நேற்று மதியம் உண்டது... இன்று அந்தி சாய்ந்து விட்டது இதோ.. இப்போது வரை வள்ளி ஆகாரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன், பச்சை தண்ணீர் கூட அருந்தவில்லை. தன் பிடிவாதத்தைக் காட்ட உண்ணா நோன்பு இருந்தாள் அவள்.
தங்கையை அப்படி பார்க்க பார்க்க ரேகாவுக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவளும் தன் பிடிவாதத்தை விட்டுத் தரவில்லை. இவர்கள் இருவரிடமும் சிக்கி அல்லல் பட்டது ரமேஷ் தான்.
“விடுங்க.. இந்த கழுதைக்கு இவ்வளவு பிடிவாதம் இருந்தா எனக்கு இருக்காதா? இன்னும் கொஞ்ச நேரத்திலே அண்ணன் வீடியோ காலில் வருவார். அப்போ தட்டில் சாதத்தை வைத்து இவ கிட்ட தரேன். பிறகு இவ என்ன செய்யறான்னு நானும் பார்க்கிறேன்...”
தமக்கையின் சவாலான பேச்சில், “நான் கேட்காமலே எனக்காக பார்த்துப் பார்த்து செய்தவ நீ... இப்போ இளா விஷயத்தில் மட்டும் ஏன் ரேகா இப்படி பிடிவாதம் பிடிக்கிற?” வள்ளி ஆற்றாமையில் கேட்க
“எல்லா விஷயத்திலும் அனுசரித்துப் போற நீ இதில் மட்டும் ஏன் டி பிடிவாதம் பிடிக்கிற?”
தமக்கையின் கேள்வியில் இவள் ஏதோ சொல்ல வர... அதை கை உயர்த்தி தடுத்த பெரியவள், “போதும்... சும்மா சும்மா காதல்னு பிதற்றாத. இரண்டு பேரும் விரும்பினா தான் அது காதல். நீ ஒருதலையா விரும்பிட்டு வந்து உளறினா நாங்க அதை ஏத்துக்கணுமா” என்று கேட்டவளின் குரல் அதீத உஷ்ணத்தில் ஒலித்தது.
ரேகா காதலுக்கு எதிரியில்லை. ஒருவேளை இளங்குமரன் இவள் முன் வந்து, ‘நானும் உங்க தங்கையும் விரும்புகிறோம்... எங்களைப் பிரிக்காதீங்க’ என்று கேட்டிருந்தால்... ரேகா விட்டுக் கொடுத்திருப்பாள். ஆனால் வள்ளியின் காதல் அப்படி இல்லையே! இவள் மட்டும் தானே விரும்புகிறாள்... இதில் மூச்சுக்கு முன்னூறு தடவை குமரனுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துங்க நிறுத்துங்க என்று பிதற்றல் வேறு... பிறகு அவள் என்ன தான் செய்வாள். இன்னும் சொல்லவேண்டும் என்றால் தங்கை மேல் ரேகாவுக்கு கட்டுக்கடங்காத கோபம் தான் இருந்தது.
‘இவ சொன்னது என்ன.. அண்ணனுக்கு பெண் பார்க்கப் போகிறோம்னு தானே சொல்லி அழைச்சிட்டு வந்தா... இப்போ தடாலடியா... இவ மனதில் உள்ள விருப்பத்தை சொன்னா எப்படி... எதற்கு இந்த கள்ளத்தனம்?’ இப்படியான கேள்வியால் தான்.. தங்கைக்கு நிகராக இவளும் தன் பிடிவாதத்தைக் காண்பிக்கிறாள்.
இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானாள் ரேகா. சுருண்டு படுத்திருக்கும் தங்கையைக் காணக் காண.. இவளுக்குள் பிசைந்தது.
‘இவ கிட்ட என்ன இல்ல... பெண்களுக்கே உள்ள அளவான உயரத்தில்... அதற்கு ஏற்ற உடற்கட்டுடன்... கோதுமை நிறத்தில் சிலையென இருக்கிறாள். அதிலும் அவள் முகத்தில் குமிழும் வற்றாத புன்னகை யாரையும் நொடியில் சிநேகம் கொள்ள வைக்குமே! இவ்வளவு வசீகரத்தையும் வைத்துக்கொண்டு இவள் புத்தி ஏன் இப்படி போகுது...’ என்று தங்கைக்காக ஒரு மனம் அவளைத் தூக்கிப் பேச... இன்னொர் மனமோ...
‘வயதுக்கு மீறிய இவளின் செயலையும்... பேச்சையும்... கண்டு ஆதரித்து பூரித்துப் போனது தப்போ... அதனால் தான் இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவை எடுத்தாளோ..’ என்று வருந்தியது.
வள்ளி மனப்பக்குவமும் மனமுதிர்ச்சியும் உள்ளவள் தான். ஆனால் அதெல்லாம் காதல் என்று வரும்போது?..
அந்நேரம் உள்ளே நுழைந்தார்கள் கீர்த்தி.. அழகுமலை... பரஞ்சோதி ஆகிய மூவரும். கணவன் மனைவி இருவரும் மூவரையும் வரவேற்க... இன்னும் வள்ளி சாப்பிடவில்லை என்று ரமேஷ் வந்தவர்களிடம் கோடிட்டு காட்ட...
வள்ளியிடம் நெருங்கிய அழகுமலை, “எழுந்துரு வள்ளி.. இதென்ன புடிவாதம்.. சின்னப்பிள்ள போல.. எழுந்து போய் சாப்புடு...” அவர் மென்மையாய் சொல்ல.. இவளோ இருக்கையை விட்டு அசையாமல் சட்டமாய் அமர்ந்திருந்தாள்.
“ப்ச்சு... சரி போ... நீ சாப்ட்டா... உன் கிட்ட ஒரு சந்தோஷமான சேதி சொல்லலாம்னு வந்தேன். நீ இப்படி புடிவாதம் புடிச்சா அப்போ அந்த சேதி உனக்கு தெரிய வேணாம் போ...” அழகுமலை தாத்தா சலித்துக் கொள்ள
‘எனக்கு சந்தோஷமான விஷயம்னா அது என் இளா விஷயம் தான்... அப்போ அவர் சம்பந்தப்பட்டதா...’ இவள் இப்படியான கேள்வியைத் தாங்கி அவர் முகம் காண...
‘அவனே தான்... அதுவும் உனக்கு சாதகமான விஷயம் தான்’ என்று தன் கண்களை மூடி திறந்து பதில் அளித்தார் பெரியவர். உடனே அவர் மேலுள்ள நம்பிக்கையில் இவள் எழுந்து சென்று தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு... உணவு மேஜையிலே அமர்ந்து சாப்பிட... அங்கு அவள் பாத்திரங்களை உருட்டும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் எழவில்லை. அவள் உண்டு முடித்து வரும் வரை வேறு எந்த பேச்சும் இல்லாமல் அனைவரும் அமைதி காத்தனர்.
இவள் வந்ததும், “ஹம்.. இப்போ சொல்லுங்க தாத்தா...” என்றபடி அவர் முன் அமர
“என்ன சொல்ல.. எல்லாம் நீ கேட்டது தான். நீ தான் என் பேரன் இளங்குமரனுக்கு பொஞ்சாதி... இன்னும் சொல்லனும்னா இந்த அழகுமலை வீட்டு மருமக! அவனுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்ச முகூர்தத்திலே உனக்கும் என் பேரனுக்கும் கல்யாணத்தை நடத்திடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்...” அவர் சொன்னதைக் கேட்டு வள்ளியின் முகம் பூவாய் மலர
“அதெப்படி.. நீங்க மட்டும் முடிவெடுத்தா போதுமா... எங்களுக்கு அண்ணன் இருக்கார்... எல்லாத்துக்கும் மேல் உங்க பேரன் இதற்கு சம்மதிக்கணும்...” ரேகா பட்டென்று சொல்ல
“யாரு இல்லன்னு சொன்னா.. எல்லாம் என் பேரன் சம்மதிப்பான். முறைப்படி கார்மேகத்தை உன் அண்ணன் கிட்ட பொண்ணு கேக்க சொல்றேன்...”
பெரியவரின் பதிலில் ‘அப்போ மகாலஷ்மி விஷயம் என்ன ஆச்சு... இவ்வளவு சுலபமா முடிஞ்சிடுச்சா?’ வள்ளி மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்த நேரம்
“இதெல்லாம் ஒத்து வராதுங்க.. வேணாம் விட்டுடுங்க...” ரேகா கத்தரித்தார் போல் பேச
“ரேகா, கொஞ்ச நேரம் அமைதியா இரு...” மனைவியைக் கண்டித்த ரமேஷ்... “என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விவரமா சொல்லுங்க.. எதற்கு இந்த திடீர் முடிவு?” அவன் பெரியவரிடம் கேட்கவும்
“எதுவா இருந்தாலும் நான் உங்க குடும்பத்திற்கு என் தங்கையை தரலைங்க... இதிலே துளி கூட எனக்கு விருப்பம் இல்ல. எங்க அப்பா அம்மா பொறுப்பு இல்லாதவங்க தான். எனக்கு மூத்தவளா பிறந்தவ கூட சரியில்லாதவ தான். ஆனா எங்களுக்கு கிடைத்த அண்ணா மாதிரி யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார்... இதை நான் பெருமையா தான் சொல்றேன்.
தனியொரு ஆண்மகனா எங்களை கட்டிக்காத்து வாழ வச்சிருக்கார். இதோ அவருக்கு தங்கையான நாங்க இரண்டு பேரும் அவருக்கு ஒரு நல்லது நடக்கணும்னு வேண்டாத தெய்வம் இல்ல.. பார்க்காத பொண்ணு இல்ல.
ஆனா உங்க வீட்டில் ஐந்து ஆண்கள்... ஒருவருக்கு கூடவா உங்க வீட்டுப் பெண்ணுக்கு நல்லது செய்யணும்னு தோனலை? இப்படிப்பட்ட குடும்பத்தில் நான் எப்படி என் தங்கையை கட்டித் தருவேன்... நாளைக்கு அவ வாழ்க்கை எப்படி இருக்கும்? எங்களுக்கு உங்க குடும்பம் வேண்டாங்க... அதுவும் இல்லாமல்... இருமனமும் ஓன்று சேர்ந்து வாழ்ந்தா தான் அந்த வாழ்க்கை நல்லா இருக்கும்.
இவ ஒருதலையா தான் விரும்புறா... நாளைக்கு ஏதோ ஒரு சண்டையில்... உங்க வீட்டில் இருப்பவங்களோ.... இல்ல உங்க பேரனோ... நீயே தானே வந்து ஒட்டிக்கிட்டனு... என் தங்கையைப் பார்த்து கேட்டுட்டா?! இவ்வளவும் தேவையா? உங்க குடும்பம் எங்களுக்கு ஒத்து வராது தாத்தா...” முதலில் படபடவென்று ஆரம்பித்த ரேகா முடிக்கும் போது தன்மையாகவே முடிக்க, அவள் சொல்வது நியாயம் என்பது அங்கு இருப்பவர்களுக்கும் புரிந்தது.
ஆனால் வள்ளி மட்டும், “இதுதான் உன் முடிவுனா அப்போ என்னை விட்டுடு... என் வாழ்கையில் இனி திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்ல.. எனக்கு அஸ்மி மட்டும் போதும்...” என்று அவள் தன் உறுதியை வெளிப்படுத்த
அவள் உறுதியில் அழகுமலை தாத்தாவின் மனதில்.. மற்றொரு மீனாட்சி உருவாக நான் காரணமா என்ற கேள்வி தாக்க... உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றவர்... தன் தோளிலிருந்த துண்டை எடுத்து இடுப்பில் முடிந்து... கைகள் இரண்டையும் கோர்த்தவர்,
“நெசம் தான் ரேகா ம்மா... உங்க குடும்பம் அளவுக்கு என் குடும்பம் ஆகாது தான்... நாங்க எல்லாம் எங்க சுயநலத்தையே பார்த்து வாழ்ந்துட்டோம்...” நைந்த குரலில் மேற்கொண்டு அவர் என்ன சொல்லி இருப்பாரோ... அவரின் செயலில்
“ஐயோ! தாத்தா.. என்ன இது...” என்று ரேகா மன்னிப்பு கேட்கும் குரலில் ஆரம்பிக்கவும்
“எல்லாம் உன்னால் தான்... கொஞ்ச நேரம் பேசாம இரு...” என்று மனைவியைக் கண்டித்தான் ரமேஷ். பின்னே.. உங்கள் குடும்பம் சரியில்லை சரியில்லை என்பதை வாய்க்கு வாய் சொன்னால்... அவருக்கே தெரிகிறது தங்கள் குடும்பம் சரியில்லை என்று... அதில் ஏற்கனவே நொந்து போயிருந்தவர் இன்று இப்படியான பேச்சில்... இப்படியாக நடந்து கொண்டார் அந்த வயது முதிர்ந்தவர்.
“தாத்தா, அவ தான் ஏதோ சொல்லிட்டான்னு.. நீங்க உட்காருங்க...” என்ற ரமேஷ் தற்போது அழகுமலையையும் சமாதானம் செய்ய... அங்கு ஒரு சங்கடமான சூழ்நிலை நிலவியது.
ஒரு நெடு மூச்சுடன் மீண்டும் பெரியவரே பேச ஆரம்பித்தார்... “என் குடும்பத்தில் நான் உட்பட எல்லோரும் எப்படியோ... ஆனா என் பேரன் சொக்கத் தங்கம்! நானே அவனை பெருமையா சொல்லிக்க கூடாது. இந்த உலகத்தில் அவனை மாதிரி ஒருத்தன பார்க்க முடியாது. அவன் குணத்துக்கும்... அனுசரணைக்கும்... அவன் காட்டுற அன்புக்கும்... என் குடும்பத்திலே தப்பி பிறந்தவங்க ம்மா மீனாட்சியும்... அவனும். அதனால் உங்க வீட்டுப் பொண்ணை என் பேரனை நம்பி கொடுங்க... தன் கடமையிலிருந்து தவறியவன் இல்ல அவன்... இதுக்கு மேலே என்ன சொல்ல...” அவர் இயல்பாய் முடிக்க
தன் மனம் கவர்ந்தவனைப் பற்றி பிட்டுப் பிட்டு வைக்கவும்.. ‘கேட்டுக்கோ... நல்லா கேட்டுக்கோ..’ என்று வள்ளி தமக்கையைப் பார்த்து தன் பார்வையால் சவால் விட
‘இதற்கு மட்டும் கத்துதா இந்த பல்லி...’ என்பது போல் இவள் தங்கையை முறைக்க
“எல்லாம் சரி தாத்தா.... நீங்க பார்த்த பொண்ணு அந்த மகாலஷ்மி என்ன ஆனா?” என்று ரமேஷ் கேட்க
சொல்ல ஆரம்பித்தார் அவர்... மகாலஷ்மிக்கு நடக்கவிருக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லையாம். அவளுக்கு சின்ன வயதிலிருந்து அவள் தாய் மாமன் மகன் மேல் நாட்டமாம்... அவனுக்கும் தான். ஆனால் இரு தந்தைமார்களுடனான மாமன்... மச்சான் சண்டையில்... தற்போது அவளுக்கு வேறு வரன் என்ற பேச்சில் வந்து நிற்கிறதாம்.
இதையெல்லாம் அந்த மாமன்மகனே வந்து சொல்லியிருக்க... சரி குறித்த தேதியில் வள்ளிக்கும்... குமரனுக்கும் திருமணத்தை முடிக்க பெரியவர் முடிவு செய்திருக்க... அதற்கும் முட்டுக்கட்டை போட்டான் அந்த மாமன் மகன். நடக்கவிருக்கும் திருமண வேலை நடக்கட்டும்... திருமண மேடை வரை இந்த திருமணம் வரட்டும்... ஆனால் கடைசி நொடி குமரன் மகாலஷ்மியை வேண்டாம் என்று மறுத்து சொல்லி விட்டால்... இவன் மேடையேறி அவன் விரும்பும் பெண் கழுத்தில் தாலி கட்டிவிடுவானாம்.
இரு தந்தைமார்களுக்கும் எவ்வளவு எடுத்துச் சொல்லியும்... தழைந்து போகாததால்.. கடைசி நிமிடம் அவர்களை வழிக்கு கொண்டு வர இது தான் சரி என்று அந்த பெண்ணும்... அந்த பையனும் வந்து கீர்த்திவாசனையும்... அழகுமலை தாத்தாவையும் பார்த்து சொல்லிவிட்டு சென்றிருக்க... இது என்னடா என் குடும்பத்துக்கு வந்த சோதனை என்று கவலையில் அமர்ந்து விட்டார் பெரியவர்.
இப்படி செய்ய அவருக்கு துளி கூட விருப்பம் இல்லை. ஆனால் இப்படி நடக்கவில்லை என்றால் கடைசி நிமிடம் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த பெண் சொல்லிவிட்டு செல்ல... இதையெல்லாம் கேட்டால் பேரன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே என்ற பயத்தில்... இதோ இங்கு வந்து இது தான் நடந்தது என்று அனைத்தும் அவர் சொல்லி முடித்தார்..
‘இந்த ஊரே வேணாம்.. நாம் கிளம்பலாம்’ என்ற நிலைப்பாட்டில் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள் ரேகா. யார் முகத்திலும் தெளிவு இல்லை.
ஆனால் வள்ளியோ, “பாவம் தாத்தா அந்த பொண்ணு.. அது ஏதாவது தவறான முடிவுக்கு போயிடப் போகுது... அவங்க சொன்ன மாதிரியே கடைசி நிமிடம் திருமணத்தை நிறுத்திடலாம்... அந்த பொண்ணுக்கும் அவளுக்கு பிடித்த வாழ்க்கை கிடைக்கும்... எனக்கும் என் இளா கிடைப்பார்... அந்த நிமிடம் நானும் உங்க பேரன் வாழ்க்கையில் வந்திடுறேன்...” என்று யோசனை சொல்ல
எல்லோரும் அவளை ஒரு மாதிரி பார்த்து வைத்தார்கள் என்றால்.. ரேகா, “இதை தான் இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறதுன்னு சொல்றது. உன் வழிக்கு நாங்க வந்தா நீ என்னவெல்லாம் தகிடுதத்தோம் வேலை பார்க்கிற பார்த்தீயா?” என்க
“முதலில் இப்படிப்பட்ட செயலுக்கு என் பேரன் சம்மதிக்க மாட்டான்...” அழகுமலை எடுத்து சொல்ல
“அவருக்கு தெரிய வேண்டாம் தாத்தா... நாம கடைசி நிமிடம் காயை நகர்த்துவோம்...” வள்ளியே மறுபடியும் எல்லோருக்கும் பாடம் எடுக்க... இதில் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஒன்று மட்டும் தெரிந்தது... குமரனை எந்த நிலையிலும் வள்ளி விட்டுத் தர தயாராக இல்லை என்று! அதில் அத்தனை பேரும் அவளைக் குற்றவாளியாய் காண...
தலை கவிழ்ந்தவள், “இதை சொல்ல கூடாது தான்.. இருந்தாலும் சொல்கிறேன். என் இளாவாலே என்னை ஏத்துக்க முடியாம போனா.. சத்தம் இல்லாமல் வந்த நான் சத்தம் இல்லாமல் போகிறது தானே சரி? அதனால் தான்... கடைசி நிமிடம் அவர் வாழ்க்கையில நான் இணையறேன்னு சொல்றேன்...” இவள் மென்குரலில் சொல்லி முடிக்க... அங்கு யாருக்குமே இவளின் திட்டம் பிடித்தம் இல்லை.
ஆனால் அவளின் பிடிவாதமும்... “இந்த குடும்பம் இப்படி ஆக நான் தான் காரணம்... அதை நானே சரி செய்யப் பார்க்கிறேன்... என் பேரன் மேல நம்பிக்கை இருக்கு. அதை மீறி வள்ளி வாழ்க்கையில் ஏதாவது ஒண்ணுனா.. அதை சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு...” இப்படி அழகுமலை தாத்தாவும் உத்தரவாதம் தர... மவுனித்தார்கள் அங்கிருந்தவர்கள்.
அடுத்து வந்த நான்கு மாதமும்... வள்ளி குமரனைக் கண்காணித்தவள்.. தொலைவிலிருந்து அவனை அஸ்மிக்கு அடையாளம் காட்டியவள்... அந்நேரம் எல்லாம்... ஒரு பெண்ணாய் தன்னுள்ளேயே நொறுங்கித் தான் போனாள் வள்ளி. அண்ணனுக்கு துரோகம் செய்கிறோமே என்ற பரிதவிப்பில் இருந்தவளை.. இன்னும் தவிக்க விட... ரேகா இவளிடம் பேசாமலே ஊருக்கு கிளம்ப...
“அக்கா.. என் கிட்ட பேசாம இருக்காத டி...” வள்ளி அவளிடம் கண்ணைக் கசக்க.. பெரியவளுக்கும் உருகி விட்டது.
இன்று வரை சுந்தரத்திற்கு எதுவும் தெரியாது... இதோ இன்னும் பதினைந்து தினங்களில் மலேசியா வருபவர்... பின் தங்கையைக் காண இந்தியா வருகிறார். அது சம்பந்தமாய் சில குறிப்புகளை அவர் தந்திருக்க... அதை தான் பென்டிரைவில் பதித்து வைத்தவள்... இதோ இன்று கையும் களவுமாய் கணவனிடம் சிக்கிக் கொண்டாள்.
அவள் அனைத்தையும் சொல்லி முடிக்க... குமரனோ முகம் இறுக அமர்ந்திருந்தான். கேட்டு முடித்ததும் என் வாழ்க்கையை முடிவு செய்ய நீ யார் என்று கேட்டு அடிப்பான்... கோபப்படுவான்... கத்துவான் என்று பெண்ணவள் நினைத்திருக்க... கணவனின் முகமோ பிரித்து அறியாத பாவத்தில் இருக்கவும்...
சற்றே துணிவு வர.. தன்னவனின் கரத்தை மென்மையாய் பற்றியவள், “என்ன இளா...” என்று கேட்க
“அக்காவுக்காகவும்... அத்தானுக்காகவும் தான் இவ்வளவும் நீ செய்திருக்கனா... நீ ஊருக்கு கிளம்பு.. நான் பார்த்துக்கிறேன்...” அவன் இறுகிய குரலில் சொல்லவும்.. பெண்ணவளுக்கு கண்ணில் மளுக்கென்று கண்ணீர் வழிந்தோடியது.
“அஸ்மி என் மக... அவ ஐந்து மாத குழந்தையா இருக்கும் போதே... உங்களைத் தான் அப்பான்னு கை காட்டினவ நான்... அப்போ அது யாருக்காக சொன்னேன்னு யோசிக்க மாட்டிங்களா...” இவள் கேட்க.. அவன் தன் நேர் கொண்ட பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை.
“உங்களுக்கு உடைத்து சொல்லணுமா... சரி... நான்...” இது தான் இதை மட்டும் தான் பெண்ணவளால் சொல்ல முடிந்தது. மேற்கொண்டு பேச முடியாதவளாக அடுத்த நொடி... மன்னவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் இவள்.
அவனின் உடல் மொழியே நீ எதுவும் சொல்லாதே எனக்கு எல்லாம் தெரியும் என்பதை அவளுக்கு உணர்த்தியது. ‘என்ன செய்திருக்கிறாள்! எவ்வளவு போராடி இருக்காள்... யாருக்காக? என் மேல் வைத்த காதலுக்காக!
ஆனால் நான் இவளுக்கு என்ன செய்தேன்... ஒரு ஆண்மகனே யோசித்து செய்யத் தயங்கும் நிகழ்வைக் கூட இவள் செய்து காட்டிவிட்டாள். ஏன்.. எல்லாம் என் மேல் உள்ள காதல்!’ அவனுக்கு சுவாசம் திணறியது... மேனி எல்லாம் நடுங்கியது... இதய துடிப்பின் வேகம் கூடியது... அவன் உடலே அவனுக்கு பாரமாக கால்கள் துவண்டு போனது.
“இளா...” அவன் அணைப்பில் இவளும் தடுமாறினாள்.
இதுவரை பெண்களின் நகக்கண்ணைக் கூட வியந்து கண்டவனில்லை... பெண்களின் செல்ல கோபம் தெரியாது... சின்ன சிணுங்கல் தெரியாது... அவர்களின் கண்ஜாடை தெரியாது... மயக்கும் மந்திர புன்னகை தெரியாது. இப்படி இதை எதையும் அறியாதவனை... அறிய முற்படாதவனைக் காதலிக்கிறாள் ஒருத்தி... அதுவும் உயிருக்கு உயிராய்!
வெகுநாள் பிள்ளைப்பேறு அற்ற ஒரு தந்தை... தான் பெற்ற வரத்தின் பலனாய் முதன் முதலாய் தன் மகளைக் கையில் ஏந்துபவனின் பாசப் போராட்டத்தின் நிலை... இல்லை இல்லை... இஷ்ட தெய்வத்தை தன் கண்ணெதிரே கண்ட பக்தனின் பரவச நிலை... இப்படியான பல கலவையான உணர்வுகளின் நிலையில் இருந்தான் குமரன்.
அவனின் உணர்ச்சி பூர்வமான நிலையில்... தன்னவளுக்கு ஒரு முத்தம் பதிக்க வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. அவனின் அணைப்பில் பெண்ணவளின் இதயமே நொறுங்கியிருக்கும்... பின் அவளின் எலும்புகள் எல்லாம் எம்மாத்திரம்... மூச்சு திணற... உடல் எங்கும் வலி காணவும்...
“ஸ்… வலிக்குதுங்க இளா...” இவள் திக்கித் திணறி தன்னவனிடம் சொல்ல
“பொறுத்துக்கோ டி...” கரகரப்பாய் தெறித்து விழுந்த அவன் குரலில் என்ன இருந்தது... கர்வம்... பரவசம்... ஆனந்தம்... ம்ஹும்... இதையெல்லாம் விட... காதல்.. காதல்.. காதல் மட்டுமே அவன் குரலில் நிரம்பி வழிந்தது.