தென்றல் 25

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் மடியில் தலை வைத்து அழுது கொண்டிருந்த தங்கையின் கேசத்தை, ஆறுதலாக வருடிக் கொண்டிருந்தன அக்னியின் விரல்கள்.



“நான் உனக்கு வேணாமா க்கா...?” என்று மூக்கை உறிஞ்சியபடி கேட்டவளின் முகத்தை மெதுவாக நிமிர்த்தி, கண்ணீரைத் துடைத்தவள்,



“நீ என் பொம்மாயி... என் செல்லத்த வேணாம்னு சொல்லுவேனா? நீ அங்க போனா நல்லா இருப்ப கயல்... நல்லா படிப்ப... டாக்டர் படிப்பு எல்லாம் படிப்ப. உனக்கு அப்பாம்மா கிடைப்பாங்க...” என்று தன் தங்கையின் எதிர்காலத்திற்காகக் கூற,



“ஏன்... அப்ப உனக்கு அப்பாம்மா வேணாமா? உன்னையும் அவங்க தத்தெடுத்திருக்கலாம் இல்ல...?” என்று அப்பாவியாய்க் கேட்டது மட்டுமில்லாமல், தனக்கு அமைந்திருந்த வளமான எதிர்கால வாழ்விலும் தன்னைப் பற்றியே யோசிக்கும் தங்கையை நினைத்துக் கண்களில் கண்ணீர் தேங்க,



“உன்னை மாதிரி சின்னக் குழந்தைகளைத்தான் தத்து எடுப்பாங்க... என்னையெல்லாம் எடுத்துக்க மாட்டாங்க...” தன் வலியை மறைத்தபடி அக்னி சொல்ல,



“ஓ... அப்ப நான் பெரியவளா வளர்ந்ததும் உன்னைத் தத்து எடுத்துக்கிறேன். அப்பறம் நான்தான் உனக்கு அப்பாம்மா... சரியா?” என்று கன்னத்தில் குழி விழ, அப்பாவிச் சிரிப்புடன் தமக்கையின் தாடையைப் பிடித்துக் கொண்டு, சிட்டுக்குருவியாய்த் தலை சாய்த்தபடி பாசத்துடன் சொன்ன தங்கையைக் கண்ணீருடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அக்னிசாகரி.



“நீ நல்லா படிக்கிற பொண்ணாம், மதர் சொன்னாங்க... நீ பெரியவளா வளர்ந்து டாக்டர் ஆனதும் என்னைத் தத்து எடுத்துக்க... சரியா?” என்று தங்கையின் எதிர்காலக் கனவுக்கு நம்பிக்கையைத் தர, அக்னிசாகரி இவ்வார்த்தைகளைச் சொல்லவும்,



“ஹ்ம்ம்... சரி சொல்லு... அந்தப் புக் எங்க கிடைக்கும்? அது எவ்வளவு பெருசா இருந்தாலும் நான் படிக்கிறேன்.” என்று கேட்ட கயல்விழியின் மனதில், அன்றுதான் டாக்டர் என்ற கனவு விதையாக விழுந்தது.



அதன்பிறகு, கயல்விழி படிப்பில் ஆர்வம் காட்ட... அக்னி வேலைக்குச் சென்று வர... அவர்களின் வாழ்க்கையும் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. கயலின் டாக்டர் கனவை நாதன் குழுமத்தின் டிரஸ்ட் நிறைவேற்ற முன்வந்தபோது, அங்கு தான் அந்த நிகழ்வும் அரங்கேறியது.



பல வருடங்களுக்கு முன்பு...



பெரும் செல்வந்தரான ராம் - சீதா தம்பதிகளுக்கு மூத்த மகனாகத் தர்மாதித்தன் இருக்க, சீதா இரண்டாவது முறையாகக் கருவுற்ற எட்டாவது மாதத்தில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ராம் இறந்துவிட, கணவனின் மீதான அளவற்ற காதலில் வாழ்ந்த சீதாவால், அவரது பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.



அதன் விளைவு, பிரசவத்தில் அர்ஜுன் பிறந்த நேரம், இறப்பின் நொடிகளை உணர்ந்து கொண்டவர், தன் பெரிய மகனான தர்மாவை அருகில் அழைத்து,



“மம்மி இருக்க மாட்டேன் தர்மா... அர்ஜுன் பாவம்... சின்னக் குழந்தை. நான் உன்னை எப்படி எல்லாம் பார்த்துக்கிட்டேனோ... அப்படி எல்லாம் நீ தம்பியைப் பார்த்துக்கணும். அவனை அழாம பார்த்துக்க... அவனுக்கு நீதான் அப்பாம்மா எல்லாம்...”




அந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே, ஏழு வயது தர்மாவின் கண்களைப் பார்க்கையில் ஒரு தாயாய் அவரது இதயம் பரிதவித்தாலும், தன்னால் இளைய மகனை வளர்க்க முடியாதே என்ற தவிப்பே அவரின் மனதை ஆட்கொண்டிருந்தது.



தாயை இழக்கப் போகும் அந்த நொடியில், ஆறுதல் தேவைப்பட்ட ஏழு வயதுச் சிறுவனின் தோள்களிலேயே, இன்னொரு குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஏற்றி வைத்துச் சென்றுவிட்டார் அந்தத் தாய்.



அதன் பிறகு, அண்ணன் தம்பி இருவரும் தாத்தா பாட்டியின் பொறுப்பில் வளர ஆரம்பித்தார்கள்.



தர்மா ஊட்டி கான்வென்ட்டில் படித்ததால், பாட்டி அர்ஜுனுடன் ஊட்டியில் இருந்த அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொள்ள, இங்கே தொழிலைத் தாத்தா பார்த்துக் கொண்டார்.



அன்று முதல், தர்மாவின் உலகம் சுருங்கி ஒரே ஒரு பெயருக்குள் அடங்கியது.



அது... அர்ஜுன்... அர்ஜுன்... அர்ஜுன்...



காரணம், தாய் உயிர் பிரியும் முன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, ஏழு வயதுச் சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. ‘அவனுக்கு நீதான் அப்பாம்மா...’ என்ற வார்த்தைகள்.



அந்த வயதில் ‘அப்பாம்மா’ என்ற வார்த்தையின் முழு அர்த்தம் அவனுக்குத் தெரியாவிட்டாலும், தாய் தன்னிடம் விட்டுச் சென்ற பொறுப்பு மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.



அதன் பொருட்டே, அன்றிலிருந்து அர்ஜுன் அழுதால் முதலில் ஓடி வருவது தர்மாதான்.



அவனுக்குப் பசி என்றால் உணவு ஊட்டுவது... தூக்கம் வந்தால் மடியில் சாய்த்து உறங்க வைப்பது...



இரவில் எழுந்தமர்ந்து, “மம்மிடாடி வரமாட்டாங்களா? அவங்க எங்க?” என்று கேட்கும் தம்பியிடம் தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு,



“நான் இருக்கேன்ல... நீ தூங்கு.” என்று சொல்லி அவனை அணைத்துக் கொள்வது... எல்லாமே தர்மாதான்.



சில நேரங்களில், தம்பி அழுதுகொண்டே தூங்கிய பிறகுதான் இவனுக்கும் தாய் நினைவில் கண்ணீர் வழியவும், முகத்தைக் கழுவிக் கொண்டு மீண்டும் தம்பியின் அருகில் வந்து அமர்ந்து கொள்வான்.



காரணம், அர்ஜுன் முன் தான் உடையக் கூடாது என்பதிலும், தம்பிக்குத் தாய் இல்லாத குறை தெரியக் கூடாது என்பதிலும் அத்தனை கவனமாக இருந்தான் அந்தச் சிறுவன்.



வீட்டில் வேலையாட்கள் முதல் கொண்டு அர்ஜுனைப் பார்த்துக் கொள்ள முன் வந்தாலும், தர்மாவுக்கு அது போதாமல் போனாலும், தம்பியை யாரிடமும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை இவன் என்றே சொல்லலாம்.



பள்ளிக்குச் செல்லும் முன் அர்ஜுன் சாப்பிட்டானா என்று பார்த்துவிட்டுத்தான் காரில் ஏறுவான். தம்பிக்கு உடல்நிலை சரியில்லையென்றால், “பாட்டி... அர்ஜுனுக்கு இப்போ காய்ச்சல் இருக்கு. நான் போகலாமா?” எனக் கேட்டுப் பள்ளி செல்லவே தயங்குவான்.



“நீ பள்ளிக்குப் போ தர்மா. அவனை நான் பார்த்துக்கிறேன்.” என்று பாட்டி சொன்னாலும்,



“அவன் தூங்குற வரைக்கும் நான் இருந்துட்டுப் போறேன் பாட்டி.” என்றுதான் பிடிவாதம் பிடிப்பான்.




இவனுக்குப் படிப்பு இருந்தது. விளையாட வேண்டிய வயதுதான். நண்பர்களோடு ஓடி விளையாட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.



ஆனால், அவன் மனதில் எப்போதும் ஒரே நினைவு. “தம்பியைப் பார்த்துக்கணும்.”




அர்ஜுன் வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் பருவம் வந்தபோது, அண்ணன் தம்பி இருவரும் பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் தர்மாதான் தம்பிக்குத் தலை சீவி, ஷூ, சாக்ஸ் அணிவித்து விடுவான்.



“இதையெல்லாம் செய்ய வேலைக்காரங்க இருக்காங்க தர்மா... நீ கிளம்பு. லேட்டாயிடும்.” என்று பாட்டி தடுக்க,



“இதையெல்லாம் மம்மிதான பாட்டி எனக்குச் செஞ்சாங்க... அப்ப நான்தான் செய்வேன். தம்பிய மம்மி மாதிரி பார்த்துக்கிறேன்னு நான் மம்மிக்கிட்ட சொல்லியிருக்கேன்.” அவசரமாகத் தம்பியின் ஷூ லேஸைக் கட்டியபடியே பாட்டிக்குப் பதில் கொடுக்க,



குழந்தைப் பருவத்தைக் கடந்து முதிராத வயதிலேயே, தாயின் கடைசி வார்த்தைகளை நெஞ்சில் சுமந்த பேரனைக் கண்டு, கங்காதேவியின் இதயம் நெகிழ்ந்தது.




கடமைக்காக இல்லாமல், தாயிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காகத் தம்பியைத் தாயுமானவனாய்ப் பார்த்துக் கொண்டான் தர்மா. ஆனால், ஒரு தந்தையின் கண்டிப்பை மறந்துவிட்டான் இவன்.




அர்ஜுனுக்குப் பிடித்த உணவு என்ன... பிடிக்காதது என்ன... எப்போது தூங்குவான்... எதற்குப் பயப்படுவான்...



யாரிடம் சென்றால் அழுவான்... யார் அவனைச் சமாதானப்படுத்துவார்கள்...



என்று அந்த வீட்டிலிருந்த பெரியவர்களைவிட அதிகமாகத் தெரிந்தவன் தர்மாதான். அர்ஜுன் விழுந்தால் முதலில் ஓடி வருவதும், அழுதால் காரணம் கேட்பதும் அவன்தான்.




அர்ஜுன் ஏதாவது தவறு செய்தால், பாட்டி கோபப்படுவதற்கு முன்பே அவனைத் தன் பின்னால் மறைத்து நிற்பதும் இவன்தான்.




தம்பியை யாராவது திட்டினால் பொறுக்க மாட்டான். பள்ளியில் யாராவது அர்ஜுனை அழ வைத்தால், வயதை மறந்து அவர்களிடம் சண்டை போடுவான்.




ஒருமுறை அர்ஜுன் வகுப்பில் நடந்ததைக் கேட்டுத் தெரிந்துகொண்ட தர்மா, மறுநாளே அந்த ஆசிரியரிடம் சென்று நின்றவன்,




“அவன் தப்புச் செஞ்சிருந்தா சொல்லுங்க... நான் அவனைத் திருத்தறேன். ஆனா அவனை எல்லாருக்கும் முன்னாடி திட்டாதீங்க.”




எனவும், இவன் வயதுக்கு மீறிய வார்த்தைகள் கேட்டு ஆசிரியரே திகைத்துப் போனார்.




மற்ற குழந்தைகள் அந்த வயதில் தங்கள் தாயிடம் ஓடி, “எனக்கு இது வேணும்... அது வேணும்...” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது... தர்மா மட்டும் தன் தம்பிக்காக,




“பாட்டி... இது அர்ஜுனுக்கு?” என்று எடுத்து வைத்தான்.



மற்ற குழந்தைகள் தங்கள் அப்பாவின் விரலைப் பிடித்துக் கொண்டு நடந்த வயதில்...




தர்மா தன் தம்பியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு நடந்தான்.



இவனுக்கும் ஒரு தாய் தேவைப்பட்ட வயதில்... இவன் இன்னொரு குழந்தைக்குத் தாயாகி நின்றான்.



அதனால்தான், கங்காதேவிக்குத் தர்மாவைப் பார்க்கும்போதெல்லாம் பெருமையோடு சேர்ந்து ஒரு குற்ற உணர்வும் வந்துவிடும்.




“இந்தக் குழந்தைக்குக் குழந்தையாக இருக்கக் கொடுப்பினை இல்லையே...” என்று.



அதே தர்மாவின் குழந்தைப் பருவத்தை அர்ஜுன் எடுத்துக் கொண்டான் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அர்ஜுனுக்கு அது வேண்டுமென்று கேட்கவே தெரியாது.




தர்மாதான் தன் குழந்தைப் பருவத்தைத் தானாகவே தம்பி காலடியில் வைத்துவிட்டான். அதன் பிறகுதான், தமையனின் பாசம் மட்டுமல்லாமல் தாத்தாவின் சலுகையும் கிடைக்க, அர்ஜுன் அதீதச் சுட்டிப் பையனாக வளர ஆரம்பித்தான்.




அதே அர்ஜுனுக்குக் கிடைத்த அந்தச் செல்லத்தின் பின்னால், தன் வயதைவிடப் பல மடங்கு பெரிய பொறுப்பைச் சுமந்து நின்ற ஒரு சிறுவனாகத் தர்மா நின்றான்.




இளம் வயதிலேயே அத்தனை பொறுப்புடனும் பக்குவத்துடனும் நடந்து கொள்ளும் பெரிய பேரனை வாஞ்சையுடன் தாங்கினார் பாட்டி கங்காதேவி.




“தர்மாவை விட நீங்க அர்ஜுனனுக்கு அதிகம் செல்லம் தர்றீங்க...” என்று சலித்துக் கொள்ளும் மனைவியிடம்,



“அர்ஜுன் கடைக்குட்டிப் பேரன் கங்கா... அப்பாம்மா முகம் பார்க்காத குழந்தை அவன்.” என்று தன் செல்லத்திற்கான காரணத்தைச் சொல்வார் வாஞ்சிநாதன்.



“நல்லா இருக்கே நீங்க சொல்றது... அர்ஜுன் எப்படிக் கடைக்குட்டி ஆவான்? லட்சுமணனுக்கு இதுவரை குழந்தை இல்லாம இருக்கலாம். இனியும் பிறக்காம போயிடுமா என்ன? அவனுக்குப் பிறக்கிற குழந்தைதான நமக்குக் கடைக்குட்டி.” என்ற மனைவியிடம்,




“குலம் கோத்திரம் பார்க்காம... என்னை மதிக்காம கல்யாணம் செய்தவன் குழந்தையெல்லாம் என் பேரப்பிள்ளை ஆகாது. என்னைக்கும் அர்ஜுன்தான் என் கடைக்குட்டிப் பேரன்.” என்று பிடிவாதமாகச் சொல்பவர், சின்னப் பேரனான பரதனை இன்றுவரை தன் குடும்பத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளவில்லை.



நாட்கள் நகர்ந்தன.

தர்மா பள்ளிப் படிப்பை முடித்தவன், கல்லூரிப் படிப்பைக் கனடாவில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கிப் படிக்க நினைத்தவன், தம்பி அர்ஜுனைப் பிரிய மனமில்லாமல் அவனையும் அழைத்துச் செல்லத் திட்டமிட, வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார் தாத்தா.




“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க தர்மா? நீ அங்க போறதே எனக்கு விருப்பமில்ல. இதுல அர்ஜுனையும் அழைச்சிட்டுப் போறேன்னு சொல்ற.




எனக்கும் உன் சித்தப்பனுக்கும் உறவு இல்லன்னு ஆன பிறகு, நீ அங்க போகக் கூடாது. வேற எந்த நாட்டுல வேணா போய்த் தங்கிப் படி... இங்க வேணாம்.



இப்ப நீங்க ரெண்டு பேரும் அவன் வீட்டுக்குப் போனா, இதையே சாக்கா வச்சி பாட்டியும் உங்க கூட அவன் வீட்டுல தங்குவா. எனக்கு அது பிடிக்கல.”



“தாத்தா... நீங்க செய்யறது அராஜகம். சித்தப்பா அவர் இஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழ்றாரு. அதுல என்ன தப்பு இருக்கு? இதுல நாங்க யாரும் அவர்கிட்ட பேசக் கூடாது... அவர் வீட்டுக்குப் போகக் கூடாதுன்னு கட்டுப்பாடு விதிக்கிறீங்க. அதுக்கு என்ன அர்த்தம்? நீங்க செய்யறது தப்பு தாத்தா.” என முதல்முறையாகத் தாத்தாவிடம் தர்மா வாதிட,



“என்ன டா... நீ வளர்ந்துட்டா எனக்கே புத்தி சொல்ற அளவுக்குப் பெரிய மனுஷனா ஆகிடுவியா? என்ன புதுசா குரலை உசத்துற? என் முன்னாடி உன் அப்பாவே நின்னு பேசத் தயங்குவான்... என்ன தர்மா இதெல்லாம்?” என்று கேட்டவரின் குரலில் கோபத்தைவிட, தன் கட்டுப்பாட்டைப் பேரன் முதன்முறையாக மீறுகிறானே என்ற ஆங்காரமே அதிகமாக இருந்தது.



உண்மைதான்... தந்தை சொல் தட்டாத பிள்ளை ராம். லட்சுமணனுக்கு நேரெதிர்.



தம்பியின் காதல் திருமணத்திற்குப் பிறகு, தான் மட்டுமல்லாமல் தன் மனைவி, மகன் உட்படத் தங்கள் வாழ்வையே தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைத்துவிட்டார் ராம்.



அவரைப் பின்பற்றியே தர்மாவும் தாத்தாவிடம் எப்போதும் பவ்யமாகத்தான் இருப்பான்.



அப்படிப்பட்டவன் இன்று தாத்தாவையே எதிர்த்துப் பேச... அதுவும், அவரால் வெறுக்கப்படும் சித்தப்பாவுக்காக.



வாஞ்சிநாதனிடம் எப்போதுமே ‘தான்’ என்ற கர்வம் அதிகம். வசதி வாய்ப்பைப் பார்த்து, தங்களுக்குத் தகுதியானவர்களிடம் மட்டுமே பழகுவார்.



அவர் மிடுக்குடன் நடந்து வந்தாலே, பிள்ளைகள் முதற்கொண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.



அப்படிப்பட்டவரை எதிர்த்தால் சும்மாவா?



ஆனால், இந்த விஷயத்தில் தர்மாவும் தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை.



“நான் போகத்தான் போறேன். எனக்குச் சித்தப்பாவோட உறவும் வேணும். அவர் எனக்கும் அப்பாதான்.” என்று தன் முடிவில் உறுதியாக நிற்கவும்,




“ஓ... இவ்வளவு தூரத்துக்கு ஆகிட்டியா? போறதுன்னு முடிவு செய்துட்ட இல்ல... அப்ப தாராளமா போ. நீ மட்டும் போ. என் சின்னப் பேரன் வர மாட்டான்.” என்றவர், மனைவியைப் பார்த்து,



“கங்கா... தர்மாவைப் போகச் சொல்லு. அதே அர்ஜுன் இவன் கூடப் போறதா இருந்தா... உன் சின்ன மகனோடு சேர்த்து நமக்கு ரெண்டு பேரன் இல்லன்னு முடிவு செய்துடு.” என்ற கணவனை என்ன சொல்லிச் சமாதானப்படுத்துவது எனத் தெரியாமல், பெரிய பேரனைப் பார்த்த கங்காதேவி,




“நீ மட்டும் கிளம்பு தர்மா... உன்னைச் சாக்கிட்டு, என் மகனையும் பரதனையும் வீடியோ காலில் பார்த்துக்கிறேன். அர்ஜுனைப் பற்றிக் கவலைப்படாத... நான் அவனைப் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிச் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க,



தாத்தாவோ, “நான் இவ்வளவு சொல்லியும் அங்க போறேன்னு பிடிவாதம் பிடிக்கிற நீ... என் பேரனாத்தான் திரும்பி வரணும்... உன் சித்தப்பன் எனக்குக் கொடுத்த அவமானத்தை நீயும் தரக் கூடாது... நீ படிப்பை முடிச்சு வந்து தொழிலை எடுத்ததும், நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்கிறேன். அவளைத்தான் நீ கட்டிக்கணும்... சொல்லிட்டேன்.” என்ற உத்தரவுடன் தர்மாவை அனுப்பி வைக்க,




அதன் பிறகு, அர்ஜுன் வளர்ந்தது எல்லாம் தாத்தாவின் பிம்பமாகவேதான்.



முதல் முறையாகத் தவறு செய்யும்போதுதான் தயக்கமும் பயமும் நம்மை ஆட்கொள்ளும்... அதன் பிறகு, அந்தத் தவறை மறைக்கக் கற்றுக் கொள்ளும் மனம்... இன்னொரு தவறுக்குப் பயப்படுவதே இல்லை.




அர்ஜுனும் வளர வளர, மேல்தட்டு மக்களிடம் மட்டுமே பழகியவன். அந்த ஆடம்பரத்திலும் செருக்கிலும் மதி மயங்கிப் போனான்.




வாழ்க்கையை ரசித்து வாழ நினைத்தவனுக்குள், கள்ளத்தனம் மெதுவாகப் புகுந்தது... அதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன் தவறை மறைக்கத் தயாரானான்.



அவனுக்கு மேலும் ஒத்து ஊதி, தூபம் போடுவதுபோல் தாத்தாவும் உடனிருக்க... சொல்லவா வேண்டும்?




ஒருமுறை லீவுக்கு ஊருக்கு வந்தவன், குடித்துவிட்டு நண்பர்களுடன் வண்டி ஓட்டியதால் நடந்த விபத்தில், சாலையோரத்தில் இருந்தவர்களும் உயிரிழக்க, முதல் முறையாக மரணத்தின் நிழல் அர்ஜுனைப் பயமுறுத்தியது.




அதிலும், இவன் மைனர் என்பதால் பெரும் பிரச்சனையாகிவிடுமோ என்று கலங்கிப் போனான் அவன்.




“தாத்தா... நான் இப்படி நடக்கும்னு நினைக்கல. சும்மா ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து லாங் டிரைவ் போனேன். கடைசியில இப்படி உயிர் போகும்னு யோசிக்கல... தப்பு எல்லாம் என் மேலதான்...” என்று பரிதவித்து நின்றவனை, அவன் செய்த தவறின் தீவிரத்தை உணர்த்தித் தண்டித்திருக்க வேண்டிய தாத்தா,




“டேய் அர்ஜுன்... எதுக்கு நீ இப்ப இவ்வளவு ஃபீல் பண்ற?




இப்படியெல்லாம் நடக்கிறது நம்ம அப்பர் சொசைட்டியில சகஜம்.




கார் ஓட்டுற இடத்துல படுத்திருந்தது அதுங்க தப்பு... விடு... தாத்தா நான் எதுக்கு இருக்கேன்? பார்த்துக்கிறேன். நீ ஃப்ரீயா இரு... சரியா?” என்று சொல்லி, அவனுடைய பயத்தையே அடக்கிவிட்டார்.



ஆனால் அர்ஜுன் இதயமோ அண்ணனை நினைத்துக் கலவரத்தில், “இது மட்டும் அண்ணனுக்குத் தெரிஞ்சா என் முதுகுத் தோலை உரிச்சிடுவார் தாத்தா...” என்று தன் பயத்தைச் சொல்லவும்,




“ஆமா... தர்மா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுவான். அவனுக்குத் தெரியாம இந்த வயசுலயும் நானே சிலதைப் பயந்து மறைச்சுச் செய்ய வேண்டியிருக்கு.



பெயருக்கு ஏத்த மாதிரியே நியாயம், தர்மம்னு இருப்பான்.




உன்னைப் பற்றி எதுவும் வெளிய வரக் கூடாதுன்னு, இந்தக் கேஸை எடுத்துப் பார்க்கிற ஹையர் ஆபீஸர்கிட்ட நான் சொல்லிடறேன். அதே, எதையும் நாம முழுசா மறைக்க முடியாது.




விபத்து நடந்தது உண்மை... ஆனா அதை நீ செய்யல... உன் புது நண்பன் ஒருவன் செய்ததா மட்டும் தர்மாகிட்ட சொல்லு. அவனைப் பற்றி என்ன கேட்டாலும் வேற எந்த விவரத்தையும் சொல்லாத... மீதியை நான் பார்த்துக்கிறேன்... Cheer up, boy.” என்று பேரனைத் தேற்றினார்.




அந்த நொடியில் பயந்து கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கு, தாத்தா பாதுகாப்பாகத் தெரிந்தார்.



ஆனால், அவனுக்குத் தெரியவில்லை...



அவனைத் தண்டிக்காமல் காப்பாற்றிய அந்தக் கைகள், அவனுக்குள் இருந்த குற்ற உணர்வையும் சேர்த்தே கொன்று கொண்டிருக்கின்றன என்பதை.



அன்றுதான், தான் செய்யும் தவறுகளை மறைத்து வாழ்வதற்கான முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டான்...

The great தர்மாவின் தம்பி அர்ஜுன்.​
 
Back
Top