பூ போல் என் இதயத்தை கொய்தவளே பகுதி 21

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member



பூ 21


புழுதி மண்ணோடு வீட்டிற்கு வந்த ஜெயசந்திரனை பார்த்து பயந்து விட்ட மரகதம் அவனை ஆராய்ந்தபடி "எய்யா சாமி... என்னய்யா... என்னய்யா இது, சட்டையெல்லாம் மண்ணா இருக்கு" உதட்டு ஓரத்தில் இருந்த ரத்தத்தை சுட்டிகாட்டி "என்னய்யா ரத்தம் வருது, என்ன ஆச்சு" என பதட்டப்பட்டவர்


"அடியே தேவா உன் அப்பார கூப்புடுடி" என்று பதட்டத்தில் வாசலிலேயே கத்த ஆரம்பித்து விட்டார்.


"அம்மா ஷ்…ஷ்... வாங்க எனக்கு ஒன்னுமில்ல" என்று அவரை சத்தம் போட வேண்டாம் என்று அமைதிபடுத்தியபடி உள்ளே தள்ளி செல்ல அதற்குள் வந்துவிட்டாள் தேவா


அண்ணனின் கோலத்தை கண்டவள் "அண்ணா... என்ன டா என்ன ஆச்சி இப்படி வந்து இருக்க" என்று அவனை கேட்டபடியே கையை பிடித்துக்கொண்டு "அப்பா, அப்பா" என்று அழைத்தபடி உள்ளே ஓடினாள்.


அதற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டவன் "அம்மா ஒன்னுமில்ல இங்க பாருங்க நல்லாதான் இருக்கேன்". என்று தாயை அமைதிபடுத்த முயன்றவன் தந்தை வந்ததும் "இதோ வந்துடுறேன்". என்று அவசரமாக உள்ளே சென்றான்.


மகனை பார்த்து திகைத்து நின்றவர் "என்ன மரகதம், என்ன ஆச்சு? ஏன் இவன் இப்படி வந்து இருக்கான்? ஏதாவது சொன்னானா சந்திரன்?" என்று மனைவியை கேட்க


"என்னங்க சொன்னான், எதுவும் சொல்லாம உள்ள போயிட்டான்... மனசு கிடந்து அடிச்சிக்குது" என்றார் கண்கள் கலங்கிட


உள்ளே சென்றவனும் அடுத்த 10 நிமிடத்தில் தலை துவட்டியபடியே வெளியே வந்து "அது ஒன்னுமில்லப்பா பைக் ஸ்லிப் ஆகிடுச்சி, வரும்போது தெரு நாய் ஒன்னு குறுக்க வந்துடுச்சி அது மேல ஏத்தமா இருக்க சடன் பிரேக் போட்டதுல விழுந்துட்டேன்". என்று கிடைத்த காரணத்தை கூறிட


விடு விடுவென சாமி அறைக்கு சென்ற மரகதம் "அம்மா தாயே என் புள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வராம நீ தான் தாயே கூட இருந்து காப்பத்தனும்" என்று கோரிக்கையை வைத்து ஒத்த ரூபாயை மஞ்சள் துணியில் வைத்து வீட்டு குலதெய்வத்தின் பெயரை சொல்லி முடிச்சிட்டவர் "இந்த வருசம் உனக்கு அலகு குத்தி பூ குழி இறங்குறேன் தாயே"... என்று வேண்டிக்கொண்டு வெளியே வந்து மகனுக்கு விபூதியை வைத்து விட்டு காலண்டரை எடுத்து நாள் பார்க்க ஆரம்பித்து விட்டார்.


"என்னம்மா தேடுற" என்ற தேவாவின் கேள்விக்கு "குலதெய்வ கோவிலுக்கு போறதுக்கு நாள் பாக்குறேன் புள்ள" என்றவர் கணவரிடம் "இந்த பாருங்க, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முகூர்த்த நாளா நிறைஞ்சி வந்து இருக்கு, போய் அபிஷேகம் நடத்தி ஒரு பட்டையும் சாத்தி பொங்களை வச்சிடுவோம். அப்படியே உங்க தங்கச்சியையும் தம்பியையும் கூப்பிட்டுடுங்க" என்று கூறிட


தம்பியும் தம்பி மனைவியும் நல்ல மாதிரிதான் என் தங்கை என்ற பெயரில் ஒரு அடங்கா பிடாரியை வைத்துக்கொண்டு நல்ல நாள் அதுவுமா கண்ணை கசக்க போகிறாள் மனைவி என்று நினைத்தவர் "அவங்க எதுக்கு மரகதம், இப்போதைக்கு நாம மட்டும் போவேம்" என்று தன் மறுப்பை சௌந்தரலிங்கம் தெருவிக்க


"நாளை உன்னை கூப்பிடல என்னை கூப்பிடலன்னு வரக்கூடாதுங்க பொங்கல் வைக்க தானே


போறோம். ஒரு சொந்த பந்தம் இல்லாம எப்படி , நீங்க சொல்லுங்க வர்றதும் வராததும் அவங்க இஷ்டம் உங்க தம்பியும் இளையாவும் பிரச்சனை இல்லை ஆனா உங்க தங்கச்சிய நினைச்சி பாருங்க சொல்லலனா என்னாகும்னு பரவாயில்லை சொல்லி விடுங்க" என்று கூறினார் மரகதம்.


'இந்த அம்மாவுக்கு புத்தி கெட்டு போச்சா இப்போ எதுக்கு அவங்கள எல்லாம் கூப்பிடுது, எப்ப வந்தாலும் நம்மல ஒரு உருட்டு உருட்டாம போகமாட்டாங்களே' அந்த அம்மாவை நினைக்கும் போதே பயபந்து உருண்டது தேவாவிற்கு 'அங்க எப்படியாவது தப்பிச்சி அண்ணன் கூட ஓடிடனும்' என்று நினைத்துக் கொண்டாள்.


...…..


"ஏலேய் மாப்ள …. வெளிய வா யா மாப்ள" என்று தெருவில் நின்று ஏலம் விட்டுக்கொண்டு இருந்தான் ரத்தினம்.


உள்ளே பணி செய்யும் பெண்களுக்கு வேலையை சொல்லியபடி இருந்த தில்லையின் காதில் நாரசமாய் விழுந்தது அந்த வார்த்தைகள். "அது யாருடி என் பேரனை மாப்பிளங்கறது… தங்கசிலையாட்டம் இந்த வீட்டுக்கு மருமகள நான் கொண்டு வர இருக்கும் போது இவன் யாரு புதுசா மாப்புளங்கரான்". என்று காதை கூர்மையாய் தீட்டியவர் அந்த குரலுக்கு சொந்தக்காரனை யார் என ஆரய்ந்தார்.


"சொத்துல பங்கு தராம எனக்கு பட்டை நாமத்தை சாத்திட்டு, நீ ஒருத்தனே அனுபவிக்கலாம்னு பாக்குறியா… பெரிய வீடு சொத்து சுகம் இருந்தா மட்டும் போதாது மாப்ள, கொடுக்கனும் கொடுத்து பழகனும்", என்று தத்துவமாய் வீசிய ரத்தனம், இன்னும் விசாகன் வெளியே வராமல் இருப்பதால் கோவமாய்


"ஏலேய் மாப்பிள, வெளியே வா யா,


கேக்க ஆள் இல்லன்னு ஏமாத்த திட்டம் போட்டியோ... எய்யா ஊருக்குள்ள இருக்க பெரிய மனுசனுங்களா இந்த நியாய அநியாயயத்தை கேக்க மாட்டிகளா? என்னவோ ஊர்ல இவன் ஒருத்தன் மட்டும் தான் நல்லவன்னு பகுமானம் காட்டிக்கிட்டு இருந்திங்களே, அந்த நல்லவன் பண்ற காரியத்தை பாத்திங்காளா " என்று ஏக வசனத்தில் பேசிக்கொண்டு இருந்த ரத்தினம் வாயில் மதுபானத்தின் மூடியை திருகி துப்பிவிட்டு மடமடவென தொண்டையில் சரக்கை இறக்கி கொண்டான்.


"ஒத்த கை உடைஞ்சும் புத்தி வருதா பார் அடுத்தவன் சொத்துக்கு ஆட்டைய போட வரான்" என்று ஒருவன் பேசிக்கொண்டே போக


ரத்தினத்தை பார்த்தபடியே அவர்களுக்குள்ளாகவே சத்தமில்லாமல் "ஏத்தம் டா அவனுக்கு இவனையெல்லாம் சங்குலேயே மிதிக்கனும்" என்று பேசி சென்றிட அவன் காதில் அட்சரசுத்தமாய் விழுந்து தொலைக்க சென்றுக்கொண்டு இருந்தவனின் தோளில் இருந்த துண்டை பிடித்து |என்னமோ நீ வாங்கி கொடுத்த சரக்கை ஊத்திக்கிட்டு ஆடுறா மாதிரி பேசுற!!"


"இது மாமனுக்கும் மாப்பிளைக்கும் உண்டான சொத்து பிரச்சனை, இதுல நீ யாரு தலையிட போடா …. வந்தோமா வேடிக்கைய பார்த்தோமா வாய பொத்திக்கிட்டு போனோமான்னு பேசாம போயிட்டே இருக்கனும். இன்னைக்கு அடிச்சுக்குவோம், நாளைக்கு என் பொண்ணையே கட்டிக்கொடுத்து கூடிக்குவோம், என்னை பேசுற உரிமை என் மாப்பிளைக்குதான் இருக்கு. அவனை கேக்குற உரிமை எனக்கு தான் இருக்கு.. எனக்கு எவனும் வந்து பஞ்சாயத்து பண்ணாதிங்க" என்று தரதர வென இழுத்து அவனை ஒரு சுற்று சுற்றியவன் தள்ளி விட்டு மீண்டும் வீட்டின் முன் நின்று பேச ஆரம்பித்தான்.


"நீ பாட்டுக்கு கொடுக்கறத வஞ்சகம் இல்லாம கொடுத்து இருந்தியனா நான் பாட்டுக்கு பொத்திக்கிட்டு இருந்து இருப்பேன்… அவனவன் பேசாம போயிருப்பான். இது கோர்ட்டுல கேஸ் நடக்குற நிலம் மாப்ள, நீ ஒருத்தனே அமுக்கலாம்னு பார்த்தா விடுவானா இந்த ரத்தினம்…" என்னும் போதே விளக்கமாறுகட்டை வெளியே பறந்து வந்து அவன் காலடியில் விழுந்தது.


அதன் தாக்கத்தில் சற்று நேரம் பேச்சிழிந்த ரத்தினம் என்ன என்று பார்க்கும் நேரம் "அது எவன்டா என் வீட்டு முன்னால என் பேரனை நாக்கு மேல பல்லை போட்டு ஏமாத்துறவன்னு சொல்றது. எவனுக்கு எவன் மாப்பிள்ளை என் பேரனுக்கு இந்த ஊர்ல பொண்ணு எவன் வைச்சிருக்கான். ரதியாட்டம் நல்ல குடும்பத்தை சேர்ந்த பொண்ணை கூட்டிட்டு வந்து காமிக்குறேன் பாருங்கடா…" சீமை சித்திராங்கி சீக்கு வந்த கோழியாட்டும் இருக்குறவ எல்லாம் என் பேரனுக்கு பொஞ்சாதியா ஆக முடியாது, அது அதுக்கு ஒரு தரம் வேணும்" என்று மிடுக்காய் விழுந்தது தில்லையின் வார்த்தைகள்


"பொண்டாட்டிய வைச்சி பொழைக்க வக்கத்த நாயிக்கு, அவ சொத்து மட்டும் கேக்குதோ… பொண்ணை கொடுத்து புடுங்கலாம்னு பாக்குறானுங்க வெக்கங்கெட்டவனுங்க, விளக்குமாறு கட்டை பிஞ்சிடும்" என்று காரமாய் கூறியவர்


"பொண்ணையே இல்லைங்குறேன் இதுல உரிமை கொண்டாட வந்துட்டானுங்க மூதேவிங்க, தெருவுல தெளிக்கிற சாணிய கரைச்சி முகத்துல ஊத்த வைச்சிராதிகளே, நான் மருதாச்சலமூர்த்தி பொண்டாட்டி சொன்னத செய்வேனாக்கும்". என்று கூறி


"கால் காசு உழைச்சி சம்பாதித்து கொடுக்க துப்பில்லாத ஜென்மம், என் பேரனை பேச வந்துட்டானோ" என்று படபடவென பட்டாசாய் வெடிக்க ஏறி இருந்த போதை கூட இறங்கியது அவனுக்கு


ரத்தினம் நினைத்து வந்ததோ விசாகன் இருப்பான் மான மரியாதைக்காவது பணத்தை தூக்கி எறிவான் என்ற அல்ப எண்ணத்தில் வந்தவன தில்லையின் அர்ச்சனையில் கதிகலங்கி போய் நின்றான். இத்தனை வருஷங்களில் நேரிடையாக அவரிடம் பேசியது இல்லை ரத்தினம் அனைத்துமே வீட்டு ஆண்கள் பார்த்துக் கொண்டதால் அவர் பேசும் அளவிற்கு சென்றதும் இல்லை... இன்று விசாகன் இல்லாது போனதால் மாமியாரிடம் வசமாய் வாங்கிக்கொண்டவன் வந்த சுவடு இல்லாமல் திரும்பிட எண்ண அவன் எண்ணத்தின் நாயகனே பைக்கில் வந்து இறங்கினான்.


அவனையும் தில்லையையும் பார்த்துக்கொண்டே வந்த விசாகனின் மனம் மட்டும் ரத்தினத்தை புரட்டும் கோவத்தில் இருந்தது.


அவன் பார்வையையே என்ன என்ற கேள்வியாய் நினைத்த ரத்தினம் "மாப்ள எனக்கு மாசம் மாசம் நீ கொடுக்குற பணம் இன்னும் வரல... நீ… அதெல்லாம் கரெக்ட்டா கொடுத்துடுவ இத்தனை வருஷத்துல ஒரு நாள் கூட தவறுனது இல்ல நடுவுல இந்த சுந்தரம் பைய தான் ஏதோ விளையாடி இருக்கான் போல" என்று சமாதனம் போல் பேசியவனை இடுங்கும் பார்வை பார்த்த விசாகன்


ரத்தினத்தை ஓங்கி ஒரு அறை அறைந்தான் அது சுந்தரனை பற்றி தவறாய் சொன்னதற்காகவா இல்லை தேவாவின் கையில் காயம் ஏற்படுத்தியதற்காகவா என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்… அடிவாங்கியவன் காது கொய்ங் என்று வந்த ஒளி மட்டும் நிற்கவே இல்லை "அவனை பத்தி பேச நீ யாருயா அவன் கால் தூசிக்கு நீ ஈடாகுவியா.. அவனை பேச உனக்கு என்னயா தகுதி இருக்கு .. இனி ஒரு முறை இந்த வீட்டு பக்கம் உன்னை பார்த்தேன் அதே இடத்துல வெட்டி புதைச்சிடுவேன்" என்று எச்சரிக்கை விட்டவன் பைக்கில் இருந்து இறங்கியபடியே


"அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பார் உனக்கு பணம் இனிமே கொடுக்க முடியாது உன்னால என்ன செய்ய முடியுமோ போய் செய்துக்கோ" என்று கூறியவன் வீட்டிற்குள் சென்று விட்டான்.


அதுவரை பேரனின் ஆளுமையை ரசித்த தில்லை ரத்தினத்தை பார்த்து "தூ வெக்க கெட்ட ஜென்மம் இது எல்லாம் என்னைக்கு தான் திருந்துமோ" என்று அவன் காதுபடவே பேசிய தில்லை "அடியே எவடி அங்க இருக்குறது வெளியே வெளக்குமாறு போட்டேன் வாசலை கூட்டி குப்பைய தள்ளிட்டு வெளக்குமாற கொண்டு வாங்கடி எவனாவது களவாணி பையன் திருடிட போறான்" என்று உரக்க குரல் கொடுத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தார்.


எதுவும் செய்ய முடியாத ரத்தனம் அவன் அடித்ததில் காது மட்டும் ஏதோ மந்தமான உணர்வில் இருந்தவன் தில்லையின் சத்ததில் தெளிந்திட நேராக டாஸ்மாக்கை நோக்கி நடையை கட்டினான்.


…..


கையில் காயம் ஏற்பட்டதால் தேவசேனா வெளியே சென்று நான்கு ஐந்து தினங்கள் ஆகி இருந்தது. ஏனோ இன்று தன் ஹீரோவை பார்க்க வேண்டும். என்று மனம் உந்த மனதில் குறுகுறுப்பாய் இருந்தது இடை தாண்டி இருந்த முடியை பின்னலிட சொன்னவள் வேறு ஒரு தாவணிக்கு மாறி மேகலாவின் வரவிற்கு காத்திருந்தாள். மணி நான்கை நெருங்கி கொண்டு இருந்தது.


வாசலிலேயே அவளுக்காக தவம் இருந்தவள் எப்பவோ வரன்னு சொன்னவ இன்னும் ஆளையே காணும் என்ன தான் பண்ணுவாளோ என்று மேகலாவை திட்டிக்கொண்டு இருந்தாள்.


அவளை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் வந்த மேகலா,… உள்ளே வராமல் வாசலிலேயே நின்று தேவா என்றே குரல் கொடுத்தாள்.


ஹே வந்துட்டியா உள்ளே வாடி என்று பதிலுக்கு குரலை கொடுக்க நான் வரலை என்பது போல் தலையாட்டியவளை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவள் இரு என்று கை காட்டி விட்டு "அம்மா நான் மேகலாவ பார்த்துட்டு வறேன்". என்று குஷியோடு துள்ளி ஓடும் நதியாய் கரைபுரண்ட சந்தோஷத்துடன் அவனை காண வேண்டும் என்ற ஆவலில் வெளியே ஓட


அவளுக்கு முன்னால் வெளியே வந்த ஜெயசந்திரன் மேகலாவை பார்த்து முறைத்திருந்தான். அவனை பார்த்த மேகலா அவன் புறம் திரும்பாமல் பார்வையை தழைத்து நின்றிருந்தவளின் அருகில் சென்றவன் "வீட்டுக்கு போ" என்றான் அழுத்தம் நிறைந்த குரலில்.


"அது தேவா" என்று இழுக்க "நீ போ" என்றவன் வெளியே முகம் மலர்ந்து ஓடிவரும் தேவாவிடம் "நில்லு எங்க போற " என்றான் அதிகாரமாக


"அண்ணா வீட்டுக்குள்ளயே இருக்க ஒரு மாதிரி இருக்கு அதான் மேகலா கூட அவ வீட்டுக்கு போறேன் வரட்டா" என்று துள்ளி ஓடும் மான்குட்டியாய் வெளியே ஓடி சென்றவளை,


கை நீட்டி தடை செய்தவன் "எங்கேயும் போக வேண்டாம். போய் செய்த வரையும் போதும். உள்ள போ" என்று கோவமாய் கூறி ஹேய் "நீயும் கிளம்பு இனி அவ எங்கேயும் வர மாட்டா" என்றான் கடுகடுப்புடன்


'அட காத்தவராயா நானா வரேன்ன்னு தவம் கெடந்தேன். வீட்டுல, சும்மா உட்கார்ந்து இருந்தவள கூப்பிட்டு, என்னம்மா விளையாடுதுங்க ரெண்டும். ஆள விடங்கடா சாமி உங்க சங்காத்தமே வேண்டாம்'. என்று மனதில் நினைத்தவள் தலைதெறிக்க ஓடி இருந்தாள்.


தோழியிடம் பேசும் போது கூட அவளுடைய அண்ணனுக்கு பயந்து தான் உன் வீட்டிற்கு வரவில்லை என்று கூறி இருந்தாள் மேகலா. அவனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று தேவாவிற்கு தெரிந்து விட்டால் அவனிடம் யார் மாட்டிக்கொள்வது அதனால் தான் தன்னை விசாரித்ததை பற்றி இதுவரை தேவாவிடம் கூறாமல் வைத்திருந்தாள் மேகலா. இன்று அவனை நேரில் பார்க்கவும் அருவாளோடு நிற்கும் அய்யனாரை போல் கண்ணுக்கு தெரிய அங்கிருந்து தப்பித்தாள் போதும் என்று ஓட்டம் எடுத்து இருந்தாள்.


மேகலாவிடம் கூறி அனுப்பவும் "அண்ணா" என்று அதிர்ந்து நின்றவளை கண்கள் இடுங்க பார்த்தவன் "என்ன" என்றான் அதே தோரணையாக


"நான் சும்மா தான்" என்று கூற வருபவளை வாயை மூடிட்டு "மரியாதையா உள்ள போயிடு தேவா. என்னை கொலைகாரனா மாத்தாதே" என்று பல்லிடுக்கில் வார்த்தையை துப்பிட


இதுவரை தங்கையை அதிர்ந்து கூட அழைக்காமல் செல்லம்மா, கண்ணம்மா, குட்டி, தங்கம், என்று அடிக்கு ஒரு முறை தேவசேனாவை செல்ல பெயர்கள் வைத்து அழைத்தவன் இன்று உக்கிரமூர்த்தியாய் முன்னால் நின்றவனை பார்த்து நடுக்கம் கொண்டவள் மனதில் திடத்தை வரவழைத்தவளாக "அண்ணா என்னன்னா" என்று செல்லம் கொஞ்ச


"பச் ஒரு முறை சொன்னா புரியாதா உன்னை உள்ள போக சொன்னேன். நீ வெளியே போய் இழுத்து விட்டது எல்லாம் போதும் தேவா புதுசா எதுவும் வேண்டாம்". என்று கூறி அவள் வெளியே செல்ல தடை போட


அன்னையிடம் கூறினாலும் இதே வசவுகள் தான் விழும் என்று அறிந்து வைத்திருந்தவள் அவனை பார்க்க முடியாத வருத்தத்தில் கண்களில் நீர் கோர்த்து கொள்ள கருவிழிகளின் உண்டான குளம் அவள் கன்னத்தின் வழியே இறங்கி மார்பை நனைக்க தனது அறைக்குள் ஓடி மறைந்தாள். தன் அழுகையை அடக்கியபடி


தங்கையின் செயல்களை கவனித்த வண்ணம் இருந்தவன் தாயை அழைத்து "அம்மா கொஞ்சம் தேவாவையும் பாருங்க, அவளை தேவை இல்லாம வெளியே அனுப்பாதிங்க மேகலாவே வந்து கூப்பிட்டாலும் எப்ப எது நடக்கும்னு சொல்ல முடியாதும்மா... அவ சின்ன பொண்ணு நீங்கதான் கவனமா இருக்கனும்". என்று கூறி இருந்தான்.


அவரும் மகன் சொல்வது சரி தானே, இப்போ நடக்கறதை பார்த்தா எல்லாம் பயமாதான் இருக்கு என்று நினைத்தவர் அதன் படியே நடக்க எண்ணம் கொண்டார்.


'அவனை பார்க்க அவ்வளவு அவசரமா கிளம்புறியா? உன்னை ஒரு துரும்பாக்கூட நினைக்காதவன் பின்னாடி லோ லோன்னு சுத்துற' என்று மனதில் கருவியவன் விரைவில் இதற்கு ஒரு தீர்வை கண்டு விரைவில் தந்தையிடம் கூற வேண்டும் என நினைத்தான்.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN