நெஞ்சம் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
1000297796.jpg



“சாருகேசன் பங்களா”. இதை பங்களா என்று சொல்வதா? இல்லை.. பெரிய மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் திரைத்துறையினர் படப்பிடிப்புக்கு என்று மார்த்தாண்டம் வந்தால், இம்மாளிகையில் தான் படப்பிடிப்பு நடந்தேறும்.

பல பெரிய நட்சத்திரங்களின் பாதம் பதிந்த இடம். பல ஊர், பல நாட்டு ரசிகர்கள் திரையில் வாய் பிளக்க கண்டு ரசித்த மாளிகை. இம்மாளிகையை வடிவமைத்து கட்டும் போதே, திரைத்துறைக்கு என்ற நோக்கத்தில் கட்டினார் சாருகேசன். அப்படியான இம்மாளிகையில் இன்று வாழ்வது அவரின் ஒரே மகனும் அவரின் குடும்பம் மட்டும் தான்.

விடிந்தும் விடியாத அந்த காலைப்பொழுது வேளையில், நுழைவாயிலில் காவலாளி வாயைப் பிளந்த படி இருக்கையில் தூங்கிக் கொண்டிருக்க, தோட்டக்ககரர். துண்டை முண்டாசு கட்டிக் கொண்டு, தன் வேலையை ஆரம்பிக்க ஆயத்தமானார்.

மாளிகையின் உள்ளே எல்லா அறைகளும் இருள் சூழ்ந்திருக்க, மாடியில் உள்ள ஒரு அறையில் மட்டும், விடிவிளக்கின் ஒளியில் அங்கிருந்த பாவை மட்டும், அமைதியில்லாமல் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டிருந்தாள்.

“இந்நேரம் பிளைட் வந்திருக்கும் தான” என்று கேட்டவள்

“இல்ல இல்ல.. மணி இப்போ நாலு தானே ஆகுது. ஐந்து.. ஐந்தரைக்கு தான் பிளைட் லேண்ட் ஆகும். நான் தான் கூகுளில் தேடினேனே,” என்று பதிலையும் சொல்லிக் கொண்டவள், அவளுடைய உயர்தர மெத்தையில் அமர்ந்து கொண்டு, விரலில் உள்ள நகங்களைக் கடிக்க ஆரம்பித்தவள்

“ச்சே... ரொம்ப டென்ஷனா இருக்கு. அவர் கிளம்பினாரா இல்லையா.. பாதுகாப்பா இந்தியா வந்துட்டாரா? இப்போ பிளைட்டிலிருந்து இறங்கி இருப்பார் தான?” இம்முறையும் கேள்விகளைத் தொடுத்தவள், பின் எழுந்து ஜன்னலின் திரைச்சீலைகளை விலக்கி, வான்வெளியை நோக்க, அதுவோ மையிருட்டாய் காட்சி அளித்தது.

“ப்ம்ச்... இந்த ஆதவன் கொஞ்சம் சீக்கிரமா எழுந்தா தான் என்ன, இன்னைக்குன்னு பார்த்து இப்படி தூங்கறான், சோம்பேறி... சோம்பேறி... எனக்கு தான் தூக்கமே இல்ல. இதோ இப்ப வரை புலம்பிகிட்டே இருக்கேன், எல்லாம் அவரால்.. என்னை இப்படி புலம்ப வைப்பதே அவருக்கு வேலை” என்றவள் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விசும்பினாள் மங்கை.

துக்கம் தாங்காமல் ஓடிச் சென்று கட்டிலில் சரிந்தவள், “என்னை தான் அவருக்குப் பிடிக்காதே! என்னை யாருக்கு தான் பிடிக்கும், அவருக்கு மட்டும் பிடிக்க? ஆனா நான் மட்டும் அவருக்காக அவரையே நினைச்சி இங்க இரண்டு வருஷமா அழுதிட்டு இருக்கேன். ஆனா அவருக்கு என் முகம் கூட ஞாபகம் இருக்காது.. மறந்திட்டார்... மறந்தே போய்ட்டார்...” இன்னும் இன்னும் பிதற்றலில் தளிர் மேனி நடுங்க அதில் குலுங்கி குலுங்கி அழுதாள் பாவை.

உண்மையில் இந்த பாவைக்கு அழ மட்டும் தான் தெரியும். அதிலும் இருட்டில், யாரும் காணா முடியாத அந்தகார இருட்டில் அழத்தான் தெரியும். இப்பாவை இவ்வளவு நேரம் நினைத்து, தன்னைத் தானே பித்துக் கொள்ளியாய் திரிய வைத்த அந்த “அவன்” இந்திய மண்ணை மிதித்திருக்க, இதை எதையும் அறியாமல் விசும்பலுடன் தன்னை மீறி உறக்கத்தில் ஆழ்ந்தாள் பாவை.

“ஊப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்ற பெரும் இரைச்சலுடன் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு திருவனந்தபுரத்தின் தரையை முத்தமிட்டது அந்த பன்னாட்டு விமானம். பன்னாட்டு விமானம் என்பதால் பலதரப்பட்ட தலைகள் அதிலிருந்து வெளியேற, அவர்களில் தானும் ஒருவனாய் கம்பீரத்துடன், ஸ்டைலாக தான் அணிந்திருக்கும் கோட்டின் பட்டனைப் பூட்டியபடி வெளி வந்தான் விதுனதிபாகரன்.

குடும்பத்தார், மற்றும் தொழில்துறை நண்பர்களுக்கு இவன் திபாகர். ஆனால் இவன் மனைவிக்கு? எல்லா சம்பிரதாயங்களும் முடித்து வெளியே வர.. கைக்கடிகாரமோ மணி ஆறு என்று காட்டியது. இவனைக் கண்டதும்,

“வெல்கம் திபா!” என்ற படி பூங்கொத்து ஒன்றை நீட்டினான் அவனின் நண்பனும் தொழிலின் பங்குதாரருமான கார்த்திக்.

“ஹாய் டா!” என்றபடி நண்பனை அணைத்து விடுவித்தவன் பின் அதே உற்சாகத்துடன் காரில் ஏறி, “காரை பாக்டரிக்கு விடு டா” என்று மொழிய

நண்பனின் குணம் தெரிந்திருந்தும், “என் கிட்ட நீ அடி வாங்கப் போற, நீ வெளிநாடு போய் ஒரு வருஷமாச்சு, வீட்டில் இருக்கிறவங்களுக்கு உன்னைப் பார்க்க ஆசை இருக்காதா, என்னமோ பாக்டரிக்கு போக சொல்ற, வீட்டுக்குப் போகவா?” கார்த்திக் கேட்க

விதுனதிபாகரனோ, “நான் சொன்னதைச் செய் டா” என்று உத்தரவியிட்டவன் அடுத்து தன் கைப்பேசியை எடுத்து அதிலுள்ள வால்பேப்பர் புகைப்படத்தில் தானும் தன் மனைவியும் மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் நிற்பதைப் இளநகை புரிய கண்டு ரசித்தவனோ, உதட்டைச் சிறியதாய் அசைத்து,

“மை ஸ்வீட் ஹார்ட்... இதோ வந்துகிட்டே இருக்கேன் ரிது டார்லிங்” என்றான் காதலுடன்.

‘My sweet heart... இப்படி தான் மனைவியின் எண்ணைத் தன் கைப்பேசியில் பதித்து வைத்திருப்பான். ஆனால் மனைவியைக் கொஞ்சுவது என்னமோ ரிது டார்லிங். திருமணம் முடிந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை தன்னவளுக்கு அதாவது அவனுடைய ரிது டார்லிங்கு அழைத்திருக்கிறாய் என்று யாராவது கேட்டால், ‘இல்லை’ என்பதை கேட்பவரின் கண் பார்த்து தயங்காமல் ஒப்புக் கொள்பவன். ஏனென்றால் அது தான் உண்மையும் கூட. எதிலும் உண்மை விளிம்பி இவன். இது தான் நம்ம விதுனதிபாகரன்.

‘கடலரசி ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பாக்டரி’ என்ற பெயர் பலகையைப் பார்த்ததும், இவனுள் மகிழ்ச்சி குமிழிட, கர்வம் தலை தூக்கியது. வாயிலைத் தாண்டி தொழிற்சாலையின் உள்ளே விரைந்து தன்னுடைய சீட்டில் சென்று அமர்ந்தவனுக்கு, தன் தாயின் கருவறைக்குள்ளே வந்து சேர்ந்த சந்தோஷம். ஏதோ இவனின் மூச்சுக் காற்று இங்கு தான் இருப்பது போல் ஆழ்ந்து சுவாசித்து அந்த அறையின் காற்றைத் தன் நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டான் நம் நாயகன்.

சிறு வயதிலிருந்து இவனுடைய லட்சியம், ஏன்… சுவாசமே இப்படி ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான். அதிலும் திருமணத்திற்குப் பிறகு இவனுள் ஒரு வெறியே இருந்தது என்று கூட சொல்லலாம். அதனால் தான் தன் தாய் தங்கைகள் மேல் பாசம் இருந்தாலும், முதலில் தொழிற்சாலையைக் காண இங்கு வந்து விட்டான்.

அந்நேரம் இவனின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வர, அது சிறிய தங்கை தவமதியிடமிருந்து வந்துள்ளது என்பதை அறிந்ததும் மலர்ந்த புன்னகையுடன் மடிக்கணிணியை உயிர்ப்பித்தவன், வீடியோ அழைப்பில் வீட்டில் உள்ளவர்களிடம் பேச, தாய் முதல் மூன்று தங்கைகள் வரை அனைவருக்கும் இவனைக் கண்டு பேசியதில் சந்தோஷம். நேற்று தான் ஜெர்மனியிலிருந்து விமானத்தில் ஏறுவதற்கு முன் வீடியோ அழைப்பில் அனைவரிடமும் பேசியிருந்தான். ‘ஒரு நாள் இடைவேளைக்குள் இவ்வளவு சந்தோஷமா இவர்களுக்கு!’ என்றிருந்தது விதுனதிபாகரனுக்கு.

‘இவர்களே இப்படி என்றால் எதுவும் சொல்லாமல் திடீரென்று தன்னவள் முன் தான் சென்று நின்றால் அவளின் சந்தோஷம் எப்படி இருக்கும்? வார்த்தை வராமல்... நேசத்தோடு பார்த்து... உதடு துடிக்க காதலோடு.. தன்னவள் கைகள் என்னை ஆரத்தழுவிக் கொள்ளாதா…’ அதைக் காண ஆசைப்பட்டது இவன் மனது.

‘இந்தியா வந்துட்டேன் டார்லிங். உன் முன்னாடி சீக்கிரமே வந்து நிப்பேன். நீ, நான், என் அம்மா, தங்கைகள்னு நாம் எல்லாரும் ஒரே வீட்டில் சந்தோஷமா இருக்கப் போறோம்’ என்று காதலோடு தன்னவளின் நினைவில் திளைத்துக் கொண்டிருந்தவனின் முன்பு ஒரு கவரை வைத்தான் கார்த்திக்.

தற்போது அது என்ன ஏது என்று ஆராய்ந்து அதில் உள்ளதை அறிந்து கொள்ள நேரம் இல்லாததால், கவரை மடித்து கோட் பாக்கெட்டில் திணித்த படி, தொழிற்சாலையைப் பார்வையிட சென்றவன்

பின் வீடு வர, வாசலில் இவனை வரவேற்க இரு தங்கைகளும் சேர்ந்து சிரத்தையாய், சாலையை அடைத்து வரைந்த வண்ண கோலம் விதுனதிபாகரனை வரவேற்றது. அதனைக் கண்டு புன்னகைத்தவன் தங்கள் வீட்டை நெருங்க, வாசலிலே அண்ணன் கரத்தை ஓடி வந்து பற்றிக் கொண்டார்கள் குலமதியும், தவமதியும்.

“எப்படி ணா இருக்க” இருவரும் ஒருசேர கேட்க

மகனைக் காண, “ராசா, என் ஐயா, என் சாமி!” என்ற அழைப்புடன் விரைந்து வந்து மகனைக் கட்டிக் கொண்டார் தாய் தமிழரசி.

“ம்மா...” இவன் குரலும் பிரிவின் துயரத்தில் ஒலித்தது.

“எப்படி ராசா இருக்க? என்ன ப்பா இப்படி துரும்பா இளைச்சிருக்க!” தாய்க்கே உரிய கேள்வியில் இவன் புன்னகைக்க

இந்த பாசக்காட்சிகளை அங்கிருந்த மற்ற குடித்தனக்காரர்களும் கண்டு கொண்டு தான் இருந்தார்கள். சிலர் சந்தோஷமாக, சிலர் பொறாமையாக.

“என்ன தமிழ், சீமைக்குப் போன உன் பையன் வந்துட்டான் போல”

“வந்த பிள்ளையை என்ன இப்படி வெளியவே நிக்க வச்சிருக்க, உள்ளே அழைச்சிட்டுப் போ”

“நீ இப்படி வர்றதப் பார்க்க உன் அப்பனுக்கு கொடுத்து வைக்கல. மூணு பொட்ட பிள்ளைகளையும், உன் தாயையும் உன் தலையில் கட்டிட்டு, அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான், ஹும்... விதி யாரை விட்டது”

“அட, திபாகரனுக்கு என்ன ப்பா, கோடீஸ்வரன் வீட்டு மருமகன்.. பணத்திற்கா பஞ்சம்? எல்லாம் சமாளிப்பான்”

இவ்வளவு நேரம் அங்கிருந்தவர்களின் பேச்சை இன்முகமாய் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியாய் பேசியவரின் பேச்சைக் கேட்டு உடல் இறுகியது. அதற்குள் மூத்த தங்கை சித்ரா, ஆரத்தி தட்டுடன் வெளியே வந்து அண்ணனுக்கு ஆரத்தி சுற்ற பிறகே குடும்பமாக தங்களது வீட்டினுள் நுழைந்தார்கள்.

“திபாகரா, போய் குளித்துட்டு வாயா. காலை பலகாரத்துக்கு... உனக்கு பிடித்தது எல்லாம் செய்திருக்கேன் வந்து சாப்பிடு, ஒரு வருஷம் ஆச்சு என் பிள்ளைக்கு நான் பரிமாறி,” தாய் சொல்லவும்

பின்புறமிருந்த குளியல் அறைக்குள் புகுந்தான் விதுனதிபாகரன். இது பல குடும்பங்கள் குடியிருக்கும் காம்பவுண்டு வீடு. ஆனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் தனிமைக்கு ஏற்ப குளியலறை, கழிவறை எல்லாம் பின்புறம் வீட்டுடனே அமைந்திருந்தது.

இவன் குளியல் முடித்து வர, சமையலறையில் உள்ள ஒரு ஷெல்பில் சில சாமி படங்கள் இருக்க, அதன் முன் ஒரு தட்டில் சில பூக்கள் வீற்றிருந்தது. இது விதுனதிபாகரன், சிறுவயது முதலே பழகிய பழக்கம். கடவுளே சகலமும் என்பது போல் தீவிர பக்தி கொள்ளாமல் அதற்காக நாத்திகவாதியாகவும் அல்லாமல் தங்களை ஆட்டுவிக்க ஒரு சக்தி உண்டு என்று நம்புகிறவன்.

அதன் விளைவே தினமும் தெய்வப்படங்களுக்கு பூ இட்டு அதன் முன் கரம் கோர்த்து ஐந்து நிமிடம் கண் மூடி நின்று விடுவான். அந்த வழமை போல... இன்று பூச்சூடி இமைகளை மூட எண்ணியவனின் பார்வையில் பட்டது, சற்று தள்ளியிருந்த தந்தையின் புகைப்படம். அவருக்கும் சந்தன பொட்டிட்டு பூச்சூடி தாய் ஊது பத்தி ஏற்றியிருக்க, தந்தை கடலழகனைப் புகைப்படமாய் கண்டவனுக்கு மனதிற்குள் பிசைந்தது.


‘நீங்க மட்டும் கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாம் ப்பா. உங்க அவசரத்தால் என்ன கண்டீங்க? இப்போ நாங்க எல்லாரும் அனாதையா இல்ல இருக்கோம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனின் விழிகளிலோ நீர் படர்ந்தது. மகனின் மனநிலை புரியவும் தமிழரசி மகனின் தோளை ஆதரவாய் தொட

“ம்மா” என்ற அழைப்புடன் தாயின் கையை இறுக்க பற்றிக் கொண்டான் விதுனதிபாகரன்.

காலை உணவின் போது கார்த்திக்கும் வந்திருக்க
“வாப்பா, நீயும் சாப்பிடு” தமிழரசி அழைக்க

இங்கே சாப்பிடறது எனக்கு என்ன புதுசா, என்ற ரீதியில் சட்டென தரையில் சம்மணமிட்டு அமர்ந்து விட்டான் கார்த்திக்.

இந்த வீட்டில் உணவு மேஜை எல்லாம் கிடையாது. யாராவது பெரிய மனிதர்கள் வீடு தேடி வந்தால், எங்கோ மூலையில் தூங்கும் நாலு நாற்காலிகளைப் பிரித்து கூடத்தில் போடுவார்கள், அவ்வளவு தான் இவ்வீட்டின் வசதி.

உணவை முடித்ததும் “கார்த்திக், இன்னைக்கு ஒரு நாள் அம்மா தங்கைங்க கூட இருந்துட்டு, நாளைலிருந்து கம்பெனிக்கு வரேன். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துப்ப தானே..” விதுனதிபாகரன் நண்பனிடம் கெஞ்ச

“அடி வாங்கப் போற, எனக்கு தெரியாதா? நீ இரு, நான் பார்த்துப்பேன்” என்றவன் பின் தமிழரசியிடம்


“சரிங்க ம்மா, அப்ப நான் கிளம்பறேன்” என்றவன் பொதுவாக எல்லோரிடமும் விடைபெறுவது போல் தலை அசைப்பை தந்தபடி, அங்கு சமையலறை வாயிலில் நின்று எட்டிப் பார்த்த தன்னவளிடம் மட்டும் தன் விழி அசைவால் “போயிட்டு வரேன்...” என்க..

அதற்கு தானும் விழியாலேயே பதில் தந்தாள் சித்ரா.

திபாகரன் அனைவரிடமும் பேசி தான் வாங்கி வந்த பொருட்களைப் பிரித்து அவரவருக்கு தந்தவன், பின் மதிய உணவையும் உண்டு முடித்து படுக்கைக்கு செல்ல

“சரி இப்போ எல்லோரும் படுக்கப் போங்க, சாயந்திரம் குடும்பமா நாம கோவிலுக்குப் போகணும்” என்று மற்ற பிள்ளைகளைத் தமிழரசி விரட்ட

கூடத்தில் பாய் விரித்து தங்கைகளும், தாயும் படுக்க ஆயத்தமாக, அந்த வீட்டிலிருக்கும் ஒரே படுக்கை அறையில் கட்டிலின் மேல் சயனித்த விதுனதிபாகரனின் செவிகளில் தாய் சொன்ன ‘நாம குடும்பமா கோவில் போறோம்’ என்ற இவ்வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப வந்து மோதியது.

‘அது எப்படி தன்னவள் இல்லாம இவங்க மட்டும் என் குடும்பம் ஆக முடியும்? அவ இப்போ எப்படி இருக்கானு தெரியல. அவ இன்று இல்லாம தான் நாம் கோவிலுக்குப் போகணுமா.. இந்த அம்மா ஏன் இவ்வளவு அவசரப்படறாங்க? இன்னும் ஒரு நாலு நாளில் ரிதுவும் வந்திடுவா. பிறகு கோவிலோ எங்கேயோ போகலாம் இல்ல? ரிது, சீக்கிரமா இங்க வந்துடு டி” என்று தன் மனைவிக்காக தன்னுள்ளே வாதிட்டு அழைப்பும் விடுத்தான் இவன்.


விதுனதிபாகரனின் மனைவி, பெரும் செல்வந்தரும் பரம்பரை பணக்காரருமான தொழிலதிபர் மகிழ்வரதனின் ஒரே மகள். அதன் பொருட்டு மனைவியின் வசதிக்கு தன் வீடு வசதிப்பட்டு வராது என்பதால் ஜெர்மனியில் இருக்கும் போதே நண்பனான கார்த்திக்கிடம் சொல்லி ஓரளவு வசதியான வீடே பார்க்க சொல்லியிருக்க, இவன் தேடிய படி வீடும் கிடைத்து விட தற்போது அந்த வீட்டு உரிமையாளரை நேரில் சந்தித்து பேச வேண்டும். அதையும் நாளைக்கு செய்து விடுவான் விதுனதிபாகரன்.

அதன் பின் வல்லவன் சாரிடம் பேசி தன் மனைவியை அழைத்து வர வேண்டும் என்பது தான் இவனின் முதல் திட்டம். வந்த பிறகு.. நினைக்கும் போதே ஆண்மகனின் முகம் காதலைத் தத்தெடுத்தது. ‘ரிது டார்லிங், வா.. வா.. இங்க வந்துடு, அதன் பிறகு உன்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன்’ என்று தன்னுள் சொல்லிக் கொண்டவனின் இதழிலோ ரகசிய புன்னகை ஒன்று குடியேறியது.

அவனைவரும் மாலை கோவில் சென்று திரும்புகையில்.. இரவு உணவை வெளியிலேயே முடித்துக் கொள்ள, இப்போதும் திபாகரனுக்கு மனைவியின் நினைவு தான்.

‘அவளும் கூட இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்!’ என்று நினைத்தவனின் மனமோ ‘இனி ரிது வந்த பிறகு தான் அடுத்து வெளியே குடும்பமாக செல்ற நிகழ்வைப் பற்றி யோசிக்கணும்’ என்று தீர்மானித்தது.

இரவு மூன்று தங்கைகளும் படுக்கையறையைப் பகிர்ந்து கொள்ள, தாய் சமையலறையில் தஞ்சம் புக, தான் மட்டும் கூடத்தில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டான் விதுனதிபாகரன். தந்தை உயிரோடிருந்த வரை அவரோடு தான் கூடத்தைப் பகிர்ந்து கொள்வான்.

கடந்த பதினைத்து வருடங்களாய் இந்த காம்பவுண்டு வீட்டில் குடியிருக்கிறார்கள் இவனின் குடும்பம். எந்த ஆண் துணையும் இல்லாமல், தங்கைகளையும் தாயையும் தனியே விட்டு இவன் வெளிநாடு செல்ல முடிவு எடுத்ததே இந்த காம்பவுண்டு வீட்டுவாசிகளை நம்பியும், முன்பே தாங்கள் பழகிய இடம் என்பதால் தான் மனதில் சஞ்சலம் அற்று கிளம்பிச் சென்றான்.

படுக்கையில் சரிந்தவனுக்கு மனைவியே அவன் மனதை ஆக்ரமிக்கவும், தன் கைப்பேசியை எடுத்து தன்னவளின் புகைப்படத்தைக் கண்டவன்,


“ஓய் ரிது.. என்ன செய்ற? தூங்கிட்டியா.. எனக்கு தான் டி தூக்கமே வரல. இங்கே வந்ததிலிருந்து உன் ஞாபகமாவே இருக்கு. போனில் பேசுவதை விட நேரில் உன்னைப் பார்த்து இறுக்க கட்டிக்கிட்டு பேசணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கே உன் அப்பா வீட்டுக்கு வரேன் டி” என்று காதலோடு சொன்னவனின் இதழோ... தன்னவளின் பட்டு கன்னத்தில் பதிந்து விலகியது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN