பாகம் 8

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அப்பொழுதுதான் இந்தியாவிலிருந்து கனடா திரும்பிய அர்மிதாவுடன் மாயா அனிஷைப் பார்த்துப் பேச முடிவு செய்தாள். சிம்மிக்கு தெரியாமல் அனிஷை தனிமையில் அவன் ஓட்டலில் சந்தித்து பேச நாளும் குறித்துக்கொண்டாள். அதுவரை சிம்மியை சந்திக்க தன் அம்மா வீட்டிற்குக் கூட செல்லாத அனிஷிற்கு இவர்களின் திடீர் சந்திப்பு வியப்பளித்தது.இருந்தாலும் அவர்களை கண்டு பேச ஒத்துக்கொண்டான்.

அதிகம் பேசாத மாயாக் கூட அன்று இயல்பாய் அனிஷிடம் பேசினாள். அர்மிதாவை திருமணத்தில் அனிஷ் பார்த்திருந்ததால் பேசுவது மேலும் இலகுவாயிற்று.அதிகம் சுற்றி வளைத்து பேசாமல் பெண்களிருவரும் விஷயத்திற்கு வந்தனர்.

"மிஸ்டர் அனிஷ் நாங்க ரெண்டு பேரும் சிம்மி பத்தி பேசத்தான் இங்க வந்திருக்கோம்.உங்கள் இருவருக்கும் நடந்த சந்திப்புகள்,இப்ப இந்த கல்யாணம் எல்லாமே எங்களுக்கு தெரியும் .பட்,உங்களுக்கு நாங்கள் சிம்மியை பத்தி சில விஷயங்களை சொல்லித்தான் ஆகணும்."

"சிம்மி கொஞ்சம் அப்பாவி,எதையும் சுயமா செய்யவோ,தைரியமா ஒரு பிரச்சனையை சமாளிக்கவோ ரொம்பவே பயப்படுவா. அவளுக்கு தெரிஞ்சது எல்லாமே நாங்கள் மட்டும்தான்
.அதாவது நான்,அர்மிதா அப்புறம் ரஜீவ். அவங்களுக்கு நடந்தது கூட ஒரு பொம்மை கல்யாணம் தான். படிப்பு விஷயமாய் நானும் அர்மிதாவும் வெளிநாட்ல இருந்தப்போ அவளுக்கு துணையாய் இருந்தது எங்க ப்ரண்ட் ரஜீவ் மட்டும்தான்.இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாய் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் ரஜீவ்க்கு சிம்மி மேல தோழிங்கிற எண்ணத்தை தவிர வேற எதுவும் இல்லை.அவனுக்கு அவன் வக்கீல் தொழில்தான் எல்லாம்.சிம்மியும் அப்படிதான்.காதல்னா என்னாணூ கூட சிம்மிக்கு தெரியாது மிஸ்டர்.அனிஷ்."


"பட் இப்ப கொஞ்ச நாளா அவ உங்கள பத்தி ரொம்ப பேசுறா.முன்பு மாதிரி குறை சொல்றதும் இல்லை.அனிஷ் அனிஷ் அனிஷ் இதுதான் அவ வாய்ல வர்றது. வி திங்க் ஷீ இஸ் இன் லவ் வித் யூ.அவ அதை சொல்லக்கூட பயப்படுவா.அவ தோழிகள் என்ற முறையில நாங்க அதை உங்கக்கிட்ட தெளிவுப்படுத்தறது நல்லதுன்னு தோணுச்சி."

"முடிவை உங்க கைல விட்டரோம்.நீங்க எதுக்காக அவள கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கறது உங்க சொந்த விஷயம்,பட் ஒரு நல்ல துணையை உங்க ஈகோனால இழந்திடாதிங்க ப்ளீஸ்"மாயா பேசுவதை இடையில் குறுக்கிடாமல் அனிஷ் கேட்டுக் கொண்டிருந்தான்.

முகத்தில் புன்னகை மலர "நன்றி மாயா,என் திருமணநோக்கம் வேற என்றாலும்,சிம்மி மேல எனக்கும் அன்பு,ஒரு வித ஈர்ப்பு வந்திருச்சி.
அவளோட கடந்த காலம்எதுவும் எனக்குத்தேவையில்லை.இனிமேலும் நான் அவள கஷ்டப்பட விடமாட்டேன்.
என்னை நீங்கள் இருவரும் மனப்பூர்வமா நம்பலாம்".அனீஷின் அந்த வாக்குறுதி தோழிகள் இருவர் முகத்திலும் நம்பிக்கை பூக்களை மலர வைத்தது.

"நன்றி மிஸ்டர் அனிஷ், நிலாவோட திருமணத்தில் உங்கள் இருவரையும் நாங்கள் ஜோடியாய் பார்க்கணும்",மாயா உற்சாகமாய் கூறினாள்.

"கண்டிப்பா மாயா அண்ட் அர்மிதா"இதழில் ஒட்டிய புன்னகையோடு அனிஷ் விடைப்பெற, தோழிகளிருவரும் நிலாவின் திருமண அலங்கரிப்பை பற்றி திட்டம் தீட்டினர். நிலாவின் திருமண விருந்தில் அலங்காரம் , நாட்டியம் ,உணவு,வரவேற்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அர்மிதா அடுக்கிக் கொண்டுப் போனாள். மாயாவும் தன் பங்கிற்கு சில யோசனைகளை சொன்னாள். இடையில் வந்த அவசர தொலைப்பேசி அழைப்போடு அர்மிதா விடைப்பெற மாயா தனியாக அங்கிருந்தாள்.

விதி மீண்டும் அவள் வாழ்க்கையில் குறுக்கிட அங்கனமே முடிவு செய்தது போல் எதிரில் வந்து நின்றவனின் விஷமப் பார்வை உணர்த்தியது. கிட்டத்தட்ட அவன் முகமே அவளுக்கு மறந்திருந்த வேளையில் அப்சராவில் மதனை மீண்டும் சந்திப்போம் என்று மாயா கனவிலும் நினைத்திருக்கவில்லை.

எழுந்திருக்க முற்பட்டவளை மறைப்பது போல் நின்றுக் கொண்டிருந்த மதனை மாயா அருவருப்பாய் பார்த்தாள். குடித்திருப்பான் போலும்,கெட்ட மதுவாடையும் அவன் மேல் வீசியது.

"அப்புறம் மாயா எப்படி இருக்க?இன்னமும் அதே அழகும் உடலும் உனக்கு அப்படியே இருக்கே,சிக்குனு இடையும் இந்த வனப்பும் நீ மாறவே இல்ல?உன்ன அனுபவிக்க முடியலையேனு எத்தனை நாள் நான் ஏங்கியிருக்கேன் தெரியுமா?எத்தனை வருஷம் கழிச்சு உன்ன பார்குரேன்.ஹ்ம்ம் அன்னிக்கு மட்டும் அந்த விஸ்வா வர்ராம இருந்திருந்தா இன்னேரம் என் மஞ்சனையில் இருந்திருப்ப எனக்கு அடிமையா"திமிராய் குழறியப்படி வந்தது வார்த்தைகள்.

அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மாயா. ஆறு வருடங்களுக்கு முன் இந்த காமுகனின் பிடியிலிருந்து தன்னை ஒருவன் காப்பாற்றியது இது நாள் வரை அவள் அறியாத ஒன்று. நடந்ததை நினைவு கூர்ந்து பார்த்தாள்.அப்பொழுது அவளுக்கு 19 வயதிருக்கும். கல்லூரி ஆண்டு விழா டோரொந்தோவில் பிரசித்திப் பெற்ற ரிசோட்டில் நடைப்பெற்றது.

அதில் மதனோடு மாயாவின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. விழா இறுதியில் அர்மிதாவும் சிம்மியும் ரஜீவுடன் வீட்டிற்குச் செல்ல மாயா மதனோடு வீடு திரும்புவதாய் கூறியிருந்தாள்.ஆடிய களைப்பில் மதன் தந்த கூல் டிரிங்சை மிச்சம் வைக்காமல் குடித்தவள்,சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தாள்.

இதுதான் சமயமென்று மாயாவை அதே ஓட்டலில் வேறு ஒரு அறைக்கு மாற்ற முற்பட்ட வேளையில் யாரோ அவளைக் காப்பாற்றி வீடு சேர்த்ததை மறுநாள் காலையில் அவள் அம்மா ஜானகி கூறக் கேட்டு அதிர்ந்தாள்.மதனின் கபட வேடம் புரிந்தது.தன்னை காப்பாற்றியது யாரென்று கூட மாயாவிற்கு தெரியாது.அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டது அவளுடைய வகுப்புத் தோழி ஜாஸ்மின் என்றுதான் அம்மா கூறினார்.ஜாஸ்மினை அதற்கு பிறகு மாயா சந்திக்க முடியாமல், அவசர கதியில் ஒந்தாரியாவிற்கு ஜாஸ்மின் சென்று விட்டதை அவள் எதிர்வீட்டு ஆண்டியிடமிருந்து தெரந்துக்கொண்டாள்.இது நாள் வரை தன்னைக் காப்பாற்றியது ஜாஸ்மின் என்றே அவள் நம்மியிருந்தாள்.

யார் இந்த விஸ்வா?அந்த நேரத்தில் என்னைக் காப்பாற்றியவனுக்கு நன்றி கூட சொல்ல முடியாத நிலையில் தன்னை நிறுத்தியவன் இன்னும் எதிரில் நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "அயோக்கிய ராஸ்கல்,எந்த மூஞ்ச வெச்சிக்கிட்டு இங்க வந்தே? நீ எல்லாம் நல்லாவே இருக்கமாட்டே"! மாயா ஆவேசமாய் கத்தினாள்.

"சரி தான் நிறுத்துடி,அப்ப நீ தப்பிச்சிட்ட,பட் இன்னிக்கு உன்ன காப்பாத்த எந்த விஸ்வாவும் வரமாட்டான்"மாயாவை நோக்கி தைரியமாய் மதன் முன்னேறினான்.

அது அனிஷின் ஓட்டல் என்றாலும் லாபியில் யாரும் இல்லை.மாயா அர்மிதாவோடு வந்திருந்ததால் தன் காரையும் கொண்டு வரவில்லை.தனிமையில் இவனிடமிருந்து எப்படி தப்புவது என்று தவித்தாள்.மதனின் வலிய கரங்கள் மாயாவின் மென் கரங்களை முறுக்க திடிரென்று அவன் முகத்தில் குத்து ஒன்று விழுந்தது.

நிலைத்தடுமாறியவனின் போதை விழிகளுக்குள் அவனை விட உயரமாய் ஒரு உருவம் சிக்கியது.நின்றது மித்திரனே.மாயா மித்திரனின் பின்னால் ஒண்டினாள்.பயத்தில் அவள் கைகள் வெடவெடுத்தது.

"இடியட், தனியா வந்த பொண்ணுகிட்ட தப்பா,அதுவும் என் ரிசோர்டில்" .. நறநறவென மித்திரன் பற்களை கடித்தான்.இதுவரை மாயா மித்திரனை இப்படி கண்டதில்லை.எப்பொழுதும் சிரித்த முகமாய் அவனை பார்த்ததாய் அவளுக்கு நினைவு.உடனே செக்கியூரிட்டியை அழைத்தவன் மதனை வெளியே தள்ளுமாறு பணித்தான்.

"ஹேய் நீ..நீ.." நா குழறியபடி நிற்க முற்பட்டவனை முரட்டு காவலாளி இழுத்துச் சென்றான்.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளின் மிரட்சி பார்வை மித்திரனை என்னவோ செய்தது.

"வாணிம்மா இங்க பாரு,ரி லாக்ஸ்மா.அவன் இல்ல போயிட்டான்.இப்படி உட்காரு மொத.இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? அண்ணாவை பார்க்க வந்தியா?தனியாவா வந்த?" பார்வையில் பரிவும் வார்த்தையில் கனிவும் மித்திரனிடமிருந்து வந்தது.
பேசக்கூட தோணாமல் தலையசைத்தாள் மாயா.உடனே ஒரு காப்பியை வரவழைத்து மித்திரன் அவளை பருக வைத்தான்.

"வா வாணி,நான் ட்ராப் பண்றேன்.மணியாச்சு..இப்படி உன்ன தனியா வீட்டிற்கு என்னால அனுப்ப முடியாது. உன் பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம்மா" மென்மையாய் மித்திரன் பேசினான்.மதனைப் பற்றி எதுவும் அவன் கேட்கவில்லை.அந்த நேரத்தில் அவன் ஏன் அங்கு வந்தான் என்பது போன்ற பார்வையை மாயா மித்திரன் மேல் செழுத்தினாள்.அவள் பார்வையின் அர்த்தம்
புரிந்தவன் போல்,

"அண்ணா ஒரு முக்கியமான பைலை இங்க மறந்து வெச்சிட்டாரு,அத எடுக்கதான் வந்தேன்.திரும்ப போற அப்பதான் இந்த இடியட் கூட நீ இருக்கறத சிசி டீவில பார்த்தேன்.அதான் ஓடிவந்தேன்.இப்ப வா வீட்டிற்கு போலாம்மா."மித்திரன் புன்னகையோடு மாயாவை அழைத்தான். மங்கிய தெரு விளக்கு ஒளியில்,மெலிதான மழைத்தூறலில் மாயாவோடு இணைந்து நடக்க மித்திரனுக்கு சுகமாய் இருந்தது.

யாருமில்லாமல் முதல் முறையாக மித்திரனுடன் மாயா வருவது அவனுக்கே நம்பமுடியவில்லை.சீரான வேகத்தில் அவனுடைய ஔடி சாலையில் வழுக்கிச் செல்ல, மெலிதாய் ராஜாவின் இசை காரினுள் கசிய, மாயா தன்னை மறந்து மித்திரனின் தோளில் கண்ணயர்ந்தாள்.குழந்தைப் போல் உறங்குபவள் முகத்தில் இறுக்கம் தளர்ந்து நிம்மதி படர்வதை மித்திரன் நேரில் கண்டான்.


அவள் வீடு வந்ததும்,அவள் அம்மாவை செல்லில் அழைத்து மாயாவை உள்ளே அழைத்துச் செல்ல சொன்னான். "ஆண்டி மாயாவை தூங்க வைங்க மொத,எதுவா இருந்தாலும் நான் காலைல வந்து பேசிக்கிறேன்". சரிப்பா.சிறு தலையசைப்புடன் மாயாவை அவள் அம்மா அழைத்துச் சென்றார்.கண்களால் மாயா மித்திரனுக்கு நன்றி சொல்ல, புன்னகையோடு மித்திரன் விடைப்பெற்றான். நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியாய் மாயா உறங்கினாள். கனவில் அந்த பழைய நினைவுகள் விரிய,தன்னை மித்திரன் காப்பாற்றுவது போல் தோன்ற கண் விழித்தாள். மானசீகமாய் ஆறு வருடங்களுக்கு முன் தன்னை காப்பாற்றிய அந்த முகமறியா விஸ்வாவிற்கு நன்றியை கூறினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN