மூங்கில் நிலா -6

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இவ்வாறே வனி-வசி நாட்கள் இன்பமாய் நகர, ஒரு கட்டத்தில் வசி ரவிக்காக தன்னையே விட்டுக் கொடுக்க முனைந்தது வனமோகினிக்கு தெரிய வந்தது.இந்த விஷயம் வசி அர்ஜுனனிடம் மட்டும்தான் பகிர்ந்து கொண்டிருந்தான்.
மேல் படிப்பை அவன் வெளியூரில் தொடர, விடு முறையில் ஊட்டி திரும்பியவன், பூவேலியில் வனியை சந்தித்தான். திரும்பவும் வசியுடன் நட்பாகி விட்டதாய் மகிழ்ச்சியுடன் அவனுடன் பகிரவும், அர்ஜுனும் வசி அவ்வாறு முடிவெடுக்க வேண்டிய காரணத்தை உளறி விட்டான்.

அவன் வரையில் வனி இன்னமும் அதே பழைய வாலு பிள்ளையாய் தானே உருவகப்படுத்தியிருந்தான். அவனுக்கு எங்கே தெரியும் வனியின் மனமாற்றங்கள். பழைய வனியாய் இருந்திருந்தால் சிரித்துக் கொண்டே இலகுவாய் இந்த விஷயத்தை கடந்திருப்பாள்.
இந்த கடன்காரன் வசிதான் பேசாத இரண்டு வருடங்களில் புதிய வனியை சிருஷ்ட்டித்து விட்டானே. இந்த வனி புதியவள்.
எளிதாக கலங்க கூடியவள். தான் வசிக்கு ஒரு பொருட்டு அல்ல, அதனால்தானே எளிதாய் தன்னை அந்த ரவிக்கு தாரை வார்க்க பார்த்திருக்கின்றான். என்ன தைரியம் இவனுக்கு.

மனதிற்குள் ஏதோ பிசைவது போல இருந்தது. இந்த மாதிரி யாராவது இரந்து கேட்டால் தூக்கி கொடுக்க கூடிய பொருளா அவள்? அவளுக்கென்று ஒரு மனசு இல்லையா?அவனில்லாமல் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்.?
இடையில் பாட்டி இறப்பு, வானதி பிரிவு, தோள் கொடுக்க வேண்டியவன் அவளை தனிமையில் அல்லவா திண்டாட வைத்து விட்டான்.
எதிர்காலத்தில் தன்னை இவன் எப்படி வாழ வைப்பான்? வனமோகினி நிறைய யோசித்தாள். இது காதலிக்கும் வயது கூட இல்லையே. தவறான ஒரு முடிவு கூட அவள் எதிர்காலத்தை சிதைத்து விடாதா?

அவளால் அவன் காதலை உதற முடியும். ஆனால் அவன் நட்பை உதற முடியாதே.
பலவாறு சிந்தித்து அந்த முடிவை எடுத்தாள். தன்னை இழக்க துணிந்தவனுக்கு தன் பிரிவே சரியான தண்டனை என நினைத்து விட்டாள். பாவம் வனமோகினி அந்த செயலுக்கு பின்னாளில் அவள் கொடுக்க போகும் விலையை அப்பொழுது அறிய வில்லை.

கல்லூரி இறுதி நாளில் வசியிடம் ஒருவாறு கூறி வைத்தாள். "என்ன மன்னிசிடு வசி, எனக்கு இந்த காதல் கீதல்லாம் சரி வராது வசி, என்னைப் பத்தி தான் உனக்குத்தான் தெரியுமே, காலம் முழுக்க உன் நட்பை எனக்கு குடுடா, இது காதலா இல்லை இந்த வயசில வர்ற இனக்கவர்ச்சியானு கூட எனக்கு தெரியல. இப்படி குழப்பத்தில் என்னால வாழ முடியாது"மனசுக்குள்ள எரிமலையாய் கனன்ற கோவமும் அவன் மேல் அவள் கொண்ட காதலும் முட்டி மோதி சிதற ஒருவாறு சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாள்.

வசிக்கு அதிர்ச்சி என்றாலும் அவன் காதலை புரிந்து கொள்ள முடியாத சிறுபிள்ளை இல்லையே வனமோகினி.
"கடைசி வரைக்கும் இந்த வசி உனக்கு நண்பனா இருப்பான் வனி, நமக்குள்ள இனி எதுவும் இல்லை, நம்ப எப்பவும் போல நல்ல பிரண்ட்ஸ் தான், அருமையான எதிர்காலம் உனக்கு அமைய என் வாழ்த்துக்கள் ".மனதின் வலியை மறைத்தவாறே வசியும் விடைப் பெற்றான். முரட்டு பிடிவாதத்தில் வசியும் வனமோகினிக்கு சளைத்தவன் இல்லையே.

அதோட மேல் படிப்பிற்கு வசி மலேசியா சென்று விட, வனி பைன் ஆர்ட்ஸ் படித்து முடித்தாள்.
தண்டனையை தன்னவனுக்கு கொடுத்துவிட்டு தள்ளி நின்று ரசிக்கவா முடியும்? அவனுடைய அவளுக்கு அவன் வலியிலும் இறைவன் பங்கு வைத்திருப்பதை வனி போகப் போகத்தானே புரிந்து கொண்டாள்.

அதற்கு பின் வசி ஊட்டிக்கு வரவே இல்லை. எப்பொழுதாவது facebook, போன்னு தொடர்பு கொள்வதோடு சரி. வனியும் பூவேலியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு திறமையாக நிர்வகித்து வந்தாள். சலனமில்லாத அவள் வாழ்க்கையில் சத்தமே இல்லாமல் ஒருவனின் இம்சை இரவு நேரங்களில் தொடர்வது தவிர பிற நேரங்களில் அவள் இயல்பு வாழ்க்கை சரியாகவே போய் கொண்டிருந்தது.
மறந்தும் கூட அந்த வலியை தந்தவனிடம் திரும்ப போய் நிற்க வனியால் முடியவே முடியாது.

இதற்கிடையில் தான் வாசுவின் நட்பு அவளுக்கு கிடைத்தது.அதிகம் வழியாமல் நேரே அவளிடமே அவளை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டவனை வனிக்கும் பிடித்திருந்தது. வாசுதேவன் குணத்தில் வசியை போன்றவனே. அமைதியானவன் அன்பானவனும் கூட. வனியின் தந்தைக்கும் கூட தொழில் முறையில் வாசுவை நன்கு தெரியுமென்பதால் இருவரின் காதலுக்கும் பச்சைக்கொடி காட்டினார்.

ஆனால் அந்த காதலுக்கும் ஆயுசு கம்மி என்பது போல கேன்சரில் சிகிச்சை பலனின்றி வாசு இறந்து போனான். இறப்பும் இழப்பும் அவளுக்கு புதியது இல்லையே. உள்ளுக்குள்ளே உடைந்து ஒரு மாறி இறுக்கிப் போனாள். அப்பொழுதும் கூட வசியை ஆறுதலுக்கு அவள் தேடவில்லை.

இரவில் கனவில் இம்சிக்கும் வசியின் உருவம் அவளை வாட்டி வதைக்கவும் தவறவில்லை.
இதை வசியிடம் பகிர முடியாமல் அனைத்தையும் அவள் டைரியில் எழுதி வைத்தே வலியை குறைக்க முயன்றாள்.
அந்த நல்லவனை தண்டிப்பதாய் நினைத்து தனக்கு அல்லவா அவள் தண்டனை வழங்கி விட்டாள்? மீண்டும் ஒரு காதலும் அதனால் என்றுமே தீராத வலியை அல்லவா வனி வாங்கிக் கொண்டாள்.

இதற்கிடையில் வசியின் தாயும் கார் விபத்தில் இறந்து விட்டார். அது வரை சென்னையில் இருந்த வசி, தாயின் நினைவு வாட்ட,
மன அமைதி தேடி அதை தொலைத்த இடமான ஊட்டிக்கே வந்து சேர்ந்தான். அவர்களின் பூர்வீக தேயிலை எஸ்ட்டேட் நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். இருவரும் தமக்கான இழப்பில் மருகி தவிக்கவே, வசியின் திருமண பேச்சும் எழுந்தது.
ஆரம்பத்தில் முடியாது என தவிர்த்தவனை பரமன்தான் கண்ணம்மாவின் இறுதியாசை அது இதுவென்று அவனை ஒருவாறு சம்மதிக்க வைத்திருந்தார்.

அது வரை எந்த விஷேசங்களிலும் கலந்து கொள்ளாத வனியை நேரில் சென்று அழைத்ததே வசிதான்.
அவளை விடவும் அவன் அழுத்தக்காரனாயிற்றே. சிறு சலனம் கூட அவன் கண்ணில் எட்டிப் பார்க்கவில்லை.
18 வயது குமரியாய் அவளை பார்த்ததற்கும் இப்பொழுதுக்குமே நிறைய மாறியிருந்தாள் வனி. அதே நீண்ட கூந்தல், ஆயிரம் கதை பேசும் அவளுடைய பெரிய விழிகளும், குலுங்கி சிரித்தால் வலது கன்னத்தில் விழும் குழியும், செதுக்கி வைத்த சிற்பம் போலவே வனமோகினி அப்படியே இருந்தாள்.

அவனும் தான் 30 வயது ஆண் மகனாய் வளர்ந்து விட்டிருந்தான். அலை அலையாய் காற்றில் புரளும் முடியும், இரண்டு நாள் ஷேவ் பண்ணாத முகமும், இறுகிய உடலும், நேர் கொண்ட பார்வையுமாய் நிறைய மாறியிருந்தான். எவ்வளவு முயன்றும் வனியால் அவன் வலது புருவத்தின் அருகே இருந்த தழும்பை பார்க்காமல் இருக்க முடியவில்லை. தப்பாமல் அந்த நினைவுகூட அப்பொழுது அவளுக்கு வந்தது.

"டேய் வசி வசி, என் கண்ணு இல்லை, வைரம் இல்லை, ஒரே ஒரு வாட்டிடா, கை வேற பரபரனு இருக்கு, கண்ட்ரோல் பண்ண முடியல. ப்ளீஸ்டா , இந்த ஒரு வாட்டி மட்டும் குடுடா, இதுக்கு அப்புறம் இப்படி கேக்கவே மட்டேன் " வனி தான் வசியிடம் கொஞ்சி இல்லை இல்லை கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாள்.

இதை ஒட்டு மொத்த கிளாஸே வேடிக்கைப் பார்க்க, இந்த பைங்கிளி முத்தம் ஒன்றையும் கேட்க வில்லை.
வனமோகினிக்கு ஒரு பழக்கம் இருந்து வந்தது. யார் முகத்திலாவது பருக்களை கண்டு விட்டால், அதை உடைக்காமல் ஓய மாட்டாள்.
சலம் வரை எல்லாவற்றையும் பிதுக்கி எடுத்து விட்டால்தான் அவள் கட்டை வேகும். அப்படி ஒரு பிறப்பு.

பருவத்தில் வசி முகத்தில் வரும் பருக்களை துவம்சம் செய்வதே நம்ம அக்காதான் . புருவத்தின் அருகில் குண்டு மணி அளவில் இருந்த அந்த பருவை உடைக்காமல் அவளால் எப்படி அமைதி காக்க முடியும்.? அவளின் கெஞ்சலில் மனம் இறங்கி முகம் கொடுத்தவன், அதன் வலியை கூட தாங்கிக் கொண்டான். அதனால் விழுந்த தழும்பு இன்னமும் அந்த காட்சியை மறக்கவில்லை.

திருமணத்திற்கு அவசியம் வருகிறேன் என்றவளை அடாவடியாக வசி கட்டிக் கொண்டதுதான் நமக்கும் தெரியுமே. இனிமேலும் மலர்ந்தும் மலராத இவர்கள் காதல் கை கூடுமா? வசீகரன் களவாடிய வனமோகினியின் கனவுகள் நிம்மதியாய் கண் மூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN