உன்னுள் என்னைக் காண்கிறேன் 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 6

கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லாமல் தேவ் ஒற்றை ஆளாகப் பிறந்திருந்தாலும் அவனைச் சுற்றி உறவுகளில் பலபேர் இருக்கிறார்கள். அதேபோல் நட்புவட்டத்திலும் நிறையநண்பர்கள் பெண் நண்பர்களும் அதிகம்.ஆனால்அவர்கள்எல்லாம் மேல்தட்டில் உள்ளவர்கள். நவநாகரீகத்தை நன்கு அறிந்தவர்கள். இன்னும் கேட்டால் வேண்டும் என்றே அவனிடம் வந்து பழகியவர்களும் உண்டு.

பல நாடுகளில் பல பெண்களுடன் கை கோர்த்துப் பழகியவனுக்கு அப்போதெல்லாம் வராத சுவாரசியம் மித்ராவிடம் வந்தது. அவன் பார்த்த பெண்களைவிட இவள் அப்படி ஒன்றும் அழகியில்லை. பின் ஏன்இவளிடம்மட்டும்அப்படி ஓர் சுவாரசியம் என்ற தேவ்வின் சிந்தனையைத் தடை செய்தது விஷ்வாவின் குரல்.

“ஓகே யூகேரி ஆன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்று அவன் கிளம்பிவிட, அவன் பின்னே செவிலியரும் கிளம்பிவிட்டாள். கிளம்பும் போது மித்ராவை அங்கிருந்த ஸோஃபாவில் அமர வைத்துவிட்டுச் செல்ல. என்னதான்விஷ்வாசொல்லியது காதில் விழுந்தாலும் விழாததைப் போல் மித்ராவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தேவ்.

அவன் அப்படி நிற்க, ‘நாம சரியாகத்தானே சொன்னோம்? ஏதாவது தவறாகச் சொல்லிட்டோமோ? பிறகு ஏன் இந்த லம்பா (ஹிந்தியில் லம்பா என்றால் நெட்டை என்று அர்த்தம்) இந்த முழி முழிக்குது? ஓருவேளை நாம பேசின இங்கிலீஷ் புரியலையோ... சரி அப்பத் தமிழ்லையே சொல்லிடுவோம்’ என்று மனதில் நினைத்தவள் “காலை வணக்கம் ஐயா“ என்றாள் பவ்யமாக.

அப்பொழுதும் அவனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ‘அடபாவத்தே இவ்வளவு பெரிய பணக்காரனா இருக்கான். ஆனா காது செவிடு போல. வர்ர அவசரத்தில் செவிட்டு மிஷின மறந்து வச்சிட்டு வந்திருப்பான்.ஆமாம் ஆமாம்... அப்படித்தான் இருக்கும். அதனால் தான் முகத்தில் நான் சொன்னதைக் கேட்டதற்கான எந்த அறிகுறியும் இல்ல. ஆமாம்டி மித்ரா, நீ சொல்றதுதான் சரி. அப்ப இவனுக்கு கேட்கும்படியா தான் நாம கத்தனும்’ என்று இவள் நினைத்திருக்க இவை எதுவும் தெரியாமல் அவளைக் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான் தேவ்.

தேவ்வுக்குத்தான் எதையும் முகத்திலோ இல்லை பார்வையிலோ வெளிக்காட்டும் பழக்கம் இல்லையே. அதனால் தான் அவன் அவளை சைட் அடிப்பது அவளுக்குத் தெரியாமல் போனது.

நினைத்ததை நிறைவேற்ற சற்று சத்தமாக“ஹலோ அண்ணா என்ன ஆச்சி? என் கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னிங்களாமே சொல்லுங்க அண்ணா என்ன பேசனும்” என்று வார்த்தைக்கு வார்த்தை அண்ணா போட.

அவள் முகத்தில் வந்துப் போன உணர்ச்சிகளில் லயித்திருந்த தேவ், எதற்கு அசைந்தானோ இல்லையோ அவள் அழைத்த அண்ணா என்ற சொல்லில் ஆயிரம் வோல்ட் ஷாக் அடித்த வேகத்தில் அப்போது தான் அசைந்தான். அதாவது ஒரு திடுக்கிட்ட பார்வைமட்டும். பின் நிமிர் கொண்ட நடையுடன் கால்களை எட்டிப்போட்டு அவள் எதிரிலிருந்த ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர அதுவே சொல்லியது நான் தான் இந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்று. பின் நிதானமாக, ”ஆமாம் நீ எத்தனை சப்ஜெக்ட் பெயில்” என்று கேட்க,
“----“

இப்போது முழிப்பது இவள் முறையானது.

“என்ன அப்ப எல்லா சப்ஜெக்டும் பெயிலா?”

“-----“இவன் என்ன சொல்றான்?

“எந்த ஸ்கூல் படிக்கற?”

“பெயிலா... ஸ்கூலா.. இல்ல...” என்று மித்ரா குறுக்கிட…

“தேவ்வோ அப்ப நீ கேட்ட காலேஜில் சீட்டுகிடைக்கலயா?” என்று அவளைப் பேசவிடாமல் தடுத்துக்கேட்க.

“ஐய்யோ இல்ல இல்ல சார். நீங்க தப்பா...”

“ஓ... அப்ப லவ் பெயிலியரா? நீ என்ன பிளஸ்டூ படிப்பியா? அதுக்குள்ள உனக்கு என்ன லவ் வேண்டியிருக்கு? அதுலையும் அந்த லவ்வுக்காக தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு? ஏன் உனக்கு மூளையே இல்லையா?ஓ... அப்ப அங்க காலிதான் போல” என்று முதலில் சற்றுக் கடுமையான குரலில் ஆரம்பித்தவன் இறுதியில் கேலியில் முடிக்க.

‘என்ன இவன் நம்பல பேசவே விடாம இவன் பாட்டுக்குப் பேசிட்டுப் போறான். இவனுக்காகாது கேட்காதுனு நினைச்சோம்?இல்லை இல்லை இவன் சரியான அரை மெண்டலு போல’ என்று அவள் மனதுக்குள் முணுமுணுக்க.

“ஏதோ தற்கொலை பண்ணிக்கிட்ட உன்னக் காப்பாற்றி இங்கு கொண்டுட்டு வந்து சேர்த்துட்டாங்க. டு யு நோ த வேல்யூ ஆப் திஸ் ஹாஸ்பிடல்? இங்குப் பெரிய பெரிய விஐபிஸ் மினிஸ்டர்ஸ் அவங்களுக்கு மட்டும்தான் இடம். பல லட்சங்கள் இங்க ஃபீஸாகக் கட்டனும்!”

“நீ யார்னே எங்களுக்குத் தெரியாது. உன்ன கொண்டு வந்து சேர்க்கும் போதுநான் இங்கில்ல. உன்னை மாதிரி ஊர் பெயர் தெரியாத அனாதைகள் யாரும் இங்கு வந்து சேர அனுமதியில்ல. மீறி சேர்த்தா இங்கிருக்குற பார்ட்னர்ஸ் கிட்ட அனுமதி வாங்கனும். அதான் சொன்னனே, நீ சேர்ந்தப்ப நான் இங்கில்ல. இருந்திருந்தா உங்கள மாதிரிப் பணம் இல்லாதவங்களை எல்லாம் நான் உள்ளயே சேர்த்திருக்கமாட்டன்.

இப்பப் போனான் இல்ல விஷ்வா? எல்லாம் அவன் பண்ற வேலை. பாவம் பரிதாபம் பார்த்து உன்னச் சேர்த்துட்டான். சரி நான் நேரடியா விஷயத்துகே வரேன். உன்னைக் கொண்டுட்டு வந்து சேர்த்தவங்க யாருனே தெரியாது அதற்குப்பிறகு அவங்க வரல. அவங்க நம்பருக்கு டிரை பண்ணா ரிங் போகுது எடுக்கல.

“ஸோ இப்ப நீ, உனக்கான பில்லக் கட்டிட்டுத்தான் போகனும். என்ன புரிஞ்சிதா மிஸ். மித்ரஹாசினி? மிஸ் தான...” இவை அனைத்தையும் திமிர், கர்வம், அலட்சியம் என்று கலந்து பேசியவன் இறுதியில் அவளை வம்பிழுக்கும் நோக்கில் முடித்தான்.

தேவ் பேசப் பேச ஆரம்பத்தில் சற்று அலட்சியமாக இருந்த மித்ரா போகப் போக‘ என்ன இவன் இப்படிப் பேசறான். முதல் முறையாக பார்க்கும்ஒரு பெண்ணிடம் இப்படியெல்லாம் கூடப் பேச முடியுமா. என்ன திமிர்... சகமனிதர்கள் என்ற மனிதாபிமானம் கூட இல்லையே. எப்படிப்பட்டஒரு உன்னதமான தொழிலைச் செய்துட்டு அதில் பணம் சம்பாதிக்கும் அரக்கனாக அல்லவா இருக்கிறான்.

அதுல வேற என்னப் பஞ்சப் பரதேசி அனாதைனு இல்ல சொல்லிட்டான்? என்னைப் பற்றி இவனுக்கு என்ன தெரியும்’ என்று வெகுண்டெழுந்தவள்,

“ஹலோ மிஸ்டர், இல்ல இல்ல உங்களை எல்லாம் மிஸ்டர் சொல்லிக் கூப்பிடக்கூடாது. சக மனிதர்களைப் பற்றி நினைக்காமல் மனிதாபிமானமேயில்லாம பணத்தாசைப் பிடித்த வேந்திரபூபதி அவர்களே என்ன சொன்னீங்க? ஏழைகளுக்கான ஆஸ்பிட்டல் இது இல்லையா?அவர்களுக்கில்லனா வேற யாருக்குமேயில்ல. தனி ஒருவனுக்கு உணவில்லனா ஜெகத்தினை அழித்திடுவோம்னு சொன்னான் பாரதி. அதே தான் இங்கேயும் ஏழைகளுக்கில்லாத ஆஸ்பிட்டல் வேற யாருக்குமில்ல.. ஸோ இழுத்து மூடி பெரிய பூட்டப் போடுங்க! ஓ... நீங்க செய்ய மாட்டிங்கயில்ல...”

“ஆமாம் நீங்க செய்ய மாட்டிங்க. ஆனாநான் இந்த ஆஸ்பிட்டல விட்டு வெளியில போன உடனே முதல் வேலையா உங்களப்பற்றியும் உங்க ஆஸ்பிட்டல் பற்றியும் வெளியில சொல்லி இந்த ஆஸ்பிட்டலையே இழுத்து மூடவைக்கிறேன்.”

“இன்னும் என்ன சொன்னிங்க? நான் அனாதையா? பஞ்சப் பரதேசியா? உங்க அளவுக்கு என்கிட்டப் பணம் இல்லனாலும் உங்க பில்லைக்கட்டும் அளவுக்குப்பணம் இருக்கு. சொந்தம்னு சொல்லிக்க என் தாத்தா இருக்கார். என்னப்பத்தி எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு எந்தஅவசியமும் இல்ல.ஆஸ்பிடலுக்கான பில்ல சொல்லுங்க நான் கட்டிட்டுப் போறேன்” என்று கோபத்தில் உடல் நடுங்க உதடு துடிக்க மேல் மூச்சு வாங்கக் கூறினாள் மித்ரா.

அவள் பேச ஆரம்பித்தது முதல் முடிக்கும் வரை அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவள் பேச்சைக் கேட்கவில்லை தேவ். அவள் சற்று மூச்சு வாங்கவே டேபிள்மேலிருந்த தண்ணீரைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றிஅவள்முன் நீட்ட,

அவளோ உன் கையால் நான் எதையும் வாங்கமாட்டேன் என்ற கொள்கைப்படி அவன் நீட்டியதை வாங்காமல் டேபிளில் இருந்த வேறொரு டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் குடிக்க. அதைப் பார்த்தவனுக்கோ கோபத்திற்குப் பதில் சிரிப்புதான் வந்தது.

இவ்வளவு நேரம் கேட்டுமே அவன் ஆஸ்பிடலுக்கான பில்லைக் கொடுக்காததினால் மித்ரா இன்னும் என்ன என்பது போல் அவன் முகத்தைப் பார்க்க அவனோ பார்வையால் அவளை விழுங்கிக்கொண்டிருந்தான்.

பார்க்கற பார்வையப் பாரு என்ற கோபத்திலும் அவனை எப்படி அழைப்பது என்ற எண்ணத்திலும் டேபிளை ஓங்கி ஒரு தட்டுதட்டியவள் “பில் கேட்டேன்” என்றுமிடுக்காக கைநீட்ட, அதில் கலைந்தவனோ என்ன என்பது போல் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்க.

“பில்ல்ல்ல்ல்...” என்றாள் மித்ரா அழுத்தமான கணீர்க் குரலில்.

தன் பிரீஃப்கேசைத் திறந்து அதிலிருந்த பில் சிலிப்பை அவள் முன் நகர்த்தி வைக்க.
அதைப் பார்த்த மித்ராவுக்கோ பெரும் அதிர்ச்சி. அது அவள் கண்களில் தெரிய கோபத்தில் முகம் சிவக்க, “என்ன மிஸ்டர் உங்க ஆஸ்பிட்டல்ல என்ன வேற்றுக் கிரகத்திலா இருக்கு? இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில்தானே இருக்கு. என்னதான் இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் இங்கு ஏழைகளும் இருக்காங்கதானே.

உங்க ஆஸ்பிடல்ல இரண்டுநாள் தங்கினதுக்கு ஆறரை லட்சம் பில்போட்டு இருக்கீங்க. என்ன அநியாயம்... நீங்க இந்த தொழில் செய்யவேண்டாம் மிஸ்டர். இதற்குப் பதில் நான் வேற ஒன்று சொல்லவா?”

தேவ்வோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கண்ணில் சுவாரசியத்துடன் சொல்லு என்பது போல் தலையசைக்க, “முகமெல்லாம் தெரியக்கூடாதுனு முகமூடி போட்டுட்டு யாருமே இல்லாத பூட்டியிருக்கற வீட்டுக்குள்ள பகல் கொள்ளை அடிப்பாங்களாமே. பேசாம நீ ஏன் அதைச் செய்யக்கூடாது? ஏன் சொல்லறனா இப்படி முகம் தெரிந்து மற்றவர்களிடம் கொள்ளை அடிக்கறதவிட முகமே தெரி..”

“ஏய்! யூ ஜஸ்ட் ஷட் அப்” என்று தேவ் கர்ஜிக்க, அதில் உடல் தூக்கிவாரிப்போட பேச்சை நிறுத்தினாள் மித்ரா.

“இங்க கட்சிக் கூட்டம் நடத்தலை உன் சொற்பொழிவைக் கேட்க. அதே மாதிரி உன் அறிவுரையும் எனக்குத் தேவையில்ல. நான் உன்கிட்ட முன்பே சொல்லிட்டேன் இது வி.ஐ.பிக்கான ஆஸ்பிடல்னு. அதற்கு நீ தங்கியிருக்கற இந்த ரூமைச் சுற்றிப் பார்த்தாலே உனக்கே தெரியும்.’

அவன் சொல்வது போல் கண்ணால் சுற்றிப் பார்த்ததில் அங்கு எல்.ஈ.டி.டிவி, ஃபிரிட்ஜ், ஸோஃபா, உயர்ரக திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்று சகலவசதிகளுடன் இருந்தது அந்த அறை. ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் ஆடம்பரம் தெரிந்தது. அனைத்தையும் பார்த்த மித்ரா இதெல்லாம் யாருக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் முகம் சுளிக்க.

“நான் ஏழை என்கிட்டப் பணமில்ல அதனால பணம் கொடுக்க முடியாதுனு சொல்ல வேண்டியதுதான” என்று அவள் தன்மானத்தை அவன் சீண்ட.


“போதும் மிஸ்டர் நான் ஏழையா இருக்கறதால ஒண்ணும் அசிங்கப்பட மாட்டன். உங்கப் பணத்த கொடுத்திடுவன்” மித்ரா

“எப்போ?” தேவ்

“இப்பயில்ல நான் ஊருக்குப் போனவுடனே தரேன். என்னை நீங்க நம்பலாம்” மித்ரா

“நம்பிக்கையா? உன்மேலயா? நெவர். அது கொஞ்சம் கூடயில்ல. உன் உடல்நிலை முழுவதும் சரியாகிடுச்சி. ஆனா இன்னும் கால்மட்டும் ஏன் சரியாகலை தெரியுமா...” என்று கேட்டு தேவ் அவளைப் பார்க்க, தெரியாது என்பது போல் அவள் தலையசைக்க,

“எனக்குப் பணத்தைக் கொடுக்காம ஏமாத்திட்டு நீ இங்கிருந்து தப்பிச்சி ஓடிடக்கூடாதுனு நான் தான் உன் காலை சரி பண்ணாமல் வச்சிருக்கேன். ஸோ எனக்குப் பணம் கொடுக்கும் வரை நீ என் கண்காணிப்பில் தான் இருந்தாக வேண்டும்” என்று நம்பிக்கையில்லாமல் கூற,

‘எவ்வளவு திமிர் ... பணம் கொடுக்காம ஓடிப் போய்டுவனா? அவ்வளவு தன்மானம் இல்லாதவளா நான்? ச்சே... இவனைப் போய் காது கேட்காது அரை மண்டயன் என்று நினைத்தோமே. இவன் ஒரு பணப்பேய் மட்டுமில்ல பணப்பித்துக் கொண்டவன். இனி இவன் கிட்டப் பேசிப் பிரயோஜனமில்ல’

“சரி மிஸ்டர் நீங்க சொல்றபடி பணம் கொடுக்கும் வரை நான் உங்க கண்காணிப்பிலே இருக்கேன். எனக்கும் தன்மானம் இருக்கு. பணம் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு போகமாட்டேன் போதுமா.”

“ஆனா, எங்க வீட்டுல இருக்கறவங்க இன்னும் ஒரு சிலரிடம் பேச நீங்களே வழி செய்ங்க. உங்களுக்குப் பணம் கொடுத்துட்டே போறேன். அதுவரை எனக்கிந்த அறை வேண்டாம் சாதாரண அறையே போதும்”மித்ரா

“நானும் இனி உன்னை விடறதாயில்லை” என்றான் தேவ். அதில் உன்னை விடறதா என்ற இடத்தில் சற்று அழுத்தம் கொடுத்து...

அதில் மித்ரா விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, இப்ப அவன் என்ன சொன்னான்? அப்படிச் சொல்லும்போது அவன் குரலில் என்னயிருந்தது?குரலைப்போல் அவன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை. அதுவே அவள் மனதிற்குள் ஒரு பயத்தை ஏற்படுத்த, “ஓகே ஐ வில் சீ யூ லேட்டர்” என்று கூறி அவள் பதிலுக்கு எதிர்பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினான் தேவ்.

அவன் சென்ற பிறகு நாம் இவன் கண்காணிப்பில் இருப்பது சரியா? இவன் பேச்சும் தோரணையும் சரியில்லையே. சரிநாம் என்ன இங்கேயேவா இருக்கப் போறோம்? அவன் பணத்தை அவனுக்குக் கொடுத்தவுடனே இங்கிருந்து போய்டுவோம். அப்படிப் போனபிறகு இவனைச் சும்மாவிடக் கூடாது ஏதாவது செய்யனும் என்று நினைத்து கொண்டாள் மித்ரா.

ஆனால், அவள் நினைத்ததற்கு நேர்மாறாக ஒவ்வொன்றாக அரங்கேற்றினான் தேவ். அவன் தாத்தா காலத்தில் விருந்தினர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த வீட்டில் தங்க வைத்திருந்தான் அவளை. அந்த வீட்டிற்கு வந்து இன்றோடு மூன்று தினங்கள் சென்றுவிட்டன. அவள் உடல் நிலையும் நன்கு தேறிவிட்டது. இன்று வரை அவள் தாத்தா சத்தியமூர்த்தி அவளை வந்து பார்க்கவில்லை. போனில்கூட அவளிடம் பேசவில்லை.

அந்த வீட்டிற்கு வந்த நாள் முதல், காலை மதியம், மாலை என்று அவளைப் பார்த்துப் போவது தேவ் மட்டுமே. என்று தேவ் அவளை ஆஸ்பிடலில் வந்து பார்த்துப் பேசினானோ அன்றே அவளை இந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

‘ஏன் தாத்தா பேசல? இன்னும் ஏன் என்னை வந்து பார்க்கல’ என்று தான் தங்கியிருந்த அறையின் ஜன்னலில் சாய்ந்து யோசிக்கையில் உள்ளே நுழைந்தான் தேவ்.

“என் கண்காணிப்பில் மட்டும் இல்லை இனி நான் சொல்றபடி தான் நீ கேட்கனும்” என்று கூறி அவள் முன் பத்திரத்தாளை நீட்ட, இவன் என்ன சொல்றான் ஒன்றும் புரியலையே என்ற யோசனையுடன் கைகள் நடுங்க அதை வாங்கிப் படித்தாள் மித்ரா.

படித்தவளுக்கோ பேர் அதிர்ச்சி. நிச்சயம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை. எப்படி இப்படியெல்லாம் நடந்தது என்று நினைத்ததில் அழுகை கோபம் ஆற்றாமை வெறுப்பு அருவருப்பு என்ற கலவையில் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தாள்.

“இப்ப இதற்கு என்ன சொல்லப்போற? அப்ப இனி நான் சொல்றபடி கேட்பதான...” என்று வழக்கம் போல் சற்று அலட்சியத்துடன் கூறினான் தேவ் .
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN