மூங்கில் நிலா -4

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வசீகரன் -வனமோகினி சிறு வயது முதலே ஒரே பள்ளியில் படித்து வந்தவர்கள். வனமோகினி வெடி பட்டாசு என்றால் வசீகரன் அமைதியானவன். பெண் பிள்ளைகளோடு சேர்ந்து படித்தாலும் அவர்களோடு பேசுவது கிடையாது. ஒரு மாதிரி கூச்ச சுபாவம் உடையவன்.

மாறாக வனமோகினியோ எப்பொழுதும் நண்பர்கள் குழாமுடனே குட்டி மகாராணி போல வலம் வரும் வாயாடி சுட்டி.
பள்ளி பருவத்திலே, பேச்சு போட்டி, கவிதை, நடனம் எல்லாவற்றிலும் வெற்றி வாகை சூடும் சூட்டிகை பெண். தமிழ் மொழிப் பாடத்தில் அவளை அடிச்சுக்க ஆளே இல்லை. புலவி புலவினு சக மாணவர்கள் அவளை கிண்டல் செய்வதும் உண்டு.

பெண் பிள்ளைகள் போல் அல்லாது ஒரு நிமிர்வுடனே நடக்கும் இயல்புடையவள். யாரிடமும் விகல்பம் இல்லாமல் பழகும் குணமுடையவள். வகுப்பில் அனைவருடனும் இயல்பாய் பழகுபவளை ஒருவன் மட்டும் ஏறெடுத்து பார்க்கவே மாட்டான். வேற யாருங்க நம்ம சிடுமூஞ்சி சிங்காரம் mr. வசீகரன்தான். அய்யா அப்போவே அப்படி.

வனமோகினியும் அந்த வயதில் அவனை அவ்வளவாக கண்டுக்கவே இல்லைதான். அவளுக்கென்று ஒரு தனி கூட்டம். தனி ராஜ்ஜியம்னு மஜாவா ஒரு வாழ்க்கை.அது வரை தெளிந்த நீரோடையாய் இவர்கள் வாழ்க்கை நகர, வசீகரனே வனமோகினியை தோழியாக ஏற்கும் நிலையும் வந்தது.

மோகினியுடன் தொடக்க கல்வி பயின்று வந்த வானதியுடன் மட்டும்தான் வசீகரன் பேசுவான். வனமோகினி போல வானதி அடாவடி கிடையாது. ஹை ஸ்கூலில் இருவரும் வெவ்வேறு வகுப்பில் பிரிய, வசீகரன் வானதி ஒரு வகுப்பிலும் வனமோகினி வேறு வகுப்பிலும் படிப்பைத் தொடர்ந்தனர். வானதி இல்லாமல் வனமோகினிக்கு ஒரு கை உடைந்தது போல இருந்தது. தினமும் அவளை காலையில் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே வானதியை சென்று பார்த்து விட்டுதான் தன் வகுப்பிற்கு செல்வாள்.

வசீகரன் அங்குதான் இருப்பான். அவனை இவள் கண்டு கொள்வதும் கிடையாது.
ஆனால் வனமோகினி அடிக்கும் லூட்டி அவனை அவளைத் திரும்பி பார்க்க வைக்கும். சரளமாக எல்லோரிடமும் வாயாடும் அவளை மௌனமாய் ரசிப்பது அவனுக்கு பிடிக்கும்.

அவளிடம் பேச அவனுக்கு கூச்சமாக இருக்கும். இப்படிதான் ஒரு நாள் ஸ்கூல்ல டை கட்ட தெரியாமல் வசீகரன் விழித்துக்
கொண்திருந்தான். வழக்கமாய் டை கட்டி கொடுக்கும் அவன் ஆத்ம நண்பன் அர்ஜுன் அன்னிக்கு ஸ்கூல்க்கு மட்டம்.
வானதியை பார்க்க வந்த வனமோகினி அவளை வகுப்பில் காணாது, கண்களால் தேடிக் கொண்டிருந்தாள்.
கண்ணுக்கு வானதி சிக்காமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த வசி தான் வனமோகினிக்கு தென்பட்டான்.
மனதில் "இந்த சிடுமூஞ்சி சிங்காரம் நம்மகிட்ட பேச மாட்டானே, எப்படி வானதி எங்கேனு கேக்கறது?" இருந்தாலும் கேட்டுதான் வைத்தாள்.

வானதி இன்னிக்கு பள்ளிக்கு வரலன்னு சொன்னவன் கையில் இருந்த டை வனமோகினி கண்ணில் பட்டது.
"டை கட்ட தெரியாதா வசி? " மோகினியின் கேள்விக்கு இல்லை என்பது போல தலையசைத்தான்."ஹ்ம்ம்ம், இங்க வா, நான் கட்டி விடறேன் " மோகினி அழைக்கவும் மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல அவள் அருகில் நின்றான்.

எந்த கூச்சமும் இல்லாமல் அவன் கழுத்தில் அழகாய் அந்த டை யை கட்டி விட்டு சட்டை காலரை சரி செய்து விட்டாள்.
14 வயதினில் வசீகரனை முதல் முதலில் இப்படி தொட்டவள் இவள் ஒருத்திதான். தாயை தவிர எந்த பெண்ணோடும் ஒட்டி பேசாத நல்லவனாய் வளர்ந்து விட்டவன்.

வானதியிடம் கூட கொஞ்சம் கொஞ்சம்தான் பேசுவான். இந்த சூறாவளி கொஞ்சம் கொஞ்சமாய் வசீகரனை மையம் கொண்ட மாயமே அலாதியானதுதான். அந்த நிகழ்விற்கு பின் வசீகரன் அவளுக்கு தோழன் ஆகிப்போனான்.
அடாவடி பொண்ணுக்கு இப்படி ஒரு உம்முணாம்மூஞ்சி கூட்டாளி.

அந்த வருடம் அப்படி ஓடி போக, அடுத்த வருடம் வனமோகினி வசீகரன் வகுப்பிற்கு மாறி வந்தாள்.
இது போதாதா அவனை உருட்டி எடுப்பதற்கு. ஒரு இடத்தில் அடங்கி உட்காரும் பிறவி இல்லையே வனமோகினி.
டெய்லி ஏதாவது ஒரு கலவரம் கிளாஸ்சில் பண்ணாவிட்டால் அவளுக்கு தூக்கம் வராதே. அந்த வயதில் அவளுக்கு இருந்த
தெளிவு வசீகரனுக்கு பல விஷயங்களில் இல்லை.

வனமோகினிக்கு விருப்பு வெறுப்பு, இரசிக்க பல விஷயங்கள் இப்படி பலதும் இருக்க, இந்த விஷயங்களில் நம்ப ஹீரோ நல்லாவே தடுமாறுவான். ஒன்றில் மட்டும் வசீகரன் பிடிவாதம் வனமோகினியையே அசைத்து விடும்.பல சமயங்களில் அவளுடைய சேட்டைகள் அவனுக்கு கோவத்தை கிளறி விடும்.

வாரத்தில் ஒரு நாள் பேசுவதும்.நான்கு நாட்கள் வனமோகினியுடன் சண்டையுமாவே வசீகரன் பொழுது விடியும். தனக்கு சொந்தமான எதையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் வனமோகினி வானதி வசீகரனை மட்டும் விட்டு தர மாட்டாள்.
அப்படி மீறி வசீகரன் யாருடனாவது பேசி விட்டால், அன்னிக்கு அவனுக்கு கச்சேரி தான். இவர்களுக்கு இடையில் மாட்டி கொள்வது என்னவோ பாவம் அப்பாவி வானதி தான்.

"உனக்கு யாருடி வனமோகினினு பெயர் வெச்சா? வானரம்னு தானே வெச்சிருக்கனும், நீ நறுக்கு நறுக்குனு கிள்ளி கிள்ளி என் இடுப்பு சதையே சிவந்து போயிடுது, வீட்டில சட்டை போடாம கூட நா பிரீயா இருக்க முடியல "
ஆத்திரத்தில் வசீகரன் கத்தினால், இவளுக்கும் சுறுசுறுனு கோவம் வந்திடும். முறைத்துக் கொண்டு பேசாமல் சென்று விடுவாள்.
அவ்வளவு தான் ஒரு 2 வாரம் போர்க்கொடி பிடிப்பார்கள் இருவரும். அடிச்சாலும் புடிச்சாலும் வசிகிட்ட பேசாமல் வனியால் இருக்க முடியாது.

அவள் வைராக்கியம் அவனிடம் மட்டும் இலகுவாய் தோல்வியை ஒப்புக்கொள்ளும்.வசி போல அவள் கல் மனம் கொண்டவள் இல்லயே.மன்னிப்பு கடிதம் எழுதி எழுதி வானதியிடம் கொடுப்பாள்.
"டேய் ரெண்டு பேரும் ஒழுங்கா பேசி தொலைங்க, நடுவுல நா நாட்டாமை பண்ணிட்டு இருக்க முடியாது, டெய்லி இதான் பொழப்பு மாறி ஆயிடுச்சு, தயவு செஞ்சி பேசிடு வசி" வானதி கெஞ்சுவாள்.
அவளுக்காக திரும்ப வனியுடன் பேசி விடுவான்.

இயல்பான வசியின் குணங்கள் எல்லாமே வனியால் மாறிப் போனது. இப்ப எல்லாம் அவன்தான் அவளை கலாய்ச்சு எடுக்கறது . அதுக்கு வட்டியும் முதலுமாய் வனிகிட்ட அடி வாங்குவதே அவன் வாடிக்கையாகி போனது.மனதளவில் அவளின் நேசம் வசீகரனை அவளை காதலிக்க வைத்தது.டீன் ஏஜ்ஜில் இரசாயன மாற்றங்கள் வனியை கள்ளமில்லாமல் நேசிக்க வைத்தது.

ஆனால் அது மாதிரி உணர்வு அவளுக்கு வந்ததாய் தெரிய வில்லை. நட்பை உயிர் போல சுவாசிக்க தெரிந்தவளுக்கு வசீகரனின் மாற்றங்கள் தெரியவில்லை. விளையாட்டாய் தான் சீண்டினாலும் ஆண் மகனாய் அவன் உணர்வுகள் வேறு வகையில் தூண்டப்படும்னு கூட வனிக்கு அப்போதைக்கு தெரியாது.

சகஜமாய் அவனைத் தொட்டு பேசுவது அவளுக்கு இயல்பு என்றாலும், வசியின் கை விரல் கூட அவசியம் இல்லாமல் அவள் மேலபடாது.வீட்ல அவனுக்கு அவன் அம்மா பார்த்து பார்த்து செய்வது போல, ஸ்கூல்ல அவனுக்கு வனி தான் எல்லாம் செய்வாள். டெய்லி டை கட்டி விடுவது, வீட்டு பாடம் செய்ய வைப்பது, ப்ராஜெக்ட் செய்து கொடுப்பது எல்லாமே அவள் தான்.

சமயத்தில் உணவு தண்ணி கூட வனமோகினியுடையதுதான். நம்ம பய புள்ள அம்ம்புட்டு சோம்பேறி ல.அவள் குரங்கு சேட்டைகள் எல்லாம் அவனோடு மட்டும்தான். பிற பசங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்.எதிர் விசை ஈர்ப்பு போல வனமோகினியின் வசம் வசீகரன் ஈர்க்கத்தான் பட்டான்.

புத்தகம் மூடிய மயிலிறகாய் வசியின் காதல் அவனுக்கும் அவன் இதயத்திற்கு மட்டுமே இரகசியமாய் இருந்து வந்தது.
வனியின் உலகமே வசி வானதி என்றுதான் அது வரை இருந்து வந்தது.அவள் அழுது யாருமே பார்த்ததில்லை. மலர்ந்த முகம், அழகான சிரிப்பு, குழந்தைமனம், தேவதை போல இருந்தவளை விதிக்கு பகடையாய் வசீகரனே உருட்டி விடும் காலமும் வந்தது.
தொடரும்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN