ஈரவிழிகள் 18

shankamal68

New member
நிஜமாவே இந்த குட்டி குமாரனோட பொண்ணு தானோ ?இந்த வள்ளியும் இளா இளா னு பிதற்றுரா ?
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிஜமாவே இந்த குட்டி குமாரனோட பொண்ணு தானோ ?இந்த வள்ளியும் இளா இளா னு பிதற்றுரா ?
நாங்க சொல்ல மாட்டோம்😁😁😁 நன்றி க்கா🤗🤗🤗💚💚💚🌺🌺🌺
 

P Bargavi

Member
அதன்பின் அஸ்மிக்கு சகலத்துக்கும் தந்தையென்று ஆனது. பெரிய அழுகையாகட்டும்... சின்ன சலுகையாகட்டும்... அழகிய கொஞ்சலாகட்டும்... தளிர் நடையாகட்டும்... உறக்கமாகட்டும் எல்லாவற்றுக்கும் அவளுக்கு தந்தை வேண்டும். அவனும் குழந்தையின் ஏக்கத்தை அறிந்து கொண்டவனாச்சே.. அதனால் அவனின் பாசம் வெளிப்பட.. முன்புபோல் அவனால் ஒதுங்க முடியவில்லை. இப்போதெல்லாம் தாய் கூட அஸ்மிக்கு இரண்டாவது தான். வள்ளியும்... தந்தை மகள் இருவரின் உலகத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டாள். அவளின் மனவலிக்கு இப்போதெல்லாம் அவளுக்கு தனிமையும்.. உடல் வலிக்க உழைக்கும் உழைப்பும் தான் தேவையாக இருந்தது.

தந்தையின் சலுகை கிடைக்கவும்... முன்பை விட படு சுட்டியாய் இருந்தாள் சின்னவள். தந்தை பேண்ட் சட்டை உடுத்தினால் எங்கு செல்வான்... அதே வேட்டி என்றால் எங்கே செல்வான்... வீட்டில் அணியும் இலகுவான உடை உடுத்தினால் எங்கிருப்பான் இப்படி எல்லாம் அத்துப்படி அந்த சின்ன வாண்டுக்கு. அப்படி தான் ஒரு நாள் இவன் கழனிக்குச் செல்ல வேட்டி சட்டையில் வெளியே வர... ஓடி வந்து தந்தையின் காலை கட்டிக் கொண்டாள் அவள்.

மகளைத் தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்.. தன் மடியில் இருத்திக் கொண்டு தானும் உண்டு... மகளுக்கும் ஊட்டி... இவன் கிளம்ப எத்தனிக்க... “ப்பாஆஆஆஆஆ...” அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அதிகார குரலில் தன் பிடிவாதத்தைக் காட்டியது இந்த மான் குட்டி. அவளுக்கு தான் தந்தை எங்கு செல்லவிருக்கிறான் என்பது தெரியுமே..

“பட்டு... அப்பாவுக்கு இன்னைக்கு காட்டுலே நெறைய சோலி இருக்கு டா...” இவனின் சமாதானம் எதுவும் மகளை எட்டியதாக தெரியவில்லை. எட்டியிருந்தால் அவள் தான் தன் பிடியை விட்டிருப்பாளே...

“பட்டு.. அப்பா ட்ரூஊஊஊஊஉ போறேன் டா... ரொம்ப தூரம்...” பாவனையோடு சொல்லி பொய்யாய் மகளை சமாளித்தவன் பின்
“அக்கா பட்டுவை... புடி...” இவன் தமக்கையை அழைக்க... அவள் தான் குமரனின் மகளாச்சே! அவளுக்கா தெரியாது... தந்தையின் சமாளிப்பை உடைக்க... உடனே அவள் தன் அஸ்திரத்தை எடுத்துக் கொண்டாள். உதடு பிதுங்க... ஒரு கண்ணை மூடி... மறு கண்ணைத் திருடனைப் போல் அரை கண் பார்வையில் வெம்ப ஆரம்பிக்க... போதுமே... இப்படி மகள் செய்தால் உலகத்தில் உள்ள அனைத்து தந்தைமார்களுமே சரணாகதியாவார்கள் என்றால்.. குமரன் மட்டும் எம்மாத்திரம்?..

உடனே அவன்... “சரி... சரி... என் செல்லம் இல்ல... நீங்க அப்பா கூட வாங்க... ஆனா அங்க வந்து சமத்தா இருக்கனும் சரியா” என்று இவன் மகளுக்கு பச்சை கொடியைக் காட்டவும்.... தன் வழமை போல தந்தையின் கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்தது அந்த முயல் குட்டி. பின்னே… காட்டுக்கு சென்றால் எவ்வளவு பட்டாம்பூச்சியைப் பார்க்கலாம். அது மட்டுமா... அதையெல்லாம் தந்தையின் கழுத்தில் அமர்ந்து சவாரி செய்தபடி... தந்தையை விட உயரத்திலிருந்து அவள் பார்க்கும் பட்டாம்பூச்சிகளை விரட்டலாமே... கை கொட்டி சிரிக்கலாமே...

“அக்கா, இன்னைக்கு காட்டில் வெங்காய அறுப்பு இருக்கு. எனக்கு நிக்க கூட நேரம் இருக்காது. நீயும் செத்த கூட வந்தா... பட்டுவை கவனிச்சிப்ப... மதியம் வெங்காய மூட்டைய எல்லாம் லோடு ஏத்தின பெறகு... கெளம்பி வந்திடலாம்...” அவன் தமக்கையிடம் யோசனை சொல்ல

இவளுக்கு அது சரி என்று பட்டதால் இவள் வள்ளியைக் காண... “நீங்க கிளம்புங்க அண்ணி... மதியம் உங்க இரண்டு பேருக்கும் சாப்பாட்டை பூரணி கிட்ட கொடுத்து அனுப்பறேன்…” வள்ளி சொல்ல

“ஏன்.. வள்ளி நீயும் வாயேன்… நீயும் தான் நம்ம காட்டை எல்லாம் பார்த்ததில்லையே…”

வள்ளிக்குள் தயக்கம்… அன்று குழந்தைக்காக கணவனுடன் சென்றாள்… அதற்காக இப்போதும் அவன் கண்பட இருப்பதா என்ற யோசனை.
“இல்லை அண்ணி… இங்க வேலை இருக்கே…” இவள் மறுக்க

“அதெல்லாம் முடியாது நீ வா.. சரி இப்படி செய்.. சாப்பாடு கொடுத்தனுப்பும் போது.. பூரணியோட நீயும் வந்துடு… நாம அந்தி சாயற வரைக்கும் இருந்துட்டு வரலாம்… நீ வரல நான் இங்க வந்துடுவேன்…” என்று சொன்ன மீனாட்சியின் குரலில் பிடிவாதத்தைக் கண்டவள்…

“சரி.. சரி.. அண்ணி.. நீங்க இங்க வர மெனக்கெட வேணாம்… நான் காட்டுக்கே வந்துடறேன்... மாமா தான் ஊருக்குப் போயிருக்காரே.. அதனால வந்துடறேங்க...” இவளும் தன் சம்மதத்தை அரை மனதாய் சொல்ல...

கிளம்பும் போது கூட தாய் வராததை... அஸ்மி தன் கருத்தில் கொள்ளவில்லை. மகிழ்ச்சியுடன் கையாட்டி.. ஆர்ப்பரித்தபடி மகள் டாடா சொல்லவும்... ஏதோ தான் அனாதையாகி விட்டது போல தோன்றியது வள்ளிக்கு.

காட்டில் இவன் வருவதற்கு முன்னதாகவே வேலைகள் ஆயத்தமாய் இருந்தது. பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த நிலத்தில்... வெங்காய அறுவடையை ஒரு பக்கம் ஆரம்பித்திருக்க... மறு பக்க மைதானத்தில்... அதன் தரங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். இன்னும் சிலர் தரம் பிரித்த வெங்காயங்களை மூட்டை கட்ட சாக்குப் பைகளை சீர் செய்து கொண்டிருந்தார்கள்.

இது தான் குமரனின் வேலைத்திறன். இத்தனை பெரிய நிலத்தில் பத்தும் பத்தாமல் ஆட்களை வேலைக்கு அமர்த்தி... அவர்களிடம் உழைப்பை பிடுங்கிக் கொண்டு... கைக்கும் வாய்க்குமாய் பத்தாமல் சம்பளத்தை எண்ணி எண்ணி கொடுக்க மாட்டான் குமரன். காடு முழுக்க ஆட்களைப் போட்டு வேலை வாங்குவான்... அதனால் அவனின் வேலைகள் அரை நாளில் முடிந்தாலும் சரி... முழு நாளுக்கான கூலியை எண்ணி... இன்முகத்துடன் கொடுத்து விடுவான். இதனாலேயே குமரன் காட்டில் வேலை என்றால்... நீயா நானா என்று ஆட்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து தங்கள் காடு போல் வேலைகளை செய்வார்கள்.

வந்ததும் வேறு உடைக்கு மாறியவன்... காட்டில் தானும் வேலை செய்ய இறங்கி விட்டான்... இது தான் குமரன். ஏதோ மேம்போக்காய் நின்று வேலை வாங்குபவன் இல்லை அவன். ஏன்... மீனாட்சி கூட இப்படி தான்... இன்று அஸ்மி இருப்பதால் அவள் காட்டில் இறங்கவில்லை. இல்லை என்றால் அவள் தான் முதல் ஆளாய்.. புடவையை இழுத்து சொருகிக் கொண்டு வேலையில் இறங்கி இருப்பாள்.

அதன் பிறகு பாட்டும்... பேச்சும்... கேலியும் சிரிப்புமாய்... அங்கு வேலைகள் நடந்தேறியது. சூரியன் உச்சிக்கு ஏற... அப்போது தான் சற்றே கண்ணயர்ந்தாள் அஸ்மி. அவளை மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த புடவையால் ஆன தூளியில்... படுக்க வைத்த மீனாட்சி... பின் முந்தியை சொருகிக் கொண்டு காட்டில் இறங்க எத்தனிக்க... அந்நேரம் இவர்களின் வரப்பை மிதித்தாள் வள்ளி. அவளுக்கு பின்னே உணவுக் கூடையுடன் பூரணி பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

“வந்துட்டியா... இப்போ தான் பட்டு உறங்கினா. சரி நாம செத்த வயல்ல எறங்கி சோலிய பாக்கலாம்னு நெனச்சு எறங்கப் போனேன்... அது எப்படி தான்.. எந்த பட்சி தான் உன் கிட்ட சொல்லுமோ... தோ வந்து நிக்கிற.. வீட்டுலயும் என்னைய ஒரு வேலையும் செய்ய விடறது இல்ல. தோ.. இப்போ இங்கேயுமா?” என்று தம்பி மனைவியைப் பார்த்து சலித்துக் கொண்ட மீனாட்சியின் முகத்தில் பெருமிதம் தான் தாண்டவம் ஆடியது.

“இப்படி ஒரு தம்பி பொண்டாட்டி கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் மீனாட்சி. அதுக்கு சந்தோசப்படாம... இப்படி அந்த புள்ளைய குறை சொல்ற! எனக்கும் தான் வந்து வாய்ச்சிருக்கே... ம்ஹும்! அதுக்கெல்லாம் ஒரு குடுப்பன வேணும்..” அங்கிருந்த உறவுக்கார பெண்ணொருத்தி அங்கலாய்த்துக் கொள்ள...

இருவருக்கும் பொதுவாய் மெல்லிய புன்னகையை சிந்திய வள்ளி...“ என்ன அண்ணி பட்டு தூங்கிட்டாளா...” என்று கேட்க

பெரியவள் ஆமாம் என்று சொல்ல எத்தனித்த நேரம்.. தூளியில் படுத்திருந்த படியே.. புடவையை விலக்கி.. “ம்மா...” என்று அஸ்மி தாயை அழைத்து தான் தூங்கவில்லை என்பதைக் காட்ட..

அதில்... “பாருடா... ஹே.. போக்கிரி... அப்போ இம்புட்டு நேரம் தூங்குனாப்ல பாவ்லா செஞ்சியா நீ...உன்னைய...” என்று செல்லமாய் அஸ்மியை மிரட்டிய மீனாட்சி...

“உறக்கத்தில உன் குரல் கேட்டதும் எழுந்துட்டா வள்ளி..” என்று இவள் தம்பி மனைவியிடம் சொல்ல...

இவளுக்கோ மனதில் காலையிலிருந்து ஏற்பட்ட சுணக்கம் மறைய... இப்போது இதம் பரவியது. இவள் மகளிடம் சென்று தூளியை விலக்கி மகளைக் கண்டு, “பட்டு..” என்று கொஞ்சி அழைக்க.. அதில் அவளோ தன் கொலுசு காலால்

“ஜல்... ஜல்...” என்றபடி ஆர்ப்பரித்தவள்... பின் தாயை நோக்கி இரு கையையும் உயர்த்தி.. “அம்மா...” என்று குதூகலிக்க... அந்த செயலில் மகளை வாரி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் வள்ளி.

பின் வேலையாட்கள் அனைவரும் உணவுக்கு அமர... குமரனும் மேலே வந்தான்... தந்தையைக் கண்டதும் அஸ்மி அவனிடம் தாவ... “குளிச்சிட்டு வரேன் டா... அம்மா கூட இருங்க..” இயல்பாய் சொன்னவன் விலக...

“ப்பா.... நானு.. நானு...” அதாவது தானும் குளிக்க வருவதாக மகள் சிணுங்க...

“தொட்டி பக்கம் கூப்டுகிட்டு வா.. வள்ளி...” மனைவியிடம் சொன்னவன் முன்னே நடக்க... மகளுக்கு துவாலை எடுத்துக் கொண்டு குழந்தையுடன் அவன் பின்னே நடந்தாள் இவள். தான் முதலில் தண்ணீர் தொட்டியில் இறங்கி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன்.. பின் மகளை வாங்கி குளிக்க வைக்க... அதில் தந்தையும், மகளும் தண்ணீரில் ஏகத்துக்கு ஆட்டம் போட்டனர். அதில், சற்று நேரம் கழித்து தான் மனைவி இங்கேயே நின்று கொண்டிருப்பதைக் கண்டவன், “நாங்க ரெண்டு பேரும் வரோம்... நீ போய் அக்காவுக்கு சாப்பாடு எடுத்து வை...” அவன் சொல்ல... கையிலிருந்த துவாலையை மரக்கிளை மேலே வைத்து விட்டு... அங்கிருந்து விலகினாள் வள்ளி.

வந்தவள், மீனாட்சிக்கு உணவை எடுத்து வைக்க... அவளோ, “குமரன் வந்துடட்டுமே வள்ளி..” என்க...

“அவங்க வர நேரமாகும் போல அண்ணி. அதான் உங்களை சாப்பிட சொன்னார். பிறகு வந்தார்ன்னா சத்தம் போடுவார் அண்ணி... சாப்பிடுங்க...” என்றபடி இவள் உணவைப் பரிமாற...

வள்ளி நினைத்தது போலவே... தாமதமாகத்தான் மகளுடன் வந்தான் குமரன். இவளோ மகளுக்கு துடைத்து விட்டு பவுடர் பூச அழைக்க... அஸ்மியோ தந்தையின் மடியை விட்டு இறங்கவே இல்லை. அதிலும் அவள் அப்பனின் மடியில் படுத்திருக்க... தாயோ அவளுக்கு சேவகம் செய்ய வேண்டுமாம். அதில்.. ‘இந்த கழுதைக்கு என்ன சலுகை பார்த்தியா...’ என்று மனதிற்குள் வள்ளி நொடித்துக் கொண்டாலும் இவள் மகளுக்கு வேண்டியதை செய்ய...

அந்த வாண்டோ சும்மா இல்லாமல் தன் கையையும்... காலையும் தந்தையின் முகத்தில் அப்பி... “ம்ம்ம்...” என்று உந்த... அவனோ புரிந்து கொண்டு மகளின் உள்ளங்கையையும்.. காலையும் வாசம் பிடித்தவன், “ஹுஹ்ம்ம்ம்ஹா... என் பட்டு எம்புட்டு வாசமா இருக்காங்க...” கூடவே இவன் மகளைப் புகழ.. சின்னவாண்டோ களுக்கி சிரித்தாள். இது எப்போதும் நடப்பது தான். சின்ன வாண்டு குளித்தால்... உடனே தந்தை அவள் மேல் உள்ள சோப்பின் வாசத்தை நுகர்ந்து மகளை சிலாகிக்க வேண்டும்.

இவர்களின் செயலில், “ஹும்ம்ம்ம்... பொட்ட புள்ள இல்ல.. அதான் அப்பன் கிட்ட இந்த கொஞ்சு கொஞ்சுது...” என்று உறவுக்காரப் பெண்ணொருத்தி சொல்ல.. விவரம் தெரியாமலே அதற்கும் சிரித்தது வைத்தது இந்த வாண்டு.

பின் கணவன்... மனைவி இருவரையும் அமரச் சொல்லி மீனாட்சி இருவருக்கும் உணவைப் பரிமாற எத்தனிக்க... வள்ளி பிறகு சாப்பிடுவதாக சொல்லி தயங்க… அதில் யாரும் அறியாமல் கணவன் பார்த்த பார்வையில் மறுநொடி உணவுக்காக அமர்ந்து விட்டாள் வள்ளி. பின்னே.. இருவரின் சண்டை சச்சரவையும் ஊருக்கே சொல்ல வேண்டுமா.. அதான் குமரன் அந்த பார்வை பார்த்து வைத்தான். அஸ்மி.. தாயின் மடியில் அமர்ந்து கொண்டு... தந்தையிடம் ஒரு உருண்டை... தாயிடம் ஒரு உருண்டை என உண்டாள் அவள்.

மதிய உணவுக்குப் பிறகு காட்டு வேலை இல்லாததால்... வேலையாட்கள் குமரனின் குடும்பத்தை சூழ்ந்து கொள்ள... இப்படி சூழ்ந்தவர்கள் அனைவருமே... குமரனுக்கு... அப்பத்தா, அப்பச்சி, அம்மச்சி.. தாத்தன், மதனி, அயித்த என்று தூரத்து உறவில் இருக்க... அங்கு கேலிக்கும், கிண்டலுக்கும், சிரிப்புக்கும், பேச்சுக்கும் கேட்கவா வேண்டும். அதிலும் அந்த வெள்ளந்தி மனிதர்களின் பேச்சு எல்லாம் அஸ்மியை வம்பிழுத்துக் கொண்டிருக்க... அந்த வாண்டும் அவர்களுக்கு நிகராய் வாயடிக்க...

அதில் ஒருத்தி, “எங்க.. உன் அத்த சிரிக்கிற மாதிரி சிரிப்பியாமே.. சிரிச்சு காட்டு பாப்போம்..” என்று சின்னவளிடம் வம்பிழுக்க.. அஸ்மியோ கொஞ்சமும் யோசிக்காமல் குலுங்கி குலுங்கி மீனாட்சியைப் போல் நகைக்க... இந்த வாண்டு சிரிக்கிற மாதிரியா நாம சிரிக்கிறோம் என்ற நினைப்பில் மீனாட்சிக்கு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. பின் கார்மேகம் போல் கோபப்பட சொல்ல... தாத்தாவைப் போலவே கண்ணை உருட்டியவள்... மீசையை முறுக்கிய படி மிரட்ட... அதில் நாடியில் விரலை வைத்துக் கொண்டது அங்கிருந்த கூட்டம்.

இறுதியாய் குமரனைப் போல் நடந்து காட்ட சொல்லி அவர்கள் கேட்கவும்.. குமரனும் ஆர்வமாய் மகளைக் காண... எழுந்து நின்ற சின்னதோ... தந்தையைப் போலவே கரங்கள் இரண்டையும் பின்னே கட்டிக் கொண்டு.. புருவங்கள் நெரிய.. முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.. திமிறிய மார்புடன் இவள் நடந்து காட்ட.. குமரனே அசந்துவிட்டான் என்றால்... அங்கிருந்தவர்களுக்கு சொல்லவா வேண்டும்.. அனைவரும்...

“அடி ஆத்தி! இவ சின்ன குமரன் போல!” என்று சொல்லி சிலாகிக்க...

எல்லோரும் செய்த கலாட்டாவில் வெட்கம் வர வாயைப் பொத்திக் கொண்டு.. ஓடி வந்து தந்தையின் மடியில் விழுந்தது அந்த சின்னவாண்டு.

சூழயிருந்தோரின் பேச்சில் இவ்வளவு நேரமிருந்த மகிழ்ச்சி மறைய... வள்ளியின் மனதிற்குள் சுருக்கென்று தைக்கவும்.. ஏதோ குற்றம் செய்தவளைப் போல் கலங்கியவள்... அதில் மேற்கொண்டு அங்கு அவர்களுடன் ஒன்ற முடியாமல் எழுந்தவள்... கால் போன போக்கில் நடக்க ஆரம்பிக்க... எவ்வளவு நேரம் தன்னை மறந்து... தான் இருக்கும் சூழல் மறந்து நடந்தாளோ...

திடீரென... “இந்தாஆஆ... புள்ள... உனக்கு நெனப்பு எல்லாம் எங்க இருக்கு... நான் கூப்பிட கூப்பிட நீ பாட்டுக்கு.. நடந்துகிட்டே இருக்க...” அவளின் கரத்தைப் பிடித்து இழுத்தபடி குமரன் கேட்கவும்

இப்படியான திடீர் செயலில்.. முதலில் மருண்டவள்... பின் கணவனைக் கண்டு முழிக்க... மனைவியின் பரிபாஷைகள் எதுவும் குமரனை சென்று எட்டவில்லை. ஆனால் அவளின் கலங்கிய முகம் இவனை எட்ட...

‘இந்த புள்ள எதுக்கு.. இப்படி கலங்கி தவிக்குது...’ என்ற நினைப்பில்... இவனுக்குள் முதல் முறையாக.. வள்ளியைப் பற்றிய சிறு சலசலப்பு அவன் மனதில் தோன்றியது.

அதை மறைத்து இவன் ஏதோ கேட்க.. கணவன் கேட்டது எதுவும் புரியாமல் “ஆங்...” என்று இவள் விழிக்கவும்...

அதில் “அடிச்சு பல்லை எல்லாம் கழட்டப் போறேன் பார்... என்ன மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி இந்த முழி முழிக்கிற. நானும் உன்னைய பார்த்துகிட்டு தான் இருந்தேன். முதல்ல நம்ம காட்டுப் பக்கம் நகர்ந்த... சரின்னு விட்டேன். பெறகு ஒத்தைத் பனை மரத்தை நெருங்கி... அதை அண்ணாந்து பார்த்த... இப்பவும் சரி ஏதோ பார்த்துட்டு வந்துடுவேன்னு விட்டேன்.

நீ என்னன்னா.. கால் போன போக்குல.. எங்களை எல்லாம் கடந்து... இந்தா இந்த புதர் பக்கம் நடந்துகிட்டு இருக்க... அதுவும் நான் கூப்புட கூப்புட திரும்பாம... இங்கெல்லாம் எத்தனை பூச்சி பொட்டு வரும் தெரியுமா... எங்க இருக்க நீ...” நீளமாய் விளக்கம் தந்தவன்... பின் இறுதியில் உஷ்ணமாய் முடிக்க..

கணவனின் கோபம் எல்லாம் பெண்ணவளை எட்டவில்லை. ஆனால் கணவன் தன்னை கவனித்திருக்கிறான் என்ற நிலையில் காதல் அவளுக்குள் குமிழ… தாவி தன் கரங்கள் இரண்டையும் தன்னவனின் கழுத்துக்கு மாலையாக்கியவள்... தன் கன்னங்களை அவன் நெஞ்சில் புதைத்து.. “என்னை தேடினீங்களா இளா... என்னை கவனிச்சிங்களா இளா... அப்போ நான் உங்க மனசுல இருக்கேனா இளா...” என்று இவள் கண்ணீருடன் கேட்க

“ச்சீ… பைத்தியம்.. நீ என் மனசுல இல்லாம வேற யார் இருப்பா..” என்றவன் தன்னவளை இறுக்க கட்டிக் கொள்ள.. அதில் இவள் காதலோடு தன்னவனை நிமிர்ந்து காண

“ஹேய்... என்ன முழுச்சிகிட்டே தூங்கரீயா... நான் இங்க என்ன சொல்லிகிட்டு இருக்கேன்... நீ இப்படி என்னத்தையோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்துகிட்டு இருக்க...” என்றவன் அவளை உலுக்க..

இமை தட்டி விழித்தவளுக்கு அப்போது தான் தெரிந்தது தான் கண்டது கனவு என்று. ‘அப்.. அப்போ... இவர் நெஞ்சில் நான் சாய்ந்தது.. இவர் என்னை கட்டிக்கிட்டது... ஹையோ! இந்த அளவுக்கா இவர் மேல் நான் பித்தா இருக்கேன்..’ என்ற நினைவில் இவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைக்க “ஓ...” என்று கதற வேண்டும் போல் தோன்றியது. அதையும் மனதிற்குள்ளாக தான் செய்தாள் அவள். கூடவே ஏக்கமும் எழ... தன் மனதில் உள்ள ஏக்கத்தை எல்லாம் விழிகளில் தேக்கியவள் கணவனைக் காண...

அவனோ, “அட கிறுக்கே... சொன்னா புரியாதா... இங்க இருக்காதே போ...” என்றவன் சுவாதீனமாய் அவளின் முதுகில் கை வைத்து நெட்டித் தள்ள..

அதில் இரண்டு அடி நகர்ந்தவளோ.... அதே ஏக்கப் பார்வையுடன் ‘அப்போ நான் உங்க மனசுல இல்லையா இளா..’ என்று மனதால் கேட்டபடி தன்னவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே அடி.. மேல் அடி... வைத்து விலகினாள் வள்ளி.

“லூசு.. இங்க நிக்காதேன்னு சொன்னா கேட்டா தானே... பாரு... காத்து கருப்பு அடிச்சவ கணக்கா பேய் முழி முழிச்சிகிட்டு போறதை...” என்ற முணுமுணுப்புடன் தானும் விலகினான் குமரன்.

சத்தியமா அவனுக்கு வள்ளியின் காதல் பார்வை தெரியவில்லை தான். எங்கே.. அதற்கு அவன் மனதில் காதல் ஒன்று மலர்ந்திருந்தால் தானே அறிவான்.

முக்கால் பங்கு வேலைகள் முடிய.. சிலுசிலுவென்று காற்று வீசவும் தாங்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நிலையில் ஓரிடத்தில் மர நிழலில் தந்தையும், மகளும் உறங்கினார்கள். குமரன் மல்லாக்க படுத்திருக்க.. தந்தையின் வயிற்றை சுற்றி கால்களைப் படற விட்ட படி.. அவன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்கினாள் அஸ்மி என்னும் முயல்குட்டி. அதில் தன் கவலை மறைய... இருவரையும் வாஞ்சையுடன் தன் விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் வள்ளி.

“ரெண்டு பேரும் தூங்கறாங்களா... வா வள்ளி, அப்படி காலாற நடந்துட்டு வருவோம்...” மீனாட்சி அழைக்க

கணவன் சொன்ன பூச்சி.. பொட்டு... என்ற வார்த்தைகள் தற்போது நினைவில் வர.. அதில் வள்ளி தயங்க

“என்ன வள்ளி..”

“அண்ணி... இரண்டு பேரும் ஆழ்ந்து தூங்கறாங்க. ஏதாவது பூச்சி...” இவள் சற்றே இழுக்க

“அதானே...” என்றவள் அங்கிருந்த கணக்குப் பிள்ளையை... இருவருக்கும் காவலுக்கு வைத்து விட்டு... தம்பி மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் மீனாட்சி.

நீண்ட நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பெரியவள்... திடீரென, “அன்னைக்கு அந்த கோவில் சம்பவம் குமரனை அதிகம் பாதிச்சிருக்கும் போல வள்ளி. இப்போ எல்லாம் அவன் எந்நேரமும் யோசைனையிலே இருக்கான்.. பட்டுவை கண்டா தான் அவன் முகத்துல சிரிப்பே வருது. அவன் உலகமே இப்போ அஸ்மிதான்னு மாறிடுச்சு. இப்போ எல்லாம் என் கிட்ட கூட முகம் கொடுத்து சரியா பேச மாட்டேங்கிறான் தெரியுமா...” முதலில் சந்தோஷமாக ஆரம்பித்தவள்.. பின் முடிவில் குறையாக சொல்லி முடித்தாள்.

அவளுக்கு, தம்பி தன்னை விட்டு தூர போய்விட்டானோ என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அப்படி போனாலும் சந்தோஷப்படுவாள் தான். ஆனால் அன்றைய சம்பவத்தால் தம்பி விலகுவது போல் அவளுக்கு நினைப்பு. அதை என்னவென்று சொல்லத் தான் அவளுக்குத் தெரியவில்லை.

பெண்கள் இருவருமே அன்று நகை திருட்டு நாடகத்தை மட்டும் தான் அறிந்திருந்தார்கள். அதனால் குற்ற உணர்ச்சியில் குமரன் மாறி விட்டதாக நினைத்தார்கள். அதனால் ஒரு வித சங்கடத்தை உணர்ந்த வள்ளி, “எல்லாம் என்னால் தான் அண்ணி. கொஞ்ச நாள் தான் அண்ணி... பிறகு நான் அவரை விட்டு விலகிப் போயிடுறேன்...” எழுப்பாத குரலில் துயரத்துடன் இவள் சொல்ல

“அப்படி எல்லாம் நடந்திடும்னு நீ கனா கூட காணாத வள்ளி. என் தம்பி தன் கடமையிலிருந்து பின் வாங்குறவன் இல்ல... அவன் கடைசி மூச்சு உள்ள வரைக்கும் அவன் பொண்டாட்டி நீ தான்.. இதை அவன் மாத்த மாட்டான்” மீனாட்சி உறுதியாய் சொல்ல...

‘அப்படி கடமைக்கான மனைவியா இருக்கக் கூடாதுன்னு தானே நான் வேண்டிக்கிறேன்...’ என்று கூக்குரலிட்டது வள்ளியின் நெஞ்சு.

இவர்கள் இருவரும் திரும்பி வர.. விழித்தவுடன் மறுபடியும் குளிக்க தொட்டி பக்கம் நகர்ந்தார்கள் தந்தையும், மகளும். அதில் கோபம் எழ.. வள்ளி, “அவ தான் குழந்த... தண்ணீரிலே விளையாட ஆசைப் படுவா... உங்களுக்கு தெரிய வேணாம்... பொழுது சாய்ந்த நேரத்திலே... இப்படி அவ கேட்டதும் தொட்டி பக்கம் போறீங்களே...” இவள் தன்னிலை மறந்து கணவனிடம் சண்டையிட

“பாரு பட்டு.. உங்க அம்மா திட்டுறதை... ஆனா இதுக்கெல்லாம் உன் அப்பா அசருபவன் கெடையாதே.. நீங்க வாங்க நாம போகலாம்...” என்று மகளிடம் பேசியபடி குமரன் நடையைக் கட்டவும்... வள்ளி முறைக்க... மீனாட்சி அங்கிருக்காமல் விலகிக் கொண்டாள்.

பின் அனைவரும் வீட்டுக்கு நடைபயணமாய் கிளம்ப... குமரன் அஸ்மியை ஏந்திக் கொண்டான்... தந்தையின் கையில் இருந்தவளோ... அங்கு சாலையோரம் பூத்திருந்த காட்டுச் செடிகளின் பூக்களில் ஒன்றைக் கேட்பதும்... பின் அதை வாங்கி வைத்துக் கொண்டு ஆசை தீர்ந்ததும்... அதை தாயிடம் கொடுத்து விட்டு வேறு ஒன்றை இவள் கேட்பதுமாக இருக்க... மகளின் இச்செயலில் இவனோ சலித்துக் கொள்ளாமல் ஒவ்வோர் இடத்திலும் நின்று நின்று பூக்களைப் பறித்துத் தர... அதில் மீனாட்சி... இவர்களை தனியே விட்டு முன்னே நடந்தவள்... பின் ஓரிடத்தில் அமர்ந்து தம்பி குடும்பத்தைக் காண...

அவள் விழிகள் நிறைந்தது. இதை தானே அவள் தினந்தினம் வேண்டியது. ஆனால் மனம் நிறையவில்லை... கணவன் மனைவி இருவரும் நெருங்கி நடந்து வந்தாலும்.. இருவரின் தோளும் உரசிக் கொள்ளவில்லை. அதைக் கண்டவளுக்கு மனம் சுணங்கியது.

‘இருவரும் எப்போது மனம் ஒன்றுபட்டு ஆதர்ஸ கணவன் மனைவியாக மாறப் போகிறார்களோ?’ என்ற கவலையே மனதை ஆக்கிரமித்தது.

ஆனால் அதற்கு மருந்தாய்.. அஸ்மியின் செயல் தான் இவளை மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது. புதிதாக ஒரு பூ கிடைத்தவுடன் கையிலுள்ள பழைய பூவை தூக்கி தூர வீசாமல்.. பழையதை தாயிடம் கொடுத்து பத்திரப்படுத்தும் அந்த வாண்டின் செயல்.. இவளுக்குள் ஏதேதோ சொல்லிக் கொடுத்தது.

தம்பி குடும்பம் இவளை சமீபித்ததும்... இவர்கள் வீட்டிற்கு வர.. இவர்கள் மகிழ்வை எல்லாம் மூழ்கடிப்பது போல்.. வீட்டில் ரணகளத்தை உருவாக்கியிருந்தான் புருஷோத்தமன் என்னும் உருவில் பிறந்திருக்கும் அரக்கன்...


பி. கு : அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை ப்பா... அதனால் அடுத்த வாரம் பதிவு தருவது சந்தேகம் தான் தோழமைகளே ... முடிந்தால் தருகிறேன் ம்மா... இல்லை என்றால் கொஞ்சம் adjust karo மக்களே....
Nice
 

shankamal68

New member
அதானே ?இந்த சுயநல பிசாசுக்கு புருசோத்தமன்னு அந்த பரந்தாமன் பேர் ?இப்போ என்னவாம் இவனுக்கு ?
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதானே ?இந்த சுயநல பிசாசுக்கு புருசோத்தமன்னு அந்த பரந்தாமன் பேர் ?இப்போ என்னவாம் இவனுக்கு ?
நல்லா திட்டுங்க க்கா... 🥰
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN