நெஞ்சம் 24

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்றைய தினத்திற்குப் பிறகு “விதுன் நாளைக்குப் பேங்க் போகனும் மறந்துடாதிங்க, வாஷிங் மெஷின் ரிப்பேருக்கு ஆள் அனுப்பி விடுங்க, இந்த மாதம் சமையல்கார அக்கா இரண்டாயிரம் அட்வான்ஸா கேட்டாங்க நான் தந்துடவா” இப்படியாகத் திபாகரனின் அரவணைப்பில் துளி துளியாகக் கணவனை நெருங்கி இருந்தாள் தன்யா. ஆனால் இதெல்லாம் ஆண்மகனுக்குப் போதாதே. அதன் பொருட்டே மறுமுறை மனைவியை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றான் இவன்.



அன்றைய மாலைப் பொழுதின் ஏகாந்த வேளையில் இருவரும் காரில் பயணிக்க.. வெளியில் இயற்கையை ரசித்தபடியே.. முன்பு தான் கேட்டது போல் “நாம எங்க போறோம் விதுன்” என்று பெண்ணவள் மறுபடியும் கேட்க



“போனதும் ரிது டார்லிங்க்கு தெரியப் போகுது.. சோ கொஞ்ச நேரம் சஸ்பன்சா இருக்கட்டுமே அம்மு” என்று தன்னவளைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி இவனும் ஒரே பதிலைத் தர... அதற்கு ரொம்பத் தான் என்பது போல் இவள் உதட்டை சுழித்த நேரம்… அந்த தேவாலயத்தினுள் நுழைந்தது இவர்கள் கார்.. வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு.. மனைவியையும் அழைத்துக் கொண்டு இவன் முன்னே நடக்க... ஆச்சரியத்துடன் விழிகளால் அவ்விடத்தை நோக்கியவளுக்கு மெச்சும் பாவமே குடி கொண்டது. பெரிய அளவிலான மணல் மைதானம், அங்கே தனக்கே உரிய மிடுக்குடன் நடுநாயகமாய்த் தேவாலயம் வீற்றிருக்க, பக்கவாட்டு சுவற்றை ஒட்டி சிறிதே வளர்ந்த செடி கொடிகள், துளியும் தூசி குப்பைக்கு இடமளிக்காமல் சுத்தத்துடனே காட்சியளித்தது அவ்விடம்.



இவர்கள் அங்குள்ள அலுவலக அறைக்குள் நுழைய, "ஹலோ.. மிஸ்டர் விதுனதிபாகரன் வாங்க.. வாங்க" அங்கிருந்த அதிகாரி திபாகரனை வரவேற்க


"ஹலோ சார்... she is my wife" என்று அவருக்கு மனைவியை அறிமுகப்படுத்தியவன் "father இருக்காரா.. இல்ல பிஸியா?" என்று கேட்க


"இல்ல.. இல்ல.. வழக்கம் போலப் பிள்ளைகளுக்கான மாலை நேர வகுப்பறையில் இருக்கார் வாங்க" என்ற அந்த அதிகாரி, பின்புறம் இருந்த ஒரு குடிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்ல



இவர்கள் உள்ளே நுழைய "ஹாய் அங்கிள்ஈஈஈஈ... திபாஆஆஆஆ அங்கிள்" என்ற கூக்குரலுடன் இவர்களை வரவேற்றது அங்கிருந்த குழந்தைகள் பட்டாளம், அதில் புன்னகை முகத்துடன் எல்லோருக்கும் ஹாய் என்றவன்.. சேரில் அமர்ந்திருந்த ஃபாதரை நெருங்கி இவன் தன்யாவை அறிமுகப்படுத்த... இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவர் பின் சில பல கேள்விகளைத் தன்யாவிடம் கேட்க அதற்கு மென்புன்னகையுடன் இவள் பதில் தந்தாலும்... அவளின் கவனம் தங்களிடம் இல்லை சுற்றி உள்ள பிள்ளைகளிடம் தான் என்பதை உணர்ந்த ஃபாதர் "போம்மா.. போ.. குழந்தைங்க என்ன செய்றாங்கன்னு பக்கத்திலிருந்து பாரு" என்று அவளைக் குழந்தைகளிடம் போகச் சொல்லவும் இவள் கணவனைக் காண "நீயும் கூடப் போ திபாகர்" என்ற ஃபாதருக்கு ஒரு தலை அசைப்பை பதிலாய் தந்த படி எழுந்து மனைவியுடன் நடந்தான் திபாகரன்.



என்ன தான் அந்த இடம் குடில் அமைப்பில் இருந்தாலும்.. உள்ளே விஸ்தாரமாகப் பெரிய ஹால் போன்ற அமைப்பில் இருந்த அந்தக் கூடம் முழுக்க மின்விளக்குகளும்.. மின்விசிறிகளும் சுழல, நடுநாயகமாக இருந்த மேஜை முன்னிருந்த இருக்கையில் ஃபாதர் அமர்ந்திருக்க... அவர் எதிரே தரையில் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாகக் குழந்தைகளுடன் ஒருசில ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.



குழந்தைகளை நெருங்கி தன்யா பேச பேச அவளின் உள்ளமோ பாறாங்கல்லாய் கனத்து தான் போனது. காரணம் எப்படியும் அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு ஏழு முதல் பதினைந்து வயது வரை தான் இருக்கும். குழந்தைத் தனத்துடன்.. குண்டு கன்னங்களும் கள்ளமில்லா பிள்ளை சிரிப்பையும் அவர்கள் பெற்றிருக்க... ஆனால் உடலில் மட்டும் ஒவ்வொருவரும் சில குறைகளுடன் இருந்தார்கள். அதில் சில குழந்தைகள் பிறக்கும் போதே கை கால்கள் செயலிழந்த நிலையில் இருக்க, இன்னும் சில குழந்தைகள் விபத்தில் கை, கால் மற்றும் பார்வையை இழந்திருந்தார்கள். அதை எல்லாம் பார்த்து தான் தன்யாவின் மனது கனத்துப் போனது.. முன்மே அங்குள்ளவர்களுக்குத் திபாகரன் அறிமுகம் என்பதால் அவனிடம் குழந்தைகள் சகஜமாகப் பேச.. இவளிடம் மட்டும் முதலில் தயங்கிய சில வாண்டுகள் பின் தன் சேட்டைகளைக் காட்ட ஆரம்பிக்க... அதில் கட்டவிழ்ந்த கன்றெனத் தானும் மாறி தான் போனாள் பெண்ணவள். என்ன தான் குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல் அந்தக் குழந்தைகள் ஓவியம், பாட்டு, இசை, யோகா, கட்டுரை வாசித்தல் என்று அவர்கள் தங்களுக்கான தனித் திறமையில் ஒளிர, ஆச்சிரியத்துடன் அதைக் கண்டவளோ, பின் ஆர்வத்துடன் தானும் குழந்தைகளை உற்சாகப்படுத்த. பேச்சு.. சிரிப்பு ஆட்டம் என்று நேரம் செல்ல... இறுதியில் கண்ணைக் கசக்கிக் கொண்டு தான் இவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தது அந்தப் பிஞ்சுகள்.



இரவு உணவை வெளியே முடித்துக் கொண்டு... வீட்டில் உள்ளவர்களுக்கான உணவையும் வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டுக்கு வர முதல் ஆளாக இவள் உடையை மாற்றிக் கொண்டு வந்து படுக்கையில் விழுந்திட.. மனைவியின் யோசனை படிந்த முகத்தையும்.. மவுனத்தையும் கண்டு



கட்டில் திட்டில் தலையணை வைத்து அதில் சாய்ந்து அமர்ந்த படி மனைவியைத் தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டவனோ "என்ன ஆச்சி என் அம்முவுக்கு... அப்படி என்ன யோசனை" என்று கேட்டவனின் கை விரல்களோ மனைவியின் புருவத்தை நீவி கொண்டிருந்தது.


"ப்ச்.. எதுவும் இல்லங்க"


"அப்ப எதுவோ இருக்கு.. சொல்லு டி" இவன் சற்றே அழுத்திக் கேட்க



"இன்னைக்குப் பார்த்தோமே அந்தக் குழந்தைங்க எல்லாம் எவ்வளவு க்யூட் இல்ல.. எல்லாம் ஓவர் சேட்ட பிடிச்சதுங்க.. எப்படி விதுன் அந்தக் குழந்தைகளால இவ்வளவு இயல்பா இருக்க முடியுது... எனக்கு இதுயத்துல சின்னதா பிரச்சினைன்னு தெரிய வந்ததும் நான் எவ்வளவு அழுது.. feel பண்ணி துவண்டு போனேன் தெரியுமா.. அப்பத்தா என்ன அப்படித் தாங்குவாங்க... அதுக்கே நான் நொடிஞ்சி போய் உட்கார்ந்துடுவேன். ஆனா இந்தக் குழந்தைங்க.. யாரும் தாங்காமலே எவ்வளவு சாதிச்சி இருக்குங்க.. அந்தக் கண்ணு இல்லாத தம்பி அழகா பாடறான்.. இரண்டு கையும் இல்ல ஆனா வாயிலே paint brush பிடிச்சிட்டு அழகா டிராயிங் பண்றா அந்தப் பொண்ணு... அது மட்டுமா கால் விரல் கொண்டே ஒருத்தன் சிலை செய்றான்.. எப்படி ங்க... இந்தக் குழந்தைங்க எல்லாம் கிரேட் தான் இல்ல" என்று அதிசயத்தவள் "நானும் சின்ன வயசுல இந்தக் குழந்தைங்க மாதிரி ஸ்ட்ராங்கா இருந்திருந்தா.. பெரிய ஆளா ஏதோ ஒரு துறையில் வந்திருப்பேன் இல்ல" என்று தன் இழப்பையும் தன் மன வருத்தத்தையும் இயலாமையுடன் இவள் பகிர



இது, இதைத் தானே திபாகரன் எதிர் பார்த்தான்.. இத்தனை நாள் மனைவியுடனான வாழ்வில்.. அவளின் குணம் அறிந்து, தன்னவளை அங்கே அழைத்துச் சென்று.. சிலதை உணர்த்தி... அவளின் நிலைப்பாட்டை அவளே உணர வேண்டும் என்பது தானே இவனின் திட்டம். பின்னே ஒரு கை தேர்ந்த தொழிலதிபரான இவனுக்கு இதை எல்லாம் செய்யச் சொல்லியா தரணும்.



"ஹேய்.. கண்ணம்மா.. chill baby.. 21 வயதும் சாதிக்கிற வயது தான் பேபி.. சொல்லு உனக்கு எதுல விருப்பம்னு சொல்லு.. அதுலயே நீ சாதிக்க நான் எல்லாம் சொல்லி தரேன்" என்று இவன் பரிவோடு சொல்ல



தன்யாவினுள் சாரல் மழை... கணவனை நிமிர்ந்து பார்த்தவள் "உங்களுக்கு நான் இப்படி இருக்கிறது பிடிக்கலையா விதுன்.. இல்ல நான் படிக்கலன்னு யோசிக்கிறீங்களா" என்று கேட்டவள்.. பின் முகம் கசங்க குரல் உடைய "உங்களுக்கும் நான் மம்மி மாதிரி பெருசா சாதிக்கலன்னு கோபமா.. அவங்கள மாதிரியே நீங்களும் என்ன ஆபிஸ் வா factory வான்னு கூப்பிட போறீங்களா" என்னவளின் குரலோ ஒருவித இயலாமையில் ஒலிக்க



அதில் மனைவியின் நுனி மூக்கை நிமிட்டிய திபாகரன் "ஹப்பா.. என் ரிது டார்லிங் பாப்பான்னு தெரியும். ஆனா இவ்வளவு குட்டி பாப்பான்னு எனக்கு இன்னைக்குத் தான் தெரியும்" என்றவன் "அதென்ன எப்ப பாரு மம்மி சொல்வாங்க.. மம்மி திட்டுவாங்கன்னு சொல்லிகிட்டு.. அப்படி உன் மம்மி என்ன தான் செய்வாங்க... இப்ப என் கிட்ட சொல்லு பார்ப்போம்" என்று கேட்டிட


"சின்ன வயசுல இருந்தே நான் எல்லாத்திலும் 1st வரனும்னு மம்மிக்கு ஆசை.. டாடியும் அவங்களும் எப்பவும் 1st வருவாங்களாமே.. அதான் என்னையும் அப்படி இருக்கச் சொல்லுவாங்க.. நீங்க சொல்லுங்க விதுன்.. மம்மி டாடி அப்படி இருந்தா நான் அப்படி இருக்கனுமா" என்று கேட்டவளின் குரலில் ஆற்றாமையே மிதமிஞ்சி இருந்தது.



"இல்ல தான்" என்று உடனே ஒத்துக் கொண்டவன் "ஆனா இங்க பார் அம்மு இந்தச் சமூகக் கட்டமைப்பு இப்படித் தான்.. டாக்டர் பிள்ளை டாக்டர் ஆகனும்.. தொழில் அதிபர் பிள்ளைகள் அவர்களை விட உச்சம் தொடனும்.. இதெல்லாம் எழுதப் படாத சட்டம்.. இதைப் பார்த்து வளர்ந்த உன் மம்மி மட்டும் எப்படி இருப்பாங்க.. உனக்கு ஒன்னு தெரியுமா.. பூனைக்குப் பிறந்தது புலியா இருக்கலாம்.. ஆனா புலிக்குப் பிறந்தது பூனையா மட்டும் இருக்கக் கூடாது.. அது உலக மகா பாவம்"



என்ற கணவனின் பேச்சில் இடைவெட்டி "ஆமா ஆமா அப்படித் தான்.. அதனால அவங்க கட்டி வச்சிருக்கிற ஸ்டேடஸ் எல்லாம் சரிஞ்சிடுமாமே.. ரப்பிஷ்... நான் நானா இருக்கேன்.. இதுல எங்க அவங்க ஸ்டேடஸ் காணாம போகுது.. அப்பயிருந்து நான் உட்கார்ந்தா குத்தம் நின்னா குத்தம்.. இதுல எனக்கு இப்படி ஒரு heart problem வரவும்.. போச்சி போச்சி இதுல நீ என்னத்த கிழிப்ப.. என்னத்த சாதிப்பன்னு ஒப்பாரி வேற.. சரின்னு நான் ஆப்பரேஷன் எல்லாம் முடிச்சி வந்தா.. எப்ப கம்பெனி வர எப்ப பாக்டரி வந்து கத்துக்கப் போறன்னு ஒரே நச்சரிப்பு.. இவங்க கிட்ட இருந்து எப்படா தப்பிக்கலாம்னு நான் இருந்தப்ப தான்.. நீங்க ஒரு வருஷம் என்னைய உங்க வீட்டுல" என்றவளை


"நம்ம வீடு" என்று இவன் இடைவெட்டி திருத்த



"ஹய்.. அதான் அதான் நம்ம வீட்டுல இருக்கச் சொல்லவும் இங்க வந்துட்டேன்" என்று மடை திறந்த வெள்ளமாய்க் கொட்டியவளின் மனதில் அன்றிருந்த வலியும் வேதனையுமே நிறைந்து இருந்தாலும்.. தற்சமயம் வருத்தமே அவளின் குரலில் ஓங்கி இருந்தது.



"சரி தான் அங்கிருந்து தப்பிச்சி இங்க வந்த மேடம்.. இப்ப ஒருவருடம் கழிச்சி என்ன செய்யப் போறீங்க" என்று கேட்டவனின் மனமோ "உங்களை விட்டு நான் போக மாட்டேன்" என்ற பதிலுக்காய் தவம் இருந்தது.



ஆனால் அப்படிச் சொல்பவளா தன்யா "ப்ச்.. என்ன செய்யறது விதுன்... ஒருவருடம் கழிச்சி நான் போய்த் தானே ஆகனும்.. அப்பவும் எனக்காக உங்க ரிது டார்லிங்க்காக.. உங்க அம்முகுட்டிக்காக, உங்க கண்ணம்மாக்காக, உங்க செல்லத்துக்காக.. நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சொல்லி தந்து வழி நடத்த மாட்டிங்களா என்ன" இவள் சற்றே புருவம் உயர்த்தி மந்தகாச புன்னகையுடன் கேட்க



"ஹா.. ஹா.. மேடம் விதுனதிபாகரன் பொண்டாட்டி இல்ல அதான் இப்படிப் பேசுற.. என் கண்ணம்மாவுக்கு நான் செய்யாம இருப்பனா.. ஆனா இப்படி நீ என் கை வளைவுல இருந்து கேட்குற மாதிரி அது இருக்காதே.. அதான் நானும் செய்யனுமான்னு யோசிக்கிறேன்" என்றவன் யோசிப்பது போல் புருவத்தைச் சுருக்கி பாவ்லா காட்ட


"Fradu.. fradu" என்று சிரிப்புடன் கணவன் நெஞ்சில் இவள் செல்லமாய் அடிக்க.. அதில் புன்னகையுடன் மனைவியை மெல்ல அணைத்துக் கொண்டவன் "ஜோக்ஸ் அப்பார்ட்.. அப்புறம் என்ன கேட்ட.. ஹாங்.. உன் மம்மி மாதிரி நானும் உன்ன பாக்டரிக்கு வர தான் சொல்லுவேன்" என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன கணவனைத் தான் புன்னைகை மறைய திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்யா.
 
Back
Top