நெஞ்சம் 22

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கணவன் மனதைத் திறந்து பேசப் பேச… கேட்டுக் கொண்டிருந்த தன்யாவின் அகமோ… சுடும் மணலென… குளிர் நிலவென… இருவேரு மனநிலையில் ஆட்கொண்டது… இதுவரை அவள் நினைத்தது எல்லாம் தன்னைப் பற்றி முற்றும் முழுதும் தெரிந்து மணந்த கணவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்று.. அதனால் தான் ஒதுக்கி கொண்டாரோ என்று… ஆனால் தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் கணவன் மணந்ததை அறியவும்… அதில் தன்னைப் பற்றி எதுவும் தெரியாமலே இவருக்கு என் மேல் பிடித்தம் வந்ததா என்று நினைத்து நிலவெனக் குளர்ந்த அகம்.. இல்லை.. இல்லை ஒருவேளை வேறு வழியில்லாமல் கடமைக்காக வேண்டாத சுமையெனத் தன்னைச் சுமக்கிறாரா என்ற நினைவில் சுடு மணல் எனக் காந்தியது… அதையே வஞ்சியின் முகம் பளிங்காய் பிரதிபலிக்க… வேதனை சுமந்த தன்னவளின் முகத்தைக் காண முடியாமல் விரைந்து தன் இருகைகளால் மனையாளின் கன்னம் தாங்கியவன் “இங்க பார்… என் கண்ண பாரு டி.. அது உனக்குப் பொய் சொல்லுதா சொல்லு” என்று இவன் நிதானமின்றிக் கேட்க



அதில் கணவனின் விழியோடு தன் விழியைக் கலந்தவளின் தலையோ தன்னைப் போல் இல்லை என்ற அசைவைப் பதிலாய் தர, அதில் “ஊஃப்..” ஒரு நெடிய மூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவனோ “உனக்கு ஒன்னு தெரியுமா ரிது.. நம்ம தாத்தா பாட்டி காலகட்டத்தில் எல்லாம் திருமணத்திற்கு முன்ன பார்த்துக்கக் கூட மாட்டாங்களாம்… வீட்டுப் பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி முடித்தது தான்… பிறகு அவர்களுக்குள்ள புரிதல் இல்லையா இல்லை அவங்க யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர்னு வாழலையா… அப்படித் தான் நம்ம திருமணமும்.. முன்ன கடமைக்கென மட்டும் மனைவியா என்னுள் நுழைந்த நீ எப்ப காதலியா என்னுள் நுழைந்தன்னு எனக்கே தெரியல.. ஆனா இது தான் நிஜம்.. now I Love you and you are my soul ரிது” என்று காதலோடு பகிர்ந்தவன் சிறு மவுனத்துக்குப் பின் “இன்று வந்த காதல் அன்று இல்லாததால உன்னை நான் அன்று சந்திக்க வராமல் இல்ல.. உன் நோய் தெரிந்த பிறகு உன் மேலுள்ள கோபம் எல்லாம் வடிய நான் துடிதுடிச்சி தான் போனன்… ஆனா உன்னைச் சந்திக்க எனக்குத் தைரியம் இல்ல டி.. ஆமா நான் கோழையா தான் போனேன்… அப்படிக் கூடச் சொல்ல முடியாது சுயநலவாதியா இருந்திட்டேன்.. சத்தியமா சொல்றேன் டி அப்ப நீ என் கிட்ட என்ன கேட்டிருந்தாலும்.. ஏன் என் உயிர கேட்டிருந்தாலும் தர நிலையில தான் டி நான் இருந்தேன்… அப்படி ஒரு நிலையில எங்க உன்ன சந்திச்சா... என்னை நீ வெளி நாடு போக வேணாம்னு சொல்லுடுவியோன்னு எனக்குள்ள பயம்… நிஜமா அந்தப் பயம் தான் என்ன கோழையாவும், சுயநலவாதியாவும் மாத்துச்சு… வெளிநாடுட்டில் இருந்து வந்த பிறகு உன்ன சரிகட்டிடலாம்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேன்… எல்லாத்துக்கும் மேல மணவரையில் ஒரு முறை மட்டுமே பார்த்த என்ன நீ தேட மாட்டேன்னு நினைச்சிடன்.. ஆனா இப்ப புரியுது” என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்து மன்றாளடுடன் இவன் சொல்ல


உணர்ச்சிப் பெருக்கில் கணவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்… ‘உண்மை தானே அன்றைய மனநிலையில் இவரை வெளிநாடு செல்ல வேண்டாம் என்று தானே நான் மறுத்திருப்பேன்… பிறகு இவருடைய கனவு லட்சியம் என்ன ஆகியிருக்கும்’ என்று இந்நிலையிலும் கணவனுக்காகத் தான் பரிதவித்தது தன்யாவின் மனது.


தன்னவனின் காதலில் கரைந்தவள்.. உணர்வுகளின் பிடியில் தன்னுள்ளும் நேசம் துளிர்ந்த நிகழ்வை.. இவள் தன் நெஞ்சை முட்டும் நேசத்தைச் சொல்ல எத்தனித்த நேரம்.. செவிலியர் வந்து அறை கதவை தட்டி.. மருத்துவர் அழைப்பதாகச் சொல்லி செல்ல..



அதில் தன்னுடைய உணர்வுகளின் பிடியிலிருந்து வெளிவந்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னைச் சீர் செய்தபடி கணவனின் கைப்பற்றி மருத்துவரைக் காண விழைய… திபாகரனோ “ரிது நீ ரொம்ப டயர்டா இருக்க ரெஸ்ட் எடு நான் போய் டாக்டர்கிட்ட என்னன்னு கேட்டு வரேன்” என்க


“இல்ல விதுன் ப்ளீஸ் அப்பத்தா விஷயத்துல மட்டும் என்ன என் பிடிவாதத்துல விடுங்க” என்று இவள் கெஞ்ச



அவள் கெஞ்சலுக்குக் கட்டுப்பட்டு… நேசத்துடன் மனைவியின் தலை கோதி.. தன்னுடனே மருத்துவரைக் காண அழைத்துச் சென்றான் திபாகரன், அங்கு மருத்துவர் சொன்னது, தன்யாவின் அப்பத்தா தன் கூடை விட்டுக் காற்றாய் இப்பிரபஞ்சத்தில் கலந்து விட்டார் என்பதைத் தான்… ஆமாம் அன்றைய தினமே தன்யரித்விகாவின் அப்பத்தா… அவளை விட்டும்… இம்மானுட வாழ்வை விட்டும் மறைந்திருந்தார்.


பின் மகிழ்வரதனுக்கும், சசிரேகவுக்கும் விஷயத்தைத் தெரியப் படுத்த… அதன் பிறகு அனைத்தும் துரித நிலையிலே நடந்தேறியது.. தன் தாயை அவரின் பூர்வீக வீட்டுக்கே எடுத்துச் சென்று குறைவின்றித் தன் கடமை அனைத்தையும் செய்தார் மகிழ்வரதன்… சொந்த பந்தம்… உற்றார் உறவினர், பெரும் செல்வந்தர்கள் வருகை என அந்த இல்லமே மனிதர்களால் நிரம்பி வழிய… அனைத்துக்கும் முன்னின்று மாமனாருடன் துணையிருந்தான் திபாகரன்… மறந்தும் மனைவியைத் தன் பார்வை வட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை அவன்… காரணம் அங்கு தன்யாவை யாராலும் ஆற்றவோ தோற்றவோ முடியவில்லை… அப்பத்தாவின் மரணத்தைக் கேட்டதிலிருந்து.. அவரின் முகத்திலிருந்து தன்னுடைய விழிகளை விலக்கிக் கொள்ள விரும்பாமல், அவரை முணுமுணுப்பாக அழைத்துக் கொண்டே அப்பத்தாவின் கன்னத்தை வருடிக் கொண்டிருக்கும் மனைவியைக் காண.. காண.. திபாகரனுக்கு நெஞ்சமெல்லாம் விண்டது… பெண்ணவள் வாய் விட்டு அழுது கதறியிருந்தால் கூட இவனின் மனம் ஆறியிருக்குமோ… ஆனால் அவளோ ஒரு துளி கண்ணீர் இன்றிச் சுற்றம் சூழ்நிலை மறந்து தன்னுள்ளே மருக மருக.. காதல் கொண்ட இவன் மனதோ போர்க்களமாய் மாறியது… என்ன செய்வான்.. யாருடைய பேச்சும் தான் அவளை எட்டவில்லையே.. ஊண் இன்றி.. ஏன் பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல்.. வெளிரிப் போன உதடுகளுடன்.. காய்ந்து போன தொண்டைக் குழியுடன்.. மரப்பாச்சி பொம்மையாய் தன்னவள் அமர்ந்திருப்பதைக் காண காண இவனுள் தவிப்பு ஆழிப்பேரலை என எழுந்தது.. நேரம் கிடைக்கும் போது எல்லாம் மனையாளை நெருங்கி இவன் தன் தோள் சாய்த்துக் கொள்ள எதையும் உணரவில்லை அவள்.



அனைத்து சடங்கும் முடித்து அன்றே அப்பத்தாவை இடுகாட்டுக்கு தூக்கிச் செல்ல… எவ்விதத்திலும் மாற்றம் இல்லை தன்யாவிடம்… யார் யாரோ வந்து அவளை ஆரத் தழுவி கொண்டார்கள்… கன்னத்தைத் தட்டினார்கள்… கை பற்றி உலுக்கினார்கள் கத்த சொன்னார்கள்… அழ சொன்னார்கள்… கதற சொன்னார்கள்… ம்ஹீம்… ஒரு மாற்றமும் இல்லை பெண்ணவளிடம்…



தாய்க்குச் செய்ய வேண்டியதை முடித்து வந்த மகிழ்வரதன் மகளின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து தான் போனார்… கொஞ்ச நாளாய் பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்த மகளின் இந்தக் கோலம் அவர் மனதைப் பாதிக்கவும்… தங்கள் இல்லத்திலே மகளும் மருமகனும் தங்க அவர் வேண்டிய ஏற்பாடு செய்ய… அதற்கு மறுத்துவிட்டான் திபாகரன்… மனைவியின் துயர் நீக்க அவனுக்கு அவன் மனையாள்.. அவன் வீட்டில் அவனின் கை வளைவில் இருக்க வேண்டும்... அதன் பொறுட்டே இவன் மறுத்துவிட… அதற்கு முதலில் மனம் கசந்த மகிழ்வரதன்.. பின் உணர்ந்தவராகத் தானே அழைத்து வந்து இருவரையும் திபாகரன் வீட்டில் விட்டவர்.. வருத்தத்துடன் பரிவாய் மகளின் தலை கோதி விட்டே சென்றார் மகிழ்வரதன்… இதுவரை தாய் தந்தையரான தங்கள் இருவரின் இடத்தைத் தன்னைப் பெற்ற தாயே மகளுக்கு நிரப்பியிருக்க… முதல் முறையாக அந்த இடத்தைத் தானே நிரப்ப வேண்டும் என்று எண்ணம் கொண்டார் மகிழ்வரதன்… ஆனால் காலம் தாழ்ந்த அவர் எண்ணத்தை… முன்பே தன் அன்பாலும்… காதலாலும் நிரப்பியிருந்தான் அவர் மருமகனான விதுனதிபாகரன்.



வீட்டுக்கு வந்த பிறகும் எங்கோ வெறித்த பார்வையுடன் இருந்த மனைவிக்கு இவன் உணவை ஊட்ட பாதி இட்லியோடு பெண்ணவள் மறுக்க… தன்னவளின் இந்த அவல நிலையைக் காண பொறுக்காமல்… திபாகரன் டாக்டர் லதாவை அழைத்து வர சொல்ல



வீட்டுக்கு வந்த லதாவுக்குத் தன்யாவைக் காணவும் அதிர்ச்சி… இன்று அவருக்கு ஒரு சர்ஜரி இருந்ததால்… அப்பத்தாவின் இறுதி காரியத்துக்கு அவரால் வர இயலவில்லை… துக்க வீட்டில் பார்திருந்தால் தன்யாவை அவர் தேற்றியிருப்பாரோ என்னமோ… தன்யாவைப் பரிசோதித்தவர்.. பின் அவளிடம் நயமாய்ப் பேசி பழரச கலவையை அருந்த வைத்து… ஊசியின் மூலம் உறக்கத்திற்கான மருந்தை அவளுக்குச் செலுத்தியவர் “எதுவும் பயம் இல்லை திபாகர்… அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவ வெளிய வரல.. சீக்கிரம் சரியாகிடுவா… இப்ப அவ நல்லா தூங்கட்டும்… அது தான் அவளுக்கு மருந்து” என்றவர் நாளை பார்க்கலாம் என்று கூறி டாக்டர் லதா சென்றிட


மனைவியைத் தன் கைவளைவில் வைத்து உறங்கியவனுக்கு நல்ல உறக்கத்தில் மனைவியின் பிதற்றல் தான் எழுப்பியது… அதில் இவன் முற்றும் முழுமையாக உறக்கத்தை விடுத்து மனைவியைக் காண… அவளோ மயக்கத்துடன் கூடிய உறங்கா நிலையில் விழி மூடி தன்னை மீறி பிதற்றிக் கொண்டிருந்தாள்.


முதலில் “அப்பத்தா அப்பத்தா நீ என்ன விட்டு எங்கும் போகாத” என்ற மனைவியின் வார்த்தைகளுக்கு… இவன் அவளைத் தட்டிக் கொடுத்து தூங்க வைக்க… அதை எதையும் உணராமல்… அடுத்து அடுத்து எனத் தன் உள்ளக்கிடக்கை பொழிய ஆரம்பித்தாள் தன்யரித்விகா.


“அப்பத்தா மம்மி என்ன அடிச்சி… அப்பத்தா மம்மி சொல்றாங்க பேட் கேர்ள் தான் மடியில படுக்கக் கேட்கும்னு, நான் மம்மி டாடி கூடத் தூங்க கூடாதாம், உன் கூடத் தூங்கவா அப்பத்தா, எனக்கு சோறு ஊட்டு அப்பத்தா ஆஆஆ, நான் கிளாஸ் 1st வரலன்னு மம்மிக்குக் கோபம், நான் மக்காம், ஸ்மாட் கேர்ள் இல்லயாம், நான் குட்டி பாப்பா தான என்ன போய் மம்மி horse riding போகச் சொல்றாங்க, மம்மி மாதிரியே நான் ஸ்டேஜ்ல மைக்ல பேசனுமாம், நான் swimming class போனா எனக்கு மூச்சு திணருது அப்பத்தா, மம்மி வீட்டிலே இல்ல.. நீ என் கூட இரு அப்பத்தா, நீ என்ன மாதிரி இல்ல.. நீ என்கிட்டவே வராதன்னு சொல்லி மம்மி என்ன அடிச்சிட்டாங்க அப்பத்தா” என்றவள் தன்னை மீறி கடைசி வார்த்தையில் விசும்ப


கேட்டதும் முகத்தில் கொதிநீரைக் கொட்டியது போல் துடி துடித்துப் போனான் திபாகரன்… இவன் எழுந்து அமர்ந்து மனைவியைத் தன் தோள் சாய்த்துக் கொள்ள… அப்பத்தாவின் தோள் என நினைத்து கணவனின் தோளில் தஞ்சம் புகுந்தவள்.. விசும்பலுடனே “மம்மிக்கு என்ன பிடிக்கல உனக்கு தான் என்ன பிடிச்சிருக்கு.. எனக்கும்.. எனக்கும் அப்பத்தா… எனக்கு அப்பத்தாவ தான் பிடிக்கும், சாய்ந்தாடம்மா பிடிக்கும், டாம் அண்ட் ஜெர்ரி பிடிக்கும், உன் மடியில படுக்கப் பிடிக்கும், நீ அம்மு.. செல்லம்… தங்கம்… பட்டு.. கண்ணுன்னு கொஞ்சறது பிடிக்கும், என்னை எப்பவும் இப்படியே கொஞ்சு அப்பத்தா, எனக்கு அப்பத்தா தான் வேணும், அப்புறம் எனக்கு விதுன் அத்தானையும் பிடிக்கும். உன்ன மாதியே என்ன அத்தானும் அம்மு, செல்லம், கண்ணுன்னு கொஞ்சுவார் தான அப்பத்தா” இதைக் கேட்கும் போதே பெண்ணவள் குரல் குழைந்து நேசத்தோடு ஒலித்தது.


சிறு வயது முதல் தான் பட்ட வலிகளையும் ஒதுக்கத்தையும்… இன்றைய மனப் போராட்டத்தின் மூலம் கண்ணீரால் தன்யா கொட்டித் தீர்க்க… இனி என்னப் செய்யப் போகிறான் திபாகரன்… அதிலும் தன்னை மணவறை மட்டுமே கண்ட மனைவி முதன் முறையாக அத்தான் என்ற அடைமொழியில் அழைத்துக் கதறுபவளைப் பார்த்து இந்த ஆண்மகன் அப்படி என்ன தான் செய்துவிடப் போகிறான்.
 
Back
Top