நெஞ்சம் 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூத்த மகனாய் தன் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க நான் கடைமை பட்டுள்ளேன் என்று பேசப் போன விதுனதிபாகரனுக்குக் கிடைத்தது அவன் குடும்பத்தில் ஒருத்தியாய்.. அவனின் மனைவியாய் தன்யரித்விகா அங்கம் வகிக்க வேண்டும் என்பது தான். ஆமாம்... பிறகு முடிவைச் சொல்கிறேன் என்று சொன்ன மகிழ்வரதனின் முடிவு இதுவாகத் தான் இருந்தது.




இத்திருமணம் நடந்தால் திருடிய பணத்தைத் தர வேண்டாம் என்பது தான் மகிழ்வரதன் பேச்சின் கூடுதல் அம்சம். இதைக் கடலழகன் மனைவியிடம் வந்து சொல்ல... கசக்குமா தமிழரசிக்கு... கோடி கோடியாய் பணத்தில் புரளும் முதலாளி குடும்பம் எங்கே... மாத நெருக்கத்தில் சில செலவுகளைக் குறைத்துக் கொண்டு கைக்கும் வாய்க்குமாய் ஜீவனம் நடத்தும் இவர்கள் எங்கே... எத்தனை ஏணிகளை இவர்கள் படிகளாக வைத்து ஏறினாலும் இப்படி ஒரு குடும்பம் தங்களுக்குச் சம்பந்தமாய் வாய்க்காதே... இதை உணர்ந்ததால்... இத்திருமணத்திற்கு மறுத்த மகனிடம் மடிப்பிச்சை வேண்டினார் அவர்.




தந்தை கையெடுத்துக் கும்பிட... தாய் மடிப்பிச்சை வேண்ட.... விதுனதிபாகரனுக்குத் தர்மசங்கடமான நிலை... “அம்மாப்பா.. புரிஞ்சிக்கங்க... நான் அந்த பொண்ண பார்த்தது கூட இல்ல... நான் அந்த பெண்ண மறுக்கல... எனக்கு இப்ப திருமணம் வேண்டாம்னு தான் சொல்றேன்... கனவில் கூட நான் என் கல்யாணத்தைப் பற்றி யோசித்தது இல்ல. நீங்க பார்க்கிற மத்த மிடில் கிளாஸ் பையன் மாதிரி நான் இல்ல மா... எனக்கு சில லட்சியங்கள் இருக்கு. அதெல்லாம் சாதாரணமானது இல்ல... அதை அடைய எனக்குக் கல்யாணம் என்கிற கமிட்மெண்ட் ஒரு தடைக் கல். அதனால இந்த பேச்சே வேணாம்… என் லட்சியத்தை நோக்கி என்னைப் போக விடுங்க.. தயவுசெய்து நீங்களே என் லட்சியத்துக்குத் தடையா நிக்காதிங்க. நான் மறுபடியும் முதலாளி கிட்ட பேசறேன்... கண்டிப்பா வேற வழி ஏதாவது இருக்கும்.. கொஞ்சம் என்னைப் பற்றி நினைத்து எனக்கு உறுதுணையா இருக்கப் பாருங்க” இவன் உறுதியாய் மறுத்து விட...




“உன்னைப் பற்றி யோசிக்காம இருப்போமா சாமி.. ஆனா உன் அப்பா நிலையை யோசிச்சு பாரு டா.. உன்னை விட அவர் தான் நெருப்பு மேல நிற்கறார்.. அந்த கடவுளா பார்த்து ஒரு வழி சொல்லியிருக்க.. அந்த வழியை நீயே அடைக்கலாமா சொல்லு.. நீ நினைக்கிற மாதிரி உன் லட்சியத்துக்குத் தடையா இந்த கல்யாணம் கண்டிப்பா இருக்காது.. அதை நீயே பிறகு புரிந்துக்குவ.. தயவுசெய்து கல்யாணத்திற்கு ஒத்துக்கோ டா” என்று தமிழரசி மீண்டும் வேண்ட.. உறுதியாக மறுத்துவிட்டான் இவன்.




மகிழ்வரதனை நேரில் சந்தித்து மறுபடியும் இவன் பேச முயல... அதற்கு வாய்ப்பு தரவில்லை அவர். இப்படியே இரண்டு தினங்கள் செல்ல… இன்று மகனைக் கண்டதும் பிடித்துக் கொண்டார் தமிழரசி. “நேத்து அப்பா மருந்த குடிக்கப் போய்ட்டார் சாமி… கடைசி நிமிஷம் நான் பார்த்து தடுத்துட்டேன்… இன்னும் எத்தனை நாளைக்கு அவர நான் பிடிச்சி வைக்க முடியும்… இந்த அவமானத்துக்கு சாவு மேலுன்னு சொல்றார்… பிறகு நான் மட்டும் இருப்பனா… நாங்க போய்ட்டா உன் தங்கைகள விட்டுடாத சாமி… உனக்கு சிரம்மம்னா சொல்லு அதுங்களையும் நான் கூட்டிட்டுப் போய்..” என்ற குமுறலுடன் மேற்கொண்டு பேச எத்தனித்த தாயை





“ம்மா…” என்ற அதட்டலுடன் தடுத்து நிறுத்தியவன்… கசங்கிய முகமும் கலங்கிய கண்களுடன், “என்னம்மா பேச்சி இது… என்னை நீங்க புரிஞ்சிக்கவே இல்லையா” ஆதங்கத்துடன் இவன் கேட்க





“எனக்கு வேற வழி தெரியல சாமி…”




“என்னம்மா திரும்பத் திரும்ப இதையே சொல்றீங்க.. அப்பாவை காப்பாற்றுவது என் கடமை தான்.. அதே சம..” மேற்கொண்டு அவனைப் பேச விடாமல் இடையிட்டு எந்தத் தாயும் செய்யாத செயலை செய்தார் தமிழரசி...




“உன் காலுல வேணா விழறேன் திபாகரா... நம்ம குடும்ப மானத்தைக் காப்பாத்து... உன் அப்பாவ சாக விட்டுடாத” என்று சொன்னவர் சொன்னது போல் சாஷ்டாங்கமாய் மகன் எதிரில் விழுந்து விட... தீ சுட்டார் போல் விலகிய மகனோ துடிதுடித்துப் போனான்...




“ம்மா எழுந்திருங்க… என்ன காரியம் செய்றீங்க… நீங்க போய் என் கா…. ம்மா நான் படிச்சிட்டு இருக்கேன்… வேலை வெட்டி இல்லாதவன்…. அதுவும் இல்லாம எனக்குப் பிறகு மூன்று தங்கைகள் இருக்க… நான் எப்படி ம்மா மணையில் அமர….” இவன் இன்னும் தயங்க



“அப்போ நானும் உன் அப்பாவும் பிணவரை போய்டுவோம் பரவாயில்லை யா” தமிழரசி தான் சொன்னதைச் செய்வேன் என்ற குரலில் அறிவிக்க… அதிர்ந்தவன் அந்த நொடியே தன் சம்மதத்தைச் சொல்லி விட... அதன் பிறகு அவன் வாழ்வில் நடந்தது எல்லாம் அவன் அறியாதவைகள் தான்.




திருமணதிற்கு இரண்டு தினங்களுக்கு முன் தமிழரசி மகனிடம் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாய் தெரிய... “ம்மா... இந்தத் திருமணம் நடப்பதே அப்பாவையும் உங்களையும் முன்னிறுத்தி தான்... சோ எனக்காக நீங்க எதுவும் பார்க்க வேணாம்.... நீங்க எது செய்றதா இருந்தாலும் தயங்காமல் செய்ங்க... என் கிட்ட அனுமதி கேட்கவோ… சொல்லிட்டு இருக்கவோ வேணாம். ஏன்... பெண்ணைக் கூட நான் பார்க்கத் தயாரா இல்ல. வந்து தாலியை கட்டுடானு சொல்லுங்க... அதன்படியே வந்து கட்டுறேன்” இவன் முடித்துவிட... பூரித்துத் தான் போனார் தமிழரசி. தாய்க்கே உள்ள என் மகன் என்ற கர்வம் அப்போது அவருள் படரத் தான் செய்தது… அதன் பின் திருமண வேலைகள் வேகமாய் நடந்தேறியது.




திருமண நாளும் வர... எளிமையாய் கோவிலில்... இவன் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொன்னதைச் செய்து கொண்டிருக்க... அந்நேரம் பெண்ணை அழைத்து வரச் சொல்லவும்… இவன் நிமிர்ந்து மணப்பெண் வரும் திசையைக் காண... மருண்ட விழிகளோடு... குழந்தை முகம் என... அந்த முகத்தில் அப்பட்டமாய்ச் சோர்வு தெரிய... பார்பி பொம்மையைப் போல்... அன்ன நடையிட்டு வந்து கொண்டிருந்தாள் பத்தொன்பதே வயது பாவை... இல்லை இல்லை குழந்தை மனம் கொண்ட தன்யரித்விகா.




தாய்... தந்தையரை முன்னிறுத்தி தான் இத்திருமணம் என்றாலும்... ஏனோ தன்யரித்விகாவைக் கண்டதும் அதிர்ந்து தான் போனான் விதுனதிபாகரன். அவன் நினைத்தது என்னமோ ஊனமாய்… முகத்தில் ஏதோ தழும்பு… ஏன்... மறுமணம் என்ற நிலையில் கூட உள்ள பெண்ணைக் கற்பனை செய்திருக்க... அதில் நிச்சயமாகவும் இருந்தான்.





பின்ன வேறு எதற்கு இந்தக் கோடீஸ்வர முதலாளி தன்னை இவருக்கு மருமகனாய் வர இக்கட்டு வைத்தாராம்? இது தான் அவனின் அப்போதைய நிலைப்பாடு… ஆனால் இதில் எதுவும் இல்லாமல்... தன் கற்பனையைப் பொய்யாக்குவது போல்... தங்கச் சிலையென... குழந்தை முகம் கொண்டவள் வந்து அமர்ந்தால் இவனுக்கு எப்படி இருக்கும்...





‘ஐயோ! பார்க்க ரொம்பக் குழந்தையா தெரியறா... ஒருவேளை குழந்தை திருமணமா... இந்தக் குழந்தையா என் மனைவி? மணவறை வரை வந்த பிறகு இனி எப்படித் தடுக்க?’ என்று திபாகரன் எண்ணும்போதே... அவனின் பக்கத்தில் வந்தமர்ந்தாள் தன்யா. பக்கத்தில் அமர்ந்தாலும்.. ஏனோ தன் மருண்ட விழியால்... ஒரு முறை கூட நிமிர்ந்து திபாகரனைக் காணவில்லை அவள்.




ஓரவிழிப் பார்வையால் கூடத் தன்னைக் காணாதவளைக் கண் சிமிட்டாமல்... கொஞ்சமும் லஜ்ஜையின்றி... அமர்ந்திருந்தவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் திபாகர். ஐயர் சொல்வதைக் கூடச் செய்யத் தடுமாறி தன்யா விழிக்க, “அதை இங்க வை கண்ணு... இதை இப்படி செய்... தம்பி கையில் கொடு கண்ணு...” என்று பக்கத்தில் அமர்ந்து... பாவைக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருந்த... வயது முதிர்ந்த பெண்மணியின் சொல்லைக் கேட்டு நடந்தாள் தன்யா. திபாகரனுக்கும் பார்த்தவுடன் தெரிந்து விட்டது... அவர் இவளின் பாட்டி என்று.




மாங்கல்ய தாரணம் செய்யும் போது... சித்ரா கையில் விளக்குடன் ஒதுங்கி விட... நாத்தனார் முடிச்சை யார் போடுவது என்ற உரிமைப் போராட்டத்தில் சத்தமில்லாமல் குலமதியும், தவமதியும் மோதிக் கொள்ள... இருவரையும் தன் கண்டன பார்வையால் அடக்கியவனோ... ‘நானே மூன்று முடிச்சையும் போட்டுக்குறேன்...’ என்ற நிலையில் தன்னவளுக்கு அதையே செய்ய... திபாகரனின் செயலில் கண்ணீர் சுரந்தது... அந்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு.



“கருவேலங்காட்டு கருப்பா... என் தேர்வு சரின்னு சொல்லிட்டப்பா...” என்று அவர் வாய்விட்டே முணுமுணுக்க... அவர் முகத்தில் எதைக் கண்டானோ... தன்னையும் மீறி விழி மூடித் திறந்து பெரியவருக்கு ஆறுதல் அளிக்கத் தவறவில்லை இவன்.. அதில் நெஞ்சம் குளிர்ந்து தான் போனது தன்யாவின் அப்பத்தாவுக்கு.



“கண்ணு... எழுந்து மாப்பிள்ளை கையைப் பிடிச்சிட்டு இந்த இடத்தைச் சுத்தி வா...” என்று பேத்தியிடம் அந்தப் பெரியவர் சொல்ல




அதைச் செய்யப் போனவளோ.... எழுந்து நின்றதும் தடுமாற... அப்போது தான் அவளுக்கே தெரிந்தது... தன் இடுப்பிலிருந்த புடவை கொசுவம் சரிந்து விட்டது என்று. சிறு பெண் என்பதாலும் அவ்வளவாகப் புடவை கட்டிப் பழகாததால் நேர்ந்த விளைவு இது. நடக்கும்போதும்... நிற்கும்போதும் சமாளித்தவளால் எழும்போது முடியாமல் போக... பெண்ணவளுக்கு விழிகள் கலங்கியது. அவளின் நிலையை நொடியில் யூகித்த திபாகரன்... சற்றும் யோசிக்காமல் அவளைத் தன் கரங்களால் தாங்கி நிறுத்தி... தன் தோளில் வழிந்த அங்கவஸ்திரத்தை எடுத்து... தன்யாவின் இடுப்பில் முடிய எத்தனிக்க...



“தம்பி... தம்பி... அது உங்க அங்கவஸ்திரத்தையும்... கண்ணுவோட புடவையையும் சேர்த்து முடி போட்ட.. பிறகு தான் நீங்க இருவரும் அக்னிய வலம் வரணும்...” அதனால் அதை எடுக்காதீங்க... என்ற நிலைப்பாட்டில் பாட்டி அவசரமாய் மொழிய...



‘இவ இப்ப இருக்கும் நிலைக்கு இது தேவையா?’ என்ற எண்ணத்தில் சற்றே இவனுள் கடுமை பரவியது. இருந்தாலும் பெரியவரின் வார்த்தைக்காக இவன் தங்கை குலமதிக்கு விழி அசைவால் செய்தி சொல்ல... அவளோ சிட்டாய் பறந்து சென்று ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்து வந்து தர... வாங்கிக் கடமை சிரத்தையாய் அவளின் புடவையைச் சீர் செய்து அதை மனைவியின் இடுப்பில் இவன் கட்டி விட... ஆண்மகனின் செயலைத் தான் அங்கிருந்தவர்கள் அனைவருமே வாய் மேல் விரல் வைத்து பார்த்திருந்தார்கள்.



வழக்கமாய் பெண்ணின் சுண்டு விரலையும், ஆணின் சுண்டு விரலையும் கோர்த்து தான் அக்னியை வலம் வரச் சொல்லுவார்கள். இவர்களுக்கும் அதையே சொல்ல... ஆனால் திபாகரன் அதைச் செய்யாமல்... தன்னவளின் வலது கை மணிக்கட்டை மென்மையாய் பற்றி முன்னே அழைத்துச் செல்ல.... இதைக் கண்ட அவனின் தாயே சற்று அசந்து தான் போனார் ‘என்ன இவன் இப்பவே வந்தவளை இப்படித் தாங்குறான்!...’ என்ற எண்ணத்தில்.



நான்கு அடி தான் திபாகரன் எடுத்து வைத்திருப்பான்... அதற்குள் தன்யா துவள ஆரம்பிக்க... அதைத் தன் பிடியில் கண்டு கொண்டவனோ, “ஹேய்...” என்ற கூச்சலுடன் மின்னல் வேகத்தில் இவன் மனைவியைத் தன் நெஞ்சில் தாங்கிக் கொள்ளவும்... அந்த இடமே கலவரமானது.



“யாரு ப்பா அங்க.. அதுவே நோயாளி பொண்ணு.. அதுக்குச் சாப்பிட ஏதாவது தந்தீங்களா...”



“உடம்பு சரியில்லாத பொண்ணு இல்ல... அதான் இப்படி மயங்கி விழுந்துடுச்சு....”



“புகை வேற... பாவம் அந்தப் பொண்ணு.. கொஞ்சம் தள்ளி நின்னு... காற்றோட்டமா விடுங்க...”



“கோடி கோடியா பணம் இருக்கு... கடைசியில் மகிழ்வரதன் பொண்ணுக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்க வேணாம்...” இப்படியாக அங்கு பல கலவையான குரல்கள் ஒலிக்க... அப்போது தான் விதுனதிபாகரனுக்கு ஏதோ ஒன்று புரிவது போல் இருந்தது. ஆனால் அவனை மேலே சிந்திக்க விடாமல் டாக்டர் வந்து மணப்பெண்ணைப் பரிசோதிக்க... அதில் தன்யாவின் பெற்றோரும், உற்றாரும் அவளைச் சூழ்ந்து கொள்ள... தாலி கட்டிய மறு வினாடி முதல் தன்னவளிடமிருந்து அந்நியமாகிப் போனான் விதுனதிபாகரன்.




திபாகரனுக்கு... மகிழ்வரதன் நடத்தி வரும் பல தொழில்கள் பற்றித் தெரியும். ஏன் சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு கூட ஓரளவுக்குத் தெரியும். ஆனால் அவரின் குடும்பம் பற்றி திபாகருக்குத் தெரியாது. ஒரே மகள் ஊட்டி கான்வென்டில் படிக்கிறாள்… மற்றபடி அவளுக்கு நோய் என்பதைப் பற்றி எல்லாம் இவனுக்குத் தெரியாது. இந்த திருமணம் முடிவான போது கூட... இவன் எதையும் யாரிடமும் விசாரிக்கவில்லை. அதற்கு முதல் காரணம் இவன் படித்துக் கொண்டிருந்ததால்... கல்லூரியிலும் சரி... நண்பர்களிடமும் சரி... தன்னுடைய திருமணத்தை யாரிடமும் திபாகரன் தெரியப்படுத்தவில்லை.



அடுத்து, இவனுக்குத் தான் தன்னவளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லையே... தந்தை செய்த குற்றத்தால்... தன்யா தான் இவனின் துணையென்று ஆன பிறகு... இவன் எதற்கு யாருக்காக... யாரிடம் விசாரிப்பான்.




அதன் பிறகு தன்யா மூன்று தினங்கள் மருத்துவமனையில் இருக்க... திபாகரனால் தான் தன் மனைவியை நெருங்கி நலம் விசாரிக்க முடியவில்லை. இந்தப் பரிசோதனை... அந்தப் பரிசோதனை என்றார்கள். யாரும் தற்சமயம் தன்யாவைக் காண்பது உசிதமில்லை என்றார்கள். கணவனே என்றாலும்... மனைவியின் மேல்தட்டு வர்க்கத்துக்குள் நுழைய முடியாமல் தவித்தான் ஆண்மகன். இதில், இவனுக்குத் தேர்வு வேறு நெருங்கியது. அவளைப் பார்ப்பானா இல்லை இங்கு மற்றதை யோசிப்பானா



“இதுக்குத் தான் படிக்கும் போது கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்... அவசரகதியில் எல்லாத்தையும் செய்திட்டு... இப்ப... நான் தான் அனுபவிக்கிறேன்...” என்று வாய் விட்டே புலம்பியவனின் மனது... எப்படியாவது இன்று மனைவியைச் சந்தித்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN