நெஞ்சம் 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
“கவின், அந்த டிரெஸ்ஸிங் டேபிளை பெட் ரூமில் வைக்க சொல்லு...”

“ஆஹ்... மெல்ல... மெல்ல... கண்ணாடி... தொட்டி உடைஞ்சிட போகுது... இதோ இந்த ஜன்னலை பார்த்த மாதிரி அந்த மீன் தொட்டியை இங்க வைங்க...”

“டேய் தேவா... ஊஞ்சல் எடுத்துட்டு வராங்க பாரு... நான் சொன்ன மாதிரி.... பின் புற தோட்டத்தை பார்க்கிற மாதிரி லானில் மாட்ட சொல்லு... அப்படியே பக்கத்திலே அந்த லவ் பேர்ட்ஸ் கூண்டையும் கட்ட சொல்லு...” இப்படியாக சுற்றி சுழன்று... தன் கம்பெனியிலிருந்து வந்து வேலைகளை செய்து கொண்டிருந்த வேலையாட்களுக்கு.... அதை சீராக எங்கெங்கே எப்படி வைக்க வேண்டும் என்று திபாகரன் சொல்லிக் கொண்டிருக்க.

மகன் பரபரப்பாய் இங்கும் அங்கும் ஓடி வேலை வாங்குவதை.... டைனின் டேபிளில் அமர்ந்து... வலது கையை கன்னத்துக்கு முட்டு கொடுத்த படி... பார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசி

இன்று காலையில் தான் இவ்வீட்டிற்கு புதிதாக பால் காய்ச்சி குடித்தனம் வந்தார்கள் தமிழரசி குடும்பத்தார். இதை பங்களா என்றும் சொல்ல முடியாது... அதற்காக நடுத்தர மக்கள் வசிக்கும் சாதாரணமான வீடு என்றும் சொல்ல இயலாது... அதே இதை மேல்தட்டினர் வசிக்கும் இல்லம் என்று சொல்லலாம். ஆனால்... தமிழரசியைப் பொறுத்தவரை இது பெரிய மாளிகை...

புதிதாய் வீடு தேடும்போதே திபாகரன்... அனைவரும் கூட்டுக் குடும்பமாய் ஒன்றாய்... இருக்க வேண்டும் என்ற முடிவில் தான் வீடு தேடினான். தான் இவ்வளவு சொல்லியும் மருமகளை அழைத்து வரும் முடிவில் மகன் இருக்கிறானே... என்பதை அறிந்த தமிழரசி...

கடைசியாக அவர் உபயோகித்தது... “இங்க பாருடா திபா.. நான் வயசு வந்த பிள்ளைங்களை வச்சிகிட்டு இருக்கேன்... தன்யாவும்... நீயுமா நாம இருக்கப் போறது என்னமோ ஒரே வீட்டுல தான்.. என் பிள்ளைகளுக்கு மனசு இப்படி அப்படி அலைபாயும்... இதெல்லாம் நல்லதுக்கு இல்ல... நான் சொல்றதைக் கேளு... உன் தங்கைகளுக்கு கல்யாணமாகும் வரைக்கும்... தன்யாவை இங்க அழைச்சிட்டு வராத.... இவ்வளவு நாள் இருந்தது இருந்துட்டா... இன்னும் கொஞ்ச நாள் அவ அவங்க அம்மா வீட்டுலேயே இருக்கட்டும்... எல்லா கடமையும் முடிந்த பிறகு வேணும்னா பார்த்துக்கலாம் டா...” என்று தமிழரசி வெளிப்படையாய் மருமகள் வருவதைத் தடுக்க... அதற்கு எல்லாம் அசருபவனா திபாகரன்...

இதுவரை மனைவியை விட்டு பிரிந்து இருந்ததே தவறோ என்று நினைப்பவன்... திரும்பவும் அந்த தவறை செய்வானா என்ன... யார் என்ன சொன்னாலும்... ஏன் அவன் மனைவி தன்யாவே மறுத்தாலும்.. அவனின் குடும்பம் என்ற அங்கம் அவளோடு தானே... அதனால் தான் வேறு ஒரு ஏற்பாட்டை செய்தான் இவன்.

இருந்தாலும் அன்னையின் வார்த்தையைக் கேட்டு மனம் ரணமானது என்னமோ உண்மை தான்... பின்னே அவனுக்கு மட்டும் தங்கைகள் வாழ்க்கை மேல் அக்கறை இல்லையா... அப்படி என்ன நானும் தன்யாவும்... ஒட்டி உறவாடி இழைய போறோம்... குடும்பத்தில் மூத்தவன் என்ற முறையில் எனக்கு மட்டும் நாகரீகம் தெரியாத என்ன? அதிலும் நாங்கள் ஒன்றாக இருந்தால்... தங்கைகள் வாழ்வு பாழா போகும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்...

இப்படி எல்லாம் தன்னுள் வாதிட்டவனுக்கு... அன்னையின் மேல் கோபம் தான் எழுந்தது. ஆனால் அதை இப்போது வெளியிட்டால்... அன்னையின் பிடிவாதம் இன்னும் அதிகமாகும் என்பதை உணர்ந்தவனோ... ஏதும் வாதிடாமல்.... இந்த தற்போதைய வீட்டைப் பார்த்துக் கொண்டு வந்து விட்டான். வேறு வழியில்லாமல்... அரை மனதாய் கூடவே இங்கு வந்து விட்டார் தமிழரசி.

அதுவும் இல்லாமல் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகன், படித்து... வெளிநாட்டு வேலைக்கு சென்று... கை நிறைய சம்பாதித்து... இன்று வீட்டிற்காக செய்யும் முதல் செலவுகள் இவைகள் என்பது அவர் அறிந்ததே. இதுவும் இல்லாமல் கூடவே அவர் மகள் சித்ரா சொன்ன போதனைகள் வேறு... இன்றும் தமிழரசியின் காதுகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது.

“ம்மா... நீ கஷ்டப்பட்டு அண்ணனை படிக்க வைத்து வெளிநாடு போய் சம்பாத்தித்து இப்போ அண்ணன் பணம்.. காசுனு… இன்று அண்ணனுடைய சம்பாத்தியத்தை... எவளோ ஒருத்தி மருமக என்ற பெயரில் சுகமா அனுப்பவிக்கணுமா... அது எப்படிம்மா?... முதலில் அண்ணன் சொல்றதுக்கு எல்லாம்... ஆமாம் சாமி போட்டு அவர் வழிக்கே நீ போ... பிறகு அண்ணன் கிட்டயிருந்து அவளை எப்படி பிரிக்கணுமோ அப்படி அந்த ராங்கிக்காரி தன்யாவை பிரிச்சிடுவோம்.... என்ன சொல்ற?” இப்படி எல்லாம் சொல்லி தாயை உருவேற்றி தான்.... புது வீட்டுக்கு வர சம்மதிக்க வைத்தாள் அவள்.

மகள் சொன்னதைக் கேட்டு ஏதோ ஒழிந்து போகுது என்று தான் தமிழரசியும் நினைத்திருந்தார்... ஆனால் இன்று திபாகரன் தன் மனைவிக்காக பார்த்துப் பார்த்து செய்வதை எல்லாம் கண்டவளுக்கு காதில் புகை வராத குறை தான். பின்னே அவர் மகன் மனைவி என்ற பெயரில் யாரோ ஒருவளுக்கு இல்ல செய்கிறான்... தாங்குமா தாய் உள்ளம்...

“திபா... என்ன டா இது... இப்படி காசை எல்லாம் கரியாக்கி... பொருளா வாங்கி குவிச்சிருக்க... ஏன் அந்த பட்டத்து மகாராணிக்கு... இதெல்லாம் இல்லனா இங்க வந்து வாழா மாட்டாளாமா.... நம்ப குடும்ப நிலவரம் தெரிந்து தானே டா மருமகளா வந்தா... பின்ன எதுக்கு இந்த ராங்கித்தனம்...” தமிழரசி மனம் பொறுக்காமல் கேட்டு விட

வேலையாட்களை ஒரு பார்வை பார்த்த திபாகரன்... தாயை நெருங்கி, “இங்க எல்லோரும் இருக்க... பேசுகிற பேச்சா ‌மா இது? இது சரியில்ல மா. தன்யா... உங்க மருமக... என் மனைவி... என்னமோ அவளை யாரோ மாதிரி பேசுறிங்க... அவ இதை எதையும் கேட்கல... ஒரு கணவனா நான் தான் இதையெல்லாம் என் மனைவிக்கு செய்கிறேன்...” என்று இவன் தாழ்ந்த குரலில் விளக்க

“க்கும்... கணவனாம் கணவன்.... உனக்கு மனைவி என்ற எண்ணம் முதலில் அவளுக்கு இருக்கணும் டா... ஏன் டா திபா... உனக்கு கணவன் என்ற பதவி மட்டும் தான் இருக்கா...” அதாவது நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டோமா என்பது போல் தமிழரசி பேச்சை வளர்க்க

அதில் கோபமுற்ற திபாகரன் தாய்க்கு பதில் தர எத்தனித்த நேரம்.. “அண்ணாஆஆஆ....” என்ற அழைப்புடனும்... ஆர்ப்பாட்டத்துடனும் ஓடி வந்த குலமதியும்... தவமதியும்.... வந்த வேகத்தில்.... ஆளுக்கொரு புறமாய் அவன் தோளை பற்றிக் கொண்டு.... அவனுடன் வட்டமடிக்க...

அதில் “ஹேய்... என்ன குலமதி... தவமதி.... மெல்ல மெல்ல....” என்று தமையனின் குரலும் ஆர்ப்பாட்டமாய் ஒலித்தது...

சலுகையாய் அண்ணனின் தோளில் சாய்ந்து கொண்ட இருவரும் ஒரு சேர ஒரே குரலில் “என் செல்ல அண்ணா... இந்த வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... அதிலும் எங்களுக்காக நீ வாங்கி தந்திருக்கிற கட்டில் மெத்தை.. பீரோ... டிரெஸ்ஸிங் டேபிள்... மீன் தொட்டி.... ஊஞ்சல்.... லவ் பேர்ட்ஸ் இன்னும் இன்னும் எல்லாமே சூப்பர் ணா....” என்று இருவரும் மனமுவந்து சொல்ல

“நிஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று இவன் அன்பாய் கேட்க

“ம்ம்ம்ம்...” என்று குதித்த இருவரும் “எல்லாமே ணா.. இந்த வீடு கூட பிடிச்சிருக்கு...” என்று சொன்ன குலமதி.... அங்கிருந்த மீன் தொட்டியைப் பார்த்து விட்டு...

“ஹேய் தவமதி இங்க பாரேன்... மேலே நம்ம கிட்ட இருக்கிற மாதிரியே இங்கேயும் மீன் தொட்டி... அட ஊஞ்சல் கூட டி...” என்று இவள் தான் பார்த்ததைக் கொண்டு தவமதியை பேச்சில் இழுக்க

“வாவ்... ஆமா டி...” என்ற தவமதி தமையன் பக்கம் திரும்பியவள் “அண்ணா... என்ன ணா இது... மேல் வீட்டுக்கும் கீழ் வீட்டுக்கும் ஒரே மாதிரி எல்லா பொருளும் வாங்கி இருக்கீங்க... ஏன் ணா?...” என்று கேட்க

“எதுக்கா? அட மக்கு புள்ள... மேலே, கீழ... இரண்டிலுமே நாம் தான் வசிக்கப் போறோம்... கீழ நானும் உன் அண்ணியும் இருக்க... மேலே அம்மாவும் நீங்களும் இருக்கப் போறீங்க... அப்போ இரண்டு இடத்துக்கும் பொருட்கள் வேணும் இல்ல... அதான்...” என்ன தான் இவன் தங்கைகளுக்கு விளக்கம் சொன்னாலும்... அவனின் பார்வையோ தாயிடம் தான் இருந்தது. அதாவது உங்க கேள்விக்கு பதில் கிடைத்ததா என்பதாக இருந்தது.

தாய் அன்று அப்படி ஒரு வார்த்தைகளை உதிர்க்கும் போதே.. திபாகரன் முடிவு செய்து விட்டான்... அவனால் தங்கைகளையும் விட முடியாது... மனைவியையும் விட முடியாது என்று. அதனால் தான்... மேலே தாய் தங்கைகள் வசிக்க... கீழே தாங்கள் வசிக்க என்று முடிவு செய்து... அதற்கு தோதாய் இருந்த இவ்வீட்டுக்கும் வந்து விட்டான்.

நான் ஒண்ணும் என் தங்கைகளை விடவில்லை என்ற பதிலே அவன் பார்வையில் தேங்கியிருக்க.... அதையெல்லாம் தமிழரசி படித்தாலும்... கண்டு கொள்ளவில்லை.

மாறாக, “ஹூம்...” என்று பெருமூச்சை வெளியிட்டவர்... “என்னத்த சொல்ல... நான் இவ்வளவு சொல்லியும் தன்யாவை அழைச்சிட்டு வரேன்னு சொல்ற... என்னமோ போ... மூணு பொட்ட பிள்ளைகளை நான் வச்சிட்டு இருக்கேன். அதிலும் வயதுக்கு வந்த பிள்ளைகளை... எப்போ என்ன ஆகுமோன்னு நானே வயித்திலே நெருப்பை கட்டிட்டு இருக்கேன்... இதிலே இவன் பொண்டாட்டியோட ஒரே வீட்டில் இருக்கேனு சொல்றான்... என்னமோ... ஆத்தா மகமாயி... நீ தான் என் குடும்பத்தையும் என் மகள்களையும் காப்பாத்தணும்...” என்று அன்று படித்த அந்த பாட்டையே திரும்ப படித்து தன் அதிருப்தியைக் காட்டிய தமிழரசி…

இறுதியாய், “இங்க ஏன் டி என் வாய் பார்த்துட்டு இருக்கீங்க... போங்க போங்க.. மேலே போய்... வாங்கியிருக்கற பொருளை எல்லாம் அது அது இடத்திலே ஒழுங்கா அடுக்கறாங்களா பாருங்க...” என்று பெரும் குரலெடுத்து மகள்களை விரட்டியவர்.... பின் மகனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அங்க தங்கைகளை அம்போன்னு விட்டுட்டு... இங்க பொண்டாட்டிக்காக பார்த்துப் பார்த்து அடுக்குறான்.... ஏதாவது கேட்டா பாசம்... பாயாசம்னு பொங்குவான்...” இப்படியாக முணுமுணுத்தபடி அவர் நகர்ந்து விட... உடனே திபாகரனின் மனமோ சஞ்சலத்தைத் தத்து எடுத்தது.

திபாகரனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்... எல்லா விஷயத்திலும் நல்லதோர் குணவதியாய் இருக்கும் அவனின் தாயார்.... மருமகள் என்ற சொல்லில் மட்டும் மாறி விடுகிறாரே... அதிலும் தன்யாவை அறவே வேண்டாம் என்று இல்ல சொல்கிறார். இந்த வீட்டிற்கு குடி வருவதற்குள்... தமிழரசி ஆயிரத்தெட்டு முட்டுக்கட்டைகளை போட்டு விட்டார்.

இவன் இப்படி எல்லாம் தன் தாயிடம்... இடி பட்டு பேச்சு வாங்கி அனைத்தும் செய்ய.... அவன் மனைவி தன்யாவோ.... இன்று பால் காய்ச்சும் வைபோகத்துக்கு கூட வரவில்லை. தன்யாவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என்பது தான் இவனின் விருப்பமும் கூட... அதையே இவன் வல்லவனிடம் சொல்லி... தன்யாவை அனுப்ப சொல்ல... அவளோ “வீடு பால் காய்ச்சுவதுனா... அவருக்கு நிறைய வேலை இருக்கும் அங்கிள். அப்போ அவர் என்ன கவனிப்பாரா... இல்ல வீட்டை கவனிப்பாரா... அதனால் அவங்க குடி போன பிறகே... நான் வீட்டுக்கு போய்க்கிறேன்...” என்று மறுத்து விட்டாள். ஏனோ எல்லா விஷயத்திலும் தழைந்து போகும குணம் பெற்ற தன்யாவால்.... அவள் கணவனின் விஷயத்தில் மட்டும் தழைந்து போக அவளாலே முடியவில்லை. அவள் இயல்பையையும் மீறி தான் செயல்படுகிறாள்.... அதன் விளைவே தற்போதைய அவளின் விவாகரத்து பத்திரம்.

இரண்டு தினங்கள் சென்று இன்று தன்யா கணவன் வீட்டிற்கு செல்ல இருக்கிறாள்... அவளை அழைத்துச் செல்ல திபாகரன் வராததால்... தந்தை மகிழ்வரதனே மகளை அழைத்துச் செல்வது என்று முன்பு முடிவாக... ஆனால் அந்த முடிவிலும் தற்போது மாற்றம் வந்துள்ளது.... அதாவது கணவன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருகிறேன் என்று சொன்ன தந்தையும் வர முடியாமல் போக...

இதோ தனி மனுஷியாய்... கணவன் வீட்டிற்கு செல்ல தயாராகி விட்டாள் தன்யா. அவள் அப்படி செல்வதைக் காண வக்கீல் வல்லவனுக்கு தான் மனது கேட்கவில்லை. உடனே தன்யாவை கைப்பேசியில் அழைத்தவர் “தன்யா... உன் கணவரால் வர முடியாதுன்னு முன்பே சொன்னதால் தான்.... வரதன் உன்னை அழைச்சிட்டு போறதா சொன்னான்... இப்போ அவனும் கம்பெனி வேலை சம்மந்தமா வர முடியாத சூழ்நிலை ஆகிடுச்சு... அதற்காக நீ தனியா போகணுமா... ஒரு இரண்டு மணி நேரம் பொறுத்திரு... நான் வந்து உன்னை அழைச்சிட்டு போகிறேன்...” என்க

“வேண்டாம் அங்கிள்... நான் கிளம்புறேன்... நான் என்ன தனியாவா போக போறேன்... அதான் டிரைவர் தாத்தா இருக்கிறாரே... அவர் என்னை அழைச்சிட்டு போவார்... உங்களுக்கு சிரமம் வேண்டாம் அங்கிள்...” இவள் இதமாய் மறுக்க

“இதில் என்ன சிரமம் தன்யா... நான்...”

அவரை முடிக்க விடாமல், “அங்கிள் இன்னும் நான் நோயாளி இல்ல. ப்ளீஸ்... என்னை தனியா விடுங்க...” என்று இவள் கெஞ்சாத குறையாய் சொல்ல... அதை அரை மனதாய் ஏற்றார் அவர்.

முறைப்படி கணவன் வந்து அவளை அழைத்துச் செல்ல வேண்டும்... அல்லது தந்தையாவது அவளை அழைத்துச் செல்ல வேண்டும்... இப்படி இவர்கள் இருவரும் அழைத்துச் செல்லாமல் போக... இவளாவது என்னை விட உங்கள் இருவருக்கும் உங்களுடைய வேலைகள் தான் முக்கியமா என்று சண்டையாவது போட்டிருக்கணும்... இப்படி தன்யாவும் செய்யாமல்... கணவனுக்கு கொடுத்த வாக்குக்காக... இதோ தனியாக கிளம்பிவிட்டாள் தன்யா... தனியாக கிளம்பிய இவளுக்கு கணவன் வீட்டில் கிடைக்க இருக்கும் வரவேற்பு தான் என்னவோ?...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN