பூ போல் என்.இதயத்தை கொய்தவளே பகுதி.22

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member


....


வீட்டிற்குள் நுழைந்த விசாகனை "அய்யா ராசா" என்ற தில்லையின் அழைப்பில் அறைக்குச் செல்ல இருந்தவனின் கால்கள் தடைப்பட்டு நின்று இருந்தன. என்ன என்பது போல் பார்வையை அவர் புறம் திருப்பிட,


"எம்புட்டு நேரமா உனக்கு ஃபோனை போடுறேன் எடுக்காம இந்தக் கிழவிய பதற வைச்சிட்டியே அய்யா" என்று ஆற்றாமையால் மறுகிட.


"தோப்பு வீட்டுக்குத்தான் அப்பத்தா போனேன்... போனதும் கொஞ்ச கணக்குப் பாத்துட்டு இருந்ததுல நேரம் போனது தெரியல, அப்படியே தூங்கிட்டேன்". என்று சமாளிப்பாய் பதிலைக் கூறினாலும் அவரைக் காத்திருக்க வைத்த செயலுக்காக வருத்தமாகவே இருந்தது விசாகனின் முகம்.


பேரனின் முகத்தில் வருத்தத்தைப் பார்த்ததில்லை, "இவ ஒரு கூறு வாறு இல்லாத கிழவி, இப்பத்தான் ராசவே வீட்டுக்கு வந்து இருக்கு... என்னென்னமோ பேசிட்டேன். நேரம் இருந்தா நீயே ஃபோன் பண்ணி இருப்ப, விடுய்யா இப்படித்தான் வயசானா மூளை மங்கி போய்டும்". என்று பேரனை சமாதானம் செய்ய பேசிய தில்லை "ஏலேய் முத்து நல்ல வெடக் கோழியா புடிச்சி போடு குழம்பு வைக்கனும்" என்றபடி கொள்ளைப் புறத்தை நோக்கி குரலை உயர்த்தியவர்,


"நீ போ ராசா நல்லா அலுப்பு தீர குளி எல்லா ஜோலியும் அப்புறம் பாக்கலாம். இந்த சுந்தரம் பையன் எங்க போனான், விடிஞ்சி இவ்வளவு நேரம் ஆகுது ஆளையே காணும்" என்றபடி வாசல் புறம் சென்றார்.


அப்பத்தாவின் அக்கறையான செயல்கள் அவனை சகஜநிலைக்கு கொண்டு வந்தது. தனது அறைக்குள் நுழைந்து, சட்டையைக் கழட்டியவனின் அலைபேசி இசையை எழுப்பி தன் இருப்பை அவனுக்கு உணர்த்த கழட்டியச் சட்டையில் இருந்து பேசியை எடுத்து பார்க்க அது தேவாவின் எண்கள்.


அடித்து அடித்து ஒய்ந்து போய் மீண்டும் தன் ஒலியை எழுப்ப அதையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தான். மீண்டும் அது ஒலியை எழுப்ப சுவிட் ஆஃப் செய்தவன் கட்டிலில் தூக்கி எறிந்த நேரம் அவன் எதிரில் வந்து நின்றான் சுந்தரன்.


அவனைக் கண்டதும் எதுவும் கூறாமல் வாட்ரோபின் கதவைத் திறந்து துண்டை எடுத்துக்கொண்டு இருந்தான் விசாகன்.


"மாப்ள" என்றான் சுந்திரன் தேய்ந்த குரலில் விசாகனின் கோவம் அவனுக்கு ஒன்றும் புதிது அல்ல ஆனால் சுந்தரன் பேசிய பேச்சுகள் தான் புதியது இதுவரைப் பேசாத பேச்சுகள் பேசி இருந்தமையால் அவனுடைய கோவத்தை எப்படி எதிர்கொள்வது என்ற தவிப்பில் நண்பனின் முன் நின்று இருந்தான்.


அவன் புறம் திரும்பாமல் காரியமே கண்ணாய் இருப்பது போல விறைப்புடன் நின்றிருந்த விசாகனின் அருகில் வந்து அவனுடைய தோளைத் தொட, இறுகிய முகத்துடன் எதுவும் கூறாமல் இன்னும் அழுத்தமாய் நின்றான் விசாகன்.


“என்னை மன்னிச்சிடு விசா. என் வார்த்தை உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, ஆனா நான் பேசினதுக்கு காரணம் உன்னோட நல்லதுக்குதான். உன்னோட கடந்த காலத்தை நினைச்சி தான் உன் எதிர்காலத்தை நீ ஒதுக்கறியோன்னு தான் கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன். சாரி மாப்ள என்னை மன்னிச்சிடு” என்றவன் தொடர்ந்து.


“உன் கூட நிழல் மாதிரி சுத்துறேன். எனக்கு என்ன சொத்து, சுகம், ஆஸ்தி, தொழில்னு எதுவும் இல்லையா? இல்ல என் அப்பாவும் கூட பொறந்தவங்களும், என்னைக் கூப்பிடலையா? இருந்தும் ஏன் உன்னோடவே இருக்கேன். நீ என் நண்பன்டா அந்த ஒரு காரணம் தான்


உன்னை உயிர்ப்போடு வைக்கனும் அதுக்காக தான் உன் கூடவே இருக்கேன் நீ என்னைக்காவது சிரிச்சி மனம் விட்டு பேசி இருக்கியா? இல்ல மனசுல இருக்கறதை வெளியே கொட்டி இருக்கியா? எதையும் அழுத்தமா உனக்குள்ளையே புதைச்சிக்கிற விசாகன் எனக்கு வேண்டாம்னு நான் நினைச்சது தப்பா . இல்ல என் பழைய நண்பன் திரும்பி வரனும்னு இந்தக் கல்யாணம் நடக்கனும்னு நினைச்சது தப்பா”


சட்டென திரும்பிய விசாகனின் விழிகள் இரண்டும் தீட்சண்யமாய் அவன் மேல் பதிந்திட “நீ ஏன்டா இவ்வளவு அழுத்தமா இருக்க எனக்கு புரியல உன் மனசுல என்ன தான் ஓடுது அதுவும் தெரியல!!! காலம் முழுசும் இப்படியே ஒண்டி கட்டையா இருந்திடலாம்னு நினைக்கிறியா?” என்று அவனுடைய ஐயத்தை வெளிப்படுத்த


தன் மனதைத் தெளிவாய் வெளிப்படுத்தி விட்டானே நண்பன் என்று விசாகன் சுந்தரனை மெச்சுதலான பார்வையைப் பார்க்க "அப்படித்தான்னு சொல்லுது உன் முகம். சரி உனக்காக நடந்ததா இருக்க வேண்டாம்டா அந்தக் கிழவிக்காகவாவது கல்யாணத்தை பண்ணிக்கலாம் இல்லையா காலகாலத்துல அதுக்கும் ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தா தான் என்ன” என்றிட,


இவ்வளவு நேரம் மௌனத்தைக் கேடயமாக வைத்திருந்தவன் முதன் முறை வாய் திறந்தான். “சுந்தரா ஏண்டா சுத்தி சுத்தி கல்யாணம்ன்ற இடத்துல வந்து நிக்கற நான் அப்பத்தாவ சந்தோஷமா தான் வைச்சி இருக்கேன். இப்போதைக்கு எனக்குக் கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணம் இல்லை. அப்படி வந்தா…..” என்றதும் சுந்தரனின் முகம் பிரகாசத்தைக் கூட்ட, “இங்க பாரு சுந்தரா ஒரு வேளை” என்பதில் அழுத்தத்தை கூட்டிய விசாகன் “அப்படி வந்தா உன்கிட்ட சொல்றேன் எனக்கு அப்போ உன் நல்லதை செய் இப்போ இந்த சிக்கல் எனக்கு வேண்டாம்...” என்று கூறியதும்.


