தென்றல் 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வீட்டுக்கு வருகையில் முகத்தில் புன்னகை நிறையக் கைகளில் கொள்ளாத பைகளுடன்.. அதைவிட இருவரும் ஒற்றுமையாக வருவதைக் காணவும் மனம் நிறைந்தது ஜானகிக்கு. அக்னியின் கூந்தலில் சூடியிருந்த பூவைக் கண்டு இவர் திருஷ்டி எடுக்க.. அவரைப் பின்பற்றி யுவனும் தாய்க்கு செய்வதைக் கண்டு எல்லோரும் வாய் விட்டு சிரிக்கவும் வெட்கத்தில் தாயின் நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டான் யுவராஜன்.



திருவிழாவுக்குச் சென்று வந்த சோர்விலும் தாங்கள் வாங்கி வந்ததை ஜானகியிடம் காட்டவே இருவரும் ஆவல் கொண்டனர். அக்னி, "இங்க பார் ஆத்தா.. இந்த வருஷம் திருவிழாவுல நான் என்னவெல்லாம் வாங்கி இருக்கேன்னு" என வாங்கி வந்ததைக் காட்ட



ஜானகி, "ஒவ்வொன்னும் அழகா இருக்கு அக்னி. இதையெல்லாம் நீயா வாங்கின.. அதிசயம் தான்" என வியந்தவர் "கண்ணாடி வளையலே ஏழெட்டு டசன் இருக்கே.. அப்ப கை நிறையப் போட்டுக்க" என்றவருக்கு



"எங்க ஆத்தா.. வண்டி ஓட்ட சிரமமா இருக்கும்.. அதுவும் இல்லாம தினமும் போட்டுகிட்டா வளையல் உடைஞ்சிடுமே"



"உடையட்டுமே.. அதுக்குத் தான வளையல்.. இது கண்ணாடி வளையல் தான.. உடைந்தா திரும்ப எவ்வளவு வேணுமோ வாங்கிப் போட்டுக்கலாம்" எனப் பதில் தந்தது சாட்சாத் ஆதி தான்.. வெளி திண்ணையில் அமர்ந்து இவர்கள் பேசி கொண்டிருந்ததைக் கேட்டதால் வந்த பதில் இது... ஏனோ அவன் குரல் அக்னியின் அகத்தை வருடியது என்றே சொல்லலாம்.



தாய்க்கு போட்டியாய் யுவன் தான் வாங்கிய பொம்மைகளைக் காட்ட.. "அடடே! இம்புட்டு பொம்மையும் என் ராசா குட்டிக்கா.. என்ன சொல்ல.. எல்லாம் அழகா இருக்கு பட்டு.. யப்பா எத்தனை மீன் பொம்மைங்க!" என ஜானகி சிலாகிக்க




"எல்லாம் சூப்பர் தான பாட்டி.. என் ஃபிரெண்ட் லோகேஷ், வர்ஷா, செல்வி, அப்பறம் முரளி கிட்ட எல்லாம் காட்டுனன்.. எல்லாரும் சூப்பர்னு சொன்னாங்க" என யுவன் தன் மழலையில் பகிர



"என்னத்த சொல்ல ஆத்தா.. அங்க இவன் அடங்கவே இல்ல.. நமக்குத் தெரிஞ்சவங்க யார்னா கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சினா இந்த வாண்டு வெட்கப்படுறத பார்த்திருக்கனுமே நீங்க.. அப்படி ஒரு வெட்கம் சாருக்கு.. ஃபிரெண்ட்சுகளைப் பார்த்தா பொம்மையைக் காட்டி பெருமை வேற பேச வேண்டியது.. ஸ்ஸப்பா என்னால சமாளிக்க முடியல.. அதை விட இந்தக் குட்டி வயித்துக் குள்ள.. எத்தனை பஞ்சு மிட்டாய்.. எத்தனை பால் ஐஸ்.. எத்தனை குருவி ரொட்டி.. எத்தனை வடை இருக்கு தெரியுமா.. அதெல்லாம் நாளைக்கு சாரை என்ன செய்யப் போகுதோன்னு எனக்குத் தான் இப்பவே பயம் வருது" என்று தாயாய் அக்னி கவலை பட



தாயின் மடி மேல் நின்று கொண்டிருந்த யுவன் அவளின் இரு காதுகளையும் பற்றி முகத்தருகே இன்னும் நெருங்கி.. மூக்கோடு மூக்கு உரச, "நோ ம்மா.. யுவன் எப்பவும் சமத்து" என்று தாயின் கவலையைப் போக்க.. அதை அழியா ஓவியமாய்த் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டான் ஆதி.. எதேச்சையாக அவனை நோக்கிய அக்னி.. என்னவென்று இரு புருவமும் உயர்த்தி விழி அசைவால் கேட்க.. அவனோ தன் இமைகளை மெல்ல சிமிட்டி ஒன்றுமில்லை எனத் தலையசைக்க.. அங்கு அவர்களுக்குள் இயல்பாய் பரிபாஷை ஒன்று அரங்கேறியது.




"இத்தனை சேட்டை செய்தானா நம்ம குட்டி ராஜன்.. சரி தான் அப்ப எத்தனை கண்ணு பட்டுதோ.. இன்னைக்கு என் ராசாவுக்குச் சுத்தி போடனும்" என்றவர் தனக்காக வாங்கி வந்த பையைப் பிரிக்க உள்ளே இருந்தது அவருக்குப் பிடித்த சுருக்குப் பை, வெத்தலை பெட்டி, அவர் வாங்க நினைத்த நிறத்தில் சில ரவிக்கை துணிகள். கூடவே வீட்டுக்கு எனச் சில சம்படங்கள்.. பார்த்தவருக்குத் தனக்கென வாங்கித் தரும் அக்னியை நினைத்து அத்தனை மகிழ்ச்சி அவர் முகத்தில்.




இன்று இரவு முளைப்பாரியோடு அம்மன் வீதி உலா மேளதாளத்துடன் வான வேடிக்கையோடு தொடங்கி விடியும் வரை நடக்க.. அதை ஊரே விழித்திருந்து கொண்டாடும்.




பொழுது சாயவும் மறுபடியும் ஆதியுடன்.. யுவன் கோவில் செல்ல எத்தனிக்க.. "வேணாம் செல்லம்.. நாள் முழுக்கத் தான திருவிழாவுல இருந்த.. இப்ப அம்மா போகல தான.. அப்போ நீயும் என் கூட வீட்டுல இரு தங்கம்" என்று அக்னி தன் விருப்பமின்மையைத் தெரிவிக்க.. "ம்மா.. ம்மா.. ப்ளீஸ் மா" மகன் கெஞ்ச




அந்தக் கெஞ்சலால் கூட ஏனோ மகனை அனுப்ப இவளின் மனம் விழையவில்லை.. ஏதோ சரியில்லை.. வேணாம் என்றே உள்மனது சொல்லி கொண்டிருக்க.. அதைப் புறம் தள்ள முடியவில்லை இவளால். தாயிடம் கெஞ்சியவன்.. பின் அழுது அடம்பிடிக்க.. ஆதிக்கு தாங்குமா




"எதுக்கு சாகரி உனக்கு இவ்வளவு பிடிவாதம்.. அவன் அழறது உனக்குப் பிடிச்சிருக்கா.. ஒரு அம்மா இப்படித் தான் குழந்தையை அழ வைத்து பார்ப்பாளா.. நான் அழைச்சிட்டு போறேன்.. நான் பார்த்துப்பேன்.. நீ தடுக்காத" என்று ஆதி திட்டவட்டமாய்ச் சொல்ல




இவளுள் கலக்கம் சூழுந்தது.. அதை அவளின் முகம் பார்த்தே அறிந்தவனாக "என்ன ம்மா" ஆதி நெருங்கி பரிவாய் கேட்க




"ஹாங்" தன்னிலை உணர்ந்து தெளிந்தவள், "தெரியல ஆதி.. ஏதோ மனசு சரியில்ல.. யுவன் அதிகம் சேட்டை செய்வான்.. பத்திரமா பார்த்துக்கங்க.. கொஞ்ச நேரம் தான் பிறகு சமாதானம் ஆனதும் அழைச்சிட்டு வந்துடனும்.. பார்த்து ஆதி என் மகனை கவனமா பத்திரமா பார்த்துக்க" என்றவளின் குரல் தவிப்புடன் ஆயிரம் பத்திரங்களுடன் ஒலிக்கவும்..




அவளை உருத்து விழித்த ஆதி, "அவனை எப்படிப் பார்த்துக்கனும்னு எனக்குத் தெரியும். உன்னை விட எனக்குத் தான் அவன் மேல அக்கறை அதிகம்.. நீ இத்தனை பத்திரம் சொல்ல வேண்டியதே இல்ல சாகரி" என அழுத்தத்துடன் மொழிந்தவன் யுவனுடன் விலகியிருக்க.. அவனின் வார்த்தைகள் இவளின் அகத்துக்கு இதம் தந்தாலும்.. ஏனோ தூர விலகி செல்லும் இருவரையும் ஒருவித பயம் கலந்த தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் அக்னி.



இரவு ஏழு மணி போல் அம்மன் ஊர்வலம் ஆரம்பிக்க.. நொடிக்கு ஒரு முறை காதை பிளக்கும் வெடி சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது.. மணி எட்டை கடந்தும் வீட்டுக்கு வரவில்லை இருவரும்.. அதில் பொறுமையிழந்து இவள் விடாமல் ஆதிக்கு அழைக்க.. அவனோ அழைப்பை ஏற்காமல் போக.. கோபத்துடன் ஜானகியிடம் மகனையும், ஆதியையும் ஆயிரம் வசை பாடிய படி அக்னியிருந்த நேரம்.. வீட்டுக்கு வெளியே பல வாகனங்கள் ஊரை நோக்கி விரையும் ஒலியும்.. கூட்டம் கூட்டமாக மக்கள் அழுது ஒப்பாரி வைத்தபடி செல்வதைக் காணவும் அக்னியின் அகத்தில் பயம் கவ்வியது. "என்னங்க.. என்ன ஆச்சு" ஜானகி ஒருவரிடம் விசாரிக்க




"அதை ஏன் ம்மா கேட்குறீங்க.. திருவிழாவுக்குப் போட்ட வெடி.. பட்டாசு வெச்சிருந்த குடிசையையே எரிச்சது தான் மிச்சம்.. ஊரே அல்லோகல படுது.. உங்களுக்கு எந்த வெடி சத்தமும் கேட்கலயா.. அங்க பாருங்க புகையை.. வானத்தையே முட்டி நிக்குது.. வெளியூர்ல இருந்து என் சொந்த பந்தத்தோடு திருவிழாவுக்கு வந்தேன்.. இதோ பாதி வழியிலயே செய்தி கேட்டு திரும்பறேன்.. அங்க எத்தனை உசுரு போச்சோ யார் யாருக்கு என்னென்ன ஆச்சோ.. தெரியல இந்த வருஷம் அந்த ஆத்தாவுக்கு என்ன கோபமோ" என்றவரின் நீண்ட புலம்பலை எல்லாம் நின்று முழுமையாகக் கேட்டிருக்கவில்லை அக்னி. பிள்ளைக்கு என்னாச்சோ என்ற பயத்தில் தேகம் நடுங்க.. வீட்டினுள் சென்று தன் வாகன சாவியை எடுத்து வர.. அந்நேரம் இவர்கள் வீட்டை கடந்து ஊருக்குள் பயணித்தது இரண்டு தீயணைப்பு வாகனம்.




அக்னியின் பதட்டத்தைக் கண்டு, "பயப்படாத அக்னி யுவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது.. நீ பார்த்து கவனமா வெரசா போ.. அங்க யாருக்குனா உன் வண்டியால உதவியா இருக்கும்" என்றவரின் சமாதான வார்த்தையை எல்லாம் அக்னி நின்று கேட்டு கொண்டிருக்கவில்லை. பயத்தில் கரங்கள் வேர்வையில் குளித்திருக்க வாகனத்தை அத்தனை வேகத்தோடு ஓட்டி சென்றாள் பாவை.




இவள் எதையும் மிகைப்படுத்தாமல் நினைத்து வர அங்குக் கண்ட காட்சியோ உள்ளத்தை உருக்கி.. ரத்தத்தை உறைய வைத்தது. அப்படி ஒரு காட்சியில் இருந்தது அந்த இடம்.. காலையில் அனைவரும் சந்தோஷ மனநிலையில் மகிழ்ச்சியுடன் வலம் வந்த இடம் தற்போது.. எங்கும் மனித உடல்கள் எறிந்து சாம்பலாகி இருக்க.. கண்ணீரோடு, பதட்டத்தோடு, வேதனையோடு, தீக்காயங்களோடு வலி சுமந்த முகத்துடன் மக்கள் எங்கும் திக்கற்று ஓடிக்கொண்டிருந்தார்கள். உலகத்தில் உள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிய படி.. தானும் ஒவ்வொரு இடமாக ஓடி மகனை தேடியவளுக்குப் பாவம் அவனின் சுவடே அங்கில்லை.




இவளை கண்டு விரைந்து வந்த ஆதி, "நீ ஏன் இங்க வந்த சாகரி.. நான் யுவனை அழைச்சிட்டு வரேன் நீ வீட்டுக்கு போ" எனக் கட்டளையிடும் தொனியில் சொன்னவனின் குரலில் அப்பட்டமாய்ப் பயம் நிறைந்திருக்க
அதை உணர்ந்தவளும் உடல் நடுங்க, "யுவன் எங்க ஆதி.. என் பிள்ள எங்க.. நீ மட்டும் தனியா இருக்க அவன் எங்க?" எனப் படபடத்தவளுக்கு

"வந்து..டு..வான் சாகரி அவ..ன தான் தே..டி.." என முழுவதுமாக ஆண்மகன் வாக்கியத்தை முடிக்க இயலாமல் கண்ணீரோடு நடுக்கத்தோடு சொல்லிட




சத்தியமாக இதை அக்னி எதிர்பார்க்கவில்லை.. ஆதி எங்கோ மகனை பாதுகாப்பாக வைத்திருந்து.. தற்போது அழைத்துச் சென்று காட்டுவான் என நினைத்திருக்க.. உதித்த வார்த்தையில் கோபத்துடன் அவனின் சட்டையைப் பற்றியவள், "என்ன சொல்ற? என் பிள்ளைய தேடுறியா.. அப்ப என் பையன்.. யுவன் எங்க.. உன்னை விட எனக்கு அக்கறை இருக்குன்னு தான சொல்லிட்டு வந்த.. இப்ப தொலைச்சிட்டு வந்து நிக்குற" எனக் கேட்டவளுக்கு




"இப்படி எல்லாம் பேசாத சாகரி.. அவனை நான் வேணும்னு தொலைக்கல" என்று ஆதி தன்னிலை உணர்த்த




"ஓ.. நீ வேணும்னு வேற என் பிள்ளையைத் தொலைப்பியா.. நான் பார்த்துப்பன்னு சொல்லிட்டு வந்தியே.. உண்மையிலே உன் வீட்டுப் பிள்ளையா இருந்தா.. இப்படித் தான் அவனைத் தொலைச்சிட்டு வந்து நிற்பியா?"




"போதும் சாகரி.. யுவன் என் ரத்தத்துல இருந்து பிறந்தவன் இல்ல தான்.. ஆனா இந்தப் பிறவிக்கும் அவன் தான் என் மகன். நான் அப்படித் தான் பார்க்கறேன்.. ஏன் நான் சாகரவரைக்கும் அப்படித் தான் நினைப்பேன். இது நாம சண்டை போட்டுக்கிற நேரமோ, இடமோ இல்ல.. நீ ஒரு பக்கம் யுவனைத் தேடு.. நானும் தேடுறேன். நிச்சயம் குழந்தை கிடைச்சிடுவான் நம்பிக்கையோடு தேடு சாகரி" என்றவன் வலியோடு நினைவுபடுத்த




அதை உணர்ந்து இவளும் மகனைத் தேட.. புகையாலும்.. நடக்கும் மீட்பு பணியாலும்.. யுவனைத் தேட இவர்களுக்குச் சிரமமாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பல கடைகள் எறிந்து சாம்பலாகியிருக்க.. இவள் எங்கென்று மகனை தேடுவாள்.. இரவு நடுநிசியைத் தாண்டியும் யுவன் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களை நெருங்கி இவள் விசாரிக்க இருக்கும் சூழ்நிலைக்கு யார் சரியான பதிலை தருவார்கள்.. ஓரளவுக்கு அங்குப் பரபரப்பின்றி மீட்பு பணிகள் தொடரவும்..




அக்னி அங்கிருந்த சில காவலர்களை நெருங்கி மகனின் அங்க அடையாளத்தைச் சொல்லி விசாரிக்க, "என்ன பொண்ணும்மா நீ.. அவனவன் கரி கட்டையா இருக்கான்.. நீ சின்னக் குழந்தையைப் பற்றி விசாரிக்க வந்துட்ட.. நடந்தது பெரிய விபத்து உயிர் சேதம் அதிகம்.. போ போய் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடு.. அங்கு உனக்கு ஏதாவது தகவல் கிடைத்தா ஆச்சு.. அப்பவும் உனக்கு உடனே பதில் கிடைக்குமான்னு தெரியல.. போ.. நேரம் கடத்தாத" என்ற காவலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு முதலில் வாகனத்தை நோக்கி விரைந்தவள் பின் பயத்துடன் தயங்கியவளை தூரயிருந்து பார்த்திருந்த ஆதி அக்னியை நெருங்கி விவரம் கேட்க




"ஸ்டேஷன் போகச் சொல்றாங்க ஆதி.. நான் எப்படி இந்த நேரத்துல அங்க தனியா போக.. ஒருமுறை நான் அங்க போய் அனுபவித்ததே போதும்.. எனக்குன்னு யாரு இருக்கா.. அதான் நாராயணன் ஐயா இல்லனா மதரை பார்த்து பேசி கூட்டிட்டு போகலாம்னு" என்றவளை




"பைத்தியம்.. ஸ்டேஷன்ல எல்லாம் நான் இதுவரை பேசாம இருப்பனா.. எனக்குத் தெரிந்த ஆட்களை விட்டும் யுவனைத் தேட சொல்லியிருக்கேன். நான் தான் இருக்கனே.. சரி வா ஸ்டேஷன் போகலாம்" என்றவன் கையோடு அவளையும் வாகனத்தில் அழைத்துச் செல்ல




காவல்நிலையத்தின் எதிரே அந்த ஊர் மக்களும், பாதிக்கப்பட்டவர்களும், பெருந்தலைகளும் ஆங்காங்கே கூட்டமாகச் சூழ்ந்திருந்து நடந்த விபத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த நேரம் இருவரும் உள்ளே நுழைய அக்னி தன்னை மீறி பயத்தில் ஆதியை ஒட்டி நின்று அவனின் கையை இறுக பற்றிக் கொள்ள.. அவளின் பயத்தை உணர்ந்தவனாக ஆதியும் அவளின் கரங்களை ஆறுதலுடன் இறுக பற்றிக் கொண்டான்.




ஆதி அங்கிருந்த அதிகாரியிடம் யுவனைப் பற்றிச் சில தகவல்களைச் சொல்லி விசாரிக்க "சார் உங்க பயம் புரியுது.. நாங்க தேடாம இல்ல.. நீங்க சொன்ன அடையாளம் உள்ள குழந்தையைத் தேடிட்டு தான் இருக்கோம்.. சீக்கிரம் கிடைச்சிடுவான்னு நம்புங்க.. ப்ளீஸ் எங்களுக்கும் நீங்க ஒத்துழைப்பு தாங்க" என்றவரின் தன்மையான பேச்சில் ஒரு போலீஸ் இவ்வளவு தன்மையா பேசுவாங்களா என்ற கேள்வியுடன் அந்த நிலையிலும் அக்னிக்குள் ஆச்சரியம் மேலிட்டது.




அங்கிருந்து வெளியே வர.. மேற்கொண்டு நடக்க முடியாமல் தளர்ந்து போய்க் காவல்நிலைய வராந்தாவிலே அமர்ந்து கொண்ட அக்னியின் உதடுகளோ "முருகா என் பிள்ளைய கொடுத்துடு முருகா.. யுவன், அம்மாவைத் தேடி வந்துடு செல்லம்" என முனங்க முதல் முறையாக ஆதிக்கே இவளை இப்படிக் காண பாவமாக இருந்தது. யுவனுக்காக இந்த நடு இரவிலும் தனியொரு பெண்ணாக இருந்து கொண்டு எப்படி எல்லாம் பரிதவித்துத் தேடுகிறாள் என்ற எண்ணம் அவனுள் உதிக்காமல் இல்லை.




அந்நேரம் ஆதியை நெருங்கி ஒரு காவலர் ஏதோ சொல்ல.. கேட்டவன் உடலோ இரும்பென இருகியது. அவனாலே இதைச் செய்ய முடியாதே.. அழுது அழுது முகம் வீங்கி.. சோறு தண்ணி இல்லாமல்.. வற்றாத கண்ணீருடன் குற்றுயிராய் இருப்பவளை என்ன சொல்லி.. எப்படி அங்கு அழைத்துச் செல்வது.. இவனுக்கே முதலில் அங்குத் தனியே செல்ல மனதிடமில்லையே..




ஆதி உணர்விழந்த முகத்துடன் அக்னியை நெருங்க, "என் பிள்ள எங்க ஆதி.. யாரும் இல்லாத இந்த அநாதைக்கு அவன் தான் உறவா இருந்தான்.. என் குலசாமி அவன்.. இப்ப என்னை இப்படித் தவிக்கவிட்டு எங்க போனான்.. எதாவது செய்து.. யாரையாவது பார்த்து பேசி கண்டுபிடிச்சி தா ஆதி" எனத் தன் பிள்ளையைத் தொலைத்தவனின் கரங்களையே பிடித்துக் கொண்டு அக்னி கதற



ஆதியின் கண்ணிலும் கண்ணீரின் தடங்கள் "நான் கண்டுபிடிச்சி தரேன் சாகரி.. இப்ப நாம ஒரு இடத்துக்குப் போலாம் வா" என்றழைக்க





அந்த நொடியே கிளம்பிய அக்னி வழி எங்கும் யுவன் கிடைத்தானா.. நல்லா இருக்கானா போன்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்ட படி வர.. மௌனம் மட்டுமே இவனிடம் பதிலாய் இருந்தது.




இவன் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு.. இவளை அழைத்துச் செல்ல.. மருத்துவமனை என்றதும் ஒருவித பயத்தோடு நடந்தவள்.. இறுதியாய் அவன் அழைத்துச் சென்ற பிண ஆய்வு கூடத்தைக் காணவும்.. எதையோ உணர்ந்து தன் பலத்தை எல்லாம் இழந்தவளாக.. ஆதியை இறுக பற்றிக் கொண்டு "என் பிள்ளைக்கு எதுவும் நடந்திருக்காது ஆதி. யுவன் இங்க இருக்க மாட்டான்.. வேணாம் நாம உள்ள போக வேணாம்.. சொன்னா கேளு.. நாம போக வேணாம் ஆதி" எனக் கதறியவளை.. முதல் முறையாகக் கண்ணீரோடு தன் உயரம் மறந்து.. தடதடக்கும் நெஞ்சோடு.. தைரியத்தை எல்லாம் இழந்தவனாகத் தன் பலம் கொண்ட மட்டும் இறுக அணைத்துக் கொண்டான் ஆதி.. இந்த அணைப்பு இவளின் ஆறுதலுக்கா இல்லை இவனின் ஆறுதலுக்காகவா என்று தான் தெரியவில்லை.
 
Back
Top