தென்றல் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வைகறையில் சேவல் கூவும் முன்னே கண்விழித்தாள் அக்னிசாகரி. ஆனால் அவளை எழ விடாமல் சுகமாய்த் தாயின் முதுகில் உறங்கிக் கொண்டிருந்தான் அவளின் மகன் யுவராஜன். இது வழமை தான்..



அந்த வீட்டில் கட்டில், மெத்தை என்று எதுவுமில்லை.. தாய், மகன் இருவரின் உறக்கமும் கட்டாந்தரையில் விரிக்கப்படும் கோரைப்பாயில் தான். ஆனால் அவ்வப்போது இப்படித் தாயின் முதுகை மெத்தையாக்கிக் கொள்வான் இந்தப் போக்கிரி. மென்னகையுடன் இவள் மெது மெதுவாய் மகனைப் புரட்டித் தரையில் இட.. அவனோ தூக்கக் கலக்கத்தில் சிணுங்கலுடன் தாயின் நைட்டியை இறுக பற்றிக் கொள்ள..



அதில் வாஞ்சையுடன் மகனின் தலை கோதி.. வாயோரம் வழிந்த உமிழ்நீரைத் துடைத்து.. அவனைச் சரியாகப் படுக்க வைத்து.. அருகிலிருந்த மேஜை மின்விசிறியைத் தூர நகரத்தி வைத்து.. மகன் தூங்க வழி செய்தவளின் கரங்களோ.. நீண்டு தளர தரையில் தவழ்ந்த அவளின் கேசத்தை வாரி தூக்கிக் கொண்டையிட.. இதோ மங்கையின் இன்றைய நாளின் துவக்கம் ஆரம்பமானது.




இவள் காலைக் கடன்களை முடித்து.. ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு.. தலையிலிருந்து நீர் சொட்ட சொட்ட.. சமையலறைக்குச் சென்று காபி தயாரிக்க.. அங்கு வந்தார் இவர்களுடன் தங்கியிருக்கும் ஜானகி.



"என்ன அக்னி.. இம்புட்டு வெரசா எழுந்திட்ட.. செத்த உறங்கி இருக்கலாமே"



"எங்க ஆத்தா.. உறக்கம் வரல.. சீனி அண்ணணுக்கு வாழையிலைக் கட்டு கொண்டு வரேன்னு சொல்லிட்டேன்" என்றவளின் பதிலில்



"யாரு நம்ம சீனியப்பனா.. செய்.. செய்.. நல்ல பையன்.. நம்ம பஞ்சாயத்து ஆபீஸில் தான் வேலை பார்க்கிறான்.. நாளைய பின்ன ஏதாவது உதவினா உனக்குச் செய்வான்" என்றவரின் வார்த்தையை ஆமோதிப்பது போல் தலை அசைத்தவள் "என்னை சொல்லிட்டு நீங்க ஏன் விரசா எழுந்தீங்க.. யுவன் உறங்கும் போதே நீங்களும் உறங்க வேண்டியது தானே.. பிறகு அவன் முழிச்சா.. நீங்க எங்க தரையில் உட்கார முடியும்" என்று கண்டித்தவளை



"அடி போடி கிறுக்கி.. அவன் சேட்டை எல்லாம் அம்மா கிட்ட தான்.. நீ போன பிறகு நான் எங்க அவனை பார்த்துகிறேன்.. அவன் தான் என்னைய பார்த்துகிறான்.. இந்த ஐந்து வயசில என்ன தெளிவு குழந்தைக்கு.. குணமா பிள்ளைய வளர்த்திருக்க அக்னி.. தங்கமான புள்ள யுவன்" என்று ஜானகி யுவனின் பெருமை பேச



அதற்கு மையமாய் மென்னகை புரிந்தவள்.. அவருக்கு மட்டும் பால் கலந்த காபியைத் தந்து.. தனக்கு கருப்பு காபியுடன்.. யுவனின் பிஸ்கெட் டப்பாவிலிருந்து இரண்டு எடுத்து.. வீட்டின் பின் வாசல் படியில் அமர்ந்து.. காபியில் தொட்டு இவள் ரசித்து சாப்பிட



அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் ஜானகி. 'இந்தப் பொண்ணுக்கு என்ன குறை.. பார்க்க அம்சமா அம்மன் சிலையாட்டம் இருக்கா.. ஆனா கடைசியில் இவ தலையெழுத்து இப்படியா ஆகனும்' என்று ஒரு பெருமூச்சுடன் அவர் நினைத்திருக்க.. அதற்குள் தன் சரக்கு வாகனமான குட்டி யானையில் ஏற்ற வேண்டியதை எல்லாம் ஏற்றி அடுக்கினாள் அக்னிசாகரி.



இவள் தற்போது கிளம்பினால் தான் சரியான நேரத்திற்குக் காரைக்குடி சந்தைக்குச் சென்று சேர முடியும். அனைத்தும் முடிய.. உள்ளே வந்தவள் தான் அணிந்திருந்த சுடிதாரின் மேலே காக்கி சட்டையை அணிந்தவள்.. அங்கிருந்த தாய் தந்தையரின் புகைப்படத்தை வணங்கி.. உறங்கும் மகனுக்கும் முத்தமிட்டு "பார்த்து கவனமா இரு ஆத்தா" என்ற சொல்லுடன் கிளம்ப



"நான் இருக்கேன்.. நீ சூதானமா போய்ட்டு வா" என்றார் ஜானகி.



இவர் தான் ஜானகி.. கிராமத்து மனுஷி.. அக்னிசாகரியை ரொம்பவே பிடிக்கும்.. அதை விட யுவன் மீது கொள்ளைப் பிரியம்.. இத்தனைக்கும் இருவருக்கும் ரத்த சம்பந்தம் என்று எதுவுமில்லை.. இந்தத் தோட்டத்து வீட்டை.. பல வருடமாய்க் குழந்தை இல்லாத ஜானகியும் அவர் கணவரும் காவல் காத்து வர.. திடீரென ஒரு வருடத்திற்கு முன்பு ஜானகியின் கணவர் மாரடைப்பால் தவறிட.. அந்நேரம் அக்னி இவ்வூருக்கு தன் மகனோடு வரவும்.. அவளை இங்கு ஜானகியுடனே தங்க அனுமதித்தார் இந்த ஊர் தலைவர் நாராயணன். அன்றிலிருந்து மூவரும் ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள்.



அக்னிசாகரி தற்போது வசிப்பது காரைக்குடியில் உள்ள பிரம்புவயல் கிராமத்தில்.. இவள் தன் வண்டியை இயக்கி செலுத்த.. அந்த அதிகாலை வேளையிலும் சித்திரை மாத வெளிச்சம்.. வழி எங்கும் பரவியிருக்க.. தன் வீட்டைத் தாண்டி செம்மண் சாலையில் வண்டியைச் செலுத்தியவளின் மனதை இருபுறமுமிருந்த வயல்வெளியை சுற்றி பறவைகளின் சத்தம் அவளை வசீகரிக்கவும் இயற்கையை ரசித்தபடி.. தன் சரக்கு வாகனத்தைக் காரைக்குடி சந்தையை நோக்கி செலுத்தினாள் அக்னிசாகரி.



இவள் மிதிரவயலை நெருங்க.. இவளுக்காகவே காத்திருந்தது போல்.. தன் வேக நடையுடன் வண்டியை நெருங்கிய சீனியப்பன் "வா.. வா.. அக்னி உனக்காகத் தான் காத்துக் கிடக்கேன்.. பூசை முடிஞ்ச பெறவு பந்தி பரிமாறனும்.. இன்னும் இலைக் கட்டு வரலையேன்னு டென்சன் எனக்கு" என்றவர்.. அவள் வண்டியிலிருந்த வாழையிலைக் கட்டைப் பார்த்ததும் சற்றே ஆசுவாசமாக



"நான் தான் சொன்னனே.. எதுக்கு டென்ஷன்.. அக்னியை நம்பினார் கைவிடப் படார்.. நீங்க நைட்டு சொல்லிய உடனே அதற்கான ஏற்பாட்டை பண்ணிட்டேன்" என்றவளின் கரங்களோ.. வாகாய் இலைக்கட்டுகளைத் தூக்கித் தரையில் பதமாய் இறக்கிக் கொண்டிருந்தது.



"சரி தான்.. நான் உன் கிட்ட முன்னரே சொல்லியிருக்கனும்.. அந்த வேலுவை நம்பினது தப்பா போச்சு" என்றவருக்கு



"அட விடுங்க ண்ணா.. அதான் நேரத்திற்கே வந்துடுச்சே.. நீங்க சரிபாருங்க" என்றவள்.. சீனியின் பதிலை எதிர்பார்க்காமல் வண்டி நோக்கிச் செல்ல எத்தனிக்க



"இரு.. இரு.. அக்னி சித்த இரு" என்ற சீனி தன் வேக நடையுடன் உள்ளே சென்றவர்.. திரும்பி வரும் போது கையில் துணிப்பையுடன் வந்தவர்.. அதை அவளிடம் தர.. "என்ன ண்ணே" என்று கேட்டவள் மறுக்காமல் பையை வாங்கிக் கொள்ள



"பெருசா ஒன்னும் இல்ல அக்னி.. சும்மா ரெண்டு லட்டும்.. நாலு பழமும் தான் அதில இருக்கு யுவனுக்குக் கொடு"



"ஓ.. நன்றிங்க ண்ணா.. சீனி மாமா தந்ததா சொல்றேன்.. அவன் கிட்ட" என்று மென்னகையுடன் சொன்னவள் தன் வண்டியின் வேகத்தைக் கூட்ட.. அதுவோ மிதிரவயல் தாண்டி புதுவயல் பயணித்துக் காரைக்குடி சந்தைக்கு வந்தது. இவள் சரக்குகளை இறக்கி முடித்து.. திரும்பவும் வீட்டுக்கு வர.. அன்றைய நாளுக்கான இவளின் முதல் பயணம் முடிந்திருந்தது.



தோட்டத்தில் கோழிக் குஞ்சுகளை விரட்டி கொண்டிருந்த யுவன்.. தாயைக் கண்டதும் "அம்மாஆஆஆ" என்ற அழைப்புடன் ஓடி வந்து அக்னியின் காலைக் கட்டிக் கொள்ள



வாஞ்சையுடன் மகனைத் தூக்கிக் கொண்டவள் "என் செல்லம்.. என் ராஜா" என்ற கொஞ்சலுடன் கேசம் கோதி மகனை உச்சிமுகர



அதில் கிளுக்கி சிரித்த படி வாகாய் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்ட யுவன் "ம்மா யுவன் சமத்து.. நீ சொன்ன மாதிரி கஞ்சி முழுசா குடிச்சிட்டேன்" என்று தலையசைத்து பாவனையாய் சொல்லிட.. அதாவது அவள் வெளியே சென்ற பிறகு ஜானகி பாட்டியைப் படுத்தாமல் சமத்தாக இருந்ததோடு.. அவர் கொடுத்த சத்துமாவு கஞ்சியை வீணாக்காமல் முழுதாகப் பருகியதைத் தான் தாயையைக் கண்டதும் மழலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குது இந்தப் போக்கிரி. அக்னி வெளியே செல்லும் போது எல்லாம் 'சமத்தா இரு டா.. அம்மா இல்லன்னு பாட்டி கொடுக்கிற சாப்பாட்டை வீணாக்கக் கூடாது' என்று கற்று தருவாள்.. அதன் பொருட்டே இந்த வாயாடித் தனம் இவருக்கு..



அதில் நெஞ்சம் நிறையப் புன்னகையுடன் மகனின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி "சமத்து புள்ள" என்றவள். பின் மகனை அள்ளிச் சென்று குளிக்க வைத்து.. ஆடை மாற்றித் தலை வார.. அவனோ மாயக் கண்ணனைப் போல் தலை சாய்த்து.. கன்னம் குழிய புன்னகையுடன் வலது கையைத் தாயின் முன் நீட்ட.. வழக்கம் போல் மகனின் செயலில் தன்னைத் தொலைத்தவளாக.. நெஞ்சடைக்க மகனின் கன்னக்குழியை ரசித்தபடி.. நீட்டிய அந்தப் பிஞ்சு கரத்தைப் பற்றி அவனின் ஆறாம் விரலுக்கு முத்தமிட்டவளின் நெஞ்சமோ விம்ப மகனை வாரி அணைத்துக் கொண்டாள்.



அன்றைய காலை உணவாக இட்லியும்.. சாம்பாரும் செய்தவள்.. மதியத்திற்குச் சோறு வடித்து.. காலை சாம்பாருக்கு ஏற்றார் போல் உருளைக்கிழங்கு வறுவலும்.. கொத்தமல்லி துவையலையும் அரைத்தவள்.. பின் காலை உணவை உண்டு.. மகனுடன் அந்நாளுக்கான அடுத்தப் பயணத்தைத் தொடங்கினாள் மங்கை.



நாள்தோறும் வார நாட்களில் மகனைப் பால்வாடி அனுப்பிய பிறகு தான் அக்னி சந்தைக்குச் செல்வாள்.. ஆனால் இன்று சீனியப்பனைப் போல் யாராவது சிலதைக் கேட்டால் நேரமே எடுத்துச் சென்று தருவாள்.. அதே மகனின் விடுமுறை நாட்களில் தாய் மகன் இருவரும் வண்டியில் தான் வலம் வருவார்கள்.



போகும் வழியில் தெரிந்தவர்களை அவர்களின் சரக்குப் பொருட்களோடு ஏற்றிச் செல்வது வழக்கம். அவ்வாறே இன்றும் சிலர் ஏற... யுவன் வந்திருப்பதைப் பார்த்தவர்கள் அவனைக் கொஞ்ச.. அவனோ "டிக்கெட்.. டிக்கெட்... எல்லாரும் டிக்கெட் வாங்குங்க.. டிக்கெட் இல்லாம யாரும் போகக் கூடாது" என்று கண்டக்டர் பாணியில் சொல்லி அனைவருக்கும் தன் பிஞ்சுக் கரத்தால் யுவன் சில துண்டு காகிதங்களைக் கிழித்துத் தர.. குழந்தையின் செயலில்.. சிலர் போலி பவ்யத்துடன் அதை வாங்கிக் கொள்ள.. சிலர் வாய் விட்டு சிரித்தனர். "உருளைக்கிழங்கு தாத்தாக்கும்.. மீசை மாமாக்கும் டிக்கெட் இல்ல... ஆங்.. போலாம்.. ரைட் ரைட்" என்று இருவருக்கும் யுவன் சலுகை தர.. மகனின் செயலில் புன்னைகைத்துக் கொண்டாள் அக்னிசாகரி.




சந்தையில் பணிகளை முடித்து.. நண்பகல் போல் தாயும் மகனும்.. தங்கள் இல்லத்தை நோக்கிப் பயணிக்க.. தனக்குப் பிடித்த இடம் வந்ததும் யுவன் கடைக்கண்ணால் தாயைக் காண.. வழக்கம் போல் அக்னியோ மகனைக் கண்டும் காணாதது போல்.. வண்டியின் வேகத்தைக் குறைக்காமல் முன்னோக்கிச் செல்ல "ம்மாஆஆ.. ம்மாஆஆஆஆ.. நோ.. நோ.. நிறுத்துங்க.. நிறுத்துங்க" என்று பாவனையுடன் தன் சின்னஞ் சிறு சுட்டு விரலை நீட்டி.. கூக்குரலிட்டு வாகனத்தை யுவன் நிறுத்த சொல்லவும்



அதில் ஒன்றும் அறியாத அப்பாவியைப் போல் அக்னி "அச்சோ.. இந்த இடமா.. அம்மா வழக்கம் போல மறந்துட்டேன் யுவன்" கள்ளச்சிரிப்புடன் மொழிய



அதை நிஜம் என்று நம்பிய மைந்தன் "அதான் யுவன் இருக்கனே" அதாவது உங்களுக்கு ஞாபகப்படுத்த தான் நான் இருக்கனே என்பது போல் பெரிய மனிதர் தோரணையில்.. அவனின் சுட்டு விரலைத் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு தலை சாய்த்து மழலையில் சொல்ல.. அதில் என்றும் போல் இன்றும் உள்ளம் கொள்ளை போனது பெற்றவளுக்கு..



வழக்கமாய் இம்மாதிரியான பயண நேரங்களில் எல்லாம்.. இருவரும் வந்து செல்லும் இடம் தான் இந்தக் கருப்பண்ணசாமி கோவில்.. இருபதே படிகளைத் தாண்டி மேலே சென்றால்.. வெட்டவெளியில் பெரிய கல் மேடையில்.. அரசமரமும் வேப்பமரமும் இணைந்த வேர் பகுதியில் வீற்றிருப்பார் கருப்பண்ணசாமி.. அங்கு ஒரு கல் குதிரையும் அவருக்குத் துணை இருக்கும்.. அதன் மேல் ஏறி அமர யுவனுக்கு மிகவும் பிடிக்கும்.. பெயருக்கு ஏற்றார்போல் யுவராஜனாய் மகன் அதில் அமர்ந்திருப்பதைக் காண காண திகட்டாது அக்னிசாகரிக்கு. அதன் பொருட்டே மகனை இங்கு அழைத்து வருவாள்.


இவர்கள் மேலே வர.. அங்கு மற்றொருவரும் இருக்க.. யுவன் தான் முதலில் அவரைப் பார்க்க "ம்மா.. யாரோ இருக்காங்க" மகன் கிசுகிசுப்பாகச் சொல்ல.. அக்னியும் மகன் சொன்ன திசையில் காண..


அங்கு ஆறடி உயரத்தில் திடகாத்திரமான உடலுடன் ஓர் ஆண்... முகத்துக்கு மேலே கை வைத்து முகத்தை மறைத்த படி படுத்திருந்தான்.. கோவில் ஊருக்கு உள்ளே போகும் வழியில் திறந்தவெளியில் உள்ளதால்.. மரநிழலுக்காக யாராவது தங்கி இருக்கலாம் என நினைத்தவள்.. மேற்கொண்டு ஆராயாமல் மகனைக் கல் குதிரையில் அமர வைத்து விளையாட்டு காட்டி.. அவனின் ஆட்டம் முடிந்ததும் இவர்கள் கீழே செல்ல.. அதுவரையிலும் அவ்விடத்தை விட்டுத் துளியும் அசையவில்லை அந்த ஆண்மகன்.



இருவரும் கீழே வாகனத்தை நெருங்க.. அங்கு அறிமுகமில்லா திடகாத்திர உடலுடன், முரட்டு முகம் கொண்ட இரு ஆண்கள் நின்றிருந்தார்கள்.. இவளைப் பார்த்ததும் அதில் ஒருவன் "நீ தான் அக்னிசாகரியா" என்று கேட்க



இவள் சிறு யோசனையில் எச்சரிக்கையுடன் ஆமாம் எனத் தலையசைத்த நொடியே இருவரும் அவளின் இருகைகளையும் ஆளுக்கொரு பக்கமாய்ப் பின்னிழுத்து.. மடக்கிப் பிடித்துக் கொள்ள.. பெண்ணவள் இமைக்கும் நொடிக்குள் இவைகள் நடந்தேற.. அவளுக்கோ கையறு நிலை.. அதிர்ச்சியில் "டேய்.. யாரு டா நீங்க" கேட்டவள் திமிறிக் கொண்டு ஏக வசனத்தில் சீற


"அதுவா.. உன் அப்பன்" என ஒருவன் நக்கலடிக்க



இவளுக்கு வந்த கோபத்திற்கு அவர்களை எட்டி உதைத்திருப்பாள்.. ஆனால் அதைச் செய்ய விடாமல் நடந்த களேபரத்தைப் பார்த்துப் பயத்தில் அழுதபடி "ம்மா.. ம்மா.." என்ற கதறலுடன் தாயின் காலை யுவன் கட்டிக் கொள்ள.. தான் கற்ற தற்காப்புக் கலைகள் எல்லாம் மறந்து போக அடுத்து செயல்பட முடியாத நிலையில்.. முகத்தில் குழப்ப ரேகையுடன் அவர்கள் பிடியில் நின்றாள் மங்கை
 
Last edited:
Back
Top