நெஞ்சம் 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் போக்கில் நகர.. ஒரு நாள் இவர்களைக் காண விதுனதிபாகரனின் வீட்டுக்கு வந்தார் அவன் சித்தி கற்பகம்.


“வா.. வா.. கற்பகம் என்ன இம்புட்டுத் தூரம்” வந்தவரை தமிழரசி வரவேற்க



“வராம... நீ தான் எங்கள மறந்துட்ட.. அதான் நானே உங்கள எல்லாம் ஒரு எட்டு பார்த்துட்டுப் போக வந்தேன்”


மாமியாரின் குரலைக் கேட்டு வெளியே வந்த தன்யா “வாங்க ஆன்ட்டி..” என்று வரவேற்பாய் சிறு புன்னகையைச் சிந்த


“ஆன்ட்டின்னு கூப்பிட வேணாம்.. நான் உனக்குச் சின்ன மாமியார்.. அதனால அத்தன்னு கூப்பிடு.. உன் கல்யாணத்தப்ப என்னைய பார்த்திருப்ப இப்ப ஞாபகம் இருக்காது..” என்றவரிடம்


தன்யா “ஓ.. சரிங்க அத்த.. குடிக்க என்ன எடுத்து வரட்டும்?”



அவளிடம், “எதையாவது சில்லுன்னு கொடு ஆத்தா” என்றவர் “ஏன் க்கா புது வீடு பார்த்து குடி வந்திருக்கீங்க... பால் காய்ச்சின அப்பவும் கூப்பிடல.. இதோ மருமக வந்திருக்கா அதையும் சொல்லலியே க்கா” என்று வருத்தத்துடன் கேட்க



தமிழரசி “ஆமா பெரிய வீடு.. நான் என்ன சொந்த வீடா கட்டி குடிவந்தேன் எல்லாம் வாடகை வீடு தான.. அப்பறம் என்ன கேட்ட தன்யா வந்ததையா... அவ என்ன புதுசா எல்லாம் பழைய மருமக தான்”



“வாடகை வீடா.. என்ன க்கா திபா எப்படி சமாளிக்கிறான்.. மேல் வீட்டையும் எடுத்திருந்தா அவனுக்குச் சிரமமாச்சே க்கா..” வந்தவரும் நீட்டி முழங்க


“சிரமம் தான்... என்ன செய்ய... அது எங்க அவன கட்டிட்டு வந்தவளுக்குத் தெரியுது” தமிழரசி அங்கலாய்க்க


குளிர் பானத்தோடு வந்த மருமகளைக் கண்டு தான் அக்கா இப்படிப் பேசுகிறார் என்பது கற்பகத்துக்குப் புரியவும் “அட அப்படி சிரமப்பட.. அவன் மனைவி தான் விட்டுடுவாளா இல்ல அவன் மாமனார் தான் விட்டுடுவாரா ஒரே பொண்ணு அவளுக்குச் செய்யாம யாருக்கு செய்யப் போறார்”



“அட.. என்ன கற்பகம் நீ.. எதுக்கு இப்ப வந்தியோ அதைத் தேங்காய உடைக்கிற மாதிரி பட்டுன்னு சொல்லாம எதே எதோ பேசிட்டு இருக்க.. என் பிள்ள கையில என்ன கட்டையா முளைச்சிருக்கு.. இல்ல நாங்க தான் அவன் மாமனார் பணத்துக்குத் தவம் இருக்கோமா.. சீக்காலி பொண்ண என் பையன் தலையில இல்ல கட்டிட்டாங்க.. அதுக்கே என் வம்ச விருத்தி என்ன ஆகுமோன்னு பயத்துல நான் தினம் தினம் வேண்டாத சாமி இல்ல” என்று அதட்டலில் ஆரம்பித்து ஆதங்கத்தில் தமிழரசி முடிக்க



கற்பகம், “சரி சரி அத விடு.. பிரபுவுக்குக் கல்யாணத்துக்கு ஜாதகம் எதுவும் தழைய மாட்டுது.. அதான் நம்ம குலசாமி கோவிலுக்குப் போய்ப் பூஜை வைக்கலாம்ன்னு இருக்கன்.. உன் வீட்டிலும் தான் மருமக வந்துட்டா.. சித்ராவுக்குத் தான் இன்னும் ஒன்னும் கூடலியே.. அதான் நீங்களும் வாங்க ஒரு எட்டு போய்ட்டு வரலாம்ன்னு கூப்பிட வந்தேன்” என்க



“போகனும் தான்.. ஆமா நீ என்னைக்கு வச்சிருக்க.. ஏன்னா நம்ம வீட்டுப் பொண்ணுங்களுக்குத் தோது படனுமே அதான் கேட்குறேன்”



“எல்லாருக்கும் தோது படற நாளா இந்த வாரத்திலே பாருங்க.. சட்டு புட்டுன்னு பூஜைய முடிப்போம்” என்றவர் “என்ன தன்யா நீயும் வந்துடு” என்று கற்பகம் தன்யாவை அழைக்க



“வரேங்க அத்த.. அவர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு வரேங்க.. மதியத்துக்கு மட்டன் எடுக்கச் சொல்றேன்... நீங்க இருந்து சாப்பிட்டு தான் போகனும்”




மருமகனின் பேச்சில் “அடி ஏய் கூறுகெட்டவளே.. உங்க வீட்டுல உனக்கு ஒன்னும் சொல்லி வளர்க்கலையா.. இதென்ன அதிகப்பிரசிங்கித் தனம்.. அவ பூஜைன்னு சொல்றா நீ கவிச்சி எடுத்துக்கச் சொல்ற.. போ போய் வேலையாள் கிட்ட கவிச்சி இல்லாம சமைக்கச் சொல்லு” இவ்வாறான அதட்டல் பேச்சில் தான் மாமியார் என்பதை நிரூபிக்க.. முகம் கூம்பி விட்டது தன்யாவுக்கு.



“வாம்மா மருமகளே... சமையல வேலையாள் செய்யட்டும்.. நான் ஓய்வெடுக்க எனக்கு ரூம காட்டு.. அப்படியே எனக்கு வேண்டியதைச் செய்து கொடு வா” என்று நகரப் பார்த்த தன்யாவை கற்பகம் கையோடு அழைக்க


அதில் விருந்தினர் அறைக்கு அவரை அழைத்து வந்ததும்.. “வா.. வா.. இப்படி உட்கார்” என்று சொல்லி தன்யாவின் கையைப் பிடித்திழுத்து கட்டிலில் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டவர் “என்ன சொல்ல தங்க விக்ரகமா இருக்கா என் மருமக” என்று சிலாகித்தபடி கற்பகம் அவளின் முகத்தை நெட்டி முறிக்க.. அதில் தன்யா திகைக்க “என்ன அப்படிப் பார்க்கற.. உன் மாமியாருக்கு நான் உன் கிட்ட தன்மையா பேசி அதில் ரெண்டு பேரும் ராசியான பிடிக்காது.. அக்கா குணம் அப்படி.. பட்டு பட்டுன்னு பேசி எறிஞ்சி விழும்.. நீ எதையும் கண்டுக்காத.. தங்கமான மருமகள வச்சி பிழைக்கத் தெரியல அவங்களுக்கு. என்னத்த சொல்ல.. ஆனா என் புள்ள தங்கமா தாங்குவான் உன்னைய.. அவன மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்.. திபாகரன்னா எனக்கு உசுரு அவனும் என் பிள்ள தான.. ஆனா அக்கா அதையெல்லாம் புரிஞ்சிக்காது சரி அதை விடு.. நான் என் புள்ளையும் நீயும் கட்டி ஆள்ற இந்த வீட்டையும் உங்களையும் பார்த்துட்டுப் பூஜைக்குச் சொல்லிட்டுப் போக வந்தேன்.. நான் அக்கா எதிர உன்ன எதாவது அதட்டிப் பேசினா நீ கண்டுக்காத.. அதெல்லாம் சும்மா பாவ்லா” என்று மூச்சு விடாமல் பேசியவர் இறுதியில் குழந்தையைப் போல் முகத்தைச் சுருக்கி பாவனையை செய்ய



அந்தப் பேச்சிலும் பாவனையிலும் கற்பகத்தை மிகவும் பிடித்து விட்டது தன்யாவுக்கு. அவரையே இவள் பார்த்திருக்க “என்ன அப்படிப் பார்க்கிற” என்று கேட்டவர் “இரு நான் என்னைய பத்தி சொல்றேன்.. நான் உன் சின்ன மாமனார் மனைவி.. திருநெல்வேலியில இருக்கேன்.. நான் பெத்தது மூணு” என்றவர் பையிலிருந்த கைப்பேசியை எடுத்து சில புகைப்படங்களைக் காட்டி “இந்தா இவ மூத்தவ காயத்ரி மதுரையில கட்டிக் கொடுத்திருக்கேன்.. கட்டு செட்டா வாழறா.. ஒரு பெண் குழந்தை அவளுக்குப் பேரு சுவாதி.. இதோ இவ தான்.. கோவில் பூஜைக்கு காயத்ரி வரலன்னு சொல்லிட்டா.. இரண்டாவது பிரபு இவனுக்குத் தான் பொண்ணு அமையல.. ஹும்.. எப்ப அமையுமோ.. இது அடுத்தது பேரு ஜோதி காலேஜ் முதல் வருடம் போறா.. உன் சின்ன மாமனார், காயத்ரி கல்யாணம் முடிந்ததும் போய்ச் சேர்ந்துட்டார்..” என்று இன்னும் அவர் என்னவெல்லாம் மடை திறந்த வெள்ளமாய்ச் சொல்லியிருப்பாரோ


அதற்குள் தமிழரசி “இங்க இன்னும் என்ன செய்ற தன்யா” என்று கேட்டபடி அறைக்கு வர “எனக்கு என்ன என்ன வேணும்ன்னு கேட்டுட்டு இருக்கா க்கா.. பஸ்ல வந்தது அசதியா இருக்கு.. டீ பன்னு வடைன்னு தின்னது வயிறு மந்தமா இருக்கு.. நானே எழுந்து வந்து சாப்பிடறன்னு சொல்லிட்டு இருந்தேன்.. இதோ நீங்க வந்துட்டிங்க.. நீ போ தன்யா” என்று தமிழரசிக்குப் பதில் தந்த கற்பகம் தன்யாவைப் பார்த்து கண்சிமிட்ட உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் இவள்.


சொன்ன மாதிரியே பொறுமையாய் எழுந்து வந்து உண்டு முடித்துக் கற்பகம் ஊருக்குச் சென்றிட.. இரவு வந்த மகனிடம் தமிழரசி பூஜை பற்றிச் சொல்ல “நாமளும் போய் வரலாம் ம்மா.. பூஜை விஷயம் தான மறுக்க வேணாம்... சித்ராவுக்கு ஒரு வரன் பார்த்திருக்கேன்.. எல்லாம் நமக்குத் தெரிந்த இடம் தான்.. பேசி கூடி வந்தா இந்த மாதத்திலே சித்ரா திருமணத்த முடிச்சிடலாம்” என்று மகனும் சொல்ல



“என்ன டா பொசுக்குன்னு சித்ராவுக்கு வரன் பார்த்துட்டன்னு சொல்ற.. ஏன் அவ என்ன அப்படியா உனக்குச் சுமையா இருக்கா.. என்ன ஏதுன்னு விசாரிக்காம அவள தள்ளி விடப் பார்க்கறியா.. இது தான் ஒரு அண்ணன் செய்யற காரியமாடா” துளியும் நிதானம் அற்றுத் தமிழரசி தேளாய் கொட்ட


“ம்மாஆஆ.. சும்மா வாய்க்கு வந்தத பேசாத... என்னைக்கு நான் உனக்கு நல்ல மகனா தெரிஞ்சிருக்கேன்.. என் தங்கச்சிங்களுக்கு நான் பொறுப்பான அண்ணன் தான் அதை நீ முதல்ல புரிஞ்சிக்க.. என்னைக்கு தான் நீ மாறப் போற... நான் பார்த்தேன்னு சொன்னது நம்ம கார்த்திக்கத் தான்.. நீ சரின்னு சொன்னா அவன் வீட்டுல பேசி முறைப்படி பொண்ணு கேட்க வருவான்.. அப்படி ஒன்னும் நான் என் தங்கைகள பாழும் கிணத்துல பிடிச்சித் தள்ளிட மாட்டேன்” என்று கோபபட்டவன் அதே வேகத்துடன் தாயின் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குச் செல்ல முற்பட



திகைத்த தமிழரசி “யாரு நம்ம கார்த்திக் தம்பியா.. நல்ல பிள்ள தான்.. ஆனா இது நமக்கு ஒத்து வருமா சாமி.. அவங்க பெரிய இடம்.. நம்ம பிள்ளைய மனசு நோக பேசவோ நடத்தவோ செய்துட்டாங்கனா” என்று தாயாய் சற்று தயங்க



“கார்த்திக் அப்படிப் பட்டவன் இல்ல.. அதே மாதிரி தான் அவங்க அம்மாப்பா.. அப்படியே பேசினாலும் நிச்சயம் உங்கள மாதிரி ஒரு மாமியாரா அவங்க இருக்க மாட்டாங்க” என்றவன் “நான் தூங்கப் போறேன்” என்ற சொல்லுடன் இவன் தன் அறைக்குள் நுழைந்திட விக்கித்துப் போனார் தமிழரசி.


முடிவு செய்த படி இன்று குலதெய்வ கோவிலில் கூடி இருந்தார்கள் திபாகரன் குடும்பமும் அவன் சித்தப்பா குடும்பத்தாரும்... கோவிலில் பொங்கலுக்கு என்று எந்த ஏற்பாடும் செய்திடாத தமிழரசியிடம்



கற்பகம் “என்ன க்கா பொங்கல் எதுவும் வைக்கலையா.. முதல் முறை மகனும் மருமகளும் ஜோடியா பூஜைக்கு வராங்க.. பொங்கல் வைச்சிருக்கலாம் இல்ல” என்று தன் மனத்தாங்கலைக் கேட்டுவிட


“அதெல்லாம் வேணாம் கற்பகம்... சித்ராவுக்கு ஒரு இடம் கூடி வர இருக்கு... திருமணம் முடியட்டும் அப்ப பார்க்கலாம்” என்று தமிழரசி விட்டேந்தியாய் பதில் தரவும்



கோபம் மேலிட வெளிப்படையாகவே தமிழரசியை வாயிலிட்டு அறைத்த கற்பகம், “இந்தா தன்யா இங்க வந்து பொங்கல பார்.. நேத்துல இருந்து எனக்கு முதுகு பிடிச்சிட்டு இருக்கு.. எனக்கு என்ன வயசு குறையுதா என்ன” என்று புலம்பி நாசுக்காய் பொங்கலை தன்யாவை செய்ய வைத்து விட்டார் அவர்.



பொங்கல் முடிந்து பூஜை ஆரம்பிக்கும் வரை கற்பகத்தின் வாய் ஓயவே இல்லை “நம்ம குடும்பம் பெருசு தன்யா.. மூத்தார் இரண்டு பேரும் வேலை திருமணம்னு வெளியூர் போய்ட்டாங்க.. நானும் அக்காவும் தான் புகுந்த வீட்டுல கூட்டு குடும்பமா இருந்தோம்.. நான் வாக்கப்பட்டு வரும்போது எல்லாம் அக்காவுக்குக் குழந்தை இல்ல.. அது எங்க மாமனார் மாமியாருக்கு பெரும் குறையா இருந்தது.. மூத்தார் இரண்டு பேருக்கும் பிறந்தது எல்லாம் பொண்ணு பையன் வேற இல்லயா.. எங்க வாரிசு இல்லாம போய்டுமோன்னு பயம். அதுல அக்காவ அந்தப் பேச்சு பேசும் என் மாமியார்.. அப்ப தான் நான் உண்டானன்... அதுவரை நல்லா பேசிட்டு இருந்த உன் மாமியார் பிறகு என்கிட்ட முகம் கொடுத்துப் பேசல.. சரி என்ன கோபமோன்னு நானும் விட்டுட்டேன்.. கடைசியா எனக்கு காயத்ரி பிறந்தப்ப தான் நல்லா பேசினாங்க.. அப்ப தான் தெரிஞ்சது நான் எங்க பையன பெத்துட போறன்னு கவலையிலும்.. குழப்பத்திலும் பேசாம இருந்திருக்காங்க.. பிறகு அவங்களும் உண்டாகி திபாகரன பெத்தெடுக்க.. அதுல அம்புட்டுக் கர்வம் அவங்களுக்கு.. திபாகரன யாரிடமும் தர மாட்டாங்க.. அவன் விஷயத்துல முதல் உரிமை தனக்குத் தான்னு நினைப்பாங்க.. அதன் பிறகு எனக்கு பிரபு பிறந்தான். அதில் என் மாமியாருக்குக் கொஞ்சம் சந்தோஷம்.. ஆனா பாவம் சாகற வரை திபாகரன என் மாமியார் கிட்ட அண்ட விடல இந்த மனுஷி.. ஒரு சில விஷயத்த காலத்துக்கும் தூக்கி சுமக்கக் கூடாது மறக்கனும் மன்னிக்கனும் என்ன சொல்ல” என்றவர் “இதையெல்லாம் ஏன் நான் உன் கிட்ட சொல்றனா.. மகன்னு வரும் போது தன் உரிமையை நிலைநாட்ட அவங்க உன் கிட்ட சரியில்லாம நடந்துப்பாங்க கண்டுக்காத.. உன் நோய குத்திக் காட்டி பேசினா தட்டி விட்டுப் போ.. அதுக்காக உன்ன அடங்கிப் போகச் சொல்லல.. அவங்க சொல்லுக்கு.. செயலுக்கு எல்லாம் மனசு உடைஞ்சி மூலையில உட்காராத தான் சொல்றன்.. எல்லாத்த விட என் மகன விட்டுப் போகாத ராசாத்தி.. நீங்க பிரிஞ்சி இருந்த வரை போதும்... அவன் உன் மேல உசுரே வச்சிருக்கான்… போகப் போக நீயே அதைத் தெரிஞ்சிப்ப.. அப்படி உசுரா இருக்கவன் எங்க உன் பின்னாடி வந்துடப் போறான்னு தான் அக்கா பயப்படுது… புருஷன் இல்லாம சொத்து இல்லாம பொட்ட பிள்ளைகள வச்சிருக்கே அதுங்கள கரை சேர்க்க மகன் தயவு வேணும் இல்ல.. அதான் உன்ன விலக்கிட்டு அவன தன் மகனா ஆளப் பார்க்குது.. அதுக்கெல்லாம் உன் புருஷன் இடம் தர மாட்டான்.. அதனால நான் சொல்றது என்னன்னா நீங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருங்க அம்புட்டு தான் சரியா” என்று சொன்ன கற்பகம் இறுதியாய் தன்யாவின் தாடையைப் பிடித்துக் கொஞ்ச கண்கலங்கியது சின்னவளுக்கு.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN