தென்றல் 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அக்னிசாகரி என்றும் ஒரு விஷயத்தைத் தீர ஆராயும் குணத்துடன் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் விழிப்போடு கவனித்து மனிதர்களை ஓரளவுக்கு மதிப்பிட்டு அவர்களின் குணங்களை அவதானித்து அதற்கேற்ப பழகுபவள்.. அப்படி இல்லாமல் போனால் இன்று குழந்தையுடன் தன்னந்தனியாக இவள் இந்த உலகத்தில் வாழ முடியுமா என்ன?..



ஆனால் ஆதி இன்று அந்த எல்லைக்குள் வராமல் நிற்பதை குறித்து இவளுக்கே அதிருப்தி தான்.. அவளுக்குப் பிடிக்காத ஆதி.. ஒரு வாராமாக வீட்டில் தங்கி யுவனிடம் ஒட்டுதலாகப் பழகுவதைத் தடுக்கவும் முடியாமல் நாராயணன் வார்த்தைக்குக் கட்டுப்படவும் முடியாமல் இருந்தாள். அப்படியும் சொல்ல முடியாமல் மகனின் விஷயத்தில் ஆதியை மனது ஏற்றுக் கொள்கிறது.. ஆனால் மூளை தடுக்கிறது.




ஆதி யுவனிடம் பாசாங்கு இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு பேசிப் பழக, மகன் சலுகையோடு ஆதியிடம் தஞ்சமடையும் நேரம் என் மகன் ஒரு ஆணின் அன்பிற்கு இவ்வளவு ஏங்குகிறான் என்ற நிதர்சனத்தை ஒரு வலியோடு தாங்கியபடி.. மனது நிறையத் தான் செய்கிறது இவளுக்கு.




மகனைக் கொண்டு மட்டும் தான் ஆதியைப் பிடித்ததா எனக் கேட்ட மனதின் கேள்விக்குத் தற்சமயம் இவளிடம் பதிலில்லை. அந்த இருவரின் அழகான உலகத்தைக் கண்டு ரசிப்பவள்.. ஒரு போதும் அந்த உலகத்திற்குள் செல்ல விழையவில்லை..




ஆனால்.. எதற்காக இது.. ஆதியின் நோக்கம் தான் என்ன.. ஒருவேளை முதலில் குழந்தையைப் பிடித்துப் பின் தன்னை நெருங்க நினைக்கிறானா என்று நினைக்கவும் வழியில்லாமல் ஆதியின் பங்களிப்பு எல்லாம் முழுமுதலாக யுவனிடம் மட்டுமே இருந்தது. இந்த ஒரு வாரத்தில் ஆதி எந்தவொரு விகல்பமும் இல்லாமல் இவளைச் சந்தித்துப் பேசியதை விரல் விட்டு எண்ணி விடலாம்.




அதே நேரம் மூளையோ இன்றைய காலகட்டத்தில் நடக்கும் குற்றங்களை வைத்து நம்ப மறுத்து.. பிடித்தமில்லா எல்லைக்குள் ஆதியை நிறுத்த.. இருவேறு மனநிலையில் பெண்ணவள் தினம் தினம் சீர்குலையும் நேரத்தில் அதிலும் நாளைக்கு மகனுக்குப் பிறந்த நாள் என்ற நினைவில் நெஞ்சில் என்றும் அணையாமல் எறியும் தீயால்.. இன்று நடந்ததைக் காணவும் முற்றும் முழுதாகத் தன்னிலையை இழந்து விட்டாள் பாவை.




விளைவு.. இவளின் கன்னத்திலும்.. மகனின் முதுகிலும் கைத்தடங்கள்.. அடித்த தாயிடமே மூக்கை உறிஞ்சியபடி இடுப்பைக் கட்டிக் கொண்டு மடியில் படுத்திருந்தான் யுவன்.




மகனைக் காண காண பரிதவித்துப் போனது மனது.. இதுவரை ஒரு சுடு சொல் சொல்லாதவள் இன்று என்ன காரியம் செய்து விட்டாள்.. "அம்மாவுக்குக் கோபம் தங்கம்.. அதான் அடிச்சிட்டேன்.. சாரி பட்டு" மகனின் தலைகோதி இவள் சொல்ல




தாயின் முகத்தைப் பார்த்து, "சாரி ம்மா" எனத் தாயின் சொல்லையே தன் மழலையில் வழி மொழிந்தான் மகன்.




அதே நேரம் வெளியே ஆதியின் அரவம் கேட்க.. பின், "சாப்டீங்களா" என்ற அவனின் கேள்விக்கு




"எங்க தம்பி.. நானும் யுவனும் மதியம் சாப்பிட்டது.. அவ பச்ச தண்ணி கூடப் பல்லுல படாம இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்கா.. இதோ ராபொழுதாகிடுச்சு.. அந்தக் குழந்தை ஏதோ இருக்கற தீனியைத் தின்னுட்டு அவ மடியிலேயே படுத்திருக்கு" என்ற ஜானகியின் பதிலில் ஆதியிடம் எந்தொரு எதிரொலியும் இல்லை.



அங்கிருந்து விலகியவன்.. சிறிது நேரத்திற்கெல்லாம் கையில் உணவுடன் வந்தவன்.. அதை ஜானகியிடம் தந்து "இந்தாங்க.. சாப்பிடுங்க" என்க



"எனக்குச் சோறு இருக்கு தம்பி"



"அதை நாளைக்குப் பழுதா சாப்பிடுங்க.. இப்ப இதுல எல்லாருக்கும் இருக்கு சாப்பிடுங்க" என்றவன்



இதுவரை தான் செய்யாத ஒன்றைச் செய்தான் அவன். எப்போதும் ஆதியின் இருப்பு தோட்டத்திலுள்ள கட்டிலோடு சரி.. அக்னியின் வீட்டு வாசலைக் கூட மிதித்ததில்லை. ஆனால் இன்று வீட்டின் நிலைவாசலுக்கு வெளியே நின்று




"யுவன்.. யுவன் கண்ணா" என்று மெல்ல குழந்தையை அழைக்க



அந்தப் போக்கிரியோ தாயின் மடியிலிருந்து முகத்தை மட்டும் திருப்பி இவனை ஆர்வத்தோடு பார்த்ததோடு சரி.. எழுந்து சென்றால் அம்மா மறுபடியும் அடித்து விடுவாளோ என்ற பயம் குழந்தைக்கு.



வெளியில் அவன் பேசியதை எல்லாம் கேட்டுக் கொண்டுதானிருந்தாள் அக்னி.. இதோ தற்போது அவன் வந்து நின்று மகனை அழைப்பது இவளின் ஓர விழி பார்வையில் தெரிந்தும் அவனை ஏறிட்டும் காணாமல்.. தன் நிலையிலிருந்து மாறாமல் அமர்ந்திருந்தாள்.




முதலில் ஆர்வத்தைக் கண்ட யுவனின் பார்வையில் பின் பயத்தைக் காணவும்.. பரிதவித்துப் போன ஆதி, "எனக்குக் கோபம் தங்கம்.. அதான் சண்டை போட்டேன்.. தப்பு தான்.. சாரி பட்டு" என்றிவன் உள்ளார்ந்து அக்னியிடம் கேட்காத மன்னிப்பை அவள் மகனிடம் கேட்க



இருவரும் ஒத்த மனதுடன் மன்னிப்பு கேட்ட வார்த்தையை அறிந்து கொள்ளும் பக்குவத்திலா குழந்தை இருக்கிறான்.. ஆதியிடம் செல்ல விழையும் மகன் தனக்காகப் பயந்திருப்பதை உணர்ந்த அக்னி..



பிள்ளையைத் தூக்கி நிறுத்தி "போ.." என்று தலையசைக்க

அந்த நொடியே மகிழ்ச்சியுடன் ஓரடி ஆதியை நோக்கி எடுத்து வைத்த யுவன்... நின்று தாயைப் பார்த்து "ம்மா அடிப்பியா" என மழலையில் கேட்க



"மாட்டேன்" என அக்னி சொல்ல


"அழுவியா ம்மா"


"மாட்டேன்"



"ஆதிகிட்ட சண்டை போடுவியா"



அதற்கும் "மாட்டேன்" என்ற தாயைப் புன்னகையுடன் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் பதித்துக் கொஞ்ச



இதையெல்லாம் பொருள் விளங்கா பாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதியிடம் ஓடி வந்து யுவன் காலைக் கட்டிக் கொள்ள.. அவனைத் தூக்கி முகமெங்கும் ஆதி முத்தமழை பொழிய..



"ஆதிஈஈ" என்ற அழைப்புடன் வாகாய் அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் குழந்தை.



வழமை போல் கட்டிலிலமர்ந்து.. யுவனைத் தன் மடியில் அமர்த்தி "என்னை அழ வைப்பியா" என ஆதி கேட்க



"மாட்டேன்.." என்றது இந்தச் சின்னச் சிட்டு



"என் கிட்ட பேசாம இருப்பியா"



"மாட்டேன்" என்றது இந்தப் போக்கிரி



"அம்மா கிட்ட ஆதி வேணாம்னு சொல்லுவியா"



"மாட்டேன்.. மாட்டேன்" எனக் கொஞ்சும் புறாவாக.. தன் மணிக் கழுத்தை இட வலமாய் அசைத்த படி.. தத்தையாய் மிழற்றினான் அக்னிசாகரியின் யுவராஜன்.



ஆதியின் கண்களில் கண்ணீரின் தடங்களைக் கண்ட யுவன் தாய்க்கு வலிப்பதைப் போல் ஆதிக்கும் வலிப்பதாக நினைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டு "வலி போச்சா" எனக் கேட்க.. முற்றும் முழுவதுமாக இந்த யுவராஜனிடம் தன்னை இழந்தான் ஆதி.



யுவனைப் போலவே ஆதி கேள்வி கேட்க.. அதற்கு மகன் தன்னைப் போலவே பதில் தந்தததை எல்லாம் கேட்டிருந்த அக்னி.. மெல்லப் புன்னகைத்துக் கொண்டாள். ஆதி நல்லவனோ கெட்டவனோ.. மகனுடனான அவனின் உறவை முற்றும் விலக்க முடியாமல்.. ஆழ்மனதிலிருந்த ஒன்று இவளைத் தடுத்தது.




ஆதி, யுவன் சாப்பிட அவனுக்கு இஷ்டமான இட்லியை.. மினி சாம்பார் இட்லியாக வாங்கியிருக்க.. டப்பாவினுள்ளிருந்த சாம்பாரில் குட்டி, குட்டியாய் மிதந்த இட்லியைப் பார்த்ததும்.. ஏக சந்தோஷம் யுவனுக்கு. ஆதி ஊட்டி விட.. தலையை ஆட்டி.. ஆட்டி சப்புக் கொட்டியபடி உண்ட யுவனின் பாவனையில் தன்னைத் தொலைத்தான் ஆதி.



காலையில் எழுந்த அக்னி இயந்திரமாய்த் தன் வேலைகளை முடித்தவள்.. படுக்கையிலிருந்த மகனை நெருங்கி.. நெற்றியில் முத்தமிட்டு தன் வாழ்த்தைச் சொல்ல.. அதில் தூக்கம் கலைய எழுந்தமர்ந்த யுவன் கன்னக் குழி மிளிர..



"ம்மா இப்ப என் பர்த் டே வா" எனக் கேட்க



வழக்கம் போல் மகனின் கன்னக் குழியில் நெஞ்சடைக்க.. "ஆமா டா செல்லம்.. இன்னைக்குத் தான் என் யுவராஜன் பிறந்தான்.. அப்ப பிறந்த நாள் தானே?" என்றவள்



மகனைக் குளிக்க வைத்து.. புத்தாடை உடுத்தி உணவையும் ஊட்ட.. காலையில் யுவன் எழும் முன்னே வெளியே சென்றிருந்த ஆதி இன்னும் வராததால் அவனை எதிர்பார்த்து யுவன் நொடிக்கு ஒருமுறை வாசலை நோக்கி கொண்டிருந்தான்.. இந்த வீட்டில் தெய்வ படங்கள் என்று எதுவும் இல்லை.. சிறு வயதில் இழந்த அக்னியின் தாய் தந்தையர் இருக்கும் சிறிய கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை யுவன் வணங்கும் நேரம்.. வெளியே ஆதியின் குரல் கேட்கவும்.. யுவன் வெளியே பாய.. நிலைப்படியிலேயே அவனைக் கையில் அள்ளிக் கொண்ட ஆதி முத்தமிட்டு பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லியவன் வெளியே தூக்கி வர..




அதற்குள் "எங்க gift.. எங்க gift" என நூறு முறையாவது கேட்டு விட்டான் யுவன்.. முன்னமே யுவனுக்குப் பிறந்த நாள் பரிசு தருவதாக ஆதி சொல்லியிருக்க.. அதான் இத்தனை ஆர்ப்பாட்டம்... வெளியே ஆதி வாங்கிய பரிசு மேல் மெல்லிய சாட்டின் துணி போர்த்தியிருக்க.. அதை யுவனை விட்டு ஆதி எடுக்கச் சொல்ல... இவ்வளவு பெரிய பரிசா என்ற கேள்வியுடன்.. ஆர்வத்தோடு யுவன் அதைச் செய்ய... அங்கே இருந்தது குழந்தைகளுக்கான பேட்டரி கார்.. அடேங்கப்பா அதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் கண்கள் விரிய யுவன் செய்த ஆர்ப்பாட்டம் எல்லாம் கொஞ்சம் நஞ்சமில்லை.. மகிழ்ச்சியில் எத்தனை கேள்விகள்.. விண்ணை முட்டும் ஆர்ப்பரிப்பில்.. யுவன் முகத்தில் தான் எத்தனை பாவனைகள்.. அனைத்தையும் தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டான் ஆதி. குழந்தையான யுவனுக்கு இது நிஜ காராகவே தோன்ற.. இதை வாங்கித் தந்த ஆதியை அத்தனை பிடித்துப் போனது யுவனுக்கு.




அக்னியோ பரிசைக் கண்டு மலைத்துத் தான் போனாள்.. அவன் ஏதோ சிறியதாக வாங்கித் தருவான் என நினைத்திருக்க.. நிச்சயம் இத்தனை விலையுயர்ந்த பொருளை எதிர்பார்க்கவில்லை.. இவ்வளவு பணம் ஏது.. அதையே ஆதியிடம் இவள் கேட்க




"இத்தனை நாள் நான் சம்பாதித்தது எல்லாம் என் தேவை போக.. பேங்க்ல தான் இருக்கு.. நானும் யாருக்கும் இப்படி எல்லாம் செய்ததில்ல.. அன்றைக்குத் திருடு போனது என் certificate மட்டும் தான்.. என் பர்ஸ் அதிலிருந்த பணம்.. கார்ட் எல்லாம் இப்பவும் என் கிட்ட தான் இருக்கு" என்று பட்டும் படாமல் விளக்கம் தந்தவன்



"இதுவரைக்கும் ஒரு பைசா கூடத் தராம நான் உன் வீட்டுல சாப்டுகிட்டு இருக்கேன்.. அதுக்காக இதை நான் ஈடு செய்யல.. இது யுவனுக்காக.. இதுக்கு எல்லாம் தடை விதிக்காத" என்றவன் "ஆனா.. எனக்குப் புரியல.. இதையெல்லாம் நீ அவனுக்கு வாங்கித் தரனும்.. பெத்த மகனுக்குச் செலவு செய்ய ஒரு தாய் இவ்வளவு யோசிப்பாளா?" என்ற ஆச்சரியம் நிறைந்த கேள்வியில் விக்கித்து நின்றாள் பாவை.




காலை உணவுக்குப் பின் ஒரு வித இயந்திரத்தனத்துடனே மகனை பிள்ளையார் பட்டி கோவிலுக்கு அழைத்துச் சென்றவள்.. பின் மதியம் மகனுக்குப் பிடித்த உணவைச் செய்து தந்தாள் பாவை.




பிறந்த நாள் அன்று எப்போதும் காப்பகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு யுவன் கையால் எதாவது கொடுப்பாள் அக்னி.. அதன் பொருட்டு இன்று மாலை ஜானகியோடும்.. மகனோடும் இவள் காப்பகம் செல்ல எத்தனிக்க.. இவர்களுடன் இணைந்து கொண்டான் ஆதி.. அதுவும் அனைவரையும் அழைத்துச் செல்ல காருடன் வந்திருந்தான்.. பேட்டரி காரைக் கண்டே யுவன் முகத்தில் கொள்ளை கொள்ளும் மகிழ்ச்சியைப் பார்த்தவனுக்கு.. குழந்தையை நிஜ காரில் அழைத்துச் செல்ல ஆசை வர.. இதோ அதற்குத் தக்க ஏற்பாட்டைச் செய்திருந்தான்.. பார்த்த அக்னிக்குள் கலவரம் சூழ்ந்தது.. என்ன தான் யுவனுக்காக என்று சொன்னாலும்.. இவன் யார் இதைச் செய்ய என்ற எண்ணத்தில்.. இது நல்லதற்கு இல்லை என்ற பதைபதைப்பில்.. எங்குச் சென்று முடியுமோ என்ற அச்சத்தில் துவண்டு தான் போனாள் பெண்ணவள்.




என்றும் அக்னிசாகரியை ஊன்றி கவனித்தில்லை ஆதி.. இன்று பாவையைத் தான் முற்றும் முழுமையாக அவதானித்தான்.. காரணம் எப்போதும் ஒருவிதமான மென்சோகத்தில் காட்சியளிக்கும் பெண்ணவளின் வதனம்.. இன்று முழுமையாகத் துயரத்தைத் தத்தெடுத்திருந்தது..





எந்தவொரு முன் அறிவிப்புமின்றிக் காப்பகத்திலும் கேக் சாக்லேட் எனப் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தினான் ஆதி. யுவன் கேக் வெட்ட.. அங்குள்ள குழந்தைகள் வாழ்த்திப் பாட.. மத்தாப்பாய் மலர்ந்தது யுவனின் முகம். வெட்டிய கேக் பீஸ் மற்றும் சில சாக்லேட் உடன் அக்னி வாங்கி வந்திருந்த குழந்தைகளுக்கான கலர் புக், கலர் பென்சிலை காப்பக குழந்தைகளுக்குத் தந்த பின் இவர்கள் அனைவரும் காரிலேயே வீட்டுக்கு திரும்ப.. வந்தது போலவே இப்போதும் ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் மடியில் அமர்ந்து.. நெஞ்சில் கன்னம் பதித்த படி உறக்கத்தில் இருக்கும் மகனைக் காண காண தவித்துப் போனாள் அக்னி. வீடு வந்ததும் மகனை வாங்கிக் கொண்டவள்




"என்ன என் மகனை என் கிட்டயிருந்து பிரிக்க வந்திருக்கியா.. அப்படி ஒரு எண்ணம் இருந்தா அதைத் தீ வச்சு எறிச்சிடு.. ஏன் னா.. என் மரணத்தால் மட்டும் தான் நான் அவனை விட்டுப் பிரிவேன்" என்றவளின் குரலோ அத்துனை ஆங்காரத்துடன் ஒலிக்க.. ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்மகனின் முகத்திலும்.. உடல் மொழியிலும் அத்துனை அலட்சியம் நிறைந்திருந்தது.
 
Back
Top