தென்றல் 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜன்னல் வழியே காலை நேர வெயில் கீற்று முகத்தில் பட, கையிலிருந்த தேநீர் கோப்பையை இறுக்கிப் பிடித்தபடி வான்வெளியை நோக்கியவளின் சிந்தனை எல்லாம் மகனைப் பற்றித்தான். அந்நேரம் படுக்கையில் மகனிடம் அசைவு தெரிய, இவள் மகனை நோக்க.. விடிந்து வெகு நேரம் கடந்தும் படுக்கையை விட்டு எழும் எண்ணமின்றி வெறுமனே படுக்கையில் உழன்று கொண்டிருந்த மகனை நெருங்கியவள்,



“என் செல்லத்துக்கு என்னாச்சு.. இன்னும் தூக்கம் கலையலையா என் தங்கத்துக்கு..” எனக் கேட்டு மகனின் தலை கோதி, கழுத்தில் கை வைத்து காய்ச்சலா எனச் சோதிக்க,



“ம்மா... இன்னைக்கு லீவ் வா..”



“இல்ல செல்லம்.. ஸ்கூல் இருக்கு.. ஸ்கூல் போனா தான் ஜாலி.. அங்கதான உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் பார்க்க முடியும்.. எழுந்திருங்க.. எழுந்திருங்க..” என மகனைத் தாஜா செய்தவளை, அடுப்பில் வைத்த குக்கர் விசில் அழைக்க



“எழுந்திரு யுவன்..” என்றபடி காலை உணவைத் தயாரிக்க விரைந்தாள் அக்னி.



குளியல் முடித்து உள்ளே நுழைந்தவனைக் கண்டதும்,
“ஆதி.. இன்னைக்கு லீவா?” என மறுபடியும் யுவன் கேட்க,



“இன்னைக்கு லீவ் தான்.. my champ..” என்ற தந்தையை, முகம் கொள்ளாப் புன்னகையுடன் இரு கரம் நீட்டி அருகில் அழைத்த மகன், கழுத்தைக் கட்டிக்கொள்ள.. நெகிழ்ந்து போனது ஆதிக்கு.



“போதும்.. போதும்.. உங்க கொஞ்சல்.. அவனை ஸ்கூலுக்குக் கிளப்புங்க..” என அதட்டலிட்ட அக்னி தன் வேலையில் கவனமாக இருக்க,



புன்னகையுடன், “உன் அம்மாவுக்குப் பொறாமை டா..” என்றவனின் காதில்,



“ஆதி.. நீயும் படுத்துக்கோ..” என மகனின் கொஞ்சலில் முழுவதுமாகப் படுக்கையில் சரிந்ததும், ஆதியின் முதுகில் யுவன் படுத்துக்கொள்ள



இவர்களைக் கண்ட அக்னி, “அடி ஆத்தி.. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் எழுந்துக்கிற உத்தேசமே இல்லையா.. என்ன ஒய்யாரம் பார்த்தியா இவனுக்கு.. ஆமா.. இவரு எந்தச் சமஸ்தானத்துக்கு யுவராஜன்?” என முகம் புன்னகையில் விகாசிக்க, பெருமிதத்துடன் துள்ளல் குரலில் மொழிந்தவளிடம்,



“எல்லாம் என் சமஸ்தானத்தின் இளவரசன் தான்.. ஆமா.. இப்ப நீ எதுக்கு இப்படிச் சொல்ற?”



“நான் என்னத்த சொல்ல.. உங்க இளவரசன் செய்ற வேலை அப்படி.. கால் மேல் கால் போட்டு தோரணையா உங்க முதுகுல படுத்துகிட்டு.. கைகள் இரண்டையும் நெஞ்சில கட்டிகிட்டு.. விட்டத்தைப் பார்த்து ஆராய்ச்சியில் இருக்கார் இந்தப் பெரிய மனுஷன்.. எந்தப் பிரஜையோட குறை தீர்க்க இத்தனை பலமான யோசனைன்னு தெரியல..” என வாஞ்சையுடன் மகனை ரசித்தவள் பகிர, இவளின் பகிர்விலேயே கண்ணில் கர்வம் குடிகொள்ள,



“வாட்.. ஹேய் சாகரி.. எனக்கும் அதைப் பார்க்க ஆசையா இருக்கு.. என் போன்ல வீடியோவா ரெக்கார்ட் செய்து தாயேன்..” என இவன் ஆசையோடு கேட்கவும்,



மகனை இப்படிக் காணக் காண அக்னிக்கே தெவிட்டவில்லையே.. பிறகு எங்கு மறுப்பாள் அவன் சொன்னதை இவள் செய்ய.. போனில் வீடியோவாகப் பதிவாகப் போகிறோம் என்றதும், கன்னத்தில் கை வைத்து, காலை காற்றில் சுழற்றி என இந்தச் சேட்டைக்காரப் போக்கிரி ஸ்டைல் காட்ட, அனைத்தையும் பதித்தவள் ஆதியிடம் காண்பிக்க, மகனின் ஒவ்வொரு அசைவையும் கண்டு ரசித்தவனின் விழிகளோ ஆச்சரியத்துடன் ஆனந்தத்தில் ஒளிர்ந்தது. ஒருவழியாக யுவனை பள்ளிக்கு கிளப்பி அனுப்பிய பிறகு ஆதியும் வேலைக்குச் சென்று விட.. வேலை ஓய்ந்து அமர்ந்தவளின் மனது நடந்தவற்றை அசைபோட.. முகம் பூரிக்க வாய்விட்டே சிரித்து விட்டாள் பெண்ணவள்.



மாலை வேலை முடித்து வந்த கணவனின் முகத்தில் சோர்வைக் கண்டு டீ கலந்து எடுத்து வந்தவளுக்கு, தோட்டத்தில் நின்று கைப்பேசியில் யாருடனோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்த அவனது உடல்மொழி ஒருவித பதற்றத்தை உணர்த்த,



“வந்ததும் வராததுமா.. இப்ப எதுக்குப் போன்..” எனத் தனக்குள் முணுமுணுத்தபடி நெருங்கியவள்,
திடீரென மௌனமானவனின் உடல்மொழியில் ஒருவித சோர்வு கலக்க,



“ஹ்ம்ம்.. இருக்கேன் சொல்லுங்க.. எனக்கு மட்டும் என்ன இங்கிருக்க ஆசையா.. வேலை முடிஞ்சா நான் வர மாட்டனா.. எனக்கு மட்டும் யாரு இருக்கா.. நான் அநாதை தான்..” என்றவனின் வார்த்தைகள் இவள் செவியில் விழுந்து மனதை உறுத்த,



“ஆதி..” என அழைத்துத் தேநீரை நீட்ட.. திடுக்கிட்டுப் போனை அணைத்தவனின் முகத்தில் பதற்றம் இல்லாமல் இருக்க முயன்றது தெரிந்தது.



என்ன விஷயம் எனத் தெரியாமலேயே,
“எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் ஆதி.. உங்களுக்குச் சொல்ற மனசு வரும்போது சொல்லுங்க.. வலியக் கேட்டு உங்களைத் தொந்தரவு படுத்த மாட்டேன்..” என்றவள், கையில் தேநீரைக் கொடுத்துவிட்டு நகர..



தன் கையிலிருந்த கோப்பையையும், விலகிச் செல்லும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்த ஆதியின் உதடுகளில் மெல்லிய ஆசுவாசம் கலந்த புன்னகை தவழ்ந்தது.



அதன் பிறகான நேரம் முழுக்க அதே மனநிலையில் இருந்த கணவனைக் கண்டு அக்னியும் கலங்கிப் போக.. இரவு உணவுக்குப் பின் அவரவர் இடத்தில் படுக்க, ஆதி உறங்காமல் புரண்டு கொண்டிருப்பதை உணர்ந்தவள் மெல்ல எழுந்து கணவனைக் காண, அவனோ புருவம் நெறிய சிந்தனை வயப்பட்ட முகத்துடன் கண்கள் மூடிப் படுத்திருந்தான்.. அதுவே சொன்னது அவன் உறங்கவில்லை என்று.



அதில் இன்னும் நெருங்கி சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்தவள்,
“யுவன் ப்பா.. தூக்கம் வரலையா?” என்றபடி கணவனின் தலையைத் தன் மடியில் வாங்க முயல,



திடுக்கிட்டு எழுந்த ஆதி, “என்ன சாகரி செய்ற.. ஏன் இங்க வந்த.. போ ம்மா.. போய்த் தூங்கு..” என விரட்ட,



“ஓவரா பண்ணாதிங்க.. படுங்க.. நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன்.. முகமே சரியில்ல..” என்றபடி கையைப் பிடித்தவளுக்கு இவன் பிடி கொடுக்காமல் நழுவ,



“யுவன் ப்பா.. நீங்க செய்யறது சரியில்ல.. சொல்லிட்டேன்.. நான் அவ்வளவு பொறுமைசாலி இல்ல ஆதி.. படுங்க.. சொல்லிட்டேன்..” என்றவள் கணவனை மடியில் சாய்த்துக்கொண்டு,



“எழுந்திங்கனா கொன்னுடுவேன்..” என விரல் நீட்டி மிரட்ட.. அதை மீறித் தோன்றாமல் இமை சிமிட்டாமல் மனைவியையே பார்த்திருந்தான் ஆதி.



“என்ன பார்க்கறிங்க.. கண்ணு முழியை நோண்டிடுவேன்.. அப்படியே யுவன் மாதிரியே பார்த்து வைக்க வேண்டியது..” என்றவளிடம்,



“என்னை என்ன சொன்ன?” மெல்லிய குரலில் கேட்டவனின் தலையைக் கோதியபடி,



“என்ன சொன்னேன்.. உங்க கண்ணு முழிய நோண்டிடுவேன்னு சொன்னேன்.. ஏன், செய்ய மாட்டேனா?”



“ம்ப்ச்.. அதில்ல.. ஏதோ யுவனப்பான்னு சொன்ன தான?”
இவன் ஆர்வமாய்க் கேட்க,



“ஹ்ம்ம்.. ஆமா.. அப்படித்தான் சொன்னேன்.. நீங்க யுவனோட அப்பா.. அதான் உங்களை அப்படிச் சொன்னேன்..” என உரிமை பாராட்டியவளின் கையைப் பற்றிக் கன்னத்தில் இவன் பதித்துக்கொள்ள, அதில் விருப்பத்துடன் கணவனின் கன்னத்துத் தாடியில் தன் விரல்களை அலைய விட்டவளோ,



“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. என் அப்பாவை அம்மா இப்படிப் பேர் வச்சி கூப்பிட்டதாதான் எனக்கு ஞாபகம்..” என மொழிந்தவள்,



“நீங்க ஏன் அப்படிச் சொன்னிங்க.. நானும் யுவனும் இருக்கும் போது நீங்க எப்படி அநாதை ஆக முடியும்.. எனக்கு அதைக் கேட்டதிலிருந்து மனசே சரியில்ல.. இனி இப்படிச் சொல்லக்கூடாது.. நாங்க இரண்டு பேரும் உங்களுக்காக இருக்கோம்.. சரியா?” என்றவளின் ஒரு கரம் கணவனின் தலை கோத, மறு கரம் தாடியை இறுகப் பற்றியபடி இழுத்து வருட, மணிப்புறாவாய் தலை சாய்த்து நேசத்தோடு மொழிந்தவளை மௌனமாய், எவ்வித சலனமுமின்றி, இமை சிமிட்டாமல் நோக்கினான் ஆதி.



“என்ன பதிலே காணோம்..” எனக் கேட்டவள் உரிமையாய் கணவனின் தாடியைப் பற்றிப் பலமாய் இழுக்க,

“ஸ்ஷ்ஷ்.. ராட்சஸி.. வலிக்குதுடி..” என்றவன் மறந்தும் மனைவியின் கரத்தைத் தட்டி விடவில்லை.



“வலிக்குதா.. நல்லா வலிக்கட்டும்..” என்றவள்,



“என் வாழ்க்கையில் எல்லாமே என் முடிவு தான்.. இத்தனை வருட என் அன்றாட வாழ்க்கையில் எத்தனை ஆண்களைச் சந்தித்திருக்கேன்.. அவங்க யார் மேலையும் ஈர்ப்பு வந்ததில்ல.. அதுக்காக உங்களைக் காதலித்தேன்னு சொல்ல மாட்டேன்.. என் யுவராஜனின் அப்பாவான உங்க செயலை ரசித்து நேசித்தேன்னு சொல்லலாம்..” என ஆத்மார்த்தமாய்ச் சொன்னவள்,



“நீங்க யுவன் கிட்ட நடந்துக்கிற ஒவ்வொரு செயலும் எனக்கு என் அப்பாவை நினைவுபடுத்தும்.. என் நினைவடுக்கில் இருப்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான்.. அம்மா சோறு ஊட்டினதை விட அப்பாதான் ஊட்டுவார் உங்களை மாதிரி.. நாள் கிழமை வந்தா அப்பாதான் என்னைக் குளிப்பாட்டி, தலை சீவி, உடுப்பு மாத்தி, அலங்காரம் செய்து, என் தேவதைன்னு கன்னம் கிள்ளி கொஞ்சுவார்.. அவர் தோளில் உட்கார்ந்து பூ பறிச்சிருக்கேன்.. அம்மாவை பிடிப்போமான்னு என்னைச் சுமந்துகிட்டு அம்மா கிட்ட ஓடுவார்.. நான் தோளில் உட்கார்ந்து சிரிக்க, அம்மா எங்களைப் பார்த்து ரசிக்க.. அந்தக் காடு முழுக்க எங்க சிரிப்புச் சத்தம்தான் நிறைந்திருக்கும்..



இப்ப நீங்க யுவனை மடியில உட்கார வச்சு, கை பிடித்து வண்டிய ஓட்டுற மாதிரி என் அப்பா செய்திருந்தார்.. இதே மாதிரி ஒரு குட்டி யானை வண்டிதான் வச்சிருந்தார்.. ஒரு விபத்தில் அதே வண்டியில் அப்பாவும் அம்மாவும் போயிட்டாங்க.. அது விபத்துன்னே அந்த வயசுல எனக்குத் தெரியல.. இப்போ நீங்க நடந்துக்கிற ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் என் அப்பாவைப் பார்க்கறேன்..” என உணர்வுப் பிழம்பாய் மனம் திறந்தவளின் வார்த்தைகள் ஆண்மகனின் நெஞ்சை ஏதோ செய்ய, கண்கள் மூடி இவன் தன் நெஞ்சை நீவிக்கொள்ள,



“ஆமா… உங்களைப் பிடிச்சிருக்கு.. அதுவும் ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு..” என்று காதலின் கனிவு கலந்த குரலில் மொழிந்தவளின் உதடுகள், கணவனின் நெற்றியில் மெல்லிய முத்தமொன்றைப் பதிக்க,



விழிகளைத் திறந்தவன், தன் அருகிலிருந்த மனையாளின் முகத்தையும், அந்த முத்தத்தின் மென்மையையும் முழுமையாகத் தன்னுள் உள்வாங்கிக் கொண்டவனாக,
உணர்வுகளின் பிடியில் உயர்ந்த அவனது கரம், அவளது கேசத்தோடு பின்னங்கழுத்தையும் வருடியபடி, மனைவியின் இதழ்களைத் தன் உதட்டருகே கொண்டு வந்தவனின் விழிகள் மனைவியின் விழிகளிலேயே ஆழ்ந்திருக்க.. இவளும் இமைகளைத் தாழ்த்தாமல், காதல் ததும்பும் எதிர்பார்வையால் அவனைச் சந்திக்க,
இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றெனக் கலந்த நிலையில்.. இரு உதடுகளும் தொட்டுவிடும் தூரத்தில்.. மை இருட்டில்.. ஏகாந்த வேளையில்.. இரு இதயங்களின் தாள லயத்தில்.. முத்தத்தில் தொடங்கி, பின் தீயெனப் பற்றியெரியவிருந்த கூடலின் உணர்வில், இருவரும் தங்களை மறந்துவிடும் விளிம்பை நெருங்கியிருந்த தருணம்..



தங்களின் நிலையை உணர்ந்த ஆதி,
“சாரி ம்மா..” என்றபடி முகம் திருப்ப,



தானாகவே கன்னத்தில் உரசிய மனையாளின் இதழால், அவனுள் அடங்கிக் கிடந்த நேசத்தீ மேலும் பற்றிக்கொள்ள, அதில் தன் பிடியைத் தளர்த்திய ஆண்மகனின் நெஞ்சம்.. பாவம்.. இந்த நொடியில் அவனுள் எழுந்த உணர்வின் ஆழத்தை உணர்ந்துகொள்ளவில்லை.



“இதுக்கு எதுக்குச் சாரி?” என இயல்பாய் கேட்டவளின் கரங்கள், கணவனின் தலையையே அன்பின் உரிமையோடு வருடின.



“இது எதுவும் நிரந்தரமில்ல, சாகரி.. உன் நேசம் மாறலாம்.. என்னைப் பிடிக்காமலும் போகலாம்..”



“அதெல்லாம் மாறாது.. உங்களை எப்படி எனக்குப் பிடிக்காம போகும்?”



“ஒருவேளை பிடிக்காமல் போனால்.. அப்ப என்ன செய்யப் போற?”
இவன் விடுவதாயில்லை.



“அட, சும்மா இருங்க மிஸ்டர்.. இவரை எனக்குப் பிடிக்காம போகுமாம்! வாய்ப்பேயில்லை.. அப்படி நடந்தா..” என்ற கேள்வியோடு நிறுத்தியவளை,
விழிகளைத் திருப்பி, பதிலுக்காக அவளது முகத்தையே எதிர்பார்ப்போடு இவன் காண,



“நிச்சயமா அன்னைக்கு நான் என்ன செய்வன்னு உங்களுக்கு தெரியத்தான் போகுது.. அதனால பேசாம நல்ல பிள்ளையா இப்ப தூங்குங்க..” என்ற பேதையின் குரலில், கேலியும் காதலும் கலந்திருந்தன.



பிறகான நேரம் இருவரும் உறக்கத்தின் பிடியில் பயணிக்க..
திடீரென ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்த ஆதி கண்டது, அமர்ந்த நிலையிலேயே உறங்கிக்கொண்டிருந்த மனைவியையும், அவள் மடியில் ஒன்றி, அவளது நெஞ்சில் தஞ்சமடைந்தபடி உறங்கிக்கொண்டிருந்த மகனையும்தான்.



“கேடி பில்லா.. எப்ப எழுந்து வந்தான்னே தெரியல..” என முணுமுணுத்தவனின் உதடுகளில், மகனைக் கண்ட பாசத்தின் மெல்லிய சாயல் படர்ந்தது. மகனைப் பாசத்துடன் தூக்கி, கட்டிலில் படுக்க வைக்க,



“ப்பா..” என்ற சொல்லுடன் இவனது பனியனைப் பற்றிக்கொண்ட அந்தச் சிறு கரத்தை அன்போடு பார்த்தவனின் விழிகள் பனிய, மகனின் தலைகோதி நெற்றியில் முத்தமிட்டவனோ,
பின், மனைவியின் தூக்கம் கலைந்துவிடாமல் மெல்ல அவளை நேராகப் படுக்க வைத்து, அவளது தலைக்குத் தலையணை கொடுக்க,
அடுத்தக் கணம்.. மகனைப் போலவே,



“ப்பா..” என்ற மெல்லிய முனகலுடன் மனையாளும் இவனது பனியனைப் பற்றிக்கொள்ள, அந்த ஒரு சொல்லில், அவன் அறியாமலேயே எழுந்த பாசத்தின் பழக்கத்தில், அவளது தலைகோத உயர்ந்தது அவன் கரம்.


ஆனால்.. அடுத்தக் கணமே தன் நிதானத்தால் நிதர்சனம் உரைக்க, கரத்தைத் தடுத்துக்கொண்டான் ஆண்மகன்.



ஒரு கணம் முன் மகனின் மீது பொழிந்த அதே நேசம், தன்னை ஏமாற்றியவளின் மீதும் பொழிய இருந்ததை உணர்ந்தவனின் விழிகளில்.. அன்புக்குப் பதிலாக வெறுப்பு கனன்று, அது மனைவியின் மீது தப்பாமல் உமிழ்ந்தது.




இவன் விழிகள் விரைவில் மீண்டும் காதலைப் பொழியுமா?
 
Back
Top