பூ 50

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
​

தங்க நிறமாய் பிரகாசிக்கும் ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமியில் தன் ஒளிக்கீற்றை சத்தமில்லாமல் பரப்பிக்கொண்டு இருந்தது…. நேரமோ மதியம் இரண்டை காட்ட மனைவியை தண்ணீர் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தார் சௌந்தரலிங்கம்.


மகள் உண்டாகி இருக்கும் செய்தி தில்லையின் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன்பே மரகதத்திற்கு தெரிய வர மறுநாளே தேவசேனாவை சென்று பார்த்து வந்திருந்தார் மரகதம்…


கணவரிடமும் மகனிடமும் விஷயத்தை பகிர்ந்த போது எந்த வித முகமாற்றமும் இன்றி செய்தியை உள்வாங்கி இருந்த இருவருக்குள்ளும் சந்தோஷம் கரைபுரண்டு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சாதரணமாகவே இருந்தவர்கள் தம் தமது வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.


அதுவே அவருக்கு கோவத்தை அதிகபடுத்தி இருக்க முகத்தை தூக்கி வைத்தபடியே வளைய வந்து கொண்டிருந்தவர், கடுகடுத்த முகத்துடனே கணவருக்கும் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்தார்.


இரண்டு வாரங்களாக முகம் கொடுத்து பேசாத மனைவியின் செயலில் கோபம் கொண்டாலும் அதற்கு அவர் கேட்பதை தன்னால் செய்ய முடியாது என்ற வைராக்கியத்துடன் இருந்தவர் இன்றும் அதே கதை தொடரவே "வெளியே போயிட்டு வர்ற மனுஷனுக்கு கொடுக்கரா மாதிரியா இந்த வீட்டுல தண்ணிய கொடுக்குறாங்க… சே… வரவர வீட்டுக்கு வரவே பிடிக்கல" என்று வீட் டை விட்டு வெளியே வந்தவர் தோளில் கிடந்த துண்டை எடுத்து சேரில் தூசியை தட்டியபடி வெய்யிலுக்கு மறைப்பாக போடப்பட்ட திரைமறைவில் இருந்த வெளி வராண்டாவில் போய் அமர்ந்துக் கொண்டார். அது மூங்கில் திரை என்பதால் உள்ளே இருப்பவர்களை யாருக்கும் தெரியாது.


அந்நேரம் பார்த்து அடுத்த வீட்டு அன்னம் பலகார தட்டுடன் வீட்டிற்கு வந்து மரகத்தை அழைத்தாள்.


"அக்கா அக்கா…."


"என்ன புள்ள" என்றபடி வந்த மரகதம் கையில் இருந்ததை பார்த்தபடி "அங்கனயே ஏன் நிக்குற அன்னம்? உள்ளார தான் வர்றதானே!"


"இருக்கட்டும் கா... நான் சவகாசமா சாயங்காலம் வாறேன்… இப்போ பலகாரத்தை எல்லாருக்கும் கொடுக்க சொல்லி விட்டுருக்கு என் அம்மா" என்று கையில் இருந்ததை அவரிடம் கொடுக்க


"என்ன புள்ள விசேஷம்…. பலகாரம் கொடுத்து விட்டுருக்காங்க உங்க அம்மா ? நீயும் இருந்தா போல இருந்து இரண்டு நாள் ஆளையே காணும் உன் வீட்டுகாரனையும் கூட ஆளை காணும்" என்றார் கையில் இருந்ததை வாங்கியபடி


வராண்டாவில் கடுப்புடன் அமர்ந்திருந்தவருக்கு அவர்கள் பேசுவது அவரது அனுமதியில்லாமல் அவருடைய செவிகளில் விழுந்துக் கொண்டிருந்தது.


"என்னத்தக்கா சொல்றது எல்லாருக்கும் சொல்றா மாதிரியா இருக்கு?" என்று சலிப்புடன் கூறியவள் "திடுதிப்புன்னு என் சின்னம்மா பொண்ணுக்கு வளைகாப்பு ஊருக்கு வான்னு எங்க அம்மா போனை போட்டு கூப்பிடுது... இவரை சம்மதிக்க வைச்சி கூட்டிட்டு போறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே…. எப்பா…. முடியல அதான் உன்கிட்ட கூட சொல்லிக்க முடியல அவசரமா அவசரமா கிளம்பிட்டேன்" என்றாள் அன்னம் அலுப்பு தட்டிய குரலில் .


"அடியே வளைகாப்பு அடுத்த வாரம்ல சொல்லிட்டு இருந்த" என்றார் கேள்வியாக


"முதல்ல அடுத்த வாரம் தான் சொல்லிட்டு இருந்தாங்க... அப்புறம் நாள் கிழமைன்னு காரணம் சொல்லி இந்த வாரமே வைச்சிட்டாங்க... இந்த மனுசனும் வேலை வேலைன்னு ஒரே ரோதனை பண்ணிட்டார்... இவரை சரிக்கட்டி கூப்பிட்டு போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சி" என்ற அன்னம். "ஆமாக்க தேவா எப்படி இருக்கு அவளுக்கு மசக்கை இருக்கா?" என்றாள் சௌந்தரலிங்கம் இருப்பது தெரியாமல் ஆர்வமாக வினவினாள் அன்னம்.


கணவர் தன்னை பார்த்தாலும் வேண்டும் என்றே அவரை பார்ப்பதை தவிர்த்த மரகதம் "எங்க போய் பாக்க... புள்ளைய கைய கழுவிட்டதா நினைச்சிட்டாங்க இந்த வீட்டு ஆம்பளைங்க... நான் பொம்பளையா பொறந்துட்டேனே, மனசுக்குள்ளயே வைச்சி மறுகிக்கிட்டே கிடேக்கேன் புள்ள... வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்டு இருப்பேனா? இல்ல கல்யாணமாகி மறு வீடு விருந்துன்னு சவ்வாஷனை பண்ணி இருப்பேனா?? ஆயீ அப்பன் இருந்து என்ன ப்ரியோஜனம்... ஒரு அனாதை மாதிரில இருக்கா… வயித்து பிள்ளைகாரிக்கு ஒரு வாய் சோறு பொங்கி போட முடியலை அவ ஆசைப்பட்டதை செய்ய முடியல!" என்று முந்தானையால் மூக்கை துடைத்தபடி அழ


"ஏன்க்கா யாரு தடுத்தா உன்னை? செய்ய வேண்டியதானே இப்ப தானே மனசு உங்களை தேடும்…" என்று அன்னம் கூறிட


"இப்போன்னு இல்ல புள்ள, எப்பவும் தேடிட்டு தானே இருக்கா... இப்போ வருவாங்க அப்போ வருவாங்கன்னு எதிர்ப்பார்த்துட்டு இருக்கா… என் புள்ள பாவம் முகமே வாடி போயிருக்கு... சாப்பிட்ட அடுத்த நிமிஷமே வெளியே தான் வருது… அவளை பாத்துக்க முடியல… அப்படி என்ன ஊர் உலகத்துல செய்யாத தப்பை என் புள்ள செய்துட்டா?" என்று அவளுக்காக வருத்தப்பட்டு பேச


அவங்கள விடுங்க கா... நீங்களாங்ச்சும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு அவளுக்கு புடிச்சதை ஆக்கி போட்டு வரலாம் ல... இன்னும் என்ன முரட்டு பிடிவாதம் வேண்டி இருக்கு…. அந்த தம்பியும் நல்லமாதிரிதான் தெரியுது…" என்று கூறிக்கொண்டே வந்த அன்னம் தற்செயலாய் இடப்பக்கம் திரும்பவும் திரை மறைவில் வரண்டாவில் அமர்த்திருந்த சௌந்தரலிங்கத்தை பார்த்து விட்டு சட்டென்று வாயை மூடியவள், "அது வந்து அது என்று தடுமாறி அக்கா நான் அப்புறம் வறேன்" என்று கூறி அங்கிருந்து காற்றாய் வெளியேறி இருந்தாள்.


🌹🌹🌹


பகலும் இரவும் ஒருச்சேரும் ஒரு மாலை பொழுதில் மேகலா தன் வயல்காட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தாள். தூரத்தில் வரும் பைக்கின் சத்தத்தை வைத்தே அது யாருடையது என்று அனுமானித்து இருத்தவள், தன் நடையை துரிதப்படுத்தி இருந்தாள்.


அவளின் வேக நடையை கண்டுவிட்டவன் பைக்கை அவளின் முன்னே நிறுத்தி வழியை மறைத்திருந்தான். அதில் விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள் "என்ன வேனும் ஏன் வழிய மறைக்கிறிங்க?" என்றாள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு


தேவா ஜெயசந்திரனை பற்றி அவளிடம் பேசியதில் இருந்து மனதில் எழுந்த நெருடல் இப்போது அவனை பார்க்கவும் அவளை யோசிக்க வைத்தது…' ஊர் உலகத்துல ஆளே இல்லையா... இவனுக்கு வேலை செய்ய, நான் தான் கிடைச்சேனா... இப்போ எதுக்கு வந்து இருக்கானோ தெரியலையே... ' என்று மனதில் நினைத்தாள்.


அவள் முகத்தில் தெரிந்த கடுகடுப்பு அவனுக்கு எரிச்சலை கொடுக்க "இப்போ எதுக்கு முஞ்சில இத்தனை கடுப்பு?" என்றான் கோபத்துடனே


"ஆஹ்… என் மூஞ்சே அப்படித்தான்… நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க" என்றாள் சற்றும் மாறாத அதே நிலையில்.


'நீ எப்படி வேணா இருந்துட்டு போ எனக்கென்ன... என்று நினைத்தவன் இந்தா இதை எடுத்துட்டு போய் தேவாகிட்ட கொடுத்துடு' என்றான் கையில் இருந்த கவரைகாட்டி


அதை வாங்காமலேயே நின்றிருந்தவள் கூட பொறந்தவ மேல இவ்வளவு பாசம் இருக்கு நேர்ல போய் கொடுத்தாதான் என்னவாம்…. துரைக்கு கௌரவம் தடுக்குதாக்கும்... என்று அவனை வைதவள் "கொள்ள பாசம் இருக்குல்லா…. நீங்களே போய் கொடுக்குறது... அவ எவ்வளவு சந்தோஷப்படுவா" என்றாள் முனுமுனுப்பாக


"அந்த ஈர வெங்காயம் எங்களுக்கும் தெரியும்... சொன்னதை மட்டும் செய் மத்ததை எல்லாம் நீ ஏன் கேக்குற?" என்றான் அதிகாரமாக


'அட வளந்து கெட்டவனே…. இப்படி ஆர்டர் போடுறியே... கொடுக்கறது என் கிட்ட…. நான் கேட்காம தெருவுல போற வர்றவன் கேட்பானா?...நான் என்ன இவனுக்கு பொண்டாட்டியா இவ்வளவு அதிகாரமா சொல்றான்'. என்று அவன் கூறியதில் கடுப்பானவள் முகத்தில் அதை காட்டியபடியே அதை வெடுக்கென்று வாங்கிக் கொண்டாள்.


"பாத்து பாத்து" என்று கவரை கவனமாக வைத்திருக்க கூறியவன் "எக்காரணத்தை கொண்டும் நான்தான் கொடுத்தேன்னு செல்லம்மாவுக்கு தெரியகூடாது புரியுதா" என்றான்.


"ம்கூம்" என்று இழுத்தவள் 'வயித்து புள்ளதாச்சிக்கு கொண்டு போய் கொடுக்க துப்பில்ல செல்லம்மாவாம் செல்லம்மா... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மனசுல பெரிய பாசமலர்ன்னு நெனப்பு' என்று அவனை சலித்துக் கொண்டாலும் கொடுக்க முடியாதுன்னு சொல்லுவோமா என்று நினைத்தவள், 'வேனா வேனா முறைச்சே சாகடிகப்பான்…. இதுல என்ன இருக்குன்னு பார்ப்போம்…' என்று அவன் கண் எதிரிலேயே அந்த கவரை பிரித்தாள்.


"ஏய் இப்போ அதை எதுக்கு பிரிச்சி பாக்குற?" என்றான் சந்திரன் தடுமாறியவனாக


அவனை ஒரு பார்வை பார்த்தவள் "பின்ன இதுல என்ன இருக்குன்னு என்னை கேட்டா என்னத்தை சொல்றது…." என்று கூறியவள் அவன் முறைப்பதை பார்த்து அப்போ "சரி நீங்க கொடுத்ததுன்னே சொல்றேன் எனக்கென்ன" என்றாள் நக்கலாக


"உனக்கு நேரம் டி…". என்று பல்லை கடித்தவன் "பாத்து தொலை…." என்றிட அதில் தேவாவின் கர்பகாலத்திற்கு தேவையான குங்குமப்பூ, பாதம் பவுடர், குமட்டல் இல்லாமல் இருக்க புளிப்பு மிட்டாய் வகைகள் அவளுக்கு பிடித்த குளோப் ஜாமூன்…. பால்கோவா…. இன்னும் சில தின்பண்டங்கள் என்று அவனுக்கு தெரிந்ததையும் தங்கைக்கு பிடித்ததையும் வாங்கி வந்திருக்க 'ம் பாரவாயில்லை வர்ற பொண்ணு பொழச்சிக்கும்: என்று நினைத்தவள் "நாளைக்கு அவ வீட்டுக்கு போய்டு கொடுக்குறேன்" என்றபடி அவனை விட்டு விலகி நடந்தாள்.


"ஒரு நிமிஷம்" என்றான் பைக்கில் இருந்து இறங்கி


எப்பவும் அதிகாரமாத்தான் வரும் பேச்சு இப்போ என்ன சிங்கம் பம்முது என்று யோசனையுடனே திரும்பி பார்க்க


"நாளைக்கு தேவாவையும் பாக்கனும் அவ குரலை கேக்கனும்... முடியுமா?" என்றான் ஆவல் நிறைந்த குரலில் முடியாது என்று தான் சொல்ல நினைத்தாள் ஆனால் ஏனோ அவன் குரலும் முகமும் அவளை தலையை ஆட்டி சம்மதிக்க வைத்து இருந்தது.


🌹🌹🌹🌹


தேவாவிற்கு மூன்றாம் மாதம் தொடக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாம் அவள் குளியலறையே தஞ்சம் என்று ஆகியிருந்தாள். காலை முதல் இரவு உறங்கும் வரை எதை சாப்பிட்டாலும் வெளியே வந்துவிடுகிறது…


எல்லாம் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் கைங்கரியம் போலும் ஒவ்வொரு நாளும் எந்திரிக்கவே அவ்வளவு சோர்வாக உணர்வாள்… தலை சுத்தலும் வாந்தி மயக்கமும் அவளை படாய்படுத்தி, துவண்டு போக வைத்திருந்தது.


தேவாவின் நிலையை கருதி எப்போதுமே அவளுடன் இருப்பதை போல் பார்த்துக் கொண்டான் விசாகன். ஒவ்வொரு முறையும் அவள்படும் அவஸ்தையை பார்க்கும் போது அவனுக்கு அய்யோ என்று இருந்தது . துருதுருவென சுற்றி திரிந்த பெண் இப்படி சோர்ந்து போய் இருக்க மனம் கேளாதவன் அவளுக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அருகில் இருந்தபடி அன்பாய் பார்த்துக்கொண்டான் அவளை தன் நெஞ்சில் தாங்கினான்..


இப்போதும் கூட அவள் காதல் கணவன் அவளுக்கு பிடித்த சுக்குமல்லி காப்பியுடன் அறைக்குள் நுழைந்தவன் அவளது அருகில் அமர்ந்து சோர்ந்து இருந்தவளின் தலையை அன்பாய் வருடிக் கொண்டு இருந்தான்.


அவன் ஸ்பரிசம் பட்டவுடனே கணவன் என்று அறிந்து வைத்திருந்தவள் "மாமா" என்று அழைத்து அவன் கைகளை எடுத்து தன் தலைக்கு கீழே வைத்துக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள் தேவா...


அவளின் செய்கை விசாகனின் இதழை மலர வைத்தாலும் "செல்லம்மா இங்க பாறேன் உனக்கு பிடிச்ச சுக்குமல்லி காபி…" என்று அவளுக்கு வெகு அருகில் அதன் வாசத்தை காண்பித்தவன் "அது ஆறிடறத்துள்ள எழுந்துருடா இன்னைக்கு ஹாஸ்பிட்டல் வேற போகனும் இல்ல காலையிலையே அப்பாய்ண்மெண்ட் டா" என்றான் அவள் காதில் குணிந்து செல்லமாய்.


"பிளீஸ் மாமா…. எனக்கு எதுவும் வேண்டாம் நைட் கூட வாமிட் பண்ணிட்டேன்…. வாமிட் பண்ணி பண்ணி எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு முடியல…. இன்னும் கொஞ்ச நேரம் படுக்குறனே…" என்றவள் சுகமாய் அவனையும் தன்னருகே இழுத்துக்கொண்டாள்.


அவள் இழுத்த இழுப்பிற்கு அவளுடன் சேர்ந்துக் கொண்டாலும் "அதுக்குத்தானே ஹஸ்ப்பிட்டல் போறோம் சனா மா இந்த மாசம் செக்கப் இருக்குல்லடா" என்றான் அவள் காதுகளில் தன் இதழால் உரசியபடியே அவன் கெஞ்சல் கொஞ்சல்களில் கண் மலர்த்தியவள் "இப்போ எழுந்துக்கனுமா" என்று சுணங்கியபடியே எழ கொஞ்சம் தள்ளட்டமாய் தான் இருந்தது.. அவளுக்கு அது இன்னும் எரிச்சலை கிளப்பி இருந்தது


இருந்தும் மனைவியை தாங்கி பிடித்துக் கொண்டு குளியலறை வரை அழைத்துச் சென்றவன். அவளுடன் உள்ளே செல்ல முற்பட அவனை தடுத்தாள் தேவா.


|நான் வறேன் சனா...எப்படி தள்ளாடுற எங்கயாவது விழுந்து வைக்க போறடி" என்றான் அக்கரையாக


"ஒன்னும் வேண்டாம்... போங்க நானே பாத்துக்குறேன்…| என்று தன்னை எழுப்பி விட்டானே என்ற எரிச்சலில் கூறியவள் அவனை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.


உள்ளே சென்ற பத்து நிமிடத்தில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்கவும் வேகமாக கதவை தட்டியவன் |சனா சனா கதவை திற" என்று அவசரமாக குரல் கொடுத்தான்.


கதவை திறந்தவள் வாந்தி எடுத்ததின் அறிகுறியாக முகம் சோர்ந்து இருக்க "என்ன சனா?" என்றான் அவள் முதுகை நீவியபடி


"பிரஷ் பண்ண கூட, குமட்டிட்டு வருது... என்னால முடியல…" என்று கண்கள் கலங்கிட கூறியவள் அவன் மீதே சாய்ந்துக் கொள்ள "தேய்ச்ச வரை போதும், வாயை கழுவி விடுறேன் வா" என்று அவளுக்கு உதவியை செய்தவன் முகத்தையும் கழுவிட்டு அவளை மெத்தையில் அமர செய்து விட்டு தில்லையை அழைக்க சென்றான்.


பேரன் அவசரப்படுத்தியதில் அறைக்கு வந்தவர் "என்ன தாயீ" என்ன செய்யது என்றார் கரிசனாமாய்.


"பாட்டி" என்று அவர் இடையை கட்டிக்கொண்டவள் "எனக்கு முடியல பாட்டி" என்றவளின் குரல் அழுகையில் உள்ளே சென்றிருந்தது


"என்ன புள்ள இது…. இரட்டை உசிறா இருக்க இப்படி கண்ணு கலங்கலாமா... இது எல்லாம் சகஜம்த்தா... மாசம் போக போக கெஞ்சம் கொஞ்சமா நின்னுடும் தங்கம்…" என்று குழந்தையை சமாதனப்படுத்துவது போல் அவளின் தலையை வருடி விட்டவர்


"அய்யா, இனி காபி தண்ணியெல்லாம் கொஞ்ச நாளைக்கு கொடுக்க வேண்டாம்... உமட்டிக்கிட்டு தான் வரும்... சொன்னா எங்க கேக்குற? சொல்ல சொல்ல அவளுக்கு புடிக்குன்னு போட்டு கொண்டாந்துட்டா" என்று அவனை சிரிப்புடன் பார்த்தவர் பொன்னிக்கிட்ட சாத்துக்கொடி ஜுசு போட சொல்லி இருக்கேன்… கொண்டாரச் சொல்லு, அதை குடிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும்" என்றார்..


சந்திரன் கொடுத்தனுப்பிய பொருட்களை தேவாவிடம் கொடுக்க காலையே விசாகன் வீட்டிற்கு வந்துவிட்டாள் மேகலா.


சமயலறை வாசலில் நின்றிருந்த விசாகன் கொடுங்க "அக்கா நானே அவளுக்கு கொடுக்குறேன்"ஜ என்று பொன்னியிடம் வலுக்கட்டாயமாக ஜுஸை வாங்கியதை பார்த்த மேகலாவிற்கு அச்சர்யமாய் இருந்தது...


எப்போதும் ஆளுமையுடன் அதிகார தோரணையுடனும் ஊரே மதிக்கும்படியாய் இருக்கும் விசாகன் மனைவிக்காக இப்படி ஜூசும் கையுமாய் செல்வது விசாகனின் வாழ்வில் தோழி எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்க, அதே மகிழ்ச்சியான குரலில் "அண்ணா" என்று அழைத்தாள் மேகலா.


"வா… வா… மா" என்று அவளை வரவேற்றவன் "தேவா மேலா தான் இருக்கா வா மா" என்று அவளையும் அழைத்துவிட்டு மேலே சென்றான்..


அறைக்குள் நுழைந்தவளுக்கோ விசாகனும் தில்லையும் மாற்றி மாற்றி அவளை தாங்கவும் பேசவும் இந்த வாழ்க்கைக்காக தேவா இவ்வளவு மெனக்கட்டு கஷ்டப்பட்டதில் தப்பே இல்லை என்றே இருந்தது.


ஜூஸை குடித்த சற்று தேரத்திற்கு எல்லாம் கொஞ்சம் தெளிந்து அமர்ந்தாள் தேவா. அப்போதுதான் மேகலாவை கண்டவள், "எப்போ டி வந்த" என்று கேட்டு முகம் மலர்ந்திட விசாகனும் தில்லையும் அவர்கள் பேசட்டும் என்று அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.


"இப்போதன் வந்தேன் புள்ள உடம்பு எப்படி இருக்கு?" என்று அவளை பற்றி விசாரித்தாள் மேகலா.


"ப்பா முடியல டி எதை சாப்பிட்டாலுமே உமட்டிட்டு வருது... உட்கரவும் முடியல, நிக்கவும் முடியல, அதுவும் சமையலறை பக்கமே போனாலே அங்க வர்ற வாசனையே உமட்டுது" என்று கூறியவள் தளர்ந்து போய் படுக்கையில் சாய்ந்தபடி அமர்ந்தாள்.


தோழியின் நிலை வருத்தமாக இருத்தாலும் அவளை தேற்றும் விதமாக "போக போக சரியா போயிடும் புள்ள…" என்று அவளுக்கு அனுசரனையாய் கூறியவள்


"நேத்து டவுனுக்கு அப்பா கூட போயிருந்தேன்... உனக்கு இது எல்லாம் புடிக்கும்மேன்னு வாக்கினேன் புள்ள…" என்று அவள் கைகளில் கவரை கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தவள் கூடவே அவள் கொண்டு வந்த போனில் சந்திரனுக்கு வீடியோ கால் செய்திருந்தாள்.


ஏற்கனவே அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது அங்கிருந்து போன் செய்வதாக கூறியிருந்தாள். அதே போல் செய்யவும் ஒரே ரிங்கில் போனை ஆன் செய்து பின் புற கேமிரா வழியாக சத்தம் வராமல் தங்கையை பார்த்திருந்தான் சந்திரன்.


மசக்கையின் பிடியில் கொஞ்சம் சோர்த்து இருந்தாலும் தேவாவின் முகம் பொலிவுடனும் தனி சோபையுடனும் இருக்க, தங்கையின் குரலை கேட்க ஆவலாய் இருந்தான் சந்திரன்.


அவள் கொடுத்த பேக்கை திறந்து பார்த்தவளுக்கு மனதை என்னமோ செய்தது அது முகத்திலும் தெரிய "என்ன புள்ள உனக்கு இதுலாம் புடிக்கலையா?" என்றாள் மேகலா சந்திரனை மனதில் கருவியபடியே 'அவளுக்கு புடிக்கும்ன்னு சொன்னியே டா!!! இப்போ இவ பாக்குற பார்வை பார்த்தா இத எதுக்கு வாங்கிட்டு வந்தன்னு கேட்பாளோ?" என்று நினைத்தாள்.


தங்கை என்ன சொல்ல போகிறாளோ என்று எதிர்ப்பார்ப்புடன் இருந்த சந்திரனுக்கு, அவள் கூறிய வார்த்தைகள் மனதையும் கண்ணையும் கலங்க செய்து இருந்தது.


"உன்னை புடிக்கும் கலா, ஆனா உன்னை இப்போ இன்னும் அதிகமா புடிக்குது…." என்று அவளை அணைத்துக்கொண்டு விடுவித்தவள்


"எங்க அண்ணன் ஊருக்கு வரும்போது எல்லாம் எனக்கு பிடிக்கும்னு எப்பவும் குலோப் ஜாமுனும், பால்கோவாவும் தான் வாங்கிட்டு வரும்.... இது பார்க்கும் போது எங்க அண்ணன் ஞாபகம் வந்துடுச்சி" என்று கண்கள் கலங்க கூறிட


'அடேய் படுபாவி அவளுக்கு புடிக்கும்னு வாங்கி தந்தேன்னு பார்த்தா… உன்னை ஞாபகப்படுத்தி அவ அழறா மாதிரி வாங்கி கொடுத்து இருக்கியே!!' என்று அதற்கும் அவனை மனதில் திட்டியவள்


"இப்போ உன் நொண்ணங்காரனை பத்தி எதுக்கு புள்ள நினைக்கிற? சந்தோஷமா இருப்பியா அதை வுட்டுட்டு தேவை இல்லாத ஆணிய எல்லாம் புடிங்கிட்டு இருக்க... வாங்கிட்டு வந்தவ நான் இருக்க, அந்த கடங்காரனை ஏன் நினைக்கிற?" என்று அவளை திட்டி சமாதப்படுத்தியவள் அவர்கள் மருத்துவமனை கிளம்ப குளியலறைக்குள் அனுப்பி வைத்தாள்.


அப்போதுதான் கையில் இருக்கும் போனில் சந்திரன் வெகுநேரம் காத்திருப்பதை கவனித்தவள் நாக்கை கடித்தபடி 'அச்சோ அவன் இதுல இருக்கறதை மறந்துட்டு, அவனை திட்டி பேசிட்டேனே" என்று பயந்தவள் முன் கேமராவை ஆன் செய்ய அவளை முறைத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து அசடு வழிந்தவள் "நான் கட் பண்றேன்" என்று அவன் அடுத்த வார்த்தை பேசும் முன் போனை கட்செய்து இருந்தவள் அனைவரிடமும் கூறிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு இருந்தாள்.


🌹🌹🌹


நாங்கைந்து மாதம் இப்படியே தான் சென்றது தேவாவிற்கு இதில் மயக்கமும் தலை சுற்றலும் ஒரளவு நின்றிருக்க வாந்தி மட்டும் அவளை வைத்து செய்து கொண்டு இருந்தது…


அவ்வபோது மரகதம் செய்து எடுத்து வரும் புளிப்புகீரை தொக்கும் மாங்காய் பச்சடிக்கும் ஏங்கி நிற்கும் மனது…


என்னதான் தில்லையும் விசாகனும் தங்க தட்டில் தாங்கினாலும் தாயின் மடி தேடியது அவளுக்கு, தந்தையின் முகம் காண ஏங்கியது, அண்ணனின் பாசமும் அவனின் பரிவையும் எதிர்ப்பார்த்தது, இன்னும் சொல்லப்போனால் அவள் வீட்டிற்கு ஒரு முறையேனும் தன்னை அழைக்க மாட்டார்களா!! என்று ஏங்கி நின்றவளுக்கு ஐந்தாம் மாதம் ஆரம்பித்ததும் மனதை அரிக்க தொடங்கி இருந்தது.


அதே நேரம் வீட்டில் பெரிய ரணகலத்தையே ஏற்படுத்திக் கொண்டு இருந்தார் மரகதம்


"இப்போ சாப்பிட போறியா இல்லையா?" என்று கோவமாக கேட்டார் சௌந்தரலிங்கம்.


"எதுக்கு சாப்பிடனும், சல்லி பைசாவுக்கு மதிப்பு இல்லாத வீட்டில் சாப்பாடு ஒன்னு தான் குறைச்சலா?" என்ன என்று மூக்கை முந்தானையால் துடைத்து உள்ளே தரையில் அமர்ந்து


அழுதுக் கொண்டு இருந்தார் மரகதம்.


"இப்போ என்ன பண்ணனும்னு... இந்த மூனு நாளா சாப்பிடாம உட்கார்ந்து இருக்க" என்று அதட்டலும் கர்ஜனையாகவும் வந்தது அவரது குரல்


கொஞ்சம் பயம் இருந்தாலும் "நான் அப்படி என்ன கேட்டேன்…. யாரும் செய்யக் கூடாததையா கேட்டேன்... ஐஞ்சாமாசம் வருது புள்ளை சோறு ஊட்டனும் ஜடைக்கு பூ முடிக்கனும் தானே கேட்டேன்... அவ என்ன யாரும் இல்லாத ஆனாதையா எதுவும் பண்ணாம இருக்கறதுக்கு" என்றார் அழும் குரலிலேயே


இதையெல்லாம் பார்த்துக்கெண்டு இருந்தாலும் எதிலும் தலையிடாமல் நின்றுக் கொண்டு இருந்தான் சந்திரன். ஏற்கனவே தன்னால் தான் இது எல்லாம் என்ற குற்றவுணர்வில் இருந்தவன் இப்போது பேசவே தயக்கம் கொண்டு அமர்ந்திருந்தான்.


|உனக்கு இது எல்லாம் சதாரணமா இருக்கலாம்… என்னால ஊர்ல தலை காட்ட முடியலடி முடியல…. என் முகத்துக்கு நேர பேச பயந்தவன் எல்லாம் முதுக்கு பின்னால பேசுறான் டி எந்த முகத்தை வச்சிக்கிட்டு வர சொல்ற" என்றார் அத்திரத்துடன்


"பேசறவன் பேசத்தாங்க செய்வாங்க... அதுக்குன்னு புள்ளைய அப்படியேவா விட முடியும்... சொல்லுங்க தவமா தவம் இருந்து பொறந்த புள்ளைங்க, அப்படியே ஒட்டும் இல்ல உறவும் இல்லன்னு விட முடியுமா? சொல்லுங்க" என்றார் கொஞ்சம் சாந்தமாகவே


"அவ அந்த தம்பிக்கூட போகலையேங்க... கல்யாணத்தை பிடிக்காம தானே வீட்டை விட்டே போனேன்னு சொன்னா... ஊர் உலகத்தை பார்த்தா நம்ம பொண்ணு நமக்கு இல்லாம போய்டுவாங்க…" என்று அவரது மானதை மாற்ற முயற்சித்தார்.


"ஒத்தை புள்ளைங்க முதல் முதலா வாயும் வயுறுமா இருக்கா... அவ மனசை கொண்ணுடாதிங்க... நீங்க எப்போ பேசுவிங்கன்னு எதிர்ப்பார்த்துட்டே இருக்குங்க அந்த புள்ள" என்று கூறிட அவரது மனமும் கொஞ்சம் யோசிக்க தொடங்கி இருந்தது.


தேவாவின் முகம் பார்த்தே அவளின் தேவைகளை அறிந்தவனுக்கு அவளின் மனது புரியாதா என்ன? அவள் மனைவி எதை தேடுகிறாள் யாரை தேடுகிறாள். என்பதை தெரிந்து வைத்திருந்தவன் ஐந்தாம் மாதம் ஒரு நல்ல நாள் பார்த்து விசாகனே அனைத்து ஏற்பாட்டையும் முன்னின்று செய்து விசேஷத்திற்கு ஊரையே அழைத்திருந்தான்.


தங்களது அறையில் புடவையை கட்டிக்கொண்டு இருந்தாள் தேவா.


தளீர் வண்ண பச்சை பட்டில் அடர் வண்ண பச்சை ஜாரிகையில் சிறிது மேடிட்ட வயிற்றுடன் புடவையின் மடிப்பை எடுத்து விட சற்று சிரமப்பட "சனா" என்று அழைத்தபடி அறைக்குள் பிரவேசித்து இருந்தான் விசாகன்.


மனைவி புடவை மடிப்பை எடுப்பதற்கு கஷ்டப்பட அவளை நேராக நிறுத்தியவன் தானே அமர்ந்து மடிப்புக்களை எடுத்து நீவி விட்டு "இப்போ சரியா இருக்கா சனா" என்றான் அவள் முகம் பார்த்து.


"ம்" என்று சுரத்தே இல்லாமல் கூறியவள் புடவையை சொறுகிக்கெண்டாள்.


"என்னடி ம் கூட ஒரு மாதிரி இருக்கு?" என்றான் எழுந்து அவள் கண்களை பார்த்தபடி


என்ன கூறுவாள் எல்லாவற்றையும் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் கணவனிடம் மனம் பெற்றவர்களை தேடுகிறது என்றா இது நாள் வரையிலும் தன் வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லாமல் இருக்க மனம் வலித்தது அவளுக்கு ன்னை மன்னிக்கவே மாட்டாரா என் அப்பா என்று நினைத்து நினைத்து வருந்தினாள்.


அந்த வாட்டம் முகத்திலும் தெரிய அதை மறைக்க சிரிப்பை வரவழைத்தபடியே "முடியல மாமா" என்றாள் உள்ளிருக்கும் குழந்தையை சுட்டி காட்டி


அவள் பொய் உரைக்கிறாள் என்று அறிந்தும் மண்டியிட்டு அமரந்தவன் அவள் மேடிட்ட வயிற்றுக்கு ஒரு முத்தம் வைத்து "அம்மாவை படுத்த கூடாது செல்லம்… அம்மா பாவமில்ல" என்று குழந்தையிடம் அவளுக்காக பேசியவன் எழுந்து நின்றான்.


அவளின் முகத்தை மென்மையாக நிமிர்த்தியவன் அவள் கண்களில் தன் இதழை பதித்தவாறு "இதுல எப்பவும் இருக்க சோகம் இருக்க கூடாது செல்லம்மா...₹ இன்னைக்கு எதையும் நினைக்காம சந்தோஷமா இருக்கனும்…. குட்டி பாப்பாவும் இன்னைக்கு உன்னை படுத்தாது" என்று அவளை இறுக அணைத்து உச்சியில் முத்தமிட்டவன் அவனே தேவாவை கீழே அழைத்துச் சென்றான்.


மனையில் அமர்ந்திருந்த தேவாவின் கண்கள் வாயில் புறத்தையே பார்த்து இருந்தது. விசாகன் சென்று தங்கள் வீட்டில் கூறி இருந்தான் என்று தெரியும். ஆனால் வருவார்களா என்றுதான் தெரியாது… இருந்தும் தங்கள் ஊரில் இருந்தாவது யாராவது வந்து விடமாட்டார்களா என்று எதிர்ப்பார்திருந்த நேரத்தில் அவள் கவனம் தில்லை அழைத்தில் சிதறியது... சற்று நேரத்திற்கு எல்லாம் சலசலவென சத்தம் கேட்டு திரும்பிய தேவாவின் கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் சூரியனை கண்ட தாமரையை போல் மலர்ந்து விரிந்துக் கொண்டது.


பிறந்த வீட்டு பலகாரங்கள் பூ ஜடை தட்டு வரிசைகளுடன் சொந்த பந்தங்கள் புடை சூழ மரகதமும் துரைலிங்கத்தின் மனைவி இளையா, பக்கத்துவிட்டு அன்னம், மேகலா, மேகலாவின் அன்னை என்று அனைவரையும் விசாகனின் வீட்டிற்கு அழைத்து வந்தார் மரகதம்.


தேவாவின் முகம் உணர்ச்சிமிக்கதாய் இருந்தது.. நடக்கவே நடக்காது என்று அழுகையில் கரைந்தவள் இப்போது மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டு இருந்தாள். இருந்தும் ஒரே குறை தாய் மட்டும் சொந்தபந்தங்களுடன் வந்திருக்க தகப்பனையும் தமையனையும் கண்களால் தேடத் தொடங்கி இருந்தவளுக்கு சிறிது நேரத்தில் சிறிய தகப்பனாருடன் சௌந்தரலிங்கம் வருவதை பார்க்கவும் அப்பா என்று கூவலுடன் மனையில் இருந்து எழந்துவிட முயன்றவளை "தேவா மா எழக்கூடாது டா" என்று அருகில் வந்து சமாதனப்படுத்தி அமரவைத்திருந்தார் சௌந்தரலிங்கம். அவர்களின் பாசத்தை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கத்தான் செய்தது


தன்னவளின் சந்தோஷம் விசாகனையும் தொற்றிக் கொள்ள மெல்லிய புன்னகையுடன் வளைய வந்தான். எங்கு சென்றாலும் மனைவியின் மீதே கண்களை நிலைக்க விட்டிருந்தவனுக்கு அவளின் உணர்வுகள் புரியத்தான் செய்தது... கண்களால் கணவனுக்கு மகிழ்ச்சியை தெரிவிக்க அவனும் அதை ஏற்றுக்கொள்பவன் போல விழிகளை மூடி திறந்து அவளை நிதானிக்க வைத்தான்.


வயதில் மூத்த பெண்மணிகள் வந்து நலங்கு வைத்து பூ தூவி ஆசிர்வதித்து சாதம் ஊட்டி வளையிட்டு அவளை வாழ்த்தியதும் பெற்ற தாயும் தந்தையும் மகளை வாழ்த்தி அட்சதையை தூவி விட தந்தையின் கைகளை பற்றிக்கொண்டவள் கண்களில் ஒத்திக்கொண்டு சிரிப்பும் அழுகையுமாய் அந்த வார்த்தைகளற்ற நிகழ்வை அனுபவித்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN