நெஞ்சம் 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு பக்கம் தன்யாவின் பாட்டி, கண்ணே மணியே என்று தன்யாவைக் கொஞ்ச… மறுபக்கம் பேபி.. பேபி.. என்று உருகவில்லை என்றாலும் ச்சீ.. போ என்று அவளை விரட்டியது இல்லை அவளின் பெற்றோர்.. திருமணம் முடியும் வரை இவை தான் அவள் கேட்ட வார்த்தைகள்.. இதே திருமணத்திற்குப் பிறகு? இங்கு இவர்கள் யாரின் குணமும் தெரியாதே.. இல்லை இல்லை.. மாமியார் குணம் தெரியும்.. ஒருமுறை தமிழரசி தேளாய் கொட்டவும் தானே தன்யா விவாகரத்து என்ற முடிவை எடுக்க நேர்ந்தது. ஆனால் கணவன்? முன்பிருந்தே பேச்சற்ற அவனின் அலட்சியத்தைத் தான் ஏனோ பெண்ணவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இன்றும் கணவனின் அலட்சியத்தில் மனம் சுணங்கியது. கூடவே மாமியாரின் முணுமுணுப்பும் தொடர... அதை கேட்க விரும்பாமல்.. மனதில் குடி கொண்டிருந்த ஆற்றாமை விலக்க, அங்கிருந்த லவ் பேர்ட்ஸ் உடன் இவள் ஐக்கியமாகி விட... அந்நேரம் இசைத்தது அவளின் கைப்பேசி.


எடுத்தவள், “சொல்லுங்க அங்கிள்” என்று ஆரவாரமாய் பேச


அழைத்த வல்லவனோ “குட் மார்னிங் பேபி.. என் குட்டி பேபி என்ன செய்றா?” என்று அன்போடு கேட்க


“உங்க பேபி லவ் பேர்ட்ஸ கொஞ்சிட்டு இருக்கா”


“தப்பு இல்ல... தப்பு இல்ல..” என்றவர் “நாங்க யாரும் உன்னுடன் வரலன்னு திபாகரனுக்கு வருத்தமா” என்றவரின் கேள்விக்கு


நான் வரும் போது அவரே இங்கு இல்லை என்பதை மறைத்தவள், “அப்படி எல்லாம் இல்ல அங்கிள்... அவருக்கும் வேலைன்னு சொன்னார்”


“ம்ம்ம்.. நீ நல்லா இருக்கியா பேபி.. அங்க உனக்கு எதுவும் கஷ்டம் இல்லையே”



மம்மி டாடி கூடத் தன்னிடம் இப்படி கேட்கவில்லையே என்ற எண்ணத்தில் நெஞ்சம் விம்ப, “நான் நல்லா இருக்கேன் அங்கிள்.. விதுன் என்ன நல்லா பார்த்துகிறார்” என்று இவள் உள்ளார்ந்து சொல்ல



“சந்தோஷம் பேபி.. ரொம்ப சந்தோஷம்.. இப்படியே என்னைக்கும் சந்தோஷமா இரு” என்று வாழ்த்தியவர் “சமையலுக்கு, வீட்டு வேலைக்குன்னு இரண்டு பேர் இப்ப உன் வீட்டுக்கு வருவாங்க.. பார்த்து பேசு உனக்குப் பிடித்திருந்தா.. அவங்க செய்யட்டும்.. இல்லனா நான் வேறு ஆட்கள் அனுப்பறேன்.. நீ எங்காவது வெளிய போகனும்னா.. என் வீட்டு கார் எடுத்துக்க.. டிரைவர் நம்பர் அனுப்பறேன் நம்பிக்கையான மனிதர் நீ போய் வா..” என்றிட


‘இன்று.. தான் எந்த வீட்டு வேலையும் செய்யலனு மாமியார் அந்தப் பேச்சு பேசினாங்க.. இதுல நான் வேலைக்கு ஆள் வைத்தா அவ்வளவு தான்.. அதுவும் இப்ப விதுனோட பொருளாதாரம் எப்படின்னு தெரியலையே. க்கும்... அவரைப் பற்றி என்ன தான் தெரிஞ்சிருக்கு’ என்று நொடித்துக் கொண்டவளின் எண்ண ஓட்டத்தை “பேபி லைன்ல இருக்கியா” என்ற வல்லவனின் குரல் தடை செய்தது.


“ஹஆங்.. சாரி அங்கிள்.. எதுக்கு அங்கிள் அவங்கெல்லாம்... நானே செய்துக்கிறேன்.. நீங்க சிரமப்படாதிங்க” இவள் சொல்ல


“இதுல என்ன சிரமம் பேபி.. நீ எந்த வேலையும் செய்து பழகாத பொண்ணு.. அதான் உன் கணவனே இதை எல்லாம் அறிந்து செய்த ஏற்பாடு. பிறகு ஏன் மறுக்கிற... உனக்கு எந்த கஷ்டமும் தர கூடாதுன்னு திபாகரன் நினைக்கிறான். இது சம்பந்தமா முன்பே திபாகரன் என்னிடம் பேசியாச்சி.. நான் தான் நம்பிக்கையான ஆட்களுக்காக வெயிட் செய்தேன்.. So be ready baby and take care” என்றவர் இன்னும் சில தகவல்களைச் சொல்லி அழைப்பைத் துண்டிக்க


கோபத்தில் கணவன் வீட்டையே வெறுத்து விட்டாள் பெண்ணவள். “என்ன தான் பிரச்சினை இவருக்கு.. என்னை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டேங்கிறார்.. என் கிட்ட முகம் கொடுத்துப் பேச மாட்டாராம்.. ஆனா எனக்காக செய்வாராம்.. அதையும் என் கிட்ட சொல்லி எந்த வித அபிப்பிராயமும் கேட்காம... பிறகு நான் யாரு இவருக்கு?” என்று கோபத்தில் வாய் விட்டே குமுறினாள் தன்யா.



சிறிது நேரத்திலேயே சமையலுக்கு சிங்காரி என்பவரும்.. மற்ற சுற்று வேலைக்கு வனஜா என்பவரும் வர.. பேசி பார்த்து எந்த வித மறுப்புமின்றி அவர்களைச் சேர்த்துக் கொண்டவளுக்கு ஏனோ கணவனை அழைத்து இதை எதையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றவில்லை, அவனும் மனைவியை அழைத்துப் பேசவில்லை.


இருவருக்கும் வேலைகளைச் சொல்லி, சிங்காரியுடன் சென்று வீட்டுக்கு வேண்டியதை இவள் வாங்கி வர... மாமியாரின் முணுமுணுப்பும், அன்றைய நாளின் அவளின் தனிமையும் பறந்தே போனது.



இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்கு உறங்க வந்தாள் தன்யா. பின்னே விருந்தினர் அறையைத் தான் அவள் கணவன் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்று சென்றுவிட்டானே.. பிறகு எங்கு போவாள்... கணவன் மேலுள்ள கோபத்தில் இவள் உறங்க முற்பட... அது என்னைப் பிடித்துத் தான் பாரேன் என்று சடுகுடு விளையாடியது. இனி இதையும் பழகிக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தாள் பெண்ணவள்.



வீட்டுக்குத் தாமதமாக வந்த திபாகரன்.. படுக்கையிலிருந்த மனைவியைக் கண்டவனின், புருவமத்தியில் முடிச்சு விழ... சத்தம் இல்லாமல் தன் வேலைகளை முடித்து விடிவிளக்கை அணைத்து விட்டு.. அறை விளக்கை எறியவிட்டவன் வந்து கட்டிலின் மறுபக்கம் படுக்க... தன்யாவிடம் எவ்வித அசைவும் இல்லை.



இவனிடமும் எவ்வித அசைவும் இல்லை. அதெல்லாம் ஒரு நொடி தான்... அடுத்த நொடி மனைவியின் இடையில் கையை கொடுத்துத் தூக்கி அவளை தன் மேல் பரவவிட்டவன் “நீ தூங்கலன்னு எனக்குத் தெரியும் டார்லிங்” என்று தன்னவளின் காதில் இவன் கிசுகிசுக்க அவளிடம் எவ்வித அசைவும் இல்லை.



“ரிது என்ன டா..” இவன் சரசமாய் கேட்டபடி மனைவியின் நெற்றியில் முத்தமிட


ம்ஹும்.. அவள் அசையவில்லை... அதுமட்டுமா தன் பலம் கொண்ட மட்டும் கை விரல்களை உள்ளங்கையில் அழுத்தியபடி.. உடல் இறுக.. விழிகளை திறவாமல் இருந்த மனைவியின் தோற்றம் இவனுள் எதுவோ சரியில்லை என்பதை உணர்த்த


“கோபமா..” என்று கொஞ்சலாய் கேட்டவன் தன்னவளின் விழிகளில் முத்தமிட



உடல் சிலிர்க்க கண்களைத் திறந்தவள் கண்டது என்னமோ கணவனின் அப்பாவித்தனமான முகத்தைத் தான், ‘காலையில இருந்து ஒரு போன் இல்ல இப்ப என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு’ என்று மனதிற்குள் கணவனைத் திட்டியவளின் இதழ்களோ “இல்ல” என்று பொய்யுரைக்க


அதை எல்லாம் நம்புவானா அவன், சுளித்திருந்த தன்னவளின் புருவத்தை நீவியபடி “என்ன டா” என்று இவன் மறுபடியும் கேட்க


அவளிடம் அதே மவுனம் மட்டுமே.


“ரிது என் பொறுமைய சோதிக்காத, காலையில் போனவன் ஆயிரம் பிரச்சனைகளைப் பார்த்துட்டு வீட்டுக்கு வரேன், நீ இப்படி இருந்தா எப்படி, பழச எல்லாம் மறந்துடு... என் அம்மா எதாவது சண்டை போட்டாங்களா இல்ல உன் அம்மா எதாவது உன்ன பேசிட்டாங்களா, எதுவா இருந்தாலும் சொல்லு” என்று கேட்டவன் குரலோ பொறுமையற்று தான் ஒலித்தது.


அதற்கு எல்லாம் அசருவாளா தன்யா “எதுவும் இல்ல” ஒற்றை வாக்கியத்தில் அதே புருவ சுளிப்புடன் இவள் மீண்டும் அதே பதிலைத் தர


திபாகரனுக்கோ இங்கு இன்னும் பொறுமை குறைந்தது, இருந்தும் மனைவியின் புருவத்தை நீவியவன், “நான் எதாவது சொல்லிட்டனா” இவன் திடீரென கேட்க


அதில் புருவ சுழிப்பு நீங்க, என்னவென்று சொல்ல முடியாத ஒரு பாவத்தை மனைவியின் முகத்தில் கண்டவன் “அப்.. ப.. அப்ப.. நான் தான்... இல்லயா?” என்று தயக்கத்துடன் இவன் கேட்க அவளிடம் மாற்றம் இல்லை.



“இங்க பார் நான் தப்பு செய்து இருக்கலாம்” என்றவனின் வாக்கியத்தில் ‘கணவன் செய்தேன் என்று சொல்லாமல் செய்து இருக்கலாம்’ என்று சொல்லவும் அவ்வார்த்தையில் இவள் அவனை முறைக்க


அதைக் கண்டு கொண்டவனோ, மனைவியின் தலையை வருடி, தன் இறுக்கத்தைக் குறைத்து “சரி.. சரி.. என் மேல தான் தப்பு.. அதுக்காக இப்படி ஒதுங்கி போவியா, என்னைக் கேட்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ரிது.. நான் உன் புருஷன் டி”


“அப்ப நீங்களும் உங்க மனைவி கிட்டப் பேசவோ கேட்கவோ எல்லா உரிமையும் இருக்கு தான?”


இது என்ன அபத்தமான கேள்வி என்பது போல் தன்னவளை ஏறிட்டவனின் உதடுகளோ “ஆமாம்” என்று மொழிய


“அப்ப நீங்க ஏன் அதை செய்யல?”


இவனுக்குப் புரியவில்லை “என்ன செய்யல” குழப்பத்தின் பிடியில் இவன் கேட்க, உண்மையாகவே தான் செய்தது எதுவுமே விதுனதிபாகரனுக்கு தெரியவில்லை.


“என்ன செய்யல, அங்கிள் மூலமா வீட்டுக்கு வேலையாள் ஏற்பாடு செய்தத சொல்லல... இன்னைக்கு அவங்க வருவாங்கன்னும் சொல்லல. காலையில என் முகத்தப் பார்த்து சொல்லிட்டா போனிங்க... பிறகும் ஒரு போன் இல்ல. எதுக்கு இவ கிட்ட சொல்லனும் என்ற அலட்சியம்... ஏன் அபிப்பிராயம் கேட்கனுங்கிற அகங்காரம் அதான... நான் எல்லாம் உங்களுக்கு ஒரு ஆளே இல்ல.. விடுங்க எல்லாம் ஒரு வருஷம் தான” மனதிலிருந்ததை எல்லாம் கொட்டியவள் கடைசியாய் நமக்குள் எதுவும் தான் இல்லையே என்பது போல் முடிக்கக் கேட்டவனுக்குத் தலையே சுற்றியது.



இது என்ன டா எனக்கு வந்த சோதனை என்பது போல் அதிர்ந்தவன் “யம்மாடி.. யம்மா.. பேசச் சொன்னதுக்கா டி இவ்வளவு பேசுற.. அதுவும் என் அகராதியில் இல்லாத வார்த்தைய எல்லாம் சொல்ற” என்ற படி எழுந்து அமர்ந்தவனோ, தன் மனைவியையும் எழுப்பி அமர வைத்து அவளின் வலது கை விரல்களை தன் இரு கைகளுக்குள் பொத்தி வைத்து “இங்க பார் ரிது வேலைக்கு ஆள் வராங்க என்றத நான் சொல்லாம போனது தப்பு தான்.. அது நீ சொன்ன அர்த்தத்துல இல்ல.. இது நான் முன்னே வல்லவன் சார் கிட்ட பேசி வச்சது, காலையில அம்மா பேசினதுல டென்ஷன்.. அப்பறம் பாக்டரியில சின்ன பிரச்சினை .. அதான் உன்கிட்ட சொல்லாம கூட ஓடிட்டேன். எப்பவும் நான் இப்படி தான்.. அப்பாம்மா.. தங்கைகள்னு பாசம் இருக்கும், அவங்களுக்காக பார்த்துப் பார்த்து யோசிச்சி எதையும் செய்வேன். அவங்க விஷயங்கள கவனத்துல வச்சிருப்பேன், அரவணைத்து நடந்துக்குவேன்.. ஆனா சூழ்நிலை காரணமா சிலசமயம் இப்படியும் செய்திடுவேன். அதே தான் இன்று நடந்தது. அதுக்கு போய் என்ன எல்லாம் பேசிட்ட... சரி என்மேலையும் தப்பு இருக்கு, இனி உன் கிட்ட சொல்லி, கேட்டு நடந்துக்கிறேன் ஓகே வா” என்றவன் சமாதான கொடியைப் பறக்க விட


“ம்ம்ம்..” என்ற படி இவள் ‘ம்’ கொட்ட அதில் இன்னுமா என்றபடி இவன் மனைவியைக் காண


நீ சொன்னதை நான் புரிந்து கொண்டேன் என்ற உணர்வில் தன்யாவின் முகமோ நிர்மலமாக, அமைதியைத் தத்தெடுக்க... அதைக் கண்டவன் மனமோ நிம்மதியாக... “அது என்ன ம்ம்.. வாயத் திறந்து சொல்லு டி” இவன் போலியாய் மிரட்ட


“எல்லாம் இது போதும் தூங்க விடுங்க” என்றவள் கணவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொள்ள எத்தனிக்க



அவளின் முயற்சியைத் தடுத்து தன் பிடியை இறுக்கியவன் “சரி இதுக்கு பதில் சொல்லு இனி நாம ஒரு டீல் வச்சிப்போம், நான் எதாவது தப்பு செய்தா அன்றே நீ என் கிட்ட சண்டை போட்டுடுடனும் இப்படி பேசாம விலகி இருக்கக் கூடாது சரியா” என்று காதல் பொங்கச் சொன்னவன், பிடித்திருந்த மனைவியின் கையை உயர்த்தி தன் கன்னத்தில் வைத்து அழுத்தி அதில் தலை சாய்த்து “என்ன டீல் ஓகேவா” என்று கண்ணடித்துக் கேட்க


கணவனின் புது அவதாரத்தில் இவளுள் சிலிர்த்தது... மேலும் தன்னுடைய மவுனம் கணவனைப் பாதிக்கின்றது என்ற உணர்வில் மனம் மகிழ... கணவனிடமிருந்து கையை உருவியவள் எதையும் வெளியிடாமல் “ஆமா இவரு பெரிய காதல் மன்னன் டீல் பேசறார், இந்த மவுன சாமியாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது பேசாம தூங்குங்க” என்றபடி தன் பக்க தலையணையைத் தட்டி போட்டு இவள் தூங்க எத்தனிக்க


மனைவியின் குரலில் துள்ளலை உணர்ந்தவனோ உன்னை விடுவேனா என்ற நிலையில் அவளை எழுப்பி அமர வைத்து “நான் காதல் மன்னன் எல்லாம் இல்ல தான், ஓகே சாமியார்ன்னு ஒத்துக்கிறன்.. ஆனா மவுன சாமியார் இல்ல” என்று சொல்லி வந்தவன் குரலைத் தழைத்து தன்னவளின் விழியோடு தன் கண்களைக் கலக்க விட்டவன் “வேற சாமியார்.. அதுவும் உனக்கு மட்டுமே சொந்தமான சாமியார்... என்ன சொல்லவா” என்று கிசுகிசுப்பான குரலில் சரசமாய் இவன் கேட்க


‘ஜயோ ஏதோ எக்குத் தப்பா சொல்ல போறார்’ என்ற எண்ணத்தில் தன்யாவின் மேனி எங்கும் குறுகுறுத்தது, அதில் பெண்ணவளின் முகம் சிவந்துவிட



தன்னவளின் முக சிவப்பைக் கண்டு ரசித்தவனின் முகமோ புன்னகையில் ஒளிர மனைவியை நெருங்கியவன் “சாமியார் தான்.. நித்தியானந்தா சாமியார் .. ஆனா நான் அவர் சிஷ்யனா இல்லையா என்றத நீ தான் சொல்லனும்” என்று சரசமாய் கேட்கவும்



அடுத்த நொடியே கணவனின் வாயை தன் கையால் அடைத்து “விதுன் என்ன இது” என்று கேட்டவளின் குரலோ வெட்கத்திலும் சங்கோஜத்திலும் மிளிர்ந்தது


“ஹா.. ஹா.. சொல்லு ரிது நான் அவர் சிஷ்யன் தான” என்று கேட்டு உல்லாசத்துடன் மனைவிக்குக் கிச்சு கிச்சு மூட்ட


“ஆஆஆ.. ஹே.. ஹேய்.. விதுன்.. விடுங்க.. ஹா.. ஹா.. விடுங்க.. வி.. துன் ஆஆ.. கூசுது” என்று புன்

னகையுடன் தன்யா ஆர்ப்பரிக்க, அதில் கணவனான விதுனதிபாகரனின் கம்பீர நகையும் இணைந்தே ஒலித்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN