பூ 48

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

தெருவையே அடைத்து பந்தலிட்டு திருமண விழா கோலாகமாக நடந்து கொண்டிருந்தது. வாசலில் கட்டி இருந்த வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள், வண்ண மலர்களின் அலங்காரங்கள், என அனைத்தும் கண்களை கவர்ந்திட, மங்கள வாத்தியங்கள், வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த அந்த மண்டபத்தில், சொந்தபந்தங்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர்.


"டேய் கல்யாணம் எனக்கா உனக்கா?" என்று இடுப்பில் கை வைத்து நண்பனை சீண்டினான் சுந்தரன்.


"என்ன கேள்வி டா இது.... கல்யாணம் உனக்கு தானே அதுக்கு தான் உன்னை ரெடியான்னு பார்க்க வந்தா, என்னடா மாப்புள இப்படி அலும்பு பண்ற? என்று எரிச்சலான குரலில் கூற வந்தாலும் அதில் இளநகையும் கலந்திருந்தது விசாகனுக்கு.


போலாம் போலாம் ஒன்னும் அவசரமில்ல.... நானும் பார்த்துட்டு இருக்கேன்... பட்டு வேட்டி சட்டைல சும்மா கலக்குறியே மாப்ள.... வர்றவங்க எல்லாம் என்னை பார்க்குறதை விட உன்னைதான் சைட் அடிப்பாங்க போல... எதுக்கும் தேவாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கனும் உன் புருசன பத்திரமா பாத்துக்கம்மான்னு ... என்று அவனை ஓட்டினான்.


அக்ஷ்ராவிடம் தேவா பேசியதையும் நடந்துக்கொண்டதையும் பற்றி விசாகனிடம் கூறிய நாளில் இருந்து அவனில் தெரிந்த மாற்றங்கள் ஏராளம் முகத்தில் மென்மையும் பேச்சில் கனிவும் வந்திருந்திருக்கும் விசாகன் சுந்தரனுக்கு புதுமனிதனாக தெரிந்தான். இந்த விசாகனை தான் இத்தனை ஆண்டுகளும் அவனுள் தேடிட இதோ வார்த்தைகளில் அவனை கண்டதுக்கான பிரதிபலிப்பு..


நண்பனின் கணிப்பில் ஆயசமாக வந்தது விசாகனுக்கு... என்னடா இவன் என்னை இவ்வளவு க்ளோசா வாட்ச் பண்றான்...... என்று மனதில் அவனை வறுத்தெடுத்தாலும் இதற்கெல்லாம் காரணமான தன் மனையாளின் நினைவில் மென்மையை பூசிக்கொண்டது அவனது அகம்...


"ஏண்டா உனக்கு இவ்வளவு பொறாமை... ஒன்னுமில்லாத விஷயத்தை அவ கிட்ட சொல்ல வேற போறியா... வேற வினையே வேண்டாம் மாப்ள... பாக்குறவங்க ஏண்டா பார்த்தோம்னு நினைக்குற அளவுக்கு பேசிடுவா" என்று கூறியவன் குரலில் கொஞ்சம் கடினத்தன்மையை கொண்டு வர முயன்றான்.


"முதல்ல கிலம்புடா... இது எல்லாம் வக்கனையா பேசு... கல்யாணம் ஆனா உனக்கே புரியும் குடும்பஸ்தன் பாடு என்னன்னு... வேலையத்தவன் வந்துட்டான் என்னை கேள்வி கேக்க" என்று வேறு அர்த்தத்தில் கூறியவன் அவன் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான். இவனிடம் மாட்டினால் தன் வாயிலிருந்தே எல்லாத்தையும் வாங்கிவிடுவான் என்று அஞ்சியே வெளியேறினான்.


விடிந்தது முதலே தேவாவின் மனது படபடப்புடன் இருந்தது. முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் மனதில் ஒரு வித சஞ்சலமும் எதிர்பார்ப்பும் போட்டி போட்டுக்கொண்டு இருக்க தாய் தந்தையரின் வருகையை ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தாள்.


விசாகன் அவளுக்காக தேர்ந்தெடுத்த பன்னீர் ரோஜ நிறத்தில் அடர் காபி பிரவுன் நிற பார்டர் இருபக்கமும் எடுப்பாய் தெரிய தங்க ஜரிகையில் அங்காங்கே அன்னபட்சியின் உருவம் பொரித்திருந்த புடவை பாந்தமாய் அவள் உடலை தழுவியிருந்தது.. தளர பின்னிய கூந்தலில் மல்லிகை உறவாடிட மிதமான அலங்காரத்தில் தில்லையின் பரம்பரை நகைகளை அணிந்து, பெரிய வீட்டு மருமகளாய் வளைய வந்துக்கொண்டு இருந்தாள் தேவசேனா. பெரிய வீட்டின் மருமகள் என்ற ஆர்பாட்டம் எதுவும் இன்றி எளிமையாய் பழகும் அவளின் குணம் அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாய் விசாகனை இன்று பாடாய் படுத்தியது..


தேவா.. அம்மாடி தேவா... இந்தா தாயீ இதை கொண்டு போய் மேடையில வைச்சிடு என்று வயதான பெண்மனி கொடுத்து விட்ட பழதட்டையும் மஞ்சள் கும்கும தட்டையும் எடுத்துக்கொண்டு சென்றவள் வாசல் புறம் பார்த்துக் கொண்டே சென்றதால் யார் மீதோ மோதி நின்றாள்.


பட்டு வேட்டி சட்டையில் மனையாளுக்கு நிகராய் தனி அழகுடன் நின்றிருந்த விசாகன் அவளை தாங்கி பிடித்தவாறு "ஏய் பாத்துடி.... எதுக்கு இந்த அவசரம் பாத்து மேல ஏறு அடி ஏதாவது பட்டுச்சா" என்று அவளை ஒழுங்காக நிற்க வைத்தான்.


விசாகன் சுந்தரன் அறையிலிருந்து வரும்போதே தேவாவின் முக மாற்றமும் அவளின் கவன சிதறலையும் பார்த்துக்கொண்டே வந்தவன் அவள் விழும் முன்னே தாங்கி பிடித்திருந்தான்.


கணவனின் கேள்விக்கு கால் வழுக்கிடுச்சி என்றவளின் முகமே வாடி போய் இருந்தது. கூட்டத்தில் எதுவும் பேசமுடியாது என்று நினைத்தவன், அவளிடம் வாங்கியவற்றை மனையில் வைத்துவிட்டு யார் கருத்தையும் கவரா வண்ணம் தேவசேனாவை சற்று ஓரமாய் அழைத்து வந்தான்.


"என்ன சனா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது பிரச்சினை யா? என்றான் வந்திருந்த சொந்த பந்தங்கள் அவளிடம் ஏதாவது மனம் நோகும்படி பேசி விட்டார்களோ என்று நினைத்தே கேட்டான்.


"பிரச்சைனையா? பச் அப்படி ஒன்னுமில்ல மாமா.... இவ்வளவு நேரம் ஆகிடுச்சி,இன்னும் வீட்டுல இருந்து யாருமே வரலியே" என்றாள் ஏக்கமாக


"இன்னும் டைம் இருக்குடி, கண்டிப்பா வருவாங்க... என்று கூறியவன் "முதல்ல கண்ணை துடை மண்டு... கண்ணுக்கு போட்டு இருந்தது எல்லாம் கலைச்சி பயங்கரமா தெரிய போற..." என்றான் கொஞ்சம் கேலியாக அவள் மனம் மாற்றும் பொருட்டு


அவன் கேலி சரியாக வேலை செய்ய முயன்று கண்ணீரை அடக்கியவள் புறங்கையால் முகத்தை துடைத்துக் கொண்டே "பரவாயில்லை" என்று கூறி வாசலில் பார்க்க சௌந்தரலிங்கமும் அவரது மனைவி மரகதமும் சீர் தட்டுடன் மண்டபதற்குள் நுழைந்தனர்.


பார்த்தவள் விழிகள் கலங்கி விட "சனா" என்று அழைத்தவனுக்கு அவள் வாசல் புறம் கை காட்டிட அவனுக்குமே சந்தோஷம் பெறுகியது...


தேவாவின் தாய் தந்தையரை பார்த்ததும், "வா" என்று அவளையும் தன்னுடன் இழுத்துச் சென்றவன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்.


"வா... வா.. வாங்க பா வாங்க மா.." என்று பேச திணறியவள் அவர்களை அழைக்க சௌந்தரலிங்கமோ அவளின் அழைப்பை சிறிது கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. தூரத்திலிருந்து வரும்போதே மகள் அழுகிறாள், என்று தெரிந்து விட, அவளை பார்த்தாள் இப்போது தாம் கரைந்து விடுவோமோ என்று நினைத்தவர் வலுக்கட்டயமாக மௌனத்தை கேடயமாக உபயோகித்துக் கொண்டு இருந்தார்


தந்தையின் பாரா முகம் அவளை வாட்ட அழுகையை அடக்க முடியவில்லை அவளுக்கு, மனைவி கலங்குவதை பார்க்க பொறுக்காதவன் "நீ அம்மாவை அழைச்சிட்டு அமுதாவோட ருமூக்கு போ சனா... அப்பத்தா அங்க தான் இருக்காங்க.." என்று கூறி அவர்களை அனுப்பியவன் "வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்ங்கய்யா" என்று கூறிட அதற்கு தலையசைத்து அவன் உபசரிப்பை ஏற்கொண்டார் சௌந்தரலிங்கம்.


இருவீட்டு சார்பிலும் அழைப்பை விடுத்திருக்க சுந்தரனின் தந்தையும் அவர்களை அழைக்க வந்துவிட்டதால் அவரை சௌந்தரலிங்கத்துடன் இருக்க வைத்துவிட்டு "இதோ வந்து விடுகிறேன்" என்று அவரிடம் மரியாதை நிமித்தமாக கூறியவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான் விசாகன். அதன் பிறகு அவனை வேலைகள் முழ்கடித்துக் கொள்ள கல்யாண வீட்டிற்கே உண்டான பரபரப்பு அங்கே களைகட்டி இருந்தது.


தாயின் பின்னயே கண்கள் கலங்க சென்றவளிடம் அடியே... எல்லாரும் பாக்குறாங்க கண்ணை துடை, எதுக்குடி இப்படி அழுதுக்கிட்டே வர்ற அதான் அப்பா வந்துட்டாரு ல எல்லாம் நல்லாபடியா நடக்கும் என்று பெண்ணை சமாதனப்படுத்திக் கொண்டு சென்றார்....


பம்..... என்று தேவாவின் காதில் பெரும் சத்தத்துடன் கூவியபடி வந்து நின்றாள் மேகலா... பாவாடை தாவணியில் அட்டகாசமாய் தெரிந்தவளை பார்த்ததும் சிரிப்புடனே "எப்போ கலா வந்த?" என்று தேவா கேட்க


"இப்போதான் அப்பா அம்மா கூட வந்தேன். அம்மா தெரிஞ்சவங்க கூட பேசிட்டு இருக்காங்க எங்க அப்பா உங்க அப்பா கூட பேசிட்டு இருக்காரு... என்றவள் மரகதத்திடம் பரவாயில்லையே அத்த பொண்ணு வீட்டு கல்யாணத்துக்கு முதல் ஆளா வந்து இருக்கிங்க இன்னைக்கு மழைதான் என்று கிண்டலடித்தாள் மேகலா.


இந்த வாயிக்கு எவன் மாட்டப் பேறானோ தெரியலடி பாவம் உன் மாமியாகாரி என்று போலியாய் வருத்தபட்டவரிடம் அழகுகாட்டி முகவ யை தோளில் இடிக்கவும் பாத்துடியம்மா கழுத்து சுலுக்கிக்க போகுது என்று மரகதம் கூறியதும்


ஏதோ பேச வாயெடுத்த மேகலாவை பார்த்து சிரித்த தேவசேனா , சரி போதும் டீ வாய் ஆடினது நீயும் என் கூட வா அமுதா ரூம் போயிட்டு வரலாம் என்று கூறிய தேவா மேகலாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.


அடர் கரும் பச்சையில், முழம் அளவு தங்க ஜரிகை ஒரு பக்கம் முழுவதும் படந்து இருக்க உடல் முழுவதும் ஆயிலை வேய்ந்திருந்த புடவை உடுத்தி மணமகள் அலங்காரத்தில், தங்க விக்கிரகமாய் , உறவுப் பெண்களுடன் அறைக்குள் இருந்த அமுதாவின் கண்கள் கலங்கி இருந்தது... அருகில் தில்லையும் ஆறுதலை சொல்லியபடி இருந்தார்..


அறைக்குள் நுழைந்த தேவா இதை கண்டதும் "என்ன பாட்டி... இன்னும் அமுதா சரியாகலையா.... இப்படி அம்மாவையே நினைச்சிட்டு கவலைப்பட்டா, நல்லா இருக்கா.... முகம் எவ்வளவு டல்லா இருக்கு பாருங்க அழுது அழுது செவந்து போயிடும் கண்ணு.. எவ்வளவு சொன்னாலும் காலைல இருந்தே இப்படித்தான் இருக்காங்க... அப்பப்போ நீங்களும் கூட்டு சேர்ந்துக்குறிங்க" என்று முறைத்தாள் தேவா..


இதுவரை தந்தை தன்னை பார்க்கவில்லையே பேசவில்லையே என்று அன்னையின் முந்தானையை பிடித்து அழுதுக்கொண்டு இருந்த தேவசேனா தற்போது பெரிய வீட்டு மருமகளாய் மாறியதைக் கண்டு பெருமை பொங்க நின்றவருக்கு அமுதாவின் நிலை உறைக்கவும் ஒரு தாயாய் நெஞ்சம் கலங்கியது அவருக்கு


காலை முதலே அமுதாவிற்கு தன் அன்னை இல்லையே என்ற ஏக்கம் பெருமளவு வாட்ட கலங்கிய விழிகளோடு அமர்ந்து இருந்தவளை கண்டதும் தில்லைக்குமே மகளது நினைவில் தொண்டை அடைக்கத்தான் செய்தது... நேற்றிலிருந்தே அம்மாவின் நினைவு அவளை வாட்டுகிறது என்பதை அறிந்த தேவா சிலவற்றை கூறி அவளை தேற்றி இருந்தாள் ...


இருந்தும் மனதில் ஓரத்தில் இருப்பதை யாராலும் அழிக்க முடியாதே தனக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டவர் இந்த விஷேஷத்தை பார்க்க முடியாமல் போய்விட்டாரே என்று மருகிட தேவா அவளை ஆறுதலாய் அணைத்துக் கொள்ள, தில்லையும் கண்கலங்கி விட்டார்.


"என்னம்மா நீங்களும் கலங்கி அவளையும் கலங்க வைக்கிறிங்க... இத்தனை நாள் உங்க மக ஆவலா எதிர்பார்த்த கல்யாணம் நடக்குது... அதுக்கு சந்தோஷப்படுறதை விட்டுட்டு இப்படி அழறிங்க" என்று தில்லையிடம் கூறியவர்


அமுதாவிடம் திரும்பி "அம்மாடி| என்று ஆதுரமாக அவள் தலையை வருடிய மரகதம் "கல்யாண பொண்ணு இப்படி அழலாமா... உங்க அம்மாக்கு நீ அழுதா பிடிக்குமா சொல்லு புள்ள..


எங்க இருந்தாலும் அவங்களேட நினைப்பு உன்னை சுத்தி தானே இருக்கும்... நீ சந்தோஷமா வாழ்ந்தாலே அவங்க ஆத்மா நிம்மதியா இருக்கும்.., அந்த நிம்மதியை கொடுக்கனும்னா இப்போ நீ சந்தோஷமா இந்த நிமிஷத்தை அனுபவிக்கனும் புள்ள..." என்று அவளுக்கு புரியவைத்தவர் தான் கொண்டு வந்த சீர் தட்டில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டு "என்னைக்கும் நிறைஞ்ச சந்தோஷத்தோட இருக்கனும் கண்ணு" என்று வாழ்த்தினார்.


தில்லைக்கும் மரகதம் கூறியது சரியென பட கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவர் "ஆமாத்தா நான் வேலையத்த சிறுக்கி.. இருக்கற சோலிய விட்டு வேற எதையதையோ நினைக்கேன்..." என்று தன்னையே கடிந்துக் கொண்டவர் "ஆத்தா மரகதம் சித்த பாத்துக்கத்தா.. சொந்த பந்தம் வந்துருக்கும்... நான் அங்கன போறேன்" என்று அவருக்கும் ஒரு பொருப்பை ஒப்படைத்தவர் "நீயும் வாத்தா" என்று தேவாவை அழைத்துக் கொண்டு அறையிலிந்து வெளியேறி இருந்தார்.


.....


அய்யர் மந்திரம் ஓதிட அக்னி குண்டத்தின் முன்னே அமர்ந்து இருந்தவனது கரங்களில் மங்கள நாணை கொடுக்க அழகு பதுமை என அவன் அருகில் அமர்ந்திருந்த அமுதாவின் செம்பவள கழுத்தில் அணிவித்து தனது உயிரில் சரி பாதியாக இணைத்துக் கொண்டான் சுந்தரன். அவன் அணிவித்த மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டவளோ தாயின் நினைவில்


விழிகள் கலங்கி இரு சொட்டு நீர் அவன் கரங்களில் பட்டு தெரிக்க, வகிட்டிலும் நெற்றியிலும் குங்குமம் இடும் சாக்கில் அவளை அப்படியே இறுக அணைத்து விடுவித்தவன் கண்களை மூடி திறந்து அவளை ஆறுதல்படுத்தினான். இந்த அணைப்பும் ஆறுதலும் அவளுக்கு நிறைவாய் இருக்க மலர்ந்த முகத்துடனே அடுத்த அடுத்த சடங்குகளை நிறைவேற்றினார்கள் இருவரும்.


திருமணம் முடிந்ததும் சௌந்தரலிங்கமும் மரகதமும் கொண்டு வந்த சீர் தட்டை அவர்களுக்கு வழங்கிட கால்களில் விழுந்து வணங்கிய தம்பதிகளை இருவரும் ஆசிர்வதித்தனர். அதை பார்த்து இருந்த தேவசேனாவிற்கோ தன் திருமணத்தில் நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்து வாட்டியது தந்தையிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று நினைத்தவள் அவர் பின்னேயே வந்தாள்.


திருமணம் முடிந்து விருந்தினர்கள் அனைவரும் சாப்பிடும் இடம் நோக்கி சென்று இருக்க வெகு சிலரே இருந்தனர். அந்த இடத்தில் "அப்பா அப்பா" என்று அழைக்க காதில் வாங்காதவர் மண்டபத்தின் பின் புறம் வந்து நின்று விட அவர் முன்னே போய் நின்றவள் "அப்பா" என்றாள் கண்ணீருடன்.


தேவாவை காண விருப்பமில்லாமல் அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்ள |என்னை பாக்கக் கூட உங்களுக்கு பிடிக்கலையாப்பா?" என்றாள் தழுதழுத்த குரலில்


மாமனாரும் மாமியாரையும் சாப்பிட அழைத்துச் செல்ல அவர்களை தேடி வந்த விசாகன் மண்டபத்தின் பின்புறம் தேவா அவரிடம் பேசுவதை பார்த்துவிட சிறிது தூரத்திலேயே நின்று விட்டான்.


சற்றும் இளக்கம் காட்டமால் விரைப்புடனே இருந்தவர் "ஏய் மரகதம், எங்கடி இருக்க? நாம கிளம்பலாம்" என்று தன் பின்னே நின்ற மனைவியை அழைத்தார்.


மகள் அழுகிறாளே என்ற கவலையுடன் அவர் முன்னே வந்து நின்ற மரகதம் "அவ என்ன சொல்றான்னு தான் சித்த கேளுங்களேன்...." என்று கூறியது தான் தாமதம் "நிறுத்திடி என்ன கேக்க சொல்ற? என் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் வாங்கிட்டு போனாளே, அந்த கதையை கேக்க சொல்றியா?" என்றார் கோவமாய்.


அவர் உணர்ச்சிவசப்பட்டு கத்தவும் அழுதபடி இருந்தவள் அவரின் கைகளை பற்றிக்கொண்டு, "அப்பா, நான் அவர் கூட ஓடிப்போய் கல்யாணம் பண்ண நினைச்சி இருப்பேன்னு நீங்களும் நம்புறிங்களா பா" என்றாள் அழுகையுடன்.


அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் கற்சிலையாய் நின்றிருந்தவரின் மனதும், மகள் அழுகையில் கலங்கி விட்டது.. மார்மீதும் தோள் மீதும் போட்டு வளர்த்த மகள் அல்லவா.... தங்கை ஒரு சொல் சொல்லவும் அவ்வளவு கோவப்பட்ட மனிதர், மகளின் வாய் மொழியில் அதை கேட்கவும், தன்னையும் மீறி ரத்தம் கொதித்தது அவருக்கு....


இதை உங்ககிட்டயே சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க பா என்று கூறி தந்தையிடம் மன்னிப்பை யாசித்தவள், உண்மைய சொல்லனும்னா எனக்கு அவரை பிடிச்சி இருந்தது பா... எப்போ, எப்படி, எந்த நிமிஷம், அவரை நான் விரும்ப ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியல பா... சத்தியமா எனக்கு தெரியல... கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே நடந்துடுச்சி... ஆனா யாருக்கும் தெரியாம எல்லாம் கல்யாணம் பண்ணணனும்னு நினைக்கலப்பா" என்றாள் தலையில் அடித்தபடி


"ஏய் என்னடி பண்ற? யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க" என்று மரகதம் அருகில் வந்து மகளை தடுக்கவும் தான் இருக்கும் சூழ்நிலையும் இருக்கும் இடத்தையும் உணர்ந்து தன்னை நிலைபடுத்தியவள்


"எனக்கு நீங்க திடீர்னு கல்யாணம்னு சொன்னதும் அதை நிறுத்த தான் வழிய பார்த்தேனே தவிர, அவர் கூட ஓடி போகனும்னு நினைக்கவே இல்லப்பா... சத்தியமா நான் நினைக்கலப்பா... எங்க அப்பாவோட கௌரவத்தை எந்த இடத்திலும் நான் விட்டுட மாட்டேன் பா..." என்று அவர் மகள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவரை இருக்கையில் பொத்தென்று அமரவைத்தது.


"அன்னைக்கு நடந்தது எல்லாமே நான் எதிர்ப்பாக்காதது அப்பா கல்யாணம் பிடிக்கல... உங்க கிட்ட சொல்லவும் முடியல.... உங்களுக்கு உங்க தங்கச்சி முக்கியமா இருந்தது... ஆனா என்னை, என் மனசை, நினைச்சி பாத்திங்களா?" என்றதும் சட்டென மகளை நிமிர்ந்து பார்த்தார் சௌந்தரலிங்கம். இதற்கு அவரிடம் பதில் இல்லையே... தனக்கு பிடிப்பது எல்லாம் மகளுக்கும் பிடித்துவிடும் என்றவரின் கணக்கு தவறாய் போன இடம் அல்லவா அது.... ஒரு நிமிடம் தொண்டை அடைத்தது அவருக்கு


"ஏன் பா அன்னைக்கு ஒரு வார்த்தை கூட நீங்க என்னை கேட்கல? யரோ ஒருத்தர் கூட வந்தேனா என்ன ஆச்சு ஏன் போனன்னு ஏன் பா ஒன்னுமே கேக்கல என்றாள் கரகரப்பான குரலில் நீங்க என்னை அப்படிதான் ஓடிபோய் இருப்பேன்னு நினைச்சிட்டிங்களா? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியமாப்பா இதுவரை நான் மட்டும் தான் ஒருதலையா அவரை காதலிச்சி இருக்கேன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையும் என் காதலை அவர் ஒத்துக்கவே இல்லப்பா என்றவளது குரல் உடைந்து போயிருந்தது... மனைவி படும் வேதனை கண்டு வேதனை கொண்ட விசாகன் அருகில் செல்ல அவனை சைகையாலையே தடுத்தார் மரகதம்.


இருகைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தவள் "அன்னைக்கு நான் சாகதான் அப்பா போனேன்... செத்து இருந்தா, ஒரே அடியா போய் சேர்ந்து இருப்பேன்... ஆனா என் போறாத காலம் அங்க தான் அவரு என்னை பார்த்து கூட்டிட்டு வந்தாரு.... உண்மை என்னன்னு சொல்றதுக்குள்ள அண்ணன் என்னென்னமோ பண்ணிடுச்சி..." என்று அழதவள்


"உங்க வாயாலையே அவரை நல்லவருன்னு சொல்லி இருக்கிங்க ஆனா ஏன் உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்காம போயிடுச்சி... அவரு வேற ஆளுன்னு உங்களுக்கு எங்களை ஏத்துக்க முடியலையா அப்பா..." என்று கேட்கவும் சௌந்தரலிஙகம் மனம் முற்றிலும் ஆட்டம் கண்டு போனது.


மகள் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படி இருந்தாலும் பழைமைகளில் ஊறிப்போனவரால் சட்டென தேவாவையும் அவள் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார்.


தான் விசாகனை ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதற்கு மகள் கூறும் காரணமும் ஒருவிதத்தில் உண்மை எனும் பட்சத்தில் தேவாவை பற்றி ஒரு முடிவை எடுக்க முடியாமல் தளர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியேறிட மகளை கண்களாலேயே தேற்றி விட்டு மருமகனிடமும் கையை கூப்பிய மரகதமும் கணவரின் பின்னே சென்றார்.


இவையனைத்தும் பார்த்துக்கொண்டு இருந்த விசாகன் தேவாவின் அருகில் வந்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன். "அவருக்கும் கொஞ்சம் அவகாசத்தை கொடு சனா.... அவருக்கு நீ சொன்னது எல்லாம் புரிஞ்சிடுச்சி, ஆனா சட்டுனு நம்மை ஏத்துக்கனும்னு மனசு வருமா டா.... காலம் கொஞ்சம் கொஞ்சமா தான் மாத்தும்... அதுவரை பொறுத்து இருடா... அவரை காயப்படுத்தாதே சரியா" என்று அவளுக்கு ஆறுதலை சொல்லி தேற்றியவன் தன்னுடனே அனைத்து வேலைகளிலும் அவளை ஈடுபட வைத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டான்.


திருமண மண்டபத்தில் மகளிடம் கணவர் நடந்துக்கொண்ட விதம் மரகதத்திற்கு கோவத்தை கிளப்பி இருந்தது. வழியெல்லாம் மகளைப் பற்றி கணவரிடம் புலம்பியபடியே வர பாரம் ஏறிய மனதுடன் வீடு வந்து சேர்ந்தார் சௌந்தரலிங்கம்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN