ஞாபகங்கள் தாலாட்டும் 6

Avira

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
6.ஞாபகங்கள் தாலாட்டும்

அங்கே அந்த அறையில் அவள் கௌதமை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த விழியை கண்டவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க துவங்கினான்.

அவன் அவளை நெருங்க நெருங்க நந்தினியின் கால்கள் பின்னோக்கி நடந்தது, அவளின் இதயமோ வெளியே கேட்கும் அளவு சத்தமாக துடித்தது.

" என்ன பார்த்து ஏன் பயப்படுற நந்து....நான் உன் கௌதம் தானே?? "

" இல்லை நீ....நீங்க...என் கௌதம் இல்லை , நானும் உங்க நந்து இல்லை, நான் திருமதி ஷிவச்சந்திரன், உங்களுக்கும் எனக்கும் இருந்த உறவு இப்ப இல்லை, என் வாழ்க்கையில உங்களுக்கு இடம் இல்லை," என்று கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே நடுங்கும் குரலில் கூறினாள் நந்தினி.

" ஏன் அப்படி சொல்ற?? நான் ஏன் அன்னைக்கு உங்க அப்பாவை பார்க்க வரலை அப்படீனு உனக்கு தெரிய வேண்டாமா???"

" வேண்டாம்......எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்னை கொஞ்சம் நிம்மதியா வாழவிட்டா அதுவே போதும், என்னோட கணவர் மிகவும் நல்லவர் அவருக்கு என்னால துரோகம் செய்ய முடியாது...,ப்ளீஸ்....நீங்க என் வாழ்க்கையோட முடிஞ்சு போன அத்தியாயம் , முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும், திரும்பவும் என்னோட அழகான வாழ்க்கையில நீங்க வராதீங்க.....," என்று இருகைகள் கூப்பி கண்களில் கண்ணீர் வடிய நின்றவளின் கோலம் கண்ட கௌதம் சர்வமும் அடங்க அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான்.

" ஏன் நந்தினி ??ஏன் என்னை கொல்ற?? நான் அவ்வளவு மோசமானவனா?? ஏன் இப்படி எங்கூட பேசக்கூட தயங்குற??நான் அப்படி என்ன பாவம் செஞ்சேன்???நீ கேட்க விரும்பலை அப்படீனாலும் உங்கிட்ட காரணத்தை சொல்றது என் கடமை , உங்க அப்பாகிட்ட பேசுறதுக்காக வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தேன் அப்போ திடீருனு எங்க அப்பா வந்தாங்க."

ஒரு சிறு இடைவெளி விட்டு நந்தினியை நிமிர்ந்து பார்தான் , அங்கே அவள் கௌதமை பார்காமல் கீழே குனிந்து அமர்ந்திருந்தாள்.அவளின் முகத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வம் ஏதுமில்லை என்பதை உணர்ந்த கௌதம் சிறு ஏமாற்றம் அடைந்தான்.

இருவரின் மனமும் அந்த கடைசி நாள் நிகழ்வுகளை நினைக்க தொடங்கியது.

கௌதமிற்கு இறுதியாண்டு தேர்வு தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தது நந்தினியின் தேர்வுகள் முடிவு பெற்றதால் அவள் தன் பெற்றோருடன் தனது சொந்த ஊருக்கு சென்றாள்.இருவரது தொலைபேசி பேச்சுகளின் நேரமும் குறைய தொடங்கியது.அப்படி ஒரு நாள் இரவு கௌதமிற்கு கால் செய்தாள் நந்தினி.

" சொல்லுடா.........இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்."

"ம்.....சாப்டியா??"

" இன்னும் இல்லைடா ஆர்டர் பண்ணியிருக்கேன் இன்னும் வரலை."

" ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க?"

"ஃபைனல் எக்ஸாம் நெருக்குதுல அதான் ப்ராஜக்ட் சம்மிட் பண்ணணும் அதனால கொஞ்சம் வேலை ஆகிடுச்சு."

"ம்....சரி அப்ப சாப்பிட்டு தூங்கு நாளைக்கு பேசலாம்."

" ம்.....நந்தினி??"

" சொல்லு கௌதம்."

" என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்?ஏதோ சொல்லனும்னு நினைக்கிற ஆனால் சொல்ல தயங்குற,"

" ........." நந்தினி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

" என்னாச்சு......உன்னை எது கஷ்டப்படுத்துது சொல்லு."

"இல்லை கௌதம்.நீ எக்ஸாம்க்கு ப்ரிபார் பண்ணு அதான் முக்கியம் அதுக்கப்புறமா இதை பத்தி நம்ம பேசலாம்."

" எக்ஸாம் முக்கியம் தான். ஆனால் நீயும் எனக்கு முக்கியம்.என்னனு சொல்லு."

பல விதமாக கௌதம் கேட்டும் நந்தினி ஏதும் கூறவில்லை.

" சரி உனக்கு எப்ப சொல்லனும்னு.தோனுதோ அப்ப கால் பண்ணு."என்று கூறியவன் காலை கோபமாக கட் செய்தான்.

அடுத்த நொடி மீண்டும் கௌதமின் செல்பேசி ஒலிக்க இதை எதிர்பார்தவன் போல குரலை கோபமாக வைத்துக்கொண்டு," என்ன வேணும் உனக்கு.?"

" ஏன் திட்ற இப்படி கோபமா கட் பண்ணா என்ன அர்த்தம் நான் எப்படி நிம்மதியா தூங்க முடியும்.?"

" ஆ....அப்ப நீ இப்படி ஏதோ சொல்ல வந்து சொல்லாம விட்டா மட்டும் நான் நிம்மதியா தூங்கிடுவேனா?"

" சாரி கௌதம். உன்னை டென்ஷன் ஆக்க வேணாம்னுதான் சொல்லலை."

" அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.நீ விஷயம் என்னனு சொல்லு."

" ம்......அப்பா எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்றாங்க."

" என்ன????? ஆனால் நீ எம்.எஸ்.சி. படிக்கபோக ஓகே சொல்லிட்டாஙாக தானே.இப்போ என்ன திடீருனு?"

" ஆமா சித்தப்பா பொண்ணு க்கு கல்யாணம் கூடி வந்திடுச்சுனு ஏதோ காரணம் சொல்றாங்க அதனால அவளுக்கு முன்னாடியே எனக்கு நிச்சயமாவது பண்ணணும்னு சொல்றாங்க.எனக்கு என்ன பண்றதுனு புரியலை."

" என்ன நந்தினி இப்படி சொல்ற .ம்.....சரி நான் இந்த ஞாயிற்றுக்கிழமை வந்து உங்க அப்பாவை மீட் பண்றேன் கவலைபடாத.இப்ப நீ அப்பாகிட்ட எதுவும் சொல்லாத ஞாயிற்றுக்கிழமை வரை கொஞ்சம் பொறுமையா இரு.சரியா?"

" ம்.....வந்திடுவல?"

" என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?"

" அப்படி லாம் இல்லை."

" எதைபோடட்டும் குழப்பிக்காம போய் தூங்கு."என்றவாறு கால் ஐ கட் செய்தான்.


நந்தினியின் மனமோ பலவாறாக குழம்பி இருந்தது.கௌதமிடம் தன் வீட்டு நிலையை கூறி அவனது இறுதியாண்டு தேர்வை பாதிக்க செய்ய அவள் துளியும் விரும்பாதபோதும் வேறு வழியில்லாமல்தான் அவள் எல்லாவற்றையும் கூறினாள். ஆனால் நிலை அடுத்த நாளே கையை மீறி போகும் என்று அவள் கருதவில்லை.

அடுத்த நாள் காலை நந்தினியை அழைத்த அவள் அன்னை, " நந்தினி.... அப்பா உன்னை கூப்டுறாங்க பாரு."

" அப்பா.....சொல்லுங்க பா."

" இந்த கவர்ல இரண்டு ஃபோடோ இருக்கு டீடெய்லும் கூடவே இருக்கு உனக்கு யார பிடிச்சாருக்குனு சொல்லுமா."என்றவாறு ஒரு கவரை நீட்ட செய்வதறியாது திகைத்தாள் நந்தினி.

" அப்பா....."

" என்னம்மா..."

" அப்பா நான் எம்.எஸ்.சி படிக்கனும் பா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்பா."

" இல்லைமா அது சரியா வராது.நம்ம குடும்பத்தில என்.தம்பி அவனோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டான்.உனக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தா ஊரு தப்பா பேசும்."

"அப்பா ஊரு என்ன சொன்னாலும் உண்மை அது இல்லையே.எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்பா .ப்ளீஸ்..."என கெஞ்சிய தன் மகளை பார்த்த அவள் தந்தை, இதோ பாரு நந்தினி நான் முடிவு பண்ணா பண்ணது தான்."என்று கூறியவர் வேகமாக அவ்விடம் விட்டு நகர நந்தினியோ கௌதமை அழைக்க செல்லை தேடினாள்.

கௌதமிற்கு கால் செய்யமுயற்சி செய்த நந்தினிக்கு கிடைத்த பதில்," தாங்கள் தொடர்பு கொண்ட தொலைபேசி எண் தற்போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது," என்பதே.அன்று மட்டுமல்ல அடுத்த வந்த நாட்களிலும் அவளால் அவனை தொடர்பு கொள்ள இயலவில்லை.

நிகழ் காலத்திற்கு வந்த நந்தினி," உனக்கு தெரியுமா உன்னை எப்படி தேடுனேனு உன்னை கான்டாக்ட் பண்ண முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டேனு. திடீருனு அடுத்த நாள் அப்பா என்னை கூப்பட்டு என் கையில சில ஃபோட்டோவ கொடுத்து மாப்பிள்ளை யை செலக்ட் பண்ணு சொல்றாங்க.எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பார்த்தியா??? உன்னை எப்படியெல்லாம் தேடுனேனு நினைச்சு பார்த்தியா.திடீருனு காத்து மாதிரி காணாம போயிட்ட.உன்னை மனசுல சுமந்து கிட்டு ஷிவாவை கல்யாணம் பண்ணிகிட்டேன்.என் வாழ்க்கை எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு உனக்கு யோசிச்சு பார்க்கவாவது முடியுமா??"

தன் மன பாரத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கௌதமிடம் இறக்கி வைத்தாள் நந்தினி.அவளது சோகம் அனைத்தும் கண்ணீராய் பெறுக அவளை அணைத்து ஆறுதல் கூறும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிய கௌதம் நந்தினி பேசட்டும் என்று விட்டுவிட்டான்.அவனுக்கு தெரியும் அவனுடைய நந்தினி அவனிடம் மட்டுமே மனதை திறந்து பேசுவாள் என்று.அவன் நினைத்து போல நந்தினி தொடர்ந்தாள்," என்னால முடியுல உன்னை மறக்க முடியலை ஆரம்பத்தில ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.நீ ஏன் அப்படி பண்ணுன நீ விளையாட என் வாழ்க்கை தான் கிடைச்சுதா நான் தான் நமக்கு சரிவராதுனு ஆரம்பத்திலயே விலகி போனேனே ஏன் என்னை காதலிக்க வெச்ச.ஏன் கௌதம் ஏன்???அப்பறம் ஏன் மறைஞ்சு போன?"

இத்தனை ஆண்டுகளாய் அவளை குடையும் கேள்வியை கேட்டாள் நந்தினி.நந்தினியிடம் தன் நிலையை கூற தொடங்கிய கௌதம் முன்னே அந்த நாளின் நிகழ்வு கண்முன் விரிந்தது.

நந்தினியிடம் பேசி முடித்துவிட்டு ஃபோனை கட் செய்த கௌதமின் எண்ணங்கள் நந்தினியை சுற்றியே வந்தது.அவன் எண்ணங்களை தடை செய்தது வாசலின் அழைப்பு மணி உணவு வந்திருக்கும் என்று எதிர்பார்த்து போனவன் அங்கே அவன் தந்தையை பார்த்து குழம்பினான்.
 

Author: Avira
Article Title: ஞாபகங்கள் தாலாட்டும் 6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN