தென்றல் 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கணவனின் வார்த்தைகளிலும் குரலின் வசியத்திலும், அவன் தந்த முதல் முத்தத்தின் திளைப்பிலும் மயங்கிய பெண்ணவள், அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தாள்.



வெளியே, "அக்னி... இங்க வா! சீனியும் வைதேகியும் கிளம்புறாங்களாம்..." என்று ஜானகி அழைக்கவும், அவசரமாக அவனிடமிருந்து விலகினாள். விலகும் முன், தன் இதழ்களால் கணவனின் கன்னத்தில் மென்மையான முத்தமொன்றைப் பதித்துவிட்டுச் சென்றாள்.



மனையாளின் அந்த முதல் முத்தத்தில் இன்ப அதிர்ச்சி அடைந்தவனுக்குள் மின்னலென ஒரு மாற்றம்! கண்கள் மூடி, இடது கரத்தால் பின்னந்தலையை வருடித் தன் உணர்வுகளைச் சமன் செய்து கொண்டான் ஆதி. அதை மென்னகையோடு திரும்பிப் பார்த்த அக்னியின் விழிகள், ரசனையோடு கணவனை ஆராதித்தன.



வெளியே வந்தவள், "ஏன் அண்ணி உடனே கிளம்புறீங்க? இருந்து சாயங்காலம் கிளம்பலாமே?" என்றாள்.
"உன் அண்ணனுக்கு மதியம் வெளியே வேலை இருக்காம் அக்னி. அதான் அவரோடவே கிளம்பிட்டா, அப்புறம் நான் தனியா போக வேண்டியிருக்காது. இன்னைக்கு ஒரு நாள் ஜானும்மா என் வீட்ல தங்கட்டும். நாளைக்குத்தான் ஊருக்குக் கிளம்புறாங்க... பிறகு எப்ப பார்க்கப்போறோமோ! மகிழா கூட ஜானும்மாவைத் தேடிக்கிட்டே இருப்பா..." என்று இயல்பாகத் தன் மகளை முன்னிறுத்திப் பேசி, ஜானகியையும் உடன் அழைத்துச் சென்றார் வைதேகி.



முதன்முறையாகக் கணவனும் மனைவியும் தனிமையில் இருந்தனர். அக்னி உள்ளே நுழைந்தபோது, கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகனின் அருகே, மேற்சட்டையின்றி உள்பனியயோடு தலைக்குக் கீழ் கைகளைக் கோர்த்தபடி விட்டத்தைப் பார்த்துப் படுத்திருந்தான் ஆதி.



அவனை நெருங்கியவள், "யுவன் தூங்கிட்டானா? போக்கிரிப் பய... இன்னைக்குக் கோவில்ல ஒரு இடத்துல நிக்கவே இல்லை. என்னவொரு ஆட்டம்!" என்றாள்.



"ஹ்ம்ம்... செம்ம ஸ்மார்ட் இல்ல யுவன்?" ஆதி கேட்க,



"என்ன ஸ்மார்ட்டோ போங்க... சேட்டை பண்றதெல்லாம் உங்களுக்கு ஸ்மார்ட்டா?" என்று அவனைப் பன்மையில் அசைபோட முயன்றாள்.



"நீ எப்போதும்போல இயல்பா இரு சாகரி... இந்த 'வாங்க', 'போங்க' மரியாதையெல்லாம் வேணாம்!"



"அது எப்படிச் சரியாகும்? இனி அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு ஜானும்மா சொல்லியிருக்காங்களே..."



"அவங்க அவங்க வாழ்க்கையை வச்சுச் சொல்லியிருப்பாங்க. நமக்குள்ள அதெல்லாம் எதுக்கு?"



இவள் புரியாமல் அவனைப் பார்த்து, "ஏன், நம்ம வாழ்க்கைக்கு என்ன? நாமளும் அவங்களை மாதிரிதானே வாழப்போறோம்!" என்றாள்.



அவள் பேச்சை இடையறுத்தவன், "இல்லை... அவங்களுக்கும் மேலான ஒரு வாழ்க்கையை நான் உனக்குத் தரப்போறேன்!" என்றான். அவனது குரலில் என்ன இருந்தது? சத்தியமாக அதில் துளியும் காதலில்லை. அதை உணராதவளாக, காதலோடு மென்னகை பூத்தவள்,



"மதியம் என்ன சமைக்கட்டும்? உங்களுக்குப் பிடிச்சதைச் சமைக்கவா?" என ஆவலோடு கேட்டாள்.



அவளை ஒருவித ஏளனத்தோடு பார்த்தவன், "யப்பா... என்னவொரு பதிபக்தி உனக்கு! முதல் நாளே புருஷனுக்குப் பணிவிடை செய்ய ஆர்வமா இருக்கே... ஆனா இன்னைக்கு எதுவும் சமைக்க வேணாம், வெளியே வாங்கிக்கலாம். முதல்ல நீ இந்த கனமான பட்டுப்புடவையை மாத்து. நான் வெளியே இருக்கேன். எப்படித்தான் இத்தனை நகையோடவும் பட்டுப்புடவையோடவும் இன்னும் இருக்கியோ!" என்றபடி எழுந்து வெளியே செல்ல எத்தனித்தான்.



அவன் கையைப் பற்றித் தன் கன்னத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டவள், "தேங்க்ஸ் ஆதி!" என்றாள் நெகிழ்ச்சியாக.



"ஹேய்... இதை என்கிட்ட சொல்ல உனக்கு எதுக்குத் தயக்கம் சாகரி? இப்ப சொன்னியே 'ஆதி', எனக்கு இதுதான் வேணும்!" என்றவன் மெல்ல அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான். அவனது புரிதலில் மலர்ந்து போனாள் அக்னிசாகரி.



யுவன் விழித்ததும், அடுத்தடுத்த மணித்துளிகள் இருவருக்கும் அவனுடனேயே விரைந்தோடின.
மெல்ல இருள் கவிழ்ந்தது. அடுத்து நிகழவிருப்பதை அறியாதவளா பெண்? இரவில் மகனை உறங்க வைத்தபிறகு, அக்னியின் எண்ணங்கள் முழுவதும் அடுத்து நடக்கப்போகும் நிகழ்வை எண்ணிக் காதல், பயம், தயக்கம் எனப் பலவாறாக அலைபாய்ந்தன.



அவளது பதற்றத்தை முகமே காட்டிக் கொடுக்க, மனைவியை நெருங்கியவன், "ஏன் சாகரி உனக்கு இத்தனை பயம்?" என்று கேட்டபடியே, பயத்தில் இறுகியிருந்த அவளது விரல்களை ஒவ்வொன்றாகப் பிரித்துவிட்டான்.



வேர்வையில் நனைந்திருந்த உள்ளங்கையில் தன் சுட்டுவிரலால் வட்டமிட்டபடி அவளது முகத்தையே ஆழமாகப் பார்த்தான். "ஒரு குழந்தைக்கு அம்மா நீ... ஆனா இப்ப நடக்கப்போற விஷயத்தை நினைச்சு இப்படிப் பயப்படுறியே! அதிசயம் தான்... ஏன், என்னை உனக்குப் பிடிக்கலையா?" எனக் கேட்டவனின் குரலில் ரகசியத் தொனி இழையோடியது.



அதில் இவளது காதல் விழித்துக்கொள்ள, "இல்ல... இல்ல! உங்களைப் பிடிக்காம இல்ல... எனக்கு... இது... முதல் தடவை... அதான் ஒரு தயக்கம்... பயம்..." எனத் 'தேவர் மகன்' ரேவதி பாணியில் காற்றாய்க் கரைந்த குரலில் உளறிக் கொட்டினாள். தன் வார்த்தைகளின் வேகத்தை அவளே உணர்ந்தாளோ இல்லையோ, ஆதி அதைச் சரியாகப் புரிந்து கொண்டான்.



"ம்ஹூம்..." எனப் போலியாக வியந்தவன், "இன்னைக்கு எதுவும் வேணாம். நமக்கான காலம் நிறைய இருக்கு... எல்லாம் இயல்பா நடக்கும். போ, போய்த் தூங்கு!" என்று கூறி, அவளது கரத்தைச் சிறு அழுத்தத்தோடு விடுவித்தான்.



கணவனின் அந்தப் புரிதலில் அகம் மகிழ்ந்தவள், "ஆனா... உங்களுக்கு விருப்பம்னா..." என மெல்லிய குரலில் அவனது விருப்பத்தை அறிய முற்பட்டாள். அவளது விழிகள் கணவனை நேருக்கு நேர் சந்திக்கத் தயங்கின.



"என்னுடைய விருப்பம்... வேற!" என்றவனின் குரல் ஆழமாக ஒலிக்க, அவனது பார்வயோ கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த யுவராஜன் மீது பதிந்தது.



"நீ யுவன் கூடக் கட்டில்ல படுத்துக்கோ, நான் கீழே படுத்துக்கிறேன்" என்றபடி தரையில் படுக்கையை விரித்துக் கொண்டான்.



அந்தக் கட்டிலில் இரண்டு பேர் மட்டுமே படுக்க முடியும் என்பதை உணர்ந்தவளும், மகனை அணைத்தபடி படுத்து உறங்க முயன்றாள். 'வருவேனா' என உறக்கம் சண்டித்தனம் செய்ய, இன்றைய நாளின் இனிமையான நினைவுகளை அசைபோட்டபடியே ஒருவழியாகத் தூங்கிப்போனாள் அக்னி.



மறுநாள் காலையில் மகனின் சிரிப்பொலியில் கண்விழித்தவள் சுற்றும்முற்றும் தேடினாள். அவனோ பின்கட்டில், சமையல் திட்டின் மேல் அமர்ந்திருப்பது தெரிந்தது. பொழுது புலர்ந்து நேரம் கடந்துவிட்டதை உணர்ந்தவள், தன் நீண்ட கூந்தலைத் தூக்கிக் கொண்டையிட்டபடி பின்கட்டுக்கு விரைந்தாள். அங்கே ஆதி தோசை சுட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தாள்.



"அச்சச்சோ! கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் ஆதி... என்னை எழுப்பியிருக்கலாமே! குட்டிப் பையனுக்குப் பசி வந்துடுச்சா?"



"இதுல என்ன இருக்கு சாகரி? சார் எழுந்து குளிச்சதுமே பசிக்குதுன்னாரு... அதான் தோசை ஊத்துறேன். நீ போய்க் குளிச்சிட்டு வா. உனக்குக் காபி வேணுமா, இல்ல தோசையா? சீக்கிரம் வந்தா சுடச்சுடச் சாப்பிடலாம், என்ன சொல்ற?"



"நீங்க எனக்குச் சுட்டுத் தரப் போறீங்களா?" என அதிசயித்தவள், "ஜானும்மா வீட்டுக்காரர் சமையல்கட்டுப் பக்கமே வரமாட்டாராம், தெரியுமா?" என்ற தகவலையும் பகிர்ந்தாள்.



கையில் தோசைக்கரண்டியோடு திரும்பியவன், "நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன் சாகரி... அவங்க வாழ்க்கை வேற, நம்ம வாழ்க்கை வேற! இதுல என்ன இருக்கு? எத்தனை தடவை நீ சமைச்சுத் தந்து நான் சாப்பிட்டிருப்பேன்... இப்ப நான் உனக்குச் செஞ்சு தர்றேன், அவ்வளவுதான்!" என்றான். அவனது குரலில் துளியும் அன்போ, காதலோ, அர்ப்பணிப்போ இல்லை; மாறாக, 'இது ஒரு உதவி' என்ற மனப்பான்மை மட்டுமே வெளிப்பட்டது.



"உனக்குப் பசிக்குதா? இல்லைன்னா நீயே வந்து ஊத்திக்கோ..." என இயந்திரத்தனமாக ஒலித்த அவனது குரலின் உட்பொருளை உணராமல்,



"யப்பா சாமி! எனக்கு யாரும் தோசை சுட்டுத் தந்ததும் இல்லை, சுட்டுத் தரவான்னு கேட்டதும் இல்லை. என் செல்லப் புருஷன் கேட்கும்போது நான் வேணாம்னு சொல்லுவேனா? நீங்களே சுட்டுத் தாங்க மன்னவா... எனக்கு நல்லாப் பசிக்குது!" என்றாள்.



தாயின் இத்தனை நீளமான பேச்சில் யுவன் எதைப் புரிந்துகொண்டானோ இல்லையோ, 'பசி' என்ற வார்த்தையைக் கேட்டதும், "ம்மா, பசிக்குதா? இந்தா..." என்று தன் கையிலிருந்த தோசையைத் தாய் முன் நீட்டினான்.



நெஞ்சம் நெகிழ, "அச்சோ என் தங்கம்! அம்மா குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன் செல்லம்..." என்று மகனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவள், அப்படியே கணவனின் கன்னத்திலும் செல்லமாகக் கிள்ளி முத்தமிட்டு நகர்ந்தாள்.



மனைவியின் இந்த சட்டெனச் செயலால், இதுவரை உணராத ஒரு புதுவித உணர்வு ஆதியின் தேகத்தை ஆட்கொண்டது.
அவள் அவசரமாகக் குளித்துவிட்டு வர, மகனுக்குக் குட்டிக்குட்டியாக நிலா, நட்சத்திரம், மீன், ஸ்மைலி என விதவிதமான வடிவங்களில் தோசை வார்த்து, அதன்மேல் கேரட், பொடி, பூஸ்ட் எனத் தூவி ஊற்றிக் கொண்டிருந்தான் ஆதி.



அதைப் பார்த்தவள், "போச்சுடா! தோசையில பூஸ்ட்டா? யப்பா... முடியல! ஏன் ஆதி இவனை இப்படிக் கெடுக்குற? தோசையில யாராச்சும் பூஸ்ட் வச்சு சாப்பிடுவாங்களா?" எனக் கேட்க, அவளை முறைத்தவன்,



"அவன்கிட்ட எதுக்கு வம்புக்குப் போற? ஏன், தோசையில யாரும் சீனி வச்சுச் சாப்பிட்டதில்லையா? அது மாதிரிதான் இதுவும்! என் பிள்ளையைப் பார்த்துக் கண்ணு வைக்காத... உனக்கு என்ன மாதிரி வேணும்னு சொல்லு, ஊத்தித் தர்றேன்!" என்று அதட்டலாகக் கூறினான்.



அவனுக்கு உதட்டைச் சுழித்துப் பழிப்புக் காட்டியவள், "ரொம்பத்தான்! பெரிய அப்பா-மகன் கூட்டணி... இருக்கட்டும் இருக்கட்டும், ஒரு நாள் இந்தக் கூட்டணியை உடைக்கிறேனா இல்லையான்னு பாரு!" எனப் போலியாகச் சபதமிட்டாள்.



"எனக்குப் பொடி, வெங்காயம், கேரட் போட்டு மூணு வெரைட்டி தோசை வேணும்!" என்று கேட்டவள், மகனிடம் புருவம் உயர்த்தி, "என்ன மகனே, அம்மா சரியா கேட்டேனா? அம்மாவுக்கும் இப்படிக் கலர் கலர் தோசையை ஊத்தித் தரச் சொல்லு உன் அப்பாகிட்ட!" என்று சொல்லித் தர, அதை அச்சுப்பிசகாமல் அப்படியே ஏற்ற மகன்,



"ப்பா... அம்மாக்கு கலர் தோசை தா!" என்றான்.
நெஞ்சம் நெகிழ, யுவனின் இடதுகைப் பிஞ்சு விரல்களைப் பற்றி முத்தமிட்டுத் தன் கன்னத்தில் பதித்துக்கொண்டான் ஆதி.



"போதும் போதும்... எனக்கு தோசை வேணும்!" என்றவளை முறைத்தபடியே அவன் தோசை வார்க்க, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அக்னி.



"ஆதி, எனக்கான பொடி வேற டப்பாவுல இருக்கு. அது உறைப்பா இருக்கும்... இது ஜானும்மா யுவனுக்காக அரைச்சது. நீ காரம் எப்படிச் சாப்பிடுவ?" எனக் கேட்டவள், அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் யுவனிடம் வேறு தலைப்புக்குத் தாவினாள்.



அவளது பேச்சை ஒருவித சலிப்போடு கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி.
அக்னி அதிகம் பேசுபவள் என அவனுக்குத் தெரியும். இந்த வீட்டில் எப்போதும் அவளது குரல் தான் அதிகமாக ஒலிக்கும். 'இவளுக்கு வாயே வலிக்காதா?' என்று ஆதி பலமுறை நினைத்ததுண்டு. ஆனால், அந்தப் பேச்செல்லாம் இதுவரை ஜானுவிடமும் யுவனிடமும் மட்டுமே இருந்தவை. இன்றுதான் கணவன் என்ற உரிமையில் ஆதியிடம் இத்தனை பேசுகிறாள்.



அவன் சுட்டுத் தந்த தோசையைப் பிட்டு இரண்டு வாய் உண்டவளுக்கு என்ன தோன்றியதோ, அடுத்த வாயைக் கணவனுக்கு ஊட்ட நினைத்தாள். தன் முன் நீண்ட அவளது கையைக் கண்டவனுக்குள் எரிச்சல் படர்ந்தது.



"ஹேய்! நீ சாப்பிடு... இதென்ன பழக்கம் எனக்கு ஊட்டுறது?" என அதட்டினான்.



"ஏன், இதுல என்ன இருக்கு? நீ எனக்காகத் தோசை சுடும்போது, நான் உனக்கு ஊட்டக்கூடாதா? உனக்கும் பசிக்கும்ல!இதை அவள் காதலோடு சில மானே தேனே போட்டுச் சொல்லியிருந்தால், ஆதியின் சாயம் வெளுத்திருக்கும்.



அவளோ இயல்பாகச் சொல்ல, அவனும்,
"எனக்குப் பசியில்லை சாகரி, நீ சாப்பிடு" என்றான்.



அவள் விடுவாளா? "அது எப்படி உன்னைப் பார்க்க வச்சுட்டுச் சாப்பிட முடியும்? நீ சுட்டுத் தா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்!" என்றாள்.
அதற்குப் பிறகும் ஆதி உணவை வாங்க மறுக்க, இவளோ நீட்டிய கையை விலக்கவே இல்லை.



"இதே யுவன் தந்திருந்தா இப்படித்தான் மறுப்பியா?" என்ற அவளது கேள்வியில், மகனைக் குறிப்பிட்டுப் பேசிய அடுத்த நொடியே வாயைத் திறந்து உணவை வாங்கிக் கொண்டான் ஆதி.
சந்தோஷத்துடன் கணவனுக்கு ஊட்டிய அக்னி, உணவுக்கு நடுவே மகனிடமும் வாயடித்தபடி அதிலேயே மனம் நிறைந்து போனாள்.



புதுமணக் கணவனிடமிருந்து கிடைக்கவேண்டிய காதல் பார்வையையோ, சின்னச் சின்னச் சில்மிஷங்களையோ, செல்ல வருடல்களையோ, அணைப்பையோ, பட்டும் படாத இதழ் முத்தத்தையோ ஆதி இவளுக்குத் தரவில்லை. ஒருவேளை அதையெல்லாம் இவள் மனம் எதிர்பார்க்கவோ உணரவோ இல்லையோ... இன்று உணராததை நாளை இவள் உணரும்போது...?
 
Back
Top