உன்னுள் என்னைக் காண்கிறேன் 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 10

பல அடிகள் வாங்க வாங்க ஓர் கட்டத்திற்கு மேல் அந்த அடிகளால் இறுகிப் போய் மறுத்துப் போய் விடுமாம் மனதும் மூளையும். இப்படித் தாங்கவே முடியாத கஷ்டமோ துன்பமோ வந்தால் மேற்கொண்டு சிந்திக்கும் திறனற்று இருக்குமாம் மூளையும்! சிந்தனை என்ன சிந்தனை?அப்படி நடக்குமிடத்தில் சிரிக்கவா?அழவா?இல்லை கோபம் கொள்ளவா?இதில் எந்த உணர்ச்சிக்கு நான் இப்போது கட்டளையிடவேண்டும் என்று தெரியாமல் ஸ்தம்பித்து நின்றுவிடுமாம். இன்று அதேநிலைதான் மித்ராவுக்கும். ‘இப்போ இவன் என்ன சொன்னான்?’ என்று ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தாள் மித்ரா.

எப்போதும் சரவெடி போல் வெடித்து வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவள் இப்போது இதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் கண்ணிமைக்கவும் மறந்து அவளிருந்த கோலத்தைப் பார்த்தவனுக்கோ ஓர்விநாடி ஒன்றும் புரியவில்லை. ‘இப்ப என்ன சொல்லிட்டேனு இவ இப்படி உட்கார்ந்திருக்கா?’ என்று அதற்கும் கோபப்பட்டவன்,
“ஏய்… இங்கே பார் ஏய்… உன்னத்தான்” என்றழைக்க அதற்கும் அவளிடம் அசைவில்லை. பொறுமை இழந்தவனாக அவளைப் பலம் கொண்ட மட்டும் உலுக்கினான் தேவ்.

தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல் விழித்து மலங்க மலங்க முழித்துக் கொண்டே அவன் முகம் பார்க்க, அதில் அடங்காத கோபத்துடன் திரும்பவும் “ஏய்… இப்ப நான் என்ன சொல்லிட்டனு இப்படி உட்கார்ந்திருக்க? நான் தான் தெளிவா சொல்லிட்டனே மனைவியா நடிக்கத்தான் போறனு! அப்ப அதுலயிருந்தே தெரிஞ்சிக்க வேண்டாம் நீ எனக்குப் பெயர் அளவில் தான் மனைவி என்று! இங்கப்பார் இப்ப சொல்றதுதான் நிஜம்...

எனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையாலும் உன் தாத்தாவை நீ காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தாலும் தான் நீயும் நடிக்கப்போற. நல்லா கேட்டுக்கோ நீயும் நானும் அப்படி நடிக்கத்தான் போறோமே தவிர உண்மையாயில்ல. என்னால் உனக்கும் உன் மானத்துக்கும் எந்தப் பிரச்சனையோ தொந்தரவோ அசிங்கமோ இல்லை கலங்கமோ ஏன் எந்தவொரு அவப் பெயரும்கூட வரவே வராது. இது உறுதி!

இப்படி நீயும் நானும் நடிப்பது வெளியுலகத்தில் யாருக்கும் தெரியாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவை எல்லாம் கொஞ்சநாள் தான். பிறகு நீ யாரோ நான் யாரோ. அப்படி நடிக்கும் பட்சத்தில் என் விரல் நுனி கூட உன் மேல் படாது. சோ எல்லாம் முடிந்து நீ போன பிறகு உனக்கு நல்ல வாழ்வே அமையும். அதற்கு நான் பொறுப்பு” என்று முதலில் சற்று கோபத்துடன் ஆரம்பித்து இறுதியில் தன்மையாகவே முடித்தான் தேவ்.

அவன் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்தவள் எதற்கு அசைந்தாளோ இல்லையோ அவன் வேறொரு வாழ்வு என்று சொன்ன இடத்தில் அசைந்தாள். எனக்கு இதற்குப் பிறகும் வேறொரு வாழ்வா? என்று விரக்தியாக நினைத்துக் கொண்டாள். அவள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாள் என்பதற்கு அறிகுறியாக அவள் முகத்தில் வந்துபோன விரக்தியின் சாயலே உணர்த்த,

“இப்போ உனக்கும் இக்கட்டான சூழ்நிலை. எனக்கும் அப்படித்தான். அதனால் நாம் இருவரும் இப்படி செய்வதில் தப்பு ஒன்றுமில்லை. எனக்குத் திருமணம் என்ற சொல்லே வெறுத்துப் போய்டிச்சி. நான் கடைசி வரை திருமணம் செய்யப்போவது இல்லை. நான் ஏதோ உனக்குத் தாலிக்கட்டாமல் உன்னுடன் திருமண வாழ்க்கை வாழத் திட்டம் போடுகிறேன் என்று நினைக்காதே. திருமணம் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டைச் சொன்னனே தவிர அதற்கும் உன்னை இவ்வாறு நடிக்கக் கேட்பதற்கும் எந்த சம்பந்தமுமில்ல பயப்படாத.

இந்த முடிவை நான் எடுத்தது தனிப்பட்ட என் ஒருவனுக்காகயில்ல. இப்படிச் செய்வதால் என்னைச் சார்ந்தவர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் சந்தோஷம். நீ இப்படிச் செய்வதால் உன் தாத்தாவுக்கும் நிம்மதி. அது மட்டும் இல்லை அவர் சாகாமல் தடுக்கவும் உன்னால் முடியும்.

இதனால் பல நன்மைகள் தான் இருக்கே தவிர தீமைகள் எதுவுமில்ல. சோ நல்லா யோசி இன்றிரவு முழுக்க டைம் எடுத்துக்க. நாளைக்குக் காலையில் உன் முடிவைச் சொல்லு. அப்போது தான் காலை பத்து மணிக்குள் உன் தாத்தா கட்ட வேண்டியப் பணத்தைக் கட்டமுடியும். எந்த முடிவாக இருந்தாலும் எனக்குச் சம்மதம். நீ இல்லனாலும் என் தேவைக்கு வேறு ஒரு பெண்ணை நான் தேடிப்பேன். அதனால் நஷ்டம் எனக்கில்ல உனக்கு தான். ஸோ நல்ல முடிவா எடு.

இன்றிரவு நான் இந்த வீட்டில் தான் தங்கப் போறேன். காலையில் உன் முடிவைச் சொன்னப் பிறகு என் பி.ஏவை விட்டு உன் தாத்தா சம்மந்தப்பட்டது அனைத்தையும் முடிப்பது என் பொறுப்பு“ என்று அவளைப் பேசவே விடாமல் பேசியவன் முடிவு உன்கையில் என்பது போல் தன்னுடைய நீண்ட உரையை முடித்துக் கொண்டுச் சென்றான் தேவ்.

தேவ் இப்படிச் சொன்னதன் மூலம் மித்ராதன் தாத்தாவுக்காக இதற்குச் சம்மதித்துத் தான் ஆக வேண்டும் என்பதை மறைமுகமாக அவன் உணர்த்தி விட்டுச் செல்வதை அவள் புரிந்து கொண்டாள். ‘முடிந்தது எல்லாம் முடிந்தது. எந்த வாழ்வு எனக்குக் கிடைக்கக்கூடாது என்பதற்காக ஓடி ஒளிந்தேனோ, எந்தப் பெயரை வாங்கக்கூடாது என்று நினைத்தேனோ இனி வாழ்நாள் முழுக்க அந்த வாழ்வும் அந்தப் பெயரும்தான் நிலைக்கப் போகுது. இனி நான் என்ன செய்ய?

என் வாழ்நாளில் எந்தவொரு ஆண்மகனுக்கோ இல்லை திருமணத்திற்கோ இடமில்லை என்ற இறுமாப்பிலிருந்ததால் எனக்குக் கிடைத்த தண்டனையா இது?இப்போது நான் என்ன முடிவெடுக்க? தாய் தந்தையரை இழந்து அநாதையாக நின்ற என்னைப் பாசத்தைப் பொழிந்துப் பாதுகாத்துக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து இன்று சமூகத்தில் எதையும் எதிர் கொள்ளும் தைரியமிக்க படித்தப் பெண்ணாக உலா வரக் காரணமாகயிருந்த தாத்தாவைக் காப்பாற்ற நான் இதைச் செய்து தான் ஆகவேண்டுமா? இதற்கு வேறு வழியேயில்லையா?

இல்லை என்று தெரிந்த பிறகு இருக்கிறதா என்று யோசித்து என்ன பயன்? பேசாமல் நானும் தாத்தாவுடனே என் வாழ்வை முடித்துக் கொண்டால் என்ன? ச்சே.. ச்சே…முன்பே நடக்கக் கூடாதது என் வாழ்க்கையில் நடந்தப்பவே நான் சாகணும்னு நினைக்கல. அந்த துரோகத்தையே தாங்கித் தாண்டி நான் வந்துட்டேன்.

இப்போ இதற்காகவா நாம சாகணும்? அவன் தான் சொல்றானே, உனக்கோ உன் மானத்துக்கோ என்னால் எந்தப் பிரச்சனையும் வராதுனு. பிறகென்ன அப்படியே ஏதாவது தப்பா நெருங்கினால் அவனக் குத்திப் போட்டுட்டு ஜெயிலில் போய் உட்கார்ந்துட வேண்டியது தான்…’

உளியானது தொடர்ந்து கல்லைப் பொலிந்து வலிகள் தந்தாலும் அந்தக் கல்லானது அதைத் தாங்கிக் கொள்கிறது. பதிலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. மாறாக அழகிய சிற்பமாக வெளிப்படுகிறது. அவ்வாறே அந்தக் கடவுளும் தன்னைப் பெண்ணாகப் படைத்தாலும் அதை மறந்து ஒரு கல்லாக எண்ணிவிட்டானோ? அதனால் தான் துன்பம் எனும் உளியால் தொடர்ந்து எனக்கு வலிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறானோ?

ஆனால் அப்படி ஒரு அழகிய சிற்பமாக (பண்பட்ட மனமாக) மாற என்னத் தேவை இப்போதிருக்கிறது? நான் தான் மனதளவில் எப்போதோ வைரம் பாய்ந்தவளாக பண்பட்டவளாக மாறிவிட்டேனே? அப்படியிருந்தும் எனக்கு வலிகள் தருவதை நிறுத்துவதில் அந்தக் கடவுளுக்கும் உடன்பாடு இல்லை போலும். கொடு எவ்வளவு வேண்டுமானாலும் கொடு நான் தளரமாட்டேன். வீழ்வேனென்று நினைத்தாயோ? இல்லை மீண்டு வருவேன்…’

இப்படித் தன் மனதில் உறுதி மேற்கொண்டவள் இறுதியாக, ‘சரி இப்போது தாத்தாவை இதிலிருந்து மீட்போம். எல்லாம் முடிந்தப் பிறகு தாத்தாவை அழைத்துக் கொண்டு எங்காவது ஊரை விட்டுப் போய்டுவோம்’ என்று முடிவெடுத்தாள். முடிவெடுத்தப்பின் காலை வரை ஏன் காத்திருக்கவேண்டும்? இப்போதே தன் முடிவைச் சொல்லி விடும் வேகத்தில் அவன் அறை நோக்கிக் கிளம்பியவள் நேரம் பார்க்க இரவு எட்டு ஐம்பது என்று காட்டியது.

இந்நேரம் அவன் அறை நோக்கிப் போவது சரியா? ஒருவேளை அவன் தூங்கி இருப்பானோ? க்கும்.. அவன் தான் பிசினெஸ்மேக்னெட் ஆச்சே! எப்படி இவ்ளோ சீக்கிரம் தூங்குவான்? கண்டிப்பா இந்நேரம் லாப்டாப்ல எதையாவது நோண்டிகிட்டுருப்பான்! எதற்கும் பார்த்து விடுவோம் என்ற முடிவுடன் வெளியே வந்தாள் மித்ரா. எதிர்ப்பட்ட வேலைக்காரப் பெண்ணிடம் அவன் அறையைக் கேட்டு அறிந்தவள் அவன் இன்னும் தூங்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின் அவன் அறைக் கதவைத் தட்டினாள் மித்ரா.

சிறிது நேரத்திலே கதவு திறக்கப்பட இரவு உறங்கும் வேளையில் அணியும் கையில்லா பனியன் மற்றும் ஷார்ட்ஸுடன் இருந்தான் தேவ். அவளைப் பார்த்த பிறகும் எதுவும் பேசாமல் என்ன என்ற கேள்வியுடன் அவன் நிற்க,

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்“ மித்ரா.

“உள்ளே வா” என்றவன் அவளுக்கு வழி விட்டு நகர,

உள்ளே நுழைந்தவளோ அங்குப் பார்த்தக் காட்சிகளில் கண்களை அகல விரித்தாள்! பின்னே செவன் ஸ்டார் ஹோட்டல் வி.ஐ.பிக்கான சூட் போல் சகலவசதிகளுடன் விலையுயர்ந்தப் பொருட்களைக் கொண்டு ஜொலித்தது அந்த அறை.

கதவைச் சாத்தி விட்டு வந்தவன், “ஆ..”என்று வாய் பிளந்து நின்றவளைப் பார்த்து “உட்கார் இதோ வருகிறேன்” என்று உடைமாற்றும் அறைக்குச் சென்றான். அவன் குரலில் கலைந்தவள் என்ன இப்படி வாய் பிளந்து நின்று விட்டோம் என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு ஸோஃபாவில் அமர்ந்தாள் மித்ரா.

வேறு உடை மாற்றி வெளியே வந்து கட்டிலில் ஒரு காலை மடக்கி அமர்ந்து திரும்பவும் லேப்டாப்பில் வேலையைத் தொடர்தவனை ஆராய்ந்து கொண்டிருந்தாள் மித்ரா.

அகன்ற நெற்றி அதை மறைக்க நெற்றியில் புரளும் கேசம். வில் ஏறிய புருவங்கள், கூர் நாசி. அதற்குக் கீழே ஆண்மைக்கே உரிய கற்றையான மீசை. எப்போதும் பிடிவாதத்தைக் காட்டும் உதடுகள். பார்ப்போரை மயக்கும் கண்கள். மொத்தத்தில் காண்போரை வசீகரிக்கும் முகம். நல்ல உடற்கட்டு, பணத்துக்கோ பஞ்சமில்லை. இப்படி எல்லாம் இருக்கும் இவனுக்கு இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை?

ஒருவேளை காதல் தோல்வியோ? அதனால் தான் திருமணத்தை வெறுக்கிறானோ? என்று அவனைக் கண்களால் அளந்து மனதால் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் மித்ரா. தன் வேலையை முடித்துக்கொண்டு அவள் எதிரில் வந்து அமர்ந்தவன், “ம் இப்போ சொல்லு என்ன விஷயம்“ என்ற கேட்க எடுத்தவுடனையே “நீங்க சொல்ற மாதிரி எங்க தாத்தா ஒண்ணும் ஜெயிலுக்குப் போக மாட்டார். எங்களுக்கும் நிறைய சொந்தக்காரர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட போய் இப்போ கேட்டாலும் பண உதவி செய்வாங்க.”

“என்ன, நீங்க கேட்கற மாதிரி உங்களுக்குப் பொண்ணு கிடைக்கறது தான் கஷ்டம். எல்லாம் முடிந்தப் பிறகு எந்தப் பிரச்சனையும் கொடுக்காம என்னை மாதிரி யாரும் விலகமாட்டாங்க’ என்று தன் சம்மதத்தை மறைமுகமாகக் கூறினாள் மித்ரா. அவனோ கண்ணில் கூர்மையுடன், “அதாவது உனக்குச் சம்மதம்னு சொல்ற. அப்படித்தானே?”