என்ன இருந்தும் விசாகன் தேவாவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து விட்டானே என்று வருத்தம் இருந்தது. அதை நேரடியாகவே கேட்டு விடவேண்டும் என்று நினைத்த சுந்தரன் “விசாகா. உண்மைய சொல்லு உன் மனசுல ஒரு துளி அளவு கூடவா அந்தப் பொண்ணால நீ சலனப்படலை உன் மனசை அவ தொடவே இல்லையா” என்றிட.


‘தேவா’ என்ற பெயரை உச்சரித்ததும் விசாகனின் உடல் இரும்பை ஒத்த கடினத்தை பெற்று இருக்க அதை உணர்ந்த சுந்தரன் நண்பன் மறுபடி கோவம் கொள்வானோ என்று படபடப்புடன் இருக்க.


“இனி இந்தப் பேச்சு வேணாம் சுந்தரா” என்று அழுத்தம் திருத்தமாக நண்பனுக்கு கூறியவன் துண்டை எடுத்து தோளில் போட்டபடி குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.


“உன் மனசுல சலனத்தை ஏற்படுத்தாமதான் அவ பெயரை சொன்னவுடனே பாத்ரூம்ல புகுந்துட்டியோ. அவ நண்டு மாதிரி உன்னை குடைஞ்சிக்கிட்டே இருப்பா” என்று சொல்லி வாய் மூடவில்லை அதற்குள் சுந்தரனின் ஃபோன் அலற ஆரம்பித்து விட்டது. எடுத்துப் பார்த்தவனின் இதழ்கள் நண்பனை நினைத்து புன்னகையுடன் வளைந்தது.


அறையை விட்டு வெளியே வந்தபடியே “சொல்லு தேவாமா” என்றிட


“என்னத்த சொல்ல. எங்க உங்க ஃப்ரெண்ட்???” என்றாள் அதிகாரமாகவே


அட அதிகாரத்தைப் பாரு என்று மனம் மெச்சிக்கொண்டாலும் “ஏம்மா எனக்கு ஃபோனை போட்டு அவனைக் கேட்டா எப்படிமா” என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்


“ப்ச் இங்க பாருங்க நீ சொல்ற இத்து போன ஜோக்கை கேக்கற மூட்ல நான் இல்லை. ஹீரோவை பார்த்து கிட்டதட்ட 5 நாள் ஆச்சு. ஒருத்திய ஆஸ்பிட்டல்ல சேர்த்ததோட போச்சா அவ எப்படி இருக்கான்னு ஒரு எட்டு வந்து கூட பாக்கல. என்னய்யா ஃப்ரெண்டு உன் ஃப்ரெண்டு அவர் வரலன்னா கூட நீங்க கூட்டிக்கிட்டு வர்றது இல்லையா” என்று எண்ணெய்யில் இட்ட கடுகாய் வெடிக்க.


‘எதுல ஒற்றுமையோ இல்லையோ இந்த மிரட்டுற விஷயத்துல ஒத்துப் போறிங்க' என்று மனதில் எண்ணியவன் “அவனைக் கூப்பிட்டவுடனே வந்துட்டுதான் மறுவேல பார்ப்பான்” என்று இடக்காய் கூறியவனுக்கு அந்தப் பக்கம் தேவாவின் அலைபேசி சந்திரனிடம் மாறுவது தெளிவாய் கேட்டது.


“அண்ணா…. என்னண்ணா”


“ஃபோன்ல யாரு???”


“ஃப்ரெண்ட் அண்ணா”


“எந்த ஃப்ரெண்ட்???”


“காலேஜ் ஃப்ரெண்ட்”


“சரி கொடு கொஞ்சம் பேசனும்”


“அவ… அவ கிட்ட என்னண்ணா கேக்க போற???”


“அதை கொடு நான் கேக்கும் போது தெரியும்” என்று கையில் இருந்து பேசியை வாங்கிட.


செல்லை ஆஃப் செய்து விட்டிருந்தாள் தேவா.


“கொடுமை இவனை லவ் பண்ணிட்டு தனியா போறாடுறா பாவம்” என்றவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை


“விசாகனாவது அவளைக் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூறிவிட்டால் கூட அவள் வீட்டுப் படியேறி பொண்ணைக் கேட்கலாம். இங்கே முதலுக்கே மோசம் இந்த நிலமையில் என்ன செய்வது” என்று குழம்பிக்கொண்டு இருந்தான் சுந்தரன்.


…….


“இவ்வளவு பெரிய விஷயம் எம்மருமகளுக்கு நடந்து இருக்கு ஒத்த வார்த்தை சொல்லி அனுப்பல. நான் எல்லாம் அன்னியமாயிட்டேன்ல அண்ணே உனக்கு… என் மருமகன்னு நான் மட்டும் தான் கனவு காணுறேன் போல இந்தா இருக்க பூங்குலத்துக்கு உனக்கு சொல்ல தெரியல. நானா வந்து எல்லாம் தெரிஞ்சிக்கனும் என்னை அந்த இடத்துல வைச்சி தானே நீயும் உன் பொஞ்சாதியும் பாக்குறீங்க” என்றபடி குலதெய்வ கோவிலுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார் சௌந்தரலிங்கத்தின் தங்கை சாந்தலட்சுமி…


“அப்படி எல்லாம் தப்பா நினைக்காத சாந்தா. நீ பதட்டப்படுவியேன்னு தான் சொல்லல இப்போ என்ன எல்லாரும் போய் அவளுக்காக தானே வேண்ட போறோம்” என்றபடி அவரை சமாதானப்படுத்த முனைந்தார் சௌந்தரலிங்கம்.


“என்னமோ போண்ணே. எதுவும் சரியில்ல இந்நேரத்துக்கு அருணுக்கு நம்ம தேவாவைக் கட்டி வச்சிருந்தா கண்ணுக்குக் கண்ணா நான் பாரத்து இருப்பேன். பொம்பள புள்ள படிச்சி என்ன ஆகப்போகுது. எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்குப் போய் பொங்கிப் போடுறவளுக்கு இது எல்லாம் தேவை இல்லாத தண்ட செலவு” என்றிட.


தேவா ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு உள்ளுக்குள் சாந்தலட்சுமியை எண்ணெய் சட்டியில் இட்டுப் பொரித்துக் கொண்டு இருந்தாள். அவளும் பதில் பேசும் ரகம் தான் ஆனால் தான் என்ன பேசினாலும் பதில் அம்மாவுக்குத் திரும்பும் என்று தெரிந்து வைத்திருந்த தேவா வாயை இறுக்க பூட்டிக்கொண்டாள்.


சாந்தலட்சுமி பெயருக்குச் சற்றும் பொருந்தாத குணம் எதிலும் குற்றம் பார்த்து ஆளைக் குத்திக் கிழிப்பதையே ஒரு வேலையாய் செய்யும் ஜீவன். பெயருக்காவது இருக்கட்டும் என்று அவருக்கு இந்தப் பெயர் வைத்து விட்டார்கள் போலும். அவருக்கு வாக்கப்பட்ட நாளில் இருந்து வாயைத் திறக்காத மற்றொரு பாவப்பட்ட ஜீவன் அழகம்பெருமாள், மனைவியின் போக்கு வீட்டிற்கு அடியெடுத்து வைத்தமறுநாளில் இருந்தே தெரிந்து விட, இவரின் வாய்க்கு பயந்தே அடங்கிப் போக ஆரம்பித்து இருந்தவர் இப்போதேல்லாம் ‘நீ சொன்னா சரிதான் சாந்தா' என்று வந்துவிட்டார்.


அப்போதுதானே அவரின் வாயில் அரைபடாமல் தப்பிக்க முடியும். இவர்களுக்கு ஜீவிதா, அருண் என்று இரு பிள்ளைகள். பெரிய பெண் ஜீவிதாவை ஜெயசந்திரனுக்கு கட்ட நினைத்தவர் ஜாதகம் பொருந்தாமல் போக மகளை அசலில் கட்டிக்கொடுத்தவர், இளைய மகன் அருணுக்கு அண்ணன் மகளையே மணம் முடிக்க வேண்டும் என்று ஒரு உறுதியோடு இருக்கிறார். அருண் மதுரையில் ஒரு தனியார் வங்கியில் பணியில் இருக்கிறான். நல்ல மாதிரி தான் அவனுக்கும் தேவா என்றால் ஆசை தான் ஆனால் தேவாவோ அவனைக் கண்டாலே தெரித்து ஓடும் அளவுக்கு எட்டிக்காயாய் இருக்க, சாந்தலட்சுமி தான் அண்ணனிடம் தேவா அடிப்பட்டதைப் பற்றிக் கேட்டுக்கொண்டு இருந்தார்.


தங்கையின் வாய் தெரிந்த சௌந்தரலிங்கம் தேவாவை அவள் வயதினைக் காரணம் காட்டித் திருமணப் பேச்சை ஒத்திப்போட்டு வைத்திருந்தவர் கல்லூரியிலும் சேர்த்து விட்டார். குலதெய்வக் கோவிலுக்குக் கூப்பிடாமல் போனால் அதற்கும் தன்னைத் தான் குத்திக் குதறுவார்கள் என்று அறிந்த மரகதம், வருகிறாரோ இல்லையோ ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்று விட்டார் கணவரிடம்.


சௌந்தரலிங்கத்தின் தம்பி துரைலிங்கம் அண்ணனைப் போல் அல்லாமல் பட்டம் பெற்று வேற்று ஊரில் அரசாங்கப் பணியில் உள்ளார். அவ்வப்போது வந்து பார்த்து போவது வழக்கம். அவரது மனைவியும் இளையராணி என்ற இளையாவும் நல்ல மாதிரி தான். அவர்களுக்கு ஒரே மகன் அர்ஜுன் இந்த வருடம் தான் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதுகிறான். தேவாவை விட சிறியவன் சாந்தலட்சுமியின் வருகையை அறிந்த துரைலிங்கம் தான் அடுத்த வாரம் வருவதாகத் தகவல் தெரிவிக்க குலதெய்வக் கோவிலுக்கு இவர்கள் மட்டும் செல்வதாக ஆகியது.


இரண்டு நாட்கள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு திரிந்தாள் தேவசேனா அப்போதாவது அண்ணன் தன்னைக் கண்டு இளகுவான் என்று. ம்கூம் எதற்கும் அசைந்து கொடுத்தபாடில்லை சந்திரன். இறுகிய முகமும் எப்போதும் ஒரு ஆராய்ச்சி பார்வை என்றும் சுற்றிக்கொண்டு இருக்க நொந்து போயிருந்தவளை மேலும் சாந்தலட்சுமியின் வார்த்தைகள் அவளைக் கொதிநிலையை அடைய செய்திருந்தது.


“அம்மா. எல்லாம் வண்டில ஏத்திட்டேன். அவ்வளவு தானா வேற ஏதாவது செய்யனுமா???” என்றான் ஜெயசந்திரன் மரகதத்திடம்.


சமயலறையிலிருந்து வெளியே எட்டி பார்த்த மரகதம் சைகையால் மகனை அருகில் அழைத்தவர் “எல்லாம் சரியா எடுத்துட்டேன். உங்க அத்தைய முதல்ல போய் வண்டில ஏற சொல்லு. இல்ல அதுக்கும் மரியாதை இல்ல மட்டு இல்ல. மறந்துட்டேன்னு என்பெயர்ல பழிய போட்டு என் தலையைஉருட்ட ஆரம்பிச்சிடுவாங்க” என்றவர், “ஏற்கனவே அவ கையில அடிபட்டதுக்கு சொல்லலன்னு முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு குத்திக் காமிக்கிறாங்க அதுக்குத்தான் உங்க அப்பாருக்கு படிச்சி படிச்சி சொன்னேன் அவங்களுக்குச் சொல்லிடுங்கன்னு,


அவரோ வந்து ஏழரைய இழுப்பா வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ என்னைய போட்டு இடிச்சிக்கிட்டு இருக்காங்க” என்று பொருமியவரை பாவமாகப் பார்த்த ஜெயசந்திரன் “இன்னுமா அத்தைக்கு பயப்புடுற ம்மா???” என்றான்.


“அட போ சாமி. பயமா.. இவளுக்கா.. இவ வாயிக்கு தான் பயப்புடுறேன். கரிநாக்கு அவ வாயில விழுந்து எழுறத்துக்கு புது தெம்பு வேணும். ஜீவிதாவ உனக்குப் பேசும்போதே மனசு வேகமா அடிச்சிக்கிச்சி. நல்ல வேளை ஜாதகம் பொருந்தல இந்த முறை தேவா…. எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல. வீட்டுக்கு ஒன்னு இப்படி வாய்க்கும் போல” என்று மனதில் இருப்பதை மகனிடத்தில் கொட்டியவர் அம்மனுக்கு சாத்த வேண்டிய பட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.


…….


அண்ணனிடம் எவ்வாறு பேசுவது என்ற யோசனையுடன் கோவில் மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த கல்மேடையில் அமர்ந்து இருந்த தேவா என்ற தங்கச்சிலைக்கு, அத்தையின் அலட்டல் அழைப்பில் உயிர் வந்தது.


“என்ன மருமகளே. என் பையனைக் கூட்டி வரலன்னு இப்படி கவலையா உட்கார்ந்துட்டு இருக்கியா???” என்று கேட்க சாந்தலட்சுமியின் வார்த்தைகளில் கஷ்டப்பட்டு வலிய புன்னகையை இதழில் படரவிட்டவள் மனதில் “அட அருமை அத்தையே உன் புள்ளைய நான் எப்போ நினைச்சேன். இப்போ நினைச்சி கஷ்டப்பட வீணா என்னைப் பேச வைச்ச, நீதான் வருத்தப்படனும்” என்று அவள் மனம் வசைபாடியது.


இது எதுவும் அறியாத சாந்தாவோ “அதான் உன் முகமே காட்டுதே வெக்கப்படுறத. என் மகனைக் கட்டிக்க கொடுத்து வைச்சி இருக்கனும் மருமகளே. ஊருக்குள்ள சல்லட போட்டு சலிச்சாலும் உன் அத்தானைப் போல ஒருத்தனைப் பாக்க முடியாது. அம்புட்டு அழகன் என் மகராசனுக்கு ஏத்த மகராசி நீதான்” என்று தேவாவின் கன்னம் கிள்ளி சொல்ல,


“ஆ…” என்று முகம் சுணங்கியவள் “நான் என்னத்தை கொடுத்தேன் உன் சீமந்த புத்திரனை கட்டிக்க. அந்த விளங்காத மூஞ்சிக்கு எல்லாம் என்னால கழுத்தை நீட்ட முடியாது. என்னமோ உன் புள்ளைக்குத் தவமா தவம் இருக்கா மாதிரி பேசுறியே. என்னால முடியல” என்று உள்ளுக்குள் முனங்கி கொண்டு இருக்க தூரத்தில் அண்ணன் செல்வதை பார்த்தவள் “அத்த. அம்மா அண்ணகிட்ட ஒன்னு சொல்ல சொல்லி இருந்தாங்க மறந்துட்டேன். இப்போ ஞாபகம் வந்துடுச்சு. நான் போய் சொல்லிட்டு வந்துடுறேன் அத்தை” என்று அண்ணனை நோக்கி “அண்ணா…. அண்ணா” என்று அழைத்துக்கொண்டே ஓடினாள்.


அன்னை கொடுத்த குடத்தில் தண்ணீரை எடுத்து வர குளக்கரையை நோக்கி சென்றவனைப் பின் தொடர்ந்து குரலைக் கொடுத்துக்கொண்டு வந்த தங்கையைக் கவனித்தவனின் கால்கள் தன் நடையை நிறுத்தி இருந்தது.


“சொல்லு, தேவா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர்ற???” என்று அவன் இறுகிய குரலிலேயே கேட்க.


“அண்ணா” என்று அவள் பாவமாக அழைத்தவள் “ஏன் அண்ணா யார்கிட்டயோ பேசறா மாதிரி பேசுற???” என்றாள் அழும் குரலில்


தங்கையின் வாட்டம் அறிந்து மனம் சுணங்கினாலும் அவள் செய்யும் செயலை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இருந்தும் எதையும் புரிந்துக்கொள்ளாதவன் போல “என்ன தேவா நான் எப்பவும் போல தான் இருக்கேன்” என்றான் தீர்க்கமான குரலில்.


“அண்ணா அது வந்து” என்று அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்க


“என்ன ஏதோ பேச வந்துட்டு தடுமாறி நிக்குற. எல்லாத்துலயும் இது மாதிரி தான் அடுத்தவனைப் பத்தி தெரிஞ்சிக்காம தடுமாறி நிக்குற போல”


“அண்ணா” என்று விலுக்கென்று நிமிர்ந்தவள் “என்ன சொல்ற புரியுறா மாதிரி சொல்லு” என்றாள் உள்சென்ற குரலில்.


“நீ மெச்சூர் அகிட்டன்னு நான்தான் சொன்னேன். ஆனா நீ லவ் பண்ற அளவுக்கு மெச்சூர் ஆகி இருப்பன்னு நினைக்கல” என்றான் அவளைக் குற்றம் சாட்டும் பார்வையுடன்.


கண்களில் கலங்கிய நீர் கன்னத்தில் உருள “அண்ணா… உனக்கு…” என்று தடுமாற்றம் கொண்டு பேசிட அவளைக் கை நீட்டி தடுத்து நிப்பாட்டியவன் “உனக்கு இது எல்லாம் சாதரணமா தெரியலாம். ஆனா எனக்கு இது கௌரவ பிரச்சனை. என்னை விடு நம்ம அப்பாவை நினைச்சி பாத்தியா. இந்த மாதிரி ஒரு வேலைய நீ பண்ணுவேன்னு நான் நினைச்சி கூட பாக்கல தேவா” என்று கலங்கிய குரலில் பேசிட


“அண்ணா நான் தப்பு செய்துட்டன்னு நீ நினைக்கிறியா. உன் தங்கச்சி அப்படி செய்வேனா!!!” என்று அவன் அருகில் செல்ல.


ஒரு எட்டு விலகி நின்றவன் “நீ என்னை கன்வின்ஸ் பண்ண நினைக்காத தேவா. நீ தப்பு செய்த செய்யல அது பேச்சி இல்ல. ஆனா நான் உன் மேல வைச்ச நம்பிக்கைய நீ இழந்துட்ட. என் தேவாவ நான் தொலைச்சிட்டேன். இப்போ இருக்கறது அந்த ரவுடி பயல உருகி உருகி காதலிக்கற தேவசேனாவை தான்” என்று இறுகிய குரலில் கூறியவன் “இது ஒரு நாளும் நடக்காது. உனக்கு அவன் ஏத்தவனும் கிடையாது. முன் கோபி முரடன் எதுலயும் அவசரக்காரன். நிச்சயம் அவனால உன்னை சந்தோஷமா வச்சிக்க முடியாது” என்று கூறியவன் “என்னையும் மீறி அவனைத் தான் நீ கட்டனும்னு நினைச்சா அது நான் உயிரோடு இருக்க வரைக்கும் நடக்காது” என்று உறுதியுடன் கூறியவன் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி சென்றான்.


அண்ணன் அறிந்து கொண்டானே என்று கவலைப்படுவதா இல்லை தன் காதலுக்கு முதல் எதிர்ப்பாய் கிளம்பி இருக்கிறானே என்று கலங்குவதா என்று கண்ணீர் வெளியேறுவது கூட தெரியாமல் உறைந்துப் போய் ஜெயசந்திரன் சென்ற பாதையையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN