நெஞ்சம் 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன்யாவினுள் பல குழப்பங்கள்.. அதில் கேள்வியும் அவளை மீறி வந்து விட.. உணர்ந்ததும் முகம் கசந்தால் பெண்ணவள்.


அவளின் முகத்தை ஆதுரமாய் பார்த்த டாக்டர் லதா “be free தன்யா.. உன் இதயத்தில பிரச்சனைன்னு எப்ப உன் கணவருக்குத் தெரிந்ததோ.. அப்போதிலிருந்து அவர் என் கிட்ட பேசிட்டு தான் இருக்கார்.. நான் உன் ஃபேமிலி டாக்டர் இல்லையா.. சோ உனக்கு மாற்று இதயம் கிடைத்து அதனால் நடந்த ஆப்பரேஷன் முதற்கொண்டு.. உன் உடல்நிலை சம்பந்தப்பட்ட அனைத்தும் என் கிட்ட கேட்டு தெரிஞ்சிப்பார்… உன் செக் அப் தேதியப்ப டான்னு எனக்குப் போன் வந்துடும்… ரிசல்ட் பற்றித் தெரிஞ்சிக்க.. கூடவே உன் டெஸ்ட் ரிபோர்ட்ஸ் எல்லாம் திபா வாட்ஸ் அப் நம்பருக்கு நான் கட்டாயம் அனுப்பியே ஆகனும்.. உன் கணவரின் அன்பு கட்டளை இது” என்றவர் சற்றே நிறுத்தி “உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு தெரியாது.. But he will hold you like a mother bird holds in her wings” என்று சொல்ல.. கண்களும், நெஞ்சமும் ஒரு சேர கலங்கி விட்டது தன்யாவுக்கு.



“உன்னைப் பற்றி எத்தனை விசாரிப்புகள் உன் கணவருக்கு… எத்தனை கேள்விகள் உன் உடல் நிலையைத் தெரிஞ்சிக்க.. அத்தனைக்கும் நான் பொறுமையாகப் பதில் தந்தாலும்.. இல்ல டாக்டர் நான் இந்தியா வந்ததும்.. எனக்காக மறுபடியும் முழுதா அவளை ஒரு முறை செக் அப் செய்து சொல்லுங்க என்பது தான் திபாவின் இறுதி வார்த்தையா இருக்கும்.. அதான் இப்ப இந்த செக் அப்..” என்றிட பெண்ணவளுக்குத் தான் நெஞ்சில் பாரம் ஏறியது.


பரிசோதனைகள் முடிந்து இருவரும் அறைக்கு வர.. டாக்டர் லதா, “மிஸ்டர் திபாகரன் உங்க wife perfectly normal.. she is fine and good health.. இன்னும் சில ரிப்போர்ட்ஸ் நாளைக்கு வரும்.. வழக்கம் போல என் ஜூனியர்.. உங்க வாட்சப் நம்பருக்கு அனுப்பிடுவாங்க. ok va... are you happy” என்று சரளமாய் பேசி தன்யாவுக்குத் தைரியம் சொல்லி அனுப்ப பெண்ணவளின் கால்களோ துவண்டது.


சிரமப்பட்டு எட்டு வைத்து கணவருடன் வெளியே வந்தவள்.. அங்கு காரிடாரில் இருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து விட.. இவனுக்குள் பதட்டம் “என்ன ரிது என்ன செய்து” என்று இவன் அக்கறையில் கேட்க


அவளுக்கோ பேச்சற்றுப் போகத் தன்னவனின் கைப்பிடித்துப் பக்கத்து இருக்கையில் அமரவைத்தவளோ.. அவனின் வலது கை புஜங்களைத் தன் இரு கைகளுள் கோர்த்து கணவனின் தோளில் தன் நெற்றி முட்ட ஆசுவாசமாய் அமர்ந்து விட்டாள்.


என்ன சொல்லுவாள்.. எத்தனை நாள் அழுதிருப்பாள் என்னைப் பற்றி இவருக்குக் கவலையில்லையா.. என் உடல்நிலை பற்றி அக்கறை இல்லையா.. என் வலி நோவு எதுவும் அவருக்குப் பெரிதில்லையா.. மொத்தத்தில் நான் அவருக்கு வேண்டாத மனைவியா என்று எத்தனை நாள் மனதினுள் குமுறி இருப்பாள்.. அந்த மனக்குமுறலைக் கூட அவள் யாரிடமும் கொட்டியது இல்லையே.. அதற்கு வாய்ப்பும் அமைந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதெல்லாம் தன்யாவுக்குக் கணவனைப் பற்றி முந்தைய பிம்பங்கள்.. ஆனால் அது இன்று சிறிதே உடையவும் பெண்ணவளால் சூழ்நிலையை ஏற்க முடியவில்லை.. இருந்தும் அகம் அறிந்ததைக் கணவனின் வாய் மொழியாகக் கேட்க இவள் மனம் விழைந்தது.


“என் health சம்பந்தமா நீங்க லதா ஆன்ட்டி கிட்ட பேசுவீங்களாமே ஏன்” முகத்தை நிமிர்த்தவில்லை இவள் ஆனால் உதடுகள் மட்டும் கணவனிடம் கேள்வி கேட்டது.



“உனக்கு என்ன பைத்தியமா ரிது.. ஏன்னு கேள்வி கேட்குற” அவனுக்குப் புரியவில்லை.. இவ என்ன இப்படிக் கேட்குறா என்ற கோபத்தில் இவன் பதில் கேள்வி கேட்க



“சொல்லுங்க.. ஏன் கேட்டிங்க அப்ப உங்களுக்கு என்னைப் பற்றிய அக்கறை இருந்தது அப்படி தான”


“நிச்சயம் நீ பைத்தியம் தான் ரிது.. உன் உடல்நிலை பற்றி அக்கறையா கேட்டதுக்கு எல்லாம்.. ஏன்னு இப்படி கேள்வி கேட்குற பார் நீ பைத்தியம் தான்”


“ஆனா அந்த அக்கறைய நீங்க ஏன் என் கிட்ட காட்டல விதுன்.. ஏன் என் கிட்ட நீங்க பேச கூட இல்லையே... ஆப்பரேஷன் அப்ப கூட நீங்க இல்ல.. அன்று நான் உங்கள எவ்வளவு தேடினேன் தெரியுமா.. ஆபரேஷன் சக்ஸஸ் ஆனா சரி அதே failure ஆனா அந்த நிமிடம் அந்தப் பயம் என்ன எவ்வளவு வதைத்தது தெரியுமா.. அப்ப எல்லாம் நீங்க என் கை பிடிச்சி.. நான் இருக்கேன் தைரியமா இரு உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்ல மாட்டிங்களான்னு எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா.. ஆனா நீங்க” மேற்கொண்டு சொல்ல முடியாமல் கண்ணிலிருந்து நீர் வழிய.. கணவனின் புஜத்திலேயே முகம் புதைய கதறினாள் இவள்.



சத்தியமாய் திபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை.. என்னை மனைவி இவ்வளவு தேடினாளா.. தாய் தந்தையர் மேலுள்ள கோபம்.. மாமனார் வீட்டின் மேலுள்ள வெறுப்பு.. என்று இதையெல்லாம் அன்று தூக்கி சுமந்தானே தவிர.. அதிகம் பேசாத.. ஒருமுறை மட்டுமே மணமேடையில் பார்த்த தன்னை மனைவி தேடுவாள் என்று நினைக்கவில்லை இவன். அதிலும் ஒரு கணவனாய் தன் அரவணைப்பை எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறாளே… என்ன சொல்வான்.. இவனால் ஏற்பட்ட காயத்திற்கு எதனால் மருந்திடுவான்.. இவனுக்கும் வலித்தது.



“நீங்க என்னைப் பார்க்க வராததால.. உங்களுக்கும் மம்மி மாதிரி என்னைய பிடிக்கலையோ.. ஒதுக்கிட்டிங்களோன்னு நினைச்சேன்.. அதே நாளாக நாளாக என்னைய நீங்க வெறுத்துட்டிங்கன்னு நினைச்சேன்.. நமக்குள்ள இருந்த பந்தமே முறிந்ததன்னு நினைச்சேன்.. அப்படியா விதுன்?” என்று தன் மனக்குமுறலை எல்லாம் சொல்லியவள் இறுதியாய் குரலில் உயிரைத் தேக்கி கேட்ட மனைவியின் வார்த்தை இவனைக் கொல்லாமல் கொல்ல.. இரு துளி நீர் கண்ணிலிருந்து வழிய.. இரும்பென விரைத்தது ஆண்மகனின் உடல்.


தன்னைச் சமாளித்தவன் “கணவன் தன் மனைவியைப் பார்க்கவோ பேசவோ இல்லனா.. வெறுத்துட்டான்னு அர்த்தமாடி.. இல்ல கணவன் மனைவி பந்தம் தான் அப்படிப் பட்டதா.. இன்னைக்குப் பார்த்த இல்ல நம்ம கம்பெனிய... அதை வளர்க்க முழுமூச்சா நான் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். தொழிலில் சாதிக்கனும்னு எனக்குள்ள வெறி இருந்தது ரிது. அதான் ஆசா பாசங்கள் நிறைந்த என் குடும்ப வாழ்வ தியாகம் செய்தேன். தப்பு தான் உன்னைக் கேட்காமல் நான் எடுத்த முடிவு தப்பு தான்.. தொழிலில் வளர்ந்த பிறகு உன்னை வந்து அழைச்சிக்க இருந்தேன்.. அதுக்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது.. சரி நீ சொல்லு நமக்குள்ள இருந்த பந்தம் முறிஞ்சிடுச்சின்னு நீ நினைக்கறியா?” என்று தன் நிலையை விளக்கியவன் இறுதியாய் மனைவியிடமே அக்கேள்வியை முன் வைக்க



பதிலின்றி விசும்பினாள் தன்யா.. பின்னே அவளும் தான் என்ன சொல்வாள்.. இந்த ஒரு விஷயம் சரியாகி விட்டாலும் மனதிலுள்ள மற்ற சஞ்சலங்கள் அப்படியே தானே உள்ளது.. ஆனாலும் ஒப்புக்கு கூட அப்படி இல்லை என்ற பதிலை சொல்ல முடியவில்லை இவளால்.. அதை அறிந்தவனின் மனமோ நிதர்சனத்தை நினைத்து ரணப்பட்டது.. இன்னும் மனைவி தன்னை மன்னிக்க விழையவில்லை என்பதை வலியோடு உணர்ந்தவனோ



“ரிது இது ஆஸ்பிட்டல்.. நாம பேசினதுல நேரமும் கடந்துடுச்சி.. இங்க வச்சி என்ன அழுகை உனக்கு.. ஹ்ம்.. எழுந்து வா போகலாம்.. நீ வெளிய வந்தாலே அழு மூஞ்சி ரிதுவா மாறிடற கிளம்பு டி” இவன் கண்டிப்புடன் அழைக்க அது கொஞ்சம் வேலை செய்யக் கணவனுடன் கிளம்பினாள் ரிது.



மனதில் உள்ளதை சொல்லியதால் தன்யா இயல்புக்குத் திரும்பிவிட.. திபாகரன் தான் இறுகிப் போயிருந்தான்.. இரவு உணவை இருவரும் வெளியே முடித்துக் கொண்டு.. வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி வர



விடுவாரா தமிழரசி “நாங்க எல்லாம் புருஷன் சம்பாதியத்துல சிக்கனமா குடும்பம் நடத்தினோம்.. இப்படி ஊர் சுத்தவும் ஹோட்டலுக்கும் காச அழிக்கல.. அதெல்லாம் வீட்டுக் கஷ்டம் தெரிஞ்சி வளர்ந்தவளுக்குத் தான் புரியும்.. பணம் சம்பாதிக்கிறது எவ்வளவு சிரமம்னு.. க்கும் இங்க அப்படியா.. இந்தா தன்யா, நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. புரிஞ்சி நடந்துக்க.. அவன் கூப்பிட்டாலும் இனி வெளிய போகாத.. என்ன” என்று மருமகளை அதட்டி உருட்டி தூபம் போட.. அவரின் குணமறிந்து அனைத்திற்கும் சரி சரி என்று தலையை உருட்டினாள் தன்யா.



இவள் தங்கள் அறைக்கு வர.. வலது கையைக் கண்களின் மேல் வைத்துக் கொண்டு படுத்திருந்தான் திபாகரன். கணவனின் பாராமுகம் தன்யாவுக்குப் புரியவில்லை.. ‘மனதில் இருந்ததைச் சொல்லி அழுதேன்.. இதில் என் தப்பு என்ன’ என்று தான் நினைக்கத் தோன்றியது இவளுக்கு.



ஆனால் திபாகரன் எதிர்பார்ப்பது புரிதலுடன் கூடிய மனையாளை.. அதில் ஒன்றை அவன் மறந்து விட்டான்.. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழும் இடத்தில் தான் புரிதல் சங்கமிக்கும் அது தானே உலக வழக்கமும் கூட.. பிரிந்து வாழ்ந்த தம்பதியரிடம் எப்படிப் புரிதல் இருக்கும். ஆனால் அதை எல்லாம் ஆண்மகன் ஏற்கவில்லை.


கட்டிலில் கணவனை ஒட்டி அமர்ந்தவள்.. முகத்தின் மேலிருந்த அவன் கையை விலக்கி “என்ன விதுன் என் மேல கோபமா” என்று கேட்க

மனைவியைப் பார்த்தவன் “இல்ல ரிது.. அப்படி எதுவும் இல்ல” என்றிட


“நிஜமா..” இவள் அழுத்திக் கேட்க


மனைவியின் வலது கை விரல்களைப் பிடித்து அதற்குச் சொடக்கிட்டவன் “நீ என்ன தப்பு செய்த நான் கோபப் பட.. எனக்கு சில யோசனைகள்.. உண்மை தான்... நான் நிறையத் தப்பு செய்துட்டேன் ரிது.. அதை எப்படி சீர் செய்யன்னு தான் யோசிக்கிறேன்” இவன் உணர்ந்து சொல்ல



அதில் அமர்ந்தவாக்கிலேயே கணவனின் நெஞ்சில் தலை சாய்த்தவளோ “ஹ்ம்ம்.. ஆனா அதுக்கு எல்லாம் அவசியமே இல்ல.. ஒரு வருடம் தான நம்பளோட பந்தம்.. பிறகு நான் தான் போய்டுவேனே அதனால ப்ரீயா இருங்க” என்று இவள் நிதர்சனத்தைச் சொல்ல


இவனின் உடலோ இறுகியது.. மனதினுள் பயம் படர.. ஆமாம் பயமே தான்.. அதை வெளியிடாமல் “அப்படி நான் உன்னைய போக விட்டுடுவேண்னு நினைக்கிறியா ரிது டார்லிங்… நான் தான் சரி செய்வேன்னு சொன்னனே.. உனக்கு மறந்திடுச்சா” என்று இலகுவாய் சொன்னவன்.. கூடவே நான் உன்னைப் போக விட மாட்டேன் என்ற பிடிவாதத்தையும் தன்னவளிடம் வலியுறுத்த



தலையை நிமிர்த்திக் கணவனின் முகம் பார்த்தவள் “அப்படியா..” என்று பொய்யாக வியந்து “ஆனாலும் உங்களோட கற்பனைக்கி அளவேயில்லையா.. இந்த ஒரு விஷயம் சரி ஆனதால.. நான் இங்கையே தங்கிடுவேன்னு நினைக்கிறீங்க.. ரைட்” இவளும் அதே இலகு குரலில் தன் மறுப்பைத் தெரிவிக்க


அதில் கோபம் கொள்ளாமல் தன் முகத்தருகே இருந்த மனைவியின் முகத்தில்.. உதடுகளை மட்டும் ரசனையோடு கண்டவன்.. அதைத் தன் ஆள்காட்டி விரலால் மென்மையாய் வருடி “ஆனாலும் நீ ரொம்பப் பேசுற டி.. அப்படிப் பேசுற இந்த உதட்டுக்கு முத்தம் தரனும்னு தோனுது.. காலையிலிருந்து நானும் நல்ல பிள்ளையா இருக்க நினைக்கிறேன்.. முடியாது போலயே” என்று காதலோடு மொழிந்து இவன் வேறு கதைக்கு மாற.. அதில் அதிர்ந்து விழித்த தன்னவளின் முகத்தைக் கண்டு “ஊஃப்” என்று ஒரு நெடுமூச்சை வெளியிட்டவன்.. தன்னவளின் நுனி மூக்கை செல்லமாய்த் திருகி “பார்க்கலாமா.. நீ போறியா.. இல்ல உங்கள விட்டு நான் போகவே மாட்டேன் விதுன்னு.. நீ சொல்றியான்னு பார்ப்போமா” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி இவன் சவாலுக்கு அழைக்க


அதில் திகைத்தவள் “அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் ப்பா” என்று துள்ளல் குரலில் மொழிந்தவளும் கணவனைக் காண முடியாமல் தடுமாறி தன்னவனின் நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொள்ள


“ஹா.. ஹா..” முகம் கொள்ளா சிரிப்புடன் மனதிலிருந்த சுணக்கம் விலக.. த

ன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் திபாகரன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN