என்னடி மாயாவி நீ: 15

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 15

அம்மூ...
என் வாழ்க்கைய அழகா மாத்துனவ, என்னையும் மாத்திட்டா . நீ வந்த பிறகு தான் என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சதுனு தோணுச்சு.

அம்மூ... இந்த பேரு அவளுக்கு நான் வச்ச பேரு. அவளுக்கும் இந்த பேரு புடிச்சிருக்கணும், கண்டிப்பா புடிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

அன்று கோடைகாலத்தில், சூரியன் ஊரையே எரித்துவிடும் நோக்கில் கொளுத்தி எடுத்தது. மதிய வேளை, அப்போதான் நான் அம்மூவ முதல் முதல பார்த்தேன் ஹாஸ்பிடலில். நான் பார்க்கும்போது அவ அழுதுட்டு இருந்தா. அன்னைக்கு அவளோட தம்பி மாடிப்படியிலிருந்து கீழ விழுந்து அடி பட்டுருச்சி. வீட்ல வேற யாருமே இல்லாத நேரத்துல இப்படி நடந்துடுச்சு. ரொம்ப பயத்துல இருந்தா. அவள இப்படித்தான் பர்ஸ்ட் டைம் பாத்தாலும், பாத்தவுடனே வெயில் காரணமா இருந்த உடம்பு சூடு எல்லாம் பறந்து ஒரு விதமான குளுமை எனக்குள்ள பரவியது. அதை என்னால நல்லாவே உணர முடிஞ்சது. தூரத்துல இருந்துதான் அவள பாத்தேன். அவ தம்பி தம்பினு அப்படி அழுதா. அவ மட்டுமே தனியா இருந்தா, அவள தனியா விட்டுட்டு போக மனசே இல்லை. அவ கைய பிடிச்சி அழுகாதனு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. அப்பவே, அவளோட அன்பு முழுதும் எனக்கு கிடைக்கும்னு ஆசை பட்டேன். அப்போ, என்னால அவ கூட இருக்க முடியாத சூழ்நிலை. அம்மாகூட வந்துதிருந்தேன். அம்மா சொந்தகாரங்க ஒருத்தவங்கள பாக்க போகணும்னு என்னைய துணைக்கு அழைச்சிட்டு வந்தாங்க.

அதுனால அங்க ரொம்ப நேரம் இருக்க முடியல. ரொம்ப நேரம் அவள பாக்கவும் முடியல. மனசு ரொம்ப கஷ்டமாவே இருந்துச்சு. ஏதோ, அதுவும் ஒருவகையில சுகமான வலிதான். உயிரையே வதைக்கும் வலி, உயிருக்கே வைத்தியம் பார்க்கும் வலி. பல எண்ணங்கள் ரயில் போல என் மனதில் ஓட்டம் செய்ய, நான் அதெற்க்கெல்லாம் அப்போ தடை விதிச்சி, இப்போ நாம படிக்கணும் அப்புறம் பாத்துக்கலாம்னு எனக்கு ஒரு கட்டு போட்டுகிட்டேன். அது எல்லாம் அவள அடுத்த முறை பாக்குற வரைதான். இத மறந்துகூட விஷ்ணு கிட்ட சொல்லவே இல்லை.

அவளை பார்த்த கோடை விடுமுறை அழகா என் வாழ்க்கையில பயணிச்சிட்டு இருந்தது. அவளின் முதல் வருகையின் சுவடு என் இதயத்திலிருந்து மறையாமல் அவளுக்காக துடிச்சிட்டு இருந்துச்சு. மறைய கூடிய சுவடா அது? என நானே எனக்குள் கேள்விகளை கேட்டுக்கொண்டேன்.

மறுமுறை அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் விஷ்ணுவும் ஐஸ் கிரீம் பார்லர் போனோம். அங்கு சென்று அமர்ந்ததுதான் மட்டும்தான் தெரியும் எனக்கு. விஷ்ணு என்ன பிளவோர் வாங்கிட்டு வந்தான், எப்போ சாப்பிட்டோம், எப்போ முடித்தோம், நாங்கள் இருவரும் என்ன பேசினோம் என எதுவுமே நினைவில் இல்லை. எல்லாமே ஒரு மாயை போல இருந்தது. எனது பார்வை முழுதும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. அவளிடம் உள்ள குறும்புத்தனம் என்னை வெகுவாக ஈர்த்தது. அன்று பாசமிகு அக்காவாக, ஒரு குமரியாக இருந்த நிலையில் மாறி, இப்போ கண்ணில் மின்னும் சிரிப்போடு முகத்தில் குழந்தை ஜாடை கொண்டு இருந்தாள். மெல்ல மெல்ல என் இதயத்திலும் பிஞ்சு விரலால் நடையிட்டு அமர்ந்தாள். அவளது சுவை மிகுந்த இதழ்களை சுற்றி, நான் இனிப்பா? இல்லை நீ தித்திப்பா? என போட்டி போட்டு பட்டிமன்றம் நடத்திய சுவை கொண்ட ஐஸ்கிரீமை என் நாவால் சுத்தம் செய்து ஓர் இடத்தில் ஓர் சுவை மட்டும் தான் இருக்கவேண்டும் என அவளின் இதழுக்கு பாராட்டு விழா வைக்கவேண்டும் என எழுந்த ஆசையை கடினப்பட்டு அடக்கி வைத்தேன். அன்று விஷ்ணுவை நான் கண்டுகொள்ளவே இல்லை.

நாட்கள் எதற்கும் அஞ்சாமல் ஓடியது. நாள் முழுதும் அவளோட நினைப்பிலேயே இருந்தேன். எனக்கு அவளை பற்றி ஒரு அக்காவா, ஒரு சுட்டி பெண்ணாகவும் தான் தெரியும். எனக்கு அவளை பற்றி தெரிந்த அளவுக்கு கூட அவளுக்கு என்னை பற்றி தெரியாது.

அவளது பெயர், என்ன வகுப்பு, வீடு எங்க இருக்கு எதுவுமே எனக்கு தெரியவில்லை. இருந்தும் அவளையே சுற்றி இருந்தது எனது நினைவு முழுதும். எல்லாமே ஒரு கனவுலகம் போல இருந்தது. கற்பனைக்குகூட எட்டாத கற்பனையெல்லாம் நான் அந்த சிறு பெண்ணோடு கற்பனை செய்து அவளோடு வாழ்ந்து வந்தேன். அந்த பெண்ணை மறுமுறை பாப்போம் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. எல்லாவற்றையும் பகிரும் நண்பனிடம் இதை பற்றி ஒரு துளி கூட சொல்ல நான் யோசிக்கவில்லை. அந்த காதல் பயணம் முழுதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவகூட ரொம்ப வருஷம் வாழனும், அவள நல்லா பாத்துக்கணும் என ஏகப்பட்ட ஆசைகள் எனக்குள். வாழ்வில் இரண்டே முறை பார்த்துவிட்டு நமக்குள் ஏன் இத்தனை மாற்றம் என யோசிக்க விடை தெரியவில்லை. மேலும் யோசிக்க தோணவில்லை, மேலும் யோசித்தால் அந்த கற்பனை உலகம் வெறும் கற்பனையாகி போய்விடுமோ என்ற பயத்தில்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி காலமும் ஆரம்பித்தது. நானும் விஷ்ணுவும் 11ஆம் வகுப்பில் கால் எடுத்து வைத்தோம். நாட்கள் அதன் போக்கில் என்னிடம் அம்மூவை காட்டாமலே நகர்ந்து சென்றது.

காலாண்டு தேர்வும் நெருங்கியது. நான் அதில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். வருடாவருடம் பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரார்த்தனைக்கூடத்தில் பரிசு வழங்குவர்.

பரிசு அளிக்கும் அன்று எனக்குள் புதுவிதமான உணர்வு ஊற்றெடுத்தது. இது எப்போதும் நிகழ்வது தானே, இன்றைக்கு ஏனோ வித்தியாசமாக தோணுதே என எனக்கும் அதன் காரணம் தெரியவில்லை.

இதே உணர்வோடு பள்ளிக்கும் சென்றேன். அங்கு நடந்த பிரார்த்தனைக்கூடத்தில் எனது பெயர் உச்சரிக்கப்பட்டது. நானும் மேடைக்கு சென்றுகொண்டிருக்க, எனக்குள் அந்த புது உணர்வு அதிகரித்தன. அங்கு சென்று பரிசு பெற்றுக்கொண்டு, வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு பெயர் அறிவிப்பு வரும் திசையில் நான் தலையை திருப்பி பார்க்கையில் அங்கு அழகோவியமாய் அமர்ந்திருந்தது எனது இதயத்தின் அரசியே...

அந்நொடியிலிருந்து நான் என்ன செய்கிறேன், நான் எப்படி வரிசைக்கு வந்தேன், பரிசு கொடுத்தோருக்கு நன்றி தெரிவித்தேனா என எல்லாத்தையும் மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் உச்சரித்த தன் பெயரையே நினைத்து அகம் மகிழ்ந்து போனேன்.

அவளது தோற்றத்தை கவனித்தேன். அன்று மருத்துவமனையில் இருந்த குமரி தோற்றமும் முழுமை பெறாமல், ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த குழந்தை தோற்றமும் மறையாமல், எனக்கே கண்டறிய சில மணித்துளிகள் தேவைப்பட்டன.

பள்ளி சீருடையில் நேர்த்தியான முறையில் உடையணிந்து இடைத்தாண்டும் கூந்தலை மூன்று கால் பின்னலில் அடக்கிய குழந்தையா? குமரியா? என பார்ப்பவரை யோசிக்கவைக்கும் தோரணையில் பிரம்மனின் படைப்பாக என் கண்களுக்கு தோன்றினாள். அவள் குழந்தை பருவம் முடியும் நிலையிலும், குமரி பருவம் தொடக்கத்திலும் இருந்தாள்.

இரண்டு முறை பார்த்தும் மூன்றாம் முறையே அவளது மதி முகத்தை முழுதுமாக, நெருக்கத்தில் பார்த்தேன் அவளிடத்தில் எல்லாமே மதுரம் தான், ஆனாலும் என்னை பாதித்தது அவளது கண்கள்தான்.

உருட்டி உருட்டி விழித்து, கண்ணாலே ஆயிரம் கதைகளை பேசும் அந்த கயல்விழியாளின் கண்கள், குளத்தில் துள்ளி விளையாடி திரியும் மீனை போல அவளது கருமணி இரண்டும் ஓரிடத்தில் நிற்காமல் துள்ளி குதித்து எனது மனதில் விழுந்து சிற்பமாய் எழுந்துவிட்டாய்.

பிரார்த்தனைக்கூடத்தின் இறுதியில் தான் தெரிந்துகொண்டேன் அவளது பெயரையும் அவளது வகுப்பையும். அவள் தன்னை விட ஒரு வருடம் சின்ன பெண் என மனதில் பதியவைத்துக்கொண்டேன். ஆனால், என்னால் கற்பனையில் வாழ்வதை தடுக்க முடியவில்லை. இந்த கற்பனை தானே எனது காதலுக்கு கரு உண்டாக்கி, உயிர் கொடுத்து என்னையே வாழ வைத்தது.

அன்று முழுதும் மட்டுமல்ல அடுத்து வந்த நாட்கள் எல்லாமே அந்த கண்களோடு மட்டுந்தான் உரையாடினேன், உறவாடினேன். தனக்கென யாருமே இல்லாத இந்த புவியில் அவள் மட்டுமே தனக்கானவள் என நினைத்து கொண்டேன்.

இந்த சிறிய வயதிலே அவளிடம் இதை பற்றி கூற வேண்டாம் அது அவள் தப்பாக எடுக்க கூட வாய்ப்பு இருக்கிறது, அது அவளது படிப்பிற்கும் பாதிப்பாகிவிடும். இந்த வயதில் எந்த முடிவும் அவளால் எடுக்க முடியாது. அதனால் பிறகு சொல்லலாம் என தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தேன். இந்த காதலாய் அவளிடம் சொல்லி, அவள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வீட்டிலும் விஷ்ணுவிடம் கூறலாம் என முடிவெடுத்தேன்.

பெரும்பாலாக பள்ளியில் பார்ப்பதை தவிர்த்தேன். பொது இடங்களில் நன்றாக பார்த்து மனதில் பதியம் போட்டு வைப்பேன். அன்று மாலை நேரம், பேருந்தில் நான் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து படியில் நான் பயணித்து வரும்போது, முன்னாடி அமர இடம் இல்லாத காரணத்தால் அவள் நின்றுகொண்திருந்தாள். அவளை பார்த்ததும் மனம் "அம்மூ" என கூச்சல் போட்டது. அவளது அலைபாயும் மான்விழிகளை பார்த்துக்கொண்டே நிற்கையில், பேருந்திலோ நிறைய கண்கள் மையப்படுத்தி வரும் காதல் பாட்டுகளே ஒலித்தது. அவனும் புன்னைகையோடு அந்த ஏகாந்த சூழலை ரசித்துக்கொண்டே வந்தேன். அந்த விழிகளை அளவிட்டு கொண்டே, இந்த மாய கண்ணுக்கு இந்த பாடல் வரிகள் மட்டும் போதாது என பாடல் கவிஞர்கள் அளவுக்கு இல்லை என்றாலும் தன்னால் முயன்ற அளவுக்கு வார்த்தைகளை கோர்த்து கற்பனை கொடுத்த அவளின் கண்களுக்கு கவிதையை படைக்க விரும்பினேன்.

கண்களுக்கு ஆபரணமேதும்
கடவுள் படைக்காததின்
காரணம் என்னவென்று
பலமுறை யோசித்தேன் பெண்ணே!
உன் கண்ணை கண்டு
அறிந்து கொண்டேன்
ஆபரணத்தை விட
உன் விழிகள் கதைக்கும்
காதல் மொழி
அழகும் தூய்மையும்
கொண்டது என்பதை...
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN