என்னடி மாயாவி நீ: 18

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 18

வர்ஷித் என்றுமே அம்மாவின் பேச்சை கேட்காமல் இருந்ததில்லை. அங்கே, அம்மா நின்று கொண்டு கட்டிலில் படுக்க சொன்னதும் சரியென ஒப்புக்கொண்டு அதை செய்தான்.

இதை பற்றி இருவரிடமும் பேசியே ஆகவேண்டும் என முடிவெடுத்தார் வசந்தா.

ஆதிகா உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டு வெளியில் அவனிடம் நல்ல பிள்ளை போல, "நீங்க எதுக்கு கஷ்டப்படணும், அத்தை கிட்ட சொல்லிட்டா அவுங்க ஏதும் கேக்கமாட்டாங்கள" என வேணும் என்றே கேட்டவளிடம் இவள் நக்கலாக கேட்பது தெரியாமல் பதிலளித்தான், "இல்ல இல்ல அம்மா இப்போதான் கஷ்டத்திலிருந்து வெளில வராங்க, இந்த நேரத்துல இத சொன்னா வருத்தப்படுவாங்க. அதுனால இப்போ சொல்லவேணாம்" என வர்ஷித் கூறிய பின் ஆதிகாவிற்கு இந்த கேள்வியை கேட்காமலே இருந்திருக்கலாம் என தோன்றியது.

இந்த விஷயத்தில் மத்தவங்க வருத்தப்படுவாங்கனு யோசிச்சு செய்ற நீ, நான் வருத்தப்படுவேன்னு யோசிக்க மறந்துட்டியே என மனதால் நொந்துகொண்டாள். அவனுக்கோ அவள் அருகில் படுப்பது சங்கடமாக இருந்தது. புரண்டு புரண்டு படுத்தவனுக்கு ஆதிகாவின் அருகாமை மிகவும் இம்சித்தது.

அப்போதும் அவனின் தினசரி வேலையை செய்ய முற்பட்டான். அவள் தூங்கிருப்பாள் என எண்ணிக்கொண்டு, விசாலமான மெத்தையில் தன்புறத்திலிருந்து மறுபுறத்திற்கு மெதுவாக நகர்ந்தான் ஹெட் செட்டை கழட்டி வைக்க.

அவளுக்கும் வர்ஷித்தின் அருகாமை புதிதாய் தோன்றி தொல்லை செய்து தூக்கம் வராமல் போக, கண்ணை மூடி கொண்டு படுத்திருந்தாள்.

வர்ஷித் ஹெட் செட்டை இரண்டு காதுகளிலிருந்து விடுவித்ததும், குழம்பி யாரென்று பார்த்தாள். முதலில் வர்ஷித்தை நெருக்கத்தில் பார்த்ததும் படபடவென நெஞ்சம் அடித்துக்கொள்ள, பிறகு அவனே இந்த வேலையை பார்த்திருக்கிறான் என தெரிந்தவுடன், " ஓஹ் நீங்கதான் தினமும் எனக்கு இலவசமா இந்த வேலையை பார்க்கிறதா?" என கிண்டலுடன் வாய்மொழி கேள்வியாய் உதிர அவளது கண்களோ ரொம்ப நாளுக்கு சிரித்தது.

வர்ஷித், ' ஐயோ மாட்டிகிட்டோமே' என திருட்டு முழி முழித்து பிறகு சமாளிக்கும் பொருட்டு, "ஆமா நான்தான், இப்படியே நைட் முழுக்க இதமாட்டிருந்தா காத்து என்னவாகும்" என கடைசியில் அக்கறையுடன் கேட்டான். அவனே தொடர்ந்து, "ஏன் இத யூஸ் பண்ணத்தான் தூக்கம் வருமா என்ன?" என கேள்வியாய் நோக்க ஆதிகா, தலை குனிந்தபடி, "வீட்ல தம்பி கூட தூங்குவேன். இங்க வந்து தனியா தூங்குறது ஒரு மாதிரி பயமா தெரியும், அதனால தான் பாட்டு கேட்டுட்டே தூங்கிடுவேன் எனக்கும் பயம் தெரியாது" என சிறுபிள்ளை போல பாவமாக கூறினாள். 'அய்யோ அவளுக்கு நாம தெரிஞ்சும் கஷ்டத்தை கொடுக்குறோம் இந்த மாதிரி தெரியாமவும் கொடுக்குறோமே' என கவலை கொண்டு, "சரி இனிமேல் நான் உன்கூட துணையாக இருக்கேன். இத ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத" என்ற அறிவுரையோடு ஹெட் செட்டை அவளிடம் கொடுத்துவிட்டு அவள் புறம் திரும்பி படுத்தான். அவளும் அவனின் வார்த்தைக்கு கட்டுண்டு தலையை ஆட்டிவிட்டு, அவன் புறம் திரும்பி படுத்தாள். ஆதிகாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அவன் கூறிய வார்த்தைகளை கேட்டு. அவளுக்கு மீண்டும் மீண்டும் காதுக்குள் இவ்வார்த்தைகளே எதிரொலித்தது. அவன் படுத்ததும் உறக்கத்தை தழுவினான். அவள் அவனை பார்த்துக்கொண்டே இருந்ததால், எப்போ தூங்கினோம் என்றே தெரியவில்லை.

நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் ஆதவன் அதன் பணியை சீரும் சிறப்புமாய் ஆரம்பிக்க ஒளியை பரவவிட்டு தான் இருப்பதை சொல்லாமல் சொல்லியது.

காலையில் ஆதிகா விழிக்கும் போது தன் மீது கணமாய் தோன்ற என்னவென்று எழும்பி பார்க்க, வர்ஷித்தின் கை கால்கள் இவள் மீது படர்ந்திருந்தது. 'ஓஹ் இதுக்கு பயந்து தான் கீழ படுத்தியா'என நினைத்துக்கொண்டு அவனை நேராக படுக்க வைத்துவிட்டு 'குழந்தை முகம்டா உனக்கு' என அவனை பார்த்து கூறிவிட்டு இதழ் ஓரத்தில் சிறிய புன்னகையை சிதறவிட்டு சென்றாள்.

கீழே வந்தவளிடம் வசந்தா, "வாம்மா டீ குடி" என வாஞ்சையுடன் குடுத்தார். வசந்தா தான் எப்போதுமே சமைப்பார். அவரின் சமையலுக்கு வீடே அடிமைதான். ஆதிகா ஏதேனும் உதவி மட்டுமே செய்வாள். சிறுபிள்ளை போல் டீயை மிடறு மிடறக சுவைத்துக்கொண்டிருந்த ஆதிகாவிடம், "இங்க பாரும்மா கணவன் மனைவிக்குள்ள பிரச்சனை இருக்கத்தான் செய்யும், அத பேசி தான் தீர்க்க வேண்டும் எந்த காரணம் கொண்டும் நீ அவனை விட்டு விலக கூடாது, உன்னோட உரிமைய விட்டு தர கூடாது" என கூறினார் வசந்தா அன்பாக. அவர் நேற்று பார்த்ததை வைத்துதான் பேசுகிறார் என கணித்தவள் அவரிடம் "சரி அத்தை" என்றதோடு முடித்துக்கொண்டாள்.
வசந்தா சமையலில் ஈடுபட, இவள் யோசனையில் ஆழ்ந்தாள், 'வர்ஷித் பண்றது தெரியாம அத்தை வேற இப்படி சொல்றாங்க இது எங்க போய் முடிய போகுதோ'என யோசனையோடு நகர்ந்தாள்.

நாட்களும் அதன் வேகத்தில் நகர்ந்தது. இரவு இருவரும் ஒன்றாக படுத்து பேசிக்கொண்டே உறங்கி விடுவர்.

ஒரு நாள் அதிகாலையில் வர்ஷித்தின் போன் இருமுறை அடித்து கலைத்து போனது. அதில் அழைத்தது ஊரிலிருந்து அவனது மாமாதான்.

மூன்றாம் முறை அடித்த போது எடுத்து பேசினான். அவனுக்கு மாமா மீதிருந்த கோபமெல்லாம் வடிந்திருந்தது. ஆனால், முன்பு போல் பேசுவது கிடையாது.

எடுத்து பேசியவன், "ஓஹ்ஹ் அப்படியா சரி வருகிறேன்"என கூறினான். அவனது வார்த்தையில் சோகம் இழையோடி இருந்தது. இவனின் குரல் கேட்டு ஆதிகா சிறிதாக விழி திறந்து பார்த்தாள். அவன் கல் போல அசையாமல் அமர்ந்திருந்தான். அவனின் முகத்தை வைத்து ஏதையுமே கண்டறிய முடியவில்லை ஆதிகாவால்.

ஓரிரு நிமிடத்தில் இன்னொரு அழைப்பும் வந்தது. அதை எடுத்து பேசியவனின் முகம் சற்று கோபத்தில் கொதித்தது பொங்கியது. அவனின் இந்த நடவடிக்கையை ரொம்ப நாட்களுக்கு பிறகு பார்த்தவளுக்கு உதறல் உள்ளுக்குள் தொடங்கியது.

அவளும் எழுந்து அவன் அருகில் சென்று "என்ன ஆச்சு? காலையிலே இத்தனை போன்? யார் பண்ணாங்க?" என பல கேள்விகளை அவனிடம் தொடுத்தாள். வர்ஷித் அதற்கு "ஊரிலிருந்து மாமா பண்ணாங்க" என்றான். "அதற்கு ஏன் இப்படி இறுகி போய் இருக்கீங்க, முதல போன் எடுத்தபோது கூட நீங்க இப்படி இல்லையே. ஆனால், அந்த செகண்ட் கால்ல யாரு பேசுனது? என்ன ஆச்சு?" என அவனை தணிய வைக்கும் பொருட்டு தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்து கேட்டாள்.

"ஊருல பாட்டி இறந்துட்டாங்க, அதான் மாமா போன் பண்ணி வர சொன்னாங்க. வயசானவங்க தான். ஆனால், அதுக்கு அப்பறம் வந்த போன்ல தான்" என்று சில நொடி தயங்கியவன் பிறகு பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டு நிறுத்தினான். "என்ன சொன்னாங்க" என அவள் கேட்டவுடன், " நான் வரணும்னு அவசியம் இல்லயாம், என்னை யாரும் எதிர்பாத்து நிக்கலன்னு சொன்னாங்க"என வெறுமையை தத்து எடுத்தது போல குரலுடன் கூறினான். அண்டை வீடு, சண்டைக்காரர்களாக இருப்பார்கள் என எண்ணியவளுக்கு அவனின் "அப்பா" என்ற பதிலில் ஆடிப்போனாள். அவன் அந்த வார்த்தையை உச்சரிக்கும் போது யாரவது எதிரில் நின்று அவனது கண்களை பார்த்திருந்தால், அந்த இடத்திலே நெருப்பில்லாமல் சாம்பலாகி போயிருப்பர். அவ்வளவு வெறுப்பு, கோபம், எரிச்சல், அந்த அப்பா என்ற சொல்லின்மீதே.

ஆதிகாவிற்கு அவனிற்கு அப்பா இருப்பதே அதிர்ச்சியாக இருந்தது. அதில், அவர் இவ்வாறு வர்ஷித்தின் மீது வெறுப்பை உமிழ்வது ஏன் என தெரியாமல் குழம்பினாள்.

'சரி நீங்க கோபப்படாதிங்க" என சமாதானம் செய்தாள். அவன் கண்ணீர் இரண்டு சொட்டு கீழே இறங்கிய பிறகே, மலை உச்சிற்கு சென்ற கோபமும் இறங்கியது. அவளும் சமாதானம் எவ்வளவோ கூறியும் எதுவும் அங்கு எடுபடவில்லை. அவன் அருகினிலே அமர்ந்துகொண்டாள்.

சட்டென்று அவள் கையை பிடித்தவன் "நான் இன்னைக்கு ஊருக்கு போகணும், நீயும் என் கூட வரியா? கொஞ்சம் தனிமை இல்லாத மாதிரி இருக்கும் நீ இருந்தா. அப்புறம் நீ பக்கத்துல இருந்தா உன்னோட சமாதானம் என்னை தணிய வைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என கெஞ்சுவது போல கேட்டவனிடத்தில் அவளின் மனம் சற்று துயரத்திற்கு ஆழத்திற்கு சென்று வந்தது.

"போகலாம், கிளம்புங்க" என்று கூறி வசந்தாவை பார்க்க சென்றாள். வசந்தாவிடம் கூறிவிட்டு கிளம்பினர்.

இருவரும் கிளம்பி அவனது காரினில் சென்றனர். வர்ஷித் டிரைவரை அழைத்துக்கொண்டு சென்றான் அதிலே ஆதிகா புரிந்துக்கொண்டாள் வர்ஷித் சரியான மனநிலையில் இல்லாமல் கோபத்தில் உள்ளான் என்று.

காரில் செல்லும்போது அவளது கையை பிடித்திருந்தான். சற்று கை பிடி இளகும் நேரம் சாதாரணமாக இருப்பான். ஆனால், மிகுதியான நேரம் அவளது கை நொறுங்கும் அளவிற்கு அவனது பிடிக்கும் இறுகும். விரல்கள் கழண்டுவிடுவதை போல் தோன்றும். வர்ஷித் மனதில் ஆறாத ரணம் ஒன்று இருப்பதை புரிந்துகொண்டாள் அவனின் அவள்


இந்த நிலையிலே ஊர் போய் சேர்ந்தனர் இருவரும். ஒரு வார்த்தை பேசுவதற்கே அங்கு பஞ்சமாகி போனது.

மாமாவிடம் இருவரும் வருவதாக முன்னரே சொல்லி இருந்ததால் வாசலிலே அமர்ந்திருந்தார். அந்த வீடு, வீட்டின் வாசலில் பாட்டியின் சடலம், அதனை சுற்றி ஒப்பாரி சத்தம், வீடு கொள்ளாமல் ஊர்மக்கள், உறவினர்கள் எல்லமே புடை சூழ இருந்த சூழலில் வந்திறங்கினார்கள் ஆதிகாவும் வர்ஷித்தும். இவர்களை பார்த்ததும் யார் என்பது போல்? எல்லாரின் பார்வையும் கேள்வி கேக்க, அவர்கள் அருகே குமாரசாமி சென்றதும் அனைவருமே அறிந்துகொண்டனர் அவன் குமாரசாமியின் தங்கச்சி மகன் என்று.

"ரொம்ப வருசமா கண்ணுலயே காட்டாம வளர்த்தாரு, பையன் ராஜாவாட்டம் வாட்டம் சாட்டமா இருக்கான். அவனோட பொஞ்சாதியும் அவனுக்கு ஏத்தமாதிரி இரண்டு பேரும் அவ்ளோ பொருத்தமா இருக்காங்க" என கூறினார் ஊர்மக்கள். இந்த பேச்சு வர்ஷித் ஆதிகா செவியிலும் விழுந்தது, வர்ஷித் தந்தையின் காதிலும் விழுந்துவைக்க, பார்த்தாரே தவிர பேசவும் இல்லை முறைக்கவும் தவற இல்லை.

அவனும் அதிகமாக ஊர் பக்கம் வந்ததில்லை, வந்தாலும் மாமா வீட்டிற்கு வந்துவிட்டு வந்த வேலையை முடித்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவான். அதனால், ஊர் மக்கள் அவனை காண அவன் வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

மாமாவிடம் பேசிவிட்டு மறுப்பக்கம் திரும்பி நிதானமாக அழுத்தமாக ஒரு
முறை முறைத்தான் ஒருவரை. அந்த பக்கம் திரும்பி பார்த்து புரிந்து கொண்டாள் இவர் தான் வர்ஷித்தின் அப்பா என.

பிறகு, அங்கு ஒரு 17 வயது மிக்க பெண் ஒருத்தி ஓடி வந்தாள், மாமா என கூப்பிட்டுக்கொண்டே. இருவரும் திரும்பி பார்த்தனர். 'அவள் குமாரசாமியின் மகள் பெயர் பவிரேகா" என வர்ஷித் அறிமுகம் படுத்திவைத்தான். பவிம்மா என்றான் புன்னகை தவழும் முகத்தோடு. சிறிது பேசும்போது கவனித்தாள் ஆதிகா அந்த பெண்ணை மாமா மாமா என பாசத்தை பொழிந்துவிட்டாள். ஏனனில், இருவருக்கும் 10 வயது வித்தியாசம், அவளுக்கு சிறுவயதில் ஒரு அண்ணன் போலவே நடந்துகொள்வான், அலாதி பிரியம் வைத்திருந்தான். அவளும் அப்படியே.

அவனும் பவிம்மா பவிம்மா என்றே அவளை பாசமாக அழைத்தான். இதனை காதில் புகை வராத குறையாக கவனித்த ஆதிகாவை வர்ஷித் கவனிக்க தவறவில்லை. நமட்டு சிரிப்புடன் அவளை ஏறிட்டான். பவியும் ஆதிகாவிடம் அக்கா அக்கா என்றே நல்ல விதமாக பேசினாள், ஏதோ வெகு நாள் பழகியது போல. அவள் சிறுபெண், உண்மையான அன்புடன் பழகுகிறாள் அவளை இப்படியா நினைப்பது என ஒரு நொடி நினைத்த மனதை திட்டிக்கொண்டாள்.

அவளின் பொறாமையை போக்கும்வகையில் வர்ஷித் ஆதிகாவை "ஆதிமா" என செல்ல பெயரிட்டு அழைத்தான். அவள் வித்தியாசமாக ஒரு பார்வையை வீச, 'அய்யோ இப்படி பார்த்தா, நான் உறஞ்சி நின்னுருவேனே' இந்த சூழ்நிலையை மாற்றுநோக்கில், "ஆதிமா நீ பவி கூட போய் இரு, போனை கையிலே வைத்துக்கொள். பவி ஏதும் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள். எதாவுது தேவை என்றால் அவளிடமே கேள்"என பவியுடன் அனுப்பிவைத்தான்.

பவியும் ஆதிகாவும் நன்றாக பழகினர். ஆதிகா அவனது அழைப்பால் மகிழ்ச்சியில் ஊறி கிடந்தாள். வர்ஷித்தின் கண்கள் ஆதிகாவை அடிக்கடி நோட்டமிட்டது.
பாட்டிக்கு இறுதி சடங்குகளை ஒரு பேரனாக அனைத்தையும் செய்தான். தாய் இல்லா பையன் என திட்டாமல் கூட வளர்த்தவர் ஆயிற்றே. கடைசியில் பாசமும் கண்களை மறைத்தது கண்ணீராய்.

அங்கு வந்த வேலை முடிந்ததும் இருவரும் கிளம்பினர். பின்னாலிருந்து ஒரு குரல் அழுத்தமாக வந்தது "வர்ஷித் நில்லுடா" என்று.

அந்த குரலுக்கு யார் சொந்தம் என அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN