மூங்கில் நிலா -3

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டை வந்தடையும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. மோகினி மனம் பித்து பிடித்தது போல இருந்தது. அவனை அவள் அறியாதது இல்லை. இந்த வீடும் அவளுக்கும் புதியது அல்ல.மனதில் எழுந்த வலிகளும் மார்பில் தழைய தழைய தொங்கும் இந்த தாலியும் தான் புதியது.மற்ற படி அவன் பாராமுகம் அவளுக்கு பரிச்சயமே.

வாசலில் இவர்களை வரவேற்க மோகினியின் பெற்றோர் வந்திருந்தனர். உடன் இவளது உடமைகளையும் கொண்டு வந்திருந்தனர். ஓரளவு வசீகரினின் குணம் கண்கொண்டு விட்டதால் பெரிய மரியாதை எதையும் அவர்கள் எதிர்ப்பார்க்க வில்லை.
அம்மாவை கண்டதும் அவள் கையணைப்பில் தாவியவள் கண்களில் கண்ணீர் கரை யுடைத்து ஓடியது.

"அம்மா என் நிலைமைய பார்த்தியா, கடவுள் என்ன எப்படி எல்லாம் கஷ்டப்படுத்தரான், போன வலியே இன்னும் ஆரலையே, இதுல இந்த கல்யாணம் எனக்கு தேவையாம்மா? " கோ வென கதறியவளை அவள் தாய் இறுக்கி அணைத்துக் கொண்டார்.

மோகினியின் அம்மா சுமதி மற்றவரை போல கலங்குபவர் இல்லை, எதையும் நேர் மறையான கண்ணோடத்தில் பார்ப்பவர். எது நடந்தாலும் அது நன்மைக்கேனு இறைவனின் பொறுப்பிலே அனைத்தையும் விட்டு விடும் ஜீவன்.

"ஸ்ஸ் அழாதே வனிம்மா, எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்கோ, போனவனை நினைத்து நினைத்து இருக்கறவங்களை கஷ்டப்படுத்தாதே, வாசு கூட நீ இப்படி தனி மரமாய் நிக்கணும்னு விரும்பவே மாட்டான், நமக்குனு
விதிச்சது மட்டும் தான் நம்ம கூடவே வரும், வாசு உன் விதி கிடையாது வனி, இருந்தவரை நீ அவனை நல்லா பார்த்துகிட்ட, இப்படி நோய் வந்து இறப்பான்னு யாருமே நினைக்கலையே, அதுக்காக நீ உன் வாழ்க்கைய வாழமா இருக்க முடியுமா? நாங்களா உனக்கு இதை செய்யல, இறைவன் செயல் போல அது அமைஞ்சிடுச்சி, நீ படிச்சவ, புத்திசாலி சொல்லாம புரிஞ்சிக்குவ, இதுதான் இனி உன் வாழ்க்கை, ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிமா ",
அம்மாவின் திடமான பேச்சு அவளை சற்று ஆறுதல் படுத்தியது.

மேலும் எதையும் சொல்லி அம்மாவை கஷ்டபடுத்த அவளுக்கு விருப்பம் இல்லை. சரி என்பது போல தலையாட்டி வைத்தாள்.
மாடி ஏறி சென்ற வசீகரன் அதற்கு மேல் கீழே இறங்கி வரவே இல்லை. வனியின் பெட்டிகளை வேலையாள் ஒருவன் மாடியிலிருந்த ஒரு அறையில் அடுக்கி வைத்திருந்தான். பெற்றோர்களும் சென்று விட, தனியே கீழே அமர பிடிக்காமல் அவளும் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.

கையில் அந்த டைரி.விதிக்கு பகடையாய் உருண்ட அவளுடைய டைரி. நடுங்கும் கரங்களினால் அதன் முதல் பக்கத்தை பிரித்தாள்.
வசீகரனும் அவளும் பள்ளி சீருடையில் கள்ளமில்லா சிரிப்பினில் எடுத்துக் கொண்ட புகைப்படம் அவளை பார்த்து சிரித்தது. ரெட்டை ஜடை இடுப்பு வரை நீண்டிருக்க, பள்ளி சீருடையும், கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்த வனமோகினியும், அரும்பு மீசை, முகத்தில் ஆங்காங்கே எட்டிப்பார்த்த பருக்களும், சற்றே கலைந்த தலை முடியும், தளர்ந்து இருந்த டையுமாய் வசீகரன் அவளருகில் நின்றிருந்தான்.

கைகள் தன்னிசையாக அந்த படத்தை வருடிக் கொடுத்தது. அவன் நினைவுகள் அடுக்கடுக்காய் அங்கே அரங்கேறத்துவங்கியிருந்தன.
அந்த படம் பிடிக்க சற்று நேரம் முன்பு கூட வனமோகினியுடன் அவனுக்கு வம்புதான். குள்ள வாத்து குள்ள வாத்துனு அவளை வெறுப்பேத்தி விட்டிருந்தான். அதற்கு அவள் வாய் மூடி இருப்பாளா என்ன? வாகாய் அவள் கையில் மாட்டிய அவன் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து விட்டாள். தினமும் பள்ளிக்கு வருபவன் கழுத்து டை கூட கட்ட கற்று கொண்டது இல்லை. அதுவும் வனமோகினி தான் கட்டி விடுவாள்.

பள்ளி முடிந்து வீடு போய் சேர்வதற்குள் அவனை அலங்கோலமாக்காமல் அவள் ஓய்வது இல்லை. இவனும் அவளை வம்பிழுக்கமாமல் விடுவதும் இல்லை. வனமோகினி இதழ்களில் விரக்தி புன்னகை சூடிக்கொண்டது. பட்டாம்பூச்சி போல கவலையின்றி திரிந்தவள் இவன் ஒருவனின் வருகையால் தன் உலகமே மாறி கூட்டுப் புழுவானது வசீகரனுக்குமே தெரியாத விவரம் அல்லவா..

தொடரும்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN