நெஞ்சம் 25

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அகம் முழுக்கத் தளும்பிய.. தன் ஏக்கங்களையும்.. வலிகளையும் தங்கு தடையின்றி அடைமழையாய் தன்யா கொட்டித் தீர்க்க.. அதில் கணவன் தந்த பதிலில் முதலில் திகைத்தவளினுள் படிப்படியாய் கோபம் குமிழிட "அப்ப நீங்களும் மம்மி மாதிரி தான்.. என் மேல உங்களுக்கு அக்கறை இல்ல.. நான் தான் சொல்றனே எனக்குக் கூட்டத்தைக் கண்டா நடுங்கும்.. ஸ்டேஜ் ஏறனும்னா அழுகை வரும்.. மைக்ல பேச சொன்னா பேச்சு குழரும்.. அப்ப அதெல்லாம் பெருசு இல்ல?" இன்னும் என்னவெல்லாம் கொட்டியிருப்பாளோ அதற்குள் மென்மையாய் தன்னவள் முகம் நிமிர்த்தி அவள் இதழை இவன் சிறை செய்திருக்க.. கோபத்தில் கண்ணில் நீர் தேங்க விழிகளை விரித்தவள்.. பின் இமை மூடி மெல்ல மெல்ல.. அவ்விதழ் ஒற்றலில் கரைந்து போக.. மென்மையிலும் மென்மையாய் அம்முத்தத்தை இவன் முடித்து வைக்க



இதழ் ஒற்றலில் கரைந்தாலும்.. விலகியதும் "இதென்ன பழக்கம் கோபமா பேசும் போது திசை திருப்புற மாதிரி முத்தம் குடுக்கறது" என்று பெண்ணவள் சீற


"ஓ.. முத்தம் உனக்கு அப்படியா தெரிந்தது" என்று வியந்தவன் "இது உன் கோபத்த திசை திருப்ப தந்த முத்தம் இல்ல.. மனம் தளர்ந்து உன் வேதனைய நீ கொட்ட.. அதைக் கேட்குற திடம் என்கிட்ட இல்லன்றதால.. உன் பேச்சை நிறுத்த நான் தந்த முத்தம் இது" என்று உள்ளார்ந்து சொல்லிய படி இவன் தன்னவளை அணைத்துக் கொள்ள.. கணவனின் அன்பில் கரைந்து தான் போனாள் பெண்ணவள்.



உண்மை தான் எத்தனையோ முறை மனைவி உணர்ந்தும்.. உணராத தருணங்களில் தன் மன வேதனையைத் தன்னை மீறிச் சொல்லியிருக்க.. அதையெல்லாம் கேட்டுக் கொண்டவனுக்கு இன்று அவள் வாய் மொழியாக முதலும் முடிவுமாய்க் கேட்க நினைத்தவனுக்கு.. மனைவியின் ரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் போக.. அதன் பொருட்டே இது அவனின் இதழ் ஒற்றல் ஆகும்.



தன்யா மௌனம் கொள்ள, அவள் கேசத்தை வருடியவன் "இங்க பாரு அம்மு.. நீ சொன்ன பிரச்சனை, தயக்கம் எல்லாருக்கும் உள்ளது தான். என்ன... அதைத் தாண்டி சில பேர் வருவாங்க.. சில பேர் அந்த வட்டத்துகுள்ளே நின்னுடுவாங்க.. சோ வாட்.. எனக்கு எப்பவும் நீ நீயாவே தான் இருக்கனும். உன் இயல்போட நீ இரு அது போதும்.. உன் வட்டத்திலிருந்து வெளிய வந்து நீ சாதனைப் பெண்ணா திகழனும்னு நான் விரும்பல. ஏன், வெற்றி மாலையோட நீ என்றும் வலம் வரனும்னு நான் நினைக்கல... குறைந்த பட்சம் நீ முயற்சியாளரா இருந்தா.. எனக்கு அதுவே போதும்" என்ற கணவனை இவள் கலக்கத்துடன் ஏறிட


அதில், "கண்ணம்மா இப்படிப் பார்க்காத டி.. எனக்குத் தெரியும் என் டார்லிங்க பற்றி.. குருவி தலையில பனங்காய் வச்சி சர்க்கஸ் காட்ட சொல்லி மிரட்டி ட்ரில் வாங்கிற அளவுக்கு நான் ரிங் மாஸ்டர் இல்ல.. நீ உன் இயல்பில இரு.. அதே இயல்பிலே உனக்குக் கை வர்றத நீ செய்ய முயற்சி பண்ணு" என்று இதமாய் மனைவிக்கு எடுத்துச் சொல்லியவன்



"எல்லாத்துக்கும் மேல உன்னைய இனிமே என்னால தனியா விட முடியாது.. ஆபிஸ்ல என்னால கவனம் செலுத்த முடியல.. பாக்டரியில வேலை அதிகம்.. இனிமே இப்ப போல என்னால வீட்டுக்குச் சீக்கிரம் வர முடியாது.. முன்ன மாதிரி லேட்டாகும்.. அதுல நீ எப்படியோ என்னவோன்னு என்னால இருக்க முடியாது.. நீ என் கூடவே இரு.. அதனால கம்பெனி வா.. நீ எதுவும் செய்ய வேணாம்.. என் கண்ணெதிர்ல இரு அது போதும்.. நீ நினைக்கலாம் இதெல்லாம் எதுக்கு இப்ப இருக்கிற மாதிரியே இருப்போம்னு.. வேணாம்.. வேணவே வேணாம்.. அப்பத்தா இறப்புக்குப் பிறகு உன்னைய நான் தனியா விடத் தயாரா இல்ல" என்றவனின் குரலில் அதிகாரம் இல்லை என்றாலும் அழுத்தத்துடனே ஒலித்தது அக்குரல்.




"வெற்று மனம் சாத்தானின் புகலிடம்" என்னும் கருத்துக்கு ஏற்ப மனைவியின் தனிமையும்.. வெறுமையும் எங்கே அவளின் முந்தைய ரணத்தை நினைக்க வைத்துவிடுமோ என்ற எண்ணம் இவனுக்கு.. அதன் பொருட்டே இவன் தன் முடிவில் ஸ்திரமாக இருக்க. அதைத் தன்யா ஏற்க வேண்டுமே.. கணவனிடம் வாதிடவோ.. மறுக்கவோ இல்லாமல் பெண்ணவள் மௌனம் காக்க.. அவள் யோசிக்க அவகாசம் தந்து இப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஆண்மகன்.



"மெல்ல பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்" என்பார்கள் அப்படித் தான் ஆனது தன்யாவின் மனது.. கணவனின் அரவணைப்யில் மெல்ல மெல்ல கரைந்து தான் போனாள் பெண்ணவள்... முன்பே அவளுக்குக் கணவன் பால் துளியும் வெறுப்பு இல்லை சற்றே விலகி தான் இருந்தாள்... அப்படி விலகியிருந்த தூரத்தையும் தன் அன்பாலும் காதலாலும் நிரப்பியிருந்தான் திபாகரன்.. ஆமாம் இவன் மட்டும் தான் நிரப்பியிருந்தான்.. இன்னும் தன்யா தன் அகம் தொட்ட காதலை தன்னவனிடம் பகிரவில்ல.. அதற்கு அவளுக்கு அவகாசம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்



நாட்கள் நகர.. கணவனிடம் தன்யா தன் முடிவை உடனே சொல்லவில்லை என்றாலும் பிறகு தன் சம்மதத்தை இவள் சொல்லிவிட.. அதன்படி இதோ தற்போது எல்லாம் தங்கள் கம்பெனிக்கு சென்று வருகிறாள். காலையில் வழக்கம் போல் திபாகரன் அலுவலகம் செல்ல.. பின் தனக்கான வேலைகளைப் பொறுத்து தாமதமாய் இவள் கிளம்புபவள்.. மாலை குலமதியும் தவமதியும் வீடு வரும் நேரத்தில் இவளும் வீடு வர... இதைப் பார்த்த தமிழரசி மாமியாராக மனதில் உள்ள பொறுமலை எல்லாம் நாள் முழுக்க முணுமுணுப்பாக வெளியிடுவார் தான்.. அதை எல்லாம் கணவன் மனைவி இருவருமே கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டார்கள்.



அவள் கம்பெனி சென்று முழுதாக ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அன்று சசிரேகா மகளுக்கு அழைத்திருக்க.. இன்பமாய் அதிர்ந்தவள்.. எடுத்ததும் "மம்மிஈஈஈஈ" என்று சின்னவள் ஆவலில் தன் மொத்த நேசத்தையும் கொட்டி அழைத்திட



அதை எல்லாம் கண்டு கொள்ளாத.. சசிரேகா, "what is this தன்யா.. கடல் போல நம்ம கம்பெனி இருக்க.. நீ எதுக்கு அங்க எல்லாம் போற.. உனக்கு training தான வேணும்.. இங்க நம்ம factory வா.. அத விட்டுட்டு அந்த cheap place எதுக்கு உனக்கு" என்று எவ்வித நலவிசாரிப்பும் இல்லாமல் அவர் சீற




தன் ஆர்ப்பாட்டம் எல்லாம் வடிய.. முழுமையாக உடைந்து தான் போனாள் தன்யா.. கண்ணில் கூட நீர் தேங்கி விட்டது இவளுக்கு.. எத்தனை மாதங்கள் கழித்துத் தாயின் குரலைக் கேட்கிறாள் அதுவும் போனில்.. அந்தப் பரபரப்பில் தான் ஆசையோடு அழைப்பை ஏற்றாள் தன்யா. ஆனால் நடந்தது.. தாயின் கடுமையில் பேச்சற்று மகள் இருக்க.. அதற்கும் சசிரேகா "நான் சொல்றத கேட்டுட்டு இருக்கியா.. எனக்கு இப்ப முக்கியமான அப்பாய்ன்மெண்ட் இருக்கு.. அதற்கு இடையில தான் உனக்குக் கால் பண்ணேன்.. நீ செய்யறது எல்லாம் சரின்னு நினைச்சிட்டு இருக்கியா.. ரப்பிஷ் ஏதோ அங்க போய் நாளு நாள்ல திரும்பி வந்துடுவன்னு பார்த்தா.. நீ என்ன அந்த வீட்டுல செட்டில் ஆக முடிவு செய்துட்டியா.. அதான் அந்த வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் முடிந்தது தான.. இன்னும் நீ எதுக்கு அங்க இருக்க" என்று தன் ஆளுமையுடன் இவர் கேள்விகளைத் தொடுக்க.. மகளிடம் எவ்வித எதிர் வினையும் இல்லை என்று அறிந்ததும் "தன்யா நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்று அதட்டவும்



அதற்குச் சின்னவள் "இருக்கேன் மம்மி" என்று மொழிய




"இங்க பார் பேபி.. மம்மி உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேன்.. உனக்கு அங்க சவுகரியப் படாது.. நீ நம்ம வீட்டுக்கு வந்துடு.. நீ இத்தனை நாள் அங்க இருந்ததே i can't tolerate. உன் டாடி கிட்ட சொன்னப்ப அந்தப் பொண்ணு கல்யாணத்தைக் காரணம் காட்டினார்... பிறகு உன் அப்பத்தா காரியத்த சொன்னார்.. இப்ப என்னனா நீ அவங்க கம்பெனி போறேனு சொல்றார்.. வேணாம் நீ இங்க வந்துடு மம்மிக்கு தெரியும் உனக்கு எது நல்லதுன்னு" இறுதியில் இதமாய்.. பதமாய்ப் பேசி சசிரேகா வைத்திட



தன்யாவின் மனதினுள் ரணமாய் மறுபடியும் வேதனையின் சாயல்கள்.. அதோடு கலக்கத்துடன் கூடிய குழப்பம் வேறு.. ஏற்கனவே தன்யாவுக்கு நாள்தோறும் கம்பெனி வருவதில் முழு ஈடுபாடு இல்லை.. இவள் அலுவலகம் வர கணவன் சில கோப்புகளைத் தந்து.. இது இது இப்படி இப்படி என்று சொல்லிக் கொடுத்து.. சில குறிப்புகளை எடுக்கச் சொல்ல.. அதைக் கடனே என்று செய்வாள் இவள்.. factoryயை காணும் போது அங்குள்ளவர்களிடம் திபாகரன் பேசுவதைக் கவனித்துப் பார்த்து கற்றுக் கொள்ளச் சொல்ல.. கடமைக்குத் தலையாட்டி கொள்வாள் பெண்ணவள். அதே canteen பக்கம் போனால் துளியாகச் சிரத்தை எடுத்துக் கொண்டு.. அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டுக் கணவனிடம் சொல்லி உடனுக்குடனே செய்து தருவாள். மனையாளின் பிடித்தமற்ற தன்மையையும்.. ஒட்டுதல் அற்ற நிலையையும் திபாகரன் கண்டு கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனாக அவளிடம் எதையும் கேட்டு கொள்ளவில்லை.. சரி மனைவியாகச் சொல்லுவாள் என்ற எண்ணத்தில் இவன் இருக்க.. இன்று தாயிடம் பேசியதை மறைத்து.. தலைவலியைக் காரணம் காட்டி விரைவிலேயே வீட்டுக்குக் கிளம்பி விட்டாள் பெண்ணவள்.



கணவன் மூலம் மகளின் இன்றைய தினசரியைத் தெரிந்து கொண்ட சசிரேகாவுக்கு.. மேலும் மேலும் மருமகன் மேல் வெறுப்பு தான் படிந்தது. வாழ்வோ தாழ்வோ.. எதுவாயினும் என் மகளுக்கு எங்கள் மாளிகையில் நடக்கட்டும்.. எங்கள் சாம்ராஜ்ஜியத்தை ஆள பிறந்தவள் அவள்.. இப்படி ஒன்றுமே இல்லாத அன்றாடங்காய்ச்சி வீட்டில் மகள் இருப்பதை விரும்பவில்லை சசிரேகா.. மகளுக்கு மாற்று இருதயம் கிடைத்து ஆப்பரேஷன் நல்ல முறையில் முடியவும்... சசிரேகா எண்ணத்தில் உதித்தது மகளுக்கு விவாகரத்து செய்து.. தங்கள் தகுதிக்குத் தகுந்த மறுவாழ்வை முடித்துக் கொடுப்பது என்று தான். தற்போது அதெல்லாம் காற்றில் இட்ட கற்பூரமாய்க் கரைந்து விட... அதன் வெளிப்பாடு தான் மகளை அழைத்து அவர் பேசியது... மகளாவது நான் கணவன் வீட்டில் தான் இருப்பேன் என்று சொல்லி தன் மனதை வெளிப்படுத்தி இருக்கலாம். ஏற்கனவே பிடித்தம் இல்லாத வேலையில் உழன்றவளுக்கு.. தகுந்த பதிலைத் தாயின் பேச்சுகளுக்குத் தர முடியாமல் போக. விளைவு சற்று நேரத்தில் எல்லாம் மகளைக் கைப்பேசியில் அழைத்தார் மகிழ்வரதன்.. ஏற்கனவே தலைவலியில் வீடு வந்தவளுக்குத் தந்தையின் அழைப்பை ஏற்பதில் சுணக்கம் தான்.. இருந்தும் இவள் ஏற்றிட



மகிழ்வரதன், "how are you baby"


"Fine daddy"



"உன் மம்மி feel பண்றா.. உனக்கே தெரியும் நாம எவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆள்றோம்னு.. சோ நீ திபாகர் கம்பெனில தொழில் கத்துகிறத விட... இங்க உன்னால ஈசியா ஸ்டடி பண்ண முடியும்.. அதுவும் இல்லாம எங்களுக்குப் பிறகு நீ தான தொழில பார்க்கனும்.. அதனால நீ நம்ம கம்பெனி வா.. நான் திபா கிட்ட பேசுறேன் பேபி" என்று மனைவி சொல்லைத் தட்டாத கணவனாகத் தன் பங்குக்கு அவரும் மகளைக் கம்பெனிக்கு அழைக்க



இவளுக்குத் தான் 'உன் வாழ்க்கை எப்படிப் போகுது.. உனக்கு என்ன வேணும்.. டாடி உன்ன எங்கவாது அழைச்சிட்டுப் போகவா என்று மகளிடம் பேச எவ்வளவு இருக்கும்.. அதை எல்லாம் கேட்காம.. மருமகன் கம்பெனி சின்னது.. எங்க கம்பெனி பெருசுன்னு பெருமை பேச மட்டும் தான் தெரியும். இதுல என்னைய வேற கம்பெனிக்கு வா.. வான்றது.. எல்லாம் இந்த மனுஷனால வந்தது" என்று மனதிற்குள் தந்தையையும்.. கணவனையும் ஒருசேர வறுத்தெடுத்தவள்



"இல்ல டாடி.. இங்க நான் கம்பெனி போனாலுமே.. என்னால ஒன்ற முடியாம தான் இருக்கேன்... இதை நான் இன்று விதுன் கிட்ட சொல்ல இருந்தேன்.. நிச்சயம் சொல்லிடுவேன்.. pls என்ன கம்பெல் பண்ணாதீங்க.. நான் நம்ம கம்பெனிய எப்பவும் பார்த்துக்க மாட்டேன்.. சோ அதுக்கு நீங்க வேற எதாவது ஏற்பாடு பண்ணுங்க" என்று தாயிடம் சொல்ல முடியாததை எல்லாம் தந்தையிடம் தங்கு தடையின்றித் தன் மறுப்பை அழுத்தம் திருத்தமாகவே சொல்லி விட்டாள் தன்யா.
 
Back
Top