்டு அதட்டியவன்
“அப்பா.. முத்தரசியும் அவங்க தம்பி தங்கராசுவும் இங்க இருந்தா... இந்த கல்யாணம் நடக்காது ப்பா... நான் தாலி கட்ட மாட்டேன்...” இவன் நேரடியாகவே தந்தையிடம் தெரிவிக்க
“உனக்கு என்ன பைத்தியமா டா... முத்தரசியை ஏன் இருக்கக் கூடாதுன்னு சொல்ற.. பாத பூஜைக்கு அவ தானே டா என் கூட நிக்கணும்...” இவரும் கோபத்தில் கத்த
“ஏது... அது இங்க இருக்கவே கூடாதுன்னு சொல்றேன்... நீங்க என்ன பாத பூஜை வரைக்கும் போறீங்க... அதெல்லாம் தேவையில்ல.. முதல்ல அதுங்களை துரத்துங்க...” குமரன் திட்டவட்டமாய் கூற
“என்ன டா... வாய் நீண்டுகிட்டு போகுது.. நீ இவ்ளோ பேசுவியா?” அடக்கப்பட்ட ஆத்திரத்தில் தந்தை கேட்கவும்
இன்னும் பேசுவேன் என்பது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றான் அவரின் மைந்தன்.
அதில் பல்லைக் கடித்தவர், “என்ன மீனாட்சி இதெல்லாம்.. நீ எடுத்துச் சொல்ல மாட்டியா?” இவர் மகளிடம் பாய
“அப்பா.. இப்போ நீங்க போய் துரத்தறீங்களா... இல்ல நான் போய்... அதுங்களை துரத்தவா?” குமரன் வெளியே செல்ல எத்தனிக்க
“சும்மா அடங்கு டா... சபையில் நாலு பேரு முன்னாடி என்னை அசிங்கப்படுத்த இப்படி எல்லாம் செய்றியா?” கண்கள் சிவக்க கேட்டவர்... மகன் வீம்பாய் நிற்பதைப் பார்த்து.. “சரி.. ரெண்டு பேரையும் அனுப்பி வெக்கறேன்.. அப்போ பாத பூஜைக்கு புருஷோத்தனும், உமாவும் நிக்கட்டும்...” அறிவித்தபடி அவர் வெளியே செல்ல எத்தனிக்க
“யாரும் தேவையில்ல... என்னைய பெத்ததுக்கு... நீங்க மட்டும் நில்லுங்க... உங்களுக்கு தனியாவே நான் செஞ்சிட்டுப் போறேன்...” குமரன் சொல்லவும்
“உன்னைய வெளியூருக்கு எல்லாம் அனுப்பி படிக்க வச்சது தப்பா போச்சு டா...” என்றவர் அங்கிருந்து விலகவும்
“ஆமாம்.. இவர் என்னைய மட்டும் தான் படிக்க வச்சாரு பாரு...” இவன் வாய் விட்டே முணுமுணுக்கவும்
“குமரா, செத்த சும்மா இரு... இது என்ன கல்யாணத்தை வச்சிகிட்டு அப்பாரு கூட மல்லுக்கு நிக்கற... நீ இப்டி பேசின பேச்சை எல்லாம் மகாலஷ்மி கேட்டா எவ்ளோ கஷ்டப்படுவா போ டா.. சரி சீக்கிரம் துணி மாத்திகிட்டு வா...” என்றபடி தமக்கை விலகி விட
அப்போது தான்.. தான் சொன்ன வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான் குமரன். ‘ஆமா.. நான் ஏன் இங்க கொஞ்சம் கூட மகாலஷ்மியைப் பத்தி யோசிக்கல?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவனுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.
இப்போது கூட.. அவன் மணமுடிப்பவளைப் பற்றி நினைக்க விடாமல்... மகாலஷ்மி பின்னுக்குத் தள்ளப் பட... முத்தரசியே அவன் நினைவில் முன்னுக்கு வந்தாள்.
முத்தரசிக்கு ஐம்பது வயது இருக்கும்.. கணவன் இறந்து விட்டான்... ஒரு பெண், அவளும் பத்து வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டாள். அவளுக்கு ஒரு தம்பி... தங்கராசு. அவனுக்கு பெயரில் மட்டும் தான் தங்கம் இருக்கும்... பஞ்சப் பரதேசி. வேலைவெட்டிக்குப் போகாத சோம்பேறி. குடி... சிகரெட்டு... பாக்கு... பெண்கள் சகவாசம் என்று எல்லா பழக்கமும் உள்ளவன். இது போதாதென்று உடலில் காச நோய் வேறு. குமரனுக்கு தங்கராசுவைக் கண்டாலே பிடிக்காது. இதில், மீனாட்சியை அவனுக்கு மணமுடிக்க இருந்ததில்... கொலைவெறியே வந்தது இவனுக்கு.
சின்ன மகனின் நச்சரிப்பு தாங்காமல் கார்மேகம் மகளின் திருமணத்தைப் பற்றி முத்தரசியிடம் சொல்ல... அவளோ இவர்கள் இருவரின் உறவைப் பலமாக்கவும்... கடைசிவரை பிறந்த வீட்டில் மீனாட்சியை இருக்க வைக்கவும்... தன் தம்பிக்கு திருமணம் என்ற ஒன்றை செய்ய ஆசைப்பட்டவள்.. மீனாட்சிக்கு திருமணம் என்ற நிகழ்வில் மூன்று மாங்காய் அடிக்க நினைத்தவள்... கார்மேகத்திடம் பதவிசாய் பேசி சாதிக்க... கார்மேகம் என்ற கிளிப்பிள்ளையும்... தங்கராசு தான் மீனாட்சிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்புவிக்க... மற்ற இரு பிள்ளைகள் தலையாட்டிச் சென்றாலும் குமரன் மட்டும் ருத்ர தாண்டவமே ஆடி விட்டான். அவனை அடக்குவதற்குள் மீனாட்சிக்கு போதும் போதும் என்றானது என்றால்.. கார்மேகம் விட்டால் போதும் என்று தப்பிப்பதிலேயே குறியாக இருந்தார்.
அதன் பிறகு நாட்கள் அதன் போக்கில் செல்ல... மறுபடியும் குமரனுக்குப் பெண் பார்க்கும் நேரத்தில் ஆரம்பித்தது தங்கராசு பேச்சு.
“ஏன்... க்கா உனக்கு அந்த ஆள புடிக்கலன்னு... அப்பாரு கிட்ட சொல்ல வேண்டியது தான?” குமரன்
“என்ன டா நீ இப்டி கேக்குற... அந்த ஆள கண்டாலே எனக்கு குமட்டும்.. இதுல நான் கல்யாணம் கட்டிக்கிறேனு வேற சொல்லுவனா... அப்பார எதுத்துப் பேச வேணாம்னு பேசாம வந்துட்டேன்... மத்தபடி அந்த ஆள எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன்...” மீனாட்சி தம்பிக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த நேரம்
“என்ன உனக்கு இன்னும் இளமையா இருக்கோம்னு நெனப்பா... நாப்பத்தி நாலு வயசாகிடுச்சு... தங்கராசுவுக்கு நாப்பத்தஞ்சு நடக்குது... முறையும் உனக்கு மாமன் முறை அவன். எல்லா பொருத்தமும் இருக்கு... நீ கட்டிக்கிட்டா வீட்டோட மாப்பிள்ளையா இங்கயே இருடானா இருந்துட்டுப் போறான்...” கார்மேகம் அங்கு இடை புகுந்து... மகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல்... அவளைத் தாழ்த்திப் பேசவும்..
மகள் விக்கித்து நின்றாள் என்றால்.. மகன், “என்ன நெனைச்சிட்டுப் பேசுறீங்க... எவனோ ஒருத்தனுக்காக... என் அக்காவை இப்படி எல்லாம் பேசுவீங்களா... என் அக்கா கால் தூசி வருவானா அவன்... இன்னும் வயசு இருக்கான்னு கேக்குறீங்க... யாருக்காக என் அக்கா இப்படி இருக்கு... உங்களுக்காகவும்... நமக்காகவும் தானே?” குமரன் எகிற
“என்ன டா.. சும்மா சும்மா கழுத்து அறுபட்ட கோழி மாதிரி துள்ளிகிட்டே இருக்க... உன் அக்காவுக்கு யாரும் மாப்பிள்ள பாக்கல... தங்கராசுவை கட்டிக்கச் சொல்லி யாரும் அவ கழுத்தப் புடிக்கல... உனக்கு பொண்ணு பாத்திருக்கேன்... எல்லாம் பொருந்தி வந்திருக்கு கட்டிக்கோ.. அம்புட்டு தான்... இதைச் சொல்ல வந்ததுக்கு தான் நீ உன் அக்கா கல்யாணத்தைப் பத்தி பேச்சு எடுத்த... போதுமா?” கார்மேகம் கறாராய் பேச இவனுக்குள் ஆத்திரம் துளிர்த்தது.
அந்த ஆத்திரத்தில் எங்கே தந்தையை அடித்து விடுவோமோ என்று பயந்தவன், “எனக்கு மட்டும் ஏன் கல்யாணம் செய்ய ஆசைப் படுறீங்க... அக்கா மாதிரியே என்னையும் விட்டுடுங்க...” இவனும் மோதிப் பார் என்பது போல் நிற்க...
“டேய்.. மூணு பயலுகள்ல ரெண்டு பேருக்கு கல்யாணம் முடிச்சிட்டு உனக்கு செய்யலனா... ஊர் உலகம் என்னை காறித் துப்பாதா?”
“ஊர் உலகத்துக்கு பயப்படற பெரிய நியாயஸ்தன் தான் நீங்க…” என்று குத்தியவன்.. “அப்போ அக்காவுக்கு கல்யாணம் நடத்தலனா மட்டும் அதே ஊர் உலகம் காறித் துப்பாதா?” குமரனும் விடுவேனா என்பது போல் கேட்க
“அடேய்... யாரு டா நீ.. மீனாட்சி இந்த வீட்டு மஹாலஷ்மி டா... அதை இன்னொருத்தர் வீட்டுக்கு அனுப்பிட்டு நாம என்ன செய்ய?” கார்மேகத்தைப் போல் ஒரு சுயநலவாதி தந்தையின் பதில் பிறகு எப்படி இருக்கும்... இப்படி தான் வரும்.
‘எவ்வளவு சுயநலம் புடிச்ச பிசாசு இவர்!’ மனதிற்குள் சாடியவன்... இவன் ஏதோ சொல்ல.. அவர் பதிலுக்கு ஏதோ சொல்ல... வாக்கு வாதம் வளர்ந்து கொண்டே போக...
“செத்த நிறுத்தறீங்களா... நான் கல்யாணம் கட்டிக்கப் போறது இல்ல.. இப்டியே கடைசி வரைக்கும் இந்த வீட்ல தான் இருக்கப் போறேன். நாப்பத்தி நாலு வயசுலே எனக்கு என்ன கல்யாணப் பேச்சு... போங்க.. இனிமே யாராச்சும் இந்தப் பேச்சு எடுத்தா.. நான் உத்தரத்துல தொங்கிடுவேன்...” என்று மீனாட்சி போட்ட அதட்டலில்..
தந்தை, மகன்... இருவருமே அரண்டு போனார்கள்...
“அக்கா...”
“அம்ம்மா மீனா...” இருவரும் ஒருசேர குரல் கொடுக்க
“அப்பா.. நான் கல்யாணம் கட்டிக்க மாட்டேன். உசுரு போற வரைக்கும் இந்த வீட்ல தான் இருப்பேன். இது அம்மா போனப்பவே நான் எடுத்த முடிவு. அது இப்ப வரைக்கும் மாறல.. இனியும் மாறாது... அதனால நீங்க போங்க... இவன் கிட்ட பேசி கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க வெக்கிறேன்... போங்க ப்பா...” மகள் குரலில் என்ன உணர்ந்தாரோ.. அங்கிருந்து விலகியிருந்தார் கார்மேகம்.
“டேய் குமரா...” தம்பியை இவள் சமாதானப் படுத்த முயல
“பேசாத க்கா..” முகத்தைத் திருப்பிக் கொண்டு இவன் ஓரிடத்தில் சென்று அமர்ந்து விட
தானும் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்தவள், “பட்டு....” என்றபடி இவள் தம்பியின் தோள் தொட... பட்டென்று தமக்கையின் மடியில் அவன் முகம் புதைத்துக் கொள்ளவும்... அதில் இவள் சொல்வது அறியாது அவன் கேசத்தை வருட... சற்று நேரத்திற்கு எல்லாம் அவளின் மடியில் இவள் ஈரத்தை உணர... தம்பி அழுகிறான் என்பதை அறிந்தவள், “பட்டு... நீ அழுதா என் மனசு தாங்குமா... அழாத டா...” இவளும் கண்ணீர் குரலில் தம்பியை சமாதானம் செய்ய
“இந்த வீடு வேணாம் க்கா.. நான் படிச்சிருக்கேன்... வா நாம சென்னை போகலாம்... நான் உன்னைய ராஜாத்தி மாதிரி பாத்துக்கிறேன்...”
“நீ பாத்துப்ப ராசா... எனக்கு நம்பிக்கை இருக்கு... ஆனா நான் இந்த குடும்பத்தை அம்போன்னு விட்டுட்டுப் போக மாட்டேன்னு.. அம்மாவுக்கு சத்தியம் செஞ்சி குடுத்திருக்கனே...” தமக்கை பொய்யுரைக்க
“என்னக்கா சொல்ற?” எழுந்து அமர்ந்தவன் கேட்க
“ஆமா பட்டு.. பொறந்த குடும்பம் தான் எனக்கு குடும்பம்... என் தம்பிங்க தான் என் பிள்ளைங்கனு சொல்லி.. ஒங்கள வளக்குற பொறுப்பை நான் ஏத்துகிட்டு அம்மாவுக்கு சத்தியம் செஞ்சி குடுத்திருக்கேன் பட்டு...”
“அதான் நாங்க வளர்ந்துட்டோம் இல்ல.. பெறகு என்ன?”
“நீங்க வளந்துட்டீங்க... அப்பாரு குழந்த ஆகிட்டாரே... அவரை யாரு பாத்துப்பா...”
“யாராவது பார்த்துகிடட்டும் நீ விடு...”
“இது என் குடும்பம்... நான் இங்க தான் இருப்பேன். குடும்பம்.. புருஷன்... பிள்ளைங்க... இந்த ஆசையை... கனாவை எல்லாம் நான் தாண்டி வந்துட்டேன் குமரா நாற்பத்தி நாளு வயசு எனக்கு.. இப்போ போய் நான் கல்யாணம் பண்ணா.. ஊர் உலகம் என்னைய காறித் துப்பும்… எனக்கு முதல்ல அப்டி ஒரு வாழ்க்கையில இஷ்டமே இல்ல டா… இது தான் நாம இதப் பத்தி பேசுற முதலும்.. கடைசியுமா இருக்கணும்… அதனால இதுக்கு மேலே இதப் பத்தி பேசாத” இவள் கறாராய் மறுத்து விட
“இப்படியே சொல்லிட்டு கடைசி வரைக்கும் இங்கயே உட்கார்ந்துட்டு இருக்கப் போறியா... பெறகு இதுக்கு என்ன தான் வழி?”
“ஏன் வழி இல்லாம.. இப்போ ஒனக்கு பாத்து வெச்சிருக்க பொண்ண நீ கட்டிக்க. பெறகு அவ வந்து எனக்கு செத்த ஒத்தாசையா இருப்பா... அப்புறம் கொஞ்ச நாள் போனதும்... நீ, நான், அவ, உன் பிள்ளைங்க.. எல்லாருமா சேர்ந்து வேற ஊருக்குப் போயிடுவோம். அங்க வேணா நீ சொன்னியே.. அப்டி என்னைய ராஜாத்தி மாதிரி பாத்துக்க...” இவள் தம்பிக்கு ஆசை காட்ட
“அதுக்கு எதுக்கு க்கா அப்போ? இப்பவே நான் உன்னைய பார்த்துப்பனே...”
“பாத்துப்ப டா.. ஆனா என்னைய மாதிரி என் தம்பி கடைசி காலத்துல நிக்க கூடாது.. அதுக்கு தான் சொல்றேன்...” மீனாட்சி என்னமோ யதார்த்தமாகத் தான் சொன்னாள்.. ஆனால் ஆண் மகனுக்கு அந்த சொல் வலித்தது.
“நான் ஒன்னைய வளத்ததுக்கு... நீ நெசமாவே.. என்னைய அம்மா ஸ்தானத்துலே வச்சிப் பாக்கறது நெசம்னா... இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. பொண்ணு கூட மதுரப் பக்கம் தான்... நாம அந்தப் பக்கம் ஏதாவது பொழப்ப பாத்துகிட்டு கெளம்பிடலாம்.. என்ன சொல்ற..”
“நிஜமாவா சொல்ற? எனக்கு கல்யாணம் நடந்த உடனே நீ இந்த வீட்ட விட்டு வந்துடுவ தான?”
“அம்மா மேல சத்தியமா நான் வந்துடுவேன் டா...” இப்படி எல்லாம் உறுதி அளித்து... கல்லாய் இருந்த தம்பியின் மனதைக் கரைத்துத் தான்.. இதோ தற்போது நடக்க இருக்கும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள் மீனாட்சி.
மணவறையில் அமர்ந்து குமரன், ஐயர் சொன்ன சடங்குகளைச் செய்ய... திருமணத்திற்கே உள்ள சலசலப்பில் அந்த இடம் நிரம்பி இருக்க
“இந்த திருமணத்தை நிறுத்துங்க... நான் உயிரோடு இருக்கும் போது.. என் புருஷனுக்கு எப்படி நீங்க இரண்டாவது திருமணம் செய்யலாம்?” என்று அங்கு ஓங்கி ஒலித்தது... ஒரு இளம் பெண்ணின் குரல்.