“நான் எப்போ சம்மதம்னு சொன்னேன்?...”என்று இழுத்தவள் அவன் கேலிப்பார்வையில் கப்பென்று அடங்கி, “உங்களுக்கும் ஒரு தேவை எனக்கும் ஒரு தேவை. ஸோ நான் சம்மதிக்கிறேன்” என்று சொன்னவள் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “ஆனா என்னுடைய கவுரவத்துக்கோ மரியாதைக்கோ இல்லை என் பெண்மைக்கோ எதிராக எது நடந்தாலும் நான் சும்மாயிருக்கமாட்டேன். பிறகு எது நடந்தாலும் அதற்கு இந்த மித்ரா பொறுப்பு இல்லை” என்று மிரட்டல்விட

அந்த நிமிர்வில் வியந்தவன் “சரி நீ சொன்ன அனைத்துக்கும் எனக்குச் சம்மதம். அப்போ சொன்னதைத் தான் இப்போதும் சொல்றேன். என்விரல் நகம் கூட உன் மேல் படாது” என்று உறுதியளித்தவன் பின் நிதானமாக “நீயும் முழு மனசா தானே சம்மதிக்குற?” என்று கேட்க.

அவள் “ஆம்” என்று கூற, எழுந்துச் சென்றவனோ பிரீப்ஃகேசிலிருந்து இரண்டு பத்திரத்தைக் கொண்டுவந்து அவள் முன்வைத்துப் “படிச்சிப் பார்த்துட்டுக் கையெழுத்துப் போடு” என்றான்.

அவள் என்னவென்று பார்க்க, ஒன்று தேவ் அவளின் தாத்தாவுக்குக் கொடுக்கும் பணத்துக்கு மித்ரா தான் பொறுப்பு. அந்தப் பணத்தை அவள் தேவ்விடம் வேலை செய்து அவன் கொடுக்கும் சம்பளத்தில் கழிக்க வேண்டும். அதுவும் தேவ் சொல்லும்காலம் வரை. இடையில் இந்த வேலையிலிருந்து விலகினாலோ இல்லை ஊரை விட்டுக் காணாமல் போனாலோ அவள் மீது தேவ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இவை அனைத்தும் அவள் முழுமனதுடன் சுயநினைவுடன் ஒத்துக் கொண்டுப் போடும் கையெழுத்து. அதைப் படித்து சிறிதும் யோசிக்காமல் உடனே கையெழுத்துப் போட்டாள். இரண்டாவதில் இருந்தது விவாகரத்துப் பத்திரம். அவள் தன் முழு சம்மதத்துடன் தேவ்வை விட்டுப் பிரிந்துச் செல்ல அவன் மனைவியாக கையெழுத்திட வேண்டும்.

இங்கு மட்டும் சிறு தடுமாற்றம் மித்ராவுக்கு. ‘அப்போ இவன் சட்டப்படித் திருமணம் செய்யப் போறானா? சும்மா நடிப்புக்கு எதுக்கு சட்டப்படி?’ என்று மனதில் பட்டதை அவனிடமே கேட்க, “சட்டப்படி சில பேப்பர்ஸ் வெச்சாதான் எனக்கான சிக்கல் தீரும். ஆனாலும் இது பொய்யான திருமணம் தான்” என்று மீண்டும் வலியுறுத்தினான் தேவ்.

‘நமக்கு எப்போ திருமணம் நடந்தது விவாகரத்துப் பெற? திருமணமே நடக்காம விவாகரத்துக் கேட்பவன் உலகத்திலே இவனாக மட்டும் தான் இருப்பான். அப்படி நடக்காத திருமணத்திற்கு விவாகரத்துத் தரச் சம்மதித்துக் கையெழுத்துப் போடும் முட்டாளும் இந்த உலகத்தில் நானாக மட்டுமாக தான் இருப்பேன்’ என்று மனதில் கசந்து கொண்டே கையெழுத்திட்டாள் மித்ரா.

பின் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “கடைசியா ஒண்ணு, நாளைக்கே என் தாத்தாவை நான் பார்க்கணும். ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்க,

“நிச்சயம் பார்க்கலாம். ஆனால் இந்த விநாடியிலிருந்து நீ என் மனைவி. அதாவது பெயரளவில். ஸோ அதற்கான மதிப்போடும் மரியாதையோடும் தான் நீ அங்கேப் போகணும். அதற்கு நான் உன் கூட வரணும். நம்மளோட நாடகத்தை உன் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போமே என்ன சொல்ற?” தேவ்.

‘உலக்கைக்குத் தலையைக் கொடுத்தாச்சி. பிறகு இடிக்குப் பயந்தால் முடியுமா?’ அவள் சரி என்று தலை அசைத்து விட்டுக் கதவை நெருங்குகையில்..

“குட்நைட் மித்ரா! காலையில் சந்திப்போம்” என்றான் வசீகரிக்கும் புன்னகையுடன் உற்சாகம் நிறைந்த குரலில் தேவ்! அந்தக் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இளிப்பைப் பாரு நீ ஏன் இளிக்கமாட்ட? அதான் நீ நினைத்தபடி எல்லாம் நடக்குதே” என்று மனதில் கருவிக்கொண்டே இயந்திரமாகப் பதிலுக்கு குட் நைட் சொல்லிச் சென்றாள் அவள்.

கட்டிலில் படுத்து யோசிக்க ஆரம்பித்தாள் மித்ரா. ‘நாளை தாத்தாவைப் பார்க்கப்போறோம் சந்தோஷம் தான்! ஆனால் அவர் பேத்தியாக மட்டுமில்லாமல் தேவ்வின் மனைவியாக. அப்படிப் போய் நிற்கும் போது அதை தாத்தா எப்படி எடுத்துக் கொள்வார்? இது உண்மையான காதல் என்றால் கூட அவர் பேசுவதைத் தாங்கிக் கொள்ளளாம். திட்டுவாரோ இல்லை என் முகத்திலே முழிக்காதே என்று வெறுத்து ஒதுக்குவாரோ? உன் உறவே வேண்டாம் என்று என்னைத் தலை முழிகிடுவாரோ?

ஏற்கனவே நான் செய்த தவறால் அவர் முகத்தில் முழிக்க முடியாமல் கூனிக் குறுகிபோயிருக்கேன். இப்போ இது வேறையா? அவர் முகத்தில் நான் எப்படி முழிப்பேன்? அவர் என்ன நினைப்பார்? உண்மையா நீ காதலித்துத் தான் திருமணம் செய்தியா இல்லை என்னைக் காப்பாற்ற இப்படி ஒரு வாழ்வில் சிக்கிக்கிட்டியா என்று சற்று யோசித்துக் கண்டுபிடித்துக் கேட்பாரோ?…

நாளைக்கு நாம் அவரை யோசிக்கவே விடக் கூடாது. எப்படியாவது அவர் கேள்விகளுக்குத் தடங்கல் இல்லாமல் பதில் சொல்லிச் சமாளிக்க வேண்டும்.

பெரியப்பா பெரியம்மா என்ன சொல்லப் போறாங்களோ? ஏற்கனவே அவங்களுக்கு என்னப் புடிக்காது. இப்ப இன்னும் என் மேல வெறுப்பு அதிகமாகப் போகுது. என்னை நிற்க வெச்சி கேள்வி கேட்பாங்க, காறித்துப்புவாங்க. கடவுளே நாளை நடக்கவிருக்கும் அனைத்தும் தாங்கிக்கிறதுக்கும் சமாளிக்கறதுக்கும் சக்தியக் குடு” என்று வேண்டியவள் அப்படியே தூங்கிப் போனாள்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN