பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 19

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

பூ 19

பறவைகளின் கீரீச் சத்தம் இனிய ஸ்வரங்களாக இசையை எழுப்பிய அதிகாலை வேளை, இதமான குளிர் மேனியை தழுவிட, இளமஞ்சள் நிற ஆதவன் தன் ஆதிக்கத்தை மண்ணில் செலுத்தும் அழகில் மனம் ஏனோ லயிக்கவில்லை சிந்தனையின் ரேகைகளின் சுருக்கம் நெற்றியில் படர்ந்து கொண்டிருந்தது அவனுக்கு…


இரவு முழுவதும் நித்திரையின் சுவடு கூட அவன் சிவந்திருந்த கண்களை தழுவவில்லை மேகலாவிடம் கேட்டது பாதி எனில் தேவாவின் அலைபேசியில் தெரிந்து கொண்டது மீதி இது எப்படி சாத்தியம் இதை அவன் மனம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை


காதலுக்கு அவன் எதிரி இல்லை ஆனால் தன் தங்கை காதலிப்பாள் என்று எதிர்ப்பார்க்காதவனுக்கு இது பேரதிர்ச்சியே என்னதான் படித்து பட்டம் பெற்று வேற்றூரில் உத்தியோகம் பார்த்து நாகரிகத்தில் திளைத்து இருந்தாலும் காதல் என்ன காதல் ம்கூம் அந்த வார்த்தை சொல்லக்கூட யோசிப்பவன் ஆயிற்றே ஜெயசந்திரன்.


வானம் வெளுத்து தன் நீலவண்ண ஆடையை உடலெங்கும் உடுத்திக்கொண்ட நேரம் வயலுக்கு வந்திருந்தவனை பார்த்த சௌந்தரலிங்கம் "வா ஜெயசந்திரா" என்று அழைத்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சுவிட்சை போட்டு விட்டு கையில் மம்பட்டியுடன் வந்தார்.


தந்தையின் கையில் மம்பட்டியை பார்த்ததும் தனது வேட்டியை மடித்து கட்டியவன் "தாங்கப்பா" என்று தந்தையின் கையில் இருந்த மம்பட்டியை வாங்கி "எங்க வெட்டி விடனும்னு சொல்லுங்க நான் செய்றேன்" என்று வரப்பில் இறங்கினான்.


"உனக்கு என்னப்பா தலையெழுத்து நான் செய்றேன் தினமும் செய்ற வேலை தான்… நீ என்னைக்கோ ஒரு நாள் வர நல்லா ஓய்வை எடு" என்று கூறி அவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள முற்பட


"என் தலை எழுத்து தான் அதை நீங்க ஆசைபட்டிங்களேன்னு கொஞ்சம் மாத்தி எழுதி இருக்கு" என்று சிரித்தவன் "எனக்கு இது எல்லாம் செய்ய பிடிச்சி இருக்குப்பா நான் சின்ன வயசுல செய்த வேலைகள் தானே, நானே செய்றேன்". என்றவன் வயலுக்கு செல்லும் நீரை மடை திறந்து வெண்டை செடிகளுக்கு திருப்பி விட்டான்.


"அதுக்கு இல்லப்பா நீ ஓய்வு எடுப்பியேன்னு தான் சொன்னேன்" என்றவர் "இன்னைக்கே கிளம்புறியா சந்திரா" என்றார் உள் சென்ற குரலில்.


சிறிது நேர மௌனத்திற்கு பின் "இல்லப்பா நான் ஒரு பத்து நாள் இருக்கலாம்னு இருக்கேன் மார்னிங் மெயில் அனுப்பி இருக்கேன் லீவ் சேங்ஷன் ஆகிடும்னு நினைக்கிறேன்". என்றிட


சற்று ஆஸ்வசமாய் மூச்சி விட்டார் சௌந்தரலிங்கம் "என்னன்னு தெரியல சந்திரா உங்க அம்மா பயப்படுறா மாதிரி நம்ம தேவாவுக்கு ஒன்னு போன ஒன்னு வருது இந்த முறைசெத்து பொழச்சி வந்து இருக்கா குலதெய்வ கோயிலுக்கு ஒரு பூஜைய போட்டுட்டு வந்துடுவோம்னு தோனுது உனக்கு தோதுபடுமான்னு தான் கேட்டேன்" என்றிட


"அதுக்கு என்னப்பா தாரளமா செய்யலாம்... ஆமா நம்ம பெரிய ஸ்கூல்ல வேலை நடக்குறா போல இருக்கு நேத்து வரும்போதுதான் பார்த்தேன்." என்றபடியே வெண்டை செடிகளுக்கு சென்ற தண்ணீரை மறித்து புதிதாய் போடப்பட்ட கத்தரி செடிகளுக்கு தண்ணீரை மாற்றி விட்டான்.


"ஆமா சந்திரா உனக்கு கூட தெரியும் நம்ம நிலத்தை வாங்கினாரே விசாகன் அந்த தம்பி தான் வேலை செய்யுது. தேவாவை ஆஸ்பிட்டல்ல சேர்த்தது கூட அந்த தம்பி தான்". என்று விளக்க


'வெறும் விசாகன் சொன்னாலே தெரிய போகுது இதுல இத்தனை விரிவாக்கம் தேவையா?' என்று காரணமே இல்லாமல் விசாகனின் மேல் கோவமும் ஒரு வெறுப்பும் வந்தது ஜெயசந்திரனுக்கு . முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழியை மீண்டும் ஜெயசந்திரனுக்கு விசாகன் மேல் வந்த கோவம் உணமையாக்கியது…


தந்தை மகன் இருவரும் மற்ற கதைகளை பேசியபடியே வயலில் சில வேலைகளை பார்த்தவர்கள் சூரியனின் வெப்பக்கதிர்கள் தன் தீட்சன்யத்தை பூமியை நோக்கி செலுத்தும் நேரம் வீடு திரும்பி இருந்தார்கள் இருவரும்...


……


"ஏலேய் முத்து சித்த வண்டிய எடு நம்ம சாமுண்டி அம்மன் கோவில் வரையும் ஒரு எட்டு போய் விளக்கப்போட்டுட்டு வந்துடுவோம்." என்றபடி கையில் பையுடன் வந்தார் தில்லை... "நானும் வரட்டுமா ஆத்தா?" என்ற பணிப்பெண்ணை நிறுத்தி "கொள்ளையில நம்ம லட்சுமிக்கு தீணிய வையி வீட்டை பாத்துக்க அங்க நம்ம தேவா புள்ள வரும் நான் பாத்துக்குறேன்". என்று கூறி காரில் ஏறி அமர்ந்தவர் சாமுண்டி அம்மன் கோவில் வாசலில் வந்து இறங்கினார்.


வாசல் புறம் பார்வையை பதித்தவாறே அனைத்தையும் செய்து முடித்தவர் விளக்கேற்றும் சமயம் கூட அவள் வந்துவிடுவாள் என்று திரும்பி பார்த்துவிட்டே தீபத்தை ஏற்றினார். பேரனின் சட்டையை கையில் வைத்துக்கொண்டு கோவிலை சுற்றி விட்டு வந்து அமர்ந்தவருக்கு அவளை பார்க்காதது மனதுக்கு சங்கடமாகவே இருக்க டிரைவர் முத்துவை அழைத்து போனை கொடுத்து தேவாவிற்கு போட்டு தருமாறு கூறினார்.


"ஹலோ தாயீ" என்ற அழைப்பில் அந்த பக்கம் இருப்பது யார் என்று தெரிந்துக்கொண்டவள் "பாட்டி எப்படி இருக்கிங்க கோவில்ல தான் இருக்கிங்களா?" என்றாள் மகிழ்வுடன்.


"ஆமா தாயீ நீ வரலியேன்னு தான் போன் போட்டேன்". என்று அவளை பற்றி விசாரிக்க


தயங்கியபடியே "பாட்டி எனக்கு கையில அடிபட்டு இருக்கு அதனால தான் வர முடியல" என்ற காரணத்தை கூறிட


"அப்படியா தாயீ" என்றவர் ஒரிரு வார்த்தைகள் பேசிய பின்னர் போனை அணைத்தவருக்கு மனது கேட்கவில்லை அவளை போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் தோன்ற டிரைவரிடம் கூறி அவளின் ஊருக்கு வண்டியை விடச் சொன்னவர் அவளுடைய வீட்டினை விசாரித்து அங்கே போய் இறங்கி இருந்தார்.


வாசலில் நின்ற பாட்டியை பார்த்ததும் மகிழ்ச்சியில் ஓடியவள் "பாட்டி வாங்க வாங்க உள்ள வாங்க" என்று அழைத்து சென்றவள் சோபாவில் அமரவைத்துவிட்டு அன்னையை அழைத்தாள். தேவாவின் கையில் இருந்த கட்டை பார்த்ததும் அதிர்ந்த தில்லை "அடி ராசத்தி... நான் என்னமோ சின்ன காயம்ன்னு நினைச்சா இந்த பெரிய அடியா இருக்கே இப்படி உக்காரு ஆத்தா... பாத்து நிதானமா இருக்கறது இல்லையா" என்று வருத்தமாக பேசவும் மரகதமும் அவ்விடம் வந்துவிட்டார்.


"நான் நிதானமாதான் இருந்தேன் பாட்டி எதிர்ல இருந்தவனுக்கு தான் அது இல்லையே அதுதான் அவன் சண்டையில என்னை இழுத்துட்டான்". என்று வேடிக்கைப்போல் சொல்லி கொண்டு இருந்தாள் தேவா


அமர்ந்திருந்த தில்லையை அடையாளம் கண்டுக்கொண்ட மரகதமும் "வாங்கமா எப்படி இருக்கிங்க? இந்தாங்க" என்று குடிக்க மோரை கொடுத்தவர். அவர் அடிப்பட்டதை பற்றி விசாரிக்கவும் "இவ மேல எங்களுக்கு கொள்ளை பிரியம் மா வரம் மாதிரி வந்து பொறந்தவ.. அவளுக்கு அடிமேல அடியா இருக்கு ஒரு ஆபத்து போச்சேன்னு சந்தோஷப் படுறத்துக்குள்ள ஒன்னு வந்து நிக்குது" என்று மனக்குறையை அவரிடத்தில் இறக்கி விட


"பெத்தவங்க உங்களுக்கு இவ மேல இருக்குறது பாசம் ஆனா எங்கே இருந்தோ வந்த எனக்கும் பிரியம் இருக்குன்னா அது தேவா நடந்துக்குற முறையில தானே... என் தாயீ தங்க மனசுக்கு ஒரு குறையும் வராது… அவ குழந்த மனசுக்கு எப்பவும் நல்லதுதான் நடக்கும்" என்று அவளின் கன்னம் வழித்து திருஷ்ட்டி கழித்தவர் "இந்தாத்தா பிரசாதம் நீ நல்லபடியா எந்த குறையும் இல்லாம நூறு வருஷம் சௌக்கியமா இருக்கனும். மனம் போல வாழ்வு அமையனும்." என்று வாழ்த்தி அவளுக்கு குங்கும பிரசாத்தை நெற்றியில் இட்டு விட்டவர் கோவிலில் இருந்து கொண்டு வந்த பூவை அவளின் தலையில் வைத்து விட்டார்.


அதற்குள் வெளியில் சென்றிருந்த தந்தையும், தமையனும் வந்துவிட சௌந்தரலிங்கத்தை தனது தந்தை என்று அறிமுகப்படுத்தி விட்டவள் தில்லையை தான் கோவிலில் சந்தித்ததாக கூறிட இரண்டொரு வார்த்தை அவரிடத்தில் பேசி இருந்தார் சௌந்தரலிங்கம். ஜெயசந்திரனுக்கு இவரை எங்கேயோ பார்த்த நியாபகம் வர அவன் மூளையில் அன்று விசாகனோட பார்த்த உருவம் என்று கண்டு கொண்டவன் முகம் கொஞ்சம் இறுக்கத்தை பெற்று இருந்தது.


சிறிது நேர உரையாடலுக்கு பின் தேவாவின் வீட்டில் இருந்து கிளம்பிய தில்லை நேராக வீட்டுக்கு சென்றிருந்தார்.


….


'அந்த பையன் இந்த மாசம் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கலையே!!! கைய வேற கடிக்குது' என்று உள்ளங்கையை சொறிந்தபடி தனக்குதானே பேசிக்கொண்ட ரத்தினம் நேராக வீட்டிற்குள் சென்று அடுக்களைக்குள் புகுந்து டப்பாக்களை ஆராய்ந்துக்கொண்டு இருந்தான்.


கொள்ளையில் போட்டு இருந்த மல்லி தோட்டத்தில் பூக்களை பறித்துக்கொண்டு இருந்த அலமேலு வேலை செய்பவர்களுக்கு தண்ணீரை எடுக்க வர கணவனின் செயலைக் கண்டு ஆத்திரம் மேலிட "என்னய்யா என்ன தேடிக்கிட்டு இருக்க? என்ற அலமேலுவின் சத்தத்தில் திடுக்கிட்டு பின் நிதானமாக என்ன தேடுவேன் எல்லாம் பணத்தை தான்... ஆத்தாளும் மகளும் சம்பாரிக்கிறிங்களே கால் காசை கண்ணுல காட்ட மாட்டரிங்களே டி" என்று நின்றிருந்த அவரை தள்ளி விட்டு இன்னொரு பக்கம் இருந்த டப்பாவில் தேடிட


"நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? வெளியே சொல்லாதயா வெட்க கேடு பொம்பளைங்க உழைச்ச பணத்துல உட்கார்ந்து சாப்பிடுறியே அதுக்கே நீ நான்டுக்கிட்டு சாகனும் அதெல்லாம் உனக்கு எங்க இருக்க போகுது?" என்று சுல்லெண வார்த்தைகளை கொட்ட


"அதுக்கு தானேடி உன்னைய கல்யாணம் பண்ணேன் நீ மட்டும் என்ன யோக்கியமா உனக்கு மேய வாட்டசாட்டமா ஒருத்தன் சிக்கிட்டான்னு தான என் பின்னாடி வந்த" என்று கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி வார்த்தைகளை வரம்பு மீறி பேசிட கண்ணில் பட்ட உலக்கையை கையில் எடுத்தவர் "வெளியே போயா வெளியே போன்னு சொன்னேன்... இனி இந்த வாச படிய மெறிச்ச மண்டைய உடச்சி மாவிளக்கு வைச்சிடுவேன் போயா வெளியே" என்று அவனை வீட்டை விட்டு வெளியேற்ற மனைவியின் இந்த புது அவதாரம் கையில் உலக்கை அவர் வாங்கிய மூச்சு இது அனைத்தும் அவருக்கு காளியின் அவதரமாய் தெரிய அடித்து பிடித்து வெளியே இறங்கியவன் "ஏய் என்னயே இந்த ரத்தினத்தையே அடிக்க வரியா இப்போ போறேன்டி ஆனா இப்படியே இருப்பேன்னு கனவுல கூட நினைச்சி பாக்காத டீ வருவேன் வந்து உன்னை அழ வைக்கிறேன்டி" என்று சபதம் போல் கூறியவன் இதற்கு காரணமானவன் மேல் கொலைவெறியில் இருந்தான்.


…..


"டேய் மாப்ள ரத்தினத்துக்கு கொடுக்க வேண்டிய பணம் இந்த மாசம் இன்னும் நீ கொடுக்கல" என்று விசாகன் மறந்துவிட்டானோ என்று ஒரு முறை நியாபகம் படுத்திவிட்டான் சுந்தரன்.


அதை காதில் வாங்கதவன் போல கணக்கை பார்த்துக்கொண்டு இருந்தவன் "நம்ம தென்னந்தோப்புல காயெல்லாம் லோடு போயிடுச்சி ல" என்று கேட்டபடியே கணக்கு நோட்டின் அடுத்த பக்கத்தை திருப்பி இருந்தான் விசாகன்.


நண்பன் கவனிக்கவில்லையோ என்று நினைத்த சுந்தரன் "விசா நான் கத்தறது உன் காதுல விழுதா இல்லையா" என்று மற்றும் ஒரு முறை உரக்க பேசி இருந்தான்.


அவன் போட்ட சத்தத்தில் காதை குடைவது போல ஒரு விரல் கொண்டு குடைந்து "டேய் நல்லா தானே கேக்குது எதுக்குடா இப்படி கத்துற" என்று பேசியவன் "நீ சொன்னது எல்லாம விழுந்துச்சி இனி அந்த ஆளுக்கு ஒத்த பைசா கூட கொடுக்க கூடாது" என்றான் அழுத்தமாக


"என்னடா தீடீர்னு இப்படி ஒரு முடிவு இவ்வளவு நாள் தண்டமா அழுதுட்டு தானே இருந்த அவனுக்கு இந்த ஞானோதயம் எப்போ" என்று நக்கலடித்திட


"ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்". என்று கடுப்பாக கூறியவன் "கோர்ட்ல கேஸ் நடக்குது அந்த நேரத்துல நாமலே மொத்தத்தையும் அனுபவிக்கிறோம்னு வக்கீல் சொன்னதுனால கொடுத்தேன். இனி அது தேவை இல்லை அவன் எந்த கோர்ட்டுக்கு வேணா போகட்டும் நான் பாத்துக்குறேன்". என்று கூறியவன் அடுத்த பக்கத்தில் பார்வையை ஓட்டினான்.


"மவனே உன் மனசுல இருக்கறது அப்பட்டமா தெரியுது இன்னும் வெட்டி ஜம்பம் பண்ணிக்கிட்டு திறியுற... உன் ஆளு மேல கைய வைச்சிட்டான்னு தானே இந்த காசை கொடுக்கமா தட்டி விட்டு இருக்க.. பண்ணு மாப்ள நீ பண்ணு என்று மனதில் சொல்லிக்கொண்டவன் சிரிப்புடனே அவ்விடம் விட்டு விலகி சென்றான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN