நெஞ்சம் 20

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திருமண வேலைகள் படு வேகமாய் நடந்தேற.. மணநாள் நெருங்க.. மனைவியுடன் சேர்ந்து சொந்தங்களுக்கு முறையாக அழைப்பிதழ் வைத்து அனைவரையும் அழைத்தான் விதுனதிபாகரகன்.


அதில் எவ்வித தயக்கமுமின்றி மாமனார் வீட்டுக்கு முதல் முறையாக இருவரும் செல்ல.. கணவனுடன் வீட்டுக்குள் நுழைந்த தன்யா.. “விதுன் உட்காருங்க” என்று அங்கிருந்த இருக்கையைக் காட்டியவள்.. வேலையாளை அழைத்துத் தனக்கும் கணவனுக்கும் பழரசம் எடுத்து வரச் சொன்னவள்.. கணவனிடம் “விதுன் மம்மி டாடி… அவங்க ரூம்ல இருக்காங்க போல நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்ற பெண்ணவளின் குரலில் தான் எத்தனை ஆர்ப்பரிப்பு.. பின்னே எத்தனை மாதம் சென்று தாய் தந்தையரைக் காண இருக்கிறாள்… அதன் மகிழ்ச்சியே அவள் குரலில் கணவனுக்குக் காட்டிக் கொடுக்க… அந்த நொடியே மனைவியின் கரம் பற்றி இழுத்துத் தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டவன் “அதான் நாம வந்தத வேலையாள் சொல்லிட்டாங்களே.. அவங்க வரும் போது வரட்டும்.. நீ யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம இங்க உட்கார்” என்றவனின் குரல் சாதாரணம் போல் ஒலித்தாலும் ‘நீ என்னவள்’ என்ற உடைமை எண்ணமே அதில் மிகுந்திருந்தது.


அதைப் பெண்ணவளும் அறியாமல்.. மென்னகையுடன் இவள் கணவன் பக்கத்தில் அமர… பிடித்த கையை விடாமல் மனைவியின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்தவனோ.. தன்னவளின் கையிலுள்ள வளையல்களை.. ரசித்தபடி வலது கை சுட்டு விரலால் முன்னும் பின்னும் அதை அளந்தபடி இவன் கதை பேச… அதில் தன்யா மந்தகாச புன்னகையுடன் மென் குரலில் பதில் தர… இந்த அழகான ஓவியத்தைக் கண்டுகளித்த படியே.. தங்கள் அறை தாண்டி படி இறங்கி வந்து கொண்டிருந்தார் மகிழ்வரதன்.


அங்குத் தந்தையைக் கண்டதும்… கணவனின் கையை உதறியவள் “டாடிஈஈஈஈ” என்ற ஆர்ப்பரிப்புடன் ஓடிச் சென்று இவள் தந்தையைக் கட்டிக் கொள்ள… மனம் சுணங்கியது திபாகரனுக்கு.


மகள் முகத்திலுள்ள சந்தோஷத்தையும்.. குரலிலுள்ள துள்ளளைக் காணவும்… மகளின் வாழ்வை நினைத்து ஒரு தந்தையாய் மனம் நிறைந்தது மகிழ்வரதனுக்கு… “வாங்க… வாங்க” என்று இருவரையும் அவர் இன்முகமாய் வரவேற்க


திபாகரன் எழுந்து நின்று “ஹலோ சார்” என்க


அவரோ “hello young man... உட்காரு திபாகர்.. எதுக்கு சார் ன்னு சொல்லிட்டு.. மாமான்னு கூப்பிடு” என்க


முதல் தடவை இவ்வீட்டுக்கு வந்த நிகழ்வை நினைத்து உடல் இறுகியது திபாகரனுக்கு அதில் இவன் “இருக்கட்டும் சார்” என்றிட


உடனே தந்தையை முந்திக் கொண்டு தன்யா “என்ன விதுன்… மறுபடியும் சார் சொல்றீங்க.. டாடி தான் இவ்வளவு சொல்றாரே மாமா சொல்லுங்க” என்று கன்னம் குழிய சிறு கெஞ்சலுடன் மனைவி கேட்க… இனி மறுப்பான திபாகரன் “ஓகே அங்கிள்” என்றிட


“நாட் பேட்... சார்க்கு இது ஓகே” என்றவர் பின் மகளைப் பார்த்து “how are you baby.. how is your health… are you happy baby” என்று நலம் விசாரிக்க


சளுகையாய் தந்தையின் கை கோர்த்து… அவரின் தோள் சாய்ந்து அமர்ந்தவளோ “yes dad I am so soooooo happy” என்று ராகம் இழுத்தவளின் விழிகளோ எதிரே அமர்ந்திருந்த கணவனைத் தான் ஆதர்ஷித்தது… இவர்களுக்குள் இன்னும் எந்தப் பிணக்கும் சரியாகவில்லை என்றாலும்… இந்த நிமிடம் சந்தோஷமாக இருப்பதை மனநிறைவுடன் பகிர்ந்தாள் தன்யா.


அவளின் பதிலில் மகிழ்ச்சியுடன் மகளின் தலையை வருடி உச்சி முகர்ந்த மகிழ்வரதன் “daddy also so happy baby”என்க


மகள் “மாம்.. எங்க டாட்” என்று கேட்டிட


“நீங்க வர்றது மம்மிக்குத் தெரியாது.. she is in மொரீஷியஸ்”

“ஓஹ்… சாரி டாட் நான் தான் சோனியா கிட்ட அப்பாயின்மென்ட் வாங்க மறந்துட்டேன்” என்று மகள் கண்ணைச் சுருக்கி.. வலது கை விரல்களால் அவளின் நுனி காதைப் பிடித்துக் கொண்டு பாவனையாகச் சொல்ல


கண்கள் நிறைய.. பாசத்துடன் மகளின் தலையைக் கோதியவரோ “நோ… பேபி இனி நீ எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வரலாம்” என்க


இதையெல்லாம் பார்த்த திபாகரனுக்கு உரிமை உணர்வில் மனது காந்தது... அதில் “ரிது இங்க வா எல்லாம் எடுத்து வை” என்று மனைவியை அழைத்தவன் தாங்கள் வாங்கி வந்த பூ பழம் இனிப்பு மற்றும் ஆடைகளுடன் அழைப்பிதழ் வைத்து மனையாளுடன் சேர்ந்து “தங்கைக்குத் திருமணம் வச்சிருக்கேன் கட்டாயம் நீங்க வரனும் அங்கிள்” என்று முறையாக அழைக்கத் தவறவில்லை திபாகரன். பின் மாமனாரின் உபசரிப்புகளை முடித்துக் கொண்டு இவர்கள் வீட்டுக்கு வர… தங்கள் அறைக்கு வந்ததும் அதிரடியாய் தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் “என்ன டி ஹீம்.. என்ன… அப்பாவ பார்த்ததும்… என்ன விட்டுட்டு அவர் கூட ஒட்டிக்கிட்ட… you are mine… உன் பேச்சி.. மூச்சி.. சொல்.. செயல்.. சிரிப்பு எல்லாம் எனக்கு மட்டும் தான் டி” என்றவன் தன்னவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து வெளியிட



விதிர் விதிர்த்துப் போனாள் தன்யா… நிச்சயம் கணவன் குரலில் கோபம் இல்லை… மாறாகப் பொறாமையில் எழும் சிறு குழந்தையின் அடம் இருப்பதை உணர்ந்தவளின் கரங்களோ தன்னைப் போல் உயர்ந்து கணவனின் முதுகை வருட “ஹ்ம்ம்.. யப்..பா டாடி கிட்டேயே இவ்வளவு பொசசிவ்னஸ்… அப்ப நாளைக்கி நம்ம குழந்தைங்க கிட்டவும் உங்களுக்கு வருமா” என்று பெண்ணவள் சளுகையாய் கேட்டிட


மனைவியின் கேள்வியில் ஒரு நொடி தன் அணைப்பை மேலும் இறுக்கியவனோ.. பின் மனையாளின் முகம் நிமிர்த்தித் தன்னவளின் இதழை இவன் சிறை செய்திட.. கணவனின் அதிரடியில் கண்கள் விரிய பெண்ணவள் திகைப்பில் தன்னையே தொலைத்திருக்க.. இருவருக்குமான முதல் இதழ் முத்தம்… அது நீண்டு கொண்டே போக… இதைப் பெண்ணவளும் விரும்ப… அதில் தான் கேட்ட கேள்வி என்ன இருவருக்குமான பிணக்கு என சகலத்தையும் மறந்து தான் போனாள் இவள்.


பெண்ணவளுக்கு மூச்சு திணறவும் தான் மனமே இல்லாமல் மனைவியை விட்டு விலகினான் திபாகரன்.. தன்னவளின் விழிகளை நோக்கியவன் “ஒவ்வொரு முறையும் உன்ன நான் நெருங்கும் போது மூச்சு முட்ட உன்ன இப்படி முத்தமிடனும்னு தோனும் டி… ஆனா கூடவே அது உன்ன hurt செய்துடுமோன்னு எனக்குள்ள ஒரு தயக்கமும் பயமும் எழும்.. அதனாலே நான் மேற்கொண்டு போக மாட்டேன்… ஆனா இப்ப நீ நம்ம குழந்தைகளைப் பற்றி இயல்பாய் பேசவும்… என்னுளிருந்த அந்தத் தயக்கம் பயம் எல்லாம் விலகி… நான் இப்ப எப்படி feel பண்றேன் தெரியுமா… i can't... என்னால அதை விவரிக்க முடியல ரிது.. மனதில் இருந்த பாரம் எல்லாம் விலகின நிலை” என்று அதே காதலோடு மறுபடியும் மனைவியை அணைத்தவனின் அகமோ மனையாளின் மனதை அறிய விரும்ப அதில் அவளின் முகத்தைத் தன் இரு கைகளில் தாங்கியவனோ “சொல்லு.. உனக்கு சகிக்க முடியாம இல்ல.. தான” என்று சற்று கரகரத்த குரலில் இவன் கேட்க


தன்னவன் சொன்ன பிறகே தான் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை உணர்ந்தவளோ… கணவன் தற்போது எதைக் கேட்கிறான் என்பதை உணர்ந்து… வெட்கத்தில் தன் இமைகளைக் குடையெனத் தாழ்த்தியவளோ “நான் அப்படி இருந்த மாதிரி உங்களுக்குத் தெரிந்ததா” என்று கேட்டவளின் குரலும் நாணத்துடன் ஒலிக்க


“ஊஃப்” அசுவாசமாய் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவனின் உதடோ நேசத்துடன் மறுபடியும் தன்னவளின் இதழை பட்டும் படாமல் ஒற்றி எடுத்தவனின் கரங்களோ மனையாளை அள்ளி உயர்த்திட “thank you my sweet heart” என்று ஆத்மார்த்தமாய் மொழிந்தவனின் இதழ்களோ மனைவியின் நெஞ்சில் முத்தமெனப் பதிந்திட.. அதில் உடல் சிலிர்க்க கணவனுக்குக் குறையாத நேசத்தோடு தன் இரு கரங்களால் தன்னவனின் கழுதைக் கட்டிக் கொண்டாள் பெண்ணவள்.


திருமண நாளும் வர.. அதற்கான ஏற்பாட்டில் களை கட்டியது அத்திருமண மண்டபம்… எதிலும் தன் தாய்.. தன் மனைவி.. என்று இருவரையும் முன்னிருத்தியே செய்தான் விதுனதிபாகரன்… திபாகரன் தம்பதிகளே கன்னிகா தானம் செய்வது என முடிவாக… அதைச் செய்யும் போது கணவன் மனைவி இருவரின் அகமுமே சற்று நெகிழ்ந்து தான் போனது… எந்தக் குறையும் இல்லாமல்… தங்கைக்கு அனைத்தும் நிறைந்தே செய்தான் விதுனதிபாகரன்… திருமணம் சிறப்பாய் முடிய… மருவீடு என்று ஒருநாள் மட்டும் தாய் வீட்டில் கணவனுடன் தங்கிய சித்ரா… பிறகு ஹனிமூனுக்குச் சிங்கப்பூர் சென்றாள்.


திருமண வேலைகள் துவங்கியதில் இருந்தே… தமிழரசியின் முணுமுணுப்பு சற்று அதிகமாகத் தான் இருந்தது… அதிலும் திருமணம் முடிய… மகள் புகுந்த வீட்டுக்குச் சென்ற தினத்தில்… வந்திருந்த சொந்தபந்தங்களின் ஆரவாரம் எல்லாம் அடங்கவும் வீட்டில் ஆள் அரவம் அற்ற நிலையில் இன்று… தமிழரசியின் குரலோ ஓங்கி தான் ஒலித்தது…



“தன்யா.. இப்ப என் மகளுக்கு நடந்த கல்யாணத்த பார்த்த இல்ல இது தான் கல்யாணம்… உனக்கு நடந்தது எல்லாம் கல்யாணமா… ஊரு மெச்ச என் பிள்ளைக்கு நான் எப்படி எல்லாம் செய்ய நினைச்சேன்… என் ராசா கட்டிக்கப் போறவள நான் தான் முதல்ல பார்த்து பூ வைக்க நினைச்சேன்.. ஹ்ஹூம்… எங்க.. இங்க ஒரு நலங்கு உண்டா… பந்தக்கால் உண்டா.. சொந்தபந்தம் வர போக உண்டா… உறவுகள் காண சீர்செனத்திய அடுக்கினீங்களா.. இல்ல ஒரு மருவீடு தான் உண்டா… என் புள்ள என்னத்த கண்டான்… கடைசியில ஒரு சீக்காளிய இல்ல என் மவன் தலையில கட்டிட்டாங்க.. என் வயிறு எரியுது” தாய்க்கே உள்ள மனவேதனையில்.. ஆதங்கத்தில்.. முன்பு தெரியாதது எல்லாம் இன்று கண் முன் பூதமாய்த் தெரிய.. மகனின் திருமணக் கனவு நீரில் இட்ட கோலமாய்க் கலைந்து போனதில்… இன்னும் தமிழரசி என்னவெல்லாம் பேசியிருப்பாரோ… ஆனால் வீட்டில் திடீரென மகனைக் காணவும்… அதிர்ச்சியில் அவரின் வாய் இத்துடன் சிப் கொண்டு மூடியது போல் தான் பூட்டிக் கொண்டது.



அனைத்தையும் கேட்டதின் பலனாக.. தீர்க்கமான பார்வையுடன் அன்னையை நெருங்கிய திபாகரன் “நீங்க சொன்னது எல்லாம் நடந்து இருக்கும் ம்மா.. அப்பா பணத்தைத் திருடாம இருந்திருந்தா” என்று அழுத்தத்துடன் இவன் மொழிய


திகைப்பில் “திபாகராரரர” என்று தாய் அதட்டலிட


“இதுக்கு மேல என்ன பேச வைக்காதிங்க.. இது தான் உங்களுக்குக் கடைசி” என்றவன் தங்கள் அறைக்குள் நுழைய


அங்குக் கட்டிலின் மேல்.. கைகளால் கால்களைக் கட்டிக் கொண்டு.. முகம் புதைய அமர்ந்திருந்தாள் தன்யா… இன்று சித்ராவின் திருமணத்தைக் கண்ட பிறகு பெண்ணவளுக்கும் தன் இழப்பின் வலி தெரிய வர.. அதில் மனதிற்குள் புதைந்திருந்த தன் ஏக்கத்தின் ஜுவாலையை இன்று மாமியார் தன் பேச்சால் விசிறியிருக்க… இன்னும் வலித்தது பெண்ணவளுக்கு.



யாரும் அற்ற அநாதை போல்.. போதும்.. போதும் என்ற அளவுக்கு அழுது கரைபவளைக் காண முடியாமல்.. கட்டிலில் தன்னவளை நெருங்கி அமர்ந்தவனோ “ரிது அம்மா பேச்ச எல்லாம் பெருசா எடுத்துக்காத டா… நான் அவங்க கிட்ட சத்தம் போட்டுட்டுட்டு தான் வந்திருக்கேன் pls ma” என்று கெஞ்சி இவன் மனைவியைச் சமாதானப்படுத்த



கணவனின் வார்த்தையில் தன்னவனை ஏறிட்டவள் “நீங்க சொல்லுங்க… அவங்க சொன்ன மாதிரி நடக்க இருந்த உங்க திருமணக் கனவை நான் தான் சிதச்சிட்டனா.. அதோட வலியும் ஏக்கமும் உங்களுக்கு இப்பவும் இருக்கா” என்று அழுகையின் ஊடே இவள் கேட்க



‘அன்னையின் வார்த்தைக்கு மனம் வருந்துகிறாள் என்று நான் நினைத்திருக்க… இவள் ஏதேதோ.. நினைத்து அழுது கரைகிறாளே' என்று எண்ணியே இவன் மவுனிக்க


“சொல்லுங்க விதுன்”


“ப்ச்” என்று தலை கோதியபடி தன்னிலை உணர்ந்தவன்.. மனைவியின் வலது கையைப் பற்றி அவளின் உள்ளங்கையின் மேல் தன் வலது கையை வைத்து அழுத்தியவனோ “சத்தியமா இல்ல டி… இன்னும் சொல்லனும்னா கல்யாணம்.. குடும்பம்.. பிள்ளைகள் என்ற கனவு எல்லாம் எனக்கு இருந்தது இல்ல டி… ஓப்பனா சொல்லவா டீன் ஏஜ்ல கூட என் மனசு சலனப் பட்டது இல்ல.. என் வாழ்கையில் பெண்களுக்கு இடம் இருக்கு. ஆனா யாரும் என் மனச நெருங்கி அங்க இடம் பிடிக்கல.. நான் முதல் முதலா ஒரு பொண்ண ரசிச்சி.. மனசால ஆராதித்து… அவளோட புதைய நினைக்கிறனா.. அது நீ மட்டும் தான்.. அந்தக் கடவுள் எனக்காவே படைத்த தேவதை டி நீ” குரலில் காதல் இழையோட உணர்வு பிழம்பாய் இவன் மொழியவும்…



அகசஞ்சலங்கள் விலக.. தன் மனவேதனைக்கு மருந்திட்டவனை இறுக்க அணைத்து கொண்டாள் அவன் மனையாள்.
 
Back
Top