தென்றல் 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திருமணத்திற்குப் பிறகு அக்னி ஒரு வார காலம் சந்தைக்குச் செல்ல விரும்பாததால், ஆதி மட்டும் சென்று வர, பிறகான வாழ்க்கை இருவருக்கும் இயல்பாய் நகர்ந்தது.



அன்று காலைப் பொழுது இதமாய் இருக்க, யுவன் தன் தந்தையின் தோள்களில் அமர்ந்து கொண்டு, எட்டாத உயரத்தில் பூத்திருந்த வண்ணப் பூக்களை உற்சாகத்துடன் பறித்துக் கொண்டிருக்க, அவனது மழலைச் சிரிப்பும் மகிழ்ச்சியும் தோட்டமெங்கும் எதிரொலித்தது. இருவரின் அழகான பாசப் பிணைப்பை அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து நெஞ்சார ரசித்துக் கொண்டிருந்தவளை,



யுவன், "ம்மா... வா, பூ பறிக்கலாம்!" என்று பூ பறிக்கும் விளையாட்டுக்கு அழைக்க,



அக்னி, "போடா... உன்னைத் தூக்கி வச்சு விளையாட்டு காட்ட உனக்கு அப்பா இருக்கார். . எனக்கென்ன அப்பாவா இருக்கார் பூ பறிச்சுத் தர?" என மகனிடம் வம்பு பேச,



"ம்மா... அப்பா உனக்கும் பூ பறிச்சு தருவார். நீ வா... ஆதி, அம்மாவை மேல தூக்கு!" என்று தாய்க்கு ஆசை காட்டி அப்பனுக்குக் கட்டளையிட



அக்னிக்கும் ஆசைதான்... ஒரு சினிமா பாடலில் ராஜ்கிரண், மீனாவையும் குழந்தையையும் தோளில் சுமந்தபடி நடப்பாரே... அப்படிக் கணவன் தன்னைச் சுமக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட மனதை, கூச்சமும் நாணமும் அணைபோட்டுத் தடுத்தது. அந்தக் காட்சியை நினைத்தவுடனே அவளது உதடுகளின் ஓரம் அறியாமலே மலர்ந்தது. ஆனால் ஆதி தன்னைப் பார்த்துவிடக் கூடாதென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.



அன்று கோவில் படியில் இறங்குகையில் அவனாகத் தூக்கிக் கொண்டதில் இந்தக் கூச்சமும் நாணமும் தூரப் போயிருக்க, இன்று மட்டும் ஏனோ... அவன் தோளில் அமர வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் சிறு அலைகளாய் எழுந்து, நெஞ்சைத் தட்டிக் கொண்டிருந்தது.



"போடா போக்கிரி... உன் அப்பா ஒன்னும் பலசாலியில்ல. பாவம், அப்புறம் அவருக்குத்தான் கஷ்டம்," என்று கணவனின் வலு ஏறிய புஜத்தைக் கண்டு, அதில் கை கோர்த்து தினம் தினம் ஊஞ்சலாட விழைந்த மனதை மறைத்து பொய்யாய் மகனிடம் வாயடித்த மனைவியை நோக்கியவன்,



"யாருக்கும்மா பலமில்ல? யாருக்குக் கஷ்டம்? ஐயா பலம் தெரியாம பேசுற... வா, வந்து என் பலத்தைப் பாரு!" என்று நுனி மீசையை முறுக்கியபடி சவாலிட்டு அழைக்க,



"போதுமே... நீங்க வீரன்... சூரன் தான் ஒத்துக்கிறேன். என்னைச் சுமக்கப் போறாராம்... ஆளை விடு சாமி," என ஆசையை நாணம் வெல்ல... இளநகையோடு மறுத்தவளின் வார்த்தை ஆணின் தன்மானத்தைச் சீண்டவும், தன் வேக எட்டுகளுடன் கட்டிலை நெருங்கியவன்,



"ஹேய்... என்னை என்னன்னு நினைச்ச? நீ எழுந்திரு... என் தோள்ல உட்கார்" எனக் கட்டளையிட்டான்.



அவனது குரலில் இருந்த உறுதியைக் கேட்டதும் அக்னியின் இதயம் துடித்தது. ஆசையும் அச்சமும் போட்டியிட விழிகளை விரித்தவள்,



"அச்சோ... நான் சும்மா சொன்னேன்ப்பா. வேணாம்... வேணாம்... இந்த விஷப்பரீட்சை! யுவனை வேற தூக்கிட்டு என்னையும்... ம்ஹும்..." என மறுக்க



"டேய் யுவன், உன் அம்மாவை வரச் சொல்லு. அம்மாவுக்கும் பூ வேணும் தானே? வரச் சொல்லுடா. உன் அப்பனை என்னவோன்னு நினைச்சிட்டா உன் அம்மா!" என மகனை உசுப்பிவிட்டவனின் கரங்களோ, மனைவியை எழுப்பி நிறுத்தி தன் தோளில் அமர வசதி செய்து தர



மகனோ, "ம்மா... ம்மா... ப்ளீஸ் ம்மா... ப்ளீஸ் ம்மா... வாம்மா!" எனக் கெஞ்சினான்.



ஆதியின் கரம் அவளது இடையைத் தொட்ட அந்த நொடி, அக்னியின் மூச்சு மெல்லத் தடைபட்டது. அவன் பிடியில் இருந்த பாதுகாப்பும் உரிமையும் அவளது தயக்கத்தை மெதுவாக உருகச் செய்தன. நாணம் மறைய, தயங்கி தயங்கி தந்தையின் தோளில் தாய் அமர்ந்ததைக் கண்டு யுவன் கை தட்டி ஆர்ப்பரித்தபடி,



"ம்மா... பூ... பூ வேணும்!" எனக் கேட்டான்.



அதை நிறைவேற்ற இருவரையும் சுமந்தபடி ஆதி இரண்டே அடியில் கொன்றை மரத்தை நெருங்க, அச்சத்தில்,



"யுவன் அப்பா... எனக்குப் பயமா இருக்கு. கீழ விடுங்க!" என்றவளின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல் ஆதி கடமையெனச் செயல்பட, தன் அச்சத்துடன் கூடிய நேசத்தோடு மகனுக்குப் பூவைப் பறித்துத் தந்தவளின் கரமோ கணவனின் அலை அலையான கேசத்தை வருட, இதழ்களோ காதலோடு உச்சியில் முத்தத்தைப் பதித்தன.



அவளது விரல்கள் அவன் கேசத்தில் தங்கிய விதமும், முத்தம் பதித்த பின் அவள் முகத்தில் விரிந்த வெட்கமும் ஆதியையும் மீறி அவன் உள்ளத்தைத் தழுவின. அந்தச் சிறு முத்தத்தைவிட, அவள் தன்னை நம்பி அவன் தோளில் அமர்ந்திருந்த உணர்வே அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.



"ம்மா... நானு... நானு!" எனக் குதூகலித்த யுவன் தந்தைக்கும் முத்தமிட,
அதில் மகிழ்ந்து மகனின் உள்ளங்கையில் முத்தமிட்டவன், மனைவியின் முத்தமிடலுக்குக் கோபம் கொண்டு,



"என்ன செய்துட்டு இருக்க, சாகரி? இப்ப உன்னைய கீழ தள்ளப் போறேன் பாரு!" என மிரட்ட...
ஐயோ பாவம்! அந்த வார்த்தையில் உள்ள கோபத்தை உணராமல்,



"ஹா... ஹா... ஐயோ, உங்களுக்கு நிஜமாவே தெரியலையா மச்சான்? முத்தம் தந்தேன். சும்மா மிரட்டாதீங்க. எங்க என்னைய தள்ளித்தான் விடுங்க பார்ப்போம்!" என ஆர்ப்பரிக்கும் குரலில் மங்கை கணவனுக்குச் சவால் விட,



ஒரு நொடியேனும் அதைச் செயலாக்க நினைத்த அவனின் அகமோ அடுத்தக் கணமே அதை மறுக்க, வேக மூச்சுடன் கட்டிலை நெருங்கியவன் மனைவியை இறங்கச் சொல்ல...



அவளை இறக்கும்போது அவன் கரங்கள் அவளது இடையை இன்னும் சில நொடிகள் விடாமல் தாங்கின. அவள் கீழிறங்கியதும் கூட, அவள் வழுக்கிவிடக் கூடாதென்று அவனது பார்வை அவளது பாதங்களிலேயே நிலைத்திருந்தது. இவ்வளவு நேரம் வாய் பேசிய கணவனின் கரிசனத்தில் காதல் பொங்க, கலகலவெனச் சிரித்தபடி அவசரம் காட்டாமல் மெல்ல மெல்ல நிதானமாய்த் தன்னவனின் மேனி உரசிட இறங்கியவளின் வலது கரம் கணவனின் நெஞ்சங்கூட்டில் அழுத்தியபடி,



"இப்ப ஒத்துக்கிறேன்... நீங்க வீரன், சூரன் தான்," எனக் காதலோடு புன்னகைக்க,
அந்த வதனத்தை எங்கே கண்டான் ஆதி... அவனின் பாடு அவனுக்கு.



மனைவி மெல்ல இறங்க, அவளின் நீண்ட கருங்கூந்தல் அவன் முகத்தை வருடிச் சென்ற நறுமணத்தாலோ... அல்லது அவளின் கையை மாலையெனக் கோர்த்து இவன் கழுத்தில் இடும்போது ஸ்பரிசித்த விரல்களின் வருடலாலோ... அல்லது வெண்ணையாய் அவன் உடலில் குழைந்த மனைவியின் தேகத்தில் பித்தானதாலோ... அல்லது மனைவிக்கே உண்டான வாசமோ... எதுவோ ஒன்றால் இவனின் தேகத்தில் நடந்த ரசாயன மாற்றத்தை அறிய முடியாமல் கண்களை மூடிக் கொண்டவன், பிறகெங்கிருந்து அவளின் நேசம் சுமந்த முகத்தைக் காணுவான்?



தேகம் நடுங்க தன் நெஞ்சைத் தொட்டவளின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவனின் பிடியில் நிச்சயம் நேசமில்லை... கோபமே பிரதானமாய் இருக்க, தன் உணர்வைச் சமன்படுத்தும் வேகமே அதில் இருந்தது. ஆனால் அந்தப் பிடியின் வெப்பத்தில் அக்னி அவன் மறைத்துக் கொண்ட காதலை உணர்ந்தாள். அவன் விரல்களுக்குள் தன் விரல்களை மெதுவாய் நுழைத்து, அவனது பதற்றத்தைத் தணிக்க முயன்றாள்.



அக்னி, "ப்ச்... இதுக்குத்தான் நான் மறுத்தேன். இப்ப என் சூராதி சூரனுக்கு என்ன ஆச்சுப் பாருங்க!" என்றவளின் கலகலவெனச் சிரிப்பில்,



யுவன், "ப்பா... என்னாச்சி?" எனக் கேட்டு சிரிக்க,



இருவரின் குட்டிக் கலாட்டாவில் தன்னிலை மீண்டவனின் முகத்தில் பொய்யான புன்னகை குடிகொள்ள,



"ஹே... வாயாடி!" என்றவன் செல்லமாய் மனைவியின் தலையில் கொட்டியபடி கட்டிலில் அமர்ந்தான்.



வலிக்காத தலையைத் தேய்த்து விட்டவளோ, கணவனை ஒட்டி அமர்ந்து புஜத்தில் கை கோர்த்தபடி, அவன் தோளில் தன் கன்னத்தை ஒரு கணம் சாய்த்துவிட்டு உடனே நிமிர்ந்தாள். அந்தச் சிறு உரசலே அவளது நாணத்தை மீண்டும் கிளறியது.



"யாரு நானா வாயாடி? சொல்லுவீங்க... சொல்லுவீங்க..." என்று ஏற்ற இறக்கத்துடன் பாவனையாகக் கேட்டதில்,
விரிந்த புன்னகையுடன்,



"ஆமா... நீ வாயாடி மட்டும் இல்ல. என் செல்லச் சிட்டுக்குருவி... எப்பவும் பேசிட்டே இருக்கறதுல!" என்றவன் அவளின் நுனி மூக்கைக் கிள்ளவும், யுவனும் அதையே செய்ய, அங்குச் சிரிப்பொலி பரவியது.



யுவன் தாயின் மூக்கைக் கிள்ளியதும், அக்னி போலிக் கோபத்தில் அவனைத் துரத்த, ஆதி இருவரையும் பார்த்தபடி சிரித்தான். அந்தச் சிரிப்பில் கணவனாகிய பெருமையையை விட... தந்தையாகிய நிறைவு தான் இருந்தது. அக்னி அதைக் கவனித்தபோது அவளது நெஞ்சில் சொல்லமுடியாத பாசம் பெருகியது. இந்த மகிழ்ச்சி எல்லாம் இனி வரும் காலங்களில் நினைவாக மட்டுமே இருக்கும் என்பதை அறியாமல், மகிழ்ச்சியில் திளைத்தார்கள் மூவரும்.



ஒரு நாள் டீச்சர் ரின்ஸியோடு வெளியே சென்றிருந்த அக்னி வீட்டுக்குத் திரும்ப, திறந்திருந்த வீடே இவளை வரவேற்க,



"இது என்னடா வம்பா போச்சு... வீட்டை இப்படித் திறந்து வச்சிட்டு இதுங்க ரெண்டும் எங்க போச்சுங்க? ரெண்டையும் நம்பி வீட்டை விட்டுட்டு போனேன் பாரு... என்னைய சொல்லணும். இன்னைக்கு நான் சீக்கிரம் வந்ததால தெரிஞ்சது. இல்லனா நாம வெளிய போறப்ப எல்லாம் இப்படித்தான் வீட்டுக் கதவு பப்பரபேன்னு திறந்திருக்கும் போல!" என முனகியவள், வீட்டினுள்ளே இருவரையும் தேடி முடித்துத் தோட்டத்திற்கு வர



அங்கே மரத்தின் பின்னே,
"ப்பா... ப்பா... ப்ளீஸ் ப்பா... அம்மா கிட்ட சொல்லாத. நான் சமத்தாயிருப்பன்... யுவன் குட் பாய்," என்ற மகனின் ரகசியக் குரலில் ஒரு நொடி அசைவின்றின்றி நின்றவளின் செவிகள் கூர்மையாகின.



"ஆமா டா மகனே... நீயும் சொல்லிடாத. நான் இப்படிச் செய்தேன்னு தெரிஞ்சா அம்மா பேசி பேசியே கொன்னுடுவா என்னைய. சமத்தா நாம ரெண்டு பேரும் எல்லாத் தடயத்தையும் அழிச்சிடணும், சரியா?" என்றவனின் ரகசியக் குரலும் மகனுடன் சேர்ந்து டீல் பேசக் கேட்டவளுக்குச் சுவாரசியம் பிறக்கவும், உதட்டில் மென் புன்னகை தவழ, அடுத்து இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய அமைதி காத்தாள்.



அங்கே பேச்சு மூச்சே இல்லை.
'எதுக்கு இவ்வளவு அமைதி?' என எண்ணியவள், மெல்ல அடியிட்டு மரத்தின் பின்னே காண, அங்குக் கண்ட காட்சியில் விழிகள் திகைப்பிலும் கோபத்திலும் விரிய,



"அடேய் கள்ளப் பயலுங்களா! எத்தனை நாளா இந்தக் கள்ளத்தனம்? இதுல அப்பனும் மகனும் கூட்டு வேற... கூட்டு களவாணிகளா!" என்ற தாயின் அதிரடிக் குரலைக் கேட்டு, தான் ருசித்துக் கொண்டிருந்த ஐஸ்கிரீம் டப்பாவை யுவன் கீழே தவற விட, அது தரையில் விரித்திருந்த பாயில் விழுந்து சிதறியது.




இவ்வளவு நேரமும் மகன் பக்கத்தில் அமர்ந்து அவன் உண்ணும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவன், மனைவியின் குரலால் மகன் தவற விட்ட டப்பாவை எடுத்து, மீதமிருந்த ஐஸ்கிரீமைச் சரி செய்து, பயத்தில் உறைந்திருந்த மகனின் தலையைத் கோதியபடி,



"நீ சாப்பிடு யுவன்," என டப்பாவைத் தர,



"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? எத்தனை நாளா இது நடக்குது?" எனக் கேட்டவளின் குரலில் கோபம் மருந்துக்குமில்லை என்பதை உணர்ந்தவனோ,



"ஹி... ஹி... சும்மா இப்பத்தான் சாகரி. ரொம்ப நாள் எல்லாம் இல்ல. கடைல இவன் ஃப்ரீசர் முன்னாடி நின்னு அசையவே மாட்டேங்குறான்... நீயே சொல்லு, நான் என்ன பண்றது? நீ திட்டுவன்னு தெரியும். ஆனா குழந்தையையும் ஏமாத்த முடியாதே. நீ வெளிய போனதுல இருந்து இவன் 'அம்மா எப்ப வருவா'ன்னு கேட்டுட்டே இருந்தான்... நானும் ரெண்டு தடவை வாசலைப் பார்த்தேன், அவ்வளவுதான். என் கோவக்கார ராட்சஸி.. போதும் டி.. என் செல்ல அம்மணி.. என் பட்டுத் தங்கம் தான நீ.. என் வாயாடி.. என் சண்டக்கோழி.. என் பப்பிக் குட்டி தான நீ.. இனி உன்கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டோம், சத்தியம்... இந்த ஒரு தடவை விட்டுடு டி, சரியா?" என மனைவியைப் போலியாய் தாஜா பண்ண,



அவன் ஒவ்வொரு செல்லப் பெயரையும் சொல்லும்போதும் அக்னியின் கோபம் சற்றுச் சற்றாகக் குறைந்தது. இருந்தும் முகத்தில் கடுமையைத் தக்கவைத்துக் கொண்டு அவனை முறைத்தாள். அவளது கண்களின் ஓரத்தில் மறைந்திருந்த புன்னகையை ஆதி மட்டும் கவனித்தான்.
அங்கு நடப்பதை கண்டு எப்படியோ நமக்கு அடி இல்லை என்பதை உணர்ந்த



யுவன், "ப்பா... பப்பிக் குட்டின்னா நாய்க்குட்டி ப்பா. அம்மாவ எல்லாம் dogனு சொல்லக்கூடாது," என ஐஸ்கிரீம் ஸ்பூனை நாக்கில் வைத்து வழித்தபடி தந்தைக்குப் பாடம் எடுக்க,



"இவன் வேற... சும்மா இரு டா!" என்றவன், மனைவியை நெருங்கி அவளின் தாடையைப் பற்றி,



"சும்மாதான்ம்மா... சும்மா... இந்த ஒரு தடவை..." என ஏதேதோ சொல்லி மூக்கையும் கண்ணையும் சுருக்கியபடி அவளை மலை இறக்க உருட்டோ உருட்டென உருட்ட, அவனது விரல்கள் அவளது தாடையைத் தொட்ட விதத்தில் இருந்த கொஞ்சலும், குரலில் கலந்த கெஞ்சலும் அக்னியின் உள்ளத்தை மெதுவாய் வருடின.



கோபமாக இருக்க வேண்டியவள், அவன் முகத்தைப் பார்த்ததும் பார்வையைத் தாழ்த்தி, உதடுகளை அடக்கிக் கொண்டாள். முதல் முறையாக இப்படி ஒரு பரிமாணத்திலும் கணவனின் அணுகுமுறையிலும் கொஞ்சமே கொஞ்சம் மலை இறங்கியவள்,



"சரி... சரி... இதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். இனி இப்படிச் செய்யாதீங்க. ஆமா, அவன் மட்டும் தான் குழந்தையா? எனக்கு எங்க ஐஸ்கிரீம்?" எனக் கேட்டவளைப் பரிதாபமாக நோக்கியவன், அடுத்த நொடியே,



"ஆஹா... உனக்கு இல்லாமலா? இதோ... இதோ இருக்கே!" எனப் பாய் மேல் பிரிக்கப்படாமல் இருந்த ஐஸ்கிரீம் டப்பாவை எடுத்து நீட்ட,



யுவன், "ம்மா... அது எனக்கு. ஆதி பொய் சொல்றான்!" எனப் போட்டுக் கொடுத்ததில், இவள் கணவனை முறைக்க,



"ஹி... ஹி... இதையும் அவருக்காக வாங்கினேன். அந்த டப்பா காலியாகவும் இதைத் தர வச்சிருந்தேன். இப்ப என்ன? இது உனக்குத்தான்... இந்தா, நீ எடுத்துக்க!" எனப் பெருந்தன்மையாய் நடந்து கொண்டவனைப் பார்வையால் பொசுக்கியவள், மகன் கையில் வைத்திருந்த ஃபேமிலி பேக் டப்பாவைக் கண்டு,



"எது? இந்த ஐஸ்கிரீம் பத்தாதுன்னு மறுபடியும் இன்னொன்றா? நல்லா இருக்கு நீங்க பிள்ளை வளர்க்கிற லட்சணம்! இதுல இவரு எனக்கு ஐஸ்கிரீம் தராராம். எனக்கு எதுவும் வேணாம்!" என்ற போலி மறுப்பை உண்மை என நம்பிய மகன்,



"ஆதி அம்மாக்கு ஐஸ்கிரீம் வேணாமா? எனக்கு வேணும்... தா!" என அந்த டப்பா ஐஸ்கிரீமுக்கும் அடி போட, அதில் இத்தனை நேரம் வாய் பேச்சிலிருந்தவள்,



"அடி கழுதை... இதுவும் உனக்கு வேணுமா? இதோ வரேன்!" எனப் புன்னகையுடன் அருகிலிருந்த கழியை ஒடிப்பது போல் பாவணை செய்ய,



ஆதி, "மவனே... தப்பிச்சு ஓடிடுடா!" என மகனை விரட்டவும்,



யுவன் மரத்தைச் சுற்றி ஓட, இவள் புன்னகையுடன் துரத்த... துரத்தியவளைத் தன் இரு கைகளால் சிறை செய்தவன், மனைவியுடனே பாயில் சரிய... இவள் திமிற, அவன் இறுகப் பற்ற... அவனுக்கு எப்படியோ பெண்ணவளின் தேகம் எக்குத்தப்பாய் உரசியதில் சிலிர்த்து அடங்கியது.



அக்னியின் திமிறல் உண்மையான கோபமல்ல என்பதை ஆதி அறிந்திருந்தான். அவள் தப்பிக்க முயல்வது போல அவன் கரங்களில் இன்னும் நெருக்கமாகச் சாய்ந்தாள். அவளது கன்னம் அவன் மார்பில் உரசியபோது, அவளது மூச்சின் வெப்பம் அவன் கழுத்தைத் தொட்டது. இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்து, உடனே அக்னி மட்டும் வெட்கத்தில் வேறு திசை நோக்க... இதையெதுவும் உணராத ஆதி,



"ப்ளீஸ் டி... பையன விட்டுடு டி... இந்த ஒரு தடவை டி!" என்றவனின் உதடுகளும் மீசையும் பெண்ணவளின் கழுத்தில் கோலமிட, தேகம் கூச முற்றும் முழுமையாகக் கணவனுள் அடங்கிப் போனாள் அக்னி.



அவனது குரலிலிருந்த கெஞ்சலும், தன்னைச் சுற்றியிருந்த கரங்களின் பாதுகாப்பும் அவளது குறும்புக் கோபத்தை முழுவதுமாய்க் கரைத்தன.



அவள் அவன் சட்டையைப் பற்றியபடி, "சரி... இந்தத் தடவை மட்டும்," என்று மெல்லச் சொல்ல, அந்தச் சொற்கள் அவன் காதருகே காதலாய் விழுந்தன.



இவர்கள் இருவரின் கலாட்டாவைப் பார்த்த யுவன், இருவர் மீதும் ஏறிக் குதித்து உருள, அங்கு மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. ஆதி மகனைத் தன் கரங்களில் தூக்கி இருவருக்கும் நடுவே அமர்த்த, அக்னி அவன் தோளில் சாய்ந்தபடி யுவனின் நெற்றியில் முத்தமிட்டாள். மூவரையும் சுற்றியிருந்த அந்தச் சிறு உலகில், சிரிப்பும் பாசமும் நிறைந்து, அந்த நாள் இன்னொரு இனிய நினைவாக மாறியது.
 
Back
Top