ஈரவிழிகள் 19

P Bargavi

Member
மூவரும் வீட்டை நெருங்கவும்.. வாசலிலே குமரனைப் பிடித்துக் கொண்டான் அவனின் நண்பன் பாண்டி. “குமரா, நம்ம முருகனுக்கும்... அந்த மொத்த வியாபாரி சண்முகத்துக்கும் ஏதோ பிரச்சனை போல.. செத்த நீ வா...” வந்தவன் இவனை அழைக்க...

“அக்கா.. இந்தா பட்டுவை புடி.. நீங்கெல்லாம் வீட்டுக்குப் போங்க... நான் ராவுக்கு வரலனா.. வெசனப்பட்டுகிட்டு கெடக்காத... சாப்டுட்டு தூங்கு ” போற போக்கில் சொல்லிவிட்டு... நண்பனின் பைக்கில் பறந்தான் குமரன்.

இது எப்போதும் நடப்பது என்பதால்.. இரு பெண்களும் பெரிதாய் கலங்காமல் தங்களுடன் இயல்பாக பேசியபடி வீட்டிற்குள் பிரவேசிக்க.. அங்கு நடுக்கூடமோ அலங்கோலமாய் காட்சியளித்தது. வீட்டு உறுப்பினர்கள் வேறு ஆளுக்கொரு பக்கம் முகத்தில் தீ சுவாலையுடன் நின்றிருந்தார்கள். திகைப்பிலிருந்து இருவரில் முதலில் வெளிவந்தவள் மீனாட்சி தான்.

“என்ன டா என்ன நடந்துச்சு... வீடே ஏதோ பூகம்பத்திலே சிக்கி மீண்ட மாதிரி இப்படி அலங்கோலமா இருக்கே டா... என்ன ஆச்சு...” வந்தவள் புருஷோத்தமனிடம் பரபரப்பாய் கேட்க

அவனோ, “வா வா... வந்துட்டியா... உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன். செய்யறது எல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி வந்து துக்கம் விசாரிக்கிறியா...”

தம்பியின் பதிலில், “துக்கமா... யாருக்கு என்ன டா...” இவளுக்குள் பயம் கவ்வியது.

“ஓஹ்... அப்போ இந்த வீட்டில் இன்னும் எழவு விழலன்னு தான் உனக்கு கவலையா இருக்கோ...”

தம்பியின் கட்டுப்பாடற்ற வார்த்தையில் “அடச்சீ! என்ன பேச்சு பேசுற... ஒழுங்கா என்ன விஷயம்னு சொல்லப் போறீயா இல்லையா...” பெரியவள் குரலை உயர்த்த...

“ஒஹ்.. இப்படி எல்லாம் குரலை உசத்தி கூட உனக்குப் பேச வருமா! பின்ன.. வெக்கமே இல்லாம இந்த வயசுலே திருமணத்திற்கு தயாராகிட்டியே... அப்போ வரும் தான்...” எதைச் சொன்னால் தமக்கைக்கு சுடும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் நினைத்தது போலவே அவமானத்தில் முகம் சுணங்க தலை கவிழ்ந்தாள் மீனாட்சி.

இதுவரை பெரியவள் அவனிடம் குரலை உயர்த்திப் பேசியதில்லை. அது ஒரு காரணம் என்றால்... அக்காளுக்கு வரன் பார்ப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இன்று நடந்த விஷயத்தோடு முடிச்சிட்டு... தமக்கையைக் குத்திப் பேசினான் இவன்.

மீனாட்சி அமைதியாய் நின்றிருந்த நேரம், “அத்த... என்ன விட்டு எங்க போனீங்க... இங்க பாருங்க...” தேம்பிய குரலில் வாணி அவளிடம் ஓடி வந்து தன் கன்னத்தைக் காட்ட... அவள் காட்டிய இடது கன்னத்தில் விரல் தடங்கள்.

“அடச்சீ... உனக்கு வெக்கமா இல்ல? நீ இப்படி அடி வாங்கி நிற்க காரணமே உன் அத்தையால் தான். ரோஷம் கெட்டுப் போய்... அது கிட்ட சொல்ற...” புருஷோத்தமன் மகளைக் கடிக்க

ஏற்கனவே வாணியின் கன்னத்தைக் கண்டு திகைத்திருந்தவள்... தற்போது தம்பி வைத்த குற்றச்சாட்டில் அதிர்ந்து... “நான் என்ன டா செஞ்சேன்... நானே இப்போ தான் டா வீட்டுக்குள்ள வரேன்...” மீனாட்சி எடுத்துரைக்க..

புருஷோத்தமன், “இது தான்... இதோ இப்போ நீ வீட்டை கவனிக்காம விட்டுட்டுப் போன பார்... அது தான் காரணம் என் மக இப்படி அடி வாங்க...”

இவளுக்கு ஒன்றும் புரியாமல், “நான் போனதாலே எப்படி டா...”

“நீ வெளியே போனதால் தான்... இந்த வீட்டுக்கு வாழவந்த தொழிலதிபர் மார்த்தாண்டத்தின் பொண்ணு... என் மக மேலே கை வச்சிருக்கு. நீ எதற்கு வெளியே போன... என் பிள்ளைகளை பார்த்துக்கிறதை விட்டுட்டு அப்படி என்ன உனக்கு வெளிய வேலை? நீ முன்ன மாதிரி இல்ல மீனா. முன்னாடியெல்லாம் அவசியம் இல்லாம இந்த வீட்டு வாசல்படியை தாண்ட மாட்ட... நாங்க எல்லாம் கேட்கிறதுக்கு முன்னமே.. எங்க தேவைகளோட வந்து நிப்ப... ஆனா இப்போ? என்ன கல்யாண ஜோரா?”

திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளால் குத்திப் பேசுறானே... மீனாட்சிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. குமரன் இவளுக்கு வரன் பார்ப்பதை ஆரம்பித்தவுடனே.. இவன் தன் எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்து விட்டான். என்ன.. அதை தந்தையிடமோ.. தம்பியிடமோ காட்ட முடியாதே... இப்போதெல்லாம் மீனாட்சி வீட்டில் அதிகம் வேலைகளை செய்வது இல்லை. அப்படி அவளை செய்யவிடாமல்... தானே அனைத்தையும் செய்தாள் வள்ளி. ஆனால் முழுமையாக அவளும் அந்த வேலைகளைச் செய்யாமல்... தோது படும்போது எல்லாம் நேரம் காலம் பார்த்து... அஸ்மியை சாக்கிட்டு உமா.. கல்பனா.. இருவரின் குடும்பத்தாரின் வேலைகளை மட்டும்... நைச்சியமாக அவர்களின் தலையிலேயே கட்டி விட்டு ஒதுங்கிவிடுவாள்.

இதோ.. இன்று கூட கார்மேகம் வீட்டில் இல்லை. மாமனார் இல்லை என்றதும்... வெளியே கிளம்பி விட்டாள். வசந்த், வாணியின் இன்றைய பொறுப்பை வள்ளி தட்டிக்கழித்ததில்... மீனாட்சியே அதற்கு காரணம் என்ற ரீதியில் இதோ முந்தையதையும்... இப்போதையும் இணை கூட்டி தன் வன்மத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறான் இவன்.

அப்போது “என் மகளை வெளியே போகக்கூடாதுனு சொல்ல நீ யாரு டா? உனக்கும் உன் குடும்பத்துக்கும் என் மக எதுக்கு உழைச்சுக் கொட்டணும்... என்ன கேட்ட? கல்யாண ஜோரா... ஆமாம்... அப்படி தான்! அதிலே உனக்கெங்க கொடையுது?...” இப்படி எல்லாம் கேட்டபடி தன் அதிகார குரலில் உள்ளே பிரவேசித்தார் கார்மேகம்.

ஒரு விழாவுக்கு சென்றிருந்தவர் இரவு தான் வீடு திரும்ப வேண்டும். ஆனால் இதோ.. இப்போதே வந்து நிற்கிறார். அவர் கேட்ட கேள்விகளிலே எதுவரை இங்கு நடந்தவைகளை அவர் கேட்டிருக்கிறார் என்பது விளங்க...

“ப்பா...” மகன் தன் குரலை உயர்த்த...

“ஒஹ்... உனக்கு என் முன்னால் இப்படி கூட குரலை உசத்த தெரியுமா புருஷோத்தமா!?” கார்மேகம் போலியாய் ஆச்சரியப்பட... தான் சற்று முன் தமக்கையிடம் இதே தொனியில் கேட்டது அவனுக்கு நினைவு வந்தது.

“வள்ளி.. குடிக்க பானம் எடுத்து வா ம்மா...” மருமகளுக்கு வேலை சொல்லியபடி அங்கு சாய்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியவர்... கூடவே மகன் இவர் வருவதற்கு முன்பு அமர்ந்திருந்த நாற்காலியைத் தன் பக்கம் நகர்த்தியவர்,
“மீனா... இப்படி உட்கார்ம்மா...” அவர் மகளுக்கு உத்தரவிட...
தந்தையின் குரலுக்கு கட்டுப்பட்டு அமர்ந்தாள் அவள்.

பின் தானும் அமர்ந்தவர், “உமா, இங்க வா... என்ன நடந்தது சொல்லு....” அவர் பெரிய மருமகளிடம் விசாரிக்க... எப்போதும் கார்மேகத்திடம் ஒரு கம்பீரம் மட்டுமே இருக்கும். இன்று... ஒரு வித அதட்டலுடன்... அதிகாரமும் அவர் குரலில் சேர்ந்து மிளிரவும்...

தயங்கியபடியே அங்கு வந்த உமா, “அது.. வந்து மாமா...” சற்றே தயங்கியவள் பின் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “ஸ்கூல் முடிஞ்சு வசந்தும்... வாணியும்... வீட்டுக்கு வந்து வீட்டுப் பாடம் செய்துட்டு இருக்கும் போது... ஷாலினி, வாணி நோட்புக்கை எடுத்து கிழிச்சிட்டுருக்கா. அதில் வாணி சும்மா தான்... ஏதோ மிரட்டிய படி சின்னவளை தள்ளி விட்டிருக்கா. அவ தள்ளி விட்டதிலே.. ஷாலினி கீழ விழுந்து அவ கையில் சின்னதா சிராய்ப்பு....”

“அதை சாக்கிட்டு ஷாலினி வாணியை அடிச்சிட்டான்னு சொல்றியா...”

“அவ இல்ல மாமா..”

“என் பொண்ணு தான் இங்க இல்லையே..” என்றவர் “ஏன் மீனா ஒருவேளை நீ இங்க வந்து வாணியை அடிச்சிட்டு திரும்ப கழனிக்கு போய்ட்டியா?” இவர் மகளிடம் கேட்க

இப்படி எல்லாம் கார்மேகம் யாரையும் கேள்வி கேட்டதே இல்லை. மீனாட்சிக்கு தான் அந்த சூழல் பிடிக்காமல் போனது... புதிய பரிமாணத்தில் இருக்கும் தந்தையையே அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒருவித அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“அவங்க அடிக்கல மாமா...” உமா பதில் தர

“எவங்க... உனக்கு மீனாட்சி என்ன உறவு வேணும் உமா...” இப்படி கேட்டது சாட்சாத் கார்மேகமே தான்!

“மதனி அடிக்கல மாமா... ஷாலினியை தள்ளிவிட்டதாலே... கல்பனா தான் கோபத்தில் எங்க பொண்ண அடிச்சது...” கடைசி வாக்கியத்தை மட்டும்.. அதெப்படி எங்க பொண்ணை அவ அடிக்கலாம் என்ற தொனியில் இவள் சொல்ல

“தப்பு தான்... சின்னப் பிள்ளைங்க சண்டைக்கு இப்படி அடிச்சிருக்க கூடாது தான். வாணிம்மா, தாத்தா கேக்கறேன் டா...” என்று பேத்திக்கு பதில் தந்தவர்...

“சரி... இதுல என் மகளோட தப்பு எங்க இருக்கு...” மறுபடியும் அவர் விசாரணையைத் துவங்க...

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த புருஷோத்தமன்... “என்ன தப்புனா கேக்கறீங்க... நல்லா இருக்கு உங்க கேள்வி. ஸ்கூல் முடிஞ்சு என் பிள்ளைங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்ற நேரத்திலே மீனா காத்து வாங்க வெளியே போனது தப்பு இல்லையா? அப்படி போனதால் தானே... வாணியையும்.. ஷாலினியையும் விலக்கி விட ஆளு இல்லாம இரண்டும் மல்லுக்கு நின்னுருக்குங்க! ஸ்கூல் முடிஞ்சு வந்த என் குழந்தைங்க இன்னும் ஹார்லிக்ஸ் கூட குடிக்கல தெரியுமா...” அவன் இன்னும் ஏகத்துக்கு பேசிக் கொண்டே போக...

“பெத்த மக மேலே இம்புட்டு பாசம் வச்சிருக்கறவன்... உன் பொண்டாட்டி கிட்ட சோலிய விடச் சொல்லிட்டு... பொறுப்பா பிள்ளைங்களை பார்த்துக்க சொல்லியிருக்கணும்...” கார்மேகத்திடம் அதே நிதானம்.

“என் பொண்டாட்டி எதுக்கு வேலையை விடணும்? மீனா எதுக்கு தண்டமா இந்த வீட்டிலே இருக்கா... தின்ன சோறு செரிக்கவாது என் பிள்ளைங்களை பார்த்துகிட்டா என்ன?”

“வாய மூடு டா... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின... வாயை கிழிச்சிடுவேன். யாரப் பார்த்து தண்ட சோறுன்னு சொல்ற... என் மக என் வீட்டில் உரிமையா சாப்பிடற சாப்பாட நீ எப்படி டா இப்படி சொல்லுவ...” இவர் இப்போது எகிறிக் கொண்டு அடிக்க கையை ஓங்கிக் கொண்டு மகனை நெருங்க

நடக்கும் களேபரத்தைப் பார்த்து, “அப்பா...” என்று மீனா தந்தையைத் தடுக்க வரவும்

தந்தையின் கையைத் தடுத்து பிடித்த புருஷோத்தமன், “நான் ஒண்ணும் விடலைப் பையன் இல்ல... எனக்கு திருமணமாகி ரெண்டு பிள்ளைங்க இருக்கு... இந்த அடிக்கிற வேலை எல்லாம் வச்சிக்காதிங்க...” என்றவனை

“அதே தான் டா நானும் சொல்றேன். கல்யாணத்துக்கு முன்ன... என் மக உனக்கு செஞ்ச வேலைங்க எல்லாம்.. ஐயோ! பாவம்.. அனாதை நாய் ஒண்ணு இருக்குறானே என்ற பரிதாபத்திலே செஞ்சது. இப்போ உனக்கு குடும்பம் வந்த பெறகு... என் மக ஏன் டா உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேவகம் செய்யணும்?” மீசை துடிக்க தந்தை கேட்ட கேள்வியில்..

“ஏன்னா... கடைசிவரைக்கும் நீங்க உங்க மகளுக்கு இருக்க போறதில்ல. நீங்க செத்த பிறகு... நான் தான் உங்க மகளைப் பார்த்துக்கணும். எங்கயோ நாதியத்துப் போய் நிக்கறதுக்கு... என் பிள்ளைங்களை பார்த்துகிட்டு... நாங்க சொல்ற வேலையை செய்துகிட்டு எங்களை அனுசரிச்சுப் போகலாமில்ல...”

அவன் கொட்டிய வார்த்தையில்.... மீனாட்சி... வாயை மூடிக் கொண்டு தன் கேவலை வெளிப்படுத்த...

“அப்படி ஒண்ணும் என் அண்ணியை நாங்க விட்டுட மாட்டோம்...” வள்ளி இப்படி சொல்லவும்...

“நீ யாரு முதலில் இதைச் சொல்ல? இல்ல.. நீ யாருன்னு கேக்கறேன். நீ என்ன முறையா வந்தவளா... பொறவாசல் வழியா வந்தவ தானே...” அவன் கொட்டிய வார்த்தையில்... தன் அதிர்ச்சியிலிருந்து மீண்டவராக... அடுத்த நிமிடம் மகனை அறைந்திருந்தார் கார்மேகம்.

“ச்சீ... நீ எல்லாம் மனுஷனா இல்ல மிருகமாடா... பொட்ட பிள்ளையைப் பார்த்து என்ன பேச்சு பேசுற... அதுவும் உன் தம்பி பொஞ்சாதியை பார்த்து. இனி ஒரு வார்த்தை பேசின.. தொலைச்சிடுவேன் தொலைச்சி... ஜாக்கிரதை...” என்று மூத்த தலையாய் மகனை எச்சரித்தவர்

“பெறகு என்ன டா சொன்ன.. நாதியத்து! ம்ம்ம்.. சரிதான்… நீயும் நானும் அப்படி நாதியத்துப் போகக் கூடாதுன்னு தான் டா... என் மக நம்மள குலசாமியா இருந்து காத்துச்சு... நான் எல்லாம் காடு மேடுன்னு உழைச்சு கொட்டினதோட சரி டா. என் மக தான் டா உனக்கு சீக்கு வந்தப்போ ஒரு ஆத்தாவா... உன்னையை அரவணைச்சு... ஒரு அப்பனா.. நீ கேட்டது எல்லாம் வாங்கித் தந்தது மட்டும் இல்லாம தோழியா தட்டிக் குடுத்து பார்த்துகிட்டது.

இம்புட்டு ஏன்... உன் மானத்த மறைக்க... நீ கட்டியிருக்கற கோவணம் முதகொண்டு என் மக தான் டா உனக்கு வாங்கி தந்தது. அப்படி எல்லாம் உன்னை பார்த்துக்கிட்ட அந்த மவராசியை நீ பாத பூச செய்ய வேணாம்… மனுசியா மதிச்சா போதும். அதுக்கு முதல்ல நீ மனுஷனா இருக்கணும். ஆனா நீ தான் மனுசன் இல்லையே.. நன்றி கெட்ட நாயாச்சே டா! ஆனா நாய்க்கு கூட நன்றி இருக்கும் டா.. உனக்கு..” தந்தை நியாயத்தை சொல்லி அவனை விளாசவும் விருட்டென்று உள்ளே சென்று விட்டான் புருஷோத்தமன்.

இவ்வளவு எல்லாம் தன் மகனிடம் அவர் பேசியதே இல்லை. எல்லாம் சேர்த்து வைத்து இன்று பேசி விட்டார் அவர்.

“கல்பனா... இங்க வா...” அடுத்து அவர் சின்ன மருமகளை அழைக்க... இவ்வளவு நேரம் அங்கு நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தவள்... அவர் அழைப்புக்கு உடனே வந்து நின்றவள்.

“சொல்லுங்க அங்கிள்..” பவ்வியத்துடன் இருந்தது அவள் குரல்.

“சின்னப் பிள்ளைங்க இன்னைக்கு அடிச்சிக்குங்க... நாளைக்கு சேர்ந்துக்குங்க... அதென்ன பொட்ட பிள்ள மேல கை வெக்கிறது... இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்...” அவர் கொஞ்சம் மிரட்டலோடு சொல்ல.. தலைகவிழ்ந்தாள் அவள்.

“வீடு ஏன் இப்படி அலங்கோலமா இருக்கு..” அவருக்கு தெரியும் இதை யார் செய்திருப்பார்கள் என்று. அதனால் தான் இவளை அழைத்துக் கேட்கிறார்.

“அது வந்து அங்கிள்... நான் தான்...” அவள் திணற...

“உன் அப்பாருவை என்னைய வந்து சந்திக்க சொல்லு... நான் பேசணும்” அவர் முடித்து விட.. இவளுக்கு சர்வமும் நடுங்கியது.

“என்ன பார்க்கற... இதை எல்லாம் நீ தான் செஞ்சிருப்பேன்னு எனக்கு தெரியும். எல்லாத்தையும் இப்போ நீ தான் சரி செய்ற... அதென்ன உனக்கு அவ்வளவு ஆங்காரம்? இனி இந்த வீட்டில் அவங்கங்க வேலையை அவங்கவங்க தான் பார்த்துக்கணும்... என் மக செய்ய மாட்டா சொல்லிட்டேன்..” என்று உறுதியாய் அறிவித்தவர் உள்ளே சென்று விட்டார்...

அழுது கொண்டிருந்த மகளைப் பார்த்து... கோபத்தில் புருஷோத்தமன் கல்பனாவைத் திட்ட... அதற்கு கோபத்தில் இவள் தான் வீட்டுப் பொருட்களைத் தாறுமாறாய் உருட்டிப் போட்டவள்... அதன் விளைவாய் தற்போது மாமனாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முணுமுணுத்துக் கொண்டே அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறாள். அவள் கணவன் சேரனோ ஒரு செமினார் விஷயமாய் வெளியூர் சென்றிருக்கிறான்.

வீட்டில் நடந்த இந்த களேபரம் எதுவும் வேலை ஆட்களுக்கு தெரியாது. வீட்டு ஆட்களை அடக்க முடியாத காரணத்தால்... இப்படி ஏதாவது வீட்டில் நடந்தால் உடனே வேலையாட்கள் அந்த இடத்தை விட்டு ஒதுங்கி விட வேண்டும் என்பது குமரனின் உத்தரவு. மீறி யாராவது வம்பு பேசினால்... அவர்கள் முதுகை தோலுரித்து... எலும்பை எண்ணி விடுவான் அவன். வேறு என்ன செய்ய.. வீட்டு ஆட்கள் தான் திருந்தாத ஜென்மமாயிற்றே..

புருஷோத்தமன் மனதில் ஒரு கணக்கு இருந்தது. அவனுக்கு இந்த பட்டிக்காட்டை விட்டு சென்னையில் உயர்ந்த ஒரு சொகுசு பங்களாவில் வாழவேண்டும் என்பது தான் அது. இங்கிருக்கும் அவனுடையதும் மற்றும் மீனாட்சியினுடைய பங்குகளை பணமாய் மாற்றி அங்கு வீடு வாங்கி குடிபோக அவனுக்கு ஆசை. அதிலும் கணவன் மனைவி இருவரும் சென்னையில் உள்ள ஒதுக்குப் புற ஊரில் வேலைக்கு போய் வர... தமக்கையோ அவன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். அதாவது அவள் பங்கைப் பிடுங்கிக் கொண்டு.. சாகும்வரை அவளுக்கு ஆதரவு தருவது போல்.... மீனாட்சியை அடிமையாக வைத்துக் கொள்ளவேண்டும்.. இது தான் அவன் திட்டம்.

ஆனால் இதில் அவன் தம்பி குமரனை மறந்து போனான் அவன். அப்படியே அவன் நினைவு வந்தாலும்... திருமணத்திற்குப் பிறகு அவன் மாறிவிடுவான் என்று இவன் நினைத்திருக்க... குமரனுக்கு மனைவியாய் வந்தவளோ... கணவனுக்கு மேல் மீனாட்சியைத் தாங்கவும்... அதையெல்லாம் கண்டவன் இதோ தன் மன வக்கிரத்தை எல்லாம் கொட்டி விட்டான் அவன்.

ஆனால் இதையெல்லாம் கேட்ட மீனாட்சிக்கு வீம்பு வரவில்லை. நீ யாரு டா என்னை சொல்ல என்று கோபம் வரவில்லை... மாறாக கழிவிரக்கம் கொண்டாள். அவள் சுபாவத்திற்கு அவளால் அதைத் தான் செய்ய முடிந்தது.

மனிதர்களின் மனம் விசித்திரமானதுனு சொல்லுவாங்க.. அது எப்போதும் நம்மை அரவணைத்து.. தட்டிக் கொடுத்து காப்பவர்களின் வார்த்தைகளைப் பிடித்துக் கொள்ளாமல்… நம்மைக் காயப்படுத்தி.. நம் மனதை உடைத்தவர்களின் வார்த்தையை நினைத்து தான் மறுகுமாம்… அதேபோல தான் இன்று அவளுக்காக தந்தை பேசிய வார்த்தைகளை நினையாமல்… தன்னுள் மருக.. அதன் விளைவு இவள் பழைய மாதிரியே... தம்பி குடும்பத்தாருக்கான வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யவும்...

“அண்ணி... மாமா தான் உங்களை எதையும் செய்ய வேணாம்னு சொன்னாரே... அவங்கவங்க வேலைகளை அவங்களே பார்த்துகிடட்டும் அண்ணி விடுங்க...” வள்ளி பெரியவளைத் தடுக்க

“இல்ல வள்ளி... எனக்கு நானே செய்தா தான் சரி வரும் விடு...”

“கடைசிவரைக்கும் நீங்க செய்ய முடியுமா அண்ணி...” வள்ளி ஆதங்கமாய் கேட்டு விட

“ஏன் முடியாது... இது என் வீடு... ஆயுசுக்கும் நான் இங்க தான் இருக்கப் போறேன்... பெறகு நான் செய்யாம வேற யார் செய்வா...” பெரியவளின் பதிலில் சின்னவள் ஏதோ சொல்ல எத்தனித்து பின் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

குமரனுக்கு வீட்டில் நடந்தது எதுவும் தெரியாது. இப்படியே நாட்கள் செல்ல.. ஒரு நாள் மீனாட்சி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட... அவள் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லி விடவும். பின் அந்த வீட்டிற்கு அனைத்துக்கும் வள்ளி என்று மாறிப் போனது.

இதற்கிடையில் தமிழர்களின் வேளாண் முறையைப் பயிலவும்... நம் மண்ணின் மகத்துவத்தை அறியவும்... வெளிநாட்டிலிருந்து ஒரு குழு மதுரை வந்து சேர்ந்திருக்க... அவர்களுக்கு தேவையான விளக்கங்களைக் கொடுக்க... மதுரையை ஒட்டிய பிற இடங்களில் அவர்களுடன் சேர்ந்து குமரன் தான் சுற்றிக் கொண்டிருந்தான். நம் பண்டைக் கால தமிழர்கள் சிற்பத்துக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் தானே தங்கள் திறமையை எல்லாம் காட்டியிருந்தார்கள்.

வெளிநாட்டவர்கள் நேரத்தை மிச்சப்படுத்த... புதுப்புது விஞ்ஞானத்தை விவசாயத்தில் புகுத்தினார்கள் என்றால்.. நம் மக்கள்... உடல் உழைப்போடு சேர்த்து ரசாயனமற்ற விவசாயத்தை அல்லவா பல்கிப் பெருக வைத்தார்கள்? அதையும் தங்கள் மெய்ஞானத்தால் அல்லவா செய்து காட்டினார்கள்! ஆனால் அப்படிப்பட்ட விவசாயத்தை இன்று ரசாயனம் என்னும் உயிர்க்கொல்லி அல்லவா ஆட்டிப் படைக்கிறது?...

இது குமரனுக்குப் பிடித்த வேலை என்பதால் அவன் வீட்டை மறந்தான். தங்கள் கழனி காடுகளை நண்பன் கீர்த்தியின் மேற்பார்வையிலும் தன் தந்தையிடமும் விட்டவன்... ஏதாவது அவசியம் என்றால் மட்டும் வீட்டுக்கு வந்தான். மற்ற நேரங்களில் எல்லாம்... மதுரையில் அந்த குழுவுடனே தங்கிக் கொண்டான். அக்காவையோ பட்டுவையோ காண வேண்டும் என்றால் வீட்டுக்கு எப்போதாவது வருவான். அப்போதும் வள்ளியைக் காண மாட்டான். பட்டுவை மட்டும் நண்பனை அழைத்து வரச் சொல்லி பார்த்துக்குவான்..

இப்படியே ஒரு மாதம் ஓட.. அவனுக்கு வள்ளியின் முகம் கூட மறந்து போனது. அப்படி ஒருத்தி தன் வீட்டில் இருப்பதே அவன் நினைவில் இல்லாமல் போக. இதில் ஒரு நாள் அவனையும் தன்னை நினைக்க வைத்தாள் அவன் மனைவி... கூடவே அவள் நினைப்பில் துடிதுடித்து அவளை நோக்கி ஓடி வரவும் வைத்தாள் அவள்... அதுவும் காதலோடு!...


பி. கு : அப்பாவுக்கு normal fever தான் friends... அப்பா இப்போ நல்லா இருக்காங்க... thanks for all your prayer ம்மா heart beat heart beat heart beat ...
nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN