நெஞ்சம் 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சசிரேகா இந்த உலகத்தில் ஒரு உறவை வெறுக்கிறார் என்றால்... அது மருமகன் என்ற அடைமொழியில் உள்ள விதுனதிபாகாரனின் உறவைத் தான். இரண்டு முறை அலுவலகத்துக்கும், வீட்டுக்கும் என்று சந்திக்க வந்தவனைப் பார்க்க மறுத்து விட்டார் சசிரேகா.



அதேபோல் இன்றும் இவர் மறுக்க.. ஆனால் மருமகன் பிடிவாதத்தில் நின்று விட… விளைவு இவருள் சீற்றம் எழுந்தது. அதில், சோபியாவை அழைக்க... அவள் வந்ததும் மருமகன் முன்னே அவளை அறைந்தவர் “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா சோபியா… என்ன இது… ஹா.. என் appointment இல்லாதவங்க யாரையும் நான் சந்திக்க மாட்டேன்னு உனக்குத் தெரியும் இல்ல. எத்தனை பேர் என் appointment காகக் காத்திருக்காங்க. ஆனா நீ என் time waste பண்ற.. this is the last warning for you” ஏதோ சோபியா தான் தப்பு செய்தவள் போல் இவர் நடந்து கொள்ள



அதில், சோபியா கன்னத்தை ஒரு கையால் பற்றிய படி... விதுனதிபாகரனை ஒரு பார்வை பார்த்து விட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.



புரிந்தது... அந்த அறையும் பேச்சும் தனக்குத் தான் என்று திபாகரனுக்கு உணர்த்தியது. கிடைத்த அவமானத்தில் உடல் இறுக மனைவிக்காக இவன் பொறுமை காக்க…



“என்ன விஷயம்” எந்த வித முக ஸ்துதியோ… உபசரிப்போ… இல்லாமல் சசிரேகா கேட்க



“அத்த..”



“நான் சசிரேகா... தொழிலதிபர் சசிரேகா.. இந்த உறவுமுறை எல்லாம் வேணாம்.. கால் மீ மேம்” மருமகனின் அத்தை என்ற வார்த்தையைக் கேட்டு சசிரேகா வெடிக்க



விதுனதிபாகரனுள் சர்வமும் நொறுங்கியது. அதெல்லாம் ஒரு நொடி தான்.. அடுத்த நொடி “நான் என் மனைவி தன்யாவை பார்த்து பேச வந்தேன்” இவன் நிமிர்வுடன் பதில் தர



“மனைவியாம்… மனைவி... அதான் கேட்டேனே என்ன விஷயம்..” சசிரேகாவின் குரலில் எள்ளலும் அதிகாரமும் கலந்து ஒலித்தது.



“ஆமாம் அவ என் மனைவி தான்.. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.. நான் அவ கிட்ட பேசனும்” இவனிடம் அதே நிமிர்வு



“பேச எதுவும் இல்ல”



“அதை என் மனைவி சொல்லட்டும்.. கூப்பிடுங்க தன்யாவை” என்றவன் மாமியாரின் அமைதியில் “தன்யா..” என்றழைக்க இவன் குரலோ அந்தக் கூடம் முழுக்க அதிகாரத்தில் ஓங்கி ஒலித்தது.



“யார் வீட்டுக்கு வந்து அதிகாரம் செய்ற? என் மக வர மாட்டா”



“வர மாட்டாளா?..” என்ற பதிலில் நெற்றி சுருங்க “எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சி.. நான் அவள் கணவன்.. அவ என் மனைவி.. அப்ப கணவன் வீட்டுல தான மனைவி இருக்கனும்.. பிறகு எப்படி அவ வர மாட்டேன்னு சொல்லுவா..”



“ஹேய்.. உன் lecture எல்லாம் எனக்கு வேணாம்.. என் மக வர மாட்டா.. நடந்தது கல்யாணமே இல்ல” என்று சசிரேகா மருமகனை ஒருமையில் பேசவும்




ஆத்திரம் எழுந்தது இவனுள்... “உங்கள மாதிரி தரம் இறங்கி பேச எனக்கு ரொம்ப நேரம் ஆகாது…” என்றவன் “நடந்தது திருமணம் தான்.. தன்யா என் வீட்டுக்கு வருவா..” என்றவன் குரலில் அழுத்ததுடன் கூடிய அமைதி



“நடந்த திருமணத்தை நான் உடைச்சிட்டா?...”



முதல் முறையாக மாமியாரின் பேச்சில் அதிர்ந்தவன், “ஏன்?” இவனுக்கு குரலே எழும்பவில்லை



“நீ எல்லாம் லோ கிளாஸ்.. என் எதிர்ல உட்கார கூட உன் குடும்பத்துக்குத் தகுதி இல்ல.. இந்த சசிரேகாவோட கோட்டை என்னன்னு தெரியுமா… என் சாம்ராஜ்ஜியம் எப்படிப் பட்டது தெரியமா.. நான் பரம்பரை பணக்காரி... தொழிலதிபர் சசிரேகா.. ஆனா உன் குடும்பம் அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சை எடுக்கிற குடும்பம்.. அப்ப நீ எல்லாம் எனக்குச் சமமாக முடியுமா?” என்று சசிரேகா மனதில் உள்ள வன்மத்தை வார்த்தையாய் கொட்ட



“ஓ… பணம் தான் வாழ்க்கை.. அப்ப மனிதர்களோ.. அதன் மூலம் வர்ற உறவுகளோ உங்களுக்குத் தேவை இல்ல?”



“வேணாம்… பணமும் அந்தஸ்தும் தான் எனக்கு முக்கியம்..” சசிரேகா ஆணித்தரமாய் பதில் தர



“ஓ!… குட்.. நல்ல கொள்கை.. அப்ப அந்தப் பணத்தையும்.. அந்தஸ்தையும் நான் சம்பாதிச்சிட்டா.. அப்ப எங்க திருமணத்த அங்கீகரிச்சி என் மனைவிய என் வீட்டுக்கு அனுப்பி வைப்பிங்க... அப்படித் தான?” இவனிடம் சாதிப்பேன் என்ற கர்வம் இருந்தது



“நடக்கிறத பேசு.. இந்தத் திருமணத்த ஆரம்பத்துல இருந்தே எதிர்த்தவ நான்.. கடைசிவரை என் முடிவு இது தான்”



“நீங்க எதிர்த்து எனக்கு என்ன.. என் மனைவி சொல்லட்டும்”



“தன்யா சொல்லுவா.. அவளுக்கும் பணம், ஸ்டேட்டஸ்தான் முக்கியம்”



“அதையும் நான் சம்பாதிப்பன்னு சொன்னனே.. மறந்திட்டீங்களா மாமியாரே”



“எப்படி... உன் அப்பன் திருடின மாதிரியா?” என்ற சசிரேகாவின் குரலோ எள்ளி நகைக்கவும்



அவமானத்தில் எழுந்தே விட்டான் திபாகரன்... அவன் உடலோ கோபத்தில் நடுங்கியது.. எப்படிப் பட்ட வார்த்தை இது... எவ்வளவு கேவலமாக என்னை நினைத்து இருக்கிறார்... அதுவே ஆண்மகனின் தன்மானத்தை சீண்டி விட..



கோபத்தில் முகம் சிவக்க “திருடி தான் பணம் சம்பாதிக்கனும்னு எனக்கு அவசியம் இல்ல… சீக்கிரமே நானும் எனக்கான தொழிலை எடுத்து செய்யத் தான் போறேன்.. விரைவில் ஒரு தொழிலதிபரா உங்கள நான் சந்திக்கத் தான் போறேன்..”



“அப்பவும் என் வீட்டுக்குள்ள உன்ன நான் அனுமதிக்க மாட்டேன்... அதிலும் மருமகனா... ம்ஹீம்... என் கனவிலும் அது நடக்காது” என்று அவனின் வார்த்தையில் இடைவெட்டி குத்திட்டியாய் பாய்ந்தது சசிரேகாவின் வார்த்தைகள்




அவ்வார்த்தையில் அவமானம் மட்டும் இல்லை... மருமகன் என்ற அடையாளத்தையே உடைத்தெறியும் பிடிவாதத்தை அறிந்தவன் “இனி என் ஆயுசுக்கும் இந்த வீட்டு படிய நான் மிதிக்க மாட்டேன்” இவன் கட்டளையாக அறிவிக்க



“நல்லது... சீக்கிரமே கோர்ட்ல சந்திப்போம்.. விவாகரத்து முக்கியம்”



“அதுக்கு வாய்ப்பே இல்ல.. இந்தப் பிறவியில உங்க மக தான் என் மனைவி” இவன் ஒருவித நிமிர்வுடன் அதிகார தோரணையில் அறிவிக்க



“ஆனா என் மகளுக்கு நீ கணவன் கிடையாது” சசிரேகாவும் கட்டளையாய் அறிவிக்க




'எவ்வளவு ஆணவம்' என்ற எண்ணத்தில்..
ரவுத்திரத்துடன் டீபாய் மேலிருந்த பூ ஜாடியைத் தட்டிவிட்டவன்... முகம் இறுக “சாகடிச்சிடுவேன்..” என்று சசிரேகாவை இவன் விரல் நீட்டி எச்சரிக்க.. சூழ்நிலை அறியாமல் அடுத்த நொடி சசிரேகாவின் பாதுகாவலர்கள் இவனைச் சூழ்ந்து கொண்டனர்.



அதில் முகத்தில் அலட்சியம் மிளிர கர்வத்துடன் எள்ளலாகச் சிரித்த சசிரேகா “இப்ப நான் தான் உனக்கு உயிர் பிச்சை தந்திருக்கேன்… பிழைச்சி போ.. ஆனா திரும்ப என் குடும்பத்துப் பக்கம் நீ வர கூடாது” என்று எச்சரிக்க




அவமானத்திலும் கோபத்திலும் உடல் தளர... வெளியேறினான் திபாகரன். அவனுள் ‘இவ்வளவு கலவரத்திலும் தன்யா ஏன் அறையை விட்டு வெளிய வரல.. அவளுக்கு நான் வேணாமா… அப்ப அவளுக்கும் பணம் தான் முக்கியமா… பிறகு எதுக்கு எங்களின் திருமணம்.. அவ மனசுல என்ன தான் இருக்கு… அவ அம்மா சொன்ன மாதிரி என்னை விட்டு விலக நினைக்கிறாளா?’ என்று இவனுள் புரியாத பல கேள்விகள். ஆனால் விடை தான் இல்லை. அதில், இந்த நொடி... தான் வந்ததை மறந்து...
மனதில் ஒரு முடிவுடன்
வெளியேறினான் விதுனதிபாகரன்.



வீட்டில் நடந்த பிரச்சினைகள் எதுவும் மகிழ்வரதனுக்குத் தெரியாது. அவர் வெளிநாடு சென்றிருக்க.. தன் விருப்பம் இல்லாமல் கணவரும்.. மாமியாரும் சேர்ந்து நடத்திய இத்திருமணத்தை உடைக்க நேரம் பார்த்துக் காத்திருந்த சசிரேகா இன்று மருமகனிடம் ஆடி தீர்த்து விட்டார். ஆனால் இதில் மகளின் மனதை அறிய முயலவில்லை இவர்… அப்படி அறிந்திருந்தாலும் மகளுக்கு ஆதரவாக சசிரேகா நடக்கமாட்டார் என்பது தான் உண்மை.




திபாகரன் தன் மாமனார் வீட்டில் நடந்த எதையும் தன் தாய் தந்தையிடம் மறைக்கவில்லை. அனைத்தையும் சொல்லியவன் “உங்களால தான் இன்னைக்கு எனக்கு இந்த அவமானம்… படிக்கும் போதே என் வாழ்வு இப்படி ஆகிடுச்சி.. ஆனா ஒன்னு இந்த பிறவியில் தன்யா மட்டும் தான் என் மனைவி” என்று இவன் உறுதியாய் சொல்லிவிட



கலங்கித் தான் போனார் கடலழகன். விளைவு... ஒரு நாள் அவர் தற்கொலை செய்து கொள்ள... ஊரே திரண்டது அதற்கு... அவர் வீட்டில் சொந்த பந்தங்கள் முதல் அலுவலக நண்பர்கள் வரை வந்திருக்க.... சம்மந்தி என்ற முறையில் மகிழ்வரதனும்....சசிரேகாவும் வரவில்லை. அதில் ஊராரும் சொந்தபந்தமும் பேசின பேச்சுகளும்… கேட்ட கேள்விகளும் தான் அதிகம். பின்ன... மருமகளாய் தன்யா இங்கு இருக்க வேண்டுமே... இதில் திபாகரனுக்கும் கோபம் தான். மாமியார் மாமனாரை அவன் எதிர் பார்க்கவில்லை.. ஆனால் இந்நேரத்தில் மனைவி தன்னுடன் இருக்க வேண்டும் என்று இவன் மனது நினைத்தது. பின்னே இந்த துக்கத்தில் ஒரு மனைவியாய் அவள் துணை இருக்க வேண்டாமா... அதிலும் இவன் மனைவியிடம் பேசாமலே அழைக்காமலே அவள் இங்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்தது.




இப்படியான எண்ணங்கள் எல்லாம் வக்கீல் வல்லவனைச் சந்திக்கும் வரை தான்... கடலழகனின் இறுதி காரியத்துக்கு வந்தவர்... விதுனதிபாகரனை தனியே அழைத்து... "உன் தந்தை இப்படி ஒரு முடிவு எடுப்பாருனு... நாங்க யாருமே எதிர்ப்பார்க்கல திபாகர்... இது உனக்கும் உன் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு. என்ன சொல்ல... எல்லாம் இறைவன் செயல்... மனச தேத்திக்கோ. உன் மாமியார் சசிரோகா, தொழில் சம்பந்தமா இத்தாலி போய் இருக்காங்க. தன்யாவுக்கு மாற்று இருதயம் கிடைச்சி... ஆபரேஷன் நடக்க இருக்கு... அதான் உன் மாமனார் மகளோட... மும்பையில இருக்கான்... அதான் இங்கு யாரும் வர முடியல... தவறா நினைக்காத திபாகர்..." என்று வந்தவர் வருத்தத்துடன் முடிக்க




இவனுக்குள் அதிர்ச்சி "சார் இப்ப என்ன சொன்னீங்க?..."



"எதையும் தவறா எடுத்துக்காத திபாகர்... அவங்க சூழ்நிலை அப்படினு சொன்னேன்"



"அது இல்லை சார்... ஏதோ தன்யாவுக்கு..." இவன் முற்றுப் பெறாமல் நிறுத்த



"தன்யாவுக்கு மாற்று இருதயம் கிடைத்து... ஆபரேஷன் நல்ல முறையில் முடிய இருக்குன்னு சொன்னேன்..."



"சா...ர்.... அப்போ தன்யாவுக்கு இதயத்துல கோளாறா?!...." இவன் இடையிட்டு கேட்க
அவனை விசித்திரமாய் நோக்கிய வல்லவன், "உன் மனைவிக்கு இதயத்துல கோளாறுனு உனக்கு இந்த விநாடி வரை தெரியாது... அப்படித் தானே?" என்று கூர்மையுடன் கேட்க



"சார்... தன்யா உடல்நிலை சம்பந்தமா... சத்தியமா எனக்கு இந்த விநாடி வரை எதுவும் தெரியாது சார்.... அப்ப நான் படிச்சிட்டு இருந்ததால.. எதையும் நான் கேட்டுக்கல…"



"நல்ல கணவன் நீ திபாகர்… அன்று எப்படியோ... அதே இப்ப வரை நீ தெரிஞ்சிக்க நினைக்கல பார்த்தியா" என்றவரின் குரல் குற்றம் சாட்டியது



அதில் ஆண்மகனின் தலை தாழ்ந்தது. அதெல்லாம் ஒரு நொடி தான்... இவன் தலை நிமிர்த்தி ஏதோ சொல்ல விழைய....




"உன் திருமணம் எதனால் நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா... அதற்கு முன் உன் மனைவியைப் பற்றி தெரியுமா... தெரிஞ்சிக்க... தன்யா பிறந்தது முதல் சாதாரணமா இருந்த குழந்தை தான்.. என்ன சற்றுப் பூஞ்சை உடல் அவளுக்கு… சிறுமியா இருக்கும் போது ஏன் எதுக்குனு தெரியாமலே... அடிக்கடி மயக்கம் வரும்.. மூச்சு திணறல் இருக்கும்.. கடினமான வேலைகளை அவளால் செய்ய முடியாது. இதையெல்லாம் தவிர்த்து இயல்பு வாழ்க்கையான ஆட்டம்.. பாட்டம்... படிப்பு... சிரிப்புன்னு.... தன்யா பேபி சந்தோஷமா தான் இருந்தா. மறுபக்கம் நாங்களும் அவளுக்கு என்ன பிரச்சனைன்னு டாக்டர் கிட்ட பார்த்துட்டு தான் இருந்தோம்... பலன் தான் இல்ல.. பிறகு தான் தெரிய வந்தது தன்யா பேபிக்கு இதயத்துல பிரச்சனைன்னு. இது தெரிந்ததும் மகன்... மருமகள் கிட்ட இருந்த மனக்கசப்பை எல்லாம் மறந்துட்டு திரும்ப வந்துட்டாங்க தன்யாவின் பாட்டி… அதாவது மகிழ்வரதன் அம்மா. மருந்து மாத்திரை கவனிப்புன்னு... அவங்க பேத்திய தாங்கினாங்க. இந்தத் தாங்கலும் அரவணைப்பும் பேத்திக்கு கடைசிவரை வேணும்ன்னு அவங்க நினைச்சாங்க. அவங்களுக்கும் வயசாகிடுச்சி... பேத்தியோட திருமணத்தைப் பார்க்கனும்னு ஆசை... ஒருவேளை திருமணம் பேத்தியின் வாழ்வை மாத்தாதானு நினைச்சி இருக்கலாம்.. ஆனா அதுக்கு மகிழ்வரதன்.. சசிரேகா லேசில் சம்மதிக்கல. சம்மதித்த பிறகும்... தங்கள் ஸ்டேட்டஸ் அளவுல தான் வரன் தேடினாங்க... அதற்கும் அந்தப் பெரிய மனுஷி ஒத்துக்கல. அவங்களுக்குப் பயம்... எங்க திருமணத்திற்குப் பிறகு பேத்தி வாழ்வில் இதே அலட்சியமும்… ஒதுக்கமும் நிரந்தரமா இருந்திடுமோன்னு நினைச்சாங்க. அவங்க மனிதர்கள மதிச்சாங்க... உறவுகளோட சேர்ந்து இருக்க ஆசை பட்டாங்க... மேல் தட்டில் உள்ள மனிதர்கள் மேல் பிடிப்போ நம்பிக்கையோ இல்லாம இருந்தாங்க. அவங்களுக்கு, பணத்தை விட மனிதர்களும் அவர்களின் மனசும் தான் பெரிசு... அதனால இந்த வசதி வாய்ப்பு எல்லாம் வேணாம்னு பிடிவாதமா இருந்தாங்க... இந்த இடத்துல மட்டும் மகிழ்வரதன் தன் தாய் பக்கம் நின்றான். தன்யாவிடம் உள்ள பிரச்சனையைச் சொல்லி தான் வரன் தேடினோம்... அந்த நேரம் தான்... உன் தந்தை செய்ததை பற்றி பேச, நீ மகிழ்வரதன் வீட்டுக்கு வந்த... அப்போ தன்யா பாட்டி உன்னைப் பார்த்துட்டு.. என் பேத்திக்கு ஏத்தவன் இவன் தான்னு பிடிவாதமா நின்னாங்க... அதன் பிறகு நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே...." என்று அவர் முற்றும் முழுமையாக அனைத்தும் சொல்லி முடிக்க



விதுனதிபாகரன் மனதில் பெரும் வலி சூழ... 'ஆமாம் மற்றவை தெரியும் தான்.. ஆனால் என் மனைவி இதய நோயாளி என்பது இந்த நொடி வரை தெரியாது.... தெரிந்து கொள்ளவும் நான் முயலவில்லை... பிறகு நான் என்ன கணவன்..' என்று அரற்றியது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN