என்னடி மாயாவி நீ: 19

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 19

பாட்டி இறந்ததிற்கு ஊருக்கு வந்த ஆதிகாவும் வர்ஷித்தும் கிளம்பினர். அப்போது பின்னாலிருந்து வந்த குரல் இருவரையும் தடுத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அவர்களின் பின்னாடி ஓடி வந்தது வர்ஷித்தின் அக்காவும் தம்பியும் தான். இருவரையும் பார்த்து கண்கலங்கி நின்றான். "ஏண்டா, இந்த அக்காவ மறந்துட்டதானே, அதான் ஊருக்கு வந்துகூட பாக்காம போற" என கண்ணில் கண்ணீரையும் பாசத்தையும் தேக்கி வைத்து கேட்டாள் வர்ஷித்தின் அக்கா சுதா. அவளருகில் நின்றான் வர்ஷித்தின் தம்பி அருண்.

"இல்ல அக்கா, நான் எப்படி அங்கு வருவது?, நானும் நீ இங்க வருவேன்னு பார்த்தேன். நீ வரவேயில்லை சுதாக்கா" என சுதாவின் கைகளை பிடித்து சொன்னான்."நம்ம வீட்டுக்கு வராம ஏண்டா போற, சரி அத விடு"என்றாள் இயலாமையுடன். இதையெல்லாம் வெறும் பார்வையாளராக பார்த்த ஆதிகாவிற்கு, தனது தம்பி நினைப்பு வந்தது. 'அங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க? கேள்வி பட்டேன்டா கஷ்டமா போச்சு அவுங்கள (விஷ்ணுவின் பெற்றோர் )நல்லா பாத்துக்கோ, சரியா" என அறிவுரையோடு சில பல நலம் விசாரிப்பு போனது அவர்கள் இடையில். சிறிது நேரம் கழித்து அருண் கையில் சுதாவின் குழந்தையோடு வந்தான். அதை கண்டவுடன் வர்ஷித் சிறு பிள்ளையென மாறி தனது மருமகளை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான். அவ்வளவு ஆனந்தம் அவன் முகத்தில். ஆதிகா இதை ஆசையோடு பார்க்க, ஆதிகா முகத்தை ஆராய்ந்து பார்த்தாள் சுதா. "இத்தனை நாளாய் என்கிட்ட என் மருமகள காட்டாம இருந்துட்டல சுதா "என்றான் வருத்தமும் கோபமும் போட்டி போடும் குரலில். கோபமாக இருந்தா மட்டுமே சுதா என்றழைப்பன். "என்ன பண்ணறதுடா சூழ்நிலை அமையல, நீ அப்டியே பாக்கலைனு நடிக்காத உன்னோட மாமாதான்(சுதாவின் கணவன்) எல்லாத்தையும் சொல்லிருப்பாரே, போட்டோ அனுப்பிருப்பரே" என்றாள் சுதா தான் தப்பிக்கும் பொருட்டு.

"ஆமாக்கா, மாமா இருந்ததுனால தப்பிச்ச, இல்லனா பாத்துக்கோ"என மிரட்டியவனை பார்த்து ரோஜா குவியலாய் அவனது மடியில் கிடந்த பிருந்தா தான் பற்களில்லா பொக்கை வாயை வைத்துக்கொண்டு வர்ஷித்தை பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பை பார்த்து எல்லாரும் சந்தோசம் கொண்டனர். அவன் முத்தமிட்டு கொஞ்சிக்கொண்டே இருந்தான். யாரும் அவனை தடுக்கவில்லை. சுதாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ஆதிகா அவனது சிரிப்பிலே மயங்கி நின்றாள். "மாமா அப்போ அப்போ பிருந்தா போட்டோ அனுப்பிகிட்டே இருப்பாரு. ஆசை வரும்போது கொஞ்சுவேன், உங்ககிட்ட பேசணும்னு தோணும். ஆனால், ஏதோ ஒன்னு தடுத்துருச்சு மன்னிச்சிடுக்கா. நான் வந்து பாத்துருக்கணும் விட்டுட்டேன் என் தப்பு தான்" என மன்னிப்பு கேட்டவனை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதாள். "தம்பி நீதான்டா என்னோட முதல் புள்ள, மன்னிப்பெல்லாம் கேக்காத, நானும் உன்னோட கல்யாணத்துக்கு வர முடியல என்னையும் மன்னிச்சிருடா" என அவளும் மனிப்புகனைகளை தொடுக்க, அவளின் கண்களை துடைத்து 'நீ அழுகக்கூடத்துக்கா, என்கிட்டே போய் மன்னிப்பெல்லாம் கேக்காத, இங்க என்ன நடக்கும்னு எனக்கு தெரியாதா" என கூறிவிட்டு இந்த சூழலை மாற்ற நினைத்தவன், "ஆதிமா"என அழைத்து, இங்கு நடந்தவற்றை பார்த்து சமைந்து நின்றவளை கூப்பிட்டு உயிர்பூட்டி குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு காருக்கு ஓடி சென்றான் ஓட்டமும் நடையுமாய். குழந்தையை பார்த்த அவனது மகிழ்ச்சி, அவனது பிரேத்யேகமான ஆதிமா என்றழைப்பு என எல்லாமே அவளை மகிழ்ச்சி கடலில் ஆட்டி வைத்தது.

அவளிடம் இருந்த குழந்தைக்கு இவன் காரிலிருந்து எடுத்து வந்த பெட்டியை திறந்து அதில் உள்ளே இருந்த செயினை எடுத்து அணிவித்தான். மாட்டிவிடும்போது, "மருமகளே கோச்சிக்காதிங்க, மாமா தாமதமா வந்து பார்த்தத்திற்கு" என அவன் கூறும்போதே, சுதா, "பிருந்தா அப்படியே தம்பி இல்லனா தங்கச்சி பாப்பாவ சீக்கிரமா பெத்து கொடுக்க சொல்லுடா, நான் மட்டும் தனியா இருக்கமுடியாது கம்பெனிக்கு ஆள் வேணும்னு கேளுடா" என அவள் கூறியதை கேட்டவுடன் ஆதிகா இதனை புரிந்துக்கொண்டு வெட்கத்தில் கன்னம் சிவக்க பட்டு போனாள். வர்ஷித்தும் சிரிப்போடு பிருந்தாவிற்கு முத்தமிட்டான். சுதாவிற்கு வர்ஷித்தை ஜோடியாக பார்க்க அத்தனை மகிழ்ச்சி. ஆதிகாவிடமும் சென்று வழியக்க பேசினாள். ஆதிகாவும் நன்றாக பேசினாள். சில அறிவுரைகளோடு இருவரும் ஊருக்கு திரும்பினர்.

இருவரும் காரில் அமர்ந்தவுடன் சிரித்த முகமாய் இருந்த வர்ஷித், கார் ஒரு வீட்டை கடந்தவுடன் முகம் முன்ன போல் இறுக்கத்தை தத்து எடுத்தது. இதை கண்ட ஆதிகா மறுநொடியே வர்ஷித்தின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பதுக்கி கொண்டு, தன் அழுத்தத்தை கூட்டினாள். அதுக்கு அவனுக்கு, 'உனக்கு எப்போதும், எந்த சூழ்நிலையிலும் நான் இருப்பேன்'என கூறுவது போல தோன்றியது. கொஞ்சம் கொஞ்சம் இளகு தன்மைக்கு வந்தவன் சீட்டின் பின்னாடி சாய்ந்து அமர்ந்துகொண்டு, கண்களை மூடி கொண்டான். உன் சோகத்தையும் மனப்பாரத்தையும் குறைக்கவே நான் வெளியேறுகிறேன் என அவன் பட்டு கன்னத்தில் இறங்கியது கண்ணீர். அதற்கு அணை போட ஆதிகாவால் முடியவில்லை. அழுதாவது, அவனது பாரம் இறங்கட்டும் என விட்டுவிட்டாளே தவிர விரல்கள் பிணைந்திருந்த கையை விடவே இல்லை. அழுத நிலையிலே அவன் உறங்கிவிட, வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த ஆதிகாவும் உறங்கிவிட்டாள். இடையில் கண் விழித்தவன், ஆதிகா உறங்குவதையும், அவளின் விடாத கைப்பிடியும் பார்த்து சிரித்தான். அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான். இன்னொரு கையால் அவனது புஜத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டாள், கைப்பிடி மட்டும் இன்னும் கெட்டியம் கூடியது அவர்களது அன்பு போலவே. வேடிக்கை பார்த்து நேரத்தை கடத்தினான். ஆறாத ரணங்கள் வலியை கிளப்பி கோபத்திற்கு தூபம் போட, அப்போதெல்லாம் ஆதிகாவை பார்த்தும், கண்ணீராலும் தணிய வைத்துக்கொண்டான்.

இருவரும் வீட்டினை அடைந்ததும். வர்ஷித்தின் கலையிழந்த முகத்தினை பார்த்த வசந்தா அவனது கோபத்தை கண்டு, "அவனை குழந்தை போல் பார்த்துக்கொள்" என்றார் ஆதிகாவிடம். இதைவைத்தே, வசந்தாவிற்கு வர்ஷித்தின் குடும்பத்தை பற்றி அனைத்தும் தெரியும் என்பதை உணர்ந்தாள் ஆதிகா.

இருவரும் மேல சென்று குளித்துவிட்டு ஆதிகா மட்டும் கீழே வந்தாள். வந்தவளிடம், வசந்தா, " வர்ஷித் சோர்வாக இருப்பான். நீயும் மேலயே சாப்பிடு" என சாப்பாடு அடங்கிய தட்டை அவளிடம் கொடுத்து அனுப்பினார். அவளும் மேல சென்று அவனிடம் சாப்பாட்டை கொடுக்க வேணாம் என மறுத்தான். அத்தை சொன்னதை நினைவில் நிறுத்தியவள், அவனை பிடிவாதப்படுத்தி வாயை திறக்க வைத்து ஊட்டியும் விட்டாள். அவனும் குழந்தை போல வாயை திறந்து வாங்கிக்கொண்டான். இடையில் நீயும் சாப்பிடு என்றான். இதற்கு நடுவில் கண்ணீரும் வேதனையை குறைக்கும் செயலை மறக்காமல் செய்தது. பாசத்தோடு வாயையும் துடைத்துவிட்டாள். "ஆதிமா என்னோட போனை எடுத்து கொடுமா" என்றான். மந்திரத்தால் கட்டுப்பட்டவள் போல் ஆனாள் அந்த ஆதிமா என ஒற்றை சொல்லால். கீழே சென்று பாத்திரத்தை வைத்து அறைக்கு வரும் போது, உயிரில்லா உடம்போடு அமர்ந்து போனை பார்த்துக்கொண்டிருந்தான். வெறுமை மட்டுமே அவனிடத்தில் குடி கொண்டிருந்தது. அவனிடம் சென்று அமர்ந்தவுடன், வர்ஷித் "ஆதிமா" என்றவன் மடியை காட்டி "படுத்துக்கவா" என குழந்தை போல கேட்டான். 'உன்னை மடிதங்கவே பிறவி எடுத்தேன்' என அவனை மடிதாங்கிக்கொண்டாள். ஒரு கை அவனது உள்ளங்கைக்களுக்கில் இடையில் இருந்தது. மற்றொரு கை அவனது தலைமுடியை கோதி கொண்டிருந்தது." நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என கூறினான். "சொல்லுங்க வருமாமா" என்றாள் ஆசையாக. அவனிருந்த நிலையில் அதை கவனிக்க வில்லை.

"என்னுடைய அப்பா பேரு நடராஜன், அம்மா பேரு மலர்மதி. ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. அப்பாவும் மாமாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால அம்மாவை நம்பி கட்டி கொடுத்தாங்க. நம்பிக்கை அப்பா மேல மட்டும்தான். ஏன்னா, அப்பா குடும்பத்துக்கு அம்மாவை சுத்தமா புடிக்காது. ரொம்ப சந்தோசமாதான் இருந்தாங்க. வருஷம் மட்டுமே போனுச்சு தவிர, குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்ல. அப்பா இத பத்தி ஒண்ணுமே சொல்லல. ஆனால், அம்மாவிற்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சாம். அப்பத்தா தான் திட்டிகிட்டே இருபங்களாம் குழந்தை இல்லனு. கடைசியில், அம்மா பாட்டிக்கு உடம்பு சரி இல்லனு ஒரு மாசம் அங்க தங்கிட்டாங்க. திரும்பி வரும்போது, அப்பத்தா அப்பாவிற்கு வேற கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்களாம். எங்க அம்மா அங்க எப்படி இருக்க முடியும், அதுவும் வேற ஒரு பொண்ணோட அப்பாவ பாக்க முடியலன்னு அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டாங்க. அப்பாவுக்கும் அந்த கல்யாணம் விருப்பமில்லை. அப்பத்தா மிரட்டி பண்ணி வச்சிட்டு. அவுங்கதான் அப்பாவுக்கு வீட்ல பாத்த பொண்ணு, அவுங்களும் ஒரு தலையா அப்பாவ காதலிச்சாங்களாம். அதுனால இரண்டாவதா பண்ணிக்க ஒத்துக்கிட்டாங்க. அப்பாவும் வாழ ஆரம்பிச்சிட்டாங்க. அதுனால, அவுங்களுக்கு முதல பிறந்தவங்கதான் சுதா அக்கா.
அம்மா வீட்ட விட்டு வந்தாலும் அப்பா அடிக்கடி வந்து பாத்துப்பாங்க. அம்மா தான் அக்காவ வளர்த்தங்களாம்.அம்மா ரொம்ப பாசமா இருப்பாங்கன்னு அக்கா சொல்லும். அக்காவுக்கு 7, 8வயசு இருக்கும்போது தான் அம்மா மாசமா இருந்தங்களாம்.இப்போ இறந்துபோன பாட்டி தான் அம்மாவ பாத்துக்கிட்டாங்க. அம்மாnபிரசவத்துல கஷ்டபட்டங்களாம். ஒரு உயிரைத்தான் காப்பாத்த முடியும்னு சொன்னப்போ என்னோட புள்ளைய காப்பாத்துங்க, அதுக்காகத்தான் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். நான் போன கூட ராஜன் (வர்ஷித்தின் அப்பா ) பார்த்துக்கொள்வார்னு சொன்னார்களாம். இந்த உலகத்துக்கு என்னைய அனுப்பிவச்சவங்கள நான் இந்த உலகத்தை விட்டே அனுப்பி வச்சிட்டேன்"என கதறி அழுதான். கண்ணீரை துடைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் கொட்டிவிடும் நோக்கில், "அப்பா என் அம்மாவோட நம்பிக்கையை காப்பாத்தல. என்னைய வளர்த்து பாத்துக்கிட்டது எல்லாமே பாட்டியும் அக்காவும்தான். நான் பிறந்த பிறகுதான் மாமாவுக்கு கல்யாணம் ஆனது. அத்தையும் சுதா அக்கா அம்மாவும் நெருங்கிய தோழிகள். அதுனால அத்தை கூட என்ன பாத்துக்கல. மாமாதான் என்ன பாத்துப்பாரு. எனக்கு அப்புறம் தான் அருண் பிறந்தான். நானும் அருணும் அப்பா மாதிரியே இருப்போம். சுதாக்கவும் அருணும் என்மேல ரொம்பவே பாசமா இருப்பாங்க. அப்பாவ அடக்கமுடிஞ்சவங்களுக்கு அக்காவையும் தம்பியையும் என பாக்க வராம தடுக்க முடியல. "அப்பா என்ன வெறுத்ததிற்கு காரணம் என்னானு தெரியுமா? " என கேட்டு விரக்தி சிரிப்புடன் தொடர்ந்தான் , "அம்மா இறந்ததுக்கு நான்தான் காரணமாம் அதுனால அவரும் என்னைய பாத்துக்கல இதுவரைக்கும். எனக்கு பத்து வயசு இருக்கும்போது பிறந்தவதான் பவி. அவ எனக்கு குட்டி தங்கச்சி. அவளும் எங்க கூடதான் இருப்பா. பாட்டி தனியா பக்கத்துல ஒரு வீடு பாத்து அங்க வச்சி என்ன பாத்துக்கிட்டாங்க அங்க தான் அக்காவும் தம்பியும் பவியும் இருப்பாங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆனபிறகு பாட்டி, அருண், பவி எல்லாரும் அக்கா வீட்ல தான் இருப்பாங்க.மாமா ரொம்ப நல்லவர். என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. என்னைய தூக்கி வளக்காததுனால அக்கா, பவி, அருண் எல்லாருமே அப்பாவையும் அவுங்களையும் வெறுத்துட்டாங்க. அக்காதான் எனக்கு அம்மா மாதிரி. நான் வெறுக்குற ஒரே ஆளு அப்பாதான்" என கூறி முடித்து அவளின் மடியில் புதைந்து அழுதான். அவனை சமாதானம் படுத்தி உறங்கவைத்தாள். அவனும் பாரம் குறைந்த மனதுடன் அவளின் இடையை கட்டிக்கொண்டு அவளின் கையை முகத்தில் வைத்துக்கொண்டு உறங்கியவனுக்கு அந்த நாளில் விவாகரத்து நினைவிலே இல்லை. இவளே தன்னவள் என்ற எண்ணமே இருந்தது.


இந்த எண்ணம் தொடருமா அல்ல கைவிடுமா என்பதை அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 19
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN