தென்றல் 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கணவன் வாரி இறைத்த வார்த்தைகளைவிட, தானே மகனை அப்படிச் சொல்லிவிட்டோமே என்ற தவிப்புதான் அக்னியை வதைக்கவும்... தேகம் நடுங்க, அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தவளோ,



“என் பிள்ளையை நானே என்ன வார்த்தை சொல்லிட்டேன்... ஒரு வார்த்தை வெல்லும்... ஒரு வார்த்தை கொல்லும்னு சொல்வாங்க... முருகா... என் பிள்ளைக்கு அப்படி எதுவும் தந்துடாத...” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறியவளுக்குத் தெரியவில்லை...



அவளது ஆழ்மனதில் பல வருடங்களாகப் புதைந்து கிடந்த பயம்தான் இன்று வார்த்தையாக வெளியே வந்திருக்கிறது என்று.



வீட்டிற்கு வந்தவளுக்கு வைதேகி டீ போட்டுக் கொடுத்து, என்ன நடந்தது என்று விசாரிக்க, அக்னி நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கவும்,



“நீ இல்லாம தம்பி தனியா வரும்போதே நினைச்சேன்... உங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு.. நீயும் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது அக்னி. சின்ன வயசுல மகி செய்யாத சேட்டையா?”



“தப்பு தான் அண்ணி... நான் ‘தறுதலையா போய்டுவான்னு’ சொல்ல வந்தேன். கடைசியில வார்த்தை அப்படி வந்துடுச்சு. நான் மனசறிந்து சொல்லல.”



“என்னால புரிஞ்சிக்க முடியுது. விடு... தம்பி இங்க வரவும் யுவன் ஒரே அழுகை... அதான் வெளியே அழைச்சிட்டு போயிருக்காங்க. இந்த அப்பாக்களுக்குத் தெரியாது... தன் பிள்ளை என்ன செய்தாலும் சரிதான் என்ற மனப்பாங்கு அவங்களுக்கு உண்டு. நேரம் வரும்போது பக்குவமா எடுத்துச் சொல்லு. எல்லாம் சரியாகிடும். மனசைப் போட்டு உழப்பிக்காத. கண்ணத்துக்கு மஞ்சள் பத்து போடு... நான் வர்றேன் அக்னி.”



வைதேகியிடம் பேசிய பிறகு அக்னியின் மனம் சற்றே தெளிந்தது.



அதே கணவன் பேசிய வார்த்தைகளும், செய்த செயல்களும் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து, வில்லென நிமிர்ந்த அவளது தேகமெங்கும் அவமானத்தின் சுவடு படர்ந்தது.



‘என்ன சொன்னார்? நான் பேசுனா பிடிக்கலையா? பேசி பேசியே கழுத்தை அறுக்கிறேன்னா?’



ஏன் அப்படி என் மீது என்ன கோபம்? இது வெறும் கோபமா? இல்லை... வெறுப்பா?'



முதல் முறையாக, கணவனை வேறொரு கோணத்தில் வைத்து சிந்திக்க ஆரம்பித்தது இவளது மனம்.



ஊர் சுற்றச் சென்ற அப்பனும் மகனும் இருள் சூழ்ந்த பின்னரும் வீடு திரும்பவில்லை.



அக்னிக்கிருந்த கோபத்தில், இவளும் அழைத்து விசாரிக்கவில்லை.



“போங்க... எனக்கு என்ன வந்தது.. பெருசா அப்பனும் மகனும் உருக வேண்டியது? எங்கனா இருந்துட்டு வாங்க. இராவிக்குச் சோறு போடாம விடறேன்... வரட்டும். பேசாம இருந்தே மனுஷனைக் கதற விடுறேன் பார்!”



வாய் விட்டே சொல்லிக் கொண்டவளின் விழிகள் மட்டும் நொடிக்கு ஒரு முறை வாசலைக் காணத் தவறவில்லை.



‘வந்துட்டாங்களா?’ என்ற எதிர்பார்ப்பை இவளது பிடிவாதம் மட்டும் ஒப்புக்கொள்ள மறுத்தது.



‘நீ என்ன எங்களுக்குச் சோறு போடுறது?’ என்ற மிதப்பில், இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக் கொண்டு, உறங்குவதற்காக மட்டுமே வீட்டிற்கு வந்தனர் அப்பனும் மகனும்.



உறங்கிவிட்ட மகனின் ஆடைகளைக் களைந்து, எவ்வித பேச்சுமின்றிக் கட்டிலில் படுக்க வைத்தவன், தானும் உடை மாற்றிக் கொண்டு உறங்கத் தயாராக,



கணவனின் அந்தப் புறக்கணிப்பால் மனதில் எழுந்த வலியை அடக்கிக் கொண்டு படுக்கையில் சரிந்த அக்னிக்கு, கிஞ்சித்தும் உறக்கம் வரவில்லை.



காலையில் எழுந்ததும் எதுவுமே நடக்காதது போல்,



“நான் வெளியே போயிட்டு வர்றேன்.” என்ற ஒற்றை வார்த்தையுடன் கிளம்பியவனுக்கு, இவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.



மகன் எழுந்ததும் அவனைக் குளிக்க வைத்து, உணவு ஊட்டியவள்,



“யுவன் கண்ணா... நேத்து நீ செய்தது தப்பு. அப்படி நடந்துக்கக் கூடாது. ஸ்கூல்ல இருந்து இனிமேல் உன்னைப் பற்றி இப்படியெல்லாம் எதாவது சொன்னா, அம்மா நேத்து மாதிரி பொறுமையா இருக்க மாட்டேன். நிச்சயம் அடி பின்னிடுவேன்... சரியா?” என்ற தாயை யுவராஜன் பரிதாபமாகப் பார்க்க,



“சரி சரி... உடனே முகத்தைச் சுணக்காத. நீ தப்புச் செய்தா தான் அம்மா அடிப்பேன். சரியா?” எனப் பக்குவமாகப் புரிய வைத்தவள்,



“ஆமா... நேத்து ஆதியோட நீங்க எங்க போனீங்க?” என்று விசாரிக்க,



“ம்மா... ஆதியும் நானும் வண்டியில போயிட்டு... மீன் பார்த்தோமா... அங்க மீன் கூடக் குளிச்சேன்.”



“டேய் படுவா! குளிச்சா நீ போட்டிருந்த துணி ஈரமா இருக்குமே டா? வேற டிரஸ்ஸும் இல்லாம இதே உடுப்போடவா நாள் முழுக்க இருந்த?” என அப்பாவியாய்க் கேட்டவளுக்கு,



“ம்மா... உனக்கு ஒண்ணுமே தெரியல. ஆதி போன்ல பேசினதும் ஒரு அங்கிள் டிரஸ் எடுத்துட்டு வந்து தந்தாங்க. நானும் ஆதியும் மேலயிருந்து தண்ணிக்குள்ள குதிச்சு விளையாடினோம்!” எனப் பெருமை பொங்க, தாங்கள் சென்ற நீச்சல் குளத்தில் டிரைவிங் போர்டிலிருந்து குதித்து நீந்திய கதையையும், ஆதியுடன் போட்டி போட்டுக் கொண்டு விளையாடியதையும் ஒன்றுவிடாமல் வாண்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்க,



“க்கும்... நீ என்ன செய்தா சமாதானமாவன்னு உன் அப்பா நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கார்.” என்றவளின் குரலில் இம்முறை கோபத்தைவிடப் பெருமிதமே வழிந்தது.



அந்நேரம் பரபரப்புடன் வீட்டுக்குள் நுழைந்த ஆதி,



“சாகரி... சீக்கிரம் கிளம்பு ம்மா. என் அம்மா வழிப் பாட்டி ஒருத்தவங்க சீரியஸா இருக்காங்களாம். ஏதோ சாகுறதுக்குள்ள நம்ம மூணு பேரையும் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. இப்பதான் மாமா போன் செய்தார். நாம இப்பவே கிளம்பணும்.” என அவசரப்படுத்த,



“என்னாச்சு அவங்களுக்கு?”



“எல்லாம் வயசு முதிர்ச்சியாலதான்... வேற எதுவுமில்லை. அவங்களுக்கு இப்ப யாருமில்லை. கிழவி நல்லா இருக்கும் போது நான் கண்ணுக்குத் தெரியல. இப்ப இன்னைக்கோ... நாளைக்கோன்னு இருக்கும் போது, நான் குடும்பமா இருக்கிறதைப் பார்க்க ஆசைப்படுறாங்க.” என ஆற்றாமையுடன் பேசியவனிடம்,



“விடுங்க... வயசுல பெரியவங்கனா அப்படித்தான். ஏதோ முன்னயிருந்த ஞாபகத்துல உங்களைப் பார்க்கணும்னு தோணியிருக்கும். நாம கிளம்பலாம். யுவனுக்கும் இடம் மாறினா ஒரு மாற்றமா இருக்கும். ஆமா... எந்த ஊர்? நீங்க இதுக்கு முன்னாடி சொன்னதே இல்லையே? இப்பவே கிளம்பணுமா?” என அடுக்கடுக்காய்க் கேட்டவள்,



படபடவெனத் தனக்கும் மகனுக்கும் தேவையான உடைகளை எடுத்துப் பையில் அடுக்கியபடி,



“உங்களோடதையும் எடுத்துத் தரட்டுமா? சாப்பிட்டீங்களா? இல்ல டிபன் எடுத்து வைக்கவா?” எனக் கேட்க,



“நான் சாப்பிட்டேன். நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்... போ.”



“ஹ்ம்ம்... உங்க மாமா நம்ம கல்யாணத்துக்குக் கூட வரல. இப்ப அங்க அவரைப் பார்க்கலாமா?”



“நீ எல்லாரையும் பார்க்கலாம். கொஞ்ச நாள் நாம அங்க இருந்துட்டுத்தான் வருவோம்.”



“ஹேய்! நாம ஊருக்குப் போறோமா? ஜாலி... ஜாலி!” என்று குதூகலித்த மகனைப் பார்த்து,



“ஆமா, my champ... அங்க நீ ஃப்ரீயா இருக்கலாம். யாரும் உன்னைக் கட்டுப்படுத்த மாட்டாங்க. சரியா?” எனக் கொஞ்சவும்...



வழக்கம் போலக் கணவனின் வார்த்தைகள் அக்னிக்குள் ஏதோ ஓர் உறுத்தலை ஏற்படுத்தின. ஆனால், இருக்கும் சூழ்நிலையில் எதையும் வாதமாக்க விரும்பாமல் அமைதியாக அங்கிருந்து விலகிச் செல்ல...



அந்நேரம் வாசலில் கார் நிற்பதைப் பார்த்ததும்,



“எதுக்குக் கார்?” என இவள் கேட்க,



“அவசரமா போகணும் சாகரி. கிளம்பு.” என்றவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வந்தவள், சில மணி நேரத்தில் திருச்சி விமான நிலையத்தைக் காணவும் நின்றுவிட...



“எதுக்கு ஆதி இங்க? நீங்க சொல்லவே இல்லையே...ஃப்ளைட்ல போக இப்ப நமக்கு என்ன அவசியம் வந்தது?” என சற்று குரலை உயர்த்தியவளிடம்,



“ஷ்ஷ்... இது பொது இடம். இப்படியெல்லாம் கத்தக் கூடாது. அங்க போனா நீயே தெரிஞ்சிப்ப. அவசியம் இருக்கிறதாலதான் ஃப்ளைட் புக் செய்தேன். பெருசா செலவு இல்லை. பேசாம வா.” என்க,



“ஹைய்யா... நாம மேல பறக்கப் போறோமா ம்மா?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட மகனுக்கு, மென்மையான புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தபடி கணவனுடன் நடந்தாள் அக்னி.



அனைத்து நடைமுறைகளும் முடிந்து, விமானத்திற்காகக் காத்திருந்த நேரத்தில் ஆதி இவர்களை ஓய்வறைக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்த பிரத்தியேக வசதிகளைக் கண்டு மலைத்துப் போனாள் பெண்.



அறை முழுவதும் குளிரூட்டப்பட்டிருக்க, மென்மையான சோஃபாக்கள், சூடாகப் பரிமாறப்பட்ட இட்லி, வடை, பலவகைப் பானங்கள் என அனைத்தும் வசதியாகக் காத்திருக்க,



‘இவனுக்கு இவ்வளவு வசதிகள் எல்லாம் எப்படி?’ என்ற கேள்வி இவளுக்குள் மீண்டும் எழுந்தது.



அதில் கணவன் ஏதாவது தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றியதே தவிர, அவனை வேறு விதமாக நினைத்துப் பார்க்கக்கூட இவளது மனம் தயாராகயில்லை.



விமானத்திற்கான அறிவிப்பு ஒலிக்க, மூவரும் எழுந்து கேட்வே வழியாகச் சென்று, பயணிகள் வருவதற்கு முன்பே விமானத்திற்குள் நுழைய,



இது அக்னியின் முதல் விமானப் பயணம். அதனால், உள் அமைப்பைக் கண்டு வியப்பதற்குப் பதிலாக, உள்ளுக்குள் இருந்த படபடப்புதான் இவளை ஆட்கொண்டிருந்தது.



விமானத்தின் கதவைக் கடந்து Business Class cabin-க்குள் நுழைய... ஒரு கணம் அப்படியே நின்றவளின் விழிகள் வியப்பில் விரிந்தன.



வெளியிலிருந்த பரபரப்பின் சுவடே இல்லாமல், உள்ளே தனி உலகம் போல அமைதி.



ஒவ்வொரு இருக்கையும் தனித்தனி private space போல அமைந்திருக்க, மெல்லிய விளக்குகள் cabin முழுவதும் பரவியிருந்தன. அகலமான இருக்கைகளுக்கு முன் நீண்ட leg-rest-கள் அமைதியாகக் காத்திருந்தன.



“ஆத்தி... இதென்ன பெரிய மாளிகை மாதிரி இருக்கு! ஆமா... நீ எதாவது கள்ளக்கடத்தல் செய்றியா?” என்று மிகத் தீவிரமான முகத்துடன் கேட்ட மனைவியை ஆதி முறைத்த முறைப்பில், அக்னியின் சந்தேகம் அங்கேயே சாம்பலாகித் தப்பியது.



“Behave yourself, சாகரி. பொது இடத்துல வந்து என்ன மாதிரியான பேச்சு இது? யாராவது கேட்டா தூக்கி உள்ள வச்சிடுவாங்க. பிறகு நடக்கற எதுக்கும் நாம ரெண்டு பேருமே பொறுப்பாக முடியாது!” என்று நிதானமாக எச்சரித்தவன்,



“அங்க போனதும் உனக்கே தெரியும். இப்ப வா.” என்று அவளை அழைத்துச் செல்ல,



வாயைச் சிப்பிட்டு மூடிக் கொண்டாள் அக்னி.



யுவனுடன் ஆதி ஜன்னலோர இருக்கையில் அமர, அவனுக்கு அருகில் அக்னியும் அமரவும், அக்னிக்கே இந்தச் சூழல் புதிது. யுவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.



மற்ற பயணிகள் வருவதற்குள் விமானத்தின் உள்ளேயே பத்து முறை நடந்து விட்டான் அந்தப் போக்கிரி. முதன்முறையாகக் காணும் பெரிய screen-ஐ தொட்டுப் பார்ப்பது... அதில் வரும் rhymes-க்கு சேர்ந்து பாடுவது... ஜன்னல் வழியே மேகங்களைப் பார்த்து வியப்பது... தாயின் மேல் சுற்றியிருந்த blanket-ஐ பிடித்து இழுப்பது... என அவனது சேட்டைகள் ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டே சென்றன.



ஒவ்வொருவராகப் பயணிகள் உள்ளே வரத் தொடங்கியதும், அந்த அமைதியான cabin-ஐ கலைத்துக் கொண்டிருந்த ஒரே குரல் யுவனுடையதுதான்.



Seatbelt sign ஒளிர்ந்தது. விமானி அறிவிப்பு செய்த சில நிமிடங்களில், runway-ல் விமானம் வேகமெடுத்து மேலெழவும்.



கீழே இருந்த திருச்சி மாநகரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறு புள்ளிகளாக மறைந்து போக... விமானம் மேகங்களுக்குள் நுழைந்தது.



ஆதி, யோசனை நிறைந்த முகத்துடன் அக்னியை ஒரு கணம் பார்த்துவிட்டு, மீண்டும் தன் இருக்கையில் சாய்ந்து கொள்ள, அதை உணரும் நிலையில் அக்னி இல்லை.



பயத்தில் கண்களை இறுக மூடியவள், முந்தைய இரவு முழுவதும் உறங்காமல் இருந்த களைப்பைத் தாங்க முடியாமல், கணவனின் தோளில் தலை சாய்த்தபடியே உறக்கத்திற்குள் ஆழ்ந்தாள்.

{குறிப்பு: கதையின் காட்சிக்காகத் திருச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமானப் பயணம் கொடுக்கப்பட்டுள்ளது.}



விமானம் தூத்துக்குடியில் தரையிறங்கியதும், அறிவிப்பு முழுமையாக ஒலிப்பதற்கும் முன்பே, இரண்டு cabin crew-கள் அவசரமாக ஆதியை நோக்கி வந்தவர்கள்,



“Sir, ground team is waiting.” என மிகுந்த மரியாதையுடன் தெரிவிக்க,



இவர்கள் இறங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கவும், இவர்களைத் தவிர மற்ற பயணிகள் எழுந்து செல்லாமல், வழிவிட்டுக் காத்திருக்க, அக்னிக்குப் புரியவில்லை.



‘ஒரு சாதாரணக் குடும்பத்துல பிறந்தவனுக்கா இவ்வளவு மரியாதை?’ என்ற எண்ணம் மனதில் எழுந்தது.



அவளது கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாகவே அடுத்து நடந்தது.



விமானி ஒருவர் ஆதியை நோக்கி வந்து சிநேகமாகப் பேச, அவருடன் ஆதி அருகிலிருந்த ஓய்வறைக்குள் நுழைந்தான்.



சில நொடிகளில்... அங்கிருந்து வெளியே வந்தவனைக் கண்ட அக்னி, தன்னையும் அறியாமல் மூச்சை இழுத்துக் கொண்டாள்.



கணவன் அணிந்திருந்த நேவி ப்ளூ கோர்ட் சூட் அவனது கம்பீரத்தை இன்னும் உயர்த்தியிருந்தது. கண்களில் கூலர்ஸ். கையில் மின்னிய விலையுயர்ந்த Rolex watch என இவள் இதுவரை அறிந்திருந்த சாதாரண ஆதி... இவளின் கண்முன்னே காணாமல் போக,



அதற்குப் பதிலாக, அதிகாரத்தையும் பணத்தையும் பழக்கமாகக் கொண்ட ஒரு பெரிய இடத்து ஆண் தோரணையுடன் நின்றிருக்க, அக்னியின் விழிகள் அவனிடமிருந்து விலகவில்லை.



ஒருபுறம் யுவனைத் தூக்கியபடி நிதானமாக நடந்தவனை இரண்டு பாதுகாவலர்கள் அரணுக்குள் அழைத்துச் செல்ல, கருப்பு நிற T-shirt, அதே நிற trousers, கண்களில் கூலர்ஸ்... என அவர்கள் இருவரும் ஆதியைச் சுற்றி நகர்ந்த விதமே, அவன் சாதாரணப் பயணி அல்ல என்பதை எடுத்துக் காட்டியது.



பொது வழியைத் தவிர்த்து, VIP entrance வழியாக இவர்களை அழைத்துச் செல்ல, பின்தொடர்ந்த பாதுகாவலர்கள்... வெளியே கூடியிருந்த கூட்டம்... கேமராக்கள்... அனைத்தையும் பார்த்த அக்னியின் கால்கள் தன்னையறியாமல் பின்னின.



‘இவன்... யார்?’ என்ற கேள்வி இவளது மனதைத் துளைக்க,

Arrival gate திறக்கவும்.

அடுத்த நொடி “தர்மாதித்தன் சார் வந்துட்டாரு!” என்றொரு குரல் எழுந்தது.

அதன் தொடர்ச்சியாகப் பல குரல்கள் ஒன்றோடொன்று கலந்து விமான நிலையத்தையே அதிர வைக்க,



மலர்மாலைகளுடன் நிறுவன ஊழியர்கள் வரிசையாக நின்றிருக்க, Camera flash-கள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னின.

“சார்... ஒரு போட்டோ!”

“சார்... சார்...”

“நீங்க இவ்வளவு நாள் இந்தியா வராம இருந்ததுக்கு உங்க மனைவி மகன் தான் காரணமா?”

“எந்த நாட்டுல இருந்தீங்க சார்?”

“இவங்கதான் உங்க மனைவியா?” என்று பத்திரிகையாளர்களின் கேள்விகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்தன.

அக்னிக்கு இவை அனைத்தும் புதிது.

இத்தனை கூட்டத்தை... இத்தனை கேமராக்களை... இத்தனை மரியாதையை... இவள் சினிமாவில்தான் பார்த்திருக்கிறாள்.

இன்று...

அதன் நடுவில் அவளே நின்றிருக்க,..

“மேம்... சாரோட போங்க.” என்ற பாதுகாவலனின் குரல் மிக அருகில் கேட்க, பதற்றத்தில் விரைந்து சென்ற அக்னி, தன்னையறியாமல் கணவனின் கையைப் பற்றிக் கொள்ள...

ஒருபுறம் குழந்தை. மறுபுறம் மனைவி.

இருவரையும் தன்னுடன் அழைத்தபடி, ஒரு வார்த்தையும் பேசாமல் முன்னேறியவனின் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. எந்தத் தயக்கமும் இல்லை.

மாறாக...

‘இந்த வாழ்வு என்னுடையது’ என்று சொல்லாமல் சொல்லும் ஒரு மிடுக்கு மட்டுமே இருந்தது.

விமான நிலைய வாசலைக் கடந்து வெளியே வந்ததும், இவர்களை வரவேற்றது கருப்பு நிற Toyota Land Cruiser 300.

வாகனத்தின் பளபளக்கும் கைப்பிடியை ஒரு பாதுகாவலன் திறந்து பிடித்துக் கொண்டிருக்க,

அதன் முன்னும் பின்னும் இரண்டு escort vehicles என வாகன வரிசையில் முதலாவதாக அந்தக் கார் காத்திருந்தது.

ஆதிக்காக இல்லை...

தர்மாதித்தனுக்காக.

காருக்குள் ஏறி அமர்ந்தவனின் முகத்தில் இப்போது மெல்லிய கர்வம் குடியேறியது.

இவனுக்கு நன்றாகத் தெரியும்...

நாளைய பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி என்னவாக இருக்கும் என்று.

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியா திரும்பிய தூத்துக்குடியின் இளம் தொழிலதிபர் தர்மாதித்தன்!”


“நாதன் Marine Exports நிறுவனத்தின் தலைவர் தர்மாதித்தன், மனைவி மற்றும் மகனுடன் இந்தியா வருக!”


கடலின் வாசனையிலிருந்து உலகச் சந்தை வரை தனது சாம்ராஜ்யத்தை விரித்தவன்... பல ஆண்டுகளாக இந்தியாவை விட்டு விலகியிருந்தாலும், தனது பெயரை ஒருபோதும் மறைய விடாதவன்... இன்று மீண்டும் தனது மண்ணில் கால் வைத்திருக்கிறான்.



அவனுக்குத் தேவைப்பட்டதும் இதுதான். தன் வருகை... ஒரு அதிர்வோடு தலைப்புச் செய்தியாக ஒளிர வேண்டும்.

ஏனெனில்... இவன் வெறும் தர்மாதித்தன் அல்ல.

The Sea King... நேற்று வரை கடலரசன்...

இன்று முதல்...

இந்த அக்னி என்னும் சாகரத்தின் அரசன் — தர்மாதித்தன்.​
 
Back
Top