🌹பாகம் 25🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இவ்வாறு அவளின் அந்த மூன்று நாட்கள் முடியும் வரைக்கும் ருத்ரன் மயூராவை குழந்தைப் போல் பார்த்துக் கொண்டான். அவள் விரும்பி கேட்ட உணவு வகைகளை வேளா வேளைக்கு சமைத்து அவளுக்கு ஊட்டி விடவும் செய்தான்.
மூன்று நாட்கள் இனிமையாக நகர்ந்தது இருவருக்கும். அதற்குள் சென்னை சென்றிருந்த பெரியவர்களும், மதனிகாவும் வீடு திரும்பி விட்டனர். மயூராவின் கை வண்ணத்தில் மதனிகாவின் புடவைகள்,ரவிக்கைகள் அழகாய் ஜொலித்தன.

மதுவிற்கு அவற்றை பார்த்ததும் சந்தோசமாய் இருந்தது. "நல்ல இரசனை அக்கா உனக்கு, எவ்வளவு அழகாய் டிசைன் பண்ணியிருக்க, சூப்பர் ''ஆவலாய் மயூராவைக் கட்டிக் கொண்டாள்.

"உன் திறமை இதோட நின்னுடக் கூடாது அக்கா, நம்ம ரிசார்ட்ல படுக்கை விரிப்புக்கு, அப்புறம் ஹனி மூன் கப்பள்ஸ் வந்தா கிப்ட் லாம் கொடுப்போமே, அந்த டவல்ஸ் லாம் இப்படி பூ வேலை செஞ்சுக் குடுத்தா, நம்ம ரிசார்டுக்கு நல்லா வரவேற்பு கிடைக்கும்ல, வால் பாறையில் அமிர்தம் பாட்டிகிட்ட பின்னல் வேலை கத்துக்கிட்ட பெண்களுக்கு நாம வாய்ப்பு குடுக்கலாம் கா '' சின்னவளின் ஆலோசனை பெரியவளை சிந்திக்க வைத்தது.

"எல்லாம் சரிதான் மது, ரிசார்ட் அத்தான் பொறுப்பில் இருக்கு, அவர் அப்புறம் நம்ம அப்பாக்கள் என்ன சொல்றாங்கனு பார்ப்போம். இப்போதைக்கு உன் கல்யாணம் மட்டும்தான் என் புத்தியில் நிக்குது,போய் கிளம்பு, பூரணி வந்திடுவா.பியூட்டி பார்லர் போய்ட்டு வந்திடுவோம். அப்போ தான் நாளைக்கு நிச்சயத்தில் அம்சமாய் இருப்பே''. மயூரா கூற மது ஆச்சர்யமாய் பார்த்தாள்.

"யக்கா இது நீயா? உனக்கு இதெல்லாம் புடிக்காதே, எப்போ இருந்து இந்த பழக்கம் வந்துச்சு உனக்கு? மது கேட்க மயூரா புன்னகையித்தாள்.

"எல்லாம் அமிர்தம் பாட்டி ட்ரைனிங்தான். வீட்ல உள்ள பொருளை வெச்சு நம்ம அழகு படுத்திக்கலாம் தான், பட் நமக்கு டைம் இல்லடி. கடலை மாவும் கையுமா கல்யாண வீட்டில் அலைய முடியாதுடி. போய் கிளம்பு.. போ போ..''மயூரா மதுவை விரட்டினாள்.

பூரணி வந்ததும் மூவரும் பியூட்டி பார்லர் சென்று முகத்தை பேசியல் செய்து விட்டு வந்தனர். பூரணி மருதாணி இடுவதில் கெட்டிக்காரி. அவரவர் விருப்பம் போல் கைகளில் மருதாணி வரைந்து அசத்தினாள்.
நாளைக்கு மதுவுக்கும் அந்தரனுக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பாடு ஆகியிருந்தது.மயூரா இரவே அனைவரும் அணிய வேண்டிய உடைகளை எடுத்து வைத்தாள். எவ்வளவு முயன்றும் அவளால் அவளுடைய நிச்சய நாளை மறக்க முடியவில்லை.

பாராங்கல்லாய் இதயத்தின் மையத்தில் சட்டமாய் அமர்ந்துக் கொண்ட அந்த நினைவுகள் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது . கண்ணீரை துடைக்க முயலுகையில் அவள் தோள் மேல் ஆதரவாய் ஒரு கரம் விழுந்தது. திட்டுக்கிட்டு திரும்பி பார்க்கையில் அவளுடைய அத்தை பவானி நின்றிருந்தார்.

"அத்தே எப்ப வந்தீ ங்க நீங்க '' கலங்கியிருந்த கண்களை அவசரமாய் மயூரா துடைத்தாள்.

"என் கண்ணம்மா கண்ணு கலங்கும் போதே வந்துட்டேன். உன்னை யாருடா இந்த வேலைகளை பார்க்க சொன்னது? இது உனக்கு கஷ்டமாயிருக்கும்னு உனக்கு தெரியாதா? எல்லாத்தையும் பார்த்து பார்த்து நீ செஞ்சாலும், இதே மாதிரி பூ சூடி, பட்டு கட்டி பவிசா நீ வந்து நின்ன அழகு மறந்து போய்டுமா என்ன? உன் மனசு உன் வலி எல்லாமே எனக்குதானே கண்ணு புரியும்?உன் அம்மாக்கு உன் சித்திக்கு ருத்ரன்தானே பெரிசு. ஆனால் எனக்கு நீதானே உசுரே. உன் வலியை என்னால தானே புரிஞ்சிக்க முடியும்?'' வாஞ்சையாய் அவள் தலையை வருடினார்.

"அத்தே '' மயூரா பவானியை கட்டிக் கொண்டாள்.

"அப்படிலாம் இல்லை அத்தே, ஏதோ ஞாபகம். வேற ஒன்னும் இல்லை அத்தே. நான் நல்லாதான் இருக்கேன். இந்த புடவை எனக்கு நல்லா இருக்காணு பார்த்து சொல்லுங்க '' மயூரா கையில் மாம்பழ வண்ணத்தில் அரக்கு பார்டரில் இருந்த காஞ்சிபுரம் பளபளத்தது.

சென்ற பிறந்தநாளுக்கு அந்த புடவை அமிர்தம்பாட்டி எடுத்து க் குடுத்தது. அதில் அழகாய் மாங்காய் டிசைன் அவர் கைகளாலே செய்து இருந்தார்.

"அழகாய் இருக்கு மயிலே, மகராசி நீ எத கட்டினாளும் மஹாலெட்சுமி மாதிரிதான் இருப்பே. இரு உனக்கு ஒன்னு கொண்டு வரேன். உன் புடவைக்கு பாந்தமாய் இருக்கும்.''

சற்றைக்கெல்லாம் திரும்பி வந்த பவானி கையில் ஒரு நகைப்பெட்டி இருந்தது. அதை அவள் கையில் வைத்தார். மயூரா அதை திறந்துப் பார்த்தாள். அதில் ஒரு ஜோடி தங்க கம்மல், கழுத்துக்கு சிவப்பு பச்சை கல் பதித்த அட்டிகை, இரண்டு ஜோடி தங்க வளையல்கள் இருந்தது.

"இதெல்லாம் என்ன அத்தே?''

பவானி புன்னகையித்தார்.
"இதெல்லாம் உன் பிறந்தநாளுக்கு நான் வாங்கி வெச்சது மயிலே. அஞ்சி வருஷமா உனக்கு ஒன்னுமே நேர்ல செய்ய முடியல. ஒரு நாள் நீ திரும்பி வருவேன்னு நம்பிக்கையில் வாங்கி வெச்சது. நாளைக்கு இதெல்லாம் நீ போட்டுக்கணும். சரியா? முடியாதுனு சொல்லிடாதேடி.'' பவானி ஏக்கமாய் கேக்கவும், மயூரா அவரைக் கட்டிக் கொண்டாள்.
"உங்களுக்காக இதயெல்லாம் நான் போட்டுகிறேன் அத்தை. சந்தோசம்தானே ''மயூரா சிரித்தவாறு கேக்கவும் பவானி அவளை உச்சி மோந்து கட்டிக் கொண்டார்.

இங்கு இவ்வாறு இருக்க, ருத்ரன் தன் அறையில் சிந்தனை வயப்பட்டிருந்தான். தன் விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.கண்களில் காதல், ஆசையை சுமந்துக் கொண்டு வெட்கம் பூசி நின்ற மயூராவின் அன்றைய கோலம் அவன் கண்களில் வந்து சென்றது.

அதைக் கூட நாடகம் என்று எப்படி தன்னால் மடத்தனமாய் யோசிக்க முடிந்தது என்று அவனுக்கு இன்றும் விளங்கவில்லை தான். அவன் உயிரே அவள்தான் . இரகசியமாய் அவளை அவன் நேசிக்க ஆரம்பித்தது அவன் மழலை பருவத்திலிருந்து.ஒத்தை ஆண் வாரிசாய் நின்று விட்டவனை , குடும்பமே தூக்கி கொண்டாடும் அவனை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் தைரியம் அவளுக்கு மட்டும்தானே உண்டு. இந்த குணம்தானே அவளை நேசிக்க வைத்தது.
ஆனால் சதா தன்னோடு சிண்டு பிடிப்பவளை காதலிக்கிறேன். கட்டிக் கொள் என்றால் சும்மா விடுவாளா கருப்பாயி? அதனாலே அவன் காதலை மனதோடு பூட்டி வைத்தான்.

அவளைக் கண்டால் இளகும் மனதிற்கு முரட்டு கடிவாளம் இட்டுக் கொண்டான். முடிந்த வரைக்கும் அவளிடம் கடினமாய் நடந்துக் கொண்டால் தன் மனம் அவள் வசம் போகாது என்று தானே முரடனாகிப் போனான்.
அந்த மூன்று நாட்களைத் தவிர மயூராவோடு அவன் சுமூகமாய் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இருந்தும் அவள் வசம் அவன் மனம் போவது அவனால் தடுக்கவே இயலவில்லை.
அவள் காதலுக்கு ஏங்கித் தவித்தவன், அறைகுறையாய் ரோஜா சொன்னதை வைத்து, காதில் கேட்டதை வைத்து மனம் உடைந்து போனான்.

தன்னை விளையாட்டு பொருள் போல் மயூரா பந்தாடி விடுவாளோ என்ற எண்ணமே அவனை அவளை அந்த நிலைக்கு கொண்டு வர வைத்தது. விதிப் போல் நடந்த பால்ய விவாகம். அந்த போட்டோ கூட அவனிடம் தான் சாம்பவி கொடுத்து வைத்திருந்தார்.நாளைய நிகழ்வை இருவரும் எப்படி எதிர் கொள்வது என்று புரியாமல் தவித்தனர். மனதில் சஞ்சலங்கள் சதிராட இருவரும் எப்படியோ உறங்கி ப் போனார்கள்.

காலையில் அனைவரும் நிம்பாலாக் கோட்டை சிவனை தரிசித்து விட்டு வந்தனர். அவரவர் மனதில் மயூரா - ருத்ரன் நிச்சயதார்த்த நிகழ்வே வியாபித்து இருக்க, ஒரு விதமான அமைதி அவ்விடத்தில் நிரம்பியிருந்தது. இதை முதலில் உணர்ந்தது என்னவோ மயூராதான்.

தன்னால் சின்னவளின் வைபவங்களில் குறை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதில் அவள் உறுதியாக நின்றாள். கோவிலை விட்டு வீட்டிற்கு செல்ல ருத்ரன் கார் எடுக்க செல்ல, மயூராவும் அவனோடு கிளம்பினாள்.
அவன் விரைந்து நடக்க, பின் சென்று அவன் கை பிடித்து மயூரா நிறுத்தினாள். ருத்ரன் திரும்பிப் பார்க்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மயூரா நின்றிருந்தாள்.

"என்னடி பொண்டாட்டி, இப்போதானே கோவில்ல பார்த்தே, தோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கே போய்டுவோம், அந்த கேப்ல உனக்கு மாமன் ஞாபகம் வந்துடுச்சா?" ருத்ரன் கேலியாய் கேட்கவும் மயூரா அவனை முறைத்தாள்.
"பொண்டாட்டி கிண்டாட்டி சொன்ன வாயில போடுவேன். சீரியஸ்சா பேசி வரும் போது உனக்கு ரொமான்ஸ் கேக்குதா? அடி விழும் மவனே!'' மயூரா பொரிந்து தள்ளினாள்.

"அப்படி என்னடி தலைப் போற காரியமாய் என்ன வழி மறைச்சு பார்க்க வந்தே?'' ருத்ரன் கேட்க,

"நம்ம வீட்ல எல்லோரும் முகத்தை பாரு. யாரும் மது கல்யாண குஷில இல்லை, நம்மள பத்தி நெனைச்சு தான் வருத்தப்படுறாங்க. பாவம் மது அவள் கூட ஒரு மாதிரியா இருக்கா. நம்ம ப்ரோப்லேம் நம்மளோட போகட்டும். அவங்களாச்சும் மது கல்யாணத்தில் சந்தோசமா இருக்கணும் . சோ, நாம அவங்க முன்னுக்கு சகஜமா நடந்துக்கலாம். உனக்கு புரியும்னு நம்புறேன் மாமா ''.
 

Author: KaNi
Article Title: 🌹பாகம் 25🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN