தென்றல் 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

அக்னிசாகரி குடியிருக்கும் வீட்டின் அமைப்போ சுற்றி தோட்டத்தின் நடுவில்.. முன் வாசலில் இருபுறமும் திண்ணை வீற்றிருக்க.. உள்ளே ஒரு கூடத்துடன் கூடிய சிறியதான சமையலறையோடு பின்புறம் கிணற்றுடன் சேர்ந்த குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் மேலே ஓடுகள் வேய்ந்த படி பார்க்கவே ரம்மியமான தோற்றத்தில் இருக்கும்.. அக்னிக்கு பிடித்தமான இடம் இந்த வீடு.



தற்போது ஆதியை மோட்டார் அறையில் நாராயணன் தங்கச் சொல்ல.. முற்றிலுமாக அதிர்ந்தாள் பெண்ணவள். அந்த அறைக்குச் செல்ல வேண்டும் என்றால் இவள் குடியிருக்கும் வீட்டின் முகப்பு வழி அல்லது வரப்பு வழியாகச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். தற்போது ஆதி இருக்கும் நிலைமைக்கு வரப்பு வழி சாத்தியம் இல்லை.



ஏதோ தங்கள் கூட்டுக்குள் ஆதி நுழைவதாக மனதினுள் சுணக்கம் எழ.. யார் என்றே தெரியாத அந்நிய ஆடவனை.. தங்கள் வீட்டு வாசல் வழியே என்றாலும் சேர்க்க விருப்பமில்லை. அதேநேரம் பெண்ணவளுக்கும் வேறு வழியில்லையே.



இதைச் செய்யச் சொல்வது ஊர் தலைவர் நாராயனணாயிற்றே. இவள் மகனோடு இந்த ஊருக்கு வந்த போது கனிவோடு நோக்கி இவளுக்குத் தக்க பாதுகாப்பை தந்து அனைத்தும் செய்தவர்.. நாளையும் செய்வார். அறுபது வயதில்.. முறுக்கி விட்ட மீசையுடன் வெள்ளை வேட்டி சட்டையில்.. முதிர்ந்த தோற்றத்தில்.. கம்பீரத்துடன் அவர் பேச ஊரே அதற்குத் தலையாட்டும்.. பிறகு அக்னிசாகரி எல்லாம் எம்மாத்திரம்.. அதுவுமின்றி இந்தத் தோட்ட வீடே அவருடையது தான்.. மறுக்க முடியாமல் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டாள் அக்னி.



ஊரை நோக்கி தொடர்ந்த மூவரின் பயணத்தில் வழி எங்கும் கேள்வி கேட்ட படி வந்த மகனுக்கு ஆதி மேலுள்ள கோபத்தில் "ஹ்ம்" கொட்டிய தாயின் பதிலில் சலித்த யுவன் தங்களுடன் வந்த ஆதியிடம், "பசிக்குதா.. பிச்சி வேணுமா.. ரத்தம் வருதா.. வலிபோச்சிய்.. ஊசி வேணா சொல்லு.. வேற சட்ட போட்டுக்கோ" என மழலையில் தன் கேள்விகளைத் தொடர.. ஊசியின் உபயத்தால் உறக்கம் கண்களைத் தழுவும் நிலையிலும் குழந்தையோடு சரிக்கு சமமாய் ஆதி வார்த்தையாடி வர.. இது எதுவும் அக்னியின் கருத்தில் பதியவில்லை.



வீட்டின் முன் வாசலில் வாகனம் நிற்க.. இவளுக்காகவே காத்திருந்தார் போல் தன் வயதையும் மீறி வேக எட்டுகளுடன் வண்டியை நெருங்கிய ஜானகி, "என்ன புள்ள.. இவ்வளவு தாமதம் செய்துட்ட.. சீக்கிரம் வர்றதுக்கு என்ன.. நம்ம யுவன வேற கூப்டுகினு போனியே.. நான் என்னமோ ஏதோன்னு இல்ல பதறிட்டு இருக்கேன்" எனச் சாடியவரின் பேச்சு எல்லாம் வண்டியிலிருந்து இறங்கிய ஆதியை காணவும், "வாங்க தம்பி" என்று வரவேற்றவரின் கண்கள் அக்னியிடம் 'இது யாரு டி' எனக் கேட்டது



அக்னி சோர்வுடன் "ஆத்தா.. எல்லாக் கதையும் உனக்குப் பிறகு நான் விவரமா சொல்றேன்.. எனக்குப் பசிக்குது முதல்ல சோறு போடு" என்றவள் உள்ளே சென்று நாற்காலி ஒன்றை எடுத்து வந்து வெளியே வைத்தவள், "இதுல உட்கார் ஆதி.. நான் சாப்பிட்ட பிறகு உனக்கு மோட்டார் அறையை ஒதுக்கித் தரேன்" என்க



ஆதி தலையசைக்கவும். கை, கால் அலம்பி வந்த அக்னி முன் சோற்றை வைத்த ஜானகி, "என்ன டி ஏதோ மோட்டார் அறைன்னு சொல்ற" எனக் கிசுகிசுத்தவரிடம் இவள் உணவை உண்ட படியே நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க



அவ்வளவு தான் ஆடித் தீர்த்து விட்டார் ஜானகி. "எடுபட்ட நாய்.. அந்தச் சண்முகமா இப்படிப் பண்ணான்.. அவன் கையில கட்டை முளைக்க.. வயித்தால போக.. அவன மண்ணு லாரி அடிக்க.. சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கற அவனுக்கு இம்புட்டு ஏத்தமா.. அவனுக்கு என்ன கேடு.. பரம்பரை சொத்துக்காரன்.. நம்மள மாதிரி ஏழைகளோட கஷ்டம் எல்லாம் எப்படித் தெரியும்.. இவன் பத்து மூட்டையை அடுக்குனா என் பொண்ணு நாளு மூட்டையை அடுக்கிட்டுப் போறா.. இவன் அப்பன் வீட்டுச் சொத்தா குறையப் போது. ஏதோ ரெண்டு காய் கூடையோட நாளு மக்கமனுஷால ஏத்திட்டுப் போய்க் கூட்டியார்ற.. இதுல அவனுக்கு எங்க குடையுதுன்னு தெரியல.. எங்க வீட்டு ராஜா குட்டிக்கே பயம் காட்டியிருக்கான்.. நாசமா போறவன்.. அவன் நல்லாவே இருக்க மாட்டான்" தன்னுடைய ஐம்பத்தி நாலு வயதுக்கு எத்தனை மனிதர்களைப் பார்த்திருப்பார்.. அதனுடைய தாக்கம் எல்லாம் ஜானகியிடமிருந்து வார்த்தையாக வெளிப்பட்டது.



"போதும் ஆத்தா செத்த சும்மா இரு.. அவரை உசுரோட சமாதி கட்டாம நீ ஓய மாட்ட போல" என்று அக்னி அதட்டவும் தான் சற்றே தன் முணுமுணுப்பைக் குறைத்தார் அவர்.



இவர்கள் பேச்சை எல்லாம் கண் மூடி விழிப்பும்.. உறக்கமும் இல்லா நிலையில் கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி.



"ஏன் அக்னி.. அந்தத் தம்பிக்குக் கால் சரியில்லைன்னு சொல்ற.. அங்க கட்டில் இல்ல.. பின்ன அந்த அறை எப்படி வசதிப்படும்.. நீ தலைவருக்குச் செத்த போன போட்டுக் கொடு நான் அதுக்கு எதாவது ஏற்பாடு செய்யச் சொல்றேன்" என்றவருக்கு



"ஏன் ஆத்தா அவர் என்ன நம்ம வீட்டு விருந்தாளியா.. பரிபூரண வசதியோட தங்க வைக்க" என்றிவள் கேட்டுக் கொண்டிருந்த நேரம்.. நாராயணன் அங்கு வர.. அவர் பின்னே வேலையாள் ஒருவன் மடக்குக் கட்டில், போர்வை, படுக்கை விரிப்பு, தலையணையோடு கூடவே ஒரு தண்ணீர் ஜக்கையும் கொண்டு வந்திருந்தான். ஆதி தாங்கி தாங்கி நடப்பதைக் காணவும் அவனின் சிரமம் உணர்ந்து சகலத்தையும் யோசித்து இவைகளைக் கொண்டு வந்திருக்கார். நாராயணன் குணமே இது தான்.. தங்கள் ஊரை நம்பி வருபவர்களுக்கு.. தமிழர் மரபுப்படி உபசரிக்கும் கொள்கையுடையவர்.



நாராயணன் சென்ற பிறகு.. ஜானகி, "அட எதுக்குத் தம்பி.. காத்தில்லாத அறையில முடங்க போற.. காத்தாட இங்க வெளியவே கட்டில விரிச்சிப் போட்டுப் படுத்துக்கோ.. எனக்கும் இங்க திண்ணையில தான் உறக்கமே. அம்மாவும், பிள்ளையும் உள்ள உறங்குவாங்க.. உனக்கு எதாவது வேணும்னா தயங்காம என்னை எழுப்பு சரியா" என்றிட



அதை ஏற்று ஆதி கட்டிலை விரித்து அமரவும்.. கட்டிலைக் கண்ட குஷியில்.. யுவன் கட்டிலில் ஏறி ஆதியைப் பிடித்துக் கொண்டு.. எம்பி எம்பி குதிப்பதை பார்த்த அக்னி கோபத்தில், "யுவன் குதிக்காத.. கீழ வந்து அமைதியா உட்கார்" என்று மகனை அதட்ட.. அதில் யுவனின் சோர்ந்த முகத்தைக் கண்ட ஜானகி "விடேன் அக்னி.. குழந்தை ஏதோ இப்ப தான் விளையாடறான். நானும் வந்ததுலயிருந்து பார்க்கறேன்.. யுவன் முகமே சரியில்ல.. இங்க உட்கார்றான்.. அங்க போறான்.. அதை இதை எடுக்கிறான்.. ஆனா பேச்சே இல்ல.. ஏதோ உன் மடியில் உட்கார்ந்து நீ ஊட்டின சோற மட்டும் ரெண்டு வாய்த் தின்னான்.. அதுக்குப் பெறவு இப்ப தான் கட்டில பார்க்கவோ விளையாடுது குழந்தை" என்று குறைபட்டவரை



"அவன் மேல நான் கோபமா இருக்கேன் ஆத்தா.. அதான் நான் பேசலைன்னு என்னையே சுத்தி சுத்தி வருது கழுத"



என்றவளின் பதிலில் ஜானகி, "ஏன் டி குழந்தை அப்படி என்ன தப்புச் செய்தான்.. பார் ராஜா முகமே சோர்ந்து தெரியுது"



"என்ன தப்பு செய்தானா.. நான் எத்தனை தடவை இவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன் ஆத்தா... எனக்கு எதாவது ஆனாலோ.. யாராவது என் கிட்ட பிரச்சனை செய்தாலோ அழாம என்னை விட்டுத் தூரப் போய்ச் சுத்தியிருக்கறவங்களைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கனா இல்லையா. ஆனா இன்னைக்கு யுவன் என்ன செய்தான் தெரியுமா என் காலைக் கட்டிகிட்டு அழறான்.. அதனால எனக்கு எவ்வளவு தொல்லை தெரியுமா.. எல்லாம் யுவனால தான்" எனப் படபடப் பட்டாசாக வெடித்த அக்னி தொல்லை என்று சொல்லும் போது மட்டும் ஆதியை அழுத்தமாய் நோக்க.. அதாவது நீ எனக்குத் தொல்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல



அதை அறிந்து கொண்ட ஆதி முகம் சிவக்க, "இப்ப உனக்கு என்ன பிரச்சனை சாகரி.. யுவனை நீ என்ன சூப்பர் மேனா வளர்க்க ஆசைப்படுறியா.. அவன் குழந்தை தானே.. இப்படித் தான் இருப்பான்.. குழந்தைனா இப்படித் தான் இருக்கனும்.. அவன் தான் சரி.. நீ தான் சரியில்ல.. அதே மாதிரி இன்னைக்கு நடந்தது எதுவும் யுவனால இல்ல.. உன் தொழில் போட்டியால.. புரியுதா" என்றவனின் குரலில் இருந்த நிதானமே அவன் கோபத்தைப் பறைசாற்ற.. அதிலும் "புரியுதா" என்று கேட்டவனின் வார்த்தையில் உள்ள அழுத்தத்தில்.. அவனின் கோபம் யுவனுக்கே புரிய



தாயின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த யுவன், "பிச்சி.. பிச்சி.. கொன்னுடுவேன்" எனத் தன் செப்பு உதடு பிதுங்க.. ஆள்காட்டி விரலால் சைகை செய்தவன் தன் பிஞ்சு கரத்தால் ஆதியின் முதுகில் அடிக்கவும்.. 'அதாவது நீ என் அம்மாவைத் திட்டுவாயா' என்ற எண்ணத்தில் யுவன் அடிக்க.. தற்போது அதிர்வது ஆதியின் முறையானது.



ஆதியின் அதிர்ச்சியைப் பார்த்த ஜானகி, "இவன் இப்படித் தான் தம்பி.. இவன் அம்மாவை யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது.. அக்னி வெங்காயம் நறுக்கி அழுதாலே.. அந்த வெங்காயத்தை மிதிப்பான் எங்க ராஜா குட்டி" என யுவனின் பெருமை பாட மௌனமாய்க் கேட்டுக் கொண்டான் ஆதி..




ஜானகியே "அப்பா அரவணைப்பு இல்லாம வளர்ற குழந்தை தம்பி யுவன்.. அவன் தப்பு தண்டா வழிக்கு போகாம.. யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்லிட கூடாதுன்னு அப்பாம்மாவா பார்த்து பார்த்து வளர்க்கிறா அக்னி.. அவன் நல்ல மனிதனா வளர்ந்தாலே போதும் தம்பி" என்றவரின் நீண்ட பேச்சில் அங்கு அமைதி தவழ.. அவரின் பேச்சு புரியா நிலையில் இயல்பு போல் யுவன் ஆதியை அடித்த சந்தோஷத்தில்.. கிளுக்கி சிரித்த படி கட்டிலிலிருந்து இறங்கி ஓடிச் சென்று தாயின் காலைக் கட்டிக் கொள்ளவும்.. அக்னி மகனை வாரி அணைத்தவள், "கொன்னுடுவேன் வார்த்தையெல்லாம் நீ பேசக் கூடாது.. தப்பு.." என மென்மையாகக் கண்டித்து மகனை உச்சி முகர.. அந்தக் காட்சியைத் தன் ஆழ்ந்த பார்வையால் சிறைபிடித்தான் ஆதி.



உடல் வலியாலும்.. மருந்தின் வீரியத்தாலும் ஆதியின் உறக்கம் இரவு உணவுக்கு ஜானகி அவனை எழுப்பும் வரை தொடர்ந்தது. அவனுக்கு இரவு உணவாக ஒரு தட்டில் சுடசுட பூரியையும்.. கூடவே அவியலும்.. கொண்டைக்கடலை மசாலாவையும் எடுத்து வந்த ஜானகி "யுவனுக்கு லீவ் நாளுன்னா இப்படித் தான்.. பூரி.. ஆப்பம்னு இருக்கும்.. இந்தா சாப்பிடு.. சோறு வேணும்னாலும் இருக்கு.. எனக்கு எல்லாம் சோறு தான் சரிப்படும்" என்றவர் அவனிடம் தட்டைத் தர.




உணவின் நேர்த்தியிலும்.. மணத்திலும் இவனுக்குப் பசி எடுக்க.. தயங்காமல் அதை வாங்கிக் கொண்டவன் உண்ண.. அதன் ருசி இவனைக் கட்டிப்போடவும் ஒரு மெச்சும் பார்வையை அக்னியின் மேல் செலுத்தினான் ஆதி. ஆனால் அவளோ இவன் பார்வையை அறியாமல்.. அறிந்து கொள்ள விரும்பாமல்.. மகனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.



தாய், மகள் இருவரும் கூடத்தில் அமர்ந்து இரவு உணவை உண்ண.. அப்போது அக்னி மெதுவான குரலில், "ஏன் ஆத்தா ஆதியை.. வெளியே படுக்கச் சொன்ன.. மோட்டார் ரூமுக்கு அனுப்பியிருக்கலாம் இல்ல.. எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை" அவளுக்கு ஆதி இங்குத் தங்குவதே பிடிக்கவில்லை.. இதில் அவன் வெளித்தோட்டத்தில் படுக்க.. அதனை அசூயையாக உணர்ந்தவள் ஜானகியிடம் மெல்லக் கேட்டிட



அவரோ, "அட போ அக்னி.. அந்தத் தம்பிக்கு யாரு இருக்கா.. நம்மள மாதிரி அநாதை.. உடம்பு நோவோட பஞ்சம் பொழைக்க வந்து நிக்கற பிள்ளைய நாம பார்த்துக்கலைனா யார் பார்ப்பா.. இருந்துட்டு போகட்டும்.. உன்னையும்.. யுவனையும் காப்பாத்தியிருக்கே.. நீ ஏன் தயங்கற சாப்பாட்டுக்கு செலவாகும்னு யோசிக்குறியா"



அக்னி இயல்பிலேயே சிக்கனம். எண்ணி எண்ணி அவசியம் இருந்தால் மட்டும் தான் செலவு செய்வாள். அதே மகன் என்று வரும் போது.. அப்படி இருக்க மாட்டாள். இதோ இன்று யுவனுக்கும்.. ஆதிக்கும் உணவை வாங்கிக் தந்து இவள் பசியாக வந்தாளே அப்படித் தான் இருப்பாள். அதன் பொருட்டே ஜானகி கேட்க




"நீ வேற.. நான் அதுக்குச் சொல்லல ஆத்தா.. ஊரு என்ன சொல்லும் அதுக்குத் தான்"



என்ற மகளுக்கு "ஆமா ஊரு பேசும்.. அது என்னைக்குத் தான் பேசாம இருக்கு.. எதையாவது பேசிட்டுப் போது.. அதுக்குப் பார்த்தா நாம வாழ முடியுமா.. ஏன் நம்ம வீட்டுல சொந்த பந்தம்னு யாரும் ஆம்பிளை வரக் கூடாதா என்ன.. யாராவது கேட்டா என் ஒன்று விட்ட தம்பின்னு சொல்லிடறேன்.. அந்தத் தம்பியைப் பார்த்தாலும் தப்பா தெரியல அக்னி. அப்படித் தப்பானவங்க யாரையும் தலைவர் ஊருக்குள்ள விட மாட்டார் அவரை நம்பு" என்றவர் தன் பேச்சால் அக்னிக்கு நம்பிக்கையைத் தர.. இவை அனைத்தும் பின் வாசலிலிருந்த ஆதியின் செவியில் விழுந்தது.



இரவில் மகனைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த அக்னி இன்றைய நினைவுகளை அசைபோட.. அதில் இறுதியாய் ஆதியைப் பற்றி ஜானகி சொன்ன வார்த்தையில் வந்து நின்றது. உண்மை தான் இன்று பார்த்த வரை ஆதி அவசியமானால் மட்டுமே இவளிடம் பேசினான். பேச்சு மட்டுமல்ல பார்வையில் கூடக் கள்ளப் பார்வையோ.. ஆர்வ பார்வையோ இல்லை.. அப்படி அவன் பேசியது கூட அக்னியின் கண்ணைப் பார்த்து நேர் கொண்ட பார்வையில் தான். இருந்தும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதோ என்ற எண்ணம் இவளுக்கு. ஏனோ ஆதியைப் பிடிக்கவில்லை பெண்ணவளுக்கு. ஆனால் ஒரு நாள் அவனே இவளின் அகம் நிரம்பப் பிடித்துக் கொள்ளப் போகிறான். அப்போது என்ன செய்யப் போகிறாள் இந்த அக்னிசாகரி
 
Back
Top