பூ 37

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

சில நாட்களாகவே தேவாவிற்கும் விசாகனிற்கும் வாழ்க்கை அழகாய் நகர்ந்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அன்று விசாகனிடம் சண்டையிட்டு எதிர்பாராமல் கிடைத்த முத்தத்திற்கு பிறகு, வந்த நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்படும் எதிர்பாராத சந்திப்புகளில் கூட கோவத்தை இழுத்து பிடித்து கொள்ள முடியாமல் அந்த நினைவில் சின்ன இதழ் மூடிய புன்னகையுடன் வலம் வந்து கொண்டு இருந்தாள் தேவா.


அவளுடைய மலர்ந்த முகத்தை கண்டவனுக்கும் இந்த மாற்றம் பிடித்து இருக்க, இம்சை கொண்ட இதயமோ அவள் மேல் மேலும் அன்பை பொழிந்தது. இதுவரை மனதில் மட்டுமே இருந்த கணவன் என்ற உரிமை உணர்வு தேவாவின் மூளையிலும் பதிய துவங்கிய நாளாய் இந்த நாள் அமைந்தது,


விடிந்தும் விடியாத அதிகாலை வேளையில் தன் புல்லாங்குழலின் இசையால் மனதையும், சிந்தையையும் கொள்ளைக் கொள்ளச் செய்யும் கார்மேக வண்ணனின் நிறத்தில், வானம் தன் வதனத்தை பரப்பிக்கொண்டிருந்த நேரத்தில், தூரத்தே அடித்த கோவில் மணி ஓசையிலும், வெகு அருகில் பாலிற்கு ஏங்கி நிற்கும் கன்றுகளின் மா எனும் உயிர் ஓசையிலும், ஒரு பாதி பொழுது புலர்ந்து இருக்க வளர்ந்த இளம் கன்னியை போன்று தலை தாழ்த்தி நிலம் பார்த்து வெட்கம் கொண்டு நிற்கும் நெற்கதிர்களின் மேனிதன்னை காதலனாய் தழுவி முத்தமிடும் காற்று, அவள் கன்னத்தையும் தீண்டி முத்தமிட்டு சென்றதில் உறக்கம் கலைந்து சோம்பலுடனே எழுந்து அமர்ந்தாள் தேவா.


இரவெல்லாம் கண் விழித்து படித்ததின் பயனாய் கண்கள் இரண்டும் தூக்கத்திற்கு கெஞ்சியது, இருந்தும் கண்களை கசக்கிய வண்ணம் மெத்தையின் மேல் துயில் கொள்ளும் தான் ஹீரோவின் முகம் காண கைகளை விலக்கி மெத்தையை பார்க்க அது வெறிச்சோடி போய் இருக்க, இவ்வளவு காலைல எழுந்துட்டாரா என்று கடிகாரத்தை காண கடிகார முள் 5.30 யை நெருங்கி கொண்டு இருந்தது


கலைந்து இருந்த முடியை ஒதுக்கி கொண்டையிட்டு கொண்டவள் 'அதுக்குள்ள எழுந்து போய் இருக்கார் எங்க போய் இருப்பார்' என்று யோசனையோடு படுக்கையை எடுத்து மடித்து வைத்தாள். அவனுடன் சுமூகமான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இருந்தாலும் மெத்தையின் மேல் படுக்க ஏதோ ஒன்று தடைசெய்து இருக்க, கீழேயே படுக்கை தொடர்ந்து கொண்டு இருந்தது அவளுக்கு. அவனுக்கும் மனைவியை அழைத்து மேலே படுக்க சொல்ல ஆசைதான் ஆனால் இப்போதைக்கு விலகி இருப்பதே அவள் படிப்பிற்கு நல்லது என்று நினைத்து அதை சொல்லாமல் தவிர்த்து இருந்தான்.


ஒருவாறு அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றவள் காலை கடன்களை முடித்து முகம் கழுவி வந்து புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். இன்று கல்லூரி இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வு துவங்கி இருக்க படிப்பில் கவனத்தை செலுத்தியவள் 7.30 மணிக்கு மேல் அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.


அடிக்கடி வெளி வாசலை தொட்டு மீண்டுக்கொண்டு இருந்தது பூவையின் பார்வை, சிறு சத்தம் எழுந்தாலும் அவன் தானோ என்று பார்க்க தான் எதிர்பார்த்தவன் மட்டும் வரவில்லையே என்று வருத்தம் முகத்தில் படர்ந்து விட சுந்தரனின் ரூபத்தில் வந்தது அவளுக்கு செய்தி "என்னம்மா கிளம்பிட்டியா?" என்றபடி வாசலில் வந்து நின்றிருந்தான் சுந்தரன்.


"ஆமா ணா, இதோ" என்றபடி இரண்டு இட்டிலிகளை உண்டு விட்டு எழ "அட இன்னும் இரண்டு இட்லியை வைக்கிறது... சும்மாவே நிப்பியா" என்று பொன்னியிடம் சத்தமிட்டு கொண்டு இருந்தார் தில்லை


"பாட்டி…." என்று அவர் முன் போய் நின்றவள் "வயிறு முட்ட சாப்பிட்டு போய், அங்க பரிச்சை ஹால்ல நான் தூங்கி வழியனுமா? இன்னைக்கு எக்சாம் பாட்டி, இதுக்கு மேலயும் என்னால சாப்பிட முடியாது" என்று கெஞ்சிக் கொஞ்சி அவரை சமாதனப்படுத்தியவள் "உங்களுக்கு அந்த சின்ன புள்ளைங்களே தேவலாம் பாட்டி... என்னமா அடம் பண்றிங்க" என்று அலுத்துப்போய் கூறியவள் "எங்க, அண்ணா அவரு?" என்றபடி சுந்தரனிடம் வந்தாள் தேவா.


"இந்த சாப்பாடு, டிபன் அது எல்லாம் சாப்புடுறிங்களான்னுலாம் கேக்க மாட்டியா? வந்த உடனே உன் புருஷனை பத்திதான் கேப்பியோ?" என்று அவளை வம்பு இழுக்க


"மூனு வேலைக்கு ஆறு வேலை சாப்பிட்டு நல்லா திம்னு கட்டை மாதிரி இருக்கிங்க!!!! இதுல நான் வேற சாப்பிட கூப்பிட்டா நாடு நிலமை... சரி அதை விடுங்க இந்த வீட்டு நிலமைய நெனச்சி" என்று கூற வரவும் "போதும் மா போதும் ஒரு கேள்விதான் கேட்டேன் டோட்டலா டேமேஜ் பண்ற மா" என்று கூறியவன் "உன் புருசனுக்கு அவசர வேலை வந்துடுச்சி அவன் முக்கியமான வேலையா ஈரோடு வரை போயி இருக்கான்... உன்னை கொண்டு போய் காலேஜ்ல விட சொன்னான் கிளம்பு" என்றிட


தேவாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது .முதல் நாள் எக்சாம் அவனிடம் சொல்லி செல்ல வேண்டும் என்று ஆவலாய் காத்து இருந்தவளுக்கு, இந்த பதில் கண்களில் நீர்த்திவளைகளை உருவாக்கியது. எவரும் அறியாமல் அதை உள் இழுத்தவள், அவனை மனதிலேயே கருவிக்கொண்டு தில்லையிடம் கூறிவிட்டு கல்லுரிக்கு கிளம்பினாள்.


காரில் ஏறியதில் இருந்து முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இருந்தவளுக்கு, விசாகனிடம் பேச வேண்டும் போல் இருந்தாலும், தானே அவனுக்கு அழைக்கவும் தயக்கமாக இருக்க போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள்.


எப்போதும் அருவியை போல் நிற்காமல் சலசலத்து கொண்டு இருப்பவளின் மௌன விரதத்தினையும், அவளின் தெளிவற்ற முகத்தினையும் கண்டவனுக்கு ஏதோ ஒன்று இருப்பதாக பட "இன்னைக்கு மழை வராமாதிரி இருக்குல?" என்றான் காரை ஓட்டியபடியே பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் போனையே வெறித்துக்கொண்டு வருபவளை கண்டவன் "கன்பார்ம் இன்னைக்கு பிச்சி ஊத்தப்போகுது" என்றான் உரத்த குரலில்


திடீரென கேட்ட வார்த்தையின் அர்த்தம் விளங்காமல் "என்ன கொட்ட போகுது?" என்றவளை கண்டு நகைத்தவன் "இல்ல போனையே முழுங்குறா மாதிரி பாக்குற... பேசிகிட்டே இருக்க வாய்க்கு வேற இன்னைக்கு பூட்டு போட்டு இருக்க!!! அதான் மழை வரும்னு சொன்னேன்" என்றிட


"என்னை பார்த்தா எல்லோருக்கும் பைத்தியக்காரி மாதிரி தான் இருக்கும்... உங்க பிரெண்டுக்கு அதை விட ஒரு படி மேல, நான் இருக்கேன்ற நினைப்புக்கூட இருக்காது... என்ன மனுஷனோ தெரியல! ஒரு நேரம் நெருப்பு மாதிரி இருக்காரு... ஒரு நேரம் ஐஸ்கட்டியா உருகுறாரு... இதுல நான் இப்படி இருக்கறதுல என்ன ஆச்சரியம் இருக்கபோகுது" என்றாள் படபடவென


அவளின் கோவம் பேச்சிலேயே புரிந்துவிட ஏன் இந்த கோபம் என்று மட்டும் புரியவில்லை பரிட்சை என்று சொன்னதில் மேலும் பேசி அவளை கோபப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவன் அமைதியாக வந்தான். கார் கல்லூரி வளாகத்தை நெருங்கிட அதில் இருந்து இறங்கியவள் "நான் கிளம்புறேன் ணா, சாயங்காலம் வரவேண்டாம் மேகலா கூட வந்துடுறேன்" என்று அவனிடம் கூறியவள் உள்ளே சென்றதும் சுந்தரன் உடனே நண்பனை அழைத்து அவளை பற்றி கூறிவிட்டே அங்கிருந்து கிளம்பினான் சுந்தரன்.


வகுப்பறைக்குள் நுழைந்தவளின் செல்போன் திடீரென ஓசை எழுப்ப அதில் ஒளிர்ந்த எண்களை பார்த்தவளுக்கு கண்கள் பிரகாசமாய் மாறியது சட்டென அதை உயிர்பித்து காதில் பொருத்தி "ஹலோ" என்றாள்


"ஹலோ சனா"


"ம்" என்றாள் தன்னிடம் சொல்லி செல்லவில்லை என்று கோபத்தினை காட்டுவதற்கு,


அதை புரிந்தவன் போல "ஒரு முக்கியமான வேல சனா அதனால தான், அவசரமா கிளம்பிட்டேன் நைட் எல்லாம் படிச்சிட்டு ரொம்ப அசதியா தூங்கிட்டு இருந்தியா... அதான் எழுப்பி சொல்ல மனசு வரல' என்றான் அவளுக்கு விளக்கும் நோக்கில்


"ம்" என்று அது புரிந்தது போல கூறியவளின் மனதை புரிந்துக்கொண்டானோ என்னவோ


"சரி ரொம்ப நேரம் பேச முடியாது சனா... இன்னைக்கு உனக்கு எக்சாம் இருக்குல? நல்ல பண்ணு ஆல் த பெஸ்ட்" என்று அவளை வாழ்த்தியவனின் குரலில் இருந்த உற்சாகம் அவளையும் தொற்றிக்கொள்ள "தேங்க்ஸ்" என்று சந்தோஷக் குரலில் கூறியவள் தேர்வை நல்ல விதமாகவே எழுதி இருந்தாள்.


சுந்தரனிடம் கூறியது போல் சாயங்காலம் மேகலாவுடன் பேருந்தில் பயணித்தவள் பிள்ளைகளுக்கு மாலை வகுப்பையும் முடித்துவிட்டு


படித்தவளை சாப்பிட அழைத்தார் தில்லை


"அப்புறம் சாப்பிடுறேன்" என்றவளை வம்படியாக சாப்பிட வைக்க சாப்பிட்டு முடித்ததும் படிக்க அமர்ந்துவிட்டாள். மணி பத்தை நெருங்கிய நேரம் வாசலையே பார்த்திருந்தாள் தேவா விசாகனின் வருகைக்காக,


ஒரு நாள் கூட அவனை காணாமல் விடிந்ததும் இல்லை, அந்த நாள் முடிந்ததும் இல்லை... நேரம் கடக்க கடக்க அவளுள் பயம் சூழ தொடங்கியது. 'என்ன இவரு இன்னும் வரலையே?' என்று நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தாள். இது தில்லைக்கும் அமுதாவிற்கும் பழகிய ஒன்றுதான் எப்போதாவது இப்படி நடப்பது உண்டு. ஒரு சில சமயங்களில் நடுநிசியில் கூட வந்திருக்கிறான் என்பதால் அவளுக்கு தைரியத்தை கூறி உறங்க சென்றுவிட்டனர்.


அவளுக்குதான் உறக்கம் கொள்வேனா என்று இருந்தது அவனை காணாமல் ஒரு பொட்டு தூக்கமாவது அவள் கண்களை நெருங்குமா!!! "ஒருத்தி இங்க கிடந்து தவிக்கிறனே ஒரு போனை போட்டாவது, இங்க தான் இருக்கேன்... இப்போ வறேன்... அப்போ வறேன்னு…. சொன்னா தான் என்னவாம்?" என்று அவனை ஏசியவள் "அவன் செய்யலன்னா என்ன நானே செய்றேன்" என்று அவனுக்கு போனை போட அது சுவிச் ஆப் என்று கூறியது


நேரம் 12 தாண்டி விட இரு முறைக்கு மேல் அழைத்தவளுக்கு உடல் எல்லாம் பதறியது, உடனே சுந்தரனின் எண்களுக்கு அழுத்தி இருந்தாள். இந்நேரத்தில் தேவாவின் போனை எதிர்பார்க்கதவன் "என்னம்மா இந்த நேரத்தில்?" என்றான் அவசரகுரலில்.


"அண்ணா... அவர் போன் சுவிச் ஆப்ன்னு வருது... அவர் எங்க இருக்காரு? எப்ப வருவாரு? உங்க கிட்ட ஏதாவது சொன்னாரா?" என்றாள் பயம் கொண்ட குரலில்,


'இன்னும் வீட்டுக்கு வரலியா! சாயந்திரம் பேசும்போது கூட சீக்கிரமே வந்துடுவேன்னு சொல்லி இருந்தானே' என்று நினைத்தவன் "இரு மா… இரு பயப்படாத ஒன்னுமிருக்காது… போன்ல சார்ஜ் இருந்து இருக்காது, அதான் சுவிச் ஆகி இருக்கும்" என்று அவளை ஒருவாறு நம்ப தகுந்த காரணங்களை கூறி தேற்றியவன் "கொஞ்சம் பொறுமையா இரு மா ஒரு பத்து நிமிஷத்துல சொல்றேன்" என்று அலைபேசியை துண்டித்துவிட்டு, விசாகனுக்கு அழைக்க அது சுவிச் ஆப் என்ற செய்தியே தாங்கி வந்தது.


நடுராத்திரியில் எங்கே சென்று தேடுவது என்று கலக்கம் கொண்டு இருந்தவன், அவனை தேடி தானே புறப்படுவது என்ற முடிவிற்கு வந்து இருந்தான்.


முதலில் விசாகனின் வீட்டிற்கு செல்ல அங்கு வாசலிலேயே அமர்ந்து இருந்தாள் தேவா சுந்தரனைக் கண்டதும் "அவர் எங்கண்ணா? " என்று அழும் குரலில் கேட்க


"தெரியலையேம்மா" என்று கவலையாக கூறியவன் "நீ பயப்படாத தேவா, நான் அவனை கூட்டிட்டு தான் வருவேன் நீ அழாமா உள்ள போய் இரு" என்றிட வெளியே கேட்ட பேச்சிக்குரலில் தில்லையும் அமுதாவும் கூட முழித்து விட்டு இருந்தனர். அவர்களை தேவாவினை பார்த்துக்கொள்ள கூறியவன் விசாகனை தேடி புறப்பட்டு இருந்தான்.


நேரம் செல்ல செல்ல தேவாவின் கண்களில் பயம் அதிகமாகிக் கொண்டே இருந்தது... பதற்றத்துடன் போனை கையில் இறுக்க பிடித்தப்படி விசாகனுடைய போனுக்கு காத்துக்கொண்டு இருந்தாள். தேவாவின் பயத்தை பார்த்த தில்லைக்கு கலக்கமாக இருந்தாலும் தானும் கலங்கி அவளை பயமுறுத்த விரும்பாமல் "ஒன்னும் ஆகாது கண்ணு... ராசா நல்லபடியா வருவான்… அந்த சாமுண்டிஸ்வரி தாயி நம்மகிட்ட நல்லபடியா கொண்டு வந்து சேர்ப்பா" என்று கடவுளின் மீது நம்பிக்கை வைத்து அவளுக்கு தைரியம் சொல்லிக்கொண்டு தான் இருந்தார்.


அமுதாவிற்கும் தேவாவின் நிலைக்கண்டு பாவமாக இருந்தது மாமானை நினைத்து வருத்தமாகவும் இருக்க "என் மாமா நல்லபடியா திரும்பி வந்திடனும்" என்று வேண்டியும் கொண்டாள்.


விசாகனை தேடி சென்ற சுந்தரனிடத்தில் இருந்தும் கூட ஒரு போன் வரவில்லை மனம் படபடவென்று அடித்துக்கொண்டு தான் இருந்தது தில்லை கூட குலதெய்வத்திற்கு காசு முடித்து வைத்து பேரனை நினைத்து வேண்டிக் கொண்டார்.


விடியல் தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தது கண்ணைக்கூட சிமிட்டாமல் அவன் வரவேண்டும் என்று வாசல் மீதே கண்ணை பதித்து இருந்தவளுக்கு மனம் முழுவதும் மட்டுமின்றி எண்ணம் பேச்சு நினைவு ஏன் தன் உடலில் நிறைந்து இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் அவன் மட்டுமே நிறைந்து இருந்தான்.


அவனை காணாது ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையாய் உணர்ந்தாள். அவன் இல்லாமல் தான் இல்லை, என்பதை உணர்ந்து கொண்ட தருணம், அவ்வப்போது அவளிடம் அடம் செய்யும் மூளையும் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டது போல இனி விசாகனை கண்டால் மட்டுமே, தன் வாழ்க்கைக்கு அர்த்தம் என்பதை உணர்ந்துக் கொண்டு அவன் நினைவுகளை சுமந்து அவனுக்காக காத்திருந்தது.


"அம்மத்தா… சுந்தரன் பைக் வருது.. தேவா... சுந்தரன் வராரு" என்றபடி இருவரையும் அழைத்தாள் அமுதா.


வேகமாக எழுந்து கேட்டின் அருகே வந்தவள் சுந்தரனின் பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த விசாகனை கண்டதும் துடிதுடித்து போய்விட்டாள்.


பின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு வந்த விசாகனுக்கு தலையில் சின்ன அடியும் கையில் ஒரு சிறு கட்டும் இருக்க அதை கண்டு அனைவருமே பதறிவிட்டனர். அவன் பைக்கை விட்டு இறங்கிய அடுத்த நொடியில் தேவாவின் இறுகிய அணைப்பில் இருந்தான் விசாகன் "எங்க போயிட்டிங்க? என்ன ஆச்சி உங்களுக்கு…. ஏன் ஒரு போன் கூட பண்ணல? எப்படி அடிபட்டுச்சி?" என்று நிற்காமல் கேள்வி கேட்டு அழுபவளை காண அவனுக்கே பாவமாய் இருந்தது. எந்த அளவிற்கு தன்னை தேடி இருக்கிறாள் என்று அவள் வாய் மொழியால் கேட்டவனுக்கு சந்தோஷம் இருந்தாலும், அவள் அழுவதை காண வேதனையாய் இருந்தது…


அவளை தேற்றும் விதமாக "இல்லடா பெரிய அடி இல்ல, சின்ன காயம் தான்... எனக்கு ஒன்னும் இல்ல டா... எனக்கு ஒன்னும் ஆகல" என்று அவளை சமாதனப்படுத்த தில்லை அழுதபடியே "அய்யா சாமி என்னய்யா ஆச்சு?" என்று அவன் காயங்களை கண்டு கேட்கவும்


"அப்பத்தா எனக்கு ஒன்றுமில்ல... எல்லா வாசல்லியே எல்லாம் சொல்ல முடியுமா? உள்ளவாங்க" என்று அவர்களை சமாதனப்படுத்தி உள்ளே அழைத்து வந்தான்.


பொன்னியிடம் சூடான காபியை வாங்கிக் கொண்டவன் "ஈரோட்டுல வேலைய முடிச்சிட்டு திரும்பி வரும் போதுதான் ஒரு மினி லாரில ஆக்ஸிடன்ட் நடந்துடுச்சி... அப்பவே பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்ல சேத்துட்டாங்க.. ஆனா, அதுல என் போன் உடைஞ்சிடுச்சி அதான் உடனடியா தகவலை சொல்ல முடியல... எனக்கு உங்களுக்கு சொல்லி பயப்படுத்த விருப்பம் இல்ல நேரம் அதிகம் ஆகவும் சுந்தரனுக்கு போன் பண்ணேன்... உங்களுக்கு போன் பண்ண வேண்டாம், நானே நேர்ல வந்து சொல்லிக்கிறேன்னு சொன்னேன்" என்றிட்டதும்


"நல்லா சொன்னப்போ இராத்திரியில இருந்து ஒரு பொட்டு தூக்கம் இல்ல உன் பொண்டாட்டிக்கு, ரொம்ப பயந்துபோச்சி புள்ள... என் ராசாத்தி" என்று அவளை உச்சி முகர்ந்த தில்லை பொன்னியிடம் காய்ந்த மிளகாயும் ஒரு கை உப்பையும் எடுத்து வர சொல்லி தானே அவர்களுக்கு சுத்தி நெருப்பில் போட்டவர். "என்னமா பொறியுது என் பேத்திக்கும் பேரனுக்கும் எம்புட்டு கண்ணு... ஊர் கண்ணெல்லாம் உங்க மேலதான்... எல்லாம் நாசமாக போக" என்றவர் "போயா போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடு" என்று அறைக்கு அனுப்பி வைத்தார்.


வந்தததில் இருந்து அவனை பிரியாமல் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு இருந்தவள் கட்டிலில் இருந்தபெட்சிட்டை பிரித்து போட்டு "நீங்க படுங்க உங்களுக்கு உடம்பு டயர்டா இருக்கும்". என்றாள்.


"பச்… படுக்கறது இருக்கட்டும் சனா, இப்படி வந்து உட்காரு" என்று அவனது பக்கத்தில் இடத்தை காட்ட எந்த வித தயக்கமும் இன்றி வந்து அமர்ந்தவள் அவனின் முகத்தையே பார்த்து இருந்தாள். "என்ன அப்படி பாக்குற சனா?" என்றவன் அவளின் கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக்கொண்டான்.


ஒன்னுமில்ல என்பது போல் தலையை இடவலமாக ஆட்டியவள் உதடுகள் துடிக்க வந்த அழுகையை அடக்க முடிமாமல் அவன் மேலேயே சாய்ந்துக்கொண்டு அழுது விட்டாள்.


"நான்தான் வந்துட்டனே சனா எதுக்கு இப்ப அழற?" என்றான் அவளுடைய தலையை உயர்த்தி தன் கண்களை பார்க்க வைத்து


"செத்துட்டங்க…. நீங்க இல்லாத இந்த கொஞ்ச நேரத்துல பயத்துலயே செத்துட்டேன்... எப்பவும் என்னை விட்டு போயிடாதிங்க" என்றவள் அவனுடைய காயத்தை மென்மையாக தொட்டு பார்த்து "வலிக்குதா" என்று அழுதவளின் தலையை மெல்ல வருடிவிட்டவன்


"இது எல்லாம் சின்ன காயம் டி.. உன் ஹீரோவ ஒன்னும் பண்ணாது…" என்று சிரித்துவிட்டு "என்னை விட்டு போக உனக்கு இருந்த சேன்ஸ் எல்லாம் போயிடுச்சி சனா... நீயா நினைச்சாலும் என்னை விட்டு போக முடியாது டா" என்றுவன் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டான்.


விலகி இருக்க நினைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் சூழ்நிலை சேர்த்து வைத்து விடுகிறது சேர்ந்து இருக்க நினைக்கும் நேரம் விதியின் விளையாட்டு எப்படி இருக்குமோ பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN