உன்னுள் என்னைக் காண்கிறேன் 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 11
காலையில் கதவு தட்டும் சத்தத்தில்தான் கண் விழித்தாள் மித்ரா. சற்று பலமாகத் தட்டவே வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து நேரத்தைப் பார்த்தாள். காலை எட்டு... ‘அம்மாடியோ இவ்வளவு நேரமாவா தூங்கினோம்’ என்று நினைத்து ஓடிச் சென்று கதவைத் திறக்க அங்கு தேவ்தான் நின்றிருந்தான்.

ஆராய்ச்சிப் பார்வையைச் செலுத்திக் கொண்டே “இந்தா இதில் டிரஸ்ஸூம் கொஞ்சம் நகையும் இருக்கு. போட்டுகிட்டு சீக்கிரம் ரெடியாகு. உன் தாத்தா வீட்டுக்குப் போகலாம்” என்றவன் பையை நீட்ட, அதை வாங்காமல் நகை எல்லாம் எதற்கு?” என்று தயங்கியவளைப் பார்த்து ஏற்கனவே அவள் லேட்டா எழுந்ததால் அவளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்றும் இங்கு சரினு சொல்லிட்டு அங்கு போய் ஏதாவது தப்பான முடிவு எடுத்திருப்பாளோ? என மன சஞ்சலத்தில் இருந்தவனின் கோபத்தைத் தூண்டுவது போல் மித்ரா நடக்கவும் ஆத்திரத்துடன் நிமிர்ந்தவன், “இங்க பார் உன்கிட்ட சும்மா சும்மா சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்குப் பெயரளவில் மனைவினாலும் அதற்கான அந்தஸ்துடன் நீ இருக்க வேண்டும். ஸோ இப்ப போட்டுக்க. திரும்ப வந்த பிறகு எல்லாத்தையும் கொடுத்துடு...” என்றவன் பையைக் கட்டில் மேல் வைத்து விட்டு அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் விருட்டென்று வெளியேறினான் தேவ்.

விக்கித்துப் போய் நின்றாள் மித்ரா! ‘ச்சே… காலையில் முழிச்ச மூஞ்சே சரியில்லையே? இதற்கு மேல் இவன்கிட்ட பேச்சே வச்சிக்கக் கூடாது. பேசினாத் தானே வம்பு? என்று தனக்குத் தானே பாடம் நடத்திக்கொண்டு சற்று வேகமாகவே கிளம்பினாள். அவன் கொடுத்ததில் நீண்ட செயின் ஒன்று இருந்தது. அதைப் போட்டால் வெளியிலிருந்து பார்ப்போர்க்குத் தாலிக் கொடி போல் தெரியும். அதைப் போட்டுக் கொண்டு,

தன் முழு அலங்காரத்தையும் முடித்துத் தன்னைக் கண்ணாடியில் பார்க்க வியந்து தான் போனாள். பின்னே ஆடையிலிருந்து வளையல் வரை அவளுக்கே அளவெடுத்து செய்தது போல் இருக்கே! ஆமாம், இதெல்லாம் இவன் எப்போது வாங்கினான்? நேற்று அந்தப் பத்திரம், இன்று இவையெல்லாம் வரும்போதே கொண்டு வந்திருப்பானோ? அப்போ நாம் சம்மதிப்போம் என்று முன்பேஅவனுக்குத் தெரியுமா?“ என்ற அவள் யோசனையைத் தடை செய்தது கதவு தட்டும் ஒலி.

இவள் திறக்க, “நீங்க ரெடினா ஐயா உங்கள சாப்பிடக் கூப்பிடறார்மா” என்றாள் வேலைக்காரப் பெண். வெளியே வந்த மித்ரா டைனிங் ஹாலில் நுழைய அங்கு தேவ் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்க்க மிடுக்காகத்தானிருந்தான்.

பேசிக்கொண்டே அவளைப் பார்த்தவன் கண்களாலேயே அவளுக்கு அழகிப் பட்டம் கொடுத்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. அவள் கை கழுவ எழுந்துக்கொள்ள, “உன் பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிக்கோ. உன் தாத்தாவைப் பார்த்துட்டு நேரா என் வீட்டுக்குப் போறோம்” என்று சொல்ல.

“சரி” என்று தலையசைத்தாள் மித்ரா. இருவரும் காரில் ஏறுகையில் மித்ராவோ காரின் பின் கதவைத் திறக்க, அதில் கோபமான தேவ் “நீ என் மனைவினு சொன்னேன். அது உனக்குப் புரிஞ்சிதா இல்லையா?” என்று கடுமைகாட்ட அதில் திடுக்கிட்டவள் ‘நாம் இப்போ என்ன தவறு செய்தோம்?’ என்று யோசித்தபடியே முன் பக்க சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

இந்த ஊருக்கு வரும்போது எந்தளவுக்கு ரசித்தாளோ தேவ்வுக்குத் தெரியாமல் ஆட்டம் போட வேண்டும் என்று திட்டம் போட்டாளோ அந்த உற்சாக மனநிலை இப்போது மித்ராவிடமில்லை. இயந்திரத் தனமாக அந்த இடங்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள். சற்று நீண்ட நேரப் பயணத்திற்குப் பிறகு அவள் தாத்தா வீட்டின் முன் நின்றது அவனுடைய கார்.

மித்ராவின் தாத்தா வீடு பாண்டிச்சேரி நகரத்தின் மையப் பகுதியில் இருந்ததால் புதிதாகக்கட்டப்பட்டபெரிய வீடுகளும் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தன. இவர் வீடு மட்டும் கொஞ்சம் பழையதாக ஆனால் பெரியதாகயிருந்தது. இவர்களின் வரவுக்காக வாசலிலே நின்று கொண்டிருந்த அவள் தாத்தா இவர்கள் இறங்கவும், “அங்கேயே நில்லுங்கள்” என்று தடுத்தவர் வீட்டினுள் பார்த்து “சீக்கிரம் வாங்கம்மா மாப்பிள்ளையும் பொண்ணும் நிற்கறாங்க பாரு” என்று குரல் கொடுக்க, அந்த வீட்டு வேலைக்கார அம்மா ஆரத்தித் தட்டுடன் வர “மாப்பிள்ளையுடன் சேர்ந்து நில்லுமா. ஆரத்தி சுத்தணும்” என்றார் சத்தியமூர்த்தி.

அவர் சொன்னதைக் கேட்டு மித்ரா முழித்துக் கொண்டு நிற்க தேவ்வே அவள் பக்கத்தில் வந்து நின்றான். தேவ்வையும் மித்ராவையும் பார்த்து அவள் குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்துத் தான் போயினர்.

வாயெல்லாம் சிரிப்புடனும் முகமெல்லாம் மலர்ச்சியுடனும் “வாங்க மாப்பிள்ளை! வாடா மித்து!” என்று வரவேற்றவரைப் பார்த்து ‘என்னது மாப்பிள்ளையா?’ என்று ஸ்தம்பித்து நின்றவளைத் தன் தோளால் அவள் தோளை இடி இடித்தவன் கண்ஜாடையிலே அவள் தாத்தாவைக் காட்ட அதில் தெளிந்தவள் இருவரும் ஜோடியாக உள்ளே சென்றார்கள். “வாங்க மாப்பிள்ளை உட்காருங்க” என்று உபசாரம் பண்ண தாத்தாவை அவசரமாக நெருங்கி ஏதோ சொல்ல வாய் திறந்த மித்ராவிடம் “போய் மாப்பிள்ளைக்கு குடிக்க ஏதாவது எடுத்து வந்து கொடுமா” என்று சொல்ல அவளோ அசையாமல் அவர் முகம் பார்த்து நிற்க “என்ன பாப்பா என் முகம் பார்த்துட்டு இருக்க? போய் மாப்பிள்ளைக்குக் குடிக்க ஏதாவது எடுத்துவான்னு சொல்றேன் இல்ல? போ…” என்று குரலில் அனலைக்காட்ட, அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு உள்ளே சென்றவளின் கண்களில் நீர் கோர்த்து விட்டது.

‘இவரைப் பார்க்கணும் என்ற ஆசையிலும் உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் தாத்தா என்றும் சொல்ல வந்தா, இவர் என்னடானா என்ன நெருங்கவே விடாம விரட்டு விரட்டுனு விரட்டிட்டிருக்கார். பெரிய மாப்பிள்ளையாம் மாப்பிள்ளை! என்று வந்தான் இந்த மாப்பிள்ளை? என்று கருவிக்கொண்டே கண்ணாடித் தம்பளரில் ஊற்றக் குளிர்பான பாட்டிலைத் திறந்தவளின் கை அப்படியே நின்றுபோனது. ஆமாம், தாத்தா இப்ப என்ன சொன்னார்? மாப்பிள்ளைனு தான?

இவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு இவரிடம் எப்படிடா சொல்லி சமாளிக்கப் போறோம்னு நான் நேற்றிலிருந்து நினைத்திருக்க, இவர் என்னடானா மாப்பிள்ளைனுல்ல அழைக்கிறார்! அதுமட்டுமா? இதில் அவனுக்கு ராஜ உபசாரம் வேற! இது போதாதுனு என்னை வேற அவனுக்காக விரட்டவேண்டியது. ஆமாம் இந்த விஷயத்தைத் தாத்தாகிட்ட யார் சொல்லியிருப்பா? ச்சே... மக்கு மாதிரி யோசிக்கறேன் பார். எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை நான் சொல்லலனா வேற யார் சொல்லி இருப்பா? அவன் தான்.. அந்த லம்பாதான் சொல்லி இருப்பான். எப்போ சொல்லியிருப்பான்?’ என்று அவள் யோசிக்கையில்

வெளியே இருந்து தாத்தாவின் குரல் கேட்டது. “மித்துமா இன்னும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கடா? மாப்பிள்ளை உட்கார்ந்து இருக்கார் பார்” என்று அவர் அழைக்க, ‘க்கும்.. உங்க மாப்பிள்ளை சும்மா தான உட்கார்ந்து இருக்கார்? என்னமோ உழைத்துக் களைத்துப் போய் உட்கார்ந்திருக்குற மாதிரியில்ல இவர் பேசறார்’ என்று முனுமுனுத்துக் கொண்டே ஜுஸ் டிரேயுடன் வெளியே வந்தாள் மித்ரா.

முதலில் தாத்தாவுக்குக் கொடுக்க, அதை மறுத்தவர் முதலில் மாப்பிள்ளைக்கு கொடும்மா என்று சொல்ல ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றினால் போல் ஆகிவிட்டது.‘ இவனுக்கெல்லாம் வெறும் ஜுஸைக் கொடுக்கக் கூடாது அதில் பேதி மாத்திரையும் கலந்து கொடுக்கணும்’ என்று நினைத்தவள் பல்லை நரநர என்று கடித்துக் கொண்டே அவன் முன் ஜுஸை நீட்ட…

அவள் முகத்திலும் பார்வையிலும் அவள் மனதை அறிந்த தேவ் வழக்கம் போல் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒன்றை எடுத்துக் கொண்டான். பிறகு தாத்தாவுக்கும் அங்கு அமர்ந்திருந்த மூன்று பெரியப்பாக்களுக்கும் மற்றும் தாமோதரனுக்கும் கொடுத்தாள்.

அந்த வீட்டுப் பெண்கள் இவர் தான் மாப்பிள்ளையா என்று அருகில் வந்துப் பார்த்துவிட்டுப் பிறகு அவரவர் அறைகளில் புகுந்துக் கொண்டனர். இறுதியாக தனக்கு ஒரு கண்ணாடி தம்பளரை எடுத்துக்கொண்டு தாத்தா பக்கத்தில் அமரப் போனவளை அதைச் செய்ய விடாமல் “என்ன மித்து என் பக்கத்தில் உட்கார்ற? போய் மாப்பிள்ளை பக்கத்தில் உட்காருமா” என்று சொல்லி தடுக்க வேறு வழியில்லாமல் அவன் பக்கத்தில் அமர்ந்தாள் மித்ரா.

கையிலிருந்த குளிர்பானத்தைத் தேவ் இன்னும் குடிக்காமல் வைத்திருப்பதைப் பார்த்தவரோ “என்ன மாப்பிள்ளை இன்னும் குடிக்காம இருக்கீங்க? இது உங்களுக்குப் பிடிக்காதா? வேறு கொண்டு வரச் சொல்லவா” என்று கேட்க,

“இல்லை இல்லை வேறு எதுவும் வேண்டாம். இதுவே போதும் ஐயா” என்றவன் அதை உதடு வரை கொண்டு சென்றானே தவிர குடிக்கவில்லை. ‘ஏற்கனவே தன் மேல் கோபத்தில் இருந்தவள் இங்கு வந்தததிலிருந்தோ இன்னும் முறைத்துக் கொண்டுத் திரிகிறாள். அந்தக் கோபத்தில் பழி வாங்க எனக்கு வயிற்றுக்கு ஒத்து வராத எதையாவது இந்த ஜுஸில் கலந்து இருப்பாளோ?’ என்று தேவ் யோசித்துக் கொண்டிருக்க,

மித்ராவோ ‘இவரைத் தான் நான் திருமணம் செய்திருக்கேன் என்று சொல்லி எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று நான் பயந்து வந்தா இவனை மாப்பிள்ளை மாப்பிள்ளைனு அழைக்கிறாரே தாத்தா! ஐய்யோ... என்னைச் சுற்றி என்ன தான் நடக்குது? எனக்கு ஒன்றும் புரியலையே?’ என்று கையில் குளிர் பானத்துடன் அவள் குழம்பியிருக்க..

அதைப் பார்த்தவரோ “என்ன மித்து ஏன் ஜூஸைக் குடிக்காமல் அப்படியே கையில் வச்சிருக்க?” என்று கேட்க இது தான் சாக்கு என்று தேவ் மனதில் ஒன்று உதயமானது. “அதுவா தாத்தா வேற ஒண்ணுமில்ல. அவளுக்கு என் மேல் அதிக பாசம். அந்தப் பாசத்தால இப்பெல்லாம் நான் சாப்பிட்டு வைத்த தட்டில் தான் சாப்பிடுறா. சாப்பாடு மட்டும் இல்ல நான் குடித்துத் தரும் காபி கூட. அப்படித்தான் அதே பாசத்தால்தான் இன்றும் என் ஜூஸூக்காக அவள் குடிக்காமல் காத்திருக்கா உங்க பேத்தி! ”என்று இல்லாத கதையை அவரிடம் அளந்துவிட்டு மித்ராவை வெறுப்பேற்றினான் தேவ்.

‘நானா? இது எப்போயிருந்து நடந்தது?’ என்று கடுப்பாகி மித்ரா அவன் முகம் பார்க்க அந்த இடைவெளியில் அவள் கையிலிருந்த ஜூஸை வாங்கிக் கொண்டுத் தன் ஜூஸை அவள் கையில் வைத்தான் தேவ்.

“ஹா… ஹா… அப்படியா மாப்பிள? என் பேத்தி இந்தக் காலத்துப் பெண்கள் போலில்லாமல் அவள் பாட்டியைப் போலிருப்பது எனக்குச் சந்தோஷமாயிருக்கு” என்றார் குரல் நெகிழ.

தேவ் சொல்லச் சொல்ல அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா அவன் ஜூஸைத் திணிக்கவும் கோபம் கொண்டு “ஏய் என்னத் திமிரா? எதுக்கு இப்படிச் செய்த?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சீற.

“திமிரா... அது எனக்கா உனக்கா? நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேனு என்னைப் பழிவாங்க என் ஜூஸில் மட்டும் நீ என்ன கலந்திருக்க? நீ கலந்தது எனக்குத் தெரியாதுனு நினைச்சியா? தெரிந்ததால் தான் அதை உனக்கே தந்தேன். இப்ப அதை நீயே குடி“ என்றான் கேலியாக.

‘அடேய் மக்கு சாம்பிராணி. நான் அதில் ஒண்ணுமே கலக்கலயா. இப்பக் கூட இதைக் குடிச்சி என்னால் நிரூபிக்க முடியும். ஆனால் இதில் உன் எச்சிப் பட்டுடிச்சே. பிறகு இதை நான் எப்படி குடிக்க?’ என்று கத்தி அவன் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் போல் எழுந்த வேகத்தைச் சுற்றியிருப்பவர்களை கருத்தில் கொண்டு அமைதி காத்தாள்.

அவனை நெருங்கி அவன் கண்களைப் பார்த்துச் “சத்தியமா இதில் நான் ஒண்ணும் கலக்கல. இப்பக் கூட இத குடிச்சிடுவேன். ஆனா இதில் உங்க எச்சில் பட்டு இருக்கே. இப்ப நான் எப்படிக் குடிக்க? பிளீஸ் எதாவது செய்ங்களேன்…” என்று மாட்டி விட்ட அவனிடமே அவள் கெஞ்ச..

அவளை மீண்டும் சீண்டிப் பார்க்கத் தேவ்வுக்கு ஆசை தான். ஆனால் கண்கள் கலங்க கெஞ்சும் குரலில் கேட்டவளிடம் உருகியவன். “நீ அதில் ஏதோ கலந்திருப்பயென்ற சந்தேகத்தால நான் அதைக் குடிக்கல. ஸோ என் எச்சி படல” என்றான் தேவ். ஆனால் அவள் மீண்டும் தயங்கவே, அவள் கண்ணோடுத் தன் கண்களைக் கலக்க விட்டவன் “இட்ஸ் பிராமிஸ் பேபி!” என்றான் உருகும் குரலில்.

அந்தப் பார்வையும் குரலும் அவளுக்குள் எதையோ உணர்த்த அதை யோசிக்காமல் இப்போ இதைக் குடிக்கவா வேண்டாமா என்று யோசித்தவளை அவள் மூளையோ இல்லை அவன் பொய் சொல்கிறான் என்று கூற மனமோ ஒருவேளை அவன் சொல்வதும் உண்மையா இருக்குமோ என்று எடுத்துக் கொடுக்க இதில் எதையும் சிந்திக்காமல் அவள் கையோ அந்த ஜூஸை அவள் வாயருகே கொண்டுச் செல்ல, இமைக்கக் கூட மறந்து அந்த ஜூஸை ஒரே மூச்சில் குடித்து முடித்தாள் மித்ரா. பரஸ்பரம் ஒருவரையொருவர் நலம் விசாரிப்புக்குப் பின் பேச்சை ஆரம்பித்தார் சத்தியமூர்த்தி. அப்புறம் மாப்பிள காலையில் உங்க பி.ஏவும் அந்த பைனான்ஸ் ஆபிஸரும் வந்தாங்க. கட்டவேண்டியப் பணத்தை எல்லாம் கட்டிட்டியாச்சினு சொல்லி சில பேப்பர்ஸ்ல கையெழுத்து வாங்கிப் போனாங்க.

தாங்க்ஸ் மாப்பிள்ள! நீங்கயில்லனா நானும் என் பேத்தியும் என்ன ஆகியிருப்போம்னே தெரியல. ரொம்ப நன்றி மாப்பிள்ள!” என்று நெகிழ்ந்து போய் குரலில் பிசிரு தட்டத் தொண்டை அடைக்கக் கூறியவரை..

“என்ன ஐயா இப்படிச் சொல்றீங்க? நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன் தான். எங்கக் காதலை ஏற்று உங்கப் பேத்தியை எனக்குக்கொடுத்து என்னையும் உங்க வீட்டு மாப்பிள்ளையா ஆக்கிட்டிங்க. அதை விடவா நான் செய்தது பெருசு?” என்று அவரின் மதிப்பைப் பெரும் வகையில் அழகாகப் பேசினான் தேவ்.

‘கவுத்துட்டான்…. அவ்வளவு தான் என் தாத்தா க்ளீன் போல்ட். டேய் லம்பா! என்னமா நடிக்கிறடா? நிஜமாவே நீ பெரிய பிசினஸ் மேன் தான்டா. என்னமா பேசறான்?’ மித்ராமனதுக்குள் கவுண்டர் கொடுக்க..

“உங்க பி.ஏ இங்கிருந்த நேரத்தில் என் ஃபிரண்ட் சபாபதி வந்திருந்தான். அவரைப் பார்த்துட்டு உங்களைப் பற்றியும் உங்க அம்மா அப்பா, தொழில், குடும்ப பாரம்பரியம் பற்றியெல்லாம் சொன்னான். அவனுக்கும் பூர்வீகம் உங்க ஊர் தானாமே! அதான் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ள. எனக்கு அவனை நாற்பது ஐம்பது வருஷமா தெரியும். நானும் அவனும் பேசுவதைப்பார்த்து உங்க பி.ஏ தான்நீங்கஇருக்கறஉங்கக் குடும்பப்போட்டோ தொழில் வீடுனு எல்லா போட்டோவையும் லேப்டாப்பில் காட்டினார். எனக்கு ரொம்பப் பெருமையாயிருந்தது உங்க ராஜ வம்சத்தைப் பார்த்து” என்று பெருமை பொங்கக் கூறினார்.

அவர் பேசியது எதுவும் மித்ராவின் காதில் விழவில்லை. பைனான்ஸியருக்குப் பணம் கட்டி தாத்தா எந்தப் பிரச்சனையுமில்லாமல் மீண்டு வந்துவிட்டார் என்பதே சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுத்தது.

தேவ்வோ, “அப்படியா? பெயர் என்ன சொன்னிங்க சபாபதியா? கோவைனா சொன்னார்? எனக்குச் சரியா தெரியலையே? ஆனால் என் குடும்பத்தைப் பற்றி சொல்றார்னா நிச்சயம் அவர், என் அப்பா தாத்தாவுக்குத் தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும்” என்றான் பட்டும் படாமல்.

“ஆமாம் மாப்பிள்ள! அவனும் உங்க தாத்தா அப்பாவைத் தான் ரொம்ப நல்லாத் தெரியும்னு சொன்னான்”.

இந்த இரண்டு தினத்தில் தேவ்வின் முன்னெச்சரிக்கைக் குணத்தை ஓரளவு தெரிந்து வைத்திருந்த மித்ரா, ‘நிச்சயம் இது எதேச்சையாக நடந்தது இல்லை. சரியான நேரத்தில் இந்த லம்பா தான் அவரை வரவழைச்சியிருப்பான். ஆனா இப்ப ஒண்ணுமே தெரியாத மாதிரி என்ன ஒரு நடிப்பு! இது உலக மகா நடிப்புடா சாமி..’ என்று அவனுக்கு மனதால் ஆஸ்கர் அவார்ட் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஆனால் அவள் பெரியப்பாக்களோ உனக்குத் திருமணம் நடந்தால் என்ன இல்லை நடக்காமல் போனால் எங்களுக்கு என்ன? ஆக மொத்தத்தில் எங்களுக்கும் உன் தாத்தாவுக்கும் செலவு வைக்காமல் வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டியே எங்களுக்கு அதுவே போதும் என்றும் இவன் தான் நீயாகவே தேடிக் கொண்ட மாப்பிள்ளையா என்றும் அவரவர் சிந்தனையில் உழன்று கொண்டிருக்க...

அவர்களைச் சற்று சுவாரஸ்யமாக்கினது அவர் தேவ் குடும்பத்தைப் பற்றிச் சொன்னது. பேத்தியும் அவள் கணவரும் வருகிறார் என்று தான் அனைவரிடமும் சொல்லியிருந்தார். இன்று காலையில் பி.ஏ விடமும் அவர் நண்பர் சபாபதியிடமும் பேசியதெல்லாம் அவர் அறையில் தான். அதனால் தேவ்வின் செல்வாக்கைப் பற்றி இவர்கள் அறிய வாய்ப்பில்லாமல் போனது.

அந்த வீட்டில் இருந்தவர்கள் அவனைப் பார்த்து வாய் பிளந்திருக்க அந்தநேரம் தன் மூத்த மருமகனிடம் நெருங்கிய தாமோதரன் “மாப்பிள்ள இவனப் பார்த்தா வசதியானவன் மாதிரி தான் இருக்கான். ஆனா உங்க அப்பா சொல்ற மாதிரி ராஜ பரம்பரையாவா இருப்பான்?” என்று கிசுகிசுக்க, அவனோ “இருக்கும் மாமா இப்போ அவன் வந்து இறங்கினானே அந்தக் கறுப்பு நிற லம்போர்கினி கார் இந்தியாவிலே யார்கிட்டயும் இல்ல. காரா அது? கப்பல்! அதோட விலை பதினஞ்சு கோடிக்கும் மேலே மாமா” என்று அதன் பெருமையைச் சொல்ல, “என்னது பதினைந்து கோடிக்கும் மேலயா?“ என்று வாய் பிளந்தான் தாமோதரன்.

உண்மைதான் உயர் ரகமான பதிமூன்று கோடி மதிப்புடைய ‘லம்போர்கினி' கார் அது. இதுவரை இந்தியாவில் ஒன்று இரண்டு பேர் தான் வைத்திருக்கிறார்கள். அதில் தேவ்வும் ஒருவன். அதற்குள் தேவ்வுக்கும் தாத்தாவுக்கும் பேச்சு முடிந்து விட “மாப்பிள்ளைக்கு வீட்டைச் சுற்றிக்காட்டுமா. அப்படியே உன் ரூமுக்கும் அழைச்சிட்டுப் போ. மதியம் சாப்பாடு ரெடி ஆகிர வரை அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.

‘என் ரூமுக்கு எல்லாம் இவனைக் கூட்டிட்டுப் போக முடியாது’ என்று அவள் சட்டமாக அமர்ந்திருக்க, “கூட்டிட்டுப் போடா மித்து எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் இதோ வரேன்” என்று அவர் எழுந்துகொள்ள….

அப்போதும் அவள் அசையாமல் அமர்ந்திருக்க அவளை நெருங்கிய தேவ், “உன் தாத்தா நம்ம கிட்ட ஏதோ தனியா பேசணும்னு நினைக்கிறார். அதனால தான் உன்ன ரூமுக்குப் கூட்டிப் போகச் சொல்றார்” என்று அவள் தாத்தாவின் மனநிலையை எடுத்துக்கூற ‘என்னை விட உனக்கு என் தாத்தாவைத் தெரியுமா?’ என்று கேலியாக நினைத்தாலும் ஒருவேளை இருக்குமோ? என்ற பட்சத்தில் எழுந்து அவனை வரும் படி அழைத்தாள் மித்ரா.

வீடு முழுக்க சுற்றிக் காட்டிவிட்டு அவள் தன் அறைக்குச் செல்ல அவன் சொன்ன மாதிரியே அவர்கள் பின்னோடு வந்தார் அவள் தாத்தா. மித்துமா, மாப்பிள்ளை! கல்யாணம் தான் உங்க விருப்பபடி அவசரத்தில் நடந்துடிச்சி. ஆனா நம்ம சொந்த பந்தத்துக்கு அதைத் தெரியப்படுத்தனமே? அதனால் ஓர் நல்ல நாளில் நான் தனியா இந்த ஊரில் வரவேற்பு வைக்கலாம்னு இருக்கேன். உங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அந்த நாளைச் சொல்லுங்க மாப்பிள்ள” என்று அவர் தேவ்விடம் கேட்க செய்ங்க ஐயா தாராளமா செய்ங்க! அதற்கான நாளைப்பார்த்த பிறகு நானே உங்களுக்குப் போன் பண்ணி சொல்றேன்” என்றான் தேவ் சற்றும் குரலில் பிசிறில்லாமல்.

தன் கையில் வைத்திருந்த பேப்பர் மற்றும் பத்திரம் அனைத்தையும் மித்ரா கையில் கொடுத்தவர் “இது உனக்காக உன் அப்பா அம்மா உன் பெயரில் அப்பவே வாங்கிப் போட்ட இடம்டா மித்து. எப்படியோ இன்று அதோட மதிப்பு இருபத்தைந்து முப்பது லட்சம் இருக்கும்டா. அதே மாதிரி அவங்க சாகும்போது அவர்கள் வேலை செய்த ஆபீஸிலிருந்து வந்த பணத்தையும் உன் பேரில் பேங்கில் போட்டிருந்தேன். இப்ப அது பதினைந்து இருபது லட்சம் இருக்கும். இதையெல்லாம் வாங்கிக்கோடா” என்று சொல்லி தேவ்விடம் திரும்பியவர்”அவங்க அம்மா நகை முப்பது சவரன் பேங்கில் இருக்கு. பிறகு ஒரு நாள் நான் எடுத்துத்தரேன் மாப்பிள்ள” என்றார் இறுதியாக.

மித்ரா ஏதோ சொல்ல வாய்திறப்பதற்குள் தேவ்வே “இப்போ இது எதுவும் தேவையில்லை ஐயா. இதெல்லாம் பழையபடி உங்க பாதுகாப்பிலேயேஇருக்கட்டும். மித்ரா என் மனைவி அவளை ராணி மாதிரி வெச்சிக்கற அளவுக்கு என்கிட்ட வசதி இருக்குன்றது இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இத நான் பெருமைக்காக சொல்லல. என் வீட்டில் அவ என் மனைவியா மட்டும் இருந்தா போதும். இதெல்லாம் பிறகு ஓர் நாள் தேவைப் படும் போது அவள் வாங்கிப்பா என்று அவரிடம் கூறியவன் இறுதியாக மித்ராவிடம் அதை அவரிடமே கொடுத்துடு. சரி ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. நான் ஒருத்தர் கிட்ட பேசனும் ஸோ பேசிட்டு வரேன்” என்றவன் அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு விலகிச் சென்றுவிட..

அவர் மார்பில் சாய்ந்த மித்ரா, “இது எதுவும் எனக்கு வேண்டாம் தாத்தா. நீங்க கொடுத்த படிப்பிருக்கு. எனக்கு அது போதும். அதே மாதிரி எனக்கு நீங்க மட்டும் போதும் தாத்தா. வேற எதுவும் யாரும் வேண்டாம். கடைசிவரை நீங்க மட்டும் போதும்” என்று கூறி அழுதவளை…

“நான் இருக்கேன்டா உனக்கு. என் கடைசி காலம்வரை நான் உன் கூட தான்டா இருப்பேன். அதனால நீ அழக் கூடாது. நான் உனக்கு எல்லாவகையிலும் பொருத்தமான மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணம் செய்யயிருந்தேன். ஆனா நீயா ஆசைப் பட்டு உனக்கான வாழ்வைத் தேர்ந்தெடுத்திட்ட. அதனால் கொஞ்சம் மனசு வருத்தமும் கஷ்டமும் தான் தாத்தாவுக்கு. நீ என்கிட்ட முன்பே சொல்லி இருக்கலாமே? நான் தடையா இருந்திருக்க மாட்டேன்டா. என் மகனுக்குத் தான் அவன் ஆசைப்பட்ட வாழ்வை அமைத்துக் கொடுத்து அவன் வாழ்வதை என் கண்ணால் பார்க்க முடியாம பண்ணிட்டன். உனக்கும் அந்தத் தப்பை நான் பண்ணுவனா சொல்லு?”

“என்னை மன்னிச்சிடுங்க தாத்தா. நான் செய்தது பெரிய தப்பு தான். அதனால் என்னை வெறுத்து ஒதுக்கிடாதீங்க தாத்தா. நான் என்னைக்கும் உங்க பேத்தி தான் தாத்தா” என்று கண்ணீர் உதிர்த்தவளை “சரி விடுடா. நேத்து நைட் மாப்பிள்ள போன் பண்ணி நீங்க ரெண்டு பேரும் விரும்பிக் கல்யாணம் செய்துக் கிட்டதையும் இந்த ரெண்டு மாதமா நீ அவர் கூட தான் இருந்தனும் இப்ப இந்தப் பிரச்சனையால என்னை இன்று நீங்க ரெண்டு பேரும் பார்க்க வர்றதாகவும் சொன்னார்.

முதலில் எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனா அவர் கொஞ்சம் அழுத்திப் புரியும்படி சொன்னப் பிறகு தான் நான் நம்பினேன். அப்பவும் எனக்குப் பயம் தான்டா. நீ சின்னப் பெண்ணாச்சே! எங்க விவரம் தெரியாம காதல் என்ற பெயரில் யார்னா விரித்த வலையில் விழுந்திட்டியோனு…” என்று அவர் கூற..

மித்ராவுக்கோ நெஞ்சில் சுருக்கென்று ஓர் வலி.

“ஆனா அந்தப் பயமெல்லாம் இன்று சபாபதியைப் பார்த்துப் பேசினப்பிறகு தான் எனக்குப் போச்சி. மாப்பிள்ளை குடும்பத்தைப் பற்றி அவன் எவ்வளவு பெருமையா சொல்றான் தெரியுமா? உன் பேத்தி வாழ்வு நல்லா இருக்கும். அதற்கு நான் முழு பொறுப்புனு சொல்லிட்டுப் போனான்மா. உன் பாட்டி அப்பா அம்மா இவங்கெல்லாம் தெய்வமா இருந்து தான்டா உனக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்திருக்காங்க” என்றார் அவர் ஆத்மார்த்தமாக.

பிறகு மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு கண்ணீருடன் கிளம்பினாள் மித்ரா. கண்களை மூடிக் கார் கதவில் சாய்ந்து அமர்ந்தவள் அந்தப் பயணம் முடியும் வரை கண்ணைத் திறக்கவேயில்லை. தேவ்வுக்கும் அவள் மனநிலை புரிந்திருந்ததால் அவளிடம் எந்த வம்பும் செய்யவில்லை. இறுதியில் ஒரு வீட்டின் முன் அவர்கள் கார் நிற்க, அங்குத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவன் செல்ல மகள் அவன் காரைப் பார்த்து விட்டு “அப்பு” என்று ஓடி வர.. அந்தநேரம் மித்ரா தன் பக்கக் கதவைத் திறந்து இறங்க தந்தை என்று ஓடி வந்த ருத்திரா அங்கு மித்ராவைக் கண்டு ஒரு நொடித் தயங்கிப் பின்” அம்மா” என்றக் கூவலுடன் அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்.


‘என்னது அம்மாவா? இந்தக் குழந்தை இவன் மகளா? அப்போ இவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா?’ என்று மனதில் கேள்விகளோடு உறைந்து நின்றுவிட்டாள் மித்ரா.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